November 14, 2008

ராஜ்கோட்டின் ராஜா யுவ்ராஜ்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரின் ராஜ்கோட்டில் நடந்து வரும் முதல் போட்டியில் யுவ்ராஜ் சிங் அதிரடியாக ஆடி 16 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்களுடன் 78 பந்துகளில் 138 ஓட்டங்கள் குவித்துள்ளார் அதன் மூலம் இந்தியா ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 11 ஆவது மிக அதிக ஓட்டமான 387/5 ஐ பெற்றுள்ளது.

இவர் 64 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.(இதற்கு முன் அசாருதீன் 62 பந்துகளில் சதமடித்துள்ளார்.அதி வேக சத சாதனையில் உலக அரங்கில் அசாருதீன் ஏழாவதும் யுவ்ராஜ் (ஜெய்சூர்யாவுடன்) எட்டாவது இடத்திலுமிருக்கிறார்கள்) அதன் மூலம் இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 387 ஓட்டங்கள் எடுத்துள்ளது.இதுவே இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டம்.இதன் முன்னர் 2007-ல் பிரிஸ்டலில் 329 எடுத்திருந்தது.

இதனால் யுவ்ராஜ் சிங் மீண்டும் தன் திறமையை நிரூபித்துள்ளார்.தாதா கங்குலி ஓய்வு பெற்றுள்ள நிலையில் மீண்டும் டெஸ்ட் அணியில் யுவ்ராஜ் சிங்கிற்கு இடம்பிடிக்க இந்த சதம் ஒரு துணையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இத்தனைக்கும் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு காம்பீரின் உதவியுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் யுவ்ராஜ்.

காம்பீர் மற்றும் புதிய துணைத் தலைவர் சேவாக்கின் உதவியுடன் இந்திய அணி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது.இருவரும் அரை சதமடித்தனர்.இவர்கள் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 127 ரன்கள் எடுத்தனர். 1998-2002 களில் இருந்த வல-இட கை துவக்க ஆட்டக்காரர்கள் சச்சின்-கங்குலியை நினைவுபடுத்துகிறார்கள் இந்த டெல்லி இணை.

இது இந்திய மண்ணில் நடைபெற்ற போட்டி என்பதால் சிலர் யுவ்ராஜின் திறமையைக் குறித்துக் கேள்விகள் எழுப்பக் கூடும்.ஆனாலும் எந்த மண்ணாயினும் இத்தனை ஓட்டங்கள் குவிப்பதற்கு ஒரு தனிப்பட்ட திறமை அவசியமே.

அணித்தலைவர் பொறுப்பேற்ற பின்பு முதன்முறையாக இந்தியா வரும் பீட்டர்சனுக்கு ஆரம்பமே பேரிடியாக அமைந்துள்ளது.

வாழ்த்துக்கள் யுவ்ராஜ்.

1 comment:

எட்வின் said...

இந்திய அணி இங்கிலாந்தை 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.

Post a Comment

Related Posts with Thumbnails