October 31, 2008

கிரிக்கெட் ஆடுகளத்தில் ஒரு விசித்திர காட்சி



டெஸ்ட் ஆட்டம் இவர்களுக்கு பிடிக்கவில்லை போலும்...











பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் டெல்லியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.மைதானத்தில் திடீரென்று புகுந்த தேனீக்கள் காரணம் இந்த
புகைப்படம் சாத்தியமாயிற்று.


நடுவர் பில்லி சைகையால் வீரர்களை ஆட அழைக்கிறார்

October 30, 2008

ஜெஃப்ரி பாய்காட்டிற்கு சரியான பதிலடி

டெல்லியில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதமடித்து தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் லக்ஷ்மன்.கவுதம் கம்பீரும் அருமையாக ஒரு இரட்டைச் சதமடித்துள்ளார்.
இந்த டெஸ்ட் ஆட்டத்தொடர் துவங்கும் முன் யார்க் ஷையரின் ஜெஃப்ரி பாய்காட் இந்திய அணியின் அற்புத ஆட்டக்காரர்களாகிய (நால்வர்) (Fabulous 4) சச்சின், சவுரவ், திராவிட், லக்ஷ்மன் ஆகியோரைக் குறித்து மிக தரக்குறைவாக ஒரு பத்திரிக்கையில் தாக்கியிருந்தார்.
அதாவது இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்கள் விளம்பரப் படங்களில் நடித்து பணமும் புகழும் ஈட்டவே அணியில் இன்னும் இடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள், இல்லையென்றால் அவர்கள் எப்போதே அணியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பார்கள் என்றும் சாடியிருந்தார். மேலும் இந்த மூத்த வீரர்களில் எவருடைய ஆட்டமும் தற்போதைய ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறத்தலாக இல்லை எனவும் கூறியிருந்தார்.
அவரது பேச்சுகள் அனைத்திற்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர் மூத்த வீரர்கள், சச்சினின் அரை சதங்கள், சவுரவின் சதம், திராவிட்டின் திடமான அரைசதம்,லஷ்மணின் அற்புத இரட்டைச் சதம், இரண்டாவது டெஸ்ட்டின் வெற்றி இவை அனைத்தும் ஜெஃப்ரி பாய்காட்டிற்கு சரியான பதிலடியாக அமைந்துள்ளன.அவரது முகத்தில் கரியை பூசாத குறை தான்.
மேலும் இந்திய வீரர்கள் விளம்பரப் படங்களில் நடிக்கிறார்களென்றால் இவருக்கு என்ன வந்தது? அவர்களுக்கு இருக்கிற பெயருக்கும் புகழுக்கும் அவர்கள் நடித்து விட்டுப் போகிறார்கள், அவர்களது விளையாட்டு சரியில்லாத பட்சத்தில் நிறுவனங்களே அவர்களைக் கண்டு கொள்ளாது என்பது தான் உண்மை, உதாரணத்திற்கு Gillete விளம்பரத்தில் உலகின் தலைச் சிறந்த வீரர்களான டைகர் வுட்ஸ், ரோஜர் ஃபெடரர், தியரி ஹென்றி போன்றோருடன் வந்து கொண்டிருந்த திராவிட்டை அந்நிறுவனம் இப்போது காட்டுவதில்லை.நிலைமை இவ்வாறிருக்க ஜெஃப்ரி பாய்காட்டோ வாயில் வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு தங்கள் ஆட்டத்தால் தக்கப் பதிலடி கொடுத்துள்ள நம்மவர்களுக்கு பாராட்டுக்கள்.

October 29, 2008

மகாராஷ்டிரம் என்ன மராத்தியர்களின் மண்ணா?

