December 24, 2008

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

எனது முயற்சியில் ஒரு கிறிஸ்துமஸ் வீடியோ.

"சமாதான பிரபு இயேசுகிறிஸ்து பிறந்த நன்னாளில்

உலகம் முழுதும் சமாதானம் நிலவ பிரார்த்திப்போம்"

December 16, 2008

வெளிநாட்டிலும் நம்மவர்கள் கை!!!வண்ணம்

நான்கு தினங்களுக்கு முன்னதாக ஓமன் நாட்டில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது;நான் தூக்கம் கலைந்து ஏன் பேருந்து நிறுத்தப்பட்டது என்ற கேள்வியோடு கண் விழித்துப்பார்க்கையில் உடன் பயணித்த 90 % (ஆண்) பயணிகள் வெளியிலே தங்கள் பின்புறத்தைக் காட்டிக்கொண்டு ஏதோ செய்து கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது. சில மணித்துளிகளுக்குப் பின்னர் கண்ணை கசக்கிக் கொண்டு தூக்கத்திலிருந்து முழுமையாக மீண்ட பின்னர் தான் புரிந்தது அவர்கள் அனைவரும் நம்பர் 1 போய்க்கொண்டிருந்தார்கள் என்று.

பேருந்தில் பெண்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமும் கூச்சமும் கொஞ்சம் கூட இல்லாமல் பட்டப்பகலிலேயே அதுவும் வெளிநாட்டில் இத்தகைய காரியத்தை செய்வதற்கு நம்ம நாட்டு மக்களுக்கு எப்படி தான் தோன்றுகிறதோ தெரியவில்லை. இத்தனைக்கும் படிக்காதவர்கள் என்றால் கூட பரவாயில்லை. மெத்த படித்த பொறியாளர்களும், அலுவலக அதிகாரிகளுமே இத்தகைய காரியத்தைச் செய்வது தான் கவலைக்குரிய விஷயம். என்னுடன் பயணம் செய்த இரு அமெரிக்கர்கள் நம்மவர்களைக் கிண்டலடிக்க எனக்கு மிகுந்த மன சங்கடமாகிவிட்டது.பேருந்து ஓட்டுனரையும்(பாகிஸ்தானைச் சார்ந்தவர்) குறை சொல்ல வேண்டியதுள்ளது. பயணிகள் தவறு செய்வதற்கு இவரும் காரணமாகி விட்டார்.சாதாரணமாக ஓமன் நாட்டு ஓட்டுனரென்றால் இப்படி வழிகளில் நிறுத்த மாட்டார்; கழிப்பிடம் இணைக்கப்பட்டுள்ள சாலையோர உணவகங்கள் அருகில் நிறுத்தவது தான் வழக்கம்.

தமிழகத்திலும் பேருந்து பயணங்களின் போது பல முறை இதனைக் கவனித்திருக்கிறேன்.
இந்த பழக்கம் நம்மவர்கள் நம் ஊரிலிருந்து கற்றுக்கொண்டு சென்றது தான். பிறநாடுகளுக்கும் சென்று நாங்கள் இப்படிப்பட்டவர்கள் தான் என்று தங்கள் பெருமையைப் பறைசாற்றுகிறார்கள்.

நமது இந்தியாவை, தமிழகத்தை, சுற்றுப்புறத்தை அறிந்தும் அறியாமலும் நாமே குப்பை மேடாக்கி வருவதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. பிளாஸ்டிக் குவளைகளில் தேனீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்தும் நம்மில் சிலர் அதனை அலேக்காக ஓடும் ரயிலில் இருந்து அப்படியே வீசியெறிவதும், பேருந்து பயணச் சீட்டுகளை பயணம் முடிந்ததும் காற்றில் பறக்க விடுவதும், போதை வஸ்துக்களை மென்றுவிட்டு ப்ளிச் ப்ளிச் என நடை மேடைகள் மற்றும் திரையரங்குகளில் உமிழ்வதும்.வேர்க்கடலைகளை வயிற்றினுள்ளே தள்ளிவிட்டு அதன் தோடுகளை ஹாயாக பேருந்திலும், ரயிலிலும், திரையரங்குகளிலும் இருக்கைகளின் அடியிலே தள்ளுவதும் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது.

