May 27, 2009

கோடையும்,நெல்லையும்,சில உரையாடல்களும்

பதிவு பக்கம் வந்தே ஒரு வாரம் ஆகி விட்டது. விடுமுறையில் இருப்பதால் கணினி பக்கம் அடிக்கடி வர இயலுவதில்லை. நெல்லைக்கு வந்ததுமே வளைகுடா நாடு மறந்து, நெல்லை வட்டார பேச்சும்,நெல்லை மண்ணின் மணமும் மனதிற்கு நிறைவை தந்தன என்று கூறலாம். வந்து இறங்கியதுமே மழைத் தூறல் உள்ளத்தையும் உடலையும் தணித்தது.

ஊருக்கு வந்து சில நாட்கள் ஆகிய நிலையில் என்ன எழுதலாம் என எண்ணிக்கொண்டிருந்த போது நாம் கேட்ட சில உரையாடல்களை பகிர்ந்து கொள்ளலாமே என தோன்றியது.

கடைகளுக்கும், பேருந்து நிலையத்திற்கும், மைதானத்திற்கும் சென்ற போது அருகிலிருந்தவர்கள் உரையாடியதை (ஒட்டு)கேட்க :) நேரிட்டது.அவற்றில் சில சுவாரஸ்யமானவை இங்கே.

விளையாடி விட்டு வீட்டிற்கு திரும்பும் பள்ளி பயிலும் இரு சிறுவர்கள்:

சிறுவன் 1: ஏல என்ன நீ காலைல பர்ஸ்டு ஷோவுக்கு வரியா இல்லியா ? முத்து காலைலயே சைக்கிள கொண்டு வந்திருவான். நான் அவன் கூட வந்திருவேன். வீட்ல என்ன சொல்லுவியோ தெரியாது. சைக்கிள தூக்கிட்டு வந்திரு ஆமா.

சிறுவன் 2: சரி சரி... கிரவுண்டுக்கு போறேன்ன்னு சொல்லிட்டே வரேன்.

----------------------------------

பேருந்து முன்பதிவு மையத்தில் வரிசையில் நிற்கும் ஒருவர் தொலை பேசியில்

சவம் என்னா வெயிலடிக்குடே... டிக்கெட் இன்னும் லேட் ஆகும்நு நெனக்கேன். நீ எதுக்கும் ஒரு கேஸ் பீரு வாங்கி வைக்க சொல்லீரு. சாய்ங்காலம் வாரேன் நான்.பயலுவ கிட்டயும் சொல்லீரு.குடிக்காத நானே சூடு தாங்க முடியாம முந்தா நாளு ரெண்டு பீர குடிசிட்டேனே டே.

-----------------------------------

மைதானத்தில் ...

ஏல் ரமேஷ்... அந்த ரயில் நகர் டீம் வரலன்னா மேட்ச மறு நாளெல்லாம் வெக்க முடியாதுன்னு சொல்லீரு ஆமா, அவனுவ நெனச்ச நேரத்துக்கு எல்லாம் வெளயாட இது என்ன அவனுவ அப்பன் வீட்டு கிரவுண்டா?

---------------------------------

பேருந்தில் இருவர்...

நபர் 1: கருணாநிதிக்கு ஓட்டு போட்டது தப்பா போச்சே சார். மகனுக்கும், மகளுக்கும் மந்திரி பதவி கிடைக்காத தால பிரதமரோட பதவி ஏற்பு விழாவுக்கே இருக்காம வந்திட்டாரே .

நபர் 2: தான் விரும்பினத சாதிக்க அவருக்கா சொல்லிக் குடுக்கணும்.. நீங்க வேற :)
---------------------------------

மழையினால் சில தினங்கள் முன்பு வரை இருந்த வெயில் குறைந்து வானிலை சற்றே சாதகமாக உள்ளது. குற்றாலத்திலும் ஓரளவு நீர் வீழ்ச்சி உள்ளதால் நண்பர்கள் பலர் குற்றாலத்திற்கு படை எடுத்த வண்ணம் உள்ளனர்.

ஊட்டிக்கு செல்வதானால், தங்குவதற்கே இடமில்லை என அங்கிருந்து திரும்புகிறவர்கள் தகவல் தருகிறார்கள். தங்குமிடம் முன்பதிவும் நிரம்பி வழியத்தான் செய்கிறது.

மேலும் தகவல்களுடன் அடுத்த பதிவில்.

May 20, 2009

ஆட்டம் போட்டவர்களை அடக்கிய ஐ.பி.எல்

20-20 கிரிக்கெட் ஆட்டம் கிரிக்கெட்டிற்கு பிரபலமோ இல்லையோ... ஆட்டத்திற்கும், பாட்டத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் பிரபலமே.

கல்வியைப் போன்று கிரிக்கெட்டும் , இன்று வியாபாரமாகி நிற்கிறது. ரஞ்சி ஆட்டங்கள் என்றால் என்னவென்று தெரியாத பலர் ஐ.பி.எல் என்றதும்... அப்படி இப்படி... ஷில்பா டீம் சூப்பர்... ஷாரூக் டீம் சரி இல்லை என வந்து விடுவார்கள் வாக்குவாதத்திற்கு.

சிலர்... நடனமாடும் மங்கைகளை பார்ப்பதற்காகவே கிரிக்கெட் பார்க்கிறார்கள்.கிரிக்கெட் மைதானத்தில் அரைகுறை ஆடையணிந்த அம்மணிகளுக்கு என்ன வேலை என்பது தான் இன்னும் புரியவில்லை. முன்பு குறிப்பிட்டது போன்று... வியாபார நோக்கத்திற்காக இருக்கலாம்.


இந்த வருட ஐ.பி.எல் ஒரு வழியாக அரை இறுதி நிலையை எட்டியுள்ளது. சினிமாக்காரர்கள் கிரிகெட்டை குத்தகைக்கு எடுத்தால் கூத்திற்கு குறைவிருக்குமா?

அப்படி கூத்து காட்டிய சினிமாக்காரர்கள் ஷில்பா,பிரீத்தி,ஷாரூக் ஆகிய மூவரின் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேற வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.பிரீத்தியின் அணிக்கு மட்டும் 10% வாய்ப்பு எஞ்சி உள்ளது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத் டெக்கன் சார்ஜர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியில் தோல்வி அடையும் அணியின் ஓட்ட விகிதம் குறைந்தால் பஞ்சாப்பிற்கு ஒருவேளை அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கலாம்.ஆனால் அது சாத்தியமல்லவேன்றே தோன்றுகிறது.

பிரீத்தி ஸிந்தா அனைத்து ஆட்டங்களிலும் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்ச ஆட்டமா? குறிப்பாக சென்னைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில்... சென்னையை 116 ஓட்டங்களுக்குள்ளாக கட்டுப்படுத்தி விட்டோம் என அப்படி குதிக்கிறார்.


