November 02, 2008

அமெரிக்க தேர்தலும்... நம்ம ஊரு தேர்தலும்

அமெரிக்க தேசம் ஏறக்குறைய 21 மாதங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த 44 ஆவது அதிபரைத் தெரிந்தெடுக்கும் தேர்தல் நாள் இதோ நெருங்கி விட்டது.பல மாதங்களாக நடைபெற்று வரும் தேர்தல் பணிகள் நவம்பர் நான்காம் தியதி நடக்கவிருக்கும் ஓட்டெடுப்புடன் நிறைவு பெறுகிறது.அந்நாட்டின் தேர்தல் ஏற்பாடுகளை சற்றே கூர்ந்து கவனித்த வேளையில் ஒரு இந்தியன் என்ற நிலையில் அதிக ஆச்சரியம் தான் எனக்கு தோன்றுகிறது.ஆச்சரியத்தோடு ஏன் நமது நாட்டில் இத்தகைய நிலை இல்லையே எனப் பொறாமைப் படவும் செய்கின்றது எனது மனம்.

அவர்களது தேர்தல் விதிகள், அணுகுமுறைகள்(அங்கே பிரதம மந்திரி பதவி இல்லை) இந்திய தேசத்திலிருந்து வேறுபட்டு நின்றாலும் நம் நாட்டைப் போன்றே ஜனநாயகம் நடைமுறையிலிருப்பதால் எனக்கு இவ்வாறு ஒப்பிடத் தோன்றுகிறது. கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்வதிலிருந்து அதன் பின்னர் நாட்டின் அதிபரைத் தெரிந்தெடுக்கும் வரை அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் என்னை பிரமிக்க வைக்கின்றது.அதிபர் தெரிந்தெடுப்பில் மாத்திரமல்லாமல்,ஒவ்வொரு மாகாணத்தின் கவர்னரையும் இதே போன்றே தெரிந்தெடுக்கிறார்கள்.

அனைத்து ஆயத்தங்களையும் நமது நாட்டைப் போலின்றி அத்தனை வெளிப்படையாகச் செய்கிறார்கள் அங்கே!வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையில் ஆரம்பித்து,உடல் நிலை, குடும்ப விவகாரம், சொத்தின் விவரம், வங்கிகளின் இருப்புத்தொகை விவரம் அனைத்தையும் வெளியிடுகிறார்கள்.நமது நாட்டிலும் தேர்தல் ஆணையம் சொத்து விவரங்களை வெளியிடத் தான் சொல்கின்றன,ஆனால் எத்தனை வேட்பாளர்கள் செய்கிறார்கள் அல்லது தேர்தல் ஆணையம் தான் எத்தனை பேரிடம் சரிவர விசாரிக்கிறார்கள்? இல்லையென்றால் அத்தனை வேட்பாளர்களிடமும் வேட்பு மனுதாக்கலின் இறுதி நாளுக்கு முன்னர் விசாரித்து தான் முடித்து விடுவார்களா? எத்தனை கட்சிகள் எத்தனை வேட்பாளர்கள்.அதற்கெல்லாலம் அங்கு பிரச்சனையே இல்லை;ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி என இரண்டு கட்சி,இரண்டே வேட்பாளர்கள்.

இத்தனைக்கும் இந்தியாவை விட அதிக(50)மாநிலங்களை/மாகாணங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு அமெரிக்கா!
மேலும் இரு வேறு கட்சியைச் சார்ந்த வேட்பாளர்கள் ஒரே மேடையில் வாக்குவாதம் செய்வது அங்கு சாதாரண விஷயம் நம்ம ஊரில் சாத்தியமா என்று தெரியவில்லை.நம்ம ஊரில் தொலைக் காட்சிகள் வேண்டுமென்றால் காட்டிக் கொள்ளலாம் வாக்குவாதங்களை.எனினும் இன்று வரை அதில் மூத்த தலைவர்கள் வாக்குவாதம் செய்வதை நான் கண்டதில்லை .வாக்குவாதம் செய்ய கிடைக்கும் வாய்ப்பு பாராளுமன்றத்தில் மற்றும் சட்டமன்றங்களில் கிடைப்பதுண்டு...நம்மவர்களில் முக்கியமான தலைவர்கள் அந்த பக்கம் கூட எட்டிப் பார்க்க மாட்டார்கள், அப்படியே பாராளுமன்றம் அல்லது சட்டமன்றங்களுக்கு போய் விட்டாலும் அவர்கள் போடும் கூச்சலைத் தான் நாம் கேட்க நேரிடும்.அல்லது செருப்படி, சேலை உரித்தல் இவை தான் அரங்கேறும்.மக்கள் விஷயங்களைக் குறித்து பொதுவாக யாரும் நேருக்கு நேர் வாக்குவாதம் செய்வதில்லை.அவரவர் பத்திரிக்கைகளில் அறிக்கைகள் மட்டும் பக்கம் பக்கமாக எழுதிக் குவிப்பார்கள்(அவர்கள் கட்சியினரைச் சார்ந்தவருக்கு மட்டுமே புரியும் பாணியில்)

கட்சியிலிருந்து வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் சமயத்திலும் அவர்கள் வேட்பாளர்களுக்குள்ளேயே நடைபெறும் போட்டிகள் தான் இன்னும் சுவாரஸ்யம்.ஒரு மாகாணத்தின் செனட்டர் தான் வேட்பாளராக தெரிந்தெடுக்கப் பட வேண்டியவர்.ஒரு வேட்பாளர் மற்றொருவரின் குற்றம் குறைகளைப் புட்டு புட்டு வைக்கிறார்.அவைகள் அனைத்தும் ஊகத்தின் அடிப்படையிலிருந்தாலும் எதிர்த்து நிற்பவர் மனது புண்படாதபடி பார்த்துக் கொள்கிறார்கள்.(நம்மூரில் பேரறிஞர்.அண்ணா, தந்தை.பெரியார் காலங்களில் இருந்த நிலை போல)
எனினும் இறுதியில் மற்றவர் ஜெயித்து விட்டால் தோல்வியடைந்த செனட்டர் அவரை மனதார பாராட்டவும் தயங்குவதில்லை . ஜனநாயக கட்சியினர் ஹிலரி கிளின்டன் மற்றும் பராக் ஒபாமாவே இதற்கு எடுத்துக்காட்டு, தான் எதிர்த்து நின்ற ஒபாமாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார் ஹிலரி கிளின்டன் இப்போது.இவை போன்று நமது ஊரில் சாத்தியமா என்பது யோசிக்கப் பட வேண்டிய விஷயம்.

2 comments:

ஆட்காட்டி said...

வெட்டுக்குத்து தான் சாத்தியம்.

எட்வின் said...

நன்றி ஆட்காட்டி அவர்களே...மற்றொரு வேடிக்கை என்னவென்றால், "முறையாக செயல்படாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து" செய்யும் அதிகாரத்தை தேர்தல் கமிஷனுக்கு வழங்கக் கோரி 8 வருடங்கள் ஆகிறதாம்.இதுவரை அந்த அதிகாரம் கிடைக்கவில்லை என தலைமை தேர்தல் கமிஷனர் திரு.கோபாலசாமி ஆனந்த விகடனின் 15.10.2008 இதழில் கூறியிருக்கிறார்.இத்தனை கட்சிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

Post a Comment

Related Posts with Thumbnails