இது போன்ற சிறிய விஷயங்களில் நாம் தவறு செய்வதை நிறுத்தினாலே நமது இந்தியாவை நாம் சுத்தமும் சுகாதாரமுமாக வைக்க இயலும். மேலும் பெற்றோர்கள் இது போல தருணங்களில் தத்தம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருத்தலும் மிக அவசியம். இல்லையென்றால் வெளிநாடுகளில் நமது மானம் தொடர்ந்து காற்றில் பறப்பது தொடரத்தான் செய்யும்.

December 09, 2008

ஈத் பெருநாளில் பகுதியளவே மகிழ்ச்சி-அமீர்கான்

ரங்க்தே பசந்தி உள்ளிட்ட நாட்டுப்பிரச்சினைகளை உள்ளடக்கிய திரைப்படங்களில் நடித்த ஹிந்தி திரைப்பட நடிகர் அமீர்கான் இன்று பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அளித்த பேட்டியில் பல உண்ர்ச்சிப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.அவரளித்த பேட்டியின் ஒருசிலபகுதியின் தமிழாக்கம் இங்கே.(முன்னரே சில இஸ்லாம் அமைப்புகள் வேண்டிக்கொண்டபடி மும்பையின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையில் கருப்புத்துணி அணிந்திருந்தார்)

ஈத் பெருநாளாகிய இன்று எனக்கு முழுமையான மகிழ்ச்சியில்லை; பகுதியளவே மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

மும்பையின் தாக்குதலுக்கு பின்னான இந்திய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை.எத்தகைய நேரத்திலும் குறிப்பாக இது போன்ற நேரங்களில் ஏறெடுத்துப்பார்க்கும் படியான;மக்கள் நம்பிக்கை வைக்கும் படியான அரசியல் வாதிகள் தற்போது இந்தியாவில் யாருமில்லை.

இந்திய அரசியல்கட்சிகள் வரும் தேர்தல்களில் தங்களை புதுப்பிக்க வேண்டும்;திறமை வாய்ந்த வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்; இளைஞர்கள் அரசியலிற்கு வருவதையும் ஆதரிக்கிறேன்.இன்று ஊழலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் பின்னாட்களில் திருந்துவார்கள் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.

மேலும் அரசியல்வாதிகளை மாத்திரம் குறை கூறவும் முடியாது. அவர்களும் நம்மில் ஒருவரே;அவர்கள் ஜூபிடர் கோளில் இருந்தோ வேற்று கிரகங்களிலிருந்தோ வந்துவிடவில்லை. நாம் தான் அவர்களை தேர்தெடுத்தோம்;இப்போது நாமே குறையும் கூறுகிறோம். எனவே தேர்ந்தெடுத்த நாமும் குறைகூறப்படவேண்டியவர்கள் தான்.

இந்தியர் ஒவ்வொருவரும் முதலில் அவரவர் வாழ்க்கையை சீர்திருத்த வேண்டும்;அவரவர் வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும்; அவ்வாறு செய்யும் பட்சத்தில் மட்டுமே நம் நாட்டை நாம் சீர்திருத்த முடியும். அதன் பின்னர் பிறரை குறை கூறுவோமானால் அது தகும்.

மதத்தின் பெயரால் தீவிரவாத தாக்குதல் நடத்துவது துரதிருஷ்டமானது. அவ்வாறு செய்பவர்கள் இஸ்லாமிய மதத்தின் பெயரை சொல்லவே தகுதியற்றவர்கள். தீவிரவாதத்திற்கு மதமில்லை என்றே கருதுகிறேன்.அண்டை நாடான பாகிஸ்தானை மொத்தமாக குறை கூறுவதும் சரியல்லவே;ஏனென்றால் அவர்களும் தீவிரவாததிற்கு பல உயிர்களை பலி கொடுத்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானிலிருக்கும் சில அமைப்புகள் தான் தீவிரவாதத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன். எனவே உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம்.அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து போராடுவது வேண்டியதாக இருக்கிறது. ஏற்கெனவே உலகின் பல நாடுகளும் ஆதரவு அளித்திருப்பது மகிழ்ச்சியே;பாகிஸ்தானும் ஆதரவு கை நீட்டியிருப்பது வரவேற்கப்படவேண்டியது.

மும்பையில் மட்டுமல்லாது இந்தியாவின் பல பாகங்களிலும் தாக்குதல் நடத்தியிருக்கும் தீவிரவாதிகளை ஒடுக்க நீண்டகால குறிக்கோள்களுடன் உடனடியாக செயல்படுவது அவசியம்.தீவிரவாதிகளின் தாக்குதலிற்கு பின்னர் மிகுந்த துக்கமடைந்தேன். அதன் தாக்கத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை. எனவே தான் கஜினியின் வெளியீட்டை தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளேன்.