இன்று மீண்டும் ஒரு வடஇந்தியன் சில மராத்திய கயவர்களால் அநியாயமாக ரயிலில் வைத்தே கொல்லப் பட்டிருக்கிறான். சில மாதங்களாகவே மகாராஷ்டிராவில் தொடர்ந்து வரும் வட இந்தியர்களின் மீதான இத்தகைய தாக்குதல் அங்கு தொழிலினிமித்தம் குடியேறியுள்ள பிற மாநிலத்தவரைப் பீதியடைய வைத்துள்ளது.பகிரங்கமாக நடத்தும் அவர்களின் இத்தகைய தாக்குதல்களுக்கு போலீசாரும் ஒத்துப் போகிறார்கள் என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.மகாராஷ்டிராவில் புதிதாக தொடங்கப்படும் தொழில்களில் பிற மாநிலத்தவருக்கு இடம் கொடுக்கக் கூடாதென்று வலியுறுத்தி வருகிறார்கள் ராஜ் தாக்கரே உள்ளிட்ட சில கீழ்த்தரமான அரசியல்வாதிகள்.அதே நேரத்தில் சுயமாக வேலையிலமர்ந்த கீழ்மட்ட தொழில்களில் இருக்கின்ற காவலாளிகள், டப்பா வாலாக்கள் என அறியப்படும் மதிய உணவு சப்ளையர்கள் 40 சதவீதத்திற்கும் மேலானோர் வட மாநிலங்களைச் சார்ந்தவர்களே.அவர்கள் மிகக் குறைந்த கூலி தருபவர்களுக்கும் வேலை செய்ய தயாராக இருப்பது தான் மராத்தியரை விட அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருகிறது.இதையும் கூட பொருக்காமல் அவர்களைத் தாக்கி வருகிறார்கள் மராத்தியர்கள்.வட மாநில குறிப்பாக பீகார், உத்திரபிரதேசத்தைச் சார்ந்த டாக்சி ஓட்டுனர்கள் தாக்கப் படுகின்ற சம்பவங்களும் அங்கொன்றுமாக இங்கொன்றும் நடைபெற்றுக் கொண்டு தானிருக்கிறது.


இந்நிலையில் கலவரத்தைத் தூண்டும் விதம் மேடைப் பேச்சு நடத்தியதற்காக கடந்த வாரத்தில் ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்ட போது (எப்போதோ கைது செய்யப்பட வேண்டியவர்) போலீசாரால் அதிக மரியாதையுடன் அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார், ஒருவர் ராஜ் சாப் என அழைத்துள்ளார், வேறொருவரோ காரின் கதவை அவருக்காக திறந்து கொடுத்துள்ளார், இதற்காக அப் போலீசாராரின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தைத் தூண்டும் நாணமில்லா அரசியல்வாதிகளுக்கு ஆதரவு தரும் இவர்களைப் போன்ற போலீசார் எங்கே அன்றாடம் அல்லலுறும் சாதாரண மனிதனுக்கு பாதுகாப்பு தரப் போகிறார்கள். வடமாநிலத்தைச் சார்ந்த கீழ்மட்ட வேலையிருப்பவர்களை மட்டுமின்றி மேல்மட்டத்தவரையும் பகிரங்கமாக அவர்களின் சொந்த மாநிலத்திற்குத் திரும்பிப் போகச் சொல்லும் அளவிற்கு மராத்திய மதம் பிடித்திருக்கிறது அவர்களுக்கு.(நடிகர் அமிதாப்பின் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை) எனினும் கணிப்பொறி, மருத்துவம் போன்ற மேல் மட்டத் தொழில்களில் ஈடுபடுவோர் 55 சதவீதத்திற்கும் மேலானோர் தென்னிந்தியர்களே அதிலும் குறிப்பாக தமிழர்களும்,கேரளத்தினருமே.இவர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிப் போகிற ஒரு நிலை வருமென்றால் அவர்களின் பிழைப்பு ஒருபுறம் கேள்விக்குறி என்றாலும் மகாராஷ்டிராவின் நிலைமை என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்.இதனை அறிந்தே white color job எனப்படும் கணிப்பொறி, மருத்துவம் போன்ற துறைகளின் பணியிலிருப்போரிடம் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள், இல்லையென்றால் அவர்களுக்கும் கீழ்மட்டத் தொழில் செய்பவர்களின் நிலைமை தான்.


