June 30, 2009

மொக்கை: இவிங்க இப்பிடித்தான்!

செய்தி-கலைஞர் புதிய படமொன்றிற்கு திரைக்கதை எழுதப்போகிறார்

இலங்கைத் தமிழன்: அப்பாடா இனி இரங்கற்பா க்களில் இருந்து சில காலம் தப்பிக்கலாம்
பிரதமர் சிங்: அப்போ இனி தந்தி தொல்லை இல்லைன்னு சொல்லுங்க
---------------------------------------
தொடர்ந்து ipl,T20 உலகக் கோப்பைன்னு ஆடி வரும் தோனி சில மாதம் ஓய்வெடுக்கணும்னு பேசிக்கிறாங்களே.

IPL க்கு அப்புறம் உலகக்கோப்பை ஆட்டங்களில் மட்டும் என்ன செஞ்சாராம் அவரு, ரெண்டு மணி நேரம் நின்னிருப்பாரா மைதானத்தில. இப்போ என்ன ஓய்வு வேண்டி கெடக்கு.
---------------------------------------

அந்த ரீபக் விளம்பரத்தில 'பிபாஷா' கூட ஓடுறது 'தோனி' மாதிரி இல்ல.

ஆமா தோனியே தான் அது. அதுல மட்டும் இல்லாம மத்த விளம்பரங்கள்ளயும் காட்டின வேகத்த வேர்ல்ட் கப்புல காமிச்சிருந்தா ஜெயிச்சிருக்கலாம்!
(பி.கு: இன்றைய தேதியில் இந்தியாவில் மிக அதிக விளம்பரங்களில் நடித்து வரும் நட்சத்திரம் தோனி தானாம். சினிமா நடிக நடிகைகளுக்குக் கூட இந்த அளவுக்கு கிராக்கி இல்லை)
-----------------------------------
செய்தி: தோனி சம்மதம் தெரிவித்தால் திருமணம் செய்ய தயார்-லட்சிமி ராய்

அவரு ஏற்கெனவே கவுந்தது போதாதுங்களா? கிரிக்கெட்டுக்கே 'பாய்' சொல்ல வச்சிராதீங்க 'ராய்' மேடம்.
-------------------------------------
நிருபர்: 2011 ல் காமராஜர் ஆட்சி அமைப்பது எந்த நிலையில இருக்கு?

காங். தலைவர்: 2011 ல் 'காமராஜர் ஆட்சி அமைய நிச்சயம் முயற்சிப்போம்'

நிருபர்: நல்ல முன்னேற்றம் தான்! என்ன முன்னாடி 'ஆட்சி அமைப்பது நிச்சயம்' அப்படீன்னீங்க, இப்போ முயற்சிப்போம் அப்படின்னு ஒரு வார்த்தையை கூட சேர்த்திருக்கீங்க.
----------------------------------------
நிருபர்: அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்திற்கும் அதிகமா மாணவர்களிடம் வசூல் பண்ணா புகார் செய்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க பண்ணியிருக்காங்களே.

கல்லூரி முதல்வர்: (ஆஃப் ரெக்கார்டில்) என்ன இது சின்னப்பிள்ளத் தனமா இருக்கு.இப்பிடி வசூல் பண்ணச் சொல்றதே அரசாங்கத்தில இருக்கும் எம்மெல்லே வான எங்க காலேஜ் சேர்மன் தான.

நிருபர்: !!!!!!!!!!!!!!?????
-------------------------------------
இது போன்ற கல்வித் திருட்டுக்களை தடுக்கவும், ராகிங்கை ஒழிக்கவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் அவர்கள் அறிமுகப்படுத்தி வரும் புதிய திட்டங்களை மாணவர்களும், பெற்றோர்களும் சரியான முறையில் பயன்படுத்தினால் வியாபாரமாகி வரும் கல்வியை கயவர்கள் கையிலிருந்து காக்க முடியும்.

தங்கள் வருங்காலம் பாதிப்படையும் என கருதி வாயைக் கட்டிக் கொண்டு இருக்கும் மாணவர்களும், பெற்றோர்களும் உள்ள வரை இந்த திருட்டையும், அராஜகத்தையும் தடுக்க முடியாது.

