May 09, 2009

இளமையில் சாதித்தவர்கள் தரும் நம்பிக்கை

தங்களது கடின உழைப்பாலும்,விடாமுயற்சியாலும் இளமையிலேயே பெரும்புகழ் அடைந்து பலருக்கு முன்மாதிரியாக இருக்கும் சிலரைக் குறித்த பதிவு.
லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) கால்பந்து ரசிகர்களுக்கு இவரைக் குறித்த அறிமுகமே தேவையில்லை.அர்ஜென்டினாவை சேர்ந்த 22 வயதே நிரம்பிய கால்பந்து வீரர் இவர்,16ஆவது வயதிலேயே சர்வதேச கால்பந்து களத்தில் இறங்கியவர்.தற்சமயம் ஸ்பெயினின் பார்சிலோனா 'கிளப்'பிற்காக ஆடி வருகிறார்.கால்பந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்துவதும்,வேகமாக பந்தை முன் நகர்த்துவதும் இவரது பிரத்தியேக திறமை.

இத்தனைக்கும் 11 வயதில் வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கு கூட வசதியில்லாமலிருந்தவர்.புதிய மரடோனா என்றும்,மெஸ்ஸிடோனா என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு.மெஸ்ஸி,மரடோனாவுக்கு நிகராக விளையாடுவதை மரடோனாவே ஒப்புக்கொண்டுள்ளார்.இருவரும் அர்ஜென்டினாவை சார்ந்தவர்கள் என்பது அர்ஜென்டினருக்கு பெருமை சேர்க்கும் விஷயம்.

ஆடுகளத்தில் பிற வீரர்களை போல் கால்களில் கவனம் செலுத்தாமல் கால்பந்தில் மட்டுமே கவனம் செலுத்தும் சாதுவானவர்.

ரஃபேல் நடால்(Rafael Nadal) ராஃபா என டென்னிஸ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஸ்பெயினைச் சார்ந்த டென்னிஸ் வீரர்.23 வயதே ஆகியிருக்கும் இவர் தற்பொழுது உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர். நான்கரை வருடமாக(2004 முதல் 2008வரை) தரவரிசையில் முதலிடத்திலிருந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை தோற்கடிக்க எவருமே இல்லை என்றிருந்ததை மாற்றி எழுதியதும் இவர் தான்.

இந்த வருடம் மட்டும் இதுவரை 4 ஏ.டி.பி மற்றும் ஒரு கிராண்ஸ்லாம் உட்பட 5 பட்டங்களை வென்றுள்ளார்.

களிமண் தரை மைதானங்களின் மன்னன் (king of clay court) என்று அறியப்படும் நடால் களிமண் தரை மைதானமுடைய ஃப்ரெஞ்ச் ஓபன் பட்டங்களை 2005 முதல் 2008 வரை தொடர்ந்து நான்கு முறை பெற்றுள்ளார்.இதில் மூன்று வருடம் தொடர்ச்சியாக இவரிடம் தோல்வியடைந்தது ஃபெடரர்.

புல் தரை மைதானங்களில் அதிகம் சோபிக்காத நடால் கடந்த ஆண்டின் விம்பிள்டன் போட்டியில் ரோஜர் ஃபெடரரை தோற்கடித்து அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

ரோஜர் ஃபெடரர்

14 வயதில் சுவிட்சர்லாந்தின் சாம்பியன் ஆனவர் ஃபெடரர்.தற்சமயம் உலக டென்னிஸ் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்.நான்கரை வருடமாக(2004 முதல் 2008வரை) தரவரிசையில் முதலிடத்திலிருந்து சாதனை செய்தார்.

இதுவரை 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார்.14 பட்டங்கள் பெற்ற அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸின் சாதனையை முறியடிக்க இனி ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டமே எஞ்சியுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் கிரிக்கெட்டைக் குறித்து அறியாதவர் கூட சச்சினை அறிவர் எனலாம்.தனது 16 ஆவது வயதிலேயே சர்வதேச ஆட்டங்களில் காலடி எடுத்து வைத்த சச்சின் 25 வயதிற்குள்ளாக 16 சதங்களை அடித்து முடித்திருந்தார்.

சச்சினின் சாதனைகளை பட்டியலிட இந்த பக்கங்கள் போதாது.அவரின் குறிப்பிடும் படியான சில சாதனைகள் இங்கே.

லியாண்டர் பயஸ்
16 ஆவது வயதிலேயே டென்னிஸ் மட்டையை பிடித்தவர்.ஒலிம்பிக்கில் டென்னிசிற்காக வெண்கலப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர்.

தனது 17 ஆவது வயதிலேயே லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் ஜூனியர் பட்டம் வென்றவர் அதோடு 1990 ல் உலக ஜூனியர் டென்னிசின் தர வரிசையில் முதலிடமும் பிடித்தார்.

இதுவரை 8 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார் பயஸ்.மகேஷ் பூபதியுடன் 1999 ல் சர்வதேச இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பெற்றிருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் 10 வயதில் தந்தையை இழந்த திலீப் குமார் குடும்பப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய கட்டாயம்,என்றாலும் இசை மீதான தனது வேட்கையையை அவர் விட்டுவிடவில்லை.இந்தியாவில் வேறு எந்த கலைஞரும் காணாத மேல்நாட்டு இசைக்கருவிகளையும்,தொழில்நுட்ப கருவிகளையும் அறுபதுகளிலேயே இறக்குமதி செய்து இசை மீட்டிய தந்தை சேகரின் வழி இளமையிலேயே பயணித்தவர்.

26 ஆவது வயதிலேயே திரைப்படத்திற்கு இசையமைத்தார் ஆஸ்கர் நாயகனான ரஹ்மான். அறிமுக படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருதும்,தேசிய விருதும் பெற்ற ஒரே இசையமைப்பாளர் என்ற சிறப்பைப் பெற்றார்.அவரின் பிற சாதனைகள் இங்கே.
இளம் வயதிலேயே இவர்கள் பெற்ற உயர்ந்த விருதுகளுக்கும்,பதக்கங்களுக்கும்,புகழுக்கும் காரணம் அவர்களின் முழுமையான ஈடுபாடும்,தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும்,கடின உழைப்புமேயாகும்.

இவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் மட்டுமல்லாமல் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என எண்ணுபவர்கள் எவரும் கடைபிடிப்பார்களெனில்,வெற்றி நிச்சயமே.

7 comments:

SUREஷ் said...

நானெல்லாம் பதினாறுவயதில் தனியே சினிமாவுக்குக் கூட போனதில்லை

SUREஷ் said...

//ஆடுகளத்தில் பிற வீரர்களை போல் கால்களில் கவனம் செலுத்தாமல் கால்பந்தில் மட்டுமே கவனம் செலுத்தும் சாதுவானவர்.
//

:}}

சரவணகுமரன் said...

நல்ல தொகுப்பு

எட்வின் said...

உங்களின் தொடர் வருகைக்கு நன்றி மருத்துவர் அய்யா.

நம்மள எல்லாம் எங்க நம்ம நினச்சத செய்ய விட்டாங்க வீட்டில.கிரிக்கெட் மட்டய தூக்கினாலே... போயிரு அப்படியே போயிரு... வீட்டுக்கு வந்திரவே வந்திராதன்னு டோஸ் தான் விழும்

எட்வின் said...

நன்றி சரவணகுமரன் அவர்களே.

இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் அனைவரும் இளமையிலேயே மிக உயர்ந்த விருதுகளையும்,பட்டங்களையும் வென்றிருக்கிறார்கள்.

1.மெஸ்ஸி- 2005,2006,2007 ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த இளம் வீரர் விருது,2008 ல் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கமும் பெற்றார்(அர்ஜென்டினா அணியுடன்)

2.நடால்- பெய்ஜிங்க் ஒலிம்பிக்கின் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம்

3.ஃபெடரர்- பெய்ஜிங்க் ஒலிம்பிக்கின் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம்

4.லியாண்டர்- 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம்

5.சச்சின்- பெறாத விருதுகள் வெகு குறைவு பத்மஸ்ரீ,பத்மவிபூஷன். 1997 ல் விஸ்டனின் சிறந்த வீரர்

6.ரஹ்மான்- ஆஸ்கர் குறித்து சொல்லவே தேவையில்லை.
உலகில் அதிகமாக விற்பனை ஆகும் இசைத்தட்டுகளில் ரஹ்மானிற்கு ஆறாவது இடம்.விற்பனையில் மடோனா,celine dion,elton john எல்லாம் இவருக்கும் கீழே தான்.

இது நம்ம ஆளு said...

அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்

விஷ்ணு. said...

நல்ல பதிவை பதிச்சு இருக்கீங்க

Post a Comment

Related Posts with Thumbnails