இவை அனைத்தும் மராத்தியருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துகிறோம் என்று கபட நாடகமாடி மராத்தியர்களின் ஓட்டு வங்கியை அடைய இவர்கள் அரங்கேற்றும் நாடகம் என்பதாகவே நான் கருதுகிறேன்.பட்டப் பகலில், பொதுமக்கள் மத்தியிலேயே வெறித்தனம் காட்டும் இவர்கள் மீது மகாராஷ்டிர அரசு காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுத்திருப்பது கேள்விக்குரிய விஷயம்.தேர்தல் நெருங்குவதால் தான் இந்த கண் துடைப்பு என்றும் சில அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இத்தகைய போக்கு தொடருமானால் மகாராஷ்டிராவில் வரலாறு மீண்டுமொரு 1992-1993 ஐ சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.


October 26, 2008

தமிழினப் படுகொலை

லங்காவில் இன்று உயிர் துச்சமாகி விட்டது.
சிங்களப் படை,
போர் என்ற பெயரால் அப்பாவித் தமிழர்களை
பேயாக அழித்து தனது
பசியாறிக் கொண்டிருக்கிறது
பால சிங்கங்கள்
அப்பாவிகளாய்
அழிவதைக் காண
அய்யகோ!-மனம் கனக்கிறது
சீர்மிகு தமிழகத் தமிழனமோ
சீர் கெட்டத் தனமாய்
சில்லறை வார்த்தைகளால்
சிங்களப் படைகளை இன்னும்
சீண்டி விட்டுக் கொண்டிருக்கின்றது.

ஜனநாயகப் படுகொலைக்கு
எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய
ஐக்கிய நாடுகள் சபையே
ஐக்கியமாக வாய் மூடி நிற்கின்றது

சார்க் நாடுகளும்
இவற்றைக் கண்டு கொண்டதாக
தெரியவில்லை

இதனிடையில்...

ஆயுதம் ஏந்துவோமென்று
ஆவேச கூச்சலிடுகின்றன சில
அரசியல் ஆதாயக் கட்சிகள்
அவன் குரல் கொடுப்பது புலிகளுக்காகவே
அல்லாமல்
அநியாயமாய் அழிந்துக் கொண்டிருக்கும்
அப்பாவித் தமிழர்களுக்காகவல்ல.
அக்கறை அத்தனையுள்ளவன்
அக்கரைச் சென்று
ஆயுதம் ஏந்தட்டும்.

மலேசியாவில்
தமிழர்கள்
தாக்கப்பட்ட போது
எங்கிருந்தார்கள் இவர்கள்
அன்று எங்கே போனது
இவர்களது மனிதச் சங்கிலி.
அவனும்
தமிழன் தானே
தமிழினம் தானே

(இந்திய தேசத்திற்குள்ளேயே)
தனித் தமிழ்நாடும் வேண்டுமாம் இவர்களுக்கு,
தரங்கெட்ட சில கயவர்களுக்கு

இவர்களைப் போன்றோரினால்-தான்
இன்று இந்திய தேசம்
இங்கொன்றும் அங்கொன்றுமாக
பிளவு பட்டு நிற்கின்றது

மகாராஷ்டிராவிலே
மராத்தியனைத் தவிர
மற்றவனுக்கு வேலை வாய்ப்பு
மறுக்கப் பட வேண்டுமென
பிரச்சாரம் செய்து வரும்
பிரிவினைவாதிகளுக்கும்
தனித் தமிழ்நாடு வேண்டுமென
தரந்தாழ்ந்து
தர்க்கம் செய்யும்-இவர்களுக்கும்
என்ன வேறுபாடுள்ளது

இந்திய இறையாண்மைக்கு
இடையூறு விளைவிக்கும்
எந்த சக்தியையும்-இந்தியன்
ஏற்றுக் கொள்ளமாட்டான்

ஒரு நாட்டின்
உள் விவகாரங்களில்
தலையிடுவதே தவறானது
என்பது எனது கருத்து

எதுவாயினும்
லங்காவில்
ஏதுமறியா
எண்ணற்ற
உயிர்கள் மடிவது
உயிரை உறைய வைக்கிறது.
பலியாகும்
பச்சிளம் குழந்தைகளைக் காண
பதைப் பதைக்கிறது மனம்.