June 29, 2009

நாடோடிகள்,ஸ்ருதி ஹாசன்,ஷரப்போவா,கிரிக்கெட்



நண்பர்கள் சேர்ந்து நட்பின் வலிமையை உணர்த்தியிருக்கும் திரைப்படம் நாடோடிகள் எனலாம்.இரு தோல்விப்படங்களைக் கொடுத்த பின்னரும் தளராமல் இந்த படத்தை இயக்கி வெற்றியும் பெற்றிருக்கும் இயக்குனர் சமுத்திரக்கனி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அதே காரணத்தை(தோல்வி) வலியுறுத்தி பலரால் நடிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்ட பின்னரும் நண்பனுக்காக துணிந்து நடித்து தனது சாமர்த்தியமான நடிப்பால் கதைக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறார் சசி குமார்.

காதல் என்றும் உயர்ந்தது, சில காதலர்களாலேயே காதலுக்கு களங்கம் ஏற்படுகிறது என்ற மையக் கதைக்கருவோடு அந்த காதலுக்காக எதுவும் செய்யும் நண்பர் கூட்டங்களையும் அதனால் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் இழப்புகளையும் இணைத்து திரைப்படத்திற்கு முழு வடிவம் கொடுத்துள்ளார் இயக்குனர்.

நம்மை கதாபாத்திரங்களுடன் தொடர்ந்து பயணம் செய்யும் விதம் தீட்டப்பட்டிருக்கும் தொய்வில்லாத திரைக்கதையும், அடுத்து என்ன நிகழும் என யூகிக்கவியலாத அளவுக்கு அமைக்கப்பட்டிருக்கும் காட்சி அமைப்புகளும் நம்மை இருக்கைகளில் கட்டிப் போடுகின்றன.

ஒருபுறம் தன் மகன் எது செய்தாலும் சரியாகத் தான் செய்வான் என கருதும் சசியின் தகப்பனார் , மறுபுறம் தன் மகன் என்ன செய்தாலும் அதில் சந்தேகம் கொள்ளும் பாண்டியின் தகப்பனார் என்ற இரு வேறான தகப்பன் கதாபாத்திரங்கள்... இப்படியொரு தகப்பன் நமக்கு வாய்க்க வேண்டும்/வாய்க்கக் கூடாது என நிச்சயம் யோசிக்கச் செய்யும்.

காமெடிக்கென்று தனிக்களம் இல்லையென்றாலும் வசனங்களிடையே வரும் டைமிங்க் காமெடிகளால் தியேட்டரில் சிரிப்பலை எழுகிறது.

"நண்பர்கள் இருக்கிறாங்க அப்படின்ற ஒரே தைரியத்தால தான் இன்னைக்கும் துணிஞ்சு காதலிக்கிறாங்க" என்கிற வசனத்தில் இளைஞர்களின் கைத்தட்டல்களை அள்ளுகிறார் சமுத்திரக்கனி அவர்கள்.

அறிமுக கதாநாயகியிடமிருந்து அளவாக ஆனால் அற்புதமாக நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.முதல் பாதியில் நாயகி காட்டும் குறும்புகளை ரசிக்கலாம். பாடல்கள் சொல்லும்படி இல்லையென்றாலும் பின்னணி இசையில் இசையமைப்பாளர் அதிக சிரத்தை எடுத்து செய்திருக்கிறார்.

மொத்தத்தில் காதலின் உயர்வையும், அதற்கு துணை நிற்கும் வலிமையான நட்பின் தூய்மையையும் அற்புதமாக படமாக்கியிருக்கிறார்கள். நிச்சயம் இளைஞர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாடோடிகளுக்கு விகடன் நிச்சயம் 50 ற்கும் அதிகம் மார்க்குகள் வழங்கலாம் என எதிர்பார்க்கிறேன் :)
---------------------------------------

ஸ்ருதி ஹாசன்


சத்தமே இல்லாமல் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் luck என்ற ஹிந்திப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது பாலிவுட்டில் அவருக்கு அறிமுக படமாக இருக்கும். அடுத்த மாதம் இந்த திரைப்படம் வெளியாகலாம் என தெரிகிறது.
---------------------------------------

ஷரப்போவா



டென்னிஸ் உலகத் தரவரிசையில் சில ஆண்டுகள் முன் முதலிடம் பெற்றிருந்த ரஷ்ய வீராங்கனை மரியா ஷரப்போவாவிற்கு இது போதாத காலம் போலும். காயத்திலிருந்து விடுபட தான் பெற்ற பத்து மாத சிகிச்சைக்குப் பின்னர் ஃப்ரெஞ் ஓபன், விம்பிள்டன் என ஆடிய இரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் காலிறுதிக்குக் கூட தகுதி பெறாமல் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

சரியான ஓய்வு இல்லாமையும், தகுந்த பயிற்சி ஆட்டங்கள் இல்லாமையுமே அவரது தோல்விகளுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

இதே கருத்து இந்திய கிரிக்கெட் அணிக்கும் அதன் தலைவரான தோனிக்கும் மிகப் பொருந்தும். சரியான ஓய்வு இன்மையும், தகுந்த பயிற்சி ஆட்டங்கள் இல்லாமையுமே இந்திய அணியின் தோல்விகளுக்கு காரணம் என கருதுகிறேன்.

