November 16, 2008

சச்சின் டெண்டுல்கரின் 19 ஆண்டு கால கிரிக்கெட் பயணம்

இந்தியக் கிரிக்கெட்டில் இன்றோடு 19 வருடம் நிறைவு செய்யும் சச்சினின் கடந்த காலங்களைப் பற்றிய ஒரு பார்வை.

24 ஏப்ரல் 1973 ல் பிறந்த வலக்கை ஆட்டக்காரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் பள்ளிப்பருவங்களிலே சச்சினின் குரு மற்றும் ஆரம்பகால பயிற்சியாளர் ரமாக்கந்த் அச்ரேக்கர் அவரின் கீழ் கிரிக்கெட் வாழ்வைத் துவக்கினார். எம்.ஆர்.எஃப் அகடமியில் ஆஸ்திரேலியர் திரு.டென்னிஸ் லில்லியின் கீழ் வேகப் பந்துவீச்சாளராக பயிற்சி பெற அனுப்பப்பட்டார்.அங்கு அவர் மட்டை வீச்சில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவதாக லில்லியால் குறை கூறப்பட்டார்.

பள்ளிப்பருவத்திலே அச்ரேக்கர் ஒரு ரூபாய் நாணயத்தை விக்கெட் மீது வைத்து விடுவாராம்,சச்சினின் விக்கெட்டை எடுப்பவர்களுக்கு அந்த நாணயம் வழங்கப்படும் என்று பந்தயம் வைத்திருக்கிறார்.இல்லையென்றால் அந்த நாணயம் சச்சினுக்கு சொந்தம்.அப்படியாக 13 நாணயங்களை பெற்ற சச்சின் இன்றும் கூட பொக்கிஷமாக வைத்திருக்கிறார்.

1988 களில் சச்சினின் ஆட்டம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது.1988 ல் அவர் ஆடிய அனைத்து போட்டிகளிலும் சதமடித்தார்.அந்த வருடத்தில் தான் 2006 ஆம் வருடம் வரை தகர்க்கப்படாமலிருந்த உலகத்திலே ஒரு விக்கெட்டிற்கு எடுத்த அதிகபட்ச ரன்னான 664* ஐ வினோத் காம்ளியுடன் சச்சின் எடுத்தார்,பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற லார்ட் ஹாரிஸ் பட்டயத்திற்கான போட்டி அது.326 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

14 வயதுடன் தனது முதல் தரக் கிரிக்கெட்டை சச்சின் தொடங்கிய போது திரு.சுனில்கவாஸ்கர் அவர்கள் இரண்டு மென்மையான கால் கவசத்தை (Pad) அளித்திருக்கிறார்.அது தான் நான் நன்றாக விளையாட தனக்கு மிகுந்த ஊக்கமளித்ததாக 20 ஆண்டுகளுக்கு பின்னர் உலக வரலாற்றில் அதிக சதமாகிய கவாஸ்கரின் 34 சதத்தை முறியடித்த போது கூறி கவாஸ்கருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்.

1988 டிசம்பர் 11ல் 15 வயது 232 நாட்களாகிய சச்சின் தனது முதல் தர கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்திலேயே மும்பைக்காக குஜராத்திற்கு எதிராக ஆட்டமிழக்காமல் சதமடித்து மிக இள வயதிலேயே சதமடித்தவர் என்ற புகழைப் பெற்றார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தான் ஆடிய மூன்று(ரஞ்சி, துலீப், இரானி) அறிமுகப் போட்டிகளிலும் சதமடித்த பெருமையையும் பெற்றுள்ளார்.

