November 09, 2008

நாற்காலிக்கு சண்ட போடும் நாடு நம் பாரத நாடு

90 களில் நான் அசை போட்ட ஒரு பாடல் தான் நினைவிற்கு வருகிறது தற்போதைய இந்திய அரசியல் நிலவரங்களைக் கேள்விப்படும் பொழுது."நாற்காலிக்கு சண்ட போடும் நாடு நம் பாரத நாடு"

இலங்கை பிரச்சினையில் ஆரம்பித்து, அணு சக்தி ஒப்பந்தம், வட இந்தியர்கள் மீதான தாக்குதல், முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினை என அனைத்து பிரச்சினைகளிலும் பொதுநலத்தை ஒழித்து தங்களுக்கு சாதகமான நிலையை அல்லது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளுகின்ற நிலையையே அரசியல் கட்சிகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

இலங்கைப் பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழக முதல்வர் எடுத்த கூண்டோடு ராஜினாமா முடிவு ஏன் கைவிடப்பட்டது? இந்திய அரசாங்கம் செய்த ஒரு தொலைபேசி அழைப்பில் தமிழர்கள் மீதான தாக்குதல் நின்று விட்டதா? இன்றும் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது!கவிஞர் தாமரை அவர்கள் கூறியது போல தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கின்ற நிலையில் கூட இவர்கள் நாற்காலியைக் துறக்க மறுக்கிறார்களே.மத்தியில் என்றால் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஓடோடி வருகிறார் சென்னைக் கோட்டைக்கு "அய்யோ வேண்டாம் ராஜினாமா செய்து விடாதீர்கள்" என.அதற்கு ஒப்பனையாக இலங்கையிலிருந்து ராஜபக்ஷேயின் தமையனையும் இங்கு வரவழைத்துள்ளார்கள்.

நதிநீர் பிரச்சினையில் என்னவென்றால் கர்நாடகம் காலங்காலமாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை கூட மதிக்காமல் நாங்கள் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தபடி 205 TMC தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க மாட்டோம், எங்கள் இஷ்டத்திற்கு தான் வழங்குவோம் என நிலைப்பாடு கொண்டிருக்கிறார்கள்.ஏன் இந்த நிலைப்பாடு? கர்நாடக விவசாயிகள் மற்றும் அடித்தட்டு மக்களின் ஓட்டைப் பெறுவதற்காகத் தானே? இதே போன்றே நாற்காலியைக் காப்பாற்ற/ ஓட்டுகட்டுகளைப் பெறவே முல்லைப் பெரியாறு விசயமும் முடங்கிக் கிடக்கிறது.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்ததைக் குறித்த விவாதத்தினிடையில் முளைத்த புதிய கூட்டணிகளும், நம்பிக்கை ஓட்டிற்காக பணம் கைமாறியதும் நாற்காலி தான் நம் அரசியல்வாதிகளுக்கு குறிக்கோள் என்பதைத் தெளிவாக்கியிருக்கிறது. சமாஜ்வாடி கட்சியின் அமர்சிங் போன்றோரே அதற்கு சான்று.

இந்த வரிசையில் புதிதான அரங்கேற்றம் மகாராஷ்டிராவில் நடக்கும் வட இந்தியர்களின் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் களமிறங்கியிருக்கும் பீகார் அரசியல்வாதிகளின் ராஜினாமா நாடகம்.ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சார்ந்த 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ள நிலையில், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு அவர்கள் ஏன் ஐக்கிய ஜனதா தள கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் ரஜினாமா செய்கிறார்கள்? ராஜ்யசபா உறுப்பினர்கள், பீகார் மாநில சட்டமன்ற, நகராட்சி உறுப்பினர்களும் செய்யட்டுமே என நையாண்டி செய்து வருகிறார்.

அதற்கு அவர் கூறும் காரணம் "வட இந்தியர் மீதான தாக்குதல் பிரச்சினையை எதிர்க்க பீகாரின் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தான் முடிவெடுத்தோம்" ஆனால் முதலில் இவர்கள் தனியாக ராஜினாமா நாடகம் செய்கிறார்கள் என்பது தான்.(இவரை எல்லாம் என்ன சொல்ல?).லாலு கட்சியினர் நவம்பர் 15அன்று ராஜினாமா செய்யப் போகிறார்களாம்.

பீகாரின் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டிய நிலையிலும் இப்படி அங்கே.

மேலும் மகாராஷ்டிராவில் வட இந்தியரை தாக்கி வரும் மராத்தியருக்கு எதிராக வழக்கு தொடுக்க காங்கிரஸ் அரசு காலந்தாழ்த்தி வருவது மராத்தியர் ஓட்டிற்காகவே என்பதும் ஊரறிந்த உண்மை.

மக்களுக்காக இவர்கள் பணி செய்வது என்றோ?

2 comments:

ஜுர்கேன் க்ருகேர் said...

//மக்களுக்காக இவர்கள் பணி செய்வது என்றோ?//

விடையே தெரியாத கேள்வியே கேட்டுட்டிங்களே?

Arnold Edwin said...

இதெல்லாம் நமக்கு சகஜமாகி விட்டது என்றே தோன்றுகிறது?!! குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் நம் அரசியல்வாதிகள்,
சில பல தொழிலதிபர்கள் மூலம் உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள நல்ல பெயரையும் இவர்கள் கெடுத்து விடுவார்கள்.
உலகமே நமது வளர்ச்சியைத் தீவிரமாக கவனித்து கொண்டிருக்கிற நிலையிலுமா இப்படி?

Post a Comment

Related Posts with Thumbnails