June 14, 2009

தோனி,ரொனால்டோ,அயன்

சரியான இணைய இணைப்பு கிடைக்கப்பெறாமையால் அதிகம் எழுத இயலுவதில்லை. எனினும் கடந்த இரு வாரங்கள் நான் கவனித்ததும் எழுத நினைத்ததுமான சில விஷயங்கள் இவை.

தோனி

ஐ.பி.எல் 20-20 போட்டிகளின் தாக்கம் மாறும் முன்னரே ஐ.சி.சி 20-20 உலகக் கோப்பைப் போட்டிகள் துவங்கியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தாலும் பல வீரர்களுக்கு வில்லங்கமானதாகவே தெரிகிறது. குறிப்பாக இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தலைவரான தோனிக்கு இது போதாத காலம் போலும்.



தோனியின் புறத்தோற்றமே நம்பிக்கை அளிக்கும் படியாக இல்லை,மிகவும் சோர்வுற்றவராகவும் நம்பிக்கை இழந்தவராகவும் இருப்பதாகவே படுகிறது.பெங்களூர் அணிக்கு எதிரான ஐ.பி.எல் அரை இறுதி போட்டியில் தான் எதிர்கொண்ட பந்துகளுக்கு தக்கதாக ஓட்டங்கள் எடுக்கத் தவறியது தோல்விக்கு காரணமானது போன்றே மே.இ தீவிற்கு எதிரான முதல் சூப்பர் 8 ஆட்டத்திலும் சீரான ஓட்ட விகிதத்தில் ஓட்டம் எடுக்கத் தவறினார்;ஒரு ரன் அவுட்டையும் தவற விட்டார்;அணியும் தோல்வியைத் தழுவியது.

சரியான ஓய்வும் தன்னம்பிக்கையும் தோனியை மீண்டும் புத்துணர்ச்சி பெறச் செய்யலாம். இங்கிலாந்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் எப்படி பங்காற்றுகிறார் என பாப்போம்

ரொனால்டோ

இங்கிலாந்தின் மேன்செஸ்டர் யுனைட்டட் கால்பந்து கிளப்பிலிருந்து 80 மில்லியன் பவுண்ட் (சுமார் 800 மில்லியன் ரூபாய்) பணம் பரிமாற்றத்தில் ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் கிளப்பிற்காக வாங்கப்பட்டிருக்கிறார் போர்ச்சுக்கல்லைச் சார்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.



கால்பந்து வீரர் ஒருவர் இத்தனை அதிகமான பணத்திற்கு விலை போவது சரித்திரத்திலேயே இது தான் முதல் முறை.கடந்த மாதம் பார்சிலோனாவிற்கு எதிராக நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியிலும்,கடந்த சீசனிலும் சரிவர ஆடாத பின்னரும் இத்தனை கோடி ரூபாய் ரொனால்டோவிற்காக செலவழிக்கப்பட்டிருப்பது முந்தைய ஆட்டங்களில் அவர் காண்பித்த தனித்திறமைக்கும், ஆட்டத்திறனுக்கும் அளிக்கப்பட்டிருக்கும் பெருந்தொகையாகவே தெரிகிறது.

பார்சிலோனவிடம் ஸ்பானிஷ் லீக் சாம்பியன் பட்டத்தைப் பறி கொடுத்த ரியல் மேட்ரிட் அணி ரொனால்டோவின் வருகையால் பட்டத்தை மீண்டும் கைப்பற்றுமா என பார்க்கலாம்,

அயன்

ஒளிப்பதிவாளர், கேமரா மேன் என பன்முகம் கொண்ட திரு. கே.வி.ஆனந்த் அவர்களின் இயக்குனர் என்ற மற்றொரு முகம் 'அயன்' திரைப்படம் மூலம் வெளிவந்திருக்கிறது. கடத்தல் மூலம் என்ன விதமான பாதிப்பு நாட்டிற்குள்ளும், ஒரு குடும்பத்திற்குள்ளும், கடத்தலில் ஈடுபடும் தனி ஒருவனின் வாழ்விலும் ஏற்படுகிறது என்ற அருமையான கதைக்கருவைக் கொண்டு திரைப்படத்தைத் தீட்டியிருக்கிறார் ஆனந்த் அவர்கள்.



கதைக்கரு பாராட்டும்படி இருந்தாலும் திரைக்கதையில் சீரான வேகம் இல்லாமையும் தொய்வான ஆரம்பமும் படத்தின் மேல் பிடிப்பை ஏற்படுத்தவில்லை. தேவையற்ற இடங்களில் வரும் பாடல்களும் கதையில் இருந்து நம்மை சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளச் செய்கின்றன.

ஆனாலும் பாடல்கள் எடுப்பதற்கு காண்பித்திருக்கும் சிரத்தையும்,ஒளிப்பதிவும்,கேமராவின் கண்ணியமும் கண்களுக்கும்,மனதிற்கும் விருந்தளிக்கின்றன. குறிப்பாக ஆப்பிரிக்க நாடு ஒன்றில் படமாக்கப்பட்ட வைரத்தைத் திருடியவர்களை சூர்யா துரத்துகின்ற காட்சியும்,இறுதி சண்டைக் காட்சியும் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக படமாக்கப்பட்டுள்ளது.

சூர்யாவும்,பிரபுவும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கின்றனர்.தமன்னாவிற்கு சொல்லும்படியான காட்சிகள் அமையவில்லை.இரு பாடல்களைத் தவிர இசையும் சொல்லும் படியாக இல்லை.அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியான பாணியைக் கடைபிடிக்கும் ஹாரிஸ் அவர்கள் தனது பாணியை சற்றே மாற்றிக் கொண்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

6 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கால்பந்து வீரர் ஒருவர் இத்தனை அதிகமான பணத்திற்கு விலை போவது சரித்திரத்திலேயே இது தான் முதல் முறை//


தல இந்த சரித்திரத்திலேயே முதல் முறை ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விலை கூடிக்கொண்டே போகிறது. கூடிய விரைவில் கிரிக்கெட்டிலும் அப்படிச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்

Tech Shankar said...

s u p e r

கலையரசன் said...

அருமை! லேட் விமர்சனம் என்றாலும்..
லேட்டஸ்ட் விமர்சனம்... சூப்பருங்கண்ணா!!
இதுபோல இடுகை இட்டுள்ளேன், வந்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்...

http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_14.html

கிறிச்சான் said...

வீட்ல சும்மா இருக்கமாட்டீங்களா ? அயன் எனக்கு பிடிச்சிருக்கு...உங்களுக்கு?

சாஷீ said...

எனக்கும் மிகவும் பிடித்த படம்அயன் {தமன்னாவிற்கு கோயில் கட்ட பேச்சுவார்த்தைகள் நடக்கிறது },ஒரு சின்ன தகவல்,k.v.ஆனந்த் ஏற்கனவே ,"கனா கண்டேன் "மூலம் இயக்குனர் ஆனவர்..டோனி.ரொனால்டோ தகவல்கள் அருமை,

GNU அன்வர் said...

iam nattu boltu contact me http://nattuboltu.blogspot.com/2009/06/blog-post_17.html

Post a Comment

Related Posts with Thumbnails