மறுபுறம் ஸ்ரீசாந்த்... தோனி விக்கெட்டை கைப்பற்றியதும் மைதானம் முழுதும் ஓடுகிறார்... காயத்திலிருந்து திரும்பிய பின்னரும் இன்னமும் அடக்கி வாசிக்க தெரியவில்லை. மற்றொரு ஆட்டத்திலும் ஆவேசப்பட்டதை காண நேர்ந்தது. சென்ற வருடம் ஹர்பஜனிடம் கன்னத்தில் வாங்கிய அறை மறந்து விட்டதோ என்னமோ?


ஷில்பாவிற்கும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.இந்திய ஆடுகளத்தில் அதிரடி ஆடிய அஸ்நோத்கர் போன்ற வீரர்கள் தென்னாப்பிரிக்க களத்தில் தடுமாறியது நன்றாகவே தெரிந்தது.

ஐ.பி.எல் துவங்கும் முன்னரே நான்கு அணித்தலைவர், கங்குலி நீக்கம் என அதிரடி செய்த கொல்கத்தா அணியினையும், பயிற்சியாளர் புக்கனனையும் அடையாளமே தெரியவில்லை.

கவாஸ்கரை ஆரம்பத்தில் திட்டி விட்டு... பின்னர், நான் அவரைச் சொல்லவில்லை என சீன் போட்ட ஷாரூக் இப்போது சப்தமே இல்லாமல் இருக்கிறார்.


வீட்டில் அல்லது பயிற்சி மைதானத்தில் நிம்மதியாக இருந்திருக்க வேண்டிய சச்சின் வீணாக தன்னை அலைக்கழித்திருக்கிறார். அணித்தலைவராக சச்சின் எடுத்த சில தவறான முடிவுகள் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு பாதகமானது.

ஒரு சில ஆட்டங்களில் நான்கு ஓவர்கள் முழுமையாக பந்து வீச வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற சின்ன விஷயத்திற்கு … அணியில் எனது இடம் என்னவென்று விளங்கவில்லை என கூக்குரலிட்ட ஹர்பஜனுக்கு ஹெய்டனும்,தோனியும் ஐ.பி.எல்லின் 47 ஆவது ஆட்டத்தில் 18 ஆவது (அவருக்கு அது 3 ஆவது)ஓவரை வீசுகையில் தக்க அடி கொடுத்தனர். அந்த ஓவரில் மட்டும் 17 ஓட்டங்கள் எடுத்து மும்பையை ஐ.பி.எல் தொடரிலிருந்தே வெளியேற்றினார்கள்.

இப்படியாக ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் அடங்கி விட, வெற்றியிலும் வீம்பு பேசாத டெல்லி,சென்னை,ஹைதராபாத்,பெங்களூர் அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்திருப்பது நல்ல விஷயம்.

இந்த நான்கு அணிகளின் உரிமையாளர்களும் மற்ற அணிகளின் உரிமையாளர்களைப் போல அலட்டுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

May 16, 2009

சந்தர்ப்பவாத அரசியலுக்கு சம்மட்டி அடி


பதினைந்தாவது பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்கள் வர ஆரம்பித்ததிலிருந்தே எளிதில் வெற்றி பெறலாம் என எண்ணிக் கொண்டிருந்த சந்தர்ப்பவாத அரசியல்கட்சிகளுக்கும் "அரசி"யல்வாதிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

குறிப்பாக தமிழகத்தில் அய்யா அவர்களின் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி,விருதுநகரில் அண்ணன் அவர்களின் தோல்வி, தேர்தலுக்கு நாற்பது நாட்களிருக்கையில் ஈழம் ஏற்படுத்துவோம் என்றதோடு நாற்பதும் நமக்கே என நாடகமாடிய அம்மாவின் பின்னடைவு,காங்கிரஸ் பெருந்தலைகளுக்கு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தோல்வி, என வரிசையாக நோக்கினால் மக்கள் தெளிவாக வாக்களித்து சந்தர்ப்பவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள் எனலாம்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் அமைக்கப்பட்ட அனைத்து மத்திய அமைச்சரவைகளிலும் பதவி வகித்து வந்திருக்கும் 'அய்யா' வின் பதவி மோகத்திற்கு மக்கள் சரியான சம்மட்டி அடி அடித்திருக்கிறார்கள்.ஆவேச பேச்சாளர் அண்ணனின் சந்தர்ப்பவாதத்தைக் குறித்து சொல்லவே தேவையில்லை.சொந்த தொகுதி மக்களின் பிரச்சினைகளை அலசாத 'எம்.பி'க்களுக்கும் அமைச்சர்களுக்கும் தக்க அடி கிடைத்திருக்கிறது.

விலைவாசி உயர்வு,மின்தடை,இலங்கைப் பிரச்சினையில் தடுமாற்றம் இவைகளுக்கு அப்பாலும் முதியவரின் உண்ணாவிரதமும் கள்ள ஓட்டும், சொல்லும்படியான வாக்குகளை அளித்திருக்கிறது என ஒருசாரார் நம்பினாலும் பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கிய இலவசங்களும்,கேப்டன் சிதறச் செய்த வாக்குகளும் முதியவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.

இதே பாணியிலேயே இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் நல்லாட்சி செய்த ஆளுங்கட்சியினருக்கே மக்கள் மீண்டும் வாக்களித்திருக்கிறார்கள்,ஆந்திராவில் காங்கிரஸின் ரெட்டி,டெல்லியில் காங்கிரஸின் ஷீலாதீட்சித்,ஒரிசாவில் பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக்,பீகாரில் ஜனதா தளத்தின் நிதிஷ் குமார்,ஜம்முகாஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா,குஜராத்தில் பா.ஜ.க வின் நரேந்திர மோடி என இந்த முதல்வர்கள் இருக்கும் மாநிலங்களில் எல்லாம் மக்களுக்கு அவர்கள் செய்த நலத்திட்டங்கள் அவர்களுக்கு பெரும்பான்மை இடங்களை அளித்திருக்கிறது.

நல்லாட்சி செய்யாத கேரளா,மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஆளுங்கட்சிகளுக்கு சரியான அடியும் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்டுகளின் பழமைவாத கொள்கைகளையும் மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

ஐக்கிய முற்போக்கு முன்னணியில் ஒருகாலும், மூன்றாவது அணியில் ஒருகாலுமாக நாடகமாடிய லாலு சரண்,பாடலிபுத்திரா என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.இரு தொகுதிகளிலும் தோற்க வேண்டிய நிலையிலிருந்தவர் இறுதியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சரண் தொகுதியிலிருந்து மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்.

பிரதமர் கனவு கண்ட சந்தர்ப்பவாதிகள் மாயாவதி, சந்திரபாபுநாயுடு, பாஸ்வான் ஆகியோருக்கு பெரும் தோல்வியை தந்திருக்கிறார்கள் வாக்காளர்கள்.இத்தனைக்கும் பாஸ்வான் தனது சொந்த தொகுதியிலேயே தெரிந்தெடுக்கப்படவில்லை.இதே பீகார்,ஹஜிபூர் தொகுதியில் 4,24,000 வாக்குகள் வித்தியாசத்தில் 1977 ல் வெற்றி பெற்று கின்னஸ் சாதனை செய்தவரும், 1977 முதல் 2004 வரை ஏழு முறை இந்த தொகுதியில் இருந்து தெரிந்தெடுக்கபட்டவரும் இவரே.