என்றாலும் சச்சினின் சர்வதேச அறிமுக ஆட்டங்களிலும் ஆரம்ப காலங்களிலும் சொல்லும்படியான பங்களிப்பு இல்லை.16 வயதில் 15 நவம்பர்,1989 ஆம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக,கிரிஸ் ஷ்ரீக்காந்த் தலைமையின் கீழ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.முதல் இன்னிங்க்சில் 15 ஓட்டங்கள் மட்டுமே பெற்றார்.ஆனாலும் பாகிஸ்தானின் அதிவேகப் பந்து வீச்சை சமாளித்ததே மிகப் பெரிய விஷயம் என கிரிக்கெட் வல்லுனர்கள் இன்றும் கூறுகின்றனர்.ஏனென்றால் வக்கார் வீசிய ஒரு பந்து சச்சினின் தாடையைப் பதம் பார்த்தது;அதன் பின்னரும் இரத்தக் கறைபடிந்த சட்டையுடன் சச்சின் தொடர்ந்து ஆடியது தான்.

அதே ஆண்டு டிசம்பர் 18 ல் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தனது கால் தடம் பதித்தார்.முதல் ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் அறிமுக ஆட்டங்களில் சச்சினின் விக்கெட்டைச் சாய்த்தவர் வக்கார் யூனிஸ்.வக்காருக்கும் அது அறிமுக ஆட்டங்கள் தான் என்பது சுவாரஸ்யம்.

17 ஆவது வயதில் 1990 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் சதத்தை சச்சின் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓல்ட் ட்ரஃபோர்டில் எடுத்தார்.அதன் பின்னர் தனக்கு 25 வயது ஆகுமுன் 16 சதங்கள் அடித்தார்.2000 ல் உலக கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களுக்கு மேல்(டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இணைந்து) எடுத்த முதல் வீரர் என்ற புகழைப் பெற்றார்.

1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில்(ஷேன் வார்னின் முதல் போட்டி) சச்சின் ஆட்டமிழக்காமல் குவித்த 148 ஓட்டங்கள் மற்றும் பெர்த் வாக்கா மைதானத்தில் அடித்த சதமும் தான் இன்று வரை அவரடித்த சதங்களில் முதலிடம் பெறுகிறது.ஏனென்றால் பெர்த் மைதான ஆடுதளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிக சாதகமானது.

அன்றே ஆஸ்திரேலியாவின் மெர்வ் ஹூஜ்ஸ் ஆலன் பார்டரிடம் இந்த பொடியன் உன்னை விட அதிக ஓட்டங்கள் குவிப்பான் என்று கூறியிருக்கிறார்.

உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர்.டான் பிராட்மேனே சச்சினின் ஆட்டம் அவரது ஆட்டத்தைப் போன்றே இருப்பதாக சச்சினைப் புகழ்ந்திருக்கிறார்.பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியர் ஷேன் வார்ன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார்.

1994 செப்டம்பர் 9 ல் ஒரு நாள் சர்வதேச போட்டியின் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நிறைவு செய்தார்.

1996 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள்(523) குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.கொல்கொத்தா ஈடன் கார்டன் அரை இறுதியில் சச்சின் வெளியேறியதும் ஒருவர் பின் ஒருவர் பரிதாபமாக ஆட்டமிழந்த நேரத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட இந்தியா இலங்கையுடன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.65 ரன்கள் குவித்தார் சச்சின் அரையிறுதியில்.

1998 ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய டெஸ்ட் தொடரில் வரிசையாக மூன்று சதங்கள் அடித்து வெற்றி வாகை பெற்றுத் தந்தார்.அதே வருடம் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு சதங்களை அடித்து கோப்பையை தனி ஒருவராக பெற்றுத் தந்தார்.

1999ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு அவர் குவித்த 136 ஓட்டங்கள் இன்றும் மறக்கவியலாதது.அப்போட்டியில் கடைசி நான்கு விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற இந்தியா தோல்வியடைந்தது.அந்த தோல்விக்காக இன்றும் வருத்தப்படுகிறார் சச்சின்.

