December 04, 2008

ஏ.ஆர்.ரஹ்மானின் நெருங்கிய உதவியாளர் ஸ்ரீதர் காலமானார்

நான்கு முறை தேசிய விருது பெற்ற ஒலிப் பொறியாளர் (Sound Engineer) ஸ்ரீதர் டிசம்பர் 1 ஆம் தியதி (இசை ஒலியுடன் விளையாடியவர் ஒலியே இன்றி) தனது நித்திரையிலேயே மாரடைப்பால் காலமானார்.

இசைப்புயல் என்று வர்ணிக்கப்படும் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கடந்த 15 வருடமாக இணைந்து பணியாற்றி வந்தவர் தான் திரு.ஸ்ரீதர் அவர்கள். ரஹ்மானுடன் கடந்த 15 ஆண்டுகளில் எந்த நிலையிலும் மனவருத்தம் கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

ரஹ்மானின் முதல் சினிமாவான ரோஜாவிலிருந்து தற்போதைய (அமீர்,அசின் நடித்துள்ள) ஹிந்தி சினிமாவான கஜினி வரை தனது கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்.கஜினியின் இறுதி இசை வடிவமைப்பிற்காக பல நாட்கள் அதிகாலை மூன்று மணி வரையிலும் ரஹ்மானுடன் பணியாற்றிருக்கிறார்.

ரஹ்மானின் மேடைக் கச்சேரிகளுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும் இவரது பங்கு மிகப்பெரியது. சொல்லப்போனால் ரஹ்மானின் வலது கை எனவும் கூறலாம் திரு ஸ்ரீதர் அவர்களை. கோடம்பாக்கத்திலுள்ள ரஹ்மானின் பஞ்சதன் ஒலிப்பதிவு மையத்தில் மற்றொரு ஒலி அமைப்பாளர் திரு.சிவகுமார் அவர்களுடன் இணைந்து பல திரைப்படங்களுக்கு இரவு பகல் பாராமல் பணியாற்றியிருக்கிறார்.

இந்திய இசை உலகில் டிஜிட்டல் (DTS) இசை உத்தியை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.

உலகப்புகழ் வாய்ந்த இசைக்குழு Beatles உடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஜாக்கீர் உசேன், பண்டிட் ரவி சங்கர், ஜார்ஜ் ஹாரிசன் போன்ற உலக பிரபலங்களுடனும் சிறப்பான பணியாற்றிருக்கிறார்.

இந்தியாவின் மிகச்சிறந்த ஒலி பொறியாளர்களில் ஸ்ரீதரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.மஹாநதி, லகான், தில்சே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற திரைப்படங்களுக்காக நான்கு முறை தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார் திரு.ஸ்ரீதர் அவர்கள்.

இதுவரை இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர் மஹாதேவன், ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களுடன் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

ரஹ்மானின் குழுவில் நான் அதிகம் மரியாதை வைத்திருக்கும் நபர்களில் திரு.ஸ்ரீதர் அவரும் ஒருவர்.

திரைப்பட பாடல்களில் பெரும்பாலும் இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கும் ரசிகர்கள் இவரைப்போன்ற கலைஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும், பாடகர்களுக்கும் முக்கியத்துவமளித்தால் இவர்களும் காலத்தால் அளிக்கப்படமுடியாத சாதனையாளர்கள் ஆவதில் சந்தேகமில்லை.

இழப்பால் வருந்தும் குடும்பத்தினருக்காக பிரார்த்திப்போம்.

நன்றி http://www.aamirkhan.com/blog மற்றும் http://en.wikipedia.org/wiki/H._Sridhar

8 comments:

Sundar Padmanaban said...

அஞ்சலிகளும் பிரார்த்தனைகளும்

முரளிகண்ணன் said...

அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன்

துளசி கோபால் said...

அஞ்சலிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அஞ்சலிகள்.. எங்கே திரைப்படத்தில் பெயர் போடும்போதோ மற்ற சமயங்களிலோ இது போன்ற பெயர்களை கணக்கிலே கொள்வதே இல்லையே.. நாங்கள்.. :(

தகவலை பரிமாறியதற்கு நன்றிகள்.

Joe said...

அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்!

கடவுள் அவரது குடும்பத்தாருக்கு மனபலத்தையும், தைரியத்தையும் தருவாராக.

கோவி.கண்ணன் said...

//"ஏ.ஆர்.ரஹ்மானின் வலது கை ஸ்ரீதர் காலமானார்"//

ஒரு இசைப் புயலை முடமாக காட்டும் தலைப்பிற்கு பதிலாக
ஏ.ஆர்.ரஹ்மானின் நெருங்கிய உதவியாளர் என்று சொல்லி இருக்கலாம்

எட்வின் said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி..

//எங்கே திரைப்படத்தில் பெயர் போடும்போதோ மற்ற சமயங்களிலோ இது போன்ற பெயர்களை கணக்கிலே கொள்வதே இல்லையே.. நாங்கள்//

இவரைப்போன்று கவனிக்கப்படாத இன்னும் பல கலைஞர்கள் சாதித்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர் தேசிய விருது வாங்கியது (ஒன்றல்ல இரண்டல்ல...நான்கு) இன்னும் கூட பலருக்கு தெரியாது.

எட்வின் said...

//ஒரு இசைப் புயலை முடமாக காட்டும் தலைப்பிற்கு பதிலாக
ஏ.ஆர்.ரஹ்மானின் நெருங்கிய உதவியாளர் என்று சொல்லி இருக்கலாம்//

கோவி கண்ணன் அவர்களே...தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
இனி இவ்வாறு தவறேதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்படும்.

Post a Comment

Related Posts with Thumbnails