June 27, 2009

பேருந்தில் இருக்கை பிடிக்கும் அவஸ்தையும்;காவு வாங்கும் மினி பஸ்களும்

இன்றைய தேதியில் குறைந்தது 100 கி.மீ தொலைவிலிருக்கும் ஊர் ஒன்றிற்கு முன் பதிவில்லாத அரசு பேருந்தில் பயணம் செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லை.குறிப்பாக மாணவர்களும்,அலுவலகப் பணிகளுக்கு செல்பவர்களும் பரபரப்பாக இருக்கும் காலை மற்றும் மாலை வேளைகளிலும்,விழா நாட்களிலும்,முகூர்த்த நாட்களிலும் மாட்டிக்கொண்டால் பெரும் அவஸ்தைக்கு உள்ளாக வேண்டிய நிலை. பெரும்பாலும் அரசுப் பேருந்துகள் சரியான நேரத்திற்கு வருவதில்லை; அப்படியே வந்து சேர்ந்தாலும் தக்க சமயத்தில் கிளம்புவதுமில்லை.

"வாசல் வழியாக அதுவும் ஆண்கள் ஏறுவதெற்கென அமைக்கப்பட்டிருக்கும் பின்வாசல் வழியாகத்தான் ஏறுவோமென கொள்கை கொண்டிருக்கும் என்னைப்போன்ற இ.வா க்களுக்கு வந்து நிற்கும் பேருந்துகளில் இருக்கை கிடைக்கப்பெறுவது குதிரைக்கொம்பு தான். பேருந்துகள் பேருந்து நிலையத்தில் வந்து நிற்கும் முன்னரே, இருக்கைகளில் இடம் பிடிப்பதெற்கென்று உள்ளிருக்கும் பயணிகளையும் இடித்துக் கொண்டு பேருந்தினுள் தங்கள் உடல்களைத் திணித்து விடுவர்.



கைக்குட்டைகள், சிறிய பை முதல் பெரிய பைகள், குடைகள், துண்டுகள்,நோட்டுப் புத்தகங்கள் என தங்கள் கைகளில் உள்ளவற்றை எல்லாம் பேருந்தின் ஜன்னல் வழியாக திணித்து இடம் பிடிப்பது ஒரு கலை என்று கூட கூறலாம்!? இவை எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் கடந்த வாரம் நான் கண்ட காட்சி சற்றே பதற்றப்பட வைத்தது. ஏறக்குறைய இரு வயது நிரம்பிய சிறு குழந்தை ஒன்றை பேருந்தின் ஜன்னல் வழியாக திணித்து இடம் பிடிக்கிறார் ஒரு தந்தை. குழந்தையும் சிரித்துக் கொண்டே இருக்கிறது!! இவரைப்போன்றவர்களை எல்லாம் என்னவென்று சொல்வது?

தென் தமிழகத்தின் மதுரை,திருநெல்வேலி,நாகர்கோவில் ஆகிய நகரங்களில் கடந்த ஒரு மாதமாக பேருந்து பயணம் செய்கையில் கண்ட காட்சிகள் தான் இவை.

எனக்கு தெரிந்த வரை பெங்களூருவிலும் மும்பையிலும் இந்த நிலைமை இல்லை. பெங்களூருவில் 90% பேருந்துகளில் கதவு வைத்திருக்கிறார்கள்.கதவு திறப்பதும்,அடைப்பதும் ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.(தமிழகத்தில் தற்போது சில தாழ்தள பேருந்துகளில் இருப்பது போன்று) எனவே பேருந்து முழுமையாக நிற்பதற்கு முன்னர் அத்தனை எளிதில் உள்ளே நுழைந்து விட முடியாது. ஜன்னல் வழியாக எதையும் திணிப்பதும் பல நேரங்களில் காவல் துறையினரால் கட்டுப்படுத்தப்படுகிறது.