மும்பை தாக்குதலிற்கு பின்னர் எனது பாதுகாப்பை நான் கூட்டிக்கொள்ளவில்லை.

இவ்வாறு கூறினார். அவரது கருத்துக்கள் அனைத்தும் சரியெனவே படுகின்றது

உலகின் மிகச்சிறந்த பேட்மிண்டன் நம்பிக்கை நட்சத்திரம்-2008

ஹரியானாவைச் சார்ந்த பதினெட்டே வயதான பேட்மிண்டன் மங்கை சைனா நேவால் (Saina Nehwal), இந்த ஆண்டின் சிறந்த நம்பிக்கை நட்சத்திர வீராங்கனை (Most promising player of the year 2008) என்று சியோலில், அகில உலக பேட்மிண்டன் அமைப்பால் பெருமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி வரை முன்னேறி சாதனை படைத்தார். ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் ஒரு இந்தியர் காலிறுதிக்கு தகுதி பெற்றது அதுவே முதல் முறை. உலக ஜூனியர் சாம்பியன்(2008) பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ள இவர் இந்தியாவின் தற்போதைய ஜூனியர் சாம்பியனுமாவார்.

2008 ல் இளைஞர்களுக்கான காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டிகளில் உலக சாம்பியன் பட்டம் பெற்று சாதனையும் படைத்துள்ளார்.

டிசம்பர் 5, நிலவரத்தின்படி உலக பேட்மிண்டன் தரவரிசையில் 10 ஆவது இடத்திலுள்ளார். இதன் மூலம் உலக தரவசிசையில் முதல் பத்து இடத்திற்குள் நுழைந்த முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

எனது முந்தைய பதிவில் கூறியபடி, குழு போட்டியான கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்தியாவில், நேவால், மில்கா சிங், செஸ் ஆனந்த், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பிந்த்ரா போன்ற தனி மனித விளையாட்டு வீரர்களையும் ஊக்குவித்தல் மிக அவசியமாகும்; அது இவர்கள் மேலும் உலக அரங்கில் சாதனை படைக்க உதவும் என்பதில் ஐயமில்லை.

December 08, 2008

கன்னியாகுமரியின் வனப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்பைச் சொல்லும் சில புகைப்படங்கள் இங்கே...
இது எனது ஐம்பதாவது பதிவு...இதனை நான் பிறந்த மாவட்டமான கன்னியாகுமரிக்கு சமர்ப்பிக்கிறேன்
கன்னியாகுமரியின் செயற்கைக்கோள் புகைப்படம்
முட்டம் கடற்கரை
குளச்சல் துறைமுகம்
பசுமை நிறைந்த நாஞ்சில்
விவேகானந்தர் பாறை, கன்னியாகுமரி

சூர்யோதயம்,கன்னியாகுமரி

சூர்ய அஸ்தமனம், கன்னியாகுமரி

கன்னியாகுமரியின் மற்றுமொரு கோணம்

திருவிதாங்கூர் ராஜாவின் அரண்மனை,பத்மநாபபுரம்,தக்கலை
திட்டுவிளை மலையடிவாரம்
ரப்பர் தோட்டம், கீரிப்பாறை
திற்பரப்பு
சுசீந்திரம் கோவில்
திற்பரப்பு நீர்வீழ்ச்சி

தென்னைகளினிடையே எட்டிப்பார்க்கும் கதிரவன், கொட்டாரம்

காற்றாடி, ஆரல்வாய்மொழி

நாணல், காளிகேசம்

தென்னந்தோப்பு, கொட்டாரம்

மிகப்பழமையும் புகழும் வாய்ந்த காதரின் பூத் @ புத்தேரி மருத்துவமனை, நாகர்கோவில், 1895
மார்த்தாண்டம் CSI Nesamony Memorial Church, Bulit in 1883 by a British Architect John Sinclair

133 அடி உயர திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமரி

காந்தி மண்டபம்,கன்னியாகுமரி

ஆசியாவின் மிக உயரமானதும்,நீளமானதுமான தொங்கு பாலம் (தொட்டில்பாலம்), மாத்தூர்

December 04, 2008

ஏ.ஆர்.ரஹ்மானின் நெருங்கிய உதவியாளர் ஸ்ரீதர் காலமானார்

நான்கு முறை தேசிய விருது பெற்ற ஒலிப் பொறியாளர் (Sound Engineer) ஸ்ரீதர் டிசம்பர் 1 ஆம் தியதி (இசை ஒலியுடன் விளையாடியவர் ஒலியே இன்றி) தனது நித்திரையிலேயே மாரடைப்பால் காலமானார்.

