November 05, 2008

ஒபாமா சாதித்து விட்டார்

அமெரிக்க வரலாற்றிலே ஒரு கருப்பர் அதிபராகி இது தான் முதல் முறை.அவரது தாரக மந்திரமான மாற்றம் அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.இத்தனைக்கும் தான் கருப்பர், அதனால் எனக்கு ஓட்டளியுங்கள் என அவர் ஒரு முறை கூட பிரச்சாரம் செய்யவில்லை.

அமெரிக்க மக்கள் ஒரு மாற்றம் வந்தே தீர வேண்டும் என்று நினைத்திருப்பார்கள் போல, அதனால் தான் அத்தனை அனுபவம் வாய்ந்த ஹிலரி கிளிண்டன் வேண்டாம் ஒபாமா போதுமென வேட்பாளர் தெரிந்தெடுப்பின் போது நினைத்தவர்கள் இப்போதும் அவரை விட அனுபவம் வாய்ந்த குடியரசு கட்சியின் ஜான் மெக்கெயினும் வேண்டாம், புதிய கருத்துக்களை, கொள்கைகளை முன்வைக்கும்;தனது பேச்சில் திடமான நம்பிக்கை கொண்டிருக்கும் ஒபாமா போதுமென அவரைத் தெரிந்தெடுத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் 44 ஆவது அதிபர் ஆகியிருப்பதின் மூலம் 8 ஆண்டு கால குடியரசு கட்சியின் ஆட்சிக்கு முடிவு கொண்டு வந்திருக்கிறார். கடந்த 8 ஆண்டு காலமாக அமெரிக்காவை (உலகை என நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா உங்களுக்கு!!!) ஆண்டு வரும் குடியரசு கட்சியின் ஜார்ஜ் புஷ்ஷின் செயல்பாடுகள் அமெரிக்கர்கள் மத்தியிலும் உலக நாடுகள் மத்தியிலும் நல்லதும் கெட்டதுமான இரு விதமான தாக்கத்தையும் கருத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

உதாரணத்திற்கு புஷ்ஷின் ஈராக்கின் மீதான தாக்குதல் அவருக்கு உலக நாடுகளிடையே நன்மதிப்பைப் பெற்றுத்தரவில்லை,அமெரிக்காவிலும் தாக்குதலுக்கு எதிரான கருத்துக்கள் நிலவி வந்தன.அமெரிக்க பங்கு வர்த்தகம் சரிந்த போது வங்கிகளுக்காக புஷ்ஷும் அவரது அரசும் அறிவித்த 700 பில்லியன் டாலர் மீட்டெடுப்பு விவகாரம் (Bail out package for banks) சில அமெரிக்கரிடையே வரவேற்பைப் பெற்றிருந்த போதும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், வர்த்தகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.

பாக்கின் வடக்கு பாகங்களில் (ஆஃப்கன்-பாக் எல்லையில்) தீவிரவாதிகளின் அட்டகாசத்தை அடக்குகிறோம் என்று நடத்தப்பட்ட அமெரிக்கப் படைகளின் திடீர் தாக்குதலும் பலரது மத்தியில் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தவில்லை.பாக் அதிபர் சர்தாரியே அதனை வெளிப்படையாக கண்டித்துமிருக்கிறார்.
எனினும் 911 ற்கு பிறகு அந்த துயர நேரத்தில் அமெரிக்கர்களை ஓரணியில் நிற்க வைத்ததை அனைவரும் இன்றும் பாராடுகிறார்கள். அவர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை காரணமாகவே அவருக்கு இரண்டாவது முறையும் அதிபராகத் தொடர முடிந்தது.

இந்திய-அமெரிக்க உறவைப் பொறுத்த வரையில் அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற 80 % புஷ்ஷே காரணம்.அவரது தனிப்பட்ட செல்வாக்கினால் அதனை இந்தியாவிற்கு சாதமாக்கிக் கொடுத்தார்.
அதிகம் அனுபவமில்லாத ஒபாமா இனி என்ன செய்யப் போகிறார் எனப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இத்தனைக்கும் மிக குறுகிய காலத்தில் பிரபலமடைந்த ஒரு செனட்டர் அவர்.இரண்டே ஆண்டுகள் தான் செனட்டராக இருந்திருக்கிறார். 8 ஆண்டுகளுக்கு முன் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபராக இருந்த பில் கிளிண்டன் ஒபாமா நன்கு செயல்படுவார் என நற்சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.

பிரச்சாரத்தின் போது அவர் கூறிய ஈராக் போர் நிறுத்தம். புதிய வணிக, வர்த்தக கொள்கைகள் போன்றவற்றை எவ்விதம் நடைமுறைப்படுத்தப் போகிறார் என காலம் தான் பதில் சொல்லும்.அவரது மாற்றம் என்ற மந்திரம் அமெரிக்காவில் சரிந்து கொண்டிருக்கும் வர்த்தகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அனுபவங்கள் மட்டுமே வெற்றியைப் பெற்றுத்தரும் என்ற பரவலான கருத்தை மாற்றி நம்பிக்கையும், திடமான பேச்சும், ஆளுமை திறனும் கூட வெற்றியை பெற்றுத்தருமென நிரூபித்திருக்கிறார் ஒபாமா.

நடந்து முடிந்த தேர்தலின் போது நிகழ்ந்த சில நிகழ்வுகளும்,கார்ட்டூன்களும் இங்கே புகைப்படங்களாய்
வெள்ளை மாளிகை

ஹிலரி கிளிண்டன்-என்ன தான் தோக்கடிச்சிட்டீங்க...நீங்களாவது ஜெயிச்சு காட்டுங்க
ஜார்ஜ் புஷ்-43 ஆவது அமெரிக்க அதிபர்-முடிச்சிட்டாங்களே நம்மள


ஒபாமாவுடன் ஜோ பிடன்-துணை அதிபர் வேட்பாளர்





மெக் கெயின்-பாலின் இப்படி ஏமாத்திட்டாங்களே

இப்படி கவுத்துட்டாங்களே


2 comments:

babe said...

வணக்கம் திரு.எட்வின் கட்டுரை மிகவும் அருமை ...இது போல நம் இந்தியாவிலும் ஒரு மற்றம் வருமா .....????????????? இதைபோல ஒரு மற்றம் வர இறைவனை வேண்டுகிறேன்
என்றும் அன்புடன்
பாபீ

எட்வின் said...

நன்றி பாபு அவர்களே,
நான் மரியாதை பெறுமளவுக்கு அப்படி ஒன்றும் சாதித்து விடவில்லை.
நம்மால் முடிந்த,நமக்கு சரியெனப் பட்ட கருத்துக்களை
நாலுபேர் படிக்க வேண்டும் என நினைக்கிறோம்
நன்றி மீண்டும்.
நம் உறவுகளை விசாரித்ததாக கூறவும்.தொடர்ந்து வேண்டுவோம் இந்தியாவிலும் அமைதி மலர.

Post a Comment

Related Posts with Thumbnails