February 16, 2009

அன்றும்! இன்றும்!!!

இருபதாம் நூற்றாண்டின் இறுதியும் இருபத்தொன்றாம் நூற்றாண்டும் உலகில் குறிப்பாக இந்தியாவில் கொண்டு வந்திருக்கிறக்கின்ற மாற்றங்களைச் சற்றே எண்ணிப் பார்த்தால் புருவம் உயரத் தான் செய்கிறது.உலகம் நமது கரங்களில் என கூட கூறலாம்.


"உலகில் மாற்றம் மட்டுமே மாறிக்கொண்டேயிருக்கும்" என எங்கேயோ படித்த ஞாபகம். அந்த வாக்கில் தான் எத்தனை உண்மை!

வீட்டின் ஜன்னல் வழி எப்பொழுது விடியும் என தெருவீதியை நோக்கி விழித்துக் கொண்டிருந்தவனை இன்று கணினியின் ஜன்னல் வழி உலக வீதியை விடிய விடிய பார்க்கவும் செய்திருக்கிறது மாற்றம்

25 ஆண்டுகளுக்கு முன்னர் நாம்(ன்) இருந்த நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டால் எத்தனை வகையான மாற்றங்கள் தான் நம் வாழ்வில் நிகழ்ந்திருக்கின்றன.

அன்று மாட்டு வண்டியிலும், கால்நடையுமான பயணங்களில் விமானத்தை நோக்கி ஆகாயம் பார்த்த என்னைப்போன்ற சாமானியனை இன்று பூகோளம் நோக்கி கீழே பார்க்கச் செய்திருக்கிறது காலத்தின் மாறுபாடு.

அன்று எண்ணிப்பார்க்க முடியாத அதிசயங்களெல்லாம் இன்று நடந்தேறி வருகின்றன. உலக மயமாக்கலால் இன்று விரல் சொடுக்கும் நேரத்தில் கடல் கடந்து தகவல் பரிமாற்றம் செய்யவும், பணப் பரிமாற்றம் செய்யவும் இயல்கிறது.

18 வயது இருக்கும் போது தான் தொலைபேசியையே பார்த்திருக்கிறேன்;ஆனால் இன்றைய சந்ததி பிறக்கையிலேயே அவர்கள் செவிகளில் செல்ஃபோன்கள் ரீங்காரமிடுகின்றன.எனது கையிலும் ஃபோன் தவழும் என கனவும் கண்டதில்லை.இப்படி மாறியிருக்கிறது; பலரை மாற்றியுமிருக்கிறது இன்றைய உலகம்.
கணினியும் இணையமும் உலகை இணைக்கும் மாபெரும் சக்திகளாக உருவெடுத்துள்ளன, web camera உதவியுடன் நேரலையில் பார்த்து பேசுவது 25 ஆண்டுகள் முன்பு நினைத்தே பார்க்கவியலாதது.

அன்று தட்டச்சு செய்வதே மிகப்பெரும் சாதனை, இன்றோ தட்டச்சு என்றால் என்ன என்கிறார்கள் சிறுவர்கள்.தட்டச்சுகளை தொடாத கரங்கள் இன்று கணினிகளை தீண்டுகின்றன.

இருக்கின்ற இடங்களிலேயே நம் உள்ளங்கைகளில் உலக நிகழ்வுகளை செயற்கைக் கோள் உதவியுடன் GPRS, 3G,GPS தொழில்நுட்பங்களால் அறிய முடிகிறது.

தொலைக்காட்சிகளையும் அவற்றின் நேரடி ஒளிபரப்புகளைக் குறித்து சொல்லவே தேவையில்லை. எனது சிறுவயதில் கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிகளைக் காண்பதே அரிது.கல்லூரியில் நான் நுழையும் போது தான் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியே நுழைந்தது . இன்றோ எத்தனை வகை வண்ண தொலைக்காட்சிகள்!! flat,lcd என அவற்றில் தான் எத்தனை ரகங்கள்!

எத்தனை மாற்றங்கள்! எத்தனை ஆச்சரியங்கள்!

பல மணி நேரம் வங்கிகளில் காத்திருந்த காலம் மாறி சில நிமிடங்களில் பணமெடுக்க உதவும் ATM இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நம் பட்டணங்களில் யோசித்து கூட பார்க்கவியலாத விஷயம்.உலகை வலம் வர இருக்கவே இருக்கிறது Google Earth தொழில்நுட்பம், இப்போது சமுத்திரங்களையும் உலவ வழி செய்திருக்கிறார்கள்.

வர்த்தகங்களுக்காகவும், மருத்துவத்திற்காகவும் இருக்கின்ற இடங்களிலேயே Tele Conference, Video Conference, Medical Transcription மூலம் தகவல்களை நாடு கடந்து பகிர்ந்து கொள்ளவும் இயல்கிறது.