இசைப்புயல் என்று வர்ணிக்கப்படும் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கடந்த 15 வருடமாக இணைந்து பணியாற்றி வந்தவர் தான் திரு.ஸ்ரீதர் அவர்கள். ரஹ்மானுடன் கடந்த 15 ஆண்டுகளில் எந்த நிலையிலும் மனவருத்தம் கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

ரஹ்மானின் முதல் சினிமாவான ரோஜாவிலிருந்து தற்போதைய (அமீர்,அசின் நடித்துள்ள) ஹிந்தி சினிமாவான கஜினி வரை தனது கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்.கஜினியின் இறுதி இசை வடிவமைப்பிற்காக பல நாட்கள் அதிகாலை மூன்று மணி வரையிலும் ரஹ்மானுடன் பணியாற்றிருக்கிறார்.

ரஹ்மானின் மேடைக் கச்சேரிகளுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும் இவரது பங்கு மிகப்பெரியது. சொல்லப்போனால் ரஹ்மானின் வலது கை எனவும் கூறலாம் திரு ஸ்ரீதர் அவர்களை. கோடம்பாக்கத்திலுள்ள ரஹ்மானின் பஞ்சதன் ஒலிப்பதிவு மையத்தில் மற்றொரு ஒலி அமைப்பாளர் திரு.சிவகுமார் அவர்களுடன் இணைந்து பல திரைப்படங்களுக்கு இரவு பகல் பாராமல் பணியாற்றியிருக்கிறார்.

இந்திய இசை உலகில் டிஜிட்டல் (DTS) இசை உத்தியை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.

உலகப்புகழ் வாய்ந்த இசைக்குழு Beatles உடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஜாக்கீர் உசேன், பண்டிட் ரவி சங்கர், ஜார்ஜ் ஹாரிசன் போன்ற உலக பிரபலங்களுடனும் சிறப்பான பணியாற்றிருக்கிறார்.

இந்தியாவின் மிகச்சிறந்த ஒலி பொறியாளர்களில் ஸ்ரீதரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.மஹாநதி, லகான், தில்சே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற திரைப்படங்களுக்காக நான்கு முறை தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார் திரு.ஸ்ரீதர் அவர்கள்.

இதுவரை இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர் மஹாதேவன், ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களுடன் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

ரஹ்மானின் குழுவில் நான் அதிகம் மரியாதை வைத்திருக்கும் நபர்களில் திரு.ஸ்ரீதர் அவரும் ஒருவர்.

திரைப்பட பாடல்களில் பெரும்பாலும் இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கும் ரசிகர்கள் இவரைப்போன்ற கலைஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும், பாடகர்களுக்கும் முக்கியத்துவமளித்தால் இவர்களும் காலத்தால் அளிக்கப்படமுடியாத சாதனையாளர்கள் ஆவதில் சந்தேகமில்லை.

இழப்பால் வருந்தும் குடும்பத்தினருக்காக பிரார்த்திப்போம்.

நன்றி http://www.aamirkhan.com/blog மற்றும் http://en.wikipedia.org/wiki/H._Sridhar

December 03, 2008

நீயாக மட்டுமிருந்தால்...


இருந்தால் உன்னோடு

பேகிக்கொண்டேயிருப்பேன்

என்னுடன் பேசுவது

நீயாக மட்டுமிருந்தால்.


சிரித்துக் கொண்டே இருப்பேன்

ரசித்து மகிழ்வது

நீயாக மட்டுமிருந்தால்


அழுது கொண்டேயிருப்பேன்

ஆறுதல் சொல்வது

நீயாக மட்டுமிருந்தால்


உறங்கி கொண்டேயிருப்பேன்

கனவில் வருவது

நீயாக மட்டுமிருந்தால்


மறுநொடியில் இறந்து விடுவேன்

என்னை மறக்க நினைப்பது

நீயாக மட்டுமிருந்தால்

Related Posts with Thumbnails