November 20, 2008

தோனி செய்தது சரியா?

என்னய்யா இது டக்காம் லூசாம் ஆட்ட நடுவர்கள் ஊடால பேசிக்கிறாங்க, திடீர்னு பாத்தா வெளாடிகிட்டு நின்ன பசங்க எல்லாம் ரூமுக்குள்ள போய்ட்டானுக.அப்புறம் பாத்தா ஹர்பஜன் கிட்ட பேட்டி எடுக்குறாரு மூத்தவரு ரவி சாஸ்திரி.அப்புறம் தான் புரியுது இந்தியா ஜெயிச்சுபுட்டாங்கனு! இது என்ன கிரிக்கெட் தான இல்ல வேற என்னவுமா?

இங்கிலீஸ் அணிய விட நம்ம ரன் கொஞ்சமில்ல அடிச்சு இருக்கோம் அப்புறம் எப்படி இப்படி நம்ம ஜெயிச்சுட்டோம்னு நண்பர்கள் பல பேருக்கு புரியவேயில்லை.(இது தான் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய விளையாட்டோ?)

டக்வர்த்-லூயிஸ் முறையில் இந்திய அணி இன்று கான்பூரில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மைதானத்தில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது டக்வர்த்-லூயிஸ் வரையறையின் படி நிறைவுபெற்ற 40 ஆவது ஓவரில் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 16 ஓட்டங்கள் அதிகம் பெற்றிருந்த படியால் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மைதானத்தில் ஒளிவிளக்கு இருந்தும் அதனை உபயோகிக்க இயலவில்லை இந்த இரு அணிகளுக்கும்.ஒவ்வொரு ஆட்டம் துவங்கும் முன்னர் செயற்கை ஒளியை ஆட்டத்தினிடையே தேவைப்பட்டால் உபயோகிப்பது குறித்து முடிவு செய்யும் உரிமை இரு அணி தலைவர்களுக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த முடிவு ஆட்டம் துவங்கும் முன்னர் எடுக்கப்பட வேண்டும்.ஆட்டத்தின் இடையே முடிவெடுக்கவியலாது.

கான்பூரில் இது போன்ற தட்பவெப்ப காலங்களில் பனிமூட்டம் சற்று அதிகமாகவே காணப்படும் என போட்டி அமைப்பாளர்கள், ஆட்ட நடுவர் இந்திய வீரர்கள் அனைவரும் அறிந்திருந்த ஒன்று தான்.இங்கிலாந்து அணியிலும் சிலர் அறிந்திருக்கலாம் அறியாமலுமிருந்திருக்கலாம்.

தோனி ஆட்டம் துவங்கும் முன் டாஸ்(பூவா தலையா) இடும் போதே ரவி சாஸ்திரிக்கு அளித்த பேட்டியில் பனிமூட்டம் குறித்தும் டக்வர்த்-லூயிஸ் முறை உபயோகப்படுத்தப்படலாம் என்பது குறித்தும் தெரிவித்திருக்கிறார்.(இத்தனைக்கும் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களிலிருந்து ஒரு ஓவரும் குறைக்கப்பட்டது)கான்பூரின் தட்பவெப்பநிலையைக் குறித்து நன்கு அறிந்திருந்த தோனி ஏன் செயற்கை ஒளிவிளக்கு பயன்படுத்துவது குறித்து இங்கிலாந்து அணி தலைவர் பீட்டர்சனுடன் விவாதிக்கவில்லை?இது தான் ஒரு வீரனுக்கு அழகா?பீட்டர்சன் இது குறித்து கேட்டாரா என தெரியவில்லை.

