November 30, 2008

அரசியல்வாதிகளால் இந்தியாவிற்கு இனி மீள்வே இல்லை!

மும்பையில் நிகழ்ந்த கோர சம்பவத்தின் பின் அரங்கேறும் ஒவ்வொரு அரசியல் காட்சிகளும் ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் தான் ஏற்படுத்துகின்றது.இந்த இக்கட்டான சமயத்திலாவது இந்திய அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து விடமாட்டார்களா என ஏங்கிய ஒவ்வொரு இந்திய பிரஜைக்கும் இந்திய அரசியல்வாதிகள் நாங்கள் என்றுமே ஓரணியில் நிற்கப்போவதில்லை என ஓங்கி குரல் கொடுத்திருப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்திருக்கின்றனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலை முழுமையாக முறியடிக்கும் முன்னரே இவர்களின் அரசியல் ஆதாய நாடகங்கள் தொடங்கியிருந்தன.பிரதமரும் எதிர்கட்சி தலைவர் அத்வானி அவர்களும் ஒன்றாக மும்பைக்கு வருகிறார்கள் என்றனர்;அது நடந்ததா என்றால் இல்லையென்றே தோன்றியது.குஜராத்தின் முதல்வர் வேறொரு மாநிலத்திற்கு வருகை தர என்ன அவசியமுள்ளது? (கோத்ரா சம்பவத்தின் போது இவர் எப்போது அங்கு சென்றார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்) வந்ததோடு மட்டும் நிற்காமல் பண உதவி அளிக்கப்படும் என பிச்சை போடாத குறையாக சொல்லி விட்டுப் போனார்.இவரது பணத்திலா இன்று காவல் துறை அதிகாரிகளின் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றது? மறைந்த திரு.ஹேமந்த் அவர்களின் திருமதி பணத்தை பெற்றுக்கொள்ளமாட்டேன் என தெரிவித்தது அரசியல் ஆதாய அகங்காரிகளுக்கு முகத்தில் அறைந்தது போன்றிருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.

இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அத்வானி அய்யாவும்,கட்சித் தலைவர் ராஜ்நாத்தும் வரமாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.காரணம் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கிறார்களாம்.இத்தனை அசம்பாவிதத்திற்கு பின்னரும் இவர்கள் ஓரணியில் நில்லாமல் வருகின்ற தேர்தல்களை முன்வைத்தே ஓரோ அடியும் எடுத்து வைக்கிறார்கள்.தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பணம் அளிப்பு விவகாரம் முதல், அனைத்துக் கட்சி கூட்டப் புறக்கணிப்பு வரை எல்லாம் தேர்தலை பின்னோக்கமாகக் கொண்டவையே.தேர்தலில் தீவிரவாதத்தை தடுக்கத் தவறிய காங்கிரஸ் அரசை முன் வைத்து ஓட்டு சேகரிப்பதே இவர்களின் நோக்கம்.

மகாராஷ்டிராவின் காங்கிரசோ அக்கறையே இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறது.இத்தனைக்கும் உளவுத்துறையால் முதலிலேயே எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள் என இன்றைய செய்தி தெரிவிக்கின்றது.அம்மாநிலத்தின் துணை முதல்வர் பாட்டிலோ இத்தனை பெரிய மாநிலத்தில் ஒன்றிரண்டு இப்படி நிகழ்வது சகஜம் தான் என சப்பை கட்டு கட்டுகிறார். (என்னய்யா செய்ய இவங்கள?)

இனி அரசியல்வாதிகளால் இந்தியருக்கு ஏன் மீள்வு இல்லை? என்ற தலையங்கத்திற்கு வருகிறேன்.இந்த நெருக்கடி சமயங்களில் கூட ஒன்று சேர்ந்து ஒரு முடிவிற்கு வராமல் ஓட்டிற்காக மட்டுமே அரசியல் நடத்தும் இவர்களால் எப்படி இனி இந்தியருக்கு மீட்பு கிடைக்கப்போகிறது?தனிமனித பாதுகாப்பிற்கு என்ன ஆதாரமிருக்கிறது?

இன்றைய நிலையைக் குறித்துக் கவலை கொள்ளாமல், இனி எப்போதோ வருகின்ற தேர்தலுக்காக நேரம் செலவிடும் இவர்களா இந்தியாவிற்கு பாதுகாப்பு அளிக்கவிருக்கிறார்கள்.இவர்களுக்கு வருகின்ற தேர்தல்களில் தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும்.இந்தியன் என்ற உணர்ச்சியுள்ள ஒவ்வொரு இந்தியனும் சிந்திக்கவில்லையென்றால் இந்தியா நாளைய தினம் தீவிரவாதத்திற்கு மடிவது நிச்சயம்.

இந்தியன் என்ற நிலையில் மிகுந்த வேதனையிலும், மன உளைச்சலிலும் இதனை எழுதுகிறேன்.இந்தியாவின் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கிறேன்.

2 comments:

manithan said...

எல்லாவற்றிற்க்கும் பிறர் மீது பழி போடுவது நமக்கு கை வந்த கலை. என்று நான்
1. லஞ்சம் தராமல், வாங்காமல் இருப்பேன்,
2. இலவசத்துக்கு ஆசைப்படமாட்டேன்,
3. ஜாதி,மத சங்கங்களில் சேர மாட்டேன்,
4. செய்யும் வேலையில் பொறுப்புடன் இருப்பேன்
என்று நம்மை நாமே சுய கட்டுப்பாட்டுடன் வைக்கின்றோமோ அன்றே எல்லாம் கட்டுப்பாட்டில் வந்து விடும்

Arnold Edwin said...

மிகச் சரியாக கூறினீர்கள் மனிதன் அவர்களே.தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Post a Comment

Related Posts with Thumbnails