சரிவர செயல்படாத மத்திய சமூகநலைத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரியும் ஆந்திராவில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

இப்படியாக நல்லாட்சி செய்தவர்களுக்கும்,ஓரளவு நியாயமாக இருந்தவர்களுக்கும் மக்கள் மீண்டும் தங்கள் ஆதரவை அளித்து சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் அகங்காரிகளுக்கு தக்க பதிலும் கொடுத்திருக்கின்றனர்.

பொருளாதர வீழ்ச்சியிலிருந்து உலகம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் எவருக்குமே பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டிருக்குமானால் அது மேலும் இந்திய பொருளாதாரத்தை சீரழித்திருக்கும்.அந்த நோக்கத்தில் நிலையான ஆட்சி வேண்டியும் மக்கள் வாக்களித்திருக்கக் கூடும்.

ஆனாலும் காங்கிரசுக்கு 200 ற்கும் மேல் தொகுதிகள் கிடைத்தது சற்றே ஆச்சரியம் தான்!

May 15, 2009

நாளையேனும் விடியுமா இவர்களுக்கு?


இனத்தின் பெயரால்
இரக்கமற்று இதயமின்றி
இனப்படுகொலை செய்யும்
இதயமற்றவர்கள் இடையிலும்

பசியின் கொடுமை
பரிவு காட்ட யாருமில்லாத் தனிமை
பச்சோந்திகளின் கயமை-என
பார்க்கின்றவை பயமுறுத்துகையிலும்

நானூறு உயிர்கள் மடிவு
நான்று கொண்டு மரணம்
நாணத்தால் தற்கொலை-என்ற
நாளிதழ்களின் செய்திகள் நடுவிலும்

அதிகாரத்தின் போதையால்
அகங்காரிகளின் வதையால்
விதியின் சதியால்
வீதியில் சாமானியன் வீழ்கையிலும்

விடியும் என்ற நம்பிக்கையில்
வினாக்களோடு பயணிக்கிறவர்கள்
விடைகளைப் பெறுவது என்றோ?
------------------------------
அனுதினம் சீறும் பீரங்கிக் குண்டுகளுக்கு
அக்கரையில் உயிர்கள் மடிவது கண்டு
அகம் அங்கலாய்ப்பதுண்டு
அமைதி நிலவ வேண்டும்-என வேண்டுவது
அல்லாது வேறென்ன செய்வேன் நான்.


May 13, 2009

ஆட்சியை பிடிக்கும் அணி என்ற புதிய அணி உருவாக்கம்?

கார்ட்டூன் நன்றி sulekha.com
---------------

இந்தியா முழுதும் ஒரு வழியாக ஐந்து கட்ட தேர்தலும் நடந்து முடிந்தாகி விட்டது.முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எந்த கூட்டணி ஆட்சியமைக்கும்,எவர் பிரதமராக வருவார் என்ற எதிர்பார்ப்பு சற்றே அதிகமாகத் தான் உள்ளது.

1991 ற்கு பிறகு எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்ற கேள்வி மாறி எந்த கூட்டணி ஆட்சியமைக்கும் என்ற நிலைமை உருவெடுத்துள்ளது எவரும் மறுக்கமுடியாத ஒன்று.இந்தியா முழுதும் தனக்கு ஆதரவைக் கொண்டிருந்த காங்கிரஸ் தனது ஆட்சி முறைகளினாலும் மக்களை ஈர்க்கும் தலைவர்கள் இல்லாமையாலும் தனது செல்வாக்கை பல மாநிலங்களில் இழந்தது.

குறிப்பாக தமிழகத்தில், காங்கிரசின் அழிவிற்கு காங்கிரசாரே காரணம் என்றாலும் மிகையல்ல.உட்கட்சி விவகாரங்களினாலும்,பதவி மோகத்தினாலும் ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டு மக்கள் மத்தியில் கட்சிக்கு இருந்த ஓரளவு மரியாதையையும் குறைத்துக் கொண்டனர்.அவர்களின் கோஷ்டி பூசல்கள் இன்று வரை தீர்ந்த பாடில்லை.பிற மாநிலங்களும் (சில கட்சிகளும்) இதற்கு விதிவிலக்கல்ல. பதவி மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலைமையினால் மாநில கட்சிகள் தேசிய அரசியலில் மெதுவாக காலூன்ற ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.மெல்ல காலூன்றிய மாநில கட்சிகள் தேசிய ஆட்சியில் பதவிகளைப் பிடிக்கவும் செய்து தற்போது டெல்லியில் தங்களுக்கென ஒரு அடையாளத்தையும் உறுதியான இடத்தையும் பிடித்துள்ளன.

15 ஆவது மக்களவையைத் தெரிந்தெடுக்கும் தேர்தல் ஆரம்பிக்கும் முன்னரே அனைத்துக்கட்சிகளும் கூட்டணிக்காக தங்கள் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு பிற கட்சிகளின் வாலைப்பிடித்துக் கெஞ்சத் தொடங்கியிருந்தன.இழுபறியின் இறுதியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி;பாரதீய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி;கம்யூனிஸ்டுகள்,பகுஜன் சமாஜ்,அ.தி.மு.க,தெலுங்கு தேசம் உட்பட்ட கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி என மூன்று கூட்டணிகள் உருவாகின.

ஒவ்வொரு கட்ட தேர்தலும் முடிந்து வர வர இந்த மூன்று கூட்டணிகளினுள் உள்ள கட்சிகள் எந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை கணித்து அந்த கூட்டணிக்கு தாவுவதற்கு தங்களைத் தயாராக்கிக் கொண்டிருந்தன.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்த லாலு,பாஸ்வான் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஆப்பு வைத்தனர்.பா.ஜ.க வுடன் இருந்த சந்திரபாபு நாயுடு மூன்றாவது அணிக்கு தாவினார்,அது போன்று ஒரிசா முதல்வர் பிஜூ பட்நாயக் பா.ஜ.க வுடனான உறவை முடித்துக் கொண்டார்.மூன்றாவது அணியிலிருந்த ஆந்திராவின் டி.ஆர்.எஸ் கட்சி அதிலிருந்து விலகியது.தற்பொழுது அம்மாவும்,சரத்பவாரும்,சந்திரபாபு நாயுடுவும் எந்த கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கு சாடுவதற்கு மதில் மேல் பூனையாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.