1999 உலகக் கோப்பைப் போட்டிகளின் நடுவே தந்தையை இழந்த சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் ஜிம்பாப்வே அணியுடனான ஒரு போட்டியை விட்டுக் கொடுத்து இந்தியா வர வேண்டியிருந்தது.பின்னர் மீண்டும் அணியில் திரும்பி கென்யாவிற்கு எதிராக 141* குவித்தார்.அந்த சதத்தை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கண்ணீர் மல்கினார்.கிரிக்கெட் மீது அத்தனை ஈடுபாடு உள்ளவர் தான் சச்சின்.

2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் 11 ஆட்டங்களிலிருந்து 673 ஓட்டங்களைக் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற காரணகர்த்தாவானார்.இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் சச்சின் தொடர் நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

2005, டிசம்பர் 10 அன்று திரு.கவாஸ்கரின் 34 டெஸ்ட் சதங்களை இலங்கைக்கு எதிராக முறியடித்தார்.

2007-2008 ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காமன்வெல்த் பேங்க் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்து தொடர் வெற்றிக்கு வழி செய்தார்.

2008 அக்டோபர்17ல் உலகில் மேற்கு இந்திய தீவு ஆட்டக்காரர் லாராவின் சாதனையை முறியடித்து அதிக டெஸ்ட் ஓட்டங்கள் 12273 (நவம்பர் 10, 2008 ன் படி) எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் .டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் இதுவரை மொத்தம் 40 சதங்கள் எடுத்து முதலிடத்திலுள்ளார்.அதிக பட்ச ஓட்டம் 248*.
ஒரு நாள் போட்டிகளில் 42 சதங்களுடன் 16361 ஓட்டங்கள் எடுத்துள்ளார் (மார்ச் 4, 2008 ன் படி). அதிகபட்ச ஓட்டம் 186*. ஆனால் சச்சின் ஆடிய முதல் 78 ஒரு நாள் ஆட்டங்களில் சதமேதும் எடுக்கவில்லை என்பது சற்றே விசித்திரம் தான்.

23 முறை சச்சின் 90-99 ஓட்ட இடைவெளியில் வெளியேறி சதங்களை கோட்டை விட்டுமிருக்கிறார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் கேட்ச் எடுப்பதிலும் சதமடித்துள்ளார், ஒரு நாள் போட்டிகளில் 122, டெஸ்ட் போட்டிகளில் 100.மிகச்சிறந்த பந்துபிடிப்பாளருமாவார் சச்சின்.

இத்தனை சாதனைகளின் மத்தியில் சோதனைகள் இல்லாமல் இல்லை.

இருமுறை அணித்தலைவர் பொறுப்பு ஏற்றும் அவர் தலைமையின் கீழ் சொல்லத் தகுந்த வெற்றிகளை இந்திய அணி குவிக்கவில்லை.

2001 போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆட்ட நடுவர் மைக் டென்னஸ் சச்சின் மேல் குற்றம் சாட்டி ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதித்தார்.ஆனால் தொலைக்காட்சியில் சச்சின் பந்தை துடைப்பதாக மட்டுமே தெரியவந்தது.இனவெறியினால் (Racism) தான் நடுவர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார் என்பது வரை பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது.இதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு தடையை நீக்கியது.இந்திய பாராளுமன்றம் வரை இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டது(வேற பிரச்சினைகளே நாட்டில் இல்லையென்பதால்?!)

2003 ல் முழங்கை வலியினால் (Tennis elbow) அவதிப்பட்டு 10 மாதங்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற முடியாமலிருந்தார்.

2004 ல் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் 194 ஓட்டங்கள் குவித்து ஆடிக் கொண்டிருந்த போது அணித்தலைவர் திராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்து சச்சினின் இரட்டை சதத்திற்கு வேட்டு வைத்தார்.அது இன்றும் தனிப்பட்ட முறையில் வருத்தப்படுத்துவதாக சச்சினே கூறியுள்ளார்.

