April 13, 2009

பண்டிகை கால பகட்டு பக்தி ஏன்


கடந்த வெள்ளி அன்றும் நேற்றும்(12.04.09) நான் உரையாடியவர்கள் எல்லாம் என்னிடம் கேட்ட பொதுவான ஒரு கேள்வி "ஆலயத்திற்கு சென்றாயா" என்பதே?

பண்டிகைக் காலங்களில் மட்டும் தேவாலயங்கள் வழக்கத்திற்கு மாறாக நிரம்பி வழிவதையும்; அன்று வரை பாரா முகங்களாக இருந்த பல முகங்களையும் பார்க்க நேரிடுவதும் உண்டு.இது பிற சமய வழிபாட்டு தலங்களில் எப்படி என தெரியவில்லை.என்றாலும் நண்பர்களிடம் விசாரித்த வரையில் பெரும்பாலும் அங்கும் இதே நிலை தான் என தெரிய வருகிறது.

வருடத்தின் பிற நாட்களில் வழிபாட்டிற்கு செல்லவில்லை என்றால் கூட வீட்டிலும்,நண்பர் வட்டாரத்திலும் என்ன ஏது என கேட்க ஒருவருமிருக்க மாட்டார்கள்.ஆனால் பண்டிகை காலங்களில் வழிபாட்டிற்கு செல்லவில்லை என்றால் போதும் உடனே கேள்விகளால் துளைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

என்னமோ அன்று தான் இறைவன் இம்மண்ணுலகிற்கு இர(ற)ங்கி வருவது போன்ற தோரணையை ஏற்படுத்தி விடுவர்

சமயங்கள் சொல்லும் சத்திய சிந்தனைகளையோ,நீதி நியாயங்களையோ நடைமுறைப் படுத்த முயல்பவர் இங்கு வெகு சிலரே.வழிபாட்டில் பங்கு கொண்டால் மட்டும் போதும் அவர்களுக்கு.அதுவும் பண்டிகைக் காலம் அல்லது விசேஷ வழிபாடு என்றால் நிச்சயம் செல்ல வேண்டும் என்பது அவர்கள் அகராதியில் எழுதப்பட்ட ஒன்று.

இறைவன் கருணை வடிவில்,அன்பின் உருவமாய் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பதே உண்மை என நான் கருதுகிறேன். அதனை விட்டு விட்டு ஒரு நான்கு சுவருக்குள் நுழைந்தால் அல்லது ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு தலத்திற்கு சென்றால் இறைவனின் தரிசனம் கிடைக்கும் என்பதை நான் நம்பவில்லை.(விவிலியத்தில் கூட ஒரு இடத்தில் நீங்களே அந்த ஆலயம் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது)நம்மையும் நம்மைச் சார்ந்து இருக்கிறவர்களையும் தீமையிலிருந்து விலக்குதலே உண்மையான வழிபாடு.

வழிபாட்டிற்கு செல்வதை நான் குறை சொல்லவில்லை,செல்லக்கூடாது எனவும் சொல்லவில்லை.ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட தலத்திற்கு மட்டும் சென்றால் இறைவனை தரிசிக்கலாம் என்ற நம்பிக்கை ஏன் என்ற கேள்வி மட்டுமே என் மனதில் மையம் கொண்டிருக்கிறது.

பல வழிபாட்டு தலங்களில் விசேஷ வழிபாடுகளின் போது கூட்ட நெரிசலில் சிக்கி மாண்டவரையும் இப்பாரத பூமி பார்த்தவள் தானே!

அதோடு பண்டிகை காலங்களில் ஒலி பெருக்கிகளின் தொல்லை சொல்லி மாளாது.எந்த சமயத்தைச் சார்ந்த பண்டிகை ஆனாலும் வழிபாடு ஆனாலும் ஒலி பெருக்கிகள் மூலம் அவர்கள் தரும் இம்சை பெரும் இம்சை.இறைவனை வழிபடுகிறவர்கள் என்ன காரணத்திற்காக ஒலி பெருக்கிகளில் கூச்சல் போடுகிறார்கள் என்பது தான் விடை தெரியாத கேள்வி.

அருகாமையில் எவர் இருக்கிறார்,நோயாளிகள் இருக்கின்றனரா?வயது முதிர்ந்தவர்கள் இருக்கின்றனரா?தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் மாணவர்கள் இருக்கினரா என ஒன்றும் யோசிப்பதில்லை.

