February 21, 2009

தீவிரவாதிகளுக்கு துணை போகும் செய்தி ஊடகங்கள்

பிரேக்கிங் நியூஸ் என்றாலே இப்போது சகஜமாகிவிட்டது.சினிமா ரிலீஸ் ஒத்தி வைப்பு,நடிகர் கால் முறிவு,போன்றவற்றிர்க்கெல்லாம் பிரேக்கிங் நியூஸ் போட்டு அந்த வார்த்தைக்கே ஒரு மதிப்பில்லாமல் ஆக்கி விட்டார்கள் இன்றைய செய்தி ஒளிபரப்பு ஊடகங்கள்.

நவம்பர் 2008ல் மும்பை நகரம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட போது,நாட்டில் வேறு பிரச்சனைகளே இல்லாததால்!!! 72 மணி நேரம் தொடர்ந்து நேரடி ஒளிபரப்பு செய்து கமாண்டோ படையினருக்கு நெருக்கடி கொடுத்தவர்களும் இந்த கயவர்கள் தான்.

கமாண்டோக்கள் எங்கு இருந்து தாக்குதல் செய்கிறார்கள்,எத்தனை கமாண்டோக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றெல்லாம் உள்ளே இருக்கும் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக தகவல் பரிமாற்றம் செய்தவர்களும் இந்த பிரேக்கிங் நியூஸ் சிங்கங்களே.

இங்கே பாருங்கள் நேரலை ஒளிபரப்பின் கொடுமையை.

என்ன தான் தொலைக்காட்சி கேபிள்கள்,தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தாலும்,தீவிரவாத அரக்கர்கள் செயற்கைக்கோள் தொலைபேசி மூலமும்,செல்ஃபோன்கள் மூலமும் நிச்சயமாக வெளியில் நடக்கும் விஷயங்களைக் குறித்து அறிந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் கமாண்டோக்களுக்கு கடும் சவாலாக இருந்திருக்க மாட்டார்கள்.

தற்போது இந்தியாவின் கைவசம் இருக்கும் ஒரே சாட்சியான அஜ்மல் கசாப்பையும் இவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் போலிருக்கிறது.ஏற்கெனவே தாலிபானிடமிருந்தும் தாவூத்திடமிருந்தும் கசாப்பின் உயிருக்கு ஆபத்து வந்திருக்கும் நிலையில், இப்போது பாகிஸ்தானும் எப்படியாவது அஜ்மல் கசாப்பை இந்தியாவின் கரங்களிலிருந்து மாற்ற வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது.

நிலைமை இவ்வாறிருக்க ஆங்கில ஊடகங்களோ... கசாப் ஆர்தர் ரோடு ஜெயிலில் இருக்கிறார்;அங்கிருந்து வெடிகுண்டு துளைக்காத செல்லிற்கு மாற்றப்படுகிறார்;அவருக்கு சிறப்புப்படையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இன்று இத்தனை மணிக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார் என ஒரு தகவல் விடாமல் கொட்டித் தீர்க்கின்றன.

இவைகள் மறைமுகமாக தாலிபானிற்கும்,பாகிஸ்தானிற்கும் நாமளிக்கும் தகவல்கள் இல்லையா.இவை எல்லாம் ரகசியமாக காக்கப்பட வேண்டிய விஷயங்கள் இல்லையா?

இந்த ரகசியங்களைக் கூட காப்பாற்ற இயலாத பாதுகாப்புத்துறையா இந்தியாவை காப்பாற்றப் போகின்றது? தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்த தகவல் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது என உளவுத்துறையும், இல்லை அப்படி ஒன்றும் தகவல்கள் பரிமாறப்படவில்லை என மகாராஷ்டிரா காவல்துறையும் ஒருவரையொருவர் சொல்லும் குற்றங்களுக்கு மட்டும் குறைவில்லை.

பாதுகாப்பு ரகசியங்கள் உயர் பதவிகளில் இருக்கும் சில கருங்காலிகளால் எப்படியோ வெளியிடப்பட்டாலும் அதனை இப்படியா ஊடகங்களில் செய்தி(தீ)களாக வெளியிடுவது.தீயென பரவும் இந்த ரகசியங்களை இவர்கள் தெரிந்தே ஒளிபரப்புகிறார்களா இல்லை தெரியாமல் செய்கிறார்களா?

தாஜ் தாக்குதலின் போது நேரலையாக ஒளிபரப்புவதா?வேண்டாமா? என அவர்களுக்குள்ளாகவே (குறிப்பாக என்.டி.டி.வி ஆங்கில சானலில்) இரு வேறு கருத்துகள் நிலவின;அதுவும் நேரலையில் விவாதிக்கிறார்கள்!!

மற்றொரு நேரலை ஒளிபரப்பு கொடுமை

ஊடக சுதந்திரம் என சொல்லிக்கொண்டு ஒரு நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை கூச்சமில்லாமல் வெளியிடும் இவர்களை தடைசெய்வதை விட்டு விட்டு வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசாங்கம்.


இவை போன்ற ஊடகங்களும்,பாதுகாப்பு ரகசியங்களை வெளியிடும் உயர் பதவிகளிலிருக்கும் கயவர்களும் இந்தியாவில் தொடர்ந்து இருக்கின்ற வரையில் குண்டுவெடிப்புகளும்,தீவிரவாத தாக்குதல்களும் தொடரத் தான் செய்யும்.

3 comments:

ers said...

வணக்கம். தங்களின் இந்தப்படைப்பு நெல்லைத்தமிழ் இணையத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களின் படைப்புக்களை புக்மார்க் செய்ய நெல்லைத்தமிழில் பதிவு செய்யவும்.
http://nellaitamil.com/

Anonymous said...

They are pflashing news if 1 person is killed by a sucide bomb.And not even uttering a word of daily civilian deaths in Eelam.These NDTV type has no international or regional corresponds like BBC they are only good for reporting Pakistan and Mumbai news.And it should not be and ever be cosidered as a relaible International news source.

எட்வின் said...

நன்றி நெல்லைத்தமிழ்.

மிகச்சரியாக சொன்னீர்கள் இளையா. இலங்கை விஷயத்தில் உண்மை நிலையை சொல்ல NDTV க்கு அத்தனை கசப்பு.

மும்பை தாக்குதலின் போதும் VT ரயில் நிலையத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும்,மடிந்த உயிர்களையும், மற்ற பிற சம்பவங்களையும் இருட்டடிப்பு செய்து தாஜில் மட்டுமே குறியாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டும் NDTV ன் மீது உண்டு.

Post a Comment

Related Posts with Thumbnails