2006 ல் தோள்பட்டை பிரச்சினைக்கு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.போட்டிகளில் பங்கேற்காமலிருந்த அந்த சில மாதங்கள் கபில் தேவ், அந்நாள் பயிற்சியாளர் உள்ளிட்ட பலரும் சச்சின் ஓய்வு பெற வேண்டுமென வலியுறுத்தினார்கள்.அந்த நாட்களை மறக்க நினைக்கிறேன் என்று வருத்தப்படுகிறார் சச்சின் இப்போது.

விருதுகள்

1994 அர்ஜூனா விருது
1997-98 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
1997-விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது
1999-பத்மஷ்ரீ விருது
2008-பத்மவிபூஷன் விருது

சச்சினின் ஆட்டத்தில் எனக்கு பிடித்தது

அவரின் அற்புதமான Straight drive (சுனில் கவாஸ்கரே வியக்கிறார் சச்சினின் Straight drive ற்கு), Cover drive மற்றும் Leg flick.
1998 சார்ஜாவில் ஆஸிக்கு எதிரான தொடர்ச்சியான இரு சதங்கள்.
2003 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானின் சோயிப் அக்தர் பந்து வீச்சில் ஆஃப் சைடில் அவரடித்த சிக்சர்.
2003 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டி கேடிக்கின் பந்தை மைதானத்திற்கு வெளியே விரட்டிய சிக்சர்.அதோடு கேடிக்கின் வார்த்தை விளையாட்டுகளுக்கு முற்றுப் புள்ளியும் வைத்தார்.
2007-08 ல் காமன்வெல்த் பேங்க் தொடரில் அடித்த இரு சதங்கள்.
சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும், அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.

இந்தியாவிற்கு மேலும் புகழ் சேர்க்க சச்சினுக்கு வாழ்த்துக்கள்.

நன்றி மற்றும் தகவல் ஆதாரம்,
wikipedia and cricinfo

3 comments:

harijana said...

sachin = "Saathanai"

sachin illai

such inn.............

யோ வொய்ஸ் (யோகா) said...

நண்பரே நீங்கள் கூறியது எல்லா விடயாங்களும் உண்மை தான் என்றாலும் சச்சின் உலகத்தின் மிக சிறந்த அற்புதமான Batsman என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது, ஆனாலும் அவர் ஒரு சிறந்த மேட்ச் வின்னர் கிடையாது, அவரை விட இந்தியா அணியில் கங்குலி, யுவராஜ் ஏன் முஹம்மத் கைப் கூட தனியாக மாட்சை வென்று கொடுத்தவர்கள் தான், ஆனால் சச்சினை எல்லாரும் தூக்கி பிடிப்பதன் காரணம் தெரியவில்லை, சிறிய உதாரணம் 1996, 2003 உலக கோப்பை போட்டிகளில் சச்சின் தான் கூடிய ரன்களை எடுத்தவர், ஆனால் உலக கோப்பை இந்தியாவுக்கு கிடைக்கவில்லை, அந்த ரன்கள் அவர் சொந்த எண்ணிகையை கூட்ட மட்டும் தான் உதவியது...

எட்வின் said...

யோகா அன்பரே,
தாங்கள் சொல்வதும் சரிதான்.ஆனால் கிரிக்கெட் தனிமனித விளையாட்டு இல்லையே!
வெற்றி ஒரு அணிக்குத் தான் கிடைக்குமே ஒழிய தனிப்பட்ட வீரனுக்கு கிடைக்காது.(ஆட்டத்தின் சிறந்த வீரர் என்ற விருது தவிர). எல்லாரும் எல்ல நேரமும் வெற்றியை ஈட்டித் தரமுடியாது. ஒரே ஒரு அணிதான் வெற்றி பெறுமென்றால் மற்ற அணிகள் எதற்கு போட்டிபோடுகின்றன? நான் மற்ற வீரர்களை அப்படி குற்றமொன்றும் சொல்லிவிடவில்லை என்றே நினைக்கிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Post a Comment

Related Posts with Thumbnails