ஒலிபெருக்கி வைத்து ஊரெல்லாம் கேட்கும்படி பிரச்சாரம் செய்யுங்கள் என அனைத்து சமய வழிபாட்டு நூல்களிலும் எழுதப்பட்டிருக்கிறதோ என்னமோ!

பிறர் தேவை அறிந்து அருளும் உதவியே நாம் செய்யும் உண்மையான வழிபாடாக இருக்கவியலும்.
அல்லாமல் வழிபாட்டு தலங்கள் மற்றும் ஒலிபெருக்கிகளைக் கொண்டு இறைவனை வழிபடலாம் என நினைப்பது சரியென படவில்லை.

18 comments:

FunScribbler said...

ஆஹா தமிழன் எட்வின், நச் என்று ஒரு பதிவு. ரொம்ம்ப சூப்பரா இருக்கு. இத பத்தி எழுதலாம்னு நானும் இருந்தேன். நீங்க ரொம்ப நல்ல எழுத்தீட்டீங்க!

FunScribbler said...

//என்னமோ அன்று தான் இறைவன் இம்மண்ணுலகிற்கு இர(ற)ங்கி வருவது போன்ற தோரணையை ஏற்படுத்தி விடுவர்//

//அதனை விட்டு விட்டு ஒரு நான்கு சுவருக்குள் நுழைந்தால் அல்லது ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு தலத்திற்கு சென்றால் இறைவனின் தரிசனம் கிடைக்கும் என்பதை நான் நம்பவில்லை//

//ரு குறிப்பிட்ட தலத்திற்கு மட்டும் சென்றால் இறைவனை தரிசிக்கலாம் என்ற நம்பிக்கை ஏன் என்ற கேள்வி மட்டுமே என் மனதில் மையம் கொண்டிருக்கிறது.//

அனைத்து அருமையான கருத்துகள் தோழரே! என் மனதில் பட்ட கருத்துகளை இவ்வளவு தெளிவா சொல்லிட்டீங்க. நானும் வீட்டுல சொல்லி பார்த்தேன்.. நம்மள முறைச்சு பாக்குறாங்க.. என்ன செய்ய :)

கிறிச்சான் said...

நெத்தியடி...ஊர்ல ஆலயம் பக்கம் போகாதவங்க நிறைய பேரு வெளிநாட்'ல வந்து தெரியாத பல பேர்கிட்ட பக்திமான்களாட்டம் நடிச்சுகிட்டு...ரெண்டு நாளா ஆலயத்துக்கு போனியான்னு உயிரை வாங்கீட்டு இருந்தாங்கப்பா...சிந்திக்க வேண்டிய விஷயம் ... கொள்ளாம் ...நல்லா இருக்கு!

துளசி கோபால் said...

சொன்னது முழுசும் அப்பட்டமான உண்மை.

பண்டிகை நாள், விடுமுறையாக இருப்பதால் கோவிலுக்குப் போய்வரலாம் எனத் தோன்றுகிறதோ என்னவோ!!!

முதலில் இந்த ஒலிபெருக்கிகளை, வழிபடும் இடங்களில் தடை செய்யணும்.

எட்வின் said...

நல்ல உள்ளங்கள் தமிழ்,கெர்ஷோம்,துளசி ஆகியோருக்கு நன்றி...
-----------------------------------
துளசி கோபால் said...

//பண்டிகை நாள், விடுமுறையாக இருப்பதால் கோவிலுக்குப் போய்வரலாம் எனத் தோன்றுகிறதோ என்னவோ!!!//

அதுவும் கூட காரணமாக இருக்கலாம் நண்பரே.ஆனாலும் பிற விடுமுறை நாட்களில் வழிபாட்டிற்கு வராதவர்கள் பண்டிகை என்றால் புதிய ஆடைகளை அணிந்து கொண்டு வந்து விடுவது உண்டு... இது நிச்சயமாக பகட்டே!

வழிபாட்டிற்கு போவதோடு சமயங்கள் சொல்லும் நீதி நியாயங்களை கொஞ்சமாவது கடைபிடித்தால் நல்லது.பலர் கடைபிடிப்பதில்லையே என்ற வருத்தமும் உண்டு.

சாஷீ said...

நல்ல பதிவு,,பேசப்படவேண்டியது ,,,,

Anonymous said...

’கடன்’ திருநாள்ணு ஒண்ணு இருக்குல்ல?

எட்வின் said...

கடன் திருநாள் என்றால் ???