இறுதியில் மூன்றாவது அணி உருவாக காரணமான,தங்கள் கொள்கைகளை எளிதில் விட்டுக்கொடுக்காத இடது மற்றும் வலதுசாரி தோழர்கள் தோற்கடிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாகவே தோன்றுகிறது. தோழர்கள் ஏமாற்றப்பட போகிறார்கள் என்பது கர்நாடகாவின் குமாரசாமி-சோனியாகாந்தியின் நேற்றைய சந்திப்பிலேயே துளிர் விட்ட நிலையில் எவருக்கும் ஆதரவு என்ற ஜெ'ன் இன்றைய நிலையும்,சந்திரபாபு நாயுடு மற்றும் பா.ஜ.க வின் வெங்கையா நாயுடு சந்திப்பும் அதனை உறுதிப்படுத்துவதாகவே தெரிகிறது.

எனவே அடுத்து வரும் சில நாட்களில் இந்த மூன்று அணிகளும் மாறி "ஆட்சியைப் பிடிக்கும் அணி" என்ற ஒரு அணி தான் உருவாகும் வாய்ப்புள்ளது.அவர்கள் அதற்கு என்ன விதமான பெயரினை வைத்தாலும் அது ஆட்சியை பிடிக்கும் அணியாகவே இருக்கும்.அதற்கு என்ன விலையும்,என்ன பதவியும் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்... தங்கள் கொள்கைகளையும் காற்றில் பறக்க விட்டு பதவி மோகம் பிடித்துத் திரியும் சில அரசியல் ஆதாய ஆசாமிக் கூட்டங்கள்.

இந்த கொடுமைகளை எல்லாம் நாம் கண்டு சகிக்க வேண்டியிருக்கிறது... என்ன செய்வது இந்தியனாகி விட்டோமே!

May 11, 2009

இந்தியால தான் இப்படின்னா இங்கிலாந்திலுமா!

நவம்பர் 2008 மும்பை தாக்குதலில் ஊடகங்களும் சரி அரசும் சரி ஹோட்டல் தாஜில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தியதாக இன்றளவும் குற்றச்சாட்டு உண்டு.விக்டோரியா ரயில் நிலையத்தில் பயணிகளும் பொதுமக்களுமாக பலர் மரித்துக் கிடந்ததை ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. பெரும்பாலானோரின் கவனமும் உயர் மட்ட மக்கள் இருந்த ஹோட்டல் தாஜின் மேலேயே இருந்தது.

இன்று வரை தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் சென்று சேர வேண்டிய நிவாரணம் முழுமையாக சென்றடைந்ததா என்பதும் கேள்விக்குறியே.

இந்தியாவில் தான் இந்த நிலை என்றால் இங்கிலாந்திலும் இதே நிலை தான் போல.

இங்கிலாந்தைச் சார்ந்த வில் பைக்(will pike) என்பவர் மும்பைத் தாக்குதலின் போது ஹோட்டல் தாஜினுள் மாட்டிக் கொண்டவர்களில் ஒருவர்.தப்பிப்பதற்காக ஹோட்டல் தாஜின் போர்வைகளை கயிறாக பாவித்து மூன்றாவது தள ஜன்னல் வழி கீழே குதித்திருக்கிறார்; பாதியிலேயே போர்வைகள் கிழிந்து விட, அவரின் கைஎலும்புகள்,காலெலும்புகள், முதுகெலும்பு, இடுப்பெலும்பு ஆகியவை முறிந்திருக்கின்றன.

இருபதிற்கும் மேல் அறுவை சிகிச்சை பெற்று தற்பொழுது குணமடைந்திருக்கிறார்.இப்போது நிம்மதியாக இருப்பார் என நாம் நினைத்தால்... அது தான் இல்லை! முதுகெலும்பில் ஏற்பட்ட காயம் நரம்புகளையும் பாதிக்கவே இனி மேல் அவரால் நடக்க இயலாது என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.தற்பொழுது சக்கர நாற்காலியில் காலத்தை ஓட்டுகிறார்.இத்தகைய நிலையில் இங்கிலாந்து அரசு எந்த விதமான உதவியும் இதுவரை செய்ததில்லை என கவலை தோய்ந்த முகத்துடன் வில்லியமும் அவரது துணைவியாரும் கண்ணீர் மல்குகின்றனர்.உதவி கிடைக்கும் வரை போராடுவது என முடிவெடுத்து இணையதளம் ஒன்றின் மூலம் வேண்டுகோளும் விடுத்திருக்கிறார் வில் பைக்.அந்த இணையதளம் இங்கே

ஏற்கெனவே 2005ல் எகிப்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் போது இறந்த இங்கிலாந்து பிரஜைகளுக்கும் இங்கிலாந்து அரசு சரியான நிவாரணம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க...

இங்கிலாந்தில் அமைச்சர்கள் அரசு பணத்தில் ராஜபோகமாக வாழ்கிறார்கள் எனவும்,அளவுக்கு மீறி செலவு செய்து வருகிறார்கள் எனவும் தற்பொழுது பிரச்சினை கிளம்பியிருக்கிறது.

நம் அரசாங்கங்கள் தான் சரிவர நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்குவதில்லை, வெளிநாடுகளில் என்றால் நிவாரணங்கள் சரியான முறையில் மக்களை சென்றடைகிறது என நினைத்தோமென்றால் அது தவறு.

ஊழலும்,அரசாங்கங்களின் ஊதாரித்தனமும் உலகமெங்கும் ஒன்று தான் போல.

May 09, 2009

இளமையில் சாதித்தவர்கள் தரும் நம்பிக்கை

தங்களது கடின உழைப்பாலும்,விடாமுயற்சியாலும் இளமையிலேயே பெரும்புகழ் அடைந்து பலருக்கு முன்மாதிரியாக இருக்கும் சிலரைக் குறித்த பதிவு.
லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) கால்பந்து ரசிகர்களுக்கு இவரைக் குறித்த அறிமுகமே தேவையில்லை.அர்ஜென்டினாவை சேர்ந்த 22 வயதே நிரம்பிய கால்பந்து வீரர் இவர்,16ஆவது வயதிலேயே சர்வதேச கால்பந்து களத்தில் இறங்கியவர்.தற்சமயம் ஸ்பெயினின் பார்சிலோனா 'கிளப்'பிற்காக ஆடி வருகிறார்.கால்பந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்துவதும்,வேகமாக பந்தை முன் நகர்த்துவதும் இவரது பிரத்தியேக திறமை.

இத்தனைக்கும் 11 வயதில் வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கு கூட வசதியில்லாமலிருந்தவர்.புதிய மரடோனா என்றும்,மெஸ்ஸிடோனா என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு.மெஸ்ஸி,மரடோனாவுக்கு நிகராக விளையாடுவதை மரடோனாவே ஒப்புக்கொண்டுள்ளார்.இருவரும் அர்ஜென்டினாவை சார்ந்தவர்கள் என்பது அர்ஜென்டினருக்கு பெருமை சேர்க்கும் விஷயம்.

ஆடுகளத்தில் பிற வீரர்களை போல் கால்களில் கவனம் செலுத்தாமல் கால்பந்தில் மட்டுமே கவனம் செலுத்தும் சாதுவானவர்.