என்று மாறுமோ
இந்த அவலம்


திரு.மணிரத்னம், கவிப்பேரரசு.வைரமுத்து, இசைப்புயல்.ரஹ்மான் இணைந்து இலங்கைத் தமிழர்களுக்கு
சமர்ப்பித்த இப் பாடலை நான் மீண்டும் சமர்ப்பிக்கிறேன்




October 10, 2008

பாண்டிங் Vs சச்சின்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து இந்திய மண்ணிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார் பாண்டிங். இந்திய மண்ணில் சதமடிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என டெஸ்ட் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள உலகின் தலைசிறந்த வீரரான பிரையன் லாராவே நேற்று கூறியிருக்கிறார் ஏனெனில் அவரும் இந்திய மண்ணில் டெஸ்ட் ஆட்டங்களில் சதமடித்தது கிடையாது.பாண்டிங்கினை குறித்து எழும்பிய அனைத்து வினாக்களுக்கும் அவரது 123 ஆல் பதிலளித்திருக்கிறார் அவர். அணித்தலைவராக அவர் அடித்திருக்கும் 16 ஆவது சதம் இது.எந்த அணித்தலைவரும் அணித்தலைவராக இருக்கும் போது இத்தனை சதம் அடித்தது இல்லை.

தொடர்ந்து இந்த ஆட்டத்தை தொடருவாரானால் சச்சினின் சாதனையான அதிக சத சாதனையையும் அதிக ஓட்டங்கள் எடுத்த சாதனையையும் இவர் முறியடிக்கக் கூடும்.அதிக ஓட்டங்கள் குவித்த முதல் 10 வீரர்களில் அதிக சராசரி (58.74) இவருடையது தான்.

எனினும் சச்சினின் ஆட்டத்தை எவரும் அத்தனை எளிதில் குறைத்து மதிப்பிடவியலாது, சச்சின் தனது ஆட்டத்தை ஆரம்பித்த காலங்களில் மெக் கிராத், மெக் டெர்மட், வார்னே, வால்ஷ், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அம்ப்ரோஸ், ஆலன் டொனால்டு, லூயிஸ், வாஸ் போன்ற மிகச் சிரமமான பந்துவீச்சாளர்களை சந்திக்க வேண்டியிருந்தது. இன்றோ...டேல் ஸ்டெயின், அக்தர், லீ போன்ற வெகு சிலரே மட்டையாளர்களுக்கு சிரமம் கொடுக்கிறார்கள், இதுவும் பாண்டிங்கிற்கு ஒரு வழியில் அனுகூலம் தான்.
எதுவாயினும் 123 காக பாண்டிங்கிற்கு வாழ்த்துக்கள்

October 09, 2008

அணுசக்தி ஒப்பந்தமும் தீபத்திருவிழாவும்

இறுதியாக அணு சக்தி ஒப்பந்தம் தனது இறுதி வடிவம் பெற்றுள்ளது, ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவர்களின் கையெழுத்தோடு.மூன்று ஆண்டு கால முயற்சிகளுக்குப் பின்னர் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
பிரதமர் சிங் அப்பாடா இப்போதாவது கையெழுத்தாகியதே என பெருமூச்சு விட்டுருப்பார் என்பதில் ஐயமில்லை.பிரதமரின் உறுதியான மனதிற்கு அவரைப் பாராட்டியே தீர வேண்டும்.ஜார்ஜ் புஷ் மட்டும் சளைத்தவரல்ல, அவரது கட்சியினரிடையே இருந்து வந்த எதிர்ப்புகளையும் எதிர்க் கட்சியினரின் சவால்களையும் சமாளித்து அற்புதமான அணுகுமுறையினால் செனட்டிலும், அமெரிக்க அரசியல் பிரதிநிதிகளின் குழுவிலும் கலந்துரையாடி முடித்துக் கொடித்துள்ளார்.
கையெழுத்திடுகிற நிகழ்விலே இந்தியா மற்றும் அமெரிக்க நல்லுறவை புகழ்மாலையால் சூட்டியிருக்கிறார். இரு நாடுகளின் ஆரம்ப காலங்களையும், காலனி ஆதிக்கம் அடைந்திருந்ததையும் அதன் பின்னர் அடைந்த முன்னேற்றங்களையும் குறிப்பிட்டு பேசியிருப்பது வரவேற்பிற்குரியது.இனி இந்தியாவின் கரங்களில் தானிருக்கிறது அணுசக்தியினை எவ்விதம் பயன்படுத்துவது என்பது.பேச்சின் இறுதியில் இந்தியருக்கு தீபத்திருவிழா வாழ்த்தும் சொல்லி பலரது புருவத்தை உயர்த்தி இருக்கிறார் ஜனாதிபதி புஷ். புஷ் எளிதில் புரிந்து கொள்ளமுடியாதவர் தான்.