ஆயிரம் பக்கங்களுடைய 1000 புத்தங்கள் அன்றைய 5 காசு அளவிற்கும் குறைவான chip களிலும் கையடக்க pda க்களிலும் அடங்கியது மகத்தான காரியம்.
அன்றைய 100 cassete களின் பல ஆயிரம் பாடல்கள் இன்றைய ஒரு ipod உள்ளில்/cd யினுள் வைக்கவியலும் என யாரால் தான் நினைத்து பார்த்திருக்க முடியும்? அன்று வானொலிப் பெட்டி வீடுகளில் இருந்தாலே அது வீட்டிற்கு கவுரவம்,பெரிய விஷயம், இன்றோ கரங்களில் FM ரேடியோக்கள் பா(ட்)டாய் படுத்துகின்றன.

ரெக்கார்டரிலும், டேப் ரெக்கார்டரிலும் பாடல்கள் கேட்பதும் வீடியோ காசெட் பிளேயரில் சினிமாக்களும் பார்ப்பதும் ஆடிக்கொன்றும் அமாவாசைக்கொன்றுமான அன்றைய காலம் போய் இன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிடி பிளேயர்களும், ஹோம் தியேட்டர்களும் வீடுகளை ஆக்கிரமித்துள்ளன.

மாற்றங்கள் பல வந்தாலும் அவற்றில் நன்மையும் தீமையும் ஒரு சேர அடங்கியிருக்கின்றன. நாம் அவற்றை என்ன வழியில் உபயோகப்படுத்துகிறோமென்பது தான் முக்கியம்.

அனைத்து கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப முன்னேற்றங்களும் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்திருக்கின்றன என சொல்லவும் முடிவதில்லை.

தீவிரவாதிகள் இன்று GPS வரைபடங்கள் கொண்டும்,கூகுள் எர்த் கொண்டும் தங்கள் தாக்குதலை நவீனப்படுத்துகிறார்கள்!! மறுபுறம் ATM திருடர்களும் பெருகி வருகிறார்கள்;

வர்த்தக மற்றும் தனிமனித உரையாடல்கள் அநியாயமாக ஒட்டு கேட்கப்படுகின்றன. தொலைக்காட்சிகளினால் குடும்பங்களில் உரையாடல்கள் குறைந்து வருகின்றன.

அம்மிக்கல் மிக்சியாகவும்,
உரல்கல் கிரைண்டராகவும்,


துடைப்பம் வேக்கும் கிளினீராகவும்,மாறி உடலின் அசைவைக் குறைத்து வாயில் நுழையாத பெயர்களையுடைய நோய்களினால் வாழ்க்கையை அசைத்திருக்கிறது

இந்த மாற்றங்களால் உலகம் நம் கரங்களுள் வந்துவிட்டாலும்;வாழ்க்கையின் வேகம் அதிகரித்திருந்தாலும்; உலகம் ஒரே கிராமமாக பலருக்கு மாறி விட்டாலும்; வாழ்வின் தரம் உயர்ந்திருந்தாலும் இன்றும் கூட உலகில் பலர் ஒரு வேளை உணவிற்கு கூட வழியின்றி தவிக்கிறார்கள்; தங்குமிடமும்,உடுக்க ஆடையுமின்றி இருக்கிறார்கள்.

நம்மால் இயன்றவரை இல்லாதிருப்போருக்கு இரங்கி, ஈகையால் அவர்கள் வாழ்வை ஒளியேற்றுவொமென்றால், அதுவே மானிட பிறப்பின் மகத்தான சாதனையாகும்.

5 comments:

Anonymous said...

Seems finally life sucks....

Anonymous said...

//மாற்றங்கள் பல வந்தாலும் அவற்றில் நன்மையும் தீமையும் ஒரு சேர அடங்கியிருக்கின்றன. நாம் அவற்றை என்ன வழியில் உபயோகப்படுத்துகிறோமென்பது தான் முக்கியம்.//

இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!
நன்றி..

ஷாஜி said...

நல்ல பதிவு... தொடரவும்...

அன்புடன் அருணா said...

//நம்மால் இயன்றவரை இல்லாதிருப்போருக்கு இரங்கி, ஈகையால் அவர்கள் வாழ்வை ஒளியேற்றுவொமென்றால், அதுவே மானிட பிறப்பின் மகத்தான சாதனையாகும்//

நேர்மையான வேண்டுகோள்....
அன்புடன் அருணா

எட்வின் said...

பெயரில்லா,ஷாஜி மற்றும் அருணா ஆகியோருக்கு நன்றி.

Post a Comment

Related Posts with Thumbnails