ஆனால் உணவு இடைவெளியின் போது நடுவர்களிடம் உணவு இடைவேளை நேரத்தை குறைக்கும்படி கேட்டிருக்கிறார்.அதற்கு ஆட்ட நடுவர்கள் அப்படி செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதிக்காது என்று தெரிவித்திருக்கிறார்கள்.(ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அப்படி கூறவில்லை என Cricinfo தெரிவிக்கிறது)

தட்பவெப்பநிலை குறித்து நன்கு அறிந்திருந்த நடுவர்கள் பூவா தலையா போடவே 15 நிமிடம் தாமதம் காட்டியிருக்கிறார்கள்.பூவா தலையாவிற்கு பின்னரும் ஆட்டம் துவங்க 20 நிமிட கால தாமதம்.உணவு இடைவேளை 30 நிமிடம் வேறு. இப்படி நேரத்தை வீணாக்கிவிட்டு இறுதியில் போதிய வெளிச்சம் இல்லையென்று குண்டைத் தூக்கிப்போட்டது ஏற்றுக் கொள்ளும் படியில்லை.

இதில் சந்தோசம் இந்திய அணி வீரர்களுக்கும்,போட்டியை போட்டியாக பார்க்காத சில ரசிகர்களுக்கு மட்டுமே.நிச்சயமாக இங்கிலாந்து அணி சந்தோஷப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆட்ட விமர்சகர்களான ரவி சாஸ்திரி,டேவிட் லாயிட் உள்ளிட்ட பலரும் அதிருப்தியே தெரிவித்திருக்கிறார்கள்.

செயற்கை ஒளிவிளக்கு உபயோகிப்பது பற்றிய முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அணித்தலைவர்களிடம் அளிக்காமல் அதனைக் கட்டாயப்படுத்த வேண்டுமென கருத்து சொல்லியிருக்கிறார் ரவிசாஸ்திரி அவர்கள்.அவர் சொல்வதிலும் உண்மை இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

ரசிகர்கள் அவ்வளவு சிரமமெடுத்து ஆட்டத்தை ரசிக்க குழுமியிருந்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது என்றால் ஏமாந்து போயிருக்கமாட்டார்களா.இத்தனைக்கும் இன்று நடந்த போட்டியில் மைதானம் 30 ஆயிரத்திற்கும் மேல் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.

யாரை குற்றம் சொல்வது! செயற்கை ஒளிவிளக்கைக் குறித்து ஒரு தீர்க்கமான முடிவெடுக்காத சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலையா? இல்லை தெரிந்திருந்தும் பீட்டர்சனுடன் விவாதிக்காத தோனியையா? இல்லை கால தாமதம் செய்ய காரணமாயிருந்த ஆட்ட நடுவர் ரோஷன் மஹானமாவையா?(மைதான நடுவர் இல்லை)

1 comment:

எட்வின் said...

ஒரு தொடர் ஆரம்பிக்கும் முன்னரே இரு அணித்தலைவர்களும் அந்த தொடரை நடத்தும் கிரிக்கெட் வாரியத்துடன் கலந்து பேசி செயற்கை ஒளி விளக்கை ஆட்டங்களில் பயன்படுத்துவது குறித்து முடிவு எடுத்திருக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர் ஒருவர் தெரிவிக்கிறார்.(சுட்டி/link ஏதும் தற்சமயம் கிட்டவில்லை) எனவே தோனியை குறை கூற ஒன்றுமில்லை

எவரேனும் அதனைக் குறித்து கருத்து சொல்வார்கள் என எதிர்பார்த்தேன்!!! எவரும் சொல்லவில்லையே.

ஆனாலும் தொடர் துவங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை.கண்டிப்பாக தொடருக்கான மைதானங்கள்,அமைப்புகள்,கால சூழ்நிலைகளைக் குறித்து விவாதிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள் இந்திய வீரர்கள்.ஒரு விதத்தில் (போதிய வெளிச்சமில்லை என கூறி ஆட்டம் ஆடாமல்)ரசிகர்களை ஏமாற்றிய தோனியும் சகாக்களும் செய்தது தவறு என்றே நினைக்கிறேன்.தொடரின் ஆரம்பத்திலேயே விவாதித்திருக்கலாம் செயற்கை ஒளி விளக்கை உபயோகிப்பது குறித்து.

Post a Comment

Related Posts with Thumbnails