March 31, 2009

இயற்கையின் சீற்றத்தால் அவதிக்குள்ளாகியிருக்கும் வளைகுடா நாடுகள்

ஒரு வாரமாகவே வளைகுடா நாடுகளில் கடும் காற்றும் மழையுமாக காலநிலையில் பெரிதான மாற்றங்கள் இருந்து வருகின்றது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் மழை இன்றும் இருந்தது.ஓமனில் இரு தினங்கள் பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயிலும்,அபுதாபியிலும் 25.03 அன்று காற்றுடன் பனிக்கட்டி மழை பெய்தது.ஓமன் மற்றும் கத்தாரில் பரவலாக மணலுடன் கூடிய காற்று இருந்து வந்தது.

இரு தினங்கள் முன்பு துபாயில் மிக உயரமான புர்ஜ் துபாய் கோபுரத்தில் மின்னல் தாக்கிய சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இங்கே. மின்னஞ்சல் செய்த அண்ணன் 'Paul' அவர்களுக்கு நன்றி.

கடும் காற்றும்,இடியுடன் கூடிய மழையும் இரு தினங்களுக்கு பின்னர் மீண்டும் வரலாம் என gulfnews தெரிவிக்கிறது.









March 30, 2009

பலசரக்கு-சென்ற வாரம் நிகழ்ந்ததும் புரிந்ததும்

உலகம்

மெரிக்க அதிபர் ஒபாமாவின் உத்தரவின் பேரில் மேலும் 4000 வீரர்களை அமெரிக்கா ஆப்கனுக்கு அனுப்பவிருப்பது ஈராக்கை அடுத்து அமெரிக்கரின் கவனம் முழுமையாக ஆப்கன் மீது திரும்பியிருப்பதை காட்டுகிறது.

அதோடு ஆப்கனும்,பாகிஸ்தான்-ஆப்கன் எல்லைப்பகுதியும் தான் உலகின் மிக பயங்கரமான பகுதிகள் எனவும் முழங்கியிருக்கிறார் ஒபாமா.ஈராக்கிலேயே பேரழிவு ஆயதங்கள் ஒன்றையும் இவர்களால் கண்டெடுக்க முடியவில்லை.ஆப்கனில் என்ன செய்வார்கள் என பார்ப்போம்.

----------

அரசியல்

மிழகத்தில் பா.ம.க,அம்மாவுடன் இணைந்திருப்பது அத்தனை ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்னரே தமிழகத்தில் ஆளுங்கட்சியுடன் கருத்து வேறுபாடு கொண்ட பா.ம.க மத்தியில் பதவிக்காக மட்டும் ஆதரவு அளித்து வந்ததும் இப்போது அதே பதவியை பெறும் வகையில் கூட்டணி மாறியிருப்பதும் அவர்களின் பதவி மோகத்தை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறது.

--------
ருணின் கருத்துக்களும் அதனைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட சரண் நாடகங்களும், பேரணியும்,கலவரமும்,துப்பாக்கி சூடும் மேனகாவின் மத முலாம் பூசப்பட்ட கருத்துக்களும் வருந்தத்தக்கது.
--------

கிரிக்கெட்
ஸ்திரேலிய அணியை இறுதி டெஸ்ட் ஆட்டத்தில் தோற்கடித்த இளம் தென்னாப்பிரிக்க அணி அதனைத் தொடர்ந்து நடந்த இரு T20 ஆட்டத்திலும் வென்று T20 தொடரையும் வென்றது.

நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் தோல்வி அடையும் தருவாயிலிருந்த இந்திய அணியை டிராவிட்டும் காம்பீரும் பொறுப்புடன் ஆடி சமன் செய்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

நியூசிலாந்தின் புதியவர்கள் நன்கு மட்டை வீசினாலும் அனுபவம் இல்லாமையால் வெற்றிபெறும் வாய்ப்பை இழந்தனர்.மூன்று நாள்கள் தொடர்ச்சியாக ஆடுகளத்தில் இருப்பது அவர்களில் பலருக்கு புதியது.லக்ஷ்மணனின் சதமும் அருமை.

ங்கிலாந்தின் பீட்டர்சன் மே.இ.தீவின் சந்தர்பாலை,'அவர் அணிக்காக விளையாடுவது இல்லை,தனக்காக மட்டுமே விளையாடுகிறார்'என குறை கூறியது தேவையற்ற செயல்.பீட்டர்சன் அவரது ஆட்டத்தில் கவனம் செலுத்தினால் அதுவே பெரிய விஷயம்.இதனை இங்கிலாந்தின் தற்கால பயிற்சியாளர் ஆன்டி ஃப்ளவரும் கண்டித்திருக்கிறார்.

-------

ஃபார்முலா 1

1954 க்கு பின்னர் ஃபார்முலா 1 பந்தயத்தில் முதல்முறையாக களமிறங்கும் புதிய அணி ஒன்று முதல் இரண்டு இடங்களை பிடித்தது நேற்று(29.03) தான் முதல்முறை. யாரும் எதிர்பாராதவிதம் தங்களின் Mercedes எஞ்சின் மூலம் முதல் இரண்டு இடங்களில் வந்து அந்த சாதனையை Brawn அணி நிகழ்த்தியது.

பொருளாதார நெருக்கடிகளால் 'Honda' அணியினர் இந்த வருடத்தின் போட்டிகளிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டது 'Brawn' அணிக்கு சாதகமாகியிருக்கிறது. Brawn அணியைச் சார்ந்த பிரிட்டனின் ஜென்சன் பட்டன் மற்றும் பிரேசிலின் ரூபன் பேரிக்கலோ கடந்த ஆண்டில் ஹோண்டா அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தின் முதல் போட்டியான நேற்றைய போட்டியில் கடந்த முறை இரண்டாவது இடம் பிடித்த ஃபெராரி அணி புள்ளி ஏதும் பெறாமல் ஏமாற்றமடைந்தது.

March 29, 2009

மதமென்னும் மாயவலையில் சிக்கியிருக்கும் மேனகாவும் மகனும்

பொதுவாக மதம் என்னும் சொல்லையே அதிகம் பயன்படுத்த விரும்பாதவன் நான்,(சமயம் என கூறுவது தான் வழக்கம்)எனினும் உத்திரப்பிரதேச தேர்தல் தொகுதியான பிலிபித்தில் வருண்காந்தியால் நிகழ்த்தப்பட்ட உரையினாலும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களினாலும் இச்சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மனதில் அவர்களின் சமய வழிபாடு,மதம் கோலோச்சியிருப்பதால் மதமென்று குறிப்பிட வேண்டிய கட்டாயம்.

ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் சமயத்தை/சமயத்தவரை எதிர்க்கும் பட்சத்தில் அவர்களை தாக்குவோம் என முழக்கமிட்டுள்ளார் நேரு வம்சா வழியைச் சார்ந்த வருண்காந்தி.

இவ்வாறு கூறுவதால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டைப் பெறுவது தான் நோக்கமாக இருந்திருக்க வேண்டுமென்றால்,வருண் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் முழங்கியிருக்கலாம்;அதுவும் இல்லை,அது அவர்களின் கட்சி கூட்டமென்கிறார்கள்.

கட்சியிலும் கட்சி மேலிடத்திலும் நல்ல பெயரை பெற வேண்டுமென்று அவ்வாறு முழங்கினாரா என்பதும் தெரியவில்லை.அவர் கூறிய கருத்து உண்மை என அறியப்பட்டால் அது 'அவரது தனிப்பட்ட கருத்து' என கட்சியும் அவரிடமிருந்து விலகி நிற்கிறது.

இளம் வயதிலேயே வருண் மத சாயம் கொண்டு முழங்கிய இக்கருத்துக்கள் அவரிடமிருந்து நல்ல அரசியலை எதிர்பார்க்கலாம் என்று எதிர்பார்த்த இளைஞர்களுக்கு ஏமாற்றமே.அதோடு இன்றைய இந்திய இளைய சமுதாயத்திற்கு ஒரு தவறான முன்னுதாரணமும் ஆகியிருக்கிறார்.

இத்தனைக்கும் அவர் லண்டனில் சட்டமும் பொருளாதாரமும் பயின்றவர்.

அக்கருத்துகள் அவரது சொந்த கருத்துகளா இல்லை கட்சியினரால் உந்தப்பட்டு உரைக்கப்பட்டவையா என்பது யாருக்கும் புலப்படாத ஒன்று.

----------
வருண் கூறிய கருத்துக்களை விட அவர் நேற்று சரணடைவதற்காக சென்ற இடத்தில் நடந்த நிகழ்வுகள் மேலும் வருந்தத்தக்கவை.அவரது ஆதரவாளர்களுடன் அவர் சென்ற பேரணியும் அதனைத் தொடர்ந்த கலவரங்களும் தடை உத்தரவு(144)அமல் படுத்துமளவிற்கு சென்றிருக்கிறது.அதன் பெயரில் புதிதாக வழக்கு ஒன்றும் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது

(சரணடைய சென்றவர் வாகனத்திற்குள் அமர்ந்து செல்லாமல் வாகனத்தின் மேல் அமர்ந்து ஊர்வலம் சென்று பிரச்சினை வலுக்க காரணமானது ஏனோ)

--------
வருண் ஆவேசப்பட்டு முழங்கி விட்டார் சரி, ஆனால் அவரது அன்னை திருமதி.மேனகாவும் அவருக்கு நிகராக பிரிவினையை தூண்ட முயற்சிப்பது தான் மற்றொரு கவலைக்குரிய விஷயம்.

ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்த காவலர் ஒருவர் தான் வருண் சரணடைய சென்ற போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு காரணம் என பேட்டியளித்திருக்கிறார் மேனகா.

இத்தனைக்கும் அந்த காவலர் அன்று பணியிலே இல்லை என மறுத்திருக்கிறார் பிலிபித் பகுதியின் காவல்துறை சூப்பிரண்ட்.

ஒரு காவலரையே காவலராக பார்க்க முடியாமல் அவரையும் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவராக பார்ப்பது ஏனோ புரியவில்லை.

இவர்கள் கூறிய இக்கருத்துக்கள் இவர்களின் சொந்த கருத்துக்களா இல்லை மதமென்னும் மாய வலையில் சிக்கியமையால் தூண்டப்பட்டு தூவப்பட்ட விஷம கருத்துக்களா என்பது அவர்கள் மனசாட்சிக்கே வெளிச்சம்!

தவறுக்கு வழிகாட்டும் தொலைக்காட்சி விளம்பரங்கள்

இன்று விளம்பர இடைவேளை இல்லாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே இல்லை எனலாம்.30 நிமிட நிகழ்ச்சி என்றால் அதில் பாதி நேரம் விளம்பரங்களின் ஆதிக்கம் தான்.

சந்தையில் இறங்கியுள்ள புதிய பொருள்களை அறிமுகப்படுத்துவதில் பத்திரிக்கை விளம்பரங்களைக் காட்டிலும் தொலைக்காட்சிகள் முன்னணி வகிக்கின்றன.

அதோடு தொலைக்காட்சி விளம்பரங்கள் மிக எளிதில் மக்களை சென்று சேரவும் செய்கின்றன.


பல தொலைக்காட்சி விளம்பரங்கள் பயனுள்ளவையாகவும்,ரசிக்கும் படியாகவும் இருந்தாலும் சில விளம்பரங்கள் பொதுமக்களை குறிப்பாக இன்றைய இளைய சமுதாயத்தை தவறு செய்ய தூண்டுவதாக உள்ளன.

அவற்றில் ஒன்று ipill என்ற கருத்தடை மருந்தின் விளம்பரம்.இன்று மருந்தகங்களில் மிக எளிதில் கிடைக்கும் அளவிற்கு ipillற்கு அனுமதியளிக்கப் பட்டிருப்பதும் வருந்தத்தக்க விஷயம்.

இதனை தயாரிக்கும் சிப்லா நிறுவனமே மருந்தகங்களிலிருந்து ipill ஐ பெறுவதற்கு மருத்துவர்களின் சீட்டு தேவையில்லை என விளம்பரம் செய்திருக்கிறது.

புதிதாக திருமணமானவர்கள் தேவையற்ற கருத்தரிப்பை தவிர்க்க ipill எடுத்துக் கொள்ளுங்கள் என சில வரிகளில் இந்த விளம்பரம் சொல்லிப் போனாலும் அது ஏற்கெனவே எக்குத்தப்பாக போய் கொண்டிருக்கும் சில இளைஞர்களுக்கு பல வழிகளில் பாதிப்பையே அளிக்கிறது.

1.ipill இருக்கிறதே என்ற நம்பிக்கையில் துணிந்து தவறான உறவுகளில் ஈடுபட தூண்டுகிறது
2.ipill போன்ற கருத்தடை மாத்திரைகளால் மட்டும் பெரும்பாலும் கருத்தரிப்பை தடுக்க முடிவதில்லை.இதனால் மேலும் பிரச்சினைக்குள்ளாக ஆக வேண்டிய நிலைமை.
3.சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளும் கருத்தடை மாத்திரைகள் பெண்களின் உதிரப்போக்கில் மாறுதல்கள் ஏற்படுத்தலாம்.


இணையத்தில் ehealthforum என்ற விவாத தளத்திற்குள் சென்ற போது 18 வயது பெண் ipill எடுத்ததாக கேள்வி ஒன்று எழுப்புகிறாள், இது போன்று இன்னும் எத்தனை இளைஞிகளோ?

ipod ற்கு பின்னர் இன்றைய இளைஞர்களிடம் பிரபலம் இந்த ipill தான் என Mid day பத்திரிக்கையின் கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.

இது போன்ற விளம்பரங்களுக்கு அரசு எவ்விதம் அனுமதியளிக்கின்றது என்பது தான் புலப்படாத விஷயம்.

------------


இது ஒருபுறமிருக்க புதியதாக வந்திருக்கும் fanta விளம்பரம் சொல்லும் "ஃபேன்டா குடி ஸ்கூல் கட் அடி" கருத்து சிறியவர்களின் மனதை அதிகம் கவருவதாக உள்ளது.

அதிகம் கவர காரணம்?? ஃபேன்டாவின் அந்த விளம்பரத்தில் வரும் இளசுகள் ஃபேன்டாவைக் குடிப்பதற்காகவே "வகுப்பை புறக்கணிப்பது" தான். அதோடு ஃபேன்டாவிற்காக பெற்றோர்களின் கண்ணில் கூட மண்ணைத் தூவி விட்டு மாய்ந்து விடுகிறார்கள் நண்பர்களுடன்.

இவற்றை பார்க்கும் வாண்டுகள் மனமும் ஓஹோ இப்படிக் கூட செய்யலாமோ என இவர்களை தூண்டாமலிருக்குமா?

ஃபேன்டா,பெப்சி,கோக் போன்ற குளிர்பானங்களின் விளம்பர உக்திகள் இப்படியிருந்தாலும் இவை அளிக்கும் பற்களின் தேய்மானம்,பற்சொத்தை,வயிற்றுப்புண் போன்ற உடல்நல தீமைகள் ஏராளம்.

ஆனாலும் இவற்றின் விளம்பரங்களில் வருபவர்கள் நாட்டுக்கு நல்லது செய்வோம் என வாக்கு தரும் 'ஏய் சைலன்ஸ்' ரகங்கள் தான்.


இரு வருடங்களுக்கு முன்னர் இக்குளிர்பானங்களின் விளம்பரங்களில் நடிக்கப்போவதில்லை என அமீர்கான்,அமிதாப்,ஷாரூக் போன்றோர் கூறியிருந்ததாக ஞாபகம்.இப்போது எப்படியோ தெரியவில்லை.

"மாம்பழத்தை தின்பவன் மடையன்" போன்ற தரந்தாழ்ந்த கருத்துக்களை முன் வைப்பதும் இது போன்ற குளிர்பானங்கள் தான்.

இதனைக் குறித்தும் நாம் இழந்து வரும் நமது பாரம்பரிய உணவுகளைக் குறித்தும் பதிவர் செந்தில் இரு வாரங்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்தார் அதனை இங்கே படிக்கலாம்.

March 25, 2009

மார்ச் 28 அன்று 'புவி'க்கு வாக்களியுங்கள்


புவி வெப்பமாகுதலை குறித்த விழிப்புணர்வுக்கும் வெப்பமாகுதலை குறைக்கும் ஒரு பகுதியாகவும் கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இறுதி சனிக்கிழமை அன்று Earth Hour என்பது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

முதன்முதலில் 2007 மார்ச் 31 அன்று சிட்னி நகரில் மட்டும் 2.2 மில்லியன் மக்கள் ஒளிவிளக்குகளை ஒரு மணிநேரம் அணைத்து புவி வெப்பமாகுதலுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.(எனினும் 2005ஆம் ஆண்டு தாய்லாந்தில் தான் முதலில் இந்த எண்ணம் உருவெடுத்ததாம்)

2008 ல் அது 50 மில்லியன் மக்கள் பங்குபெற்ற ஒரு உலக நிகழ்வாகியது.கடந்த ஆண்டு 35 நாடுகளின் 370 நகரங்கள் இதில் பங்கெடுத்தன.

இந்த வருடம் புவிக்கும் புவி வெப்பமாகுதலுக்கும் இடையே நடக்கும் வாக்கெடுப்பாக இது கருதப்படுகிறது.அதோடு அகில உலகமே முதல் முறையாக வாக்களிக்கவிருக்கிறது என்பதும் இதன் சிறப்பம்சம்.

ஒவ்வொருவரும் தங்கள் உபயோகப்படுத்தும் மின்சார ஒளி விளக்குகளை ஒரு மணிநேரம் அணைப்பது புவிக்கு அவர்கள் அளிக்கும் வாக்காகவும் ஒளி விளக்குகளை அணைக்காமலிருப்பது புவி வெப்பமாகுதலுக்கு அளிக்கும் ஓட்டாகவும் கருதப்படவிருக்கிறது.

மார்ச் 28 அன்று ஒரு மணி நேரம்(இரவு 8.30-9.30) ஒளிவிளக்குகளை நிறுத்தி தங்கள் ஆதரவை மக்கள் இதற்கு தெரிவிக்கவுள்ளனர். இது வரை 83 நாடுகளின் 2712 நகரங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.

குறைந்தது ஒரு பில்லியன் ஓட்டுகளைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் களம் இறங்கியிருக்கிறது WWF(Worldwide Fund for Nature/World Wildlife Fund) அந்த ஓட்டுகள் இந்த வருடம் டென்மார்க்கின் தலைநகரமான கோப்பென்ஹேகனில் உலக தட்பவெப்ப மாற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருக்கும் உலக தலைவர்களிடத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எனவே உங்களால் முடிந்தால் மார்ச் 28 அன்று இரவு 8.30 முதல் 9.30 வரை ஒளி விளக்குகளை அணைத்து புவிக்கு உங்கள் ஓட்டளியுங்கள்.

மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

இந்தியர் சிலரின் ஆதங்கம்: இங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் கரண்டே இல்லாம இருட்டா கிடக்கு இதுல இது வேறயா?

Earth Hour குறித்த Youtube ஒளியோவியம் கீழே


March 24, 2009

ஓ(ன்) ஓட்டு யாருக்குலே


ட்ர்ர்ர்ர்ர்ரிங்க்...ட்ர்ர்ர்ர்ர்ரிங்க் என தொலைபேசி வெகுநேரம் சிணுங்கிக் கொண்டிருக்கவே 'எம்மா ராணி அந்த போன எடுமா' என்றவாறே வீட்டினுள் நுழைந்தார் செடிகளுக்கு தண்ணீர் பாய்த்துக் கொண்டிருந்த வாத்தியார் அய்யா தமிழ்துரை.

பெல் வேற லாங் பெல்லா இருக்கே ட்ரங்க் காலா தான் இருக்கனும் என மனதில் நினைத்துக் கொண்டே தேர்தல் சிறப்புப் பத்திரிக்கையை புரட்டினார்.

'என்னங்க, உங்களுக்கு தான்' என சொல்லி முடிக்கும் முன்னரே சமையலறையை நோக்கி நகர்ந்தார் துரையின் மனைவி.

என்னலே எப்பிடி இருக்க?இப்ப தான் தூத்துக்குடி ஆளுவள ஞாபகம் வருதோ... ஊர்ல எல்லாரும் சவுக்கியமாடே?

உங்க தயவுல எதோ இருக்கோம் அண்ணே என்று எதிர் முனையிலிருந்து மணியனின் குரல் வந்தது.

துரையே மேலும் தொடர்ந்தார்...'எலக்சன் இந்த தடவ எப்பிடிலே அங்க? 'பிரச்சாரத்துக்கு வண்டிய கட்டி கூப்பாடு போட ஆரம்பிச்சிருப்பானுவளே திருநவேலி பயலுவ' என்று சொன்னவாறே நாற்காலியை தன் பக்கம் இழுத்து அதில் அமர்ந்தார்.

ஆமாண்ணே அது பத்தி எதும் உங்க கிட்ட கேக்கலாமுன்னு தான் போன் போட்டேன்.

முந்தி மாறி இல்லணே... இப்போல்லாம் பெரிய பெரிய காருல வாராணுவ, ட்ரக்கரு ஜீப்புல இந்த பயலுவ பிரச்சாரம் பண்ண காலமெல்லாம் போச்சு. எல்லாம் நல்லா வசதியாத்தாண்ணே இருக்காவ.

நம்ம தே இப்பிடியே வயக்காட்டில இன்னும் காலத்த தள்ளிக்கிட்டு இருக்கோம்,வயக்காட்டுக்கு ஒரு டிரர்க்டர் கேட்டு லோன் போட்டதயே இன்னும் காங்கல.

சரிதாம்லே என துண்டினால் நெத்தியை ஒற்றினார் துரை, என்னத்தல சொல்ல...ரோடெல்லாம் கேவலமா கிடக்கு, நம்ம பயன்னு பாத்து ஓட்டு போட்ட அந்த எம்.எல்.ஏ பய கூட இந்த பக்கம் திரும்பிப் பாக்கலயேடே. அப்புறம் இந்த எம்.பி பயலுவள நம்பி என்னத்த அறுக்கச் சொல்லுத.

இவனுகள எல்லாம் நம்பினா சுடுகாட்டுக்குத் தாம்லே போவனும். எலக்சன் வந்தா மட்டும் "ஓட்டுப் போடுங்கனு" வெக்கமில்லாம ஊரு பக்கம் வறானுவ .

எலக்சன் முடிஞ்சா இங்க யாம்ல வராணுவ இவனுவ, நேரா சிட்டில ஒரு வீடு,மெட்றாஸ்ல ஒண்ணு, டெல்லில ஒண்ணுனு அங்கயே கதியா கிடக்கானுவ.

வருசத்தில ரெண்டு தடவ பாக்கதே பெரிய விஷயம்,இவனுக கிட்ட போய் என்னத்த சொல்லதுக்கு நம்ம.

இல்லணே இந்த தடவயும் பெரிய கட்சிக்கே ஓட்டு போட்டு பாப்போம்;டெல்லி ஆட்சியயும் பாக்க வேண்டியிருக்குல்ல என்றார் மணியன்.

டெல்லிய எல்லாம் பாத்தா நம்ம ஊர எவன்டே சரி பண்ணுறது?ஏலே நீ என்ன வேணா சொல்லுலே என் ஓட்டு நம்ம தொகுதிக்கு நல்லது செய்யாத பழயவனுக்கு இல்ல, உருப்படியா எதும் செய்வேன்னு சின்ன கட்சி ஒண்ணுல இருந்து எம்.ஏ படிச்ச ஒரு பையன் நிக்கானாம்; இந்த தடவ அவனுக்கு தாம்ல என் ஓட்டு என்று தீர்க்கமாக சொன்னார் தமிழ்துரை.

மற்றொரு முனையில் தமிழ்துரை ஓட்டளிப்பதாக சொல்லிக் கொண்டிருந்த வேட்பாளரின் தொலைபேசி உரையாடல்... "என்னய்யா பி.ஏ, பெரிய கட்சி காரனுவ எவ்ளோ சக்கரம் தருவாங்களாம் அவங்க கூட்டணிக்கு போனா; நம்ம கேட்டது இல்லனா அடுத்த கூட்டணிக்காரங்க கிட்ட பேசிப்பாருலே" என சொல்லிவிட்டு போனை துண்டித்தார் !!

March 23, 2009

விடைபெறும் பக்னரும்/பெண்கள் சாம்பியன் இங்கிலாந்தும்

2009 ஆம் ஆண்டிற்கான பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றுள்ளது.இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியை அது தோற்கடித்தது. மேலும் படங்கள் கீழே.
சென்ற உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்திய அணி மூன்றாவது இடம் பிடித்தது. அதோடு 2005 உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பதில் ஈட்டி உள்ளது.

---------------

டெஸ்ட் போட்டிகளிலிருந்து நேற்று (22.03.2009) ஓய்வு பெற்ற நடுவர் பக்னர் இறுதியாக பணியாற்றிய ஆட்டத்திலிருந்து சில புகைப்படங்கள் இங்கே. பக்னரின் ஓய்வு குறித்து மேலும் படிக்க இங்கே சுட்டவும்

வீரர்களால் கவுரவிக்கப்படும் பக்னர்

நடுவர் அசாத்தை உணர்ச்சி பெருக்கில் தழுவும் பக்னர்
ICC ன் கவுரவிப்பு

மைதானத்தில் இறுதியாக பிராத்திக்கும் பக்னர்
---------------------
2009 cricket world cup champions


தொடரின் சிறந்த வீராங்கனை விருது பெற்ற SC Taylor உடன் அணித்தலைவி Charlotte Edwards

தொடரின் சிறந்த வீராங்கனை விருது பெற்ற SC Taylor. இந்த தொடரில் (ஒரு சதம், இரு அரைசதம் உட்பட) அதிக ஓட்டங்கள் குவித்ததும் இவர் தான்.

அணித்தலைவி Charlotte Edwards

IPL=இன்டர்நேஷனல் பிரிமீயர் லீக்!


ஐ.பி.எல்லை ஏற்கெனவே பலர் துவச்சு காய போட்டாச்சு ;இனிமேல் நம்ம என்னத்த சொல்றது இதுல அப்பிடின்னு தான் நினச்சிட்டு இருந்தேன். சரி பரவாயில்ல நம்மளும் எதாவது எழுதி வைப்போமேனு தான் கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் இதனை எழுதுகிறேன்.

ஐ.பி.எல் தொடர இவைகள் தான் காரணமா

1.IPL=இன்டியன் பிரிமீயர் லீக் அப்படின்னு சொல்றதுக்கு பதிலா இனி இன்டர்நேஷனல் பிரிமீயர் லீக் அப்படின்னு ரொம்ப சந்தோஷமாவே நம்ம சொல்றதுக்காகவா :)

2.பாவம் லலித் மோடி என்ன செய்வாரு, ஏற்கெனவே அவர் ஊர்ல (ராஜஸ்தான்) கிரிக்கெட் வாரிய தேர்தல்ல தோற்கடிச்சிட்டாங்க.அதனால இருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தயாவது காப்பாத்தனுமேனு தான் ஐ.பி.எல்ல நடத்தியே தீருவேன் அப்பிடின்னு பிடிவாதமா இருக்கிறாரு போல.

3.ஐ.பி.எல் இல்லன்னா இப்பிடி ரெண்டு பக்கம் கலருங்க நடுவுல உக்காந்து பேட்டி எல்லாம் குடுக்க முடியுமோ என்னமோ.
கொஞ்சம் சீரியஸா யோசித்ததில் எனக்கு புரிந்தவை

1.பெரும்பாலானவர்களால் கூறப்பட்டு வரும் பணம் மட்டுமே இவர்களின் குறிக்கோள் என்பது இவர்கள் ஐ.பி.எல்லை நடத்த விடாப்பிடியாக இருப்பதிலிருந்தே தெரிகிறது.

2.அதோடு வெளிநாடு ஒன்றில் நடத்தும் இந்த முடிவு நிச்சயமாக இந்தியாவின் பாதுகாப்பு வசதிகளை மீண்டும் சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கிறது.

3.மேலும் நமது நாட்டின் பகைவர்களுக்கு "எங்களின் பாதுகாப்பு வசதிகள் போதுமானவையல்ல" என்ற தவறான செய்தியையும் நாம் முன்வைக்கிறோம்.

(மைதானத்தில் சென்று நேரடியாக ஆட்டத்தை காணலாம் என்றிருந்தவர்களுக்கு இனி ஏமாற்றமே)

எப்படியோ தேர்தலாவது பிரச்சினை எதுவும் இல்லாமல் நடந்தால் சந்தோஷமே. அதற்காவது பாதுகாப்பு வசதிகள் சரியாக இருக்கின்றனவா என்பதும் சந்தேகம் தான்.தெற்காசியாவில் யார் எப்போ எங்க அடிப்பான்னு யாருக்கு தெரியும்!

March 22, 2009

கேரளத்தவர்கள் ரசிக்கும் இளையராஜாவும்!ரஹ்மானும்!

பொதுவாகவே கேரளத்தில் பெரும்பாலான மேடை நிகழ்ச்சிகளில் மலையாள பாடல்களைக் காட்டிலும் தமிழ் பாடல்களே அதிகம் பாடப்படுகின்றன.கேரள இசைப்பிரியர்கள் தமிழ் பாடல்களையே அதிகம் விரும்புவதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.மலையாள தொலைக்காட்சியான ஏசியாநெட் இரண்டு ஆண்டுகளாக நடத்தி வரும் ஸ்டார் சிங்கர் என்ற சிறந்த பாடக பாடகிகளை வெளிக்கொணரும் நிகழ்ச்சி குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கக் கூடும்.
பாடகர் உன்னிகிருஷ்ணன்,பாப் பாடகி உஷா உதூப்,இசையமைப்பாளர் ஷரத் போன்றோர் நடுவர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.தமிழ் பாடல்களின் ஆக்கிரமிப்பு ஸ்டார் சிங்கர் போட்டியையும் விட்டு வைக்கவில்லை.இதில் இறுதிச் சுற்று வரை முன்னேறியிருக்கும் சோனியா என்பவர் பாடிய சில தமிழ் பாடல்கள் இங்கே.
இளையராஜாவின் "குருவாயூரப்பா"



ரஹ்மானின் "மலர்களே"

இதில் சோனியா உடன் பாடியிருக்கும் நஜிம் 2007-ஸ்டார் சிங்கரின் சாம்பியன் ஆவார்.தற்போது பல திரைப்படங்களில் பாடி வருகிறார்.சோனியா மலையாளி என்ற சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் அருமையாக பாடியிருக்கிறார்.



இளையராஜாவின்"நின்னுக்கோரி வரணும்"

March 21, 2009

இலங்கை பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு!

25 வருடங்களுக்கும் மேலாக ஓயாமல் விமானங்களின் இரைச்சலும்,குண்டுகளின் அதிர்வும்,உயிர்களின் ஓலமும் தொடர்ந்து கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.இருப்பினும் ஒரு முடிவை யார் கண்டார்?

தமிழர்களும் காணவில்லை சிங்களர்களும் காணவில்லை. நாம் தான் ஒன்றுமறியா உறவுகளின் முடிவுகளை கண்டு வருகிறோம்.

பாவமறியா பாமரர்களின் மடியும் வாழ்க்கைகளுக்கு ஒரு முடிவு தான் இல்லையா!

தமிழர்களுடன் இணைந்து வாழ மனமின்றி சீரும் சிங்கள வெறியர்கள் ஒருபுறம்;பல பேச்சு வார்த்தைகளுக்கு பின்னரும் தங்களின் லட்சியம் நிறைவேறாமல் லட்சியத்திற்காகவே மேலும் மனம் இறுகும் தமிழ் புரட்சியாளர்கள் மறுபுறம்.

இவர்களிடையில் தினம் தினம் மரிக்கும் அப்பாவி உயிர்கள்.

இவர்கள் என்ன செய்தார்கள் என இத்தனை உபத்திரவங்களுக்கு உள்ளாக்குகிறார்கள் சிங்களர்கள்.பதிலுக்கு தமிழ் புரட்சியாளர்கள் சிங்களர்களை தாக்குகின்றனர்.இருபுறமும் மடிவது பெரும்பாலும் பொது ஜனங்களின் உயிர்களே.

புரட்சியாளர்கள் விரும்புவது போல் தன்னாட்சி செய்வதற்கு உரிமை கிடைத்து விட்டாலும் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்குமிடையேயான இடைவெளியை,வெறுப்பை குறைத்து விட முடியும் என தெரியவில்லை.

சிங்களன்-தமிழன் என்ற பிரிவினைகளால் பிரிந்து நிற்கும் இலங்கையை நேசத்தால் அத்தனை எளிதில் ஒன்று சேர்க்க முடியும் எனவும் நம்ப முடியவில்லை.

"இலங்கையைச் சார்ந்த எனது சக பணியாளர்கள் சிலர் எனது பெயர் arnold edwin என்றஆங்கிலப் பெயராதலால் என்னை கோவாவை சார்ந்தவன் என்றோ,மங்களூரைச் சார்ந்தவன் என்றோ கருதி என்னுடன் நட்பு பாராட்டி வந்தார்கள்"

என்று என்னை "தமிழன்" என புரிந்து கொண்டார்களோ அன்று முதல் என்னுடன் சரிவர பேசுவதில்லை அவர்கள். இதிலிருந்தே இலங்கையில் இல்லாமல் பிற நாடுகளில் கூட சிங்களர்-தமிழர் உறவுகள் ஆரோக்கியமான நிலையில்லை என்பது நன்கு புலப்படுகிறது.

இலங்கையின் போரினால் பெரிதும் பயனடைவது இந்திய அரசியல்வாதிகளேயன்றி சிங்களத்தவருமில்லை,தமிழ் புரட்சியாளர்களுமில்லை!

ஓட்டுகளுக்காக... இலங்கையில் சமாதானம் வர செய்வோம்;நாங்கள் மட்டுமே இலங்கை தமிழர்களின் பாதுகாவலர்கள்;இலங்கைக்கு தூதுவரை அனுப்ப இந்திய அரசாங்கத்தை வேண்டிக்கொள்வோம்;இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்போம் என்று இவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் அன்றி வேறு என்ன செய்து விட்டார்கள் இலங்கையில் அமைதி திரும்ப.

எவரேனும் இலங்கைக்கு சென்று அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் செய்தார்களா? இல்லையென்றால் இங்கு இருந்து கொண்டு தான் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்களா?

1987 ல் அமைதி காக்கும் படையாக இந்திய தேசத்திலிருந்து இலங்கைக்கு போனவர்கள் என்ன ஆனார்கள். போர் தொடுக்கும் படையாக அல்லவா திரும்பி வந்தார்கள்.

தற்போது போர் தொடுக்க அங்கு செல்லவில்லை என்பது மாத்திரமே உண்மை.மற்றபடி சிங்களத்தவரின் போருக்கு உதவி செய்பவர்கள் இந்திய மண்ணினரே.ஆனால் தாய் தமிழக மக்களிடம் ஓட்டுகளுக்காக நாடகமாடுகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கு நன்று தெரியும் மாநில அரசால் மத்திய அரசிடம் எதிர்த்து பேச முடியாது என்று,தமிழக அரசுக்கு நன்று தெரியும் மத்திய அரசு சமாதான பேச்சுவார்த்தைக்கு உடன்படாது என்று..

...மத்திய அரசுக்கு நன்று தெரியும் (தற்போதைய) இலங்கை அரசு இந்திய அரசின் வேண்டுகோள்களை ஏற்றுக் கொள்ளாது என.இந்திய அரசு என்ன! ஐ.நா.சபை,அகில உலக போலீஸ்(இன்டர்போல் இல்லை) அமெரிக்கா சொன்ன பின்னர் கூட இலங்கை அரசு கேட்கவில்லை.அத்தனை வெறி கொண்டு இனப்படுகொலையை செய்து வருகிறார்கள்.

இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்த பின்னரும்... ஒவ்வொருவரும் தமிழகத்தில் தங்களுக்குள்ளாக அடித்துக் கொள்(ல்)கிறார்கள்.கட்சிகள் ஒருபுறம் தங்களுக்குள் அடித்துக் கொள்கின்றன.நீதிமன்றத்தில் ஒரு சாரார் அடித்துக் கொள்கிறார்கள்.பொது சொத்துக்கள் அநியாயமாக அழிக்கப்படுகின்றன.

இப்படி செய்வதனால் இலங்கையில் தீர்க்கமான முடிவு கிடைத்து விடுமா? இவைகளுக்கு முடிவு தான் என்ன?

இலங்கை அரசும்,தமிழீழ புரட்சியாளர்களும் தங்களுக்குள் பரஸ்பரம் பேசி தீர்த்தால் மட்டுமே இலங்கை பிரச்சினைக்கு ஒரு முடிவு வருமென தெரிகிறது.

அப்படியே பிரச்சினைகள் அகன்றாலும் தமிழர்-சிங்களர் இடையே தற்போது காணப்படும் மிகப்பெரும் இடைவெளியை அகற்ற இரு நூற்றாண்டுகள் ஆனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
----------

March 19, 2009

(டிராவிட்)ராகுல்,ரஃபேல்,ரேஸ்(F1)

ராகுல் டிராவிட்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ராகுல் டிராவிட், ஹாமில்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்திற்கு எதிரான முதல் ஆட்டத்தின் முதல் விக்கெட்டின் கேட்ச் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் மிக அதிக கேட்ச் (181) எடுத்தவர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார்.

இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் மார்க் வாவ் இந்த சாதனையை செய்திருக்கிறார்.

--------------------------------

ரஃபேல் நடால்

உலகின் முதல் தர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் கலிஃபோர்னியா, இண்டியன் வெல்சில் நடைபெற்று வரும் ஏ.டி.பி மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஆட்டங்களின் காலிறுதிக்கு முந்தைய போட்டி ஒன்றில் அர்ஜென்டினாவின் டேவிட் நல்பான்டியனை எதிர்த்து இன்று ஆடினார். தோல்வியின் விளிம்பில் இருந்த நடால் எவருமே எதிர்பாராத விதம் வெற்றி பெற்றார்.

6-3,5-3, 40-15 என்ற புள்ளியுடன் மேலும் ஒரு புள்ளி எடுத்தால் டேவிட்டிற்கு வெற்றி என்ற நிலை இருந்தது. இரண்டு Match points இருந்தது அவருக்கு. அவற்றில் ஒன்று எடுத்தாலே வெற்றி.

ஆனால்....அடிபட்ட புலியாக நடால் மீண்டு வந்து இரண்டு Match point யையும் முறியடித்து 5-4 என்று ஒன்பதாவது கேமை தனதாக்கினார்.

என்றாலும் டேவிட் 6-6 என்ற கேம் கணக்கில் இரண்டாவது செட்டை டை-பிரேக்கருக்கு கொண்டு சென்றார்.டை-பிரேக்கரில் வெற்றி பெற்றால் ஆட்டம் டேவிட்டுக்கு.