October 03, 2008

கிறிஸ்தவமென்பது மதமல்ல

கிறிஸ்தவமென்பது மதமல்ல

மதத்தினால் மதம் பிடித்து இருக்கிறது இங்கு சிலருக்கு, கிறிஸ்தவமென்பது மதமல்ல அது பரத்தினை அடைய உதவும் ஒரு மார்க்கமென்பது எனது கருத்து.

பெயர் கிறிஸ்தவர்கள் இன்னும் மதத்திலேயே நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள்...அதன் விளைவாகத் தான் எப்போதுமில்லாத தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் கண்களுக்கு இம்மை மாத்திரமே தெரிகிறது,மறுமை என்றால் என்னவென்கிறாகள்.பகிரங்கமாக பதிலுக்கு பதில் தாக்குவோமென்று அறிக்கை விடுகிறார்கள் சில கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவம் அதைத் தான் போதிக்கிறதா? இல்லை.

அது போன்ற பெயர் கிறிஸ்தவ தலைவர்களால் பாதிக்கப்படுவது,ஒட்டு மொத்த கிறிஸ்தவ சமூகமே.இதுவே ஒரிசாவின் கன்னியாஸ்திரியின் அவலத்துக்கும் அதனைத் தொடர்ந்த தாக்குதலுக்கும் காரணம் என்பதாக தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

அக்டோபர் 2

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி அவர்களின் துணிச்சல்மிகு இச்சட்டத்திற்கு ஒரு சலாம்.இதனால் 60% த்திற்கும் மேலான சிகரெட் உடயோகிக்காத இந்தியர்களை குறிப்பாக குழந்தைகளை சிகரெட் புகையினால் ஏற்படும் பல வியாதிகளிலிருந்து காப்பாற்றலாமென்பது அமைச்சரின் கணிப்பு.இதனை எவ்விதம் செயல்படுத்தப் போகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.எனினும் அமைச்சர் கூறியது போன்று...ஒவ்வொரு இந்திய பிரஜையும் இது நம் நாடு,நமது மக்கள்,நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்று பொதுநலமறிந்து, சுயநலமறந்து செயல்பட்டால் இச்சட்டத்தை செயல்படுத்தவது எளிது.இச்சட்டம் மட்டுமல்ல எச்சட்டத்திற்கும் இது பொருந்தும்.

பாதுகாப்பற்ற, கயவர்களின் சுதந்திர தேசம்

அக்டோபர் 2

காந்தி பிறந்த தினமாம் இன்று,
அவரைப்போன்றோர் பெற்றுத்தந்த சுதந்திரம் இன்று

சுதந்திரமாக கயவர்கள் செயல்படவும்,

சுதந்திரமாக தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்யவும்,
சுதந்திரமாக ஊழல் செய்யவும்,

சுதந்திரமாக நாட்டைக் காப்பவர்கள் (நாற்காலி காப்பவர்கள்) அதினிமத்தம் ஊதிகை ஈட்டவும்,
சுதந்திரமாக நாட்டை குப்பை மேடாக்கவும்,

சுதந்திரமாக வலுவில்லாதவனை தாக்கவும்,
சுதந்திரமாக எளிவர்களை எள்ளி நகையாடவும்,

சுதந்திரமாக கொள்ளையிடவும்,

சுதந்திரமாக மதத்தின் பெயரால் மதம் கொள்ளவும்,
சுதந்திரமாக மொழியின் பெயரால் மக்களை ஒடுக்கவும்,

சுதந்திரமாக சௌம்யா விஸ்வநாதன் போன்றோரை கொலை செய்யவும்

தான் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது...

தானும் அதற்கு (கொலை) பலியானோம்
என்பதை காந்தி உணர்ந்து,
ஏனடா சுதந்திரம் பெற்றுத் தந்தோம்
என்று எண்ணுவாரோ என்னமோ !

October 01, 2008

தீவிரவாதத்திற்கு சமய முகமில்லை


அக்டோபர் 1 2008
தீவிரவாதத்திற்கு சமய முகமில்லை
இதோ இன்று மற்றொரு ஆலயமும் அதனைச் சார்ந்தவர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள் ஒரிசாவில்;ஓரிரு ஆண்டுகளாகவே பழங்குடியினரிடையே மறைவில் இருந்து வருகின்ற கருத்து வேறுபாடுகள் இன்று வெளிப்படையாக தாக்குதலாக மாற ஆரம்பித்திருக்கின்றன;குண்டு வெடிப்புகளும்; தாக்குதலும் இன்று இந்தியாவில் அன்றாட வழக்கமாகி விட்டன;எந்த ஒரு மாநிலமும் விதிவிலக்கல்ல;பிரதமர் பிரான்சில் சுற்றுப்பயணத்திலிருந்த போது கடந்த சில மாதங்களாக இந்தியா சந்தித்து வரும் கசப்பான அனுபவங்களுக்கு உலக அரங்கில் இந்தியா பதிலளிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது;பிரபல கன்னட எழுத்தாளர் ஆனந்தமூர்த்தி கூறியபடி கிறிஸ்தவர்களின் மீதான தாக்குதல் இந்திய நாகரிகத்தின் மீதான தாக்குதல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை;ஆனால் சில கட்சியைச் சார்ந்தவர்களோ சமீப கால தாக்குதல்களை அரசியலாக்க முயன்று நடுநிலைவாதிகளை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள்;சிமி போன்ற அமைப்புகளின் தாக்குதல் தீவிரவாதமென்றால் கர்நாடகாவில் பஜ்ரங்க் தள் போன்ற அமைப்புகளின் தாக்குதலை என்னவென்பது; இந்திய சமூகம் அனைத்தும் ஒன்று சேர்ந்து தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டிய இத்தருணத்திலும் கூட இங்கு சீர்கெட்ட அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பது கவலைக்குரிய விஷயம்;மற்றொரு நாளோ அத்வானி அவர்கள் விசாரணைகள் ஆரம்பிக்கும் முன்னதாகவே;சமீபத்திய டெல்லி குண்டு வெடிப்பிற்கு காரணம் என்று அண்டை நாடான பங்களாதேசினை குறைகூறிக்கொண்டிருக்கிறார்;வேறு சிலரோ பாதுகாப்புத்துறை அமைச்சகத்தை மாற்றினால் பிரச்சினைக்கு முடிவாகி விடுமென்று கருதுகிறார்கள்;மறுபுறம் ஆளுங்கட்சி அனைத்துக் கட்சி கூட்டத்தினைக் கூட்டி கருத்துக் கேட்க தயங்குகின்றது;இப்படியே நிலைமை நீளுமானால் பகட்டு வேஷமிட்டு குண்டு துளைக்கா கார்களில் திரியும் அரசியல்வாதிகளின் கண் துடைப்பு கண்டன வாக்குகள் தொடரும் அதே நேரத்தில் மடிவதோ சாமானியன் தான்; அதோடு இவ்விதம் சமய முகமின்றி தொடரும் தீவிரவாதத்திற்கு முற்றிப்புள்ளியும் அண்மை காலத்தில் ஏற்படப் போவதில்லை;
Related Posts with Thumbnails