மும்பையிலோ ஜனங்கள் வரிசையில் நின்றே பேருந்தினுள் ஏறுகிறார்கள்.ஜனங்கள் முண்டி அடித்துக் கொண்டு ஏறுவதைக் கட்டுப்படுத்துவதற்கென்றே தனியாக காவல் துறையினர் காணப்படுவர்.நம்மூரில் காவல் துறையினர் இருந்தாலும் முண்டி அடித்துக் கொண்டு ஏறுவதைக் கண்டுகொள்வதில்லை.

******************************

பேருந்து எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்கள் கூட்டம் குறைந்த பாடில்லை. அடுத்த இரு மாதங்களில் மேலும் 1500 புதிய அரசுப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப் போகிறார்களாம் தமிழகத்தில்.நல்ல விஷயம் தான். இந்த அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு அவர்கள் மற்றொரு தடாலடி அறிவிப்பையும் சேர்த்தே வெளியிட்டுள்ளார்.

அதாவது விரைவில் 2500 புதிய மினி பஸ்களுக்கும் அனுமதி அளிக்கப் போகிறார்களாம். ஏற்கெனவே மினி பஸ்களும் அதன் ஓட்டுனர்,நடத்துனர்களும் மக்களை பெரும் இன்னலுக்குள்ளும் இளைஞிகளை ஓட்டியும் கொண்டிருக்க மேலும் மினி பஸ்களின் அவசியம் தேவை தானா?

மினி பஸ்கள் குக்கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மையே.ஆனால் பிற மினி பஸ்களின் போட்டியின் காரணம் நகரத்திற்குள்ளும்,கிராமங்களுக்குள்ளும் அவர்கள் காண்பிக்கும் வேகம் பல உயிர்களை (இவற்றில் ஆடு மாடுகளும் அடக்கம்) காவு வாங்குவது அன்றாட செய்தியாகி வருகிறது.பயணிகளை இறக்கி விடும் முன்னரே சரியாக கவனிக்காமல் பஸ்ஸைக் கிளப்பியும் விடுகிறார்கள். இது கடந்த வாரம் இருமுறை நான் கண்ட காட்சி.

இது ஒரு புறமென்றால் பெண் பயணிகளிடம் மினி பஸ் நடத்துனர்களின் உரசல்களுக்கும், கேலிக்கும் அளவே இல்லை ஒரு மினி பஸ்ஸிற்கு இரண்டு நடத்துனர்கள் இருக்கிறார்கள்.இவர்கள் அடிக்கும் கூத்து கொஞ்ச நஞ்சமல்ல.சிலர் காதல் ஆசை காட்டி கற்பையும் பறிக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்னர் நெல்லையில் இப்படியாக 5 பெண்களை ஏமாற்றிய நடத்துனர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தற்பொழுது இருக்கும் மினி பஸ்களை சரிவரக் கட்டுப்படுத்தினாலே போதுமாக இருக்கும்.வீட்டிற்கு இரண்டு மூன்று என மோட்டார் சைக்கிள்கள் வந்து விட்டன.பெருகி வரும் கார்களின் எண்ணிக்கை மறுபுறம். இவற்றினிடையில் மேலும் புதிய மினி பஸ்களின் அறிமுகம் ஆபத்திலும், விபத்திலும் முடியவே வாய்ப்புள்ளது.

June 14, 2009

தோனி,ரொனால்டோ,அயன்

சரியான இணைய இணைப்பு கிடைக்கப்பெறாமையால் அதிகம் எழுத இயலுவதில்லை. எனினும் கடந்த இரு வாரங்கள் நான் கவனித்ததும் எழுத நினைத்ததுமான சில விஷயங்கள் இவை.

தோனி

ஐ.பி.எல் 20-20 போட்டிகளின் தாக்கம் மாறும் முன்னரே ஐ.சி.சி 20-20 உலகக் கோப்பைப் போட்டிகள் துவங்கியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தாலும் பல வீரர்களுக்கு வில்லங்கமானதாகவே தெரிகிறது. குறிப்பாக இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தலைவரான தோனிக்கு இது போதாத காலம் போலும்.



தோனியின் புறத்தோற்றமே நம்பிக்கை அளிக்கும் படியாக இல்லை,மிகவும் சோர்வுற்றவராகவும் நம்பிக்கை இழந்தவராகவும் இருப்பதாகவே படுகிறது.பெங்களூர் அணிக்கு எதிரான ஐ.பி.எல் அரை இறுதி போட்டியில் தான் எதிர்கொண்ட பந்துகளுக்கு தக்கதாக ஓட்டங்கள் எடுக்கத் தவறியது தோல்விக்கு காரணமானது போன்றே மே.இ தீவிற்கு எதிரான முதல் சூப்பர் 8 ஆட்டத்திலும் சீரான ஓட்ட விகிதத்தில் ஓட்டம் எடுக்கத் தவறினார்;ஒரு ரன் அவுட்டையும் தவற விட்டார்;அணியும் தோல்வியைத் தழுவியது.

