February 19, 2009

முன்பதிவும் என்பதிவும் :)

பேருந்து முன்பதிவானாலும் சரி, ரயில் முன்பதிவானாலும் சரி நம்ம போய் வரிசைல நின்னா தான் பிரச்சினைகளே ஆரம்பிக்கும்; டிக்கெட்டும் கிடச்ச மாதிரி தான் :) நம்ம மூஞ்சிக்கெல்லாம் டிக்கெட் கிடையாது போலன்னு பேசாம வந்திர வேண்டியது தான்.

பஸ்ஸுக்கு வெயிட் பண்ணாலும் இப்படி தான்.ரொம்ப நேரமா பஸ்ஸே காணோமே, சரி ஆட்டோல போகலாமென நினைத்து ஆட்டோல கால வச்சதுமே பின்னாடி பஸ் வந்து நிக்கும்.கேயாஸ் தியரி மாதிரி இதுக்கெல்லாம் தியரி இருக்குதோ என்னமோ.

இப்படி பல முறை கவுண்டரில் இருந்து(சாதி இல்லீங்க;இது பீட்டர்-Counter!) ஆமாங்க டிக்கெட் கவுண்டரிலிருந்து தான், பலமுறை டிக்கெட் இல்லாமல் திரும்புவதே எனக்கு பதிவு.

டிசம்பர் மாதத்தில் சென்னைக்கு சென்றிருந்த போது ரயிலில் திரும்பிச் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவிற்காக சென்ட்ரல் பயணச்சீட்டு முன்பதிவு மையத்திற்கு சகோதரருடன் போயிருந்தேன்.கவுண்டர்கள் பல இருந்த போதும் டிசம்பர் மாதம் விடுமுறைகளின் மாதம் என்பதால் அனைத்து கவுண்டர்களிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது.

எப்போதும் முன்பதிவுகளுக்கு இருவர் சென்றால் இரு வேறு வரிசைகளில் நிற்பது வழக்கம்.எந்த கியூ வரிசை(இப்படித் தான் பல பேர் பேசிக்கிறாங்க,நடு சென்டர் மாதிரி.இது தான் "பீட்டர்தமிழாமாம்"சில அரசு அறிவிப்பு தட்டிகளும் இந்த பீட்டர் தமிழுக்கு விதிவிலக்கல்ல) டிக்கெட் கவுண்டரிடம் முதலில் இட்டுச் செல்கிறதோ அப்பொழுது மெதுவாக நகரும் வரிசையிலிருந்து விலகி விடுவோம்.

ஆனால் அன்று வரிசையில் நின்று 5 நிமிடமாகியும் நாங்கள் நின்று கொண்டிருந்த இரண்டு வரிசைகளும் சிறிதும் நகரவில்லை.5 நிமிடம் 10 நிமிடங்கள் ஆகியது அப்போதும் நகரவில்லை வரிசை.20 நிமிடம் ஆகியும் வரிசை நகராமல் இருக்கவே, என்னவென்று எட்டிப்பார்த்தால்... கத்து கத்தாக முன்பதிவு படிவங்களுடன் சினிமாக்களில் வரும் வில்லனைப் போன்ற தோற்றமுடைய ஒருவர் கவுண்டர் முன் நின்று கொண்டிருக்கிறார்,அவரைச் சுற்றி இன்னும் மூன்று பேர்.

அவர்கள் அனைவரும் டிக்கெட் முன்பதிவு செய்து விற்கும் முகவர்கள் (agents)என புரிந்து கொண்டேன்.இப்படியாக அனைத்து கவுண்டர்களிலும் அவர்கள் தொல்லை. நாங்கள் பின்பற்றிய உத்தியைப் போலவே அவர்களும் பல வரிசைகளில் நின்று கொள்கிறார்கள்.ஒரு கவுண்டரில் அவர்கள் கூட்டத்தில் உள்ளவர் ஒருவர் முதலில் சென்று விட்டாரென்றால் மற்றவரும் அவரிடமே பிற முன்பதிவு படிவங்களையும் கொடுத்து விடுகிறார். (ஆனா நாங்க கொண்டு போனது ஒரு படிவம் தான்,ஆள் தான் இரண்டு :))

மொத்தமாக பயணச்சீட்டுகள் (bulk booking) முன்பதிவெற்கென்றே தனி கவுண்டர்கள் உள்ளன.என்றாலும் டிக்கெட் வழங்குபவர் அந்த வரைமுறையைப் பின்பற்றாமல் முகவர்களிடமிருந்து கைக்கூலியும் பெற்றுக் கொண்டு இதனை அனுமதிக்கிறார்.

45 நிமிடம் பார்த்து விட்டு போதும்டா ராசா, இது நடக்கிற மாதிரி தெரியல என தென்னக ரயில்வே மீது கோபம் கொண்டு கிளம்பி விட்டோம்.சென்ட்ரலைப் போலல்லாமல் எக்மோரில் ஒரு படிவத்திற்கு மேல் வாங்குவதில்லை என தெரிகிறது.

------------------------------------------------------

பேருந்துகளில் எதிலாவது டிக்கெட் இல்லாமலா போய்விடுமென்று சென்ட்ரலின் எதிரில் பூங்கா அருகில் KPN அலுவலகம் தேடினோம்.கண்ணில் படவில்லை. ஷர்மா டிராவல்ஸ் ன் அலுவலகத்தில் விசாரித்தோம்.பார்த்து விட்டு வருகிறேன் என போனார் அங்கிருந்தவர்.

எங்க போறாரு என அப்போதே சந்தேகம்! வந்தவர் டிக்கெட் 500 ரூபாய் என்றார். நெல்லைக்கு 500க்கும் குறைவு தான சார் என கேட்டேன்.இல்லப்பா 500 தான் என்றார்.சரி டிக்கெட் இருக்கிறதே என ரூ.500 கொடுத்தனுப்பினோம்.

திரும்பி வந்தால் அவர் கையில் KPN டிக்கெட்.டிக்கெட்டில் ரூ.450 தான் போடப்பட்டிருந்தது. ஆஹா KPN நம்ம கண்ணில படாம போயிடிச்சே;இல்லனா 50 ரூபா வீணா குடுத்து இருக்க வேண்டாமே என நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை அன்று. நம்ம போனாலே இப்படித் தான் :)

--------------------------------------------------

நெல்லைக்கு சென்று விட்டு மீண்டும் சகோதரர் சென்னைக்கு திரும்புவதற்காக அரசு விரைவுப் பேருந்தில் டிக்கெட் கேட்பதற்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய முன்பதிவு மையத்திற்கு சென்றோம்.டிக்கெட் எல்லாம் ஃபுல்லு சார் எதுவுமில்லை என தெரிவித்தார்கள்.

எங்க நேரத்துக்கு, நெல்லை சந்திப்பில்(ஜங்சன்) தனியார் பேருந்துகளிலும் (டிசம்பர் 30)அன்று டிக்கெட் இல்லை.சரி இங்கேயும் அரசு விரைவு பேருந்திற்கான முன்பதிவு மையம் ஒன்று உண்டே என சகோதரர் சொல்லவும்;அங்கு போய் விசாரித்தால் டிக்கெட் இருந்தது.

சில மணி நேரங்களுக்கு முன்னர் டிக்கட் இல்லையென ஒரு முன்பதிவு மையத்தில் சொல்கிறார்கள்,இப்போது மற்றொரு மையத்தில் இருக்கிறது என்கிறார்கள் இது எப்படி சாத்தியம், என்னும் கேள்வி எழுந்தது.

ஒன்றில் யாரேனும் தங்கள் பயணத்தை ரத்து செய்திருக்க வேண்டும் இல்லை முகவர்களின் நயவஞ்சக வேலையாக இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டேன்.

அரசுப் பேருந்துகளில் முகவர்களின் தலையீடு சற்று அதிகமாகவே இருப்பதாகவே தெரிகிறது.ஆரம்பத்தில் டிக்கெட் இல்லையென்பார்கள் ஆனால் முகவர்களை அணுகி சற்று அதிகமாக பணம் கொடுத்தால் டிக்கெட் உடனே கிடைத்து விடும்.

இப்படி நாம் பணம் இறைத்தால் இவர்கள் தரும் சேவையோ மகா கேவலம்.அத்தனை அலங்கோலமாக இருக்கும் இருக்கைகள்.மூட்டைப்பூச்சி தொல்லைகள் மறுபுறம்.பலமுறை புகாரும் செய்தாகி விட்டது.கேட்பார் யாருமில்லை.

பதிவர் உண்மைத்தமிழன் இதனைப் பற்றி ஒரு அருமையான பதிவிட்டிருக்கிறார்.அதை இங்கே படிக்கலாம்

இப்படியாக அரசு ஊழியர்கள்,முகவர்கள் மூலம் சாமானியன் நாம் தான் அலைக்கழிக்கப்படுகிறோம்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails