April 30, 2009

வம்பு பேசிய வாக்காளர்கள் எங்கே போனார்கள்?


இந்தியாவின் பதினைந்தாவது பாராளுமன்றத்திற்கான மூன்றாவது கட்ட வாக்கெடுப்பு இன்று(30.04) மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது.

மூன்றாவது கட்ட வாக்கெடுப்பில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் வெறும் 50 மட்டுமே. குறிப்பாக மும்பை தொகுதியில் பதிவான வாக்குகள் 45% மட்டுமே. 2004 ல் பதிவான வாக்குகளை விட இரு சதவீதம் இது குறைவாகும்.

வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள்,பாலிவுட் திரைத்துறையினர் பலராலும் பல விதமான கோரிக்கைகளும்,வேண்டுகோள்களும் முன்வைக்கப்பட்ட பின்னரும் 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவாகியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மும்பை தாக்குதலுக்கு பின்னர் அரசியல்வாதிகள் மேலும்,ஆட்சியாளர்கள் மேலும் வெகு கோபம் கொண்டு அமைதி ஊர்வலங்கள், போராட்டங்கள், இணைய பிரச்சாரங்கள் பலவும் செய்தவர்கள் வாக்கெடுப்பு சமயத்தில் எங்கு சென்றார்களோ தெரியவில்லை.இத்தனைக்கும் இன்று மும்பையில் விடுமுறையாகும்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் முன்னரே jaagore.com என்ற இணைய தளத்தின் மூலம் infosys, wipro ஆகியவற்றின் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இளைஞர்கள் மத்தியில் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மும்பை மக்கள் நாட்டின் மேல் தட்டு மக்கள்,விவரமானவர்கள் என ஊடகங்கள் செய்து வந்த பொய் பிரச்சாரங்களையும்,பிரமையையும் இன்று பதிவான வாக்கு சதவீதம் பொய்க்க வைத்துள்ளது. அவர்களும் நாட்டின் பிற பகுதிகளின் மக்களுக்கு சமமே என்பதும் நிரூபணமாகியிருக்கிறது.

மும்பை 40 சதவீதத்திற்கும் மேல் சேரிப்பகுதியாக இருப்பதும் குறைவான வாக்குப்பதிவிற்கு ஒருவேளை காரணமாகியிருக்கலாம்.

இளைஞர்கள் பலரும் இணையத்தில் உலவுகிறார்கள்,சூடான அரசியல் விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.ஆனால் வாக்கெடுப்பு என்று வரும் போது அவர்களால் வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதற்கான சமயம் ஒதுக்க முடியாதது ஏனோ?

பார்ட்டி,டிஸ்கொதே ஆகியவற்றிற்கு முக்கியத்துவமும் போதிய நேரமும் அளிக்கும் மும்பை வாசிகள் வாக்கெடுப்பிற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.தேர்தலை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை போலும்.

ஒருவேளை ஆன்லைனிலோ,ஆர்குட்டிலோ,ஃபேஸ்புக்கிலோ வாக்கெடுப்பு வைத்திருந்தால் வாக்களித்திருப்பார்களோ?

இவ்வாறு வாக்களிக்காமல் இருந்து விட்டு ... பின்னர் அரசியல்வாதிகள் நல்லதே செய்யவில்லை,பாதுகாப்பு சரியில்லை என்றெல்லாம் வாய் கிழிய வசைபாடுபவர்களும் இதே பொதுமக்கள் தான்.

யாரைக்குற்றம் சொல்வதோ? பொதுமக்களையா? இல்லை வாக்களிக்காமல் இருப்பதற்கும் சட்டமியற்றி வைத்திருக்கும் இந்திய அரசாங்கத்தையா?

இந்திய திருநாட்டில் இதெல்லாம் சகஜம் தானோ!!

April 29, 2009

முறையற்ற வெற்றி நிரந்தரமாகாது;நிதர்சனமுமாகாது.

விளையாட்டுகளில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் முறையற்ற வழிகளில் ஒருவர் ஈட்டும் வெற்றி எத்தனை காலம் நிலைக்கும் என்பதற்கு எவரும் வாக்குறுதி அளிக்கவியலாது.

2008 பெய்ஜிங்க் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற இருவருடன் மொத்தம் ஆறு பேர் ஊக்க மருந்து உபயோகித்ததாக நேற்று (28.04) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன் முன்பு பெய்ஜிங்க் ஒலிம்பிக் போட்டிகளினிடையிலேயே ஒன்பது பேர் ஊக்கமருந்து உபயோகித்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னரே இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை மோனிகா என்பவர் ஊக்கமருந்து உபயோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டார்.

இப்படியாக வரலாற்றில் இன்னும் பல நிகழ்வுகள் உண்டு,இன்றளவும் பலர் ஊக்கமருந்து பயன்படுத்தி வருவதாகாவே தெரிகிறது.

முறையற்ற வழியில் வெற்றி ஈட்ட அல்ல எதிரணி வெற்றி ஈட்ட உதவி செய்ததாகவும்,பந்தய நிர்ணயம் (match fixing) செய்ததாகவும் அசாருதீன்,ஜடேஜா,கிப்ஸ்,ஹன்சி குரோனியே போன்ற கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீதும் சில ஆண்டுகள் முன்பு குற்றம் சாட்டப்பட்டது.அதன் பின்னர் அசார்,ஜடேஜா போன்றொருக்கு கிரிக்கெட் ஆட தடையும் விதிக்கப்பட்டது.

முறையற்ற வழி பெற்ற வெற்றிகள் ஒரு வகையில் சந்தோஷத்தை அளித்தாலும் பல வகையில் மன சங்கடத்தையும்,வருத்தத்தையும் ஒரு வித குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தவே அதிகம் வாய்ப்புள்ளது.

அந்த விதத்தில் குற்ற உணர்ச்சி கொண்டு அமெரிக்க தடகள வீராங்கனை மரியன் ஜோன்ஸ், 2000 ஆம் வருடம் சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் தான் ஊக்க மருந்து உபயோகித்ததாக ஒப்புக்கொண்டு அவர் பெற்ற ஐந்து பதக்கங்களையும் 2007 ல் சர்வதேச ஒலிம்பிக் கழகத்திடம் திருப்பிக் கொடுத்து இரண்டு வருடம் தடகள போட்டிகளில் பங்கு கொள்ள விதிக்கப்பட்ட தடையையும் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் சில தவிர்க்க முடியாத விஷயங்களில் அல்லது சூழ்நிலைகளில் பொய்களைக் கூறியோ; முறையற்ற வழிகளில் சென்றோ தான் வெற்றியை ஈட்ட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு விடுகிறது.உதாரணத்திற்கு லஞ்சம் கொடுப்பதையும், பெறுதலையும் கூறலாம்.

வாழ்க்கை பயணத்தில் எத்தகைய போட்டி ஆனாலும், முறையற்ற வழியில் ஈட்டும் வெற்றி எத்தனை காலம் நிலைக்கும் என்பது கேள்விக்குறி தான்(அரசியல்வாதிகளுக்கு இங்கு ஆச்சரியக்குறி இட்டுக் கொள்ளலாம்!!)

"பேராசை பெருநஷ்டம்" என்ற வாக்கிற்கு இணங்க பேராசை கொண்டு தவறான வழிகளில் ஈட்டும் வெற்றியை இன்றல்லது...என்றாவது ஒரு நாள் உலகறியும் போது அந்த வேதனையையும்,வருத்தத்தையும்,வெட்கக் கேட்டையும் அனுபவிப்பதற்கு பதிலாக இருக்கின்றதை வைத்து நிறைவாக வாழ முயற்சிப்போம்.

---------------------------------


கீழே உள்ள புகைப்படத்தில் இன்றைய அரசாங்கங்களின் உயர்பதவியிலிருப்பவர்களில் எத்தனை பேர் நேர்மையாக இருக்கிறார்கள் என்பது நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.பார்த்து, நம் தலை எழுத்தை நொந்துகொள்ளுங்கள்.

April 28, 2009

உறவுகளின் மறுபக்கம்


உறவுகள் சுமையானால்-மனித
உறவுகள் சுமையானால்
உதறவும் செய்யும்-மனதுகள்
உலவும் உலகமிது
---------------------------------------------------
தாய்-சேய் உறவு
தொப்புள் கொடியில்
துளிரும் (சில)முதல் உறவு

தொட்டிலில் தொடர்ந்து
கரங்களில் தவழ்ந்து

கடல் போன்ற தரணியைக்
கரிசனையுடன் கற்றுத்தந்து

கனிவால்
கண்ணீர் களைந்து

கவலையுடன்
கரை சேர்க்கிறது

தொப்புள் கொடியில்
துளிரும் (சில)முதல் உறவு
----------------------------------
தொப்புள் கொடியில்
துளிரும் (சில)முதல் உறவு

சுயநலம் கருதி
சிசுக்கொலை செய்கையில்

சுய இன்பம் வேண்டி
சுரணையற்று சிசுவை விற்கையில்

சில்லறை காண
சிறார் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கையில்

கரை சேர வேண்டிய
கனவுகளை

கடலிலேயேகவிழ்த்து
கருமாதியும் செய்கிறது

தொப்புள் கொடியில்
துளிரும் (சில)முதல் உறவு
----------------------------------
நட்பு

முன்னாளில்

கல்விச் சாலையின்
கசப்பான பாலைகளில்

கருத்தாய் மாறி
கவிதையாய் கலந்து

கண்ணீரிலும் கவலையிலும்
கைத்தாங்கலானாய்

காவலனாய்-முதல் உறவின்
கவனிப்பிற்கு போட்டியாய்


அதிர்ச்சிகள் ஆக்கிரமிக்கையில்
அன்புடன் ஆதரவானாய்


நட்பு என்னும் புதிய உறவாய்
நாழிகையும் என்னுடன் கழித்தாய்
-----------------------------------------
பின்னாளில்

பிரமை பிடித்தவனாய் - நான்
பிதற்றுகையில்
பிரதானமாகிப் போனாள் - நின்
பெண்ணொருவள்.

நட்பினைத் தேடி
நடையாய் நடந்தவனை
நானில்லை என
நாணமில்லாமல் நவின்றாய்

அநாதையாய்
அவசர தேவை என-சில நூறுகளுக்காக
அண்டுகையில்
அயலானாய் அகன்றாய்-பின்னாளில்

நட்பு என்ற உறவும்-சில
நூறு நாழிகையே
நிலைக்கும் என கூறாமல் கூறிச் சென்றாய்
------------------------------------------------------
சகோதர/சகோதிரி இரத்த உறவு

முன்னாளில்

சகோதரனாய்/சகோதரியாய் சளைக்காமல்
சகோதரம் பாராட்டினாய்

சிறு சண்டைகள்
சிடுமூஞ்சியாக்கினாலும்
சில்மிஷங்களால் சிரிக்கச் செய்தாய்

பனித்த கண்களுக்கு
பரிவு காட்டினாய்

பகடிகளின் மத்தியில்
பாசத்தின் பகலவனானாய்-முன்னாளில்
-------------------------------------------------
பின்னாளில்

விரும்பியது வினையானதால்
வெறுப்பை விதைத்தாய்

புதிய வழி நாடியவனை
புதிரால் புதைத்தாய்

சில்லறை விஷயங்களை
சிக்கலாக்கினாய்

நம்பிக்கை கொண்டு காத்திருக்கையில்
நம்ப வைத்து கழுவேற்றினாய்
------------------------------------------------
உறவுகள் சுமையானால்-மனித
உறவுகள் சுமையானால்
உறவுகளை உதறவும் செய்யும்-மனதுகள்
உலவும் உலகமிது

------------------------------------------------

தொலைதூரம் உடன் பயணித்து
தொலைந்தும் போன உறவுகளை
தொலைவிலிருந்து! திரும்பிப் பார்க்கையில்
தோன்றியவை!

------------------------------------------------

யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கே க்ளிக்கவும்

April 27, 2009

உலகை அச்சுறுத்தும் swine flu


(பதிவர் சுல்தான் அவர்களின் பதிவைத் தொடர்ந்து மேலும் சில தகவல்களுடன்)
swine flu எனப்படும் பன்றிக் காய்ச்சல் மேற்கத்திய நாடுகளை வெகுவாக கவலைக்குள்ளாக்கியிருக்கிறது

வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் மட்டும் 150பேர் பலியாக காரணமாகியிருக்கும் இந்த பன்றிக் காய்ச்சல் தற்போது வேகமாக பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது.

பன்றிகளையே (swine) அதிகம் தாக்கியதால் பன்றிக் காய்ச்சல் என அறியப்படுகிறது.இந்த வகை காய்ச்சல் ஆரம்பத்தில் பன்றிகளில் இருந்து மனிதனுக்கு பரவியது என்றாலும் மெக்சிகோவில் தற்பொழுது பாதிக்கப்பட்ட எவரும் பன்றிகளுடன் நெருங்கி இருந்ததாகக் கண்டறியப்படவில்லை.

அமெரிக்கா,கனடா,இங்கிலாந்து, ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது swine flu.

உலக சுகாதார அமைப்பு சர்வதேச அளவில் மருத்துவ நெருக்கடி நிலையை அமுல்படுத்தியுள்ளது.இந் நோய் பரவியுள்ள நாடுகளுக்கு பயணம் செய்யாமல் இருக்குமாறு இந்திய அரசாங்கம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Swine flu வைக் குறித்து அனைவருக்கும் எழும் சில கேள்விகளும் பதில்களும்

ப்படி பரவுகிறது?

1.இந்த காய்ச்சல் H1N1 swine flu எனப்படும் வைரஸால் பரவுகிறது.
2.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவரை விரைவாக தாக்குகிறது.
3.வைரஸ் தாக்கப்பட்ட ஒருவர் இருமும் போதோ தும்மும் போதோ வைரஸ் காற்றில் கலப்பதால் அருகில் இருப்பவருக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

வைரஸ் பரவுதலை தடுக்க முடியுமா?

1.வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் 70-90% வரை வைரஸ் பரவுவதலை தடுக்க முடியும்
2.இருமும் போதோ தும்மும் போதோ கை அல்லது கைக்குட்டையால் வாயை மறைப்பதன் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும்.
3.சுத்தமாக இருப்பதன் மூலம் தடுக்கலாம்.

வைரஸ் தாக்குவதால் என்ன பாதிப்பு?

1.மூன்று நாள்களுக்கும் அதிகமான காய்ச்சல்
2.தொடர்ச்சியான இருமல்
3.உடல் சோர்வு
4.வாந்தி,வயிற்றுப் போக்கு
5.கட்டுப்படுத்த முடியாத காய்ச்சல் மரணத்தையும் ஏற்படுத்தலாம்.

Swine flu விற்கு சிகிச்சை உள்ளதா ?

1.ஓரிரு நாள்களுக்கு அதிகமாக காய்ச்சல் இருப்பின் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்
2.வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மூலம் தக்க சிகிச்சை பெறுதல்
3.வைரஸ் தாக்குதலுக்குள்ளான நபர் 48 மணி நேரத்திற்குள் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை பெறுவாரானால் காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

swine flu வினால் பாதிக்கப்பட்டிருக்கும் மெக்சிகோவிற்கு பயணம் செய்ய வேண்டாமென சில நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஏற்கெனவே நலிந்திருக்கும் பொருளாதாரம் swine flu வினால் மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

நன்றி யாஹூ

ஈழத் தமிழர் நலனுக்கேனும் ஒன்றுபடுங்கள்

தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி உண்ணாவிரதம் இருக்கிறார் என ஊடகங்கள் வழி கேள்விப்பட்டதும் சற்றே ஆச்சரியமாகத் தானிருந்தது.இழக்கப் போகும் வாக்குகளை மீட்பதற்காக அவர் எடுக்கும் அரசியல் ஆதாய முயற்சியா என்ற கோணத்தில் பார்க்கவும் செய்தது உண்ணாவிரத செய்தி.

ஆனாலும் நெடுங்காலமாக ஈழத்தமிழர் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர் என்ற கோணத்தில் பார்ப்பதானால் முதல்வரின் நிலைப்பாடு சரியெனவேப் படுகிறது.அதோடு உடல்நிலை ஒத்துழைக்காத 86 வயதிலும் அவர் எடுத்த இந்த முடிவு உறுதியானதே.

கருணாநிதி நடத்தும் அரசியல் நாடகம் என பலர் குறிப்பாக எதிர்க்கட்சிகள் கருதக்கூடும்.ஜெயலலிதா அம்மையார் உண்ணாவிரதம் இருந்த போதும் இது அவரது அரசியல் நாடகம்,வாக்குகளை பெற அவர் முன் வைக்கும் உக்தி என்றும் பிற கட்சிகள் அவரை சாடின.

இலங்கை தமிழர் நலனிற்காக இரு பெரும் திராவிட கட்சிகளோ இல்லை பிற கட்சிகளோ எடுக்கும் எந்த முயற்சிகளும் பாராட்டப்பட வேண்டியவையும்,வரவேற்கப் பட வேண்டியவைகளுமாகும்.ஓட்டிற்கான நாடகமாகவே தோன்றியாலும் இலங்கை தமிழரின் நலனுக்காக தானே குரல் கொடுக்கிறார்கள் என்ற முறையில் அதனை பிற கட்சிகளும் ஆதரித்திருக்க(ஆதரிக்க) வேண்டும்.

தமிழர் நலனுக்காக தமிழர் பிரிவுபட்டு நிற்பதும் இனியும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருப்பதும் இலங்கை தமிழர் விஷயத்தில் எந்த வகையிலும் நன்மையை கொண்டு வரப்போவதில்லை.

April 24, 2009

சச்சின் ஒரு சகாப்தம்

இது ஒரு மீள்பதிவு. இன்று (24.04) சச்சினின் பிறந்த நாளாதலால் அவரின் சாதனைகள் சிலவற்றை இந்த பதிவில் திரும்பிப்பார்க்கலாம்.முந்தைய பதிவு இங்கே.சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
24 ஏப்ரல் 1973 ல் பிறந்த வலக்கை ஆட்டக்காரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் பள்ளிப்பருவங்களிலே சச்சினின் குரு மற்றும் ஆரம்பகால பயிற்சியாளர் "ரமாக்கந்த் அச்ரேக்கர்" அவரின் கீழ் கிரிக்கெட் வாழ்வைத் துவக்கினார். எம்.ஆர்.எஃப் அகடமியில் ஆஸ்திரேலியர் "திரு.டென்னிஸ் லில்லி"யின் கீழ் வேகப் பந்துவீச்சாளராக பயிற்சி பெற அனுப்பப்பட்டார்.அங்கு அவர் மட்டை வீச்சில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவதாக லில்லியால் குறை கூறப்பட்டார்.

பள்ளிப்பருவத்திலே அச்ரேக்கர் ஒரு ரூபாய் நாணயத்தை விக்கெட் மீது வைத்து விடுவாராம்,சச்சினின் விக்கெட்டை எடுப்பவர்களுக்கு அந்த நாணயம் வழங்கப்படும் என்று பந்தயம் வைத்திருக்கிறார்.இல்லையென்றால் அந்த நாணயம் சச்சினுக்கு சொந்தம். அப்படியாக 13 நாணயங்களை பெற்ற சச்சின் இன்றும் கூட பொக்கிஷமாக வைத்திருக்கிறார்.

1988 களில் சச்சினின் ஆட்டம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது.1988 ல் அவர் ஆடிய அனைத்து போட்டிகளிலும் சதமடித்தார்.அந்த வருடத்தில் தான் 2006 ஆம் வருடம் வரை தகர்க்கப்படாமலிருந்த உலகத்திலே ஒரு விக்கெட்டிற்கு எடுத்த அதிகபட்ச ரன்னான 664* ஐ வினோத் காம்ளியுடன் சச்சின் எடுத்தார், பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற லார்ட் ஹாரிஸ் பட்டயத்திற்கான போட்டி அது. 326 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

14 வயதுடன் தனது முதல் தரக் கிரிக்கெட்டை சச்சின் தொடங்கிய போது திரு.சுனில்கவாஸ்கர் அவர்கள் இரண்டு மென்மையான கால் கவசத்தை (Pad)அளித்திருக்கிறார்.அது தான் நான் நன்றாக விளையாட தனக்கு மிகுந்த ஊக்கமளித்ததாக 20 ஆண்டுகளுக்கு பின்னர் உலக வரலாற்றில் அதிக சதமாகிய கவாஸ்கரின் 34 சதத்தை முறியடித்த போது கூறி கவாஸ்கருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்.

1988 டிசம்பர் 11ல் 15 வயது 232 நாட்களாகிய சச்சின் தனது முதல் தர கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்திலேயே மும்பைக்காக குஜராத்திற்கு எதிராக ஆட்டமிழக்காமல் சதமடித்து மிக இள வயதிலேயே சதமடித்தவர் என்ற புகழைப் பெற்றார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தான் ஆடிய மூன்று(ரஞ்சி, துலீப், இரானி) அறிமுகப் போட்டிகளிலும் சதமடித்த பெருமையையும் பெற்றுள்ளார்.

என்றாலும் சச்சினின் சர்வதேச அறிமுக ஆட்டங்களிலும் ஆரம்ப காலங்களிலும் சொல்லும்படியான பங்களிப்பு இல்லை.16 வயதில் 15 நவம்பர்,1989 ஆம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக,கிரிஸ் ஷ்ரீக்காந்த் தலைமையின் கீழ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.முதல் இன்னிங்க்சில் 15 ஓட்டங்கள் மட்டுமே பெற்றார்.ஆனாலும் பாகிஸ்தானின் அதிவேகப் பந்து வீச்சை சமாளித்ததே மிகப் பெரிய விஷயம் என கிரிக்கெட் வல்லுனர்கள் இன்றும் கூறுகின்றனர்.ஏனென்றால் வக்கார் வீசிய ஒரு பந்து சச்சினின் தாடையைப் பதம் பார்த்தது;அதன் பின்னரும் இரத்தக் கறைபடிந்த சட்டையுடன் சச்சின் தொடர்ந்து ஆடியது தான்.

அதே ஆண்டு டிசம்பர் 18 ல் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தனது கால் தடம் பதித்தார்.முதல் ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் அறிமுக ஆட்டங்களில் சச்சினின் விக்கெட்டைச் சாய்த்தவர் வக்கார் யூனிஸ்.வக்காருக்கும் அது அறிமுக ஆட்டங்கள் தான் என்பது சுவாரஸ்யம்.

17 ஆவது வயதில் 1990 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் சதத்தை சச்சின் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓல்ட் ட்ரஃபோர்டில் எடுத்தார்.அதன் பின்னர் தனக்கு 25 வயது ஆகுமுன் 16 சதங்கள் அடித்தார்.2000 ல் உலக கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களுக்கு மேல்(டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இணைந்து) எடுத்த முதல் வீரர் என்ற புகழைப் பெற்றார்.

1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில்(ஷேன் வார்னின் முதல் போட்டி) சச்சின் ஆட்டமிழக்காமல் குவித்த 148 ஓட்டங்கள் மற்றும் பெர்த் வாக்கா மைதானத்தில் அடித்த சதமும் தான் இன்று வரை அவரடித்த சதங்களில் முதலிடம் பெறுகிறது.ஏனென்றால் பெர்த் மைதான ஆடுதளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிக சாதகமானது.

அன்றே ஆஸ்திரேலியாவின் மெர்வ் ஹூஜ்ஸ் ஆலன் பார்டரிடம் இந்த பொடியன் உன்னை விட அதிக ஓட்டங்கள் குவிப்பான் என்று கூறியிருக்கிறார்.

உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர். டான் பிராட்மேனே சச்சினின் ஆட்டம் அவரது ஆட்டத்தைப் போன்றே இருப்பதாக சச்சினைப் புகழ்ந்திருக்கிறார். பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியர் ஷேன் வார்ன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார்.

1994 செப்டம்பர் 9 ல் ஒரு நாள் சர்வதேச போட்டியின் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நிறைவு செய்தார்.

1996 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள்(523) குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.கொல்கொத்தா ஈடன் கார்டன் அரை இறுதியில் சச்சின் வெளியேறியதும் ஒருவர் பின் ஒருவர் பரிதாபமாக ஆட்டமிழந்த நேரத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட இந்தியா இலங்கையுடன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.65 ரன்கள் குவித்தார் சச்சின் அரையிறுதியில்.

1998 ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய டெஸ்ட் தொடரில் வரிசையாக மூன்று சதங்கள் அடித்து வெற்றி வாகை பெற்றுத் தந்தார்.அதே வருடம் சார்ஜாவில் நடைபெற்ற "கோகோ-கோலா முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்" தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு சதங்களை அடித்து கோப்பையை தனி ஒருவராக பெற்றுத் தந்தார்.

1999ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு அவர் குவித்த 136 ஓட்டங்கள் இன்றும் மறக்கவியலாதது. அப்போட்டியில் கடைசி நான்கு விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற இந்தியா தோல்வியடைந்தது.அந்த தோல்விக்காக இன்றும் வருத்தப்படுகிறார் சச்சின்.

1999 உலகக் கோப்பைப் போட்டிகளின் நடுவே தந்தையை இழந்த சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் ஜிம்பாப்வே அணியுடனான ஒரு போட்டியை விட்டுக் கொடுத்து இந்தியா வர வேண்டியிருந்தது.பின்னர் மீண்டும் அணியில் திரும்பி கென்யாவிற்கு எதிராக 141* குவித்தார்.அந்த சதத்தை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கண்ணீர் மல்கினார்.கிரிக்கெட் மீது அத்தனை ஈடுபாடு உள்ளவர் தான் சச்சின்.

2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் 11 ஆட்டங்களிலிருந்து 673 ஓட்டங்களைக் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற காரணகர்த்தாவானார்.இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் சச்சின் தொடர் நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

2005, டிசம்பர் 10 அன்று திரு.கவாஸ்கரின் 34 டெஸ்ட் சதங்களை இலங்கைக்கு எதிராக முறியடித்தார்.

2007-2008 ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காமன்வெல்த் பேங்க் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்து தொடர் வெற்றிக்கு வழி செய்தார்.

2008 அக்டோபர்17ல் உலகில் மேற்கு இந்திய தீவு ஆட்டக்காரர் லாராவின் சாதனையை முறியடித்து அதிக டெஸ்ட் ஓட்டங்கள் 12773 (ஏப்ரல் 7, 2009 ன் படி) எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் .டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் இதுவரை மொத்தம் 42சதங்கள் எடுத்து முதலிடத்திலுள்ளார். அதிக பட்ச ஓட்டம் 248*.

ஒரு நாள் போட்டிகளில் 43 சதங்களுடன் 16684 ஓட்டங்கள் எடுத்துள்ளார் (மார்ச் 8, 2009 ன் படி). அதிகபட்ச ஓட்டம் 186*. ஆனால் சச்சின் ஆடிய முதல் 78 ஒரு நாள் ஆட்டங்களில் சதமேதும் எடுக்கவில்லை என்பது சற்றே விசித்திரம் தான்.

23 முறை சச்சின் 90-99 ஓட்ட இடைவெளியில் வெளியேறி சதங்களை கோட்டை விட்டுமிருக்கிறார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் கேட்ச் எடுப்பதிலும் சதமடித்துள்ளார்,ஒரு நாள் போட்டிகளில் 129, டெஸ்ட் போட்டிகளில் 102.மிகச்சிறந்த பந்துபிடிப்பாளருமாவார் சச்சின்.

இத்தனை சாதனைகளின் மத்தியில் சோதனைகள் இல்லாமல் இல்லை.

இருமுறை அணித்தலைவர் பொறுப்பு ஏற்றும் அவர் தலைமையின் கீழ் சொல்லத் தகுந்த வெற்றிகளை இந்திய அணி குவிக்கவில்லை.

2001 போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆட்ட நடுவர் மைக் டென்னஸ் சச்சின் மேல் குற்றம் சாட்டி ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதித்தார்.ஆனால் தொலைக்காட்சியில் சச்சின் பந்தை துடைப்பதாக மட்டுமே தெரியவந்தது.இனவெறியினால் (Racism) தான் நடுவர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார் என்பது வரை பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது.இதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு தடையை நீக்கியது.இந்திய பாராளுமன்றம் வரை இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டது(வேற பிரச்சினைகளே நாட்டில் இல்லையென்பதால்?!)

2003 ல் முழங்கை வலியினால் (Tennis elbow) அவதிப்பட்டு 10 மாதங்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற முடியாமலிருந்தார்.

2004 ல் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் 194 ஓட்டங்கள் குவித்து ஆடிக் கொண்டிருந்த போது அணித்தலைவர் திராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்து சச்சினின் இரட்டை சதத்திற்கு வேட்டு வைத்தார்.அது இன்றும் தனிப்பட்ட முறையில் வருத்தப்படுத்துவதாக சச்சினே கூறியுள்ளார்.

2006ல் தோள்பட்டை பிரச்சினைக்கு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.போட்டிகளில் பங்கேற்காமலிருந்த அந்த சில மாதங்கள் "கபில் தேவ், அந்நாள் பயிற்சியாளர் உள்ளிட்ட பலரும் சச்சின் ஓய்வு பெற வேண்டுமென வலியுறுத்தினார்கள்".அந்த நாட்களை மறக்க நினைக்கிறேன் என்று வருத்தப்படுகிறார் சச்சின் இப்போது.

விருதுகள்

1994 அர்ஜூனா விருது
1997-98 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

1997-விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது

1999-பத்மஸ்ரீ விருது

2008-பத்மவிபூஷன் விருது

சச்சினின் ஆட்டத்தில் எனக்கு பிடித்தது
-அவரின் அற்புதமான Straight drive (சுனில் கவாஸ்கரே வியக்கிறார் சச்சினின் Straight drive ற்கு), Cover drive மற்றும் Leg flick.
-1998 சார்ஜாவில் ஆஸிக்கு எதிரான தொடர்ச்சியான இரு சதங்கள்.
-2003 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானின் சோயிப் அக்தர் பந்து வீச்சில் ஆஃப் சைடில் அவரடித்த சிக்சர்.
-2003 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டி கேடிக்கின் பந்தை மைதானத்திற்கு வெளியே விரட்டிய சிக்சர்.அதோடு கேடிக்கின் வார்த்தை விளையாட்டுகளுக்கு முற்றுப் புள்ளியும் வைத்தார்.
-2007-08 ல் காமன்வெல்த் பேங்க் தொடரில் அடித்த இரு சதங்கள்.

------------------------------
சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும்,அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.இந்தியாவிற்கு மேலும் புகழ் சேர்க்க சச்சினுக்கு வாழ்த்துக்கள்.
-------------------
(ஆனாலும் 20-20 ஆட்டங்களுக்கு உடலை மிகவும் வருத்த வேண்டி இருக்கிறது, இளைஞர்கள் தான் 20-20 ஆட்டத்திற்கு சரி என 2007 ல் முடிவெடுத்து விலகியிருந்தவர் ஐ.பி.எல் ல் ஆட என்ன காரணம் என்பது தான் புரியவில்லை. 20-20 ஆட்டங்களில் அவரது இரட்டை நிலையும் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை)

நன்றி மற்றும் தகவல் ஆதாரம்,

April 23, 2009

ஏப்ரல்,மே மாதங்களின் சுடும் வெயிலில் தான் தேர்தல் வேண்டுமா?

பொதுவாகவே பாரதத்தில் ஏப்ரல் மே மாதங்களிலேயே தேர்தல் நடைபெற்று வந்திருக்கின்றன. பதினைந்தாவது பாராளுமன்றத்தை தெரிந்தெடுக்கும் இந்த முறையும் அனல் வீசும் ஏப்ரல் மே மாதங்களில் தான் ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்த இன்று(23.04.2009)ஒரிசாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இரு தேர்தல் அலுவலர்கள் மரணமடைந்ததாக ஊடகங்கள் வழி செய்தியைக் கேள்விப் பட நேரிடுகிறது.

மேலும் ஒரிசா,பீகார் போன்ற பிற்படுத்தப்பட்ட மாநிலங்களில் பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீரோ,வெயிலில் இருந்து மறைவதற்கு ஒரு மறைவோ தேர்தல் பணியாளர்களால் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை.

இவை போன்ற மாநிலங்களில் கேள்வி கேட்பதற்கு எவருமிருக்க மாட்டார்கள் என்ற தைரியம் தான் இதற்கு காரணமா என்றும் தெரியவில்லை.

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 16.04.2009 அன்று வெயிலின் தாக்கம் அவ்வளவாக இல்லை.இனி நடக்கவிருக்கின்ற அடுத்த மூன்று கட்ட வாக்குப்பதிவுகளின் போதும் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கப் போகிறது.

இந்தியாவின் ஒரிசா, பீகார் உள்ளிட்ட கிழக்குமாநிலங்களில் மட்டும் ஏப்ரல் 19 வரை 23உயிர்கள் வெயிலின் கொடுமைக்கு பலியாகி இருக்கின்றனர்.அதிகபட்சமாக44 டிகிரி பதிவாகியிருக்கிறது அங்கு.

குறிப்பாக தமிழ்நாட்டில் மே 13 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. அக்னி நட்சத்திரம் என சொல்லப்படும் உச்ச கட்ட வெயில் அந்த இடைவெளியில் வர வாய்ப்புள்ளது.எனவே தமிழர்கள் சுதாரிப்பாக இருத்தல் நல்லது.

ஏப்ரல்,மே மாதங்களில் பொதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை காலம்.வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் பள்ளிகளிலேயே அமைக்கப்படுகின்றன.மேலும் வாக்குப்பதிவு நடந்த பின்னர் (முன்பு)வாக்குச்சீட்டுகள்,(தற்பொழுது)வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கு பள்ளிகள் தேவையாதலால் ஏப்ரல்,மே மாதங்களை தேர்தல் ஆணையம் தெரிந்தெடுத்திருக்கலாம்.

ஆனால் 5 வருடத்திற்கு முன்னர் இருந்த தட்பவெப்பநிலை இப்போது நிலவுகிறதா என்றால்... நிச்சயமாக இல்லை. மும்பை பிப்ரவரி மாதமே 40 டிகிரிக்கும் மேலான வெப்பத்தை அனுபவித்து விட்டது இம்முறை.சென்னையும்,இந்தியாவின் பிற மாநிலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.டில்லியில் புழுதியுடன் அனல் காற்றி வீசி வந்திருக்கிறது மார்ச் மாதத்திலும்,இந்த மாதத்திலுமாக.

நேற்று (22.04.2009)தான் சர்வதேச பூமி தினம் அனுசரிக்கப்பட்டது.பல அமைப்புகள் பொதுமக்களுக்கு பூமி வெப்பமாகுதலையும்,தண்ணீர் வீணாகுதலையும் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் இயற்கைக்கு நவீன உலகம் செய்த துரோகத்தை இயற்கை ஒரு போதும் மன்னிக்க தயாராக இல்லை என்றே தெரிகிறது.வருடத்திற்கு வருடம் தட்பவெப்பநிலையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

சரி காலநிலையை நம்மால் மாற்ற முடியாது,தேர்தல் நாளை மாற்றலாம் அல்லவா.தவிர்க்க முடியாத காரணத்தால் தேர்தல் நாள்களையும் மாற்றி வைக்க முடியவில்லை என்றால் வாக்குச்சாவடிகளுக்கு உரிய வசதிகளையாவது செய்து கொடுக்கலாமே தேர்தல் ஆணையம்.

வேட்பாளர்கள்,கட்சித்தலைவர்கள் ஹாயாக ஏ.சி.காரில் கூலிங் க்ளாஸ் சகிதம் வந்து விட்டு போய் விடுவார்கள். இதைக் குறித்து எல்லாம் அவர்கள் ஏன் கவலைபடுகிறார்கள்.எத்தனை வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன என நோக்குகின்றனரோ?

April 22, 2009

பூமி தினத்தில் விழிப்புணர்வு பெறுவோம்

பூமி தினமான இன்று 22.04.2009 தண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் சில ஆங்கில Slides உங்கள் பார்வைக்கு. இதனை power point format ல் தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக்கவும்.

நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.வரும் சந்ததிக்கு பசுமையான உலகை விட்டுச் செல்வோம்.

(இதனை மின்னஞ்சலில் அனுப்பிய அண்ணன் ஜீவா அவர்களுக்கு நன்றி)
















இசைஞானியின் மயக்கும் மலையாள மெட்டுக்கள்

இசைஞானி இளையராஜாவைக் குறித்து தமிழர்களிடம் சொல்லவே தேவையில்லை. மேஸ்ட்ரோவின் இசைக்கு மயங்காதவர் வெகு அபூர்வம் எனலாம்.

தமிழ் திரையுலகில் அதிக நேரம் செலவிட்டு வந்தாலும் பிற மொழி கலைஞர்கள்,நண்பர்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப அவர்கள் மொழியிலும் இசையமைக்க நேரம் ஒதுக்கியே வந்திருக்கிறார் இசைஞானி.

அந்த வரிசையில் மலையாள மொழியில் 1986,2005 மற்றும் 2007 களில் இசைஞானி இசையில் பிரபலமடைந்த சில மலையாள பாடல்களை இங்கு தொகுத்துள்ளேன்.

1986
பாடல்:பூங்காற்றினோடும்,பாடியவர்:ஏசுதாஸ்,ஜானகி,திரைப்படம்:பூமுகப்படியில் நின்னயும் காத்து.

மலையாளத்தில் இன்றும் பலரால் அதிகம் விரும்பி கேட்கப்படும் ஒரு பாடல் இது.




2005

பாடல்:எந்து பறஞ்சாலும்
பாடியவர்:சின்னக்குயில் சித்ரா,திரைப்படம்:அச்சிவின்டே அம்மா
ஊர்வசியும்,மீரா ஜாஸ்மினும் அம்மாவும்,மகளுமாக பாசத்தால் செய்யும் சேஷ்டைகள் பாடலை இன்னும் நம்மோடு ஒன்றிப் போக செய்கின்றன.





2007
பாடல்:கையெத்தா கொம்பத்து,திரைப்படம்:வினோதயாத்ரா
பாடியவர்:ஏசுதாஸ்,மஞ்சரி




2007
பாடல்:மந்தாரப்பூ திரைப்படம்:வினோதயாத்ரா,
பாடியவர்:மதுபாலகிருஷ்ணன்,ஸ்வேதா(பாடகி சுஜாதாவின் மகள்)

இதில் ஒளிப்பதிவும்,மீரா ஜாஸ்மின் செய்யும் சில்மிஷங்களும் பாடலுக்கு மேலும் மெருகேற்றுகின்றன.


April 20, 2009

ICL ற்கு ICC ன் அங்கீகாரம் மறுப்பு


ஒரு புறம் IPL இந்தியாவின் ஒவ்வொரு தெருமுனைகளிலும் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்க மறுபுறம் ICL-Indian Cricket League மேலும் விவகாரத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

18.04.2009 சனிக்கிழமை ஐ.பி.எல் துவங்கிய அதே நாள் ஐ.சி.எல் ற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளது.

துபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.என்றாலும் இந்த முடிவை எதிர்த்து ஐ.சி.எல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர கூடும் என தெரிகிறது.

உலகக் கோப்பையை வென்ற ஒரே இந்திய அணித்தலைவரான கபில்தேவ் பல நாடுகளின் கிரிக்கெட் ஆட்டக்காரர்களைக் கொண்டு வடிவமைத்த ஐ.சி.எல் 20-20 கிரிக்கெட் போட்டிகள் தான் ஐ.பி.எல் துவங்குவதற்கான காரணம் என்ற சர்ச்சைக்குரிய கருத்து இன்றும் நிலவுகிறது
.
ஆனால் லலித் மோடி, ICL துவங்குவதற்கு முன்னரே IPL குறித்து கனவு கண்டதாக கூறுகிறார். (உண்மை அவருக்கே வெளிச்சம்)

ஐ.சி.எல் ல் நியூசிலாந்தின் க்ரிஸ் கெய்ன்ஸ்,ஷேன் பான்ட், பாகிஸ்தானின் இன்சமாம்,ஆஸியின் டேமியன் மார்ட்டின், இயன் ஹார்வி போன்ற பிரபலங்கள் பங்கு பெற்றுள்ளது குறிப்பிடும் படியானது

ஏற்கெனவே ஐ.சி.எல் ற்காக ஆடி வரும் ஆட்டக்காரர்களை பி.சி.சி.ஐ தேசிய அணியில் சேர்த்துக் கொள்ள மறுத்து வருகிறது.இந்திய கிரிக்கெட் வாரியத்தை பின்பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஐ.சி.எல் ஆட்டக்காரர்களை புறக்கணித்து வருகிறது.

மாறாக நியூசிலாந்து,இலங்கை,பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தை போன்ற கேவலமான செயலை செய்வதில்லை.அதோடு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை மிக வன்மையாக கண்டிக்கவும் செய்திருக்கிறது.

ஆரம்பத்தில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள இளம் வீரர்களைக் கண்டெடுப்பதற்காக IPL தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்கள்.ஆனால் தற்பொழுது உள்ள IPL ன் அணிகளைப் பார்த்தால் குறிப்பிட்ட பிராந்தியத்திலிருந்து இடம் பெற்றிருப்பது ஒன்று அல்லது இரண்டு இளம் ஆட்டக்காரர்கள் மட்டுமே.

உதாரணத்திற்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியைச் சொல்லலாம்.பத்ரிநாத்,பாலாஜி மட்டுமே பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடினார்கள்.மும்பை அணிக்கு எதிராக பத்ரியும்,அஷ்வினும் மட்டுமே ஆடினார்கள். இவர்களில் அஷ்வின் மட்டுமே புதியவர்

மாறாக ஐ.சி.எல் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியின் கடந்த சீசனில் 8தமிழக ஆட்டக்காரர்கள் இருந்தார்கள்.இதில் பெரும்பாலானோர் புதியவர்களே.ஐ.சி.எல் ன் முதல் சீசனின் சாம்பியனும் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி தான்.

IPL மூலம் புதிய இளம் வீரர்களை கண்டெடுக்கிறோம் என்பதெல்லாம் வெறும் பேச்சளவிலேயே உள்ளது.பணத்தை மட்டுமே குறி வைத்து அதோடு கவர்ச்சியையும்,அரைகுறை ஆடை அணிந்த மங்கைகளையும் மட்டுமே ஊக்குவிக்கிறது ஐ.பி.எல்.

இளம் ஆட்டக்காரர்களை ஊக்குவிக்கும் ICL ற்கு இனி நீதிமன்றத்திலாவது நீதி கிடைக்குமா என பார்க்கலாம்.ஐ.பி.எல்லை விட சிறந்த நோக்கம் கொண்டது ஐ.சி.எல் என்கிறேன் நான்...நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

(20-20 ஆட்டங்களுக்கு உடலை மிகவும் வருத்த வேண்டி இருக்கிறது, இளைஞர்கள் தான் 20-20 ஆட்டத்திற்கு சரி என 2007 ல் முடிவெடுத்து 20-20 ஆட்டங்களிலிருந்து விலகியிருந்த லிட்டில் மாஸ்டர் சச்சினும் ஐ.பி.எல் ல் ஆட என்ன காரணமோ?)

"Comic Sans" Font ற்கு தடைவிதிக்க முயற்சி!

Comic sans எழுத்துருவானது எழுதப்படும் ஒரு சொல்லுக்கு அற்பமான, சிறுபிள்ளைத்தனமான, அவமரியாதை அளிப்பது போன்ற அர்த்ததை வெளிப்படுத்துவதாகவும்,எரிச்சலூட்டும் படி உள்ளது எனவும் பலர் ?? கருதுகிறார்களாம்!

இதனால் இதற்கு தடை விதிக்கும் முயற்சியில் சில அமைப்புகள் ஓரிரு வருடங்களாக செயல்பட்டு வருகின்றன.ப்ளாக்கரிலும் 'comic sans' எழுத்துரு வசதி இல்லாதது குறிப்பிடத்தக்கது.


1994 ல் Vincent Connare என்பவரால் Comic sans font வடிவமைக்கப்பட்டது.காமிக் புத்தகங்களில் எழுதப்படும் எழுத்துருக்களின் தாக்கத்தால் வழக்கமான Times New Roman font லிருந்து ஒரு மாற்றத்திற்காக Comic sans font ஐ அவர் உருவாக்கியதாக தெரிகிறது.

மைக்ரோசாஃப்ட் வின்டோஸிற்காக புதிய மென்பொருள் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் வின்சென்ட் ஈடுபட்டிருந்த போது கணினி திரையில் தோன்றிய கார்ட்டூன் நாய் ஒன்றின் பேச்சு Times New Roman font ல் கணினி திரையின் கீழே செய்தியாக தோன்றியிருக்கிறது.

அதனை வேறு எழுத்துருவாக மாற்ற நினைத்தவர் இரு காமிக் புத்தகங்களின் எழுத்துருக்களை மையமாகக் கொண்டு ஒரு வாரத்திற்குள்ளாக comic sans ஐ உருவாக்கியிருக்கிறார்.

ஆரம்பத்தில் இந்த எழுத்துரு comic book என்ற பெயரில்அறியப்பட்டிருந்திருக்கிறது,அச்சொல் எழுத்துருவிற்கான சொல் போல் இல்லை என வின்சென்டிற்கு தோன்றியதால் comic sans என பெயர் மாற்றம் செய்திருக்கிறார்.

sans என்றால் sans-serif என்பதன் சுருக்கமாம். அதாவது comic sans எழுத்துருவின் எழுத்துக்கள் எதுவுமே (Capital 'I' ஐ தவிர) பிற எழுத்துருக்களைப் போன்ற சிறிய வரையை கொண்டிருப்பதில்லை(small features at the end of strokes)

1994 ற்கு பின்னர் கணினிகள் வீடுகளிலும் நுழையவே அவரவர் ரசனைக்கேற்ப வித்தியாசமான பல எழுத்துருக்கள் சாதாரண மக்களின் மனதைக் கவர்ந்திருக்கின்றன.அவற்றில் comic sans முக்கிய இடம் வகிக்கிறது.குழந்தைகளையும் அதிகம் கவர்ந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நானும் பலமுறை comic sans எழுத்துருவையே உபயோகப்படுத்தியிருக்கின்றேன்.ரசிக்கும் படி தான் இருக்கிறது.இதன் மீதான தடைக்கு ஓரிரு வருடங்களாகவே ஆதரவு திரட்டப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.comic sans எழுத்துருவை பிடிக்காதவர்கள் உபயோகிக்காமல் இருக்கலாம்,மாறாக தடை விதிக்க வேண்டுமென பிரச்சாரம் செய்வது ஏனோ தெரியவில்லை.

நன்றி: யாஹூ

-------------------

இது தொடர்பான பிற வலைத் தளங்கள்
http://www.bancomicsans.com/

April 19, 2009

பள்ளிகளின் குரூர தண்டனைகளும்;பின்விளைவும்


டெல்லி அரசுப்பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த 'ஷன்னு' என்ற மாணவி மூச்சுத் திணறல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் நினைவிழந்த நிலையில் இரு நாட்களாக சிகிச்சையில் இருந்தவர் 17.04.09 வெள்ளிக்கிழமை அன்று பரிதாபமாக மரணமடைந்தது பலரும் அறிந்ததே.

மரணத்திற்கான காரணம் இதுவரை சரிவர கண்டறியப்படவில்லை என்றாலும் அச்சிறுமியின் வகுப்பில் உடன் பயின்ற மற்றுமொரு மாணவன் ஊடகங்களுக்கு அளித்த தகவல்கள் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் அவளின் வகுப்பு ஆசிரியை மூலம் தண்டனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறாள் என தெரிய வருகிறது.

தண்டனைக்கான காரணம்,வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதும்,கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்பதுமே.ஷன்னுவைத் தவிர மேலும் சில வீட்டுப்பாடம் செய்யாத மாணவியரை அந்த ஆசிரியை அடித்ததாகவும்;பெஞ்சில் தலையை வைத்து மோதியதாகவும்;பின்னர் வகுப்பிற்கு வெளியே இரண்டு மணி நேரம் சுடும் வெயிலில் நிற்க வைத்ததாகவும் அந்த சிறுவன் தெரிவித்தான்(சிறுவன் பொய் சொல்லியிருக்க மாட்டான் என நம்பலாம்!!)

மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்யாமல் வருதலையோ;படிப்பில் ஆர்வமின்றி இருப்பதையோ;பள்ளிகளில் செய்யும் தவறுகளையோ ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்வார்களே என்றால் அதற்கான தீர்வுகள் ஏற்பட வாய்ப்புகளுண்டு.(சில வீடுகளில் இதை விட கொடிய தண்டனைகளையும் காண நேரிடுவது இன்னும் அதிர்ச்சியாக உள்ளது)

அதை விடுத்து இது போன்று குரூரமான தண்டனைக்கு மாணவர்களை குறிப்பாக சிறுவர்களை உட்படுத்துதல் மிகப்பெரிய அளவில் மனோ ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.
(உடல் ரீதியான பாதிப்பு ஒருபுறமிருந்தாலும்)

சில பள்ளிகள் குறிப்பாக தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியின் தேர்ச்சி விகிதம் பிற பள்ளிகளை விட அதிகம் வர வேண்டும்;கடந்த ஆண்டை விட குறைந்து விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் மாணவர்களுக்கு அதிக சுமைகளைக் கொடுப்பதும்,சுமைகளை சுமக்காத மாணவர்கள் மீது தண்டனைகள் சுமத்துவதும் இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது.

இந்த விஷயத்திலோ நிலைமையே வேறு,இத்தனைக்கும் ஷன்னு பயின்று வந்தது அரசுப்பள்ளி.ஷன்னுவிற்கு 11 வயது ஆகியிருக்கிறது, அப்படியென்றால் ஷன்னு ஐந்தாவது அல்லது ஆறாவது வகுப்பு படிக்க வேண்டிய வயது,எனவே ஷன்னு திறமையான மாணவியாக இருந்திருக்க வாய்ப்புகள் குறைவே;இந்த காரணத்தால் கூட அந்த ஆசிரியை மூர்க்கம் கொண்டிருக்கலாம்;இத்தனை வயதாகிறதே இன்னும் புத்தி வரவில்லையா என.

அன்பாக எடுத்துக் கூறியிருக்கலாம்... அடித்தால் மாணவர்கள் படிப்பார்கள் என்ற எழுதாத சட்டம் எல்லா மாணவர்களுக்கும் பொருந்தும் என சொல்ல முடியாது.சிலர் அடிக்கு பயந்து படிப்பதுண்டு;சிலர் பயந்து பள்ளிக்கே மட்டமிடுவதும் உண்டு.வேறு சில மாணவரோ என்ன தான் அடித்தாலும் படிக்காமலேயே வருவதுமுண்டு.

ஆசிரியர்களானாலும்,பெற்றோர்களானாலும் மாணவர்களை மனோரீதியாக அணுகுதல் வெகு அவசியம்,அல்லாமல் இப்படி மூர்க்கம் கொண்டு அடிப்பதும்,வெயிலில் நிறுத்துவதுமான குரூர அணுகுமுறைகள் பெரும்பாலும் அவஸ்தைகளிலும்,மன உளைச்சல்களிலும் தான் முடிய வாய்ப்புள்ளது.

(ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை உடல் ரீதியான தண்டனைகளுக்கு உட்படுத்தக் கூடாது என்ற சட்டம் இந்தியாவில் உருவாக்கப்படும் வரை இவை போன்ற சோகங்களும் தொடரவே வாய்ப்புள்ளது)

April 16, 2009

மனைவியை கொன்ற தீவிரவாதிகளை மன்னித்த மகான்

நேற்று(15.04.09) ndtv தொலைக்காட்சியில் நவம்பர் 2008 மும்பை தாக்குதலின் விசாரணை குறித்த விவாதம் நடைபெற்றது. Times Of India's Consulting Editor ம் தனது மனைவியுமான திருமதி.சபீனா சாந்தனுவை, மும்பைத் தாக்குதலில் இழந்த திரு.சாந்தனு அவர்களும் பங்குபெற்று தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் குறிப்பிடுகையில் அஜ்மல் கசாப் வழக்கின் விசாரணையை நாங்கள் பின் தொடரவில்லை;அதனைக் குறித்து அறியவும் விரும்பவில்லை; நானும் எனது இரு பிள்ளைகளும் விரும்புவது எல்லாம் அஜ்மல் கசாப் மரண தண்டனைக்கு விலக்கப்பட வேண்டும்.அவர் உயிருடன் வைக்கப்பட வேண்டும்.

எனது மனைவி மும்பை தாக்குதலில் குறிவைக்கப்படவில்லை; தீவிரவாதிகளின் தாக்குதலில் மடிந்த மற்றுமொரு பலிகடா, அவ்வளவு தான்.

எங்களுக்கு வருத்தம் இல்லாமலில்லை,ஆனாலும் கசாப் மீது எந்த கோபமோ வெறுப்போ எங்களுக்கு இல்லை.அவர் மீது கோபம் கொள்வதினாலோ மேலும் கவலை அடைவதாலோ நாங்கள் எதனையும் ஈட்டப் போவதில்லை.மறைந்த எனது மனைவி மீண்டு வந்து விடப் போவதுமில்லை என கூறினார்.

அதோடு அவரின் 12 வயது மகன் அஜ்மல் கசாப்பை சிறைச்சாலையில் சென்று சந்திக்க விரும்புவதாக தெரிவித்து இருக்கிறான் எனவும் கூறினார்.

ஏற்கெனவே நளினியை சிறைச்சாலையில் பிரியங்கா காந்தி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களைப் போன்ற மனித நேயம் மிக்கவர்களை எவ்வளவு புகழ்ந்தாலும் பாராட்டினாலும் தகும்.திரு.சாந்தனு அவர்களை மகான் என தலையங்கத்தில் குறிப்பிட்டதும் தகும் என்றே கருதுகிறேன்.

இந்த நிகழ்ச்சியின் போது பங்கு பெற்று பேசிய மூத்த வழக்கறிஞரும்,இந்திராகாந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக வாதிட்டவருமான திரு.ராம்ஜெத்மலானி, சாந்தனுவை வெகுவாக பாராட்டியதோடு இந்த கருத்துக்களை கேட்கும் ஒவ்வொரு தீவிரவாதியும் வெட்கப் பட வேண்டும் என்றார்.அதோடு இந்த கருத்துக்களை அனைத்து செய்தி ஊடகங்களும் வெளியிட வேண்டும் என்றும் கூறினார்.

April 15, 2009

தண்ணீர் வீணாகுதலை நாமும் தவிர்ப்போம்...

இந்த பதிவை இட காரணமான... பதிவர் ஜீவா அவர்களுக்கு முதலில் நன்றி

-----------------------------


நீரின்றி அமையாது உலகம் எனவும்; நீர் வாழ்க்கையின் அமிர்தம் எனவும்,(water is the elixir of life) எனவும் பள்ளிக்கூடத்தில் படித்த ஞாபகம்.

அமிர்தம் போன்ற அந்த நீரானது இன்று பல பகுதிகளில் கிடைக்கவே மிகக் கடினமாக இருக்கிறது.

நான் அறிந்த வரை...தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அதிகம் கேட்டிராத தமிழகத்தின் பல பகுதிகளிலும் கூட இன்று தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கேள்விப்பட நேரிடுகிறது.

நம்மில் பலர் அன்றாட வாழ்க்கையில் அறிந்தும் அறியாமலும் பல நேரங்களில் தண்ணீரை வீணாக்குகிறோம்.

wwf-world wide fund for nature எனப்படும் அமைப்பானது இயற்கையை இன்றைய உலகமயமாக்கலில் இருந்தும்,வெப்பமாகுதலில் இருந்தும் பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதத்தில் பூமி நேரம்(Earth Hour) என்ற பெயரில் அந்த அமைப்பு உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

wwf அமைப்பு தண்ணீர் வீணாகுதலைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2007 ல் வெளியிட்ட 40 வினாடிகளே கொண்ட இந்த காணொளியில் சிறுகுழந்தை ஒன்று குழாயிலிருந்து வீணாகிக் கொண்டிருக்கும் தண்ணீரை நிறுத்த முயற்சிப்பது மனதை தொடும்படி உள்ளது.நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்.



ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 அன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தண்ணீரை தேவைக்கு மட்டும் உபயோகித்து, வீணாகாமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

April 14, 2009

சுயேட்சை வேட்பாளர்கள் மீது ஏன் இந்த சாடல்?


"சுயேட்சை வேட்பாளர்கள் என்பவர்கள் சீரழிப்பவர்கள்"

இப்படி ஒரு வாக்கை இந்திய நாட்டின் உயர் பதவியிலிருப்பவர் ஒருவரிடமிருந்து அதுவும் பிரதமரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

சில நாட்களாகவே பிரதமர் சிங் அவர்கள் முன் வைக்கும் கருத்துகள் முன்னுக்கு பின் முரணானவையாகவும். ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பிற கட்சியினரை சாடுவதும், குறை சொல்வதும்,தனி மனித தாக்குதல் செய்வதுமாக இறங்கியிருக்கிறார் பெரியவர்.

முந்தைய பதிவிலேயே இவரை போன்றவர்களின் பிரச்சார பிதற்றல்களை குறிப்பிட்டிருந்தேன்.

இன்று அவற்றிக்கு எல்லாம் ஒரு படி மேலே போய்...'சுயேட்சை வேட்பாளர்கள் சீரழிப்பவர்கள்; அவர்களால் வெற்றி பெற முடியாது;அவர்களை ஊக்குவிக்க கூடாது' என்ற தரம் தாழ்ந்த கருத்தை கூறியிருக்கிறார் பிரதமர்.

சுயேட்சை வேட்பாளர்களின் மேல் ஏன் இந்த திடீர் சாடல் என்று தான் புரியவில்லை. மக்கள் அல்லவா அவர்கள் முடிவை சொல்ல வேண்டும்... சுயேட்சைகள் சீரழிப்பவர்களா இல்லை சீர்ப்படுததுபவர்களா என்று.

அதோடு "மாநில கட்சிகள் எவ்வளவு காலம் தேசிய அரசியலில் தாக்கு பிடிப்பார்கள் என சொல்ல முடியாது" ஆதலால் தேசிய கட்சியான எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருக்கிறார். நீங்கள் தேசிய கட்சி என்றால்... நாணமில்லாமல் என்னத்திற்கு மாநில கட்சிகளுடன் கூட்டணி கூடுகிறீர்கள்?

சுயேட்சைகள் போட்டியிடுவதில் இவர்களுக்கு என்ன சிக்கல வந்து விட்டது. அவர்கள் தொகுதி மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தால் நிச்சயம் சுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களிக்க தான் போகிறார்கள்.

அப்படி சீரழிப்பவர்கள் என்றால் உங்கள் ஆட்சியில் சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டியது தானே... சுயேட்சை வேட்பாளர்களுக்கு போட்டியிட தடை என்று.

மைக் கிடைத்து விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவதா? இது உங்களுக்கே நியாயமாக படுகிறதா?

April 13, 2009

பண்டிகை கால பகட்டு பக்தி ஏன்


கடந்த வெள்ளி அன்றும் நேற்றும்(12.04.09) நான் உரையாடியவர்கள் எல்லாம் என்னிடம் கேட்ட பொதுவான ஒரு கேள்வி "ஆலயத்திற்கு சென்றாயா" என்பதே?

பண்டிகைக் காலங்களில் மட்டும் தேவாலயங்கள் வழக்கத்திற்கு மாறாக நிரம்பி வழிவதையும்; அன்று வரை பாரா முகங்களாக இருந்த பல முகங்களையும் பார்க்க நேரிடுவதும் உண்டு.இது பிற சமய வழிபாட்டு தலங்களில் எப்படி என தெரியவில்லை.என்றாலும் நண்பர்களிடம் விசாரித்த வரையில் பெரும்பாலும் அங்கும் இதே நிலை தான் என தெரிய வருகிறது.

வருடத்தின் பிற நாட்களில் வழிபாட்டிற்கு செல்லவில்லை என்றால் கூட வீட்டிலும்,நண்பர் வட்டாரத்திலும் என்ன ஏது என கேட்க ஒருவருமிருக்க மாட்டார்கள்.ஆனால் பண்டிகை காலங்களில் வழிபாட்டிற்கு செல்லவில்லை என்றால் போதும் உடனே கேள்விகளால் துளைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

என்னமோ அன்று தான் இறைவன் இம்மண்ணுலகிற்கு இர(ற)ங்கி வருவது போன்ற தோரணையை ஏற்படுத்தி விடுவர்

சமயங்கள் சொல்லும் சத்திய சிந்தனைகளையோ,நீதி நியாயங்களையோ நடைமுறைப் படுத்த முயல்பவர் இங்கு வெகு சிலரே.வழிபாட்டில் பங்கு கொண்டால் மட்டும் போதும் அவர்களுக்கு.அதுவும் பண்டிகைக் காலம் அல்லது விசேஷ வழிபாடு என்றால் நிச்சயம் செல்ல வேண்டும் என்பது அவர்கள் அகராதியில் எழுதப்பட்ட ஒன்று.

இறைவன் கருணை வடிவில்,அன்பின் உருவமாய் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பதே உண்மை என நான் கருதுகிறேன். அதனை விட்டு விட்டு ஒரு நான்கு சுவருக்குள் நுழைந்தால் அல்லது ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு தலத்திற்கு சென்றால் இறைவனின் தரிசனம் கிடைக்கும் என்பதை நான் நம்பவில்லை.(விவிலியத்தில் கூட ஒரு இடத்தில் நீங்களே அந்த ஆலயம் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது)நம்மையும் நம்மைச் சார்ந்து இருக்கிறவர்களையும் தீமையிலிருந்து விலக்குதலே உண்மையான வழிபாடு.

வழிபாட்டிற்கு செல்வதை நான் குறை சொல்லவில்லை,செல்லக்கூடாது எனவும் சொல்லவில்லை.ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட தலத்திற்கு மட்டும் சென்றால் இறைவனை தரிசிக்கலாம் என்ற நம்பிக்கை ஏன் என்ற கேள்வி மட்டுமே என் மனதில் மையம் கொண்டிருக்கிறது.

பல வழிபாட்டு தலங்களில் விசேஷ வழிபாடுகளின் போது கூட்ட நெரிசலில் சிக்கி மாண்டவரையும் இப்பாரத பூமி பார்த்தவள் தானே!

அதோடு பண்டிகை காலங்களில் ஒலி பெருக்கிகளின் தொல்லை சொல்லி மாளாது.எந்த சமயத்தைச் சார்ந்த பண்டிகை ஆனாலும் வழிபாடு ஆனாலும் ஒலி பெருக்கிகள் மூலம் அவர்கள் தரும் இம்சை பெரும் இம்சை.இறைவனை வழிபடுகிறவர்கள் என்ன காரணத்திற்காக ஒலி பெருக்கிகளில் கூச்சல் போடுகிறார்கள் என்பது தான் விடை தெரியாத கேள்வி.

அருகாமையில் எவர் இருக்கிறார்,நோயாளிகள் இருக்கின்றனரா?வயது முதிர்ந்தவர்கள் இருக்கின்றனரா?தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் மாணவர்கள் இருக்கினரா என ஒன்றும் யோசிப்பதில்லை.

ஒலிபெருக்கி வைத்து ஊரெல்லாம் கேட்கும்படி பிரச்சாரம் செய்யுங்கள் என அனைத்து சமய வழிபாட்டு நூல்களிலும் எழுதப்பட்டிருக்கிறதோ என்னமோ!

பிறர் தேவை அறிந்து அருளும் உதவியே நாம் செய்யும் உண்மையான வழிபாடாக இருக்கவியலும்.
அல்லாமல் வழிபாட்டு தலங்கள் மற்றும் ஒலிபெருக்கிகளைக் கொண்டு இறைவனை வழிபடலாம் என நினைப்பது சரியென படவில்லை.

April 12, 2009

ஆவேச பிரச்சாரங்களின் மத்தியில் ஒரு அமைதியான பிரச்சாரம்

15 ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் எந்த கட்சியைச் சார்ந்த தலைவராகட்டும்,போட்டியிடும் வேட்பாளராகட்டும் பிற கட்சியினரை அல்லது அவர்களது கொள்கைகளை குறை சொல்லாத மேடைகளே இல்லை.

அதோடு பெரும்பாலானோர் தனி மனித தாக்குதல் தான் செய்கிறார்கள் இது குறித்து எனது முந்தைய பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.மக்களுக்கு நன்மை பயக்கும் நலத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்பவர்கள் வெகு சிலரே.

இவர்கள் அனைவரிலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பிரச்சாரம் செய்யும் ஒருவரும் இருக்கத்தான் செய்கிறார் என்றால் ஆச்சரியமாகத் தானிருக்கிறது.

பிரியங்கா தான் அவர்.மிக மிக எளிமையாக வருகிறார்.எவரையும் சாடுவதில்லை.தொகுதியின் மக்களிடம் அன்போடு அளவலாடுகிறார்.மக்களோடு மக்களாக ஒன்று சேர்ந்து கருத்துக்கள் பரிமாறுகிறார்.

இவரது அன்னை சோனியா கூட இத்தனை சாதுவாக பேசியதில்லை என்றே நினைக்கிறேன்.

அமேதியிலும்,ரேபரேலியிலும் 11.4.09 அன்று அவர் பேசியது இங்கே காணொளியாக.



அவரது பேச்சின் சாராம்சங்கள் சில

1.உங்களுக்கு நன்மை செய்பவர் எவர் என்பதை அறிந்து அவர் மேல் நம்பிக்கை இருந்தால் வாக்களியுங்கள்

2.இந்த தேசம் எந்த அரசியல்வாதிகளுடையதும் அல்ல இது உங்கள் தேசம்

3.உங்கள் தொகுதியை முன்னேற்ற பாதையில் இட்டு செல்பவர் யார் என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்.

அரசியல்வாதியாக இல்லாதிருப்பதும் அமேதியில் அவரின் அமைதியான பேச்சிற்கு காரணமாகி இருக்கலாம்.இவரைப் போன்றவர்கள் தீவிர அரசியலுக்கு வர வேண்டும்.வாழ்த்துக்கள் பிரியங்கா மேடம்.

April 11, 2009

தேர்தல் வாக்குறுதிகள் இப்படியும் இருக்கலாமோ!

தேர்தலும் நெருங்கி விட்டது.இந்த முறை கட்சிகள் என்ன மாதிரியான தேர்தல் வாக்குறுதிகள் முன் வைப்பார்கள் என்ற ஒரு சிந்தனை.

திராவிட முதியவர் கழகம்

1.எங்களுக்கு வாக்களிப்பீர்கள் என்றால் வாரம் ஒருமுறை ஒவ்வொரு வீட்டிற்கும் கழக கடிதம்/இரங்கற் பா கலரில் அனுப்பி வைக்கப்படும்.

2.தமிழக நலன் கருதி எம்.பிக்கள் பதவியேற்றதுமே ராஜினாமா செய்யச் சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்படும்(நன்கு கவனிக்க... தீர்மானம் மட்டும் தான் நிறைவேற்றப்படும்)

3.குடும்பங்களில் சண்டை போட்டு சொத்திற்காக மீண்டும் இணைபவர்களுக்கு இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படும்

அம்மா திராவிடம் முன்னேற்றும் கழகம்

1.ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவிகளின் பெயருக்கு கீழ் தான் குடும்பத் தலைவர்களின் பெயர்கள் அச்சடிக்கப்பட வேண்டும் என்ற அவசர சட்டம் அமுலாக்கப்படும்.

2.பெண்கள் அனைவரையும் அம்மா என்றழைக்கவும் அவர்கள் காலில் ஆண்கள் விழவும் சட்டம் கொண்டு வரப்படும்.

இதயமில்லா தேசிய காங்கிரேசு

1.தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளனும் ஒரு முறையாவது இல்லையென்றால் ஒரு நிமிடமாவது கட்சியின் மாநில தலைவராக பதவியேற்க பரிந்துரைக்கப்படும்.

2.அவதியுறும் தமிழினத்தை காக்க நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் (அதே நாளில் டில்லியில் இருந்து ரணம் ஏற்படுத்தும் வெடிபொருட்களும் அனுப்பப்படும்)

3.2011 ல் மாநிலத்தில் காமராஜி ஆட்சி அமைத்து திராவிட முதிய கழகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.(மன்னிக்கனும் வாக்காளர்களே... 2111 என வாசிக்கவும்)

பாட்டாளி மகன் கட்சி

1.முதலில் ஒரு அறிவிப்பு... எங்கள் சின்னம் வாக்காளர்களுக்கு எளிதில் நினைவில் இருக்கும் வகையில் குரங்கு சின்னமாக மாற்றப்பட்டிருக்கிறது.

2.மகனை மத்திய மந்திரி ஆக்கி அவதியுறும் தமிழ் உடன்பிறப்புகளின் அல்லல் உடனே துடைக்கப்படும்

3.திட்டங்களை எவர் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து மக்கள் சார்பாக அறிக்கை விடப்படும்.

மறுபுரட்சி திராவிட முனங்கலேற்ற கழகம்

1.உலகமே உற்றுநோக்கும் விதம் தமிழக நலன் காக்க! உணர்ச்சிப்பூர்வ கருத்துகள் முனங்கப்படும்.

2.சிறைச்சாலையில் மக்கள் குறை தீர்க்கும் கவுண்டர் ஒன்று திறக்கப்படும்.

3.தமிழின எதிரிகள் தமிழகத்திலிருந்து துரத்தப்பட ஆயுதம் ஏந்தப்படும்

இடவலசாரி கட்சி

1.மக்கள் நலனிற்காக குரல் கொடுத்து ஆட்சியின் இடையிலேயே மக்கள் நலன் கருதி ஆளுங்கட்சிக்கு ஆதரவும் விலக்கப்படும்

2.தமிழர் பண்பாட்டிற்காக சிவப்பேறிய எங்கள் கொள்கைகளையும் விட தயாராக இருக்கிறோம்.

எந்த தேர்தலிலும் இல்லாத படி இந்த முறை அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து முன்வைக்கும் வாக்குறுதி:பொதுமக்களின் பாதங்கள் மண் மீது நடக்க வேண்டியவை அல்ல,மலர்கள் மீது. அதனால் காலணிகளுக்கு குறிப்பாக ஷூக்களுக்கு கட்டாய தடை விதிக்கப்படும்.

-------------------------

யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கே க்ளிக்கவும்

April 09, 2009

தேர்தல்-பிரச்சார கத்தலும்,கருத்துகளும்,காமெடிகளும்

நடக்கவிருக்கும் 15ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான கட்சிகளின் பீரங்கி பிரச்சாரத்தையும்,கூப்பாட்டையும்,கத்தலையும் உலகமே வேடிக்கைப் பார்த்து வருகிறது.

பீரங்கியாவது உடலைத் தான் துளைக்கும்; இங்கோ சிலரின் பீரங்கி பிரச்சார கருத்துக்கள் பிறரின் மனதை துளைக்கும் வீரியம் நிறைந்ததாக இருப்பது வருத்தத்திற்குரியது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழித்து பேசும் எவரையும் ரோலரை ஏற்றி நசுக்குவேன் என மத்திய மந்திரி பதவியில் இருப்பவரும் மதச் சார்பற்றவன் என காட்டிக் கொண்டிருப்பவருமான லாலு பகிரங்கமாக கூச்சலிடுகிறார்.

வருணின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும்,லாலுவின் கருத்து,ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வருண் கூறிய கருத்துகளுக்கான எதிர் பதிலே என்பதும் மறுக்க முடியாத விஷயம்.

அக்கருத்துக்களினால் இருவருமே கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.(மற்றொரு வழக்கில் வருண் இன்னும் விடுவிக்கப்படவில்லை)இதில் காமெடி என்னவென்றால் தேர்தல் ஆணையத்திற்கு இவர்களை தண்டிக்கும் உரிமை இல்லையாம்;தண்டனைக்கான சட்டமும் இவர்கள் கைவசம் இல்லை.

பின்னே எதற்கய்யா அரசு சாரா அமைப்பு என்று பாவனா காட்டுகிறீர்கள்.வெறுமனே விதிமுறைகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்??

இலங்கையில் ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என நேற்று வைகோ அய்யா அவர்கள் வீறு கொண்டு பேசியிருக்கிறார்.அவர்கள் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அதே மேடையில் இருந்திருக்கிறார்கள்.இதனை தமிழகக் கட்சிகள் எவையும்(ஆளுங்கட்சி உட்பட) கண்டித்ததாக தெரியவில்லை.

இப்படியெல்லாம் பேசுவதினால் தமிழகத்திற்கு என்ன நன்மை பயக்க போகிறது!(அல்லலுறும் தமிழர்களுக்கு குரல் கொடுங்கள்! அதை விட்டு விட்டு...)

(தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவு அதிகமென்றால் ம.தி.மு.க விற்கு வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்கள் மட்டுமே தமிழகத்தில் இருப்பதற்கு என்ன காரணம் என ஆங்கில ஊடகங்கள் சில கேள்வி எழுப்புகின்றன)

சிறுபான்மையினருக்கு எதிராக விரல் நீட்டும் எவரின் விரல்களையும் வெட்டி வீசுவேன்;டெல்லியில் ஆந்திர காங்கிரஸ் காரிய குழு தலைவர் ஸ்ரீனிவாஸ் இரு தினங்களுக்கு முன்னர் கூறியது இது.

இப்படி வெறி பிடித்தவர்கள் தான் நாளைய மந்திரிகள்,நாடாளப் போகிறவர்கள்!!

பிரதமர் சிங் தன்னிச்சையாக முடிவெடுக்கத் தெரியாதவர்,நோஞ்சான் பிரதமர்,ஒன்றிற்கும் லாயக்கில்லாதவர் என பா.ஜ.க முழங்காத பிரச்சார மேடைகளே இல்லை.பதிலுக்கு காங்கிரஸ் பக்கமிருந்து,அத்வானி 1992 ல் என்ன செய்தார் என இந்தியாவிற்கே தெரியும் என்கிறார்கள்.

மேலும் காங்கிரஸ் 2002 கலவரத்தையும் அதற்கு பதிலாக பா.ஜ.க 1984 கலவரத்தையும் கூறி ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதயே அனைத்து பிரச்சார மேடைகளும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

கூட்டணி விட்டு கூட்டணி தாவுவதிற்கு எந்த கட்சியும் விதி விலக்கல்ல(இது குறித்த எனது முந்தைய பதிவு இங்கே) மாநில கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க இயலாத நிலைமை இந்தியாவில் ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணமோ?

தேர்தலில் போட்டியிட டைட்லருக்கு அனுமதியளித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பஞ்சாப்பில் இருந்து சோனியாவிற்கு (உபயோகப்படுத்தப்பட்ட) ஷூக்கள் அடங்கிய பெட்டி ஒன்றை அனுப்பவிருப்பதாக அகாலிதளம் அறிவித்திருக்கிறது.

புஷ்ஷை நோக்கி எறியப்பட்ட ஷூ நிகழ்வு சீக் சமூகத்தைச் சார்ந்த நிருபர் ஒருவரை அது போன்று செய்யத் தூண்டியது என்றால் பிப்ரவரியில் பெண்கள் ராம் சேனாவிற்கு chaddi அனுப்பிய சம்பவம் இப்போது அகாலிதளத்தை ஷூ அனுப்ப தூண்டியிருப்பதாகவே படுகிறது!! (எப்பிடித் தான் யோசிக்கிறாங்களோ)

நேற்று (8.4.09) அத்வானி,முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் அனைவருமே மிகச் சரியாக 12.39 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.அந்த நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தால் வெற்றி நிச்சயம் என நம்புகிறார்களாம்.

ராமாயணத்தில் ராவணனை ராமன் 12.39 மணிக்கு வீழ்த்தினான் எனவே அந்த சமயத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தால் நிச்சயம் வெற்றி அடைவோம் என்கிறது பா.ஜ.க.

(அப்போ எல்லா தொகுதியிலும் இந்த டைம்லயே வேட்புமனு தாக்கல் செய்தா ஆட்சிய பிடிச்சிரலாம்!!)

April 08, 2009

நினைவுகள் அழிவதில்லை (அயல் நாட்டு வாழ்க்கை)















ரந்து விரிந்த பல தூர
பசுமைப் புல்வெளியும்

ரவசப்படுத்தும் பல நூறு
பறவைகளின் பாடலும்

தில் அளிக்கவே-எதிரொலியால்
தில் அளிக்கவே படைக்கப்பட்ட னை உயர மலைகளும்

ருவம் மாறினாலும்
பொய்க்காத தென்றலும்

கலிலே பகைவனானாலும்
மாலையில் மயக்கும் மஞ்சள் வெயிலும்

பிரிந்த எவரையோ தேடும் நோக்கில்
துள்ளிப் பாயும் சிறு நீரோட்டமும்

பிரிந்த எதனையோ நினைத்து
பிரமையான என்னை அரவணைத்தன அன்று.

திலுக்கு நான் அவற்றை
அரவணைக்க நினைக்கையில்

ல்லாத ஒன்றை
ன் தேடுகிறாய் என
.சி அறையின் சுவர்கள்
ளனமாய் பார்ப்பதாய் உணர்கிறேன்-இன்று

நினைவுகள் அழிவதில்லையாம்-அவை
நெஞ்சில் அழியாதிருப்பதால் தான் நினைவுகளாகின்றனவோ!


நினைவுகளால் மட்டுமே
நகர்த்துகிறேன் வாழ்க்கையை
நிர்ப்பந்தத்தால்-அயல்நாட்டில்
------------------------------------
youthful விகடனில் படிக்க இங்கே க்ளிக்கவும்

April 06, 2009

விகடனுக்குமா டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பஞ்சம்!

தமிழ் சினிமாக்களில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகள் வெறும் வாயசைப்பதோடு சரி,மற்றவை எல்லாம் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளால் பேசி முடிக்கப்படுகின்றது.இது தான் கடந்த 15 வருடமாக நடந்து வருகிறது என்றே நினைக்கிறேன்.

கடந்த 10 வருடமாக தமிழ் சினிமா நாயகிகளுக்கு தனது குரலால் பெருமை சேர்த்தவர்களில் சவிதா குறிப்பிடத்தக்கவர்.டப்பிங் ஆர்ட்டிஸ்டுக்கான தமிழக அரசின் முதல் விருதை வென்றவரும் சவிதா தான்.

1998 முதல் கவனித்து கேட்டு வருகிறேன் டப்பிங் கலைஞர் சவிதாவின் குரலை.நல்ல குரல்வளம் கொண்டவர்.சிம்ரன் முதல் அசின் வரை பலருக்கு குரல் கொடுத்திருக்கிறார் சவிதா.

இவரது உச்சரிப்புகளில் பெரிதாக தவறு காணப்படுவதில்லை அதோடு ரசிக்கும் படி இருக்கிறது,என்றாலும் பல நாயகிகளுக்கும் இவரது குரலையே கேட்டு கேட்டு சலித்து போனதாக உணர்கிறேன்.

பல நேரங்களில் சின்னத் திரையிலோ,பெரிய திரையிலோ சினிமா ஓடிக்கொண்டிருந்தாலும் கண்களை மூடி குரலை மட்டும் ரசிக்கும் (லூசுத்தனமான?) பழக்கம் எனக்கு உண்டு.

அந்த வகையில் விகடன் குழுவின் முதல் திரைப்படமான 'சிவா மனசில சக்தி' திரைப்படத்தின் முன்னோட்டத்தை தொலைக்காட்சியில் கடந்த வாரம் கண்டும் காணாமல்(அதாங்க கண்ண மூடிக்கிட்டு) ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நாயகி சக்தி பேசியதுமே புரிந்தது சவிதாவின் குரல் தான் என,முன்னோட்டத்தை மேலும் இரு தடவை(நாட்கள்) கூர்ந்து கேட்டதும் அது டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவிதாவின் குரலே தான் என தெளிவாகியது.

தமிழ் திரைப்படத் துறையில் தமிழ் பேசுபவர்களுக்கு பஞ்சம் போலும் என நினைத்துக் கொண்டேன்.ஆனால் விகடனுக்குமா இந்த கதி என்ற போது தான் சிறிய நெருடல்.

வேற்று மாநில நாயகிகள் சிலர்(ஏன்,நாயகர்கள் கூட!) குறிப்பாக கேரளத்திலிருந்து வருபவர்கள் அவர்களது சொந்த குரலிலேயே டப்பிங் பேசுகிறார்கள்(நயன் நிச்சயமாக இல்லை என நினைக்கிறேன்!)

இந்த நிலையில் தமிழ் தெரிந்த நாயகிகள் பலர், பிறரின் குரலிலேயே காலத்தை தள்ளுகிறார்கள். தமிழ் நாயகிகள் எல்லோருக்கும் தமிழில் தெரிந்த ஒரே வார்த்தை "பண்ணி"யாக தான் இருக்க வேண்டும்;(பேட்டிகளில் இப்படித் தானே பேசுகிறார்கள்)மேக்கப் பண்ணி,ஆக்ட் பண்ணி,டைரக்ட் பண்ணி,ஷூட் பண்ணி,காமெடி பண்ணி,மியூசிக் பண்ணி,சாங் பண்ணி,டான்ஸ் பண்ணி... அட போங்கப்பா.

பாவம் 'பண்ணி'யை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்.

(சவிதாவை குறித்து அறியாதவர்கள்,தங்கம் ஆன்லைன் இணையத்திற்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து மேலும் அறிந்து கொள்ளலாம்.வாழ்த்துக்கள் சவிதா மேடம்)

http://www.thangamonline.com/Cinema%20Interviews/files/SavithaInterview.htm

April 04, 2009

பலசரக்கு-இந்த வாரம் நிகழ்ந்ததும்,புரிந்ததும்

மார்ச் 30 அன்று ஐவரி கோஸ்ட் மற்றும் மலாவி இடையே நடக்கவிருந்த 2010ன் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டியை காண முண்டியடித்த ரசிகர்கள் 22 பேர் பலியானார்கள்.