சரியான ஓய்வும் தன்னம்பிக்கையும் தோனியை மீண்டும் புத்துணர்ச்சி பெறச் செய்யலாம். இங்கிலாந்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் எப்படி பங்காற்றுகிறார் என பாப்போம்

ரொனால்டோ

இங்கிலாந்தின் மேன்செஸ்டர் யுனைட்டட் கால்பந்து கிளப்பிலிருந்து 80 மில்லியன் பவுண்ட் (சுமார் 800 மில்லியன் ரூபாய்) பணம் பரிமாற்றத்தில் ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் கிளப்பிற்காக வாங்கப்பட்டிருக்கிறார் போர்ச்சுக்கல்லைச் சார்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.



கால்பந்து வீரர் ஒருவர் இத்தனை அதிகமான பணத்திற்கு விலை போவது சரித்திரத்திலேயே இது தான் முதல் முறை.கடந்த மாதம் பார்சிலோனாவிற்கு எதிராக நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியிலும்,கடந்த சீசனிலும் சரிவர ஆடாத பின்னரும் இத்தனை கோடி ரூபாய் ரொனால்டோவிற்காக செலவழிக்கப்பட்டிருப்பது முந்தைய ஆட்டங்களில் அவர் காண்பித்த தனித்திறமைக்கும், ஆட்டத்திறனுக்கும் அளிக்கப்பட்டிருக்கும் பெருந்தொகையாகவே தெரிகிறது.

பார்சிலோனவிடம் ஸ்பானிஷ் லீக் சாம்பியன் பட்டத்தைப் பறி கொடுத்த ரியல் மேட்ரிட் அணி ரொனால்டோவின் வருகையால் பட்டத்தை மீண்டும் கைப்பற்றுமா என பார்க்கலாம்,

அயன்

ஒளிப்பதிவாளர், கேமரா மேன் என பன்முகம் கொண்ட திரு. கே.வி.ஆனந்த் அவர்களின் இயக்குனர் என்ற மற்றொரு முகம் 'அயன்' திரைப்படம் மூலம் வெளிவந்திருக்கிறது. கடத்தல் மூலம் என்ன விதமான பாதிப்பு நாட்டிற்குள்ளும், ஒரு குடும்பத்திற்குள்ளும், கடத்தலில் ஈடுபடும் தனி ஒருவனின் வாழ்விலும் ஏற்படுகிறது என்ற அருமையான கதைக்கருவைக் கொண்டு திரைப்படத்தைத் தீட்டியிருக்கிறார் ஆனந்த் அவர்கள்.



கதைக்கரு பாராட்டும்படி இருந்தாலும் திரைக்கதையில் சீரான வேகம் இல்லாமையும் தொய்வான ஆரம்பமும் படத்தின் மேல் பிடிப்பை ஏற்படுத்தவில்லை. தேவையற்ற இடங்களில் வரும் பாடல்களும் கதையில் இருந்து நம்மை சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளச் செய்கின்றன.

ஆனாலும் பாடல்கள் எடுப்பதற்கு காண்பித்திருக்கும் சிரத்தையும்,ஒளிப்பதிவும்,கேமராவின் கண்ணியமும் கண்களுக்கும்,மனதிற்கும் விருந்தளிக்கின்றன. குறிப்பாக ஆப்பிரிக்க நாடு ஒன்றில் படமாக்கப்பட்ட வைரத்தைத் திருடியவர்களை சூர்யா துரத்துகின்ற காட்சியும்,இறுதி சண்டைக் காட்சியும் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக படமாக்கப்பட்டுள்ளது.

சூர்யாவும்,பிரபுவும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கின்றனர்.தமன்னாவிற்கு சொல்லும்படியான காட்சிகள் அமையவில்லை.இரு பாடல்களைத் தவிர இசையும் சொல்லும் படியாக இல்லை.அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியான பாணியைக் கடைபிடிக்கும் ஹாரிஸ் அவர்கள் தனது பாணியை சற்றே மாற்றிக் கொண்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
Related Posts with Thumbnails