ரஃபேல் நடால்(Rafael Nadal) ராஃபா என டென்னிஸ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஸ்பெயினைச் சார்ந்த டென்னிஸ் வீரர்.23 வயதே ஆகியிருக்கும் இவர் தற்பொழுது உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர். நான்கரை வருடமாக(2004 முதல் 2008வரை) தரவரிசையில் முதலிடத்திலிருந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை தோற்கடிக்க எவருமே இல்லை என்றிருந்ததை மாற்றி எழுதியதும் இவர் தான்.

இந்த வருடம் மட்டும் இதுவரை 4 ஏ.டி.பி மற்றும் ஒரு கிராண்ஸ்லாம் உட்பட 5 பட்டங்களை வென்றுள்ளார்.

களிமண் தரை மைதானங்களின் மன்னன் (king of clay court) என்று அறியப்படும் நடால் களிமண் தரை மைதானமுடைய ஃப்ரெஞ்ச் ஓபன் பட்டங்களை 2005 முதல் 2008 வரை தொடர்ந்து நான்கு முறை பெற்றுள்ளார்.இதில் மூன்று வருடம் தொடர்ச்சியாக இவரிடம் தோல்வியடைந்தது ஃபெடரர்.

புல் தரை மைதானங்களில் அதிகம் சோபிக்காத நடால் கடந்த ஆண்டின் விம்பிள்டன் போட்டியில் ரோஜர் ஃபெடரரை தோற்கடித்து அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

ரோஜர் ஃபெடரர்

14 வயதில் சுவிட்சர்லாந்தின் சாம்பியன் ஆனவர் ஃபெடரர்.தற்சமயம் உலக டென்னிஸ் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்.நான்கரை வருடமாக(2004 முதல் 2008வரை) தரவரிசையில் முதலிடத்திலிருந்து சாதனை செய்தார்.

இதுவரை 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார்.14 பட்டங்கள் பெற்ற அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸின் சாதனையை முறியடிக்க இனி ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டமே எஞ்சியுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் கிரிக்கெட்டைக் குறித்து அறியாதவர் கூட சச்சினை அறிவர் எனலாம்.தனது 16 ஆவது வயதிலேயே சர்வதேச ஆட்டங்களில் காலடி எடுத்து வைத்த சச்சின் 25 வயதிற்குள்ளாக 16 சதங்களை அடித்து முடித்திருந்தார்.

சச்சினின் சாதனைகளை பட்டியலிட இந்த பக்கங்கள் போதாது.அவரின் குறிப்பிடும் படியான சில சாதனைகள் இங்கே.

லியாண்டர் பயஸ்
16 ஆவது வயதிலேயே டென்னிஸ் மட்டையை பிடித்தவர்.ஒலிம்பிக்கில் டென்னிசிற்காக வெண்கலப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர்.

தனது 17 ஆவது வயதிலேயே லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் ஜூனியர் பட்டம் வென்றவர் அதோடு 1990 ல் உலக ஜூனியர் டென்னிசின் தர வரிசையில் முதலிடமும் பிடித்தார்.

இதுவரை 8 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார் பயஸ்.மகேஷ் பூபதியுடன் 1999 ல் சர்வதேச இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பெற்றிருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் 10 வயதில் தந்தையை இழந்த திலீப் குமார் குடும்பப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய கட்டாயம்,என்றாலும் இசை மீதான தனது வேட்கையையை அவர் விட்டுவிடவில்லை.இந்தியாவில் வேறு எந்த கலைஞரும் காணாத மேல்நாட்டு இசைக்கருவிகளையும்,தொழில்நுட்ப கருவிகளையும் அறுபதுகளிலேயே இறக்குமதி செய்து இசை மீட்டிய தந்தை சேகரின் வழி இளமையிலேயே பயணித்தவர்.

26 ஆவது வயதிலேயே திரைப்படத்திற்கு இசையமைத்தார் ஆஸ்கர் நாயகனான ரஹ்மான். அறிமுக படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருதும்,தேசிய விருதும் பெற்ற ஒரே இசையமைப்பாளர் என்ற சிறப்பைப் பெற்றார்.அவரின் பிற சாதனைகள் இங்கே.
இளம் வயதிலேயே இவர்கள் பெற்ற உயர்ந்த விருதுகளுக்கும்,பதக்கங்களுக்கும்,புகழுக்கும் காரணம் அவர்களின் முழுமையான ஈடுபாடும்,தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும்,கடின உழைப்புமேயாகும்.

இவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் மட்டுமல்லாமல் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என எண்ணுபவர்கள் எவரும் கடைபிடிப்பார்களெனில்,வெற்றி நிச்சயமே.

May 07, 2009

பாலியல் சித்திரவதை,பன்றிக்காய்ச்சல்,கால்பந்து களேபரம்

ஸ்காட்லாந்தில் குழந்தைகளை சில வருடமாகவே பாலியல் சித்திரவதை செய்ததாக '8'நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 மாத குழந்தையையும் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள் இந்த கயவர்கள். இவர்களில் அனைவரும் படித்து உயர் வேலைகளில் இருப்பவர்கள்,அதிலும் ஒருவன் கிறிஸ்தவ பணி செய்து வருகிறவனாம்... என்ன கொடுமை!! Paedophilia என ஆங்கிலத்தில் அறியப்படும் குழந்தைகள் மீதான இவ்வகை பாலியல் ஈர்ப்பு மிகக் கொடியது.உலகம் முழுவதும் பல குழந்தைகள் இது போன்ற கொடூரங்களுக்கு ஆளாகின்றனர்.

Paedophile என அறியப்படும் இந்த கொடியவர்களிடமிருந்து குழந்தைகள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தீபா அவர்கள் "குட் டச் பேட் டச்" என்ற ஒரு இடுகையை எழுதியிருந்ததார்கள்.அதனை இங்கே படிக்கலாம்.

---------------

swine flu அதாவது பன்றிக் காய்ச்சல் என அழைக்கப்படுவதற்கு பன்றி பண்ணை வைத்திருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் H1N1 flu என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

பன்றிக் காய்ச்சல் என ஆரம்பத்தில் அறியப்பட்டாலும் பன்றிகளிலிருந்து மனிதனுக்கு பரவியதாக இது வரை நிரூபிக்கப்படாததும் இந்த பெயர் மாற்றத்திற்கு காரணம்.H1N1 காய்ச்சல் குறித்த மேலும் தகவல்கள் இங்கே.


பெங்களூருவில் இந்தியாவின் முதல் H1N1 காய்ச்சல் உறுதிப்படுத்தப்படலாம் என தெரிகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய இருவர் தனி அறைகளில் வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். இரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் இது உறுதி செய்யப்படலாம்.

------------------

சாம்பியன்ஸ் லீக் என அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து 'கிளப்'புகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது.இதன் இரண்டாவது அரை இறுதி போட்டியின் இரண்டாம் நிலை (second leg) ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து கிளப்பான செல்சீ (chelsea) ம் ஸ்பெயினின் பார்சிலோனாவும் நேற்று லண்டனில் மோதின.

ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்திலேயே அடித்த கோல் மூலம் முன்னணியில் இருந்த செல்சீ அணியே வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது.ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆட்டம் முடிய இரண்டு நிமிடம் மீதமிருக்கையில் பார்சிலோனா அணி கோல் அடித்து இறுதிப் போட்டியில் நுழைந்தது.

ஆட்டத்தில் நடுவர், இருமுறை வழங்கப்பட வேண்டிய பெனால்டிகளை வழங்காதமையால் கோபம் கொண்ட செல்சீ அணியினர் ஆட்ட முடிவின் போது நடுவரை சூழ்ந்து கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர்.குறிப்பாக டிடியர் ட்ரோக்பா எனப்படும் வீரர் நடுவரை அடிக்க பாய்ந்து விட்டார்.தற்பொழுது நடுவருக்கு கொலைமிரட்டல்களும் வந்த வண்ணம் உள்ளன.


செல்சீ அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தும் அவர்களால் மேலும் கோல்களை இட முடியாததே தோல்விக்கு காரணம்.மாறாக பார்சிலோனா அணியினர் ஆரம்பம் முதலே அருமையாக ஆடினர்.அவர்களின் போராட்ட குணமும் நம்பிக்கையும் அவர்களுக்கு வெற்றி ஈட்டித் தந்தது.

முதல் அரையிறுதிப் போட்டியில் அர்சினல் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற இங்கிலாந்தின் சிறந்த 'கிளப்'பான மேன்செஸ்டர் யுனைட்டட் அணியை ஸ்பெயினின் சிறந்த 'கிளப்'பான பார்சிலோனா இறுதிப் போட்டியில் சந்திக்கவிருக்கிறது.

வீரர்களின் எதிர்ப்பும் skysports ன் விவாதமும் காணொளியாக கீழே

May 05, 2009

கலைஞருக்கு இது தேவையா...?

தமிழகத்தில் எட்டு வருடங்களில் முதல் முறையாக அரசுப்பேருந்துகளில் பயணக் கட்டணத்தைக் 50% சதவீதத்திற்கும் கீழே குறைத்திருப்பதாக கூறி சென்னை,திருச்சி,மதுரை பேருந்துகளில் குறைவான பயணக்கட்டணம் மே 1,2 ஆகிய தேதிகளில் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழக அரசு போக்குவரத்துத் துறை அமைச்சரான நேருவோ, கட்டணம் குறைப்பிற்கான உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை எனவும்,சில வழித்தடங்களில் பேருந்துகளின் தரம் டீலக்சிலிருந்து சாதாரணப் பேருந்துகளாக மாற்றப்பட்டிருப்பதால்,அதனடிப்படையில் குறைவான கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். உண்மை யாருக்கு தெரியும்!

இதனை அறிந்த தேர்தல் ஆணையம் கட்டணக் குறைப்பிற்கான உத்தரவை திரும்பப் பெறும்படி தமிழக அரசுக்கு நேற்று(4.5.09) உத்தரவு இட்டது.

இவ்வாறு கட்டணம் குறைக்கப்பட்டு மீண்டும் கூட்டப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது.

ஏற்கெனவே இலங்கைப் பிரச்சினையில் தமிழக மக்கள் எதிர்பார்த்தபடி ஏதும் செய்யாத காங்கிரஸ்-தி.மு.க கூட்டணிக்கு இது மேலும் பின்னடைவே.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் நலத்திட்டங்களையோ,சலுகைகளையோ அமல்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைககளுக்கு எதிரானது என்பது 70 வருடத்திற்கும் மேல் அனுபவம் உள்ள ஒரு முதல்வருக்கு தெரியாமல் போனது ஏனோ?

ஓட்டுகளைப் பெறுவதற்கு மக்களை நல்லாவே ஏமாத்துறீங்கன்னு மட்டும் புரிஞ்சுப் போச்சுங்க பெரியவரே.கலைஞரைப் போன்ற ஒரு மூத்த அரசியல்வாதிக்கு இந்த காமெடி எல்லாம் தேவைதானா!

நாங்கள் கொண்டுவரும் நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என கூறி மக்களை ஏமாற்றாமல் இருந்தால் சரி தான்.

May 04, 2009

ஸ்லம்டாக் மில்லினியருக்குப் பின்...


ஸ்வரூப் விகாஸ் அவர்களின் கதையில் டேனி போய்ல் இயக்கி 8ஆஸ்கர் விருதுகளை வென்று பெயரும் புகழும் அடைந்திருக்கும் ஸ்லம் டாக் மில்லினியர் திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் சரியான அறிமுகம் கூட கிடைக்கவில்லை.

விநியோகிப்பாளர்களான ‘வார்னர் பிரதர்ஸ்’ ஸ்லம் டாக் மில்லினியரை திரை அரங்குகளில் வெளியிடுவதால் லாபம் ஈட்டும் என்ற நம்பிக்கையே வைக்கவில்லையாம்.அமெரிக்க திரை அரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக DVDஆக வெளியிடலாம் எனவும் முதலில் யோசித்திருக்கிறார்கள்.

பின்னர் செப்டம்பர் 2008, கனடாவில் people's choice விருதில் ஆரம்பித்த ஸ்லம்டாக் மில்லியனிரின் புகழ் திரைப்படத்தை மட்டுமல்லாது இதில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரையும் இன்று மேலும் மேலும் உயரங்களை எட்டச் செய்திருக்கிறது.

திரைப்படத்தில் குரோர்பதி நிகழ்ச்சி நடத்துபவராக நடித்த அனில் கபூர் தற்பொழுது அமெரிக்கா முழுவதும் பிரபலமாகியிருக்கிறார்.அதன் உச்ச கட்டமாக அமெரிக்காவில் எம்மி,கிராமி விருதுகளை வென்ற ஃபாக்ஸ் சானலின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான '24'ல் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இசைப்புயல் ரஹ்மானுக்கும்,ரசூல் பூக்குட்டிக்கும் ஹாலிவுட்டில் இருந்து பல வாய்ப்புகள் வந்த வண்ணம் இருப்பதாக கேள்விப்பட நேரிடுகிறது.
(இது பழைய புகைப்படம்)

'ஜெய் ஹோ' பாடலை Pussycat Dolls என்ற ஆங்கில பாப் குழு you are my destiny என்று ஆங்கிலத்திலும் மாற்றி ஆஸ்கர் விழாவின் மறுநாள் வெளியிட்டது.ஆஸ்கர் விருது பெற்ற அடுத்த நாளே அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'ஓப்ரா' விலும் ரஹ்மான் ஜெய் ஹோ பாடலை நடனக்குழுவினருடன் நிகழ்த்தினார்.

ஹாலிவுட்டின் பார்வை பாலிவுட்டின் மீதும் கோடம்பாக்கத்தின் மீதும் வெகுவாக திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.அமீர் கானுடன் இணைந்து ஒரு திரைப்படம் செய்ய இருக்கிறார் என்றும் வதந்திகள் கிளம்பியுள்ளன. அமீர்கானின் 'Taare Zameen Par' பார்த்து விட்டு அருமை என புகழ்ந்திருக்கிறார் டேனி.

படப்பிடிப்பு நடத்தப்பட்ட மும்பை சேரிப் பகுதியை சீர்ப்படுத்தும் விதம் 900,000 அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்லம்டாக் மில்லினியரின் தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கின்றனர்;

மும்பை சேரிப்பகுதி மூலம் நாங்கள் பெற்ற புகழுக்கு நன்றி தெரிவிக்கும் விதம் அந்த பகுதியின் குழந்தைகளின் உண்மையான வாழ்வில் முன்னேற்றத்தை கொண்டுவருவதே சரியாகும் என இயக்குனர் டேனி போய்லும் தெரிவித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் மூலம் தான் பெற்ற ஊதியம் முழுவதையும் அனில்கபூர் சேரியின் முன்னேற்றத்திற்காக கொடுத்திருப்பதும் பாராட்டப்படத் தக்கது.

திரைப்படத்தில் நடித்த ருபினாவிற்கும்,அசாருதீனுக்கும் உதவி செய்யும் வகையில் ஜெய்ஹோ டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அமைப்பையும் உருவாக்கி பண உதவிகள் செய்து வருகின்றது ஸ்லம்டாக் திரைப்படக்குழு.

நாயகியான ஃப்ரீடா பின்டோ இன்று பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் ஒப்பந்தமாகியிருப்பதோடு காதலிலும் விழுந்திருக்கிறார்.உடன் நடித்த தேவ் படேலும் இவரும் நெருங்கி பழகி வருவதாக ஆரம்பத்தில் வந்த செய்திகளை இருவரும் மறுத்தாலும் தற்பொழுது ஒப்புக் கொண்டுள்ளனர். .

இந்தியாவின் ஏழ்மையையும்,சேரிகளையும் விற்று பிழைக்கிறார்கள் என்று ஒரு சாரார் இன்னமும் ஸ்லம்டாக் திரைப்படத்தையும்,திரைப்படக் குழுவையும் குறை சொல்லிக் கொண்டிருக்கத் தான் செய்கிறார்கள்.

இதில் நடித்த சிறுமி ருபீனாவை மடோனா உள்ளிட்ட அமெரிக்கர்கள் பலரும்,தத்து எடுக்க தயாராக இருப்பதாகவும்,பணத்திற்காக அவளது தந்தையும் ருபினாவை விற்பதற்கு!! சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கடந்த மாதம் பரபரப்பு ஏற்பட்டது.

இப்படியாக ஸ்லம்டாக் மில்லினியர்,சிலரின் பார்வைக்கு பணமாக மட்டுமே தெரிகையில் பலரின் பார்வையில் நல்ல குணமாக தெரிகிறது;ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படக்குழு செய்து வரும் நற்பணிகளுக்கு வாழ்த்துக்கள்.

அவர்கள் செலவிடும் பணம் சரியான வழியில் ஏழைக்குழந்தைகளை சென்றடைந்தால் மகிழ்ச்சியே.இந்தியரின் திறமைகளை உலகறிய செய்யக் காரணமாகிய விகாஸ் ஸ்வரூப் அவர்களுக்கும் டேனி போய்ல் உள்ளிட்ட ஸ்லம்டாக் திரைப்படக்குழுவிற்கும் நன்றி.

May 03, 2009

சீக்கியருக்கு சிங்கியடிக்கும் அரசே! நீ தமிழினத்திற்கு என்ன செய்தாய்


அண்டை நாடான பாகிஸ்தானில் சீக்கியர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து வருவதாக ஊடகங்கள் மூலம் செய்தியை கேட்க நேரிடுகிறது.(வரி கட்ட சொல்லிட்டாங்களாம் ஸ்வாத் பகுதியில்!)இந்தியாவின் பஞ்சாப் மாநில சீக்கியர்கள் இன்று அதனைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கு ஜால்ரா அடிக்கும் வகையில் இந்திய பிரதமர் 'சிங்'கும் பாகிஸ்தானை கண்டித்து அறிக்கை விட்டு சிங்குகளுடன் சேர்ந்து சிங்கி அடித்திருக்கிறார் இன்று.அதோடு எதிர்கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன.

இலங்கையில் நம்மின உயிர்கள் அடையும் சித்திரவதைக் குறித்து எள்ளளவும் கவலைப்படாத,கண்டனம் தெரிவிக்காத இந்த கேடுகெட்ட மத்திய அரசுக்கும் பிரதமருக்கும், இன்று மட்டும் எங்கிருந்து பொத்துக் கொண்டு வருகிறதோ இந்த பாசமும் தொப்புள் கொடி உறவும்.

பாகிஸ்தானில் சீக்கியர்கள் உபத்திரவப்படுத்தப் படுகிறார்கள் என்று செய்தி வெளியாகி சில மணிநேரங்களில் கண்டனம் தெரிவிக்கவும்,(இத்தனைக்கும் உயிர் இழப்பு இல்லை)பாகிஸ்தானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் காலைப்பிடித்து கெஞ்சவும்,உணர்ச்சிகளை கொப்பளிக்கவும் தெரிந்த இவர்களுக்கு...

எம்மின உயிர்கள் இலங்கையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவிக்கும் வதைகளுக்கும், பச்சிளம் குழந்தைகளின் கதறல்களுக்கும்,பாவமறியா பெண்கள் அடைந்து வரும் கொடுமைகளுக்கும் குரல் கொடுக்கத் தெரியாதா? இந்த அரசாங்கமும்,பதவியிலிருப்பவர்களும் மனிதப் பிறவிகளா இல்லை ஈனப் பிறவிகளா?

உங்கள் இனத்தின் உயிரெல்லாம் உங்களுக்கு உயிர்... மற்ற இனத்தின் உயிரெல்லாம் பின்ன என்ன ___ கிள்ளுக்கீரையா?

நீங்கள் இலங்கைக்கு சமாதானம் செய்ய செல்ல வேண்டாம்,தினம் தினம் மடியும் உயிர்களுக்காக கண்டனம் தெரிவிக்க வேண்டாம்,அனுப்பும் போர் தளவாடங்களையாவது அனுப்பாமல் இருக்கலாமே!

உங்களின் இரட்டை வேடத்திற்காக இன்றல்லது என்றாவது ஒரு நாள் வருந்துவீர்கள்.அன்று உங்கள் மனசாட்சியும் உங்களைக் கொல்லும்.

May 02, 2009

இது தானா ஐ.பி.எல்... !

என்ன இருந்தாலும் நண்பர் சுகுமாரின் வலைமனை வலைப்பூ அளவிற்கு வரமுடியாது. என்னால முடிந்த ஒரு சின்ன முயற்சி.
May 01, 2009

மே மாதம்...அது ஒரு கனாக்காலம்

மே மாதம் என்றாலே மகிழ்ச்சியின் மாதம் எனலாம்.குறிப்பாக குழந்தைகளுக்கு குதூகலம் அளிக்கும் மாதம் மே மாதம்.பள்ளிகளுக்கு விடுமுறை காலம் என்பதால் குழந்தைகளின் மகிழ்ச்சியைக் குறித்து சொல்லவே தேவையில்லை.

அலுவலகம் செல்பவர்களும் பெரும்பாலும் கோடையில் விடுமுறை எடுத்து விட்டு குடும்பத்தினருடன் உல்லாசப்பயணம் செல்ல வசதியானதும் மே மாதமே.குழந்தைகளுக்கு சுற்றுலாக்கள், புதிய தலங்களை கண்டு மகிழவும் அவற்றிலிருந்து பலவற்றை கற்றுக் கொள்ளவுமாக இரட்டை பயனளிக்கிறது.

பள்ளி,கல்லூரிகளின் மே மாத விடுமுறையானது குடும்பமாக விடுமுறையை செலவிடும் வகையில் குடும்பங்களில் பலரையும் மே மாதத்திலேயே விடுமுறை எடுக்கத் தூண்டுகிறது.அதோடு வீட்டு விசேஷங்களும், திருமணங்களும் மே மாதத்தில் நடத்தப்படுவதன் மூலம் உறவினர்கள் அனைவரையும் கண்டு நலம் விசாரிக்கவும்,மகிழ்ச்சியை பரிமாறவும் ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது.

-----------

முன்னரெல்லாம் மே மாசம் லீவுன்னா விளையாடுவதற்காக நம்ம பருவ பசங்கள கூட்டிட்டு கிரவுண்டுக்கு கிளம்பிற ஸ்டைலே தனி தான்...வெயில்னு கூடபாக்கிறது இல்ல.முதல்ல கூட்டம் சேர்க்கவே போதும் போதும்னு ஆயிடும்.எத்தனை பேர் வருவான்னு பாத்து தான் என்ன விளையாடுறதுன்னே முடிவெடுக்கிறது.

பத்து பேருக்கும் மேல வந்தா கிரிக்கெட்,இல்லன்னா ஏழு கல்லை அடுக்கி வச்சு விளையாடுற 'செவன் டீஸ்' ன்ற ஆட்டம்;அதுக்கும் ஆள் பத்தலன்னா இருக்கவே இருக்கு கோலி ஆட்டம்...அதுக்குன்னே டவுசர் பாக்கெட்டில கோலிக் குண்டு எப்பவும் வச்சிருப்போம்ல நம்ம.

கோலி ஆட்டத்தில தோக்கிறவன் கைய வீங்க வச்சிட்டு தான் மறுவேல நம்ம ஆட்களுக்கு. முட்டுல அடிக்கும் போது கைய எடுத்தா அதுக்கு வேற எக்ஸ்ட்ரா அடி.அத இப்போ நினச்சா கூட முட்டு விர்ருங்குது...

அதுவும் இல்லன்னா பம்பர ஆட்டம்... பம்பர ஆட்டத்தில் தோற்றவரின் பம்பரம் கதை அவ்வளவு தான்.அத கும்மாங்குத்து குத்தி குடலை எடுதுருவானுக பசங்க.

இதவிட பெரிய தலைவலி கிரவுண்டுல இடம் பிடிக்கிறது.பல ஏரியாக்களிலிருந்து படைகள் நம்ம போய் சேர முன்னாலயே கிரவுண்டில இடம் பிடிச்சு போட்டிருப்பாங்க.வெளயாடவே ஆரம்பிச்சிருக்க மாட்டாங்க.... அதுக்குள்ள என்னமோ அவங்க சொத்த நம்ம எழுதிக் கேட்ட மாதிரி... ஏய் இன்னடா... அதான் நாங்க நிக்கிறோம்ல இங்க... கண்ணு எங்க இருக்கு? வீட்டுக்கு ஒழுங்கா போய் சேரணுமா வேண்டாமான்னு நம்மள விட கொஞ்சம் பெரிய வயசுகாரங்க பயமுறுத்துவாங்க.

அதயும் சமாளிச்சு கிரவுண்டு ஓரத்தில இடம் பிடிச்சா... இப்பிடி ஓரமா விளையாடுறதுக்கு நான் வரலப்பான்னு நம்ம ஆளுங்க கொஞ்ச பேர் வெளிநடப்பு செய்வானுக.ஒரு வழியா விளையாட தொடங்கினா அதில வர சின்ன சின்ன சண்டைகள் வேற.எல்லாத்தயும் சமாளிச்சு விளையாடிட்டு போகும் போது தான் கொஞ்சம் சந்தோஷமே.

மீதி சந்தோஷம் எங்கன்னா வீட்டுக்கு திரும்பி போற வழில தான்...

சும்மா இருப்பானுகளா நம்ம பயலுவ.ஒண்ணுல ஸ்கூல் உள்ள நிக்கிற புளிய மரத்தில கல் விட்டு புளிய அடிக்கிறது,இல்ல கொய்யாக்காய் எந்த வீட்டுல நிக்குதுனு நோட்டம் விடுறது.
இப்படி திருட்டுத்தனம் செய்யும் போது ஸ்கூல் வாட்ச்மேனோ, வீட்டுக்காரங்களோ பாத்திட்டா எடுக்கிற ஓட்டம் நேரா வீட்டு வாசல்ல தான் நிக்கும்.

இது போதாதுன்னு... ஐஸ் விக்கிறவன் கிட்ட யும்,மாங்கா சீவி விக்கிறவன் கிட்டயும் பண்ற அட்டூழியம் பெரிய அட்டூழியம்.நாலு மாங்கா துண்டு எடுத்து அதில ஒண்ண பக்கத்தில நிக்கிறவன் கிட்ட திணிச்சிட்டு அண்ணே மூணு எடுத்திருக்கேம்ணே... எவ்ளோன்னு அப்பாவியா கேக்கிறது [நான் இல்லீங்க :)]

ஐஸ் காரர்கிட்ட, அண்ணே!என்னணே... நல்ல ஐசே வைக்கமாட்டீங்களா?பால் ஐஸ் முன்னாடி மாறியில்லண்ணே?அப்படி இப்படின்னு கத அளந்திட்டு கடைசில அண்ணே காசு நாளைக்கு தரேன்னு சொல்லும் போது அசடு வழியிறது.அவரும் சரி ரெகுலரா வாங்கிறவ பசங்க தானன்னு சரின்னுருவாரு.

இப்படி சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி சந்தோஷங்களை அளித்த அந்த கனாகாலங்கள் நிச்சயமாகவே இப்போது நினைத்தாலும் மகிழ்வைத் தருகின்றன.

15 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை மாறி, கணினி யுகமான இன்று வீடியோ கேம்,கார்ட்டூன்,சுட்டி டி.வி என வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடக்கும் சிறுவர்கள் மைதானங்களையும் நாடுவார்களென்றால் அது அவர்கள் உடல் நலனிற்கும்,உள்ள எழுச்சிக்கும் நன்மையாக அமையும்.
-----------------
Related Posts with Thumbnails