ஹேமா said...

நல்ல யோசிக்கக்கூடிய பதிவு எட்வின்.அன்றைய தினம் மனம் சந்தோஷமாக இருக்கும்.மனம் அமைதியாக இருக்கும் என்பதாலும்,உறவினர் நண்பர்களைச் சந்திக்கும் தினம் என்பதாலும் இருக்கலாம்.

எட்வின் said...

நன்றி ஹேமா.

நீங்கள் சொல்வதும் கூட காரணமாக இருக்கலாம். பிற நாட்களில் வழக்கமான வழிபாட்டிற்கு வராத பலர் அன்று வந்து விடுவது ஏன் என தான் புரியவில்லை.

துளசி கோபால் said...

என்னங்க எட்வின்,

குறைஞ்சபட்சம் அன்னிக்காவது கோவிலுக்கு வர்றாங்களேன்னு சந்தோஷப்படக்கூடாதா?

இப்படி இன்னொரு கோணமும் இருக்கு.

அன்னிக்கு எல்லோரும் அங்கே வர்றதாலே.... ஒரே இடத்துலேயே எல்லோரையும் சந்திக்கலாம், விட்டுப்போன நட்பு உறவுகளைப் பார்க்கலாம், புதுப்பிக்கலாம்.

அப்படியே பண்டிகைக்கு யார்யார் என்ன துணிமணி வாங்கினாங்கன்னும் கண் வச்சுக்கலாமே:-)))))


எனக்குக் கல்யாணங்களில்(முக்கியமா உறவினர்கள் வீட்டு விசேஷம்)கலந்துக்கப்பிடிக்கும். எல்லா ஊரில் இருந்தும் வர்றவங்களை ஒரே இடத்தில் பார்த்துக்கலாம்.

இங்கிருந்து ஊருக்குப்போனா... சொந்தக்காரர் வீடுகளுக்கு அலையறதே பெரிய பிரச்சனையா ஆயிருதுல்லே. அதுலேயும் ஒருத்தர் வீட்டுக்குப்போய் இன்னொருத்தர் வீட்டுக்குப் போகலைன்னா அதுக்கு ஒரு தகராறு கிளம்பும்.

சொல்லரசன் said...

//பிறர் தேவை அறிந்து அருளும் உதவியே நாம் செய்யும் உண்மையான வழிபாடாக இருக்கவியலும்.//

இததானுங்க அவரும் சொல்கிறார்.வாரத்தில் ஒரு நாள்வந்து எனக்கு உதவி செய்ய மாட்டியா அல்லது முக்கியமான தினங்களில் நான் உனக்காக பட்ட துன்பங்களுக்கு ஆறுதல் கூறமாட்டியா?

goma said...

உங்கள் கருத்தும் என் கருத்தும் முழுவதும் ஒத்துப் போகின்றது.சில வீடுகளில் பண்டிகையே பகட்டுக்காகத்தான் கொண்டாடப் படுகிறது.

எட்வின் said...

துளசி சார்...

அன்னிக்காவது வராங்க அபபடின்றதுல சந்தோசம் தான்... மறுக்கவில்லை . ஆனா அவங்க நோக்கம் வழிபாட்டிற்கு என்றால் சந்தோசமே. நான் பார்த்த வரை ரொம்ப பேர் சீன் போடுறதுக்காக வே வராங்க. அதான் இப்பிடி கோபத்த எல்லாம் கொட்டி தீத்துட்டேன்.

எட்வின் said...

சொல்லரசன் சார்...

ஒண்ணுமே புரியல போங்க! யார் யாருக்கு ஆறுதல்?

எட்வின் said...

நன்றி goma மேடம் ...

CHANDRA said...

அருமையான பதிவு.அதிலும் இந்த ஒலி பெருக்கி கூம்பை கண்டு பிடித்தவன், உற்ப்பத்தி, விற்பனை செய்பவன் எல்லோரையும் கொல்லலாம் போல வெறி வருகிறது.

எட்வின் said...

நன்றி சந்திரா அவர்களே...

உங்கள் கோபம் நியாயமானதே.

ஒலி பெருக்கி வைத்து பல ஊர் கேட்கும் படி வழிபடுதல் தான் ஆன்மீகம் என்று தவறாக நினைத்து கொண்டிருப்பவர்களிடம் நாம் என்ன சொல்ல முடியும். கேட்க போனால் வெறி பிடித்தவர்களாய் நம் மேல் பாய்வார்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails