November 03, 2008

உலகின் மிக இள வயது ஃபார்முலா 1 சாம்பியன்

பிரிட்டனைச் சார்ந்த லூயிஸ் ஹாமில்டன் உலகின் மிக இள வயது (23 வயதில்) ஃபார்முலா 1 சாம்பியனாக மகுடம் சூடியிருக்கிறார் அவரது மெக்லாரன்-மெர்சிடஸ் McLaren-Mercedes காரில்.கடந்த ஆண்டே தனது முதல் அறிமுக சீசனிலேயே சாம்பியன் ஆக வேண்டியவர்.பின்லேன்டின் கிமி ரைக்கோனனிடம் 110 ற்கு 109 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்த வருடமும் அதே போன்று ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடையவிருந்தவர் தான் ஹாமில்டன்.71 சுற்று கொண்ட இந்த வருடத்தின் இறுதி பந்தயத்தின்(பிரேசிலில்) இறுதிச் சுற்று வரை ஆறாவதாக வந்து கொண்டிருந்தவர் சுதாரித்து கொண்டு ஐந்தாவதாக சென்று கொண்டிருந்த டிமோ ப்ளாக் என்பவரை மிக சாமர்த்தியமாக பின்னுக்குத் தள்ளி ஆறு விநாடிகள் வித்தியாசத்தில் ஐந்தாவதாக வந்து ஏற்கெனவே நடைபெற்று முடிந்திருந்த 17 போட்டிகளின் 94 புள்ளிகளுடன் இந்த போட்டியின் நான்கு புள்ளிகளையும் சேர்த்து 98 புள்ளிகள் பெற்று பிரேசிலின் பிலிப்பே மாஸ்ஸாவை ஒரு புள்ளி(97) பின்னுக்கு தள்ளி சாம்பியன் பட்டத்தையும் பெற்று விட்டார்.அந்த ஆறு வினாடிகள் தான் இந்த சீசனின் சாம்பியனை முடிவு செய்யும் என போட்டியை நேரிலும் நேரலையிலும் பார்த்துக் கொண்டிருந்த(என்னையும் சேர்த்து) எவரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.அத்தனை பரபரப்பாக நடந்து முடிந்த பந்தயம் அது.

பெராரி அணியைச் சார்ந்தவர்கள் மாஸ்ஸா சாம்பியன் ஆகி விட்டார் என பந்தயம் முடிவு பெறும் முன்னரே 10 வினாடிகள் கொண்டாடவும் தொடங்கி விட்டனர்.பின்னரே ஹாமில்டன் இறுதிச் சுற்றின் இறுதி வளைவில் ஒரு படி முன்னிலைப் பெற்று விட்டார் என தெரிந்து கொண்டு சோகத்தில் ஆழ்ந்தனர்.மாஸ்ஸாவும் அழுதே விட்டார் அதிர்ச்சியில்.இந்த இறுதிப் பந்தயம் நடைபெற்ற Sao paolo, Brazil அவரது சொந்த ஊர் என்பதாலும் அதிக உணர்ச்சி வசப் பட்டுவிட்டார்.எனினும் இந்த வருடமும் ஃபெராரியே (Ferrari) கார் கட்டமைப்பிற்கான அதிக புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பந்தயத்தின் ஆரம்பத்தில் மழை பெய்தது,கடைசிச் சுற்றிலும் வான மகள் ஒரு புறம் கண்ணீர் வடிக்க மறுபுறம் துக்கத்தில் மாஸ்ஸாவும், சந்தோஷத்தில் ஹாமில்டனும் கண்ணீர் வடித்தது உணர்ச்சிகரமான நிகழ்வு.இந்தியாவின் சார்பில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் Force India-Ferrari கார் தனது முதல் சீசனில் புள்ளிகள் ஏதும் பெறாமல் ஏமாற்றமே அளித்துள்ளது.அதாவது இந்த ஆண்டு நடந்து முடிந்துள்ள 18 பந்தயங்களில் ஒன்றில் கூட இவரது அணியினர் முதல் எட்டு இடங்களுக்குள் வரவில்லை.இத்தனைக்கும் இத்தாலியின்Fisichella, ஜெர்மனியின் Adrian Sutil ஆகிய திறமை வாய்ந்த இரு வீரர்களை மல்லையா தனது அணியில் கொண்டிருந்தார். ஒரு அற்புதமான பந்தயத்துடன் இந்த வருட சீசன் நிறைவு பெற்றதில் ஃபார்முலா 1 ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.போட்டியின் கடைசி சில நிமிட வீடியோவை கீழே இணைத்துள்ளேன்






No comments:

Post a Comment

Related Posts with Thumbnails