விட்டரா நடால்... இல்லை, வீறு கொண்டு டை பிரேக்கரில் 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது செட்டை தனக்கு சொந்தமாக்கி ஆட்டத்தை மூன்றாவது செட்டிற்கு இட்டுச் சென்றார்.


மூன்றாவது செட்டில் டேவிட் நல்பான்டியனை ஓட ஓட விரட்டினார் ரஃபேல் நடால். இறுதியில் 6-0 என்ற கேம்களில் மூன்றாவது செட்டை எடுத்து 2-1 என்ற செட் கணக்கில் டேவிட்டை வீழ்த்தி காலிறுதிக்கும் தகுதி பெற்று,தான் உலகின் முதல் தர வீரன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

இது தான் "முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" என்பதோ


-----------------------



ஃபார்முலா ஒன் ரேஸ்

மார்ச் 29 அன்று துவங்கவிருக்கும் 2009 ன் ஃபார்முலா ஒன் சீசனில் அதிக ரேஸ்களில் வெற்றி பெறுபவர் சாம்பியனாக அறிவிக்கப்படுவார் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடங்களில் அதிக புள்ளிகள் எடுத்தவரே சாம்பியனாக அறிவிக்கப்பட்டு வந்தார்.2008 ல் அதிக ரேஸ்களில் வெற்றி பெற்றிருந்த போதும், புள்ளிகளின் குறைவால் பிரிட்டனின் லூயிஸ் ஹாமில்டனிடம்,பிரேசிலைச் சார்ந்த ஃபெராரியின் பிலிப்பே மாசா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

சொந்த மகள்களை கற்பழித்த தகப்பன்களின் கொடூரம்

கடந்த இரு நாட்களாக ஊடகங்கள் வழி கேள்விப்படும் செய்திகளை கேட்கவே அதிர்ச்சியாயிருக்கிறது.

ஆஸ்டிரியாவில் 72 வயதான ஜோசஃப் பிரிட்ஸ்ல் என்றவர் தனது சொந்த மகளுடன்(எலிசபெத் தற்போது 42 வயது) 25 வருடம் குடும்பம் நடத்தி 7 குழந்தைகள் (மன்னிக்கனும் பேரக்குழந்தைகள்) பிறக்கவும் காரணமாகியிருக்கிறார்.

அவற்றில் ஒரு குழந்தையை கொலையும் செய்திருக்கிறான் இந்த கொடியவன். விசாரணையின் போது நீதிமன்றத்தில், அவள் என்னுடைய குழந்தைகளை பெற்றால் என்னைத் தவிர வேறு எந்த ஆணிடமும் நெருங்கி பழகாமலிருப்பாள் என கருதியே இதைச் செய்ததாக தெரிவித்துள்ளார் !!

கடந்த 25 வருடங்களாக மகளை எவரும் அறியாவண்ணம் பாழ்கிடங்கு ஒன்றில் ஒளித்து வைத்திருக்கிறார். என்ன கொடுமை!

-----------------
இன்று காலை கேள்விப்பட்ட இதே போன்ற மற்றொரு அதிர்ச்சியூட்டும் செய்தி வெளிநாட்டில் அல்ல இந்திய மண்ணில் (மும்பையில்) நடந்திருக்கிறது.

செல்வச்சீமான் ஆவதற்கு இதுவே வழி என்ற சாமியார் ஒருவரின் அறிவுரைக்கு இணங்கி 9 வருடம் தனது மூத்த மகளின் 15வயது முதல் கற்பழித்து வந்திருக்கிறார் ஒரு தகப்பன்(தொழிலதிபர்).

இரண்டாவது மகளிற்கு 11வயதிருக்கும் போதே காம விளையாட்டிறகாக சாமியாருக்கு படைத்திருக்கிறார்.

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் தந்தையின் இச்செயலுக்கு தாயாரும் உடந்தையாம்.

கொடுமை தாங்காத பெண்கள் இருவரும் தங்கள் தாத்தா மற்றும் மாமனாரிடம் இரு தினங்களுக்கு முன்னர் தான் (காலந்தாழ்ந்து?)தெரிவித்துள்ளனர்.தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கேட்கவே அதிர்ச்சியளிக்கும் இந்த கொடூரங்களை அனுபவித்த இப்பெண்கள் எவ்விதமான மனநிலையிலிருப்பார்கள், எத்தகைய அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பார்கள் என நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

கொடுமைப்பா...

மற்றொரு செய்தி. ஷிம்லாவில் காது கேளாதவர்கள் பள்ளி ஒன்றில் மூன்று ஆசிரியர்களும் ஒரு பிரின்சிபாலும் இணைந்து மாணவிகளை தங்கள் காம இச்சைக்குள்ளாக்கியிருக்கிறார்கள். இந்தியாவின் பெரும்பாலான பள்ளிகளில் இது போன்ற அவதிக்கு ஆளாகி வருகிறார்கள் மாணவிகள்.

என்ன உலகமய்யா இது!
நன்றி: skynews ndtv

March 18, 2009

பார்ட்டி,டிஸ்கொத்தேக்களின் பகீர் அரங்கேற்றங்கள்

இன்று நகரங்களில் பார்ட்டிகள்,டிஸ்கோத்தேக்கள் என அழைக்கப்படும் கேளிக்கை விருந்துகளில் அரங்கேறி வரும் சம்பவங்கள் முகம் சுளிக்க வைப்பவையாக இருக்கின்றன.

நள்ளிரவுகளில் நடக்கும் இது போன்ற கும்மாளங்களில் பெரும்பாலும் இள வட்டங்களே ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றி கலந்து கொள்கின்றனர்.

சென்ற வாரத்தில் இந்திய பெருநகர் ஒன்றில் நடந்த பார்ட்டி ஒன்றின் சில புகைப்படங்ளை மின்னஞ்சலில் கிடைக்கப் பெற்றேன். முகம் சுளிக்க வைக்கும் இந்த புகைப்படங்களில் ஆண் பெண் வேறுபாடு மட்டுமின்றி வயதும் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என புலப்படுகிறது.

ஒரு புகைப்படத்தில் குறைந்தது 45 வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் தன்னை விட 20 வயது குறைவான பெண்ணுடன் சல்லாபிக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் இரு ஆண்களும் இரு பெண்களும் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றனர்.


என்ன கொடும அய்யா இது! திரை உலகிலும் இது சகஜமே!

பார்ட்டிகள்,டிஸ்கொத்தேக்கள் மட்டுமே தங்களுக்கு உற்சாகம் தருவதாக பெரும்பாலான இளமைப் பட்டாளம் நம்புகிறது.

திங்கள் முதல் சனி வரை ப்ராஜக்ட்,அசைன்மன்ட் என களைத்துப் போயிருக்கும் எங்களுக்கு சேட்டர்டே நைட் பார்ட்டிகள் தான் "சின்ன" ஆறுதல் என புலம்பவும் செய்கின்றனர் இளசுகள்.

இது போன்ற கும்மாளங்களில் ஆட்டம் மற்றும் உணவு பரிமாறுதல் மட்டுமல்லாது,மதுவும்,புகையும் மிக சகஜம். இன்னும் சொல்லப்போனால் மதுவிற்கு தான் முதலிடம் அதன் பின்னர் தான் ஆட்டமெல்லாம்.

வரைமுறைகள் pub ற்கு pub மாறவும் செய்கிறது, சில பப் களில் ஜோடியாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கிறார்கள்.சிலவற்றில் மதுவுக்கு தடையும் உண்டு.

பெருநகரங்களில் அரங்கேறி வரும் இது போன்ற கும்மாளங்கள் ஒரு எல்லைக்குள் நிற்பது வரை எவர்க்குமே பிரச்சினை இல்லை.

இது போன்ற கூத்துகளால் இன்று மதுவிற்கும்,புகைக்கும் அடிமையாகி வரும் இளசுகள் ஏராளம்.அதோடு கருக்கலைப்பு வரை இட்டுச் செல்கிறது இவர்களின் எல்லை மீறல்.

இப்படி இருப்பவர்கள் தங்கள் வருங்கால (தற்கால!!!)துணைகளுக்கு எப்படி உண்மையாக,ஒழுக்கத்துடன் இருப்பார்கள் என்பது யாரறிவார்?

இதனால் தானோ என்னமோ இன்று இந்திய நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் பெருகி வருகின்றன.

மது மற்றும் புகையினால் வரும் வியாதிகளையும், விளைவுகளையும் பட்டியல் போட வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன்!

இவர்களின் இம்மாதிரியான உறவுகள் முறிவடைந்தால் இவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றொரு உபரி வியாதி.

வேலைப்பளுவினால் ஏற்பட்ட மன அழுத்தத்தை மாற்ற வழி தேடியோர்க்கு பல நேரங்களில் அதுவே மன அழுத்தமாக மாறி விடுவது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி!

March 17, 2009

இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் ஆட்டங்கள் ஒரு முன்னோட்டம்

நியூசிலாந்திற்கு எதிரான 20-20 ஆட்டங்களில் தோல்வியடைந்த இந்திய அணி ஒரு தின ஆட்டங்களில் மழையின் குறுக்கீடுகளினாலும்,மட்டைவீச்சாலும் வெற்றியை ஈட்டியது.
ஒரு தின போட்டிகளின் அனைத்திலும் நியூசிலாந்து அணியினர் இந்தியாவிற்கு சரிசமமாகவே ஆடினர்.20-20 மற்றும் ஒரு தினபோட்டிகளை மொத்தமாக கணக்கிட்டால் இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் சரிசமமாக வெற்றி ஈட்டியுள்ளன.


நாளை முதல் டெஸ்ட் ஆட்டம் தொடங்கவிருக்கிறது.டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமானால் இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக அமைய வேண்டும்.மட்டை வீச்சை மட்டுமே நம்பியிருந்தால் இந்திய அணி வெற்றி பெறுவது நிச்சயமாக கேள்விக்குறிதான்



திராவிட்டை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி


பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் மகன் ஜோஷ் யங் உடன் சச்சின்
பயிற்சிக்கு பின்னர் சேவாக்
நியூசிலாந்தின் மாநில அணியான கேன்டர்பெர்ரிக்காக சதமடித்து புதுப் பொலிவுடன் இருக்கும் திராவிட்
விக்கெட்டுக்களுக்காக ஹர்பஜனின் பின்னால் தோனி நிச்சயம் ஓட வேண்டியிருக்கும்
ஒரு தினப் போட்டிகளின் போது காணப்பட்ட இந்திய ரசிகர் கூட்டம் டெஸ்ட் ஆட்டங்களிலும் தொடருமா?
"பயிற்சிக்கு பின்னர் சோர்வுடன் தோனி"
(டெஸ்ட் போட்டிகளின் இறுதியில் இப்படி நாக்கைத் தள்ளாமல் இருந்தால் சரிதான்)

புகைப்படங்கள் நன்றி: cricinfo

March 16, 2009

விடை தெரியாத சில 'எடக்கு மடக்கான' கேள்விகள்

'எடக்கு மடக்கு' அப்படின்னா என்னன்னு பதிவர் ஜீவா கிட்ட கேட்டுக்கோங்க, அவரு ஏற்கெனவே "குண்டக்க மண்டக்க" "ங்கொய்யாலா" போன்ற இலக்கியத் தமிழ்!!! (*#%@*# அப்படின்னு நீங்க மனசில திட்டுறது நல்லாவே கேக்குது)வார்த்தைகளுக்கு விளக்கமளித்திருக்கிறார்.

1.சாவகாசமாக (இது போன்ற)மொக்கை பதிவு போடும் போதோ அல்லது (பெண்) நண்பர்களிடம் சாவகாசமாக அரட்டை அடிக்கும் போதோ காட்டாத வேகம் பென் ட்ரைவை கழட்டும் போது மட்டும் ஏன்? (safe to remove என தெரிவதற்கு முன்னரே!)

(அப்பப்பா Rhymic ஆ எழுதனுமே நு பெண்-பென் அப்படின்னு எதோ எழுதி விட்டாச்சு)

2.ஓடும் அலார மணியையும் அணைத்து விட்டு தூங்கும் நாம், தாமதமாகி விட்டது என ஓடும் பேருந்தை பிடிக்க ஓடுவது ஏன்?

3.சாப்பிடும் முன்னர் கை அலம்ப சோம்பல் கொண்டு... இன்று ஒரு நாள் தானே; ஒரு நாள் கை அலம்பாவிட்டால் என்ன ஆகப் போகுது என நினைப்பது ஏன்?

4.கடிதம் அல்லது மின்னஞ்சல் ஒருவருக்கு எழுத வேண்டும், அத்தனை அவசரம் ஒன்றுமில்லையே மெதுவாக எழுதலாம் என சோம்பலுற்று படுக்கைக்கு போவது ஏன்?

5.நண்பனை தொலைபேசியில் அழைக்க வேண்டும்,வேலை முடிந்த களைப்பில் அவன்/அவள் தானே நாளை பேசிக் கொள்ளலாம் என கருதுவது ஏன்?

6.Repair என்பது (Re+Pair) பழுதானதை ஒன்று சேர்த்தல் என்று பொருள்படும், ஆனால் டிவி ரிப்பேர் ஆகி விட்டது, மிக்ஸி repair ஆகி விட்டது என நாம் சொல்வது ஏன்?

7.சினிமா தியேட்டரில் டிக்கெட் இல்லையென்றால், ப்ளாக்கில் எவ்வளவு ஆனாலும் பணம் கொடுத்து டிக்கெட் எடுக்க யோசிக்காத நாம், இல்லாதவருக்கு கொடுக்கும் விஷயத்தில் ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது ஏன்?

8.வாக்களிக்கும் உரிமை இருந்தும், 'நம்ம ஒரு ஆள் ஓட்டு போடா விட்டால் என்ன ஆகிவிடப் போகிறது' என நினைப்பது ஏன்?

எனவே இம்முறையாவது வாக்கு அளியுங்கள் அன்பர்களே வாக்கு அளியுங்கள்.

(வெளியில் இருக்கும் எங்களைப் போன்றோருக்கு தான் வாக்களிக்கும் உரிமை இல்லையென்கிறார்கள்... ஊரில் இருக்கும் நீங்களாவது வாக்களியுங்கள்)

March 14, 2009

பிரதமர் பதவியை குறிவைக்கும் பிரபலங்கள்

ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான கூட்டு சதிகளும் கூட்டு இல்லாத சதிகளும் இப்போதே அரங்கேற தொடங்கி விட்டன.

கடந்த 14 ஆவது பாராளுமன்ற தேர்தல் போலல்லாது காங்கிரஸ் தலைமை வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும்,பா.ஜ.க தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக முன்னணிக்கும் சவாலாக ஒரளவு பலம் நிறைந்த! மூன்றாவது அணியும் உருவெடுத்துள்ளது.

கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கின்றனவோ இல்லையோ அதற்கு முன்னர் பிரதமராக யார் வேண்டுமென்பதில் குறியாக இருக்கின்றன.

பிரதமர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கே முன்னிறுத்தப்பட்டிருந்தாலும் சோனியா/ராகுல் காந்தியின் பெயர்களும் அடிபடாமல் இல்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அத்வானியின் பெயர் முன்மொழியப்பட்டாலும் குஜராத் முதல்வர் மோடிக்கும் பா.ஜ.க வில் ஓரளவு ஆதரவு உள்ளது.

மூன்றாவது அணியில் தற்போது அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள் அனைத்தும் பிரதமர் நாற்காலியை குறி வைத்தே மூன்றாவது அணியில் இணைந்திருப்பதாகத் தெரிகிறது.

பகுஜன் சமாஜின் மாயாவதி,தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடு,அ.இ.அ.தி.மு.க வின் அம்மா,முன்னாள் பிரதமரான மதசார்பற்ற ஜனதா தளத்தின் தேவேகவுடா என அனைவரும் பிரதமர் பதவியைப் பெற இப்போதே வியூகம் அமைக்கத் தொடங்கி விட்டனர்.

மூன்றாவது அணியின் துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்த இரு பெண் பெரும்புள்ளிகளான மாயாவும்,ஜெயாவும், எங்களிடம் நீங்கள் தான் கையேந்தி நிற்க வேண்டும் என்ற செய்தியையும்;பிரதமர் பதவிக்கு நாங்களும் போட்டியாளர்கள் தான் என்ற தங்கள் குறிக்கோளையும் மறைமுகமாக அறிவித்தாகி விட்டது.

மூன்றாவது அணியின் கட்சிகளுக்கு, நாளை (15.03.09) இரவு விருந்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் மாயா என்ன மாயையை ஏற்படுத்த போகிறாரோ?

ஜெயாவின் விருந்தையும் விரைவில் எதிர்பார்க்கலாமோ!

இதனிடையில் பிரதமர் நாற்காலிக்கு குறி வைத்திருக்கும் மற்றொரு பிரபலம், ஏற்கெனவே பல நாற்காலிகளைக் கண்ட தேசியவாத காங்கிரசின் நாற்காலி நாயகன் சரத்பவார்.

"மகாராஷ்டிராவில் இருந்து பிரதமர் ஒருவர் வருவதை மகாராஷ்டிரா மக்கள் எதிர்பார்க்கின்றனர்" என கூறியிருப்பதிலிருந்து இவரும் மறைமுகமாக தனது நாற்காலி மோகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.

ஆனாலும் தற்சமயம் உள்ள மூன்று அணிகளிலும் இவர் இதுவரை தன்னை இணைத்துக் கொள்ளவில்லை.

கிரிக்கெட் வாரிய தலைவராகவும்,மத்திய விவசாயத்துறை அமைச்சராகவும் உள்ள இவரையும் நாற்காலி மோகம் விட்டு வைக்கவில்லை. 2010 முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் இவர் பொறுப்பேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலை பொருத்த மட்டில் ஒற்றை நாற்காலிக்கு போட்டி போடுபவர்களில் எவர் பிரதமராக வருவார் என கணிப்பது மிகக்கடினமே.

இப்படியாக கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருக்கின்றனவோ இல்லையோ பிரதமர் பதவிக்கான தங்கள் பிரதிநிதியை நேரடியாகவோ/மறைமுகமாகவோ அறிவித்திருப்பதிலிருந்து தங்கள் பதவி மோகத்தை மீண்டும் பிரகடனப்படுத்தியுள்ளன.

March 12, 2009

தினகரன் பெயரில் சாலை ஏன்?

சென்னை கிரீன்வேஸ் சாலை,இயேசு அழைக்கிறார் நிறுவனர் திரு.தினகரன் அவர்களின் பெயரில் மாற்றப்படும் என கடந்த மாதத்தில் முதல்வரால் அறிவிக்கப்பட்டது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மீதான நல்லெண்ணம் காரணமாக என கருதவியலவில்லை.


இரு மாதங்களுக்குள்ளாக தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின் வாக்குகளைப் பெறும் உள்நோக்கத்தோடு அறிவிக்கப்பட்ட வாக்குறுதியாகவே தெரிகிறது.


கிரீன்வேஸ் சாலையின் பெயர் மாற்றப்படுதலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகையில், சாலைக்கு பெயர்மாற்றுதல் மேலும் பிரச்சினைகளையும்,பிற சமயத்தவரிடையே வெறுப்பையுமே ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


சில வருடங்களுக்கு முன்னதாக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்களினால் அரசுப் பேருந்துகள் பிரிவினைப்படுத்தப் பட்ட போது ஏற்பட்ட மனக்கசப்பு தற்போதும் ஏற்பட வாய்ப்புள்ளது.


அதன் பின்னர் "தமிழ்நாடு அரசுப் பேருந்து" என மட்டுமே பேருந்துகள் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு தேர்தலை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட தீர்மானமாகவே தெரிகிறது.


சமயங்களினால் பிற மாநிலங்கள் கண்டு வரும் கலவரங்களை தமிழகமும் காண வேண்டும் என யாரும் எழுதி வைத்திருக்கிறார்களோ என்னமோ!


ஏற்கெனவே ஈழப்பிரச்சினைகளினாலும்,வழக்கறிஞர்கள்-போலீசார் மோதல்களினாலும் கலவரமாகி இருக்கும் தமிழகத்தில் மேலும் பிரச்சினைகள் அவசியம் தானா? அதுவும் தேர்தல் நெருங்கி வரும் காலகட்டத்தில்!

March 11, 2009

நியூசிலாந்தில் ரன் மழை; யூரோப் கால்பந்தில் கோல்மழை

நியூசிலாந்தில் மழை ஒருபுறமிருக்க மறுபுறம் ரன் மழை பெய்து வருகிறது.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் ஒருதின கிரிக்கெட் போட்டிகளின் நான்காவது போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது ஆடிய நியூசிலாந்து 47 ஓவர்களிலேயே 270 ஓட்டங்கள் குவித்தது.அதனை எதிர்கொண்டு ஆடிய இந்திய அணி மழைகுறுக்கிட்ட போது 23.3 ஓவர்களிலேயே 201 ஓட்டங்கள் எடுத்து டக்வர்த் லூயிஸ் முறையில் வெற்றியும் ஈட்டியுள்ளது.அதோடு நியூசிலாந்தில் முதல் முறையாக ஒருதின கிரிக்கெட் தொடரையும் வென்றுள்ளது இந்திய அணி.

பிற நாட்டு மைதானங்களை விட நியூசிலாந்து மைதானங்கள் சிறியதாக இருக்கின்ற காரணமாகவே இத்தனை ஓட்டக் குவிப்புகள் சாத்தியமாகியிருக்கின்றன.கடந்த மூன்று போட்டிகளிலும் கூட இரு அணிகளும் மிக அதிகமான ஓட்டங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பதிவர் லோஷன் அவரது பதிவில் விரிவாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சேவாக் இன்றைய போட்டியில் மிகக்குறைந்த பந்துகளில்(60)சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை செய்திருக்கிறார்.இதற்கு முன் அசாருதீன் பரோடாவில் 62 பந்துகளில் எடுத்த சதமே முதலிடத்தில் இருந்தது.அதுவும் நியூசிலாந்து அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது தான்.

----------------------------

ஐரோப்பாவின் சிறந்த கிளப் அணிகளுக்குள்ளாக நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகளின் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகளின் இரண்டாம் நிலை போட்டிகள் (second leg) நேற்றும் (10.03) இன்றுமாக(11.03) நடைபெற்று வருகிறது.


இவற்றில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்தின் லிவர்பூல் அணி உலகில் அதிகம் பணம் புரளும் அணியான ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் உடன் ஆடியது.ஆரம்பம் முதலே லிவர்பூல் அருமையாக ஆடியது. இறுதியில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.லிவர்பூலின் அணித்தலைவர் ஸ்டீவன் ஜெரார்டு இரண்டு கோல்களை அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் Bayern Munich கிளப் போர்ச்சுகல்லின் Sporting Lisbon அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

மற்ற இரு போட்டிகளில் இங்கிலாந்தின் செல்சீ மற்றும் ஸ்பெயினின் வில்லாரீல் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

இன்று நடக்கவிருக்கும் போட்டிகளில் குறிப்பிடும் படியாக நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் மேன்செஸ்டர் யுனைட்டட்,மற்றொரு இங்கிலாந்து அணியான அர்சினல்,ஸ்பெயினின் பார்சிலோனா,இத்தாலியின் இன்டர்மிலன் ஆகிய அணிகள் ஆடவிருக்கின்றன.ஆட்ட விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

நன்றி espn & cricinfo

Related Posts with Thumbnails