போட்டியை டிக்கெட் இன்றி காணலாம் என்ற அறிவிப்பினால் குவிந்த ரசிகர்களால் ஏற்பட்ட தள்ளலால் நிகழ்ந்ததே இந்த சம்பவம்.எனினும் ஆட்டம் ஒத்தி வைக்கப்படவில்லை.

ஆப்பிரிக்கர்களின் கால்பந்து மோகம் இப்படியிருக்கிறது.

-----------------------------------



மலாவியிலிருந்து மீண்டும் ஒரு குழந்தையை(மெர்சி ஜேம்ஸ்) தத்து எடுக்கவிருந்த பாப் பாடகி மடோனாவிற்கு அந்த நாட்டின் நீதிமன்றம்,தத்து எடுக்கிறவர்கள் அவர்களது நாட்டில் குறைந்தது 18 மாதங்கள் வாழ்ந்திருக்க வேண்டுமென்று காரணம் காட்டி03.04.009 அன்று மறுப்பு தெரிவித்துள்ளது.

வாழ்வு கொடுக்கிறோம் என்கிறவர்களையும் இப்படியா துரத்துவது.

----------------------------------------------

இங்கிலாந்தில் ஜேட் கூடியின் அடக்க ஆராதனை சனிக்கிழமை 4.4.9 அன்று நடந்தது.ஜேட்டின் மரணம் உலகம் முழுவதும் கர்ப்பப்பை புற்று நோயைக் குறித்த விழிப்புணர்வை பல பெண்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

ஜேடின் மகன்கள் பாபி,ஃப்ரெடி இருவரும் ஆஸ்திரேலியாவிலிருந்து தாயாருக்கு Bottle ஒன்றில் நெஞ்சம் நெகிழும் செய்தியை அனுப்பியிருக்கின்றனர்.ஊடகங்களின் பார்வையிலிருந்து சிறுவர்களை விலக்கவே ஆஸ்திரேலியாவில் அவர்களது தந்தையின் கவனிப்பில் விடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.


அவரது ஆன்மா சாந்தியடையட்டும்

-------------------

ஃபார்முலா ஒன் சீசனின் முதல் ஆஸ்திரேலிய பந்தயத்தில் மூன்றாவதாக வந்ததாக அறிவிக்கப்பட்ட லூயிஸ் ஹாமில்டனின் புள்ளிகள் அனைத்தும் 2.4.09 அன்று பறிக்கப்பட்டன. பந்தயத்தில் யானோ ட்ரூலி என்பவர் விதிமுறைகளை பின்பற்றாமல் தன்னை முந்திச் சென்றதாக சொன்ன தவறான தகவலினிமித்தம் இந்த தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.


எனது வாழ்க்கையின் மிக மோசமான தினம் இது எனவும்,அவரது மெக்லாரன் அணியிலிருந்து கிடைத்த தவறான தகவலால் நானும் அப்படி சொல்ல வேண்டியதாயிற்று எனவும் மனம் நொந்திருக்கிறார் ஹாமில்டன்.

-----------------------

வருண் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டிருப்பது அரசியல் உள் நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது.இந்த விஷயத்தில் மேனகாவும் மாயாவும் குடுமிப்புடி சண்டை போடாத குறை தான்.
-------------------

சஞ்சய் தத் தேர்தலில் நிற்க உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது சரியான முடிவாகவே படுகிறது.ஆனால் டைட்லர் அவர்கள் 1984 கலவர வழக்குகளில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தைத் தான் ஏற்படுத்துகிறது.

--------------------

மேற்கு இந்திய தீவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடர் மற்றும் T20 போட்டிகளை இழந்த இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டிகளில் 3-2 என்று ஆறுதல் வெற்றி பெற்றது. இறுதி ஆட்டத்தில் ஃப்ளின்டாப் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை நிகழ்த்தினார்.

---------------------

03.04.09அமெரிக்கா,மயாமியில் நடந்து வரும் சோனி எரிக்சன் ஓபன் அரையிறுதி போட்டியில் நோவாக் ஜோக்கோவிக் உடனான போட்டியில் தோல்வியுறும் தருவாயிலிருந்த ரோஜர் ஃபெடரர் கோபத்தில் டென்னிஸ் மட்டையை தரையில் அடித்தே உடைத்து விட்டார். டென்னிஸ் ஆட்டங்களில் இது ஒன்றும் புதிதல்ல என்றாலும் ஃபெடரர் இப்படி நடந்து கொள்வது அபூர்வம்.



-----------------

பாகிஸ்தானில் தினமும் தொடரும் குண்டு வெடிப்புகள் வருத்தத்தை ஏற்படுத்துகின்றன.அதோடு பாக்கின் பாதுகாப்பு முறைகள் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளன.

இதனிடையில் இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வரும் செய்திகள் தேர்தல் சமயத்தில் என்னென்ன இழுத்து வைக்கப் போகிறதோ!!
----------------

அரபியில் அரைகுறை ஆதலால் அரபி படிக்கலாமென அரபி நண்பர் ஒருவர் வாங்கி தந்த English-Arabic புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன்.புத்தகத்தின் பின்புறம்! நண்பர் எனது பெயரை எழுதியிருந்தார்.ஏனாக இருக்கும் என அப்போது புரியவில்லை.

சரி இருக்கட்டும் என படிக்கத் தொடங்கினேன்,ஆரம்பத்திலேயே வழக்கமான மொழி புத்தகங்களில் இருக்கும் எழுத்து வரிசையும்,எண் வரிசையும் இன்றி உரையாடல் இருந்தது கண்டு ஆச்சரியப்பட்டேன்.கொஞ்சம் கடினமாகவே இருந்தது.இரு பக்கங்கள் முடித்ததும் பக்க எண்ணைப் பார்த்ததும் அதிர்ச்சி ஆயிற்று;186 என (அரபியில்) இருந்தது.(அரபியிலிருந்த அந்த நம்பரை கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சதே பெரிய விஷயம்)

அப்புறம் தான் புரிந்தது நான் கடைசிப் பக்கத்திலிருந்து படித்துக் கொண்டிருக்கிறேன் என்று.அரபி வழக்கமாக வலமிருந்து இடமாக அல்லவா படிப்பார்கள் என அப்போது தான் நினைவு வந்தது.இதை அறியாமல் நான் அரபி நண்பர் எனது பெயரை பின்புறம் எழுதியிருக்கிறார் என்றெல்லாம் தவறாக நினைக்க வேண்டியதாயிற்று. சு நா பா நா... யாரும் பாக்கலடா அப்பிடின்னு(வடிவேலு பாணியில்)நினைத்துக் கொண்டு வலமிருந்து இடமாக படிக்க ஆரம்பித்தேன்.

அமெரிக்கால அருவா!இந்தியால தோட்டா!

இல்ல... இல்ல.. அமெரிக்கால தோட்டா இந்தியால அருவா,ரைமிங்கா இருக்கட்டுமேனு தான் தலையங்கத்த மாத்திப் போட்டேன்.
அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கி தோட்டாக்களுக்கு மடிந்து வரும் உயிர்கள் கவலை தருவதாக இருக்கின்றன.நேற்றும் (3.4.2009) நியூயார்க் பிங்காம்டன் பகுதியின் சமூக மையம் ஒன்றில் புதிய அமெரிக்க குடியேறிகள்(அந்த குடி அல்ல! இது Immigrants) 13 பேரை சுட்டுக் கொன்று தன்னைத் தானே சுட்டு கொண்டு தற்கொலையும் செய்து கொண்டிருக்கிறான் ஒருவன்;அதுவும் பகலில்.

கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்காவில் மக்கள் கூட்டத்தை குறி வைத்து நிகழ்ந்திருக்கும் ஐந்தாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது என msnbc செய்தி தெரிவிக்கிறது.


சம்பவம் நிகழ்ந்த மையத்தில் அமெரிக்கர்கள் அல்லாத பிற நாட்டை சார்ந்தவர்கள் அமெரிக்க குடியேற்ற உரிமையை பெறுவதற்கான வகுப்புகள் நடந்து வந்திருக்கின்றன.

மார்ச் 29 அன்றும் கலிஃபோர்னியாவில் இந்தியர் ஒருவர் குடும்பப் பிரச்சினைகளால் தனது குடும்பத்தின் ஆறு பேரையும் தோட்டாவினால் கொன்று இறுதியாக தன்னையும் சுட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் இவ்வாறு தோட்டாவினால் அநியாயமாக உயிர்கள் மடிகின்றது என்றால் நம் ஊர்களும் இது போன்ற கொலைகளுக்கு விலக்கல்ல.

அங்கு தோட்டா என்றால் இங்கு அரிவாள் பேசுகிறது.அவ்வளவு தான் வித்தியாசம். அமெரிக்க திரைப்படங்களில் துப்பாக்கித் தோட்டாக்கள் பாயாத திரைக்கதைகளே இல்லை எனலாம்.அது போன்று இந்திய திரைப்படங்களில் அரிவாள் ஆக்கிரமிப்பு(தற்போது சில படங்களில் தோட்டாக்களும் வந்து விட்டன)

இவையும் ஒருவரை சினிமாவில் வருவது போன்ற அக்கிரமங்கள் செய்யத் தூண்டுகிறது என்றால் மிகையல்ல.

இது போன்ற கொலைகளை செய்யத் துணிபவர்கள்,சமுதாயத்தில் அல்லது குடும்பத்தில் ஏதேனும் ஒரு வழியில் புறக்கணிக்கப்பட்டவராக இருக்கவே சாத்தியம்.

இல்லையென்றால் தான் எதிர்பார்த்தது ஏதும் நிகழாமல் ஏமாற்றமடைந்தவராக இருக்க வேண்டும்.குடும்பங்களில்,நண்பர் வட்டாரங்களில் சரியான முக்கியத்துவம் கொடுக்கப்படாததும் காரணமாக இருக்கலாம்.

இவைகளினால் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் அதன் விளைவாக அவர்களின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.விரக்தி நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்;அது அவர்களை கொலை செய்யவும் தூண்டுகிறது;அதோடு இவர்கள் தங்கள் வாழ்க்கையையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இவர்களைப் போன்றோர் எந்த நேரத்தில் என்ன மனநிலையில் இருப்பார்கள் என ஊகிப்பதே கடினம் என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்(Schizophrenia என்பது இதில் ஒருவகை மனநோய்)
(சென்னை,கீழ்பாக்கம் மனநிலை மருத்துவமனையில் இது போன்ற தவறிழைத்து அனுமதிக்கப்பட்டிருக்கிறவர்களை குறித்து படிக்கும் வாய்ப்பு 2001 ல் கிடைத்தது)

பெரும்பாலும் குடும்பங்களில் காணப்படும் சிறிய மன சங்கடங்களால் ஆரம்பிக்கின்ற பிரச்சினைகளே பிற்காலத்தில் இது போன்ற பெரும் பாதிப்புகளுக்கும் காரணமாகலாம்.

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்ற சொல்லின் படி ஒரு நபர் கொண்டிருக்கும் நட்பு வட்டாரமும் அவர்கள் செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.

எனவே நமது குடும்பங்களிலும்,நட்பு வட்டாரங்களிலும் காணப்படும் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு செவி மடுத்து அவற்றை முளையிலேயே கிள்ளி எறிவோமென்றால் நமது சமூகத்தையும் நமது குழந்தைகளையும் ஆரோக்கியமானதாக நாம் கொள்ள முடியும்.

இல்லையென்றால் இது போன்று கொல்லப்படுதலையும் கொல்லுபவர்களையும் நாமும் காண நேரிடும்.
Related Posts with Thumbnails