October 30, 2008

ஜெஃப்ரி பாய்காட்டிற்கு சரியான பதிலடி

டெல்லியில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதமடித்து தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் லக்ஷ்மன்.கவுதம் கம்பீரும் அருமையாக ஒரு இரட்டைச் சதமடித்துள்ளார்.
இந்த டெஸ்ட் ஆட்டத்தொடர் துவங்கும் முன் யார்க் ஷையரின் ஜெஃப்ரி பாய்காட் இந்திய அணியின் அற்புத ஆட்டக்காரர்களாகிய (நால்வர்) (Fabulous 4) சச்சின், சவுரவ், திராவிட், லக்ஷ்மன் ஆகியோரைக் குறித்து மிக தரக்குறைவாக ஒரு பத்திரிக்கையில் தாக்கியிருந்தார்.
அதாவது இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்கள் விளம்பரப் படங்களில் நடித்து பணமும் புகழும் ஈட்டவே அணியில் இன்னும் இடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள், இல்லையென்றால் அவர்கள் எப்போதே அணியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பார்கள் என்றும் சாடியிருந்தார். மேலும் இந்த மூத்த வீரர்களில் எவருடைய ஆட்டமும் தற்போதைய ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறத்தலாக இல்லை எனவும் கூறியிருந்தார்.
அவரது பேச்சுகள் அனைத்திற்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர் மூத்த வீரர்கள், சச்சினின் அரை சதங்கள், சவுரவின் சதம், திராவிட்டின் திடமான அரைசதம்,லஷ்மணின் அற்புத இரட்டைச் சதம், இரண்டாவது டெஸ்ட்டின் வெற்றி இவை அனைத்தும் ஜெஃப்ரி பாய்காட்டிற்கு சரியான பதிலடியாக அமைந்துள்ளன.அவரது முகத்தில் கரியை பூசாத குறை தான்.
மேலும் இந்திய வீரர்கள் விளம்பரப் படங்களில் நடிக்கிறார்களென்றால் இவருக்கு என்ன வந்தது? அவர்களுக்கு இருக்கிற பெயருக்கும் புகழுக்கும் அவர்கள் நடித்து விட்டுப் போகிறார்கள், அவர்களது விளையாட்டு சரியில்லாத பட்சத்தில் நிறுவனங்களே அவர்களைக் கண்டு கொள்ளாது என்பது தான் உண்மை, உதாரணத்திற்கு Gillete விளம்பரத்தில் உலகின் தலைச் சிறந்த வீரர்களான டைகர் வுட்ஸ், ரோஜர் ஃபெடரர், தியரி ஹென்றி போன்றோருடன் வந்து கொண்டிருந்த திராவிட்டை அந்நிறுவனம் இப்போது காட்டுவதில்லை.நிலைமை இவ்வாறிருக்க ஜெஃப்ரி பாய்காட்டோ வாயில் வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு தங்கள் ஆட்டத்தால் தக்கப் பதிலடி கொடுத்துள்ள நம்மவர்களுக்கு பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails