July 30, 2009

உங்களையும் பாதித்திருக்கக் கூடிய 10 இல்லை 11 விஷயங்கள்

பத்து பத்துன்னு எல்லாரும் பட்டைய கெளப்பிட்டு இருக்காங்க; சரி நம்ம ஏன் பத்த போடணும்! பத்து நம்ம கிரிக்கெட்டில செல்லாத ஆட்டம் ஆச்சே. நம்ம ஆட்டத்துக்கு பதினொரு ஆள் இல்ல வேணும்... அந்த வகையில் இத்தனை வருடங்கள் என்னைக் கவர்ந்த, கவிழ்த்த ; நான் ரசித்த, வியந்த; என்னால் மறக்க, மறுக்கவியலாத பதினொரு விஷயங்கள் இங்கே.

இவற்றில் பல உங்களையும் கவர்ந்திருக்கக்கூடும் என்றே எண்ணுகிறேன்.

1.ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

புன்னகை மன்னன் திரைப்படத்தின் "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்" பாடலை இப்போது கேட்டாலும் புதிதாகத் தான் தோன்றுகிறது. கவிப்பேரரசு வைரமுத்துவின் மிக எளிதான பாடல் வரிகள், மனதை லயிக்கும் இசைஞானி இளையராஜாவின் மெட்டு, சின்னக்குயில் சித்ராவின் சிறைவைக்கும் குரல் என அசத்தலான ஒரு பாடல் இது.


2.The Corrs-Breathless

அயர்லாந்தின் Andrea Corr, Carolilne Corr, Sharon Corr & Jim Corr என்ற ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் இணைந்த பாப் இசைக்குழு தான் THE CORRS. இவர்களின் Leave Me Breathless என்ற பாடலைக் கேட்டு அசந்து போனேன்.

குறிப்பாக இந்த குழுவில் drum இசைக்கும் Caroline ன் திறமையைப் பார்த்து இன்றும் மலைத்து நிற்கிறேன். ஒரு பெண் அத்தனை வேகமாக drum இசைக்கவியலுமா என ஆச்சரியப்படுகிறேன். இவரின் அதிரடியை நீங்களும் கொஞ்சம் பாருங்கள்.


3.911

ஒரு மனிதனின்/சமூகத்தின் கோபம் இத்தனை பெரிய விளைவுகளை ஏற்படுத்துமா என்ற கேள்வியோடு எனக்குள்ளே மேலும் பல கேள்விகளை எழுப்பிய சம்பவம் 9.11.2001 ல் அல்-கொய்தாவால் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க தாக்குதல்.

4.உயிரே-1998

இசைப்புயலின் இசையென்றால் கொள்ளைப் பிரியம்.இசைப்புயல் இசையமைத்த திரைப்படங்களின் ஒலிநாடா (cassette) எப்போது வெளிவருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். 1998 ல் உயிரே வெளியாகியிருந்த சமயம் அது.

ஒலிநாடா வாங்க சென்ற வேகத்தில் இருசக்கர வாகனத்தை No Parking ல் நிறுத்தி விட்டோம் நானும் எனது மைத்துனரும்; மறுநாள் நீதிமன்றம் வரை சென்று அபராதம் கட்ட வேண்டிய நிலைமை வந்ததை நினைத்து இன்றும் சிரிக்கத் தோன்றுகிறது. 5.தர்மபுரி பேருந்து எரிப்பு-2.2.2000

தர்மபுரியில் கல்லூரி இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம் அது. அரசியல் பிரச்சினை காரணமாக கோவை வேளாண் பல்கலைகழக பேருந்திற்கு சில கயவர்கள் தீ வைப்பும் ,மூன்று மாணவிகளின் மரணமும் அதன் பின்னர் தர்மபுரி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த மாணவர்களுக்கு பணிவிடைகள் செய்ததும் இன்றும் மறக்கவியலாது. அனைத்து அரசியல் கட்சிகளின் மீதும் வெறுப்பு தோன்றிய நாள் அது.

6.முதல் காதல்

பெரும்பாலானவர்களின் முதல் காதல் போன்றே எனது காதலும் ......... ஆமா அதே தான்... கவுந்து போச்சு.

7.இணையம்,பதிவுலகம்,கூகுள், ஆர்குட்

பத்து வருஷத்துக்கு முன்னால இது மாதிரி எதும் எழுதினா நான் மட்டும் தான் உக்காந்து ரசிக்கணும் sorry கொடுமயேன்னு உக்காந்து படிக்கணும், ஆனா இப்போ முகமே தெரியாத பல நண்பர்களை இணையம் தந்திருக்கிறது இந்த கொடுமய எல்லாம் சகிக்க.

பத்து நொடிகளுக்குள்ளாக பத்தாயிரம் இணையபக்கங்களை திரட்டித்தருகிறது Google.சில காலம் காணாமல் போன முகங்களை எல்லாம் orkut ம், facebook ம் தேடித்தருகிறது.இப்படியெல்லாம் உலகம் மாறிப்போகும் என பத்து வருடங்களுக்கு முன் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

8.Guitar

90' களில் Guitar இசைக்கருவியின் மீது அத்தனை ஆர்வம். அதன் பின்னர் நாகர்கோவிலில் 1994ஆம் ஆண்டு எனது நண்பர்களும் இரட்டைப்பிறவிகளுமான வால்டர் மற்றும் மோகனின் மூலம் இசைக்க கற்றுக்கொண்டது கனவை நனவாக்கிய ஒரு எதிர்பாராத நிகழ்வு என்று கூட கூறலாம்.

9.சச்சின்-1998

சச்சினின் ஆட்டத்தை ரசிக்க சொல்லித்தரவா வேண்டும். குறிப்பாக 1998 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் அடித்த இரண்டு அதிரடி சதங்கள் இன்றும் நினைவிலிருக்கிறது.


இறுதிப் போட்டியின் மறுநாள் நான் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பதை கூட பொருட்படுத்தாமல் நண்பன் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டி முன் முடங்கிக் கிடந்தேன்

10.Manchester United-சர்.அலெக்ஸ் ஃபெர்குசன்,பெக்காம்,

இங்கிலாந்து எனக்கு பிடித்த நாடு என்பதால் அங்கு உள்ள கால்பந்து அணிகளையும், வீரர்களையும் அதிகம் கவனிப்பது உண்டு. Manchester United அணியையும் அதன் மேலாளரான சர்.அலெக்ஸ் ஃபெர்குசனையும் கண்டு வியப்பதுண்டு. இத்தனை வயதிலும் அயராமல் உழைக்கும் இந்த மேலாளரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை பல.

அதே போன்று Manchester United அணியின் முன்னாள் தலைவரான டேவிட் பெக்காமின் திறமையும் ஆச்சரியப்பட வைக்கும்.

11.இந்தியா-தமிழகம்-நம்ம ஊரு

நமக்கு நெருக்கமாக இருக்கும் ஒருவரையோ அல்லது ஒரு இடத்தையோ விட்டு நாம் அகலும் போது தான் பிரிவின் கொடுமையை உணர்வோம்.அந்த வகையில் படிப்பினிமித்தமும், பணியினிமித்தமும் சொந்த ஊரை,தமிழகத்தை,இந்தியாவை விட்டு அகன்று நின்ற போது தான் அந்த வலியை உணர்ந்தேன்.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா...

இப்படி கிறுக்குகிறவன் புத்தகங்களையும்,எழுத்தாளர்களையும் பட்டியலிடாமல் போனது ஏனென்றால் முறையான புத்தக வாசிப்புகள் இல்லாமையால் தான். எனினும் எம்.எஸ்.உதயமூர்த்தி, ஜெயகாந்தன் போன்றோரின் படைப்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்திருக்கிறேன். பாரதியார் கவிதைகளையும் படித்ததுண்டு. முறையாக இப்போது தான் படிக்கத்தொடங்கி உள்ளேன்.

இந்த நேர்மை உங்களுக்கு பிடிச்சிருக்கும்ணு நினைக்கிறேன் :))

July 28, 2009

ஜூலை 28 ல் பிறந்து பிரபலமடைந்தவர்களும் வெட்டி பதிவரும்.

ஜூலை 28 ல் பிறந்த இந்த பிரபலங்களுக்கும்... (ஒருவேளை) இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடும் மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். பிரபலமடையாத இந்த? பதிவருக்கும் இன்று தான் பிறந்த நாள். ஜூலை 28 ல் பிறந்த மேலும் சில பிரபலங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

பால் ஸ்ட்ராங் (அமீர் கான் மாதிரி இல்ல !!! )
இங்கிலாந்து மற்றும் மேன்செஸ்டர் யுனைட்டட் கால்பந்து அணியின் மைக்கேல் கேரிக்

கேரி சோபர்ஸ்


சென்னை சூப்பர் கிங்க்சின் ஜேக்கப் ஓரம்

July 24, 2009

கலைஞர், கிரிக்கெட் மற்றும் சில குண்டக்க மண்டக்க கேள்விகள்

கலைஞர் தனது கோபாலபுரத்து வீட்டை அவரது காலத்திற்கு பின்னர் அவரது பெற்றோர்களின் பெயரில் மருத்துவமனையாக மாற்ற சொல்லியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். ஏழைத் தமிழர்கள் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டிருப்பதும் எப்போதும் போல் வரவேற்கப்பட வேண்டிய விஷயமே.

எனினும்... தனது மறைவிற்கு பின்னர் கூட தன் பெயரில் நல்லது நடக்கும் என நிரூபித்திருப்பவர்... தான் இருக்கும் போதே தமிழீழம் ஏற்பட வகை செய்திருந்தால் தமிழனமே காலம் காலமாக அவரை போற்றி புகழ்ந்திருக்கும். எல்லாம் கைவிட்டுப் போய்விட்டதே :(

--------------------

ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர் நேற்று ஆஸ்திரேலியாவிற்காக முதல் தர கிரிக்கெட்டில் இது வரை முதலிடத்தில் இருந்த சர்.பிராட்மேனை விட(28067) அதிக ஓட்டங்களைப் பெற்றிக்கிறாராம். தற்போது இவர் இங்கிலாந்தின் சோமர்செட் கவுண்டி அணிக்காக ஆடி வருகிறார். இதற்கு இவர் 615 இன்னிங்க்ஸ் எடுத்து கொண்டுள்ளார். பிராட்மேன் எடுத்துக்கொண்டதோ 338 இன்னிங்க்ஸ் மட்டுமே.

-------------------------------

சில குண்டக்க மண்டக்க கேள்விகள்

வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்கள் சிலவற்றிலும்... ஏன் சில அரசாங்க அலுவலகங்களில் கூட... 'தயவு செய்து 'கியூ' வரிசை/ 'Q' வரிசையில் வரவும்' என எழுதியிருப்பது ஏனோ? ஆங்கில Queue என்பதே வரிசை என்பதைத் தானே குறிக்கிறது... அப்புறம் ஏன் இப்பிடி எல்லாம் :)

--------------------------------

தமிழகத்தில் பால் கொள்முதல் விஷயத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஓரிரு மாதமாக பல கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்... இவர்களை பால் உற்பத்தியாளர்கள் என சொல்வது ஏன் என புரியவில்லை; பாலை இவர்களா உற்பத்தி செய்கிறார்கள்? இல்லையே! இவர்கள் பாலை பதப்படுத்தல், விநியோகித்தல் போன்றவற்றை தானே செய்கிறார்கள்; பின்னர் எப்படி இவர்கள் பால் உற்பத்தியாளர்கள் ஆனார்கள்.

---------------------

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொகுக்கப்படும் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளையும், தமிங்லீசில் பேசாமல் தமிழிலேயே பேசும் தொகுப்பாளர்களையும் நிச்சயம் பாராட்டலாம்.
ஆனால் கிரிக்கெட்டிற்கு 'மட்டையடி ஆட்டம்' என மொழிபெயர்த்திருப்பது சிரிப்பை வரவழைக்கிறது. Golf விளையாட்டிற்கு 'குழிப்பந்து ஆட்டம்' என பெயர் ஏதும் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை :) Obama, Bush ஐயும் கூட மொழிபெயர்ப்பார்களோ!! ஆங்கில பெயர்களை அப்படியே விட்டு விடலாமே.

------------------

நகைச்சுவை மாதிரி...

மருத்துவர்: என்னப்பா பல்ஸ் பாத்தியா?

மாணவன்: எல்லா பல்லும் நல்லா தான் இருக்கு டாக்டர். நோயாளிக்கு பல்லில எதும் பிரச்சினை இல்லை.

மருத்துவர்: உன் ஹியூமர் சென்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா நான் கேட்டது ஆங்கில Pulse அதாவது தமிழ் 'நாடி'ப்பா.

மாணவன்: நாடி கூட நல்லா தான் இருக்கு டாக்டர்... நீங்களே வேணா நல்லா முகத்த பாருங்க.

மருத்துவர்: @#*p%^/0#*%

July 22, 2009

நீ உன்னை அறிந்தால்


பக்கத்து வீடு ஒன்றின் மின்விசிறியை சரிசெய்வதில் மும்முரமாயிருந்தான் ரவி, மேல் மாடியிலிருந்து வழக்கம் போலவே அவனது அம்மாவின் குரல்... ஏண்டா ரவி, தெனம் காலங்காத்தால உனக்கு இதே வேலயா போச்சு... எதாவது ஒரு வீட்டில ரிப்பேர் பாத்திட்டு நிக்க வேண்டியது; அப்புறம் ஸ்கூலுக்கு லேட்டாயிடுச்சுன்னு அறக்க பறக்க ஓட வேண்டியது... ஸ்கூல்ல வாத்தியார் கிட்ட திட்டும் வாங்க வேண்டியது. உனக்கு என்னைக்கு தான் நல்ல புத்தி வரப்போவுதோ தெரியல.

உன்னச் சொல்லி என்ன குறை? ஒரே பையன் ஒரே பையன்னு உனக்கு இத்தன செல்லம் குடுத்து வளத்து வச்சிருக்காரு பாரு உங்க அப்பா... அவர சொல்லணும். எல்லாம் என் தலை எழுத்து; நீ இந்த மாசமாவது நல்ல மார்க் வாங்குறியா இல்லயான்னு பாக்கத்தான போறேன். இந்த வருஷம் பெரிய பரீட்சை வேற வருது. நல்ல காலேஜ்ல சீட் கிடைக்கணும்னா நல்ல மார்க் இருந்தா தாண்டா முடியும்; யார் கிட்டயும் கை ஏந்த வச்சிராத ராசா... என பெருமூச்சு விட்டுக்கொண்டே சமையலறைக்குள் புகுந்தாள் ரவியின் அம்மா.

கையில் தட்டுடன் சமையலறையில் இருந்து வெளியே வந்தவள்... ஏண்டா உனக்கு இந்த ரிப்பேர் பாக்கிற வேல? மோட்டார் ரிப்பேர், கிரைண்டர் ரிப்பேர்ன்னு எல்லாத்துக்கும் காலனில வேற ஆளே இல்லன்னா உன்ன தேடி வராங்க எல்லாரும்? நீ காசு வாங்காம செய்றதாலயோ என்னமோ என்றாள். அவன் செய்றதில அவன் சந்தோஷப்படுறான்... அவன அப்படியே விட்டிரேன் என்றார் தினசரியை புரட்டிக்கொண்டிருந்த ரவியின் அப்பா. சரி சரி நான் ஸ்கூலுக்கு கிளம்புறேன் என்ற ரவி சைக்கிள் சாவியை எடுத்துக்கொண்டான்.

பிறிதொரு நாள்... என்னங்க இன்னைக்கு தான பிளஸ் 'டூ' ரிசல்ட் வருது; போய் பேப்பர் வாங்கிட்டு வராமா ஏன் சும்மா மூஞ்ச தொங்கப் போட்டுட்டு உக்காந்து இருக்கீங்க! ரிசல்ட் தான...பாத்தாச்சுடி என்றார். என்னாச்சுங்க என் புள்ள பாஸ் தான என ஆவலாய் வினவியவளுக்கு... இல்லை என தலையை அசைத்தார் ரவியின் அப்பா. எனக்கு தெரியும்....அப்பவே தெரியும், எதுவும் படிக்காம ஓடி ஓடி ரிப்பேர் பாக்கும் போதே தெரியும் இவன் தேற மாட்டான்னு. இவனுக்கு நல்ல புத்தி எப்போ தான் வரப்போவுதோ ஆண்டவனே என கண் கலங்கினாள் ரவியின் அம்மா.

தோல்வியடைந்த பாடங்களை இரு முறை மீண்டும் எழுதிய பின்னரும் ரவி தேறவில்லை... பிளஸ் 'டூ' தேறவில்லையே என்ற அவமானம் ரவியையும், மகனின் வாழ்க்கையைக் குறித்த கவலை அவனது பெற்றோரையும் சூழ்ந்திருந்தது.

மற்றொரு நாள் அண்டை வீட்டு நண்பர் ஒருவர் வீட்டிற்கு வரவே அவரை வரவேற்று பேசிக்கொண்டிருந்தார் ரவியின் அப்பா. ரவி பாஸ் ஆகாதத பெரிய விஷயமா எடுத்துக்காதீங்க... கையில வெண்ணை இருக்கும் போது எதுக்கு நெய்க்கு அலையுறீங்க என்றவரை புரியாமல் பார்த்தார் ரவியின் அப்பா. ரவியோட கைவசம் தொழில் இருக்கும் போது எதுக்கு கவலப்படுறீங்க; சின்னதா ரிப்பேர் பாக்கிற கடை வச்சு குடுங்க, காலனில இருக்கிற நாங்களும் எங்களால முடிஞ்ச உதவி செய்றோம் என்பதை கேட்ட ரவியின் பெற்றோர் மனதில் சந்தோஷம் பெருக்கெடுத்தது.

தனது திறமையை அப்போது தான் முழுமையாக உணர்ந்தான் ரவி.
------------------
யூத் புல் விகடனில் படிக்க இங்கே சொடுக்கவும்.

July 13, 2009

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பண்பற்றச் செயல்

ஆசஸ்(Ashes) என அழைக்கப்படும் சரித்திரப்புகழ் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. ['இந்த கதையெல்லாம் வாணாம் நீ சொல்ல வர பண்பற்ற செயல் இன்னாதான்னு' கேட்பவர்கள் நேரடியாக கடைசி இரு பத்திகளைப் பார்க்கவும் :) ]

அந்த வரிசையில் இந்த ஆண்டு ஆசஸ் தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டம் வேல்ஸ் தலைநகர் கார்டிஃபில் கடந்த புதன் கிழமை 8 ஆம் தேதி தொடங்கி நேற்று 12 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நூறாவதாக அறிமுகப்படுத்தப்படும் மைதானம் என்ற புகழை கார்டிஃப் மைதானம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வேல்ஸில் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் நடப்பதும் இதுவே முதன்முறையாக இருக்கும் என கருதுகிறேன்.

முதல் இன்னிங்சில் மிக மோசமான தொடக்கத்தை அளித்த இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் இரண்டாவது இன்னிங்சிலும் மோசமாகவே ஆடினர். மாறாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 674 ஓட்டங்கள் குவித்து முதல் இன்னிங்சில் 239 ஓட்டங்கள் முன்னணியும் பெற்று இருந்தது.

இறுதி நாளில் இரண்டாவது இன்னிங்சில் 127 ஓட்டங்களுக்குள்ளாக 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடையும் நிலையில் இருந்த இங்கிலாந்தை 'காலிங்க்வுட்' தனது தனித்திறமையால் 245 பந்து வீச்சுகளை (40 ஓவர்கள்)சமாளித்து தோல்வியை தவிர்க்க முயற்சித்தார். 11 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் ஒன்பதாவதாக அவரது விக்கெட்டும் வீழவே ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்தது.எனினும் இறுதி விக்கெட் இணையான ஆண்டர்சனும், பேனசரும் கடைசி 11 ஓவர்களையும் சமாளித்து இங்கிலாந்தை தோல்வியிலிருந்து மீட்டனர்.

ஆட்டம் முடிய இறுதி 20 நிமிடங்களும் 5 ஓவர்களும் வீசப்பட வேண்டிய நிலை இருக்கின்ற போது இங்கிலாந்து அணியினர் நேரத்தை கடத்துவதெற்கென்றே கை உறைகளை (Gloves) மாற்றும் முயற்சியாக பெவிலியனிலிருந்து பன்னிரெண்டாவது ஆட்டக்காரரை கை உறையுடன் உள்ளே அனுப்பினர்.ஒரு முறை தானே என்று பார்த்தால் அந்த ஓவர் முடிவடைந்த பின்னர் மறுபடியும் அவர் கை உறைகளுடன் உள்ளே நுழைகிறார். இந்த முறை அவர் பின்னால் இங்கிலாந்து அணியின் physio வும் தனது பையுடன் நுழைகிறார்; இத்தனைக்கும் மைதானத்தில் இருந்த மட்டை வீச்சாளர்கள் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

அப்போது ஆஸ்திரேலிய அணியின் தலைவர் பாண்டிங்கின் முகத்தில் அத்தனை கோபம், அத்தனை எரிச்சல்; இங்கிலாந்தைச் சேர்ந்த வர்ணனையாளர்களும் இச்செயலை ஏற்றுக்கொள்ளவில்லை. எப்படியாவது நேரத்தைக் கடத்தினால் தோல்வியிலிருந்து தப்பித்து விடலாம் என்ற கிரிக்கெட் பண்பற்ற, கேவலமான செயலாகவே இது படுகிறது. இத்தகைய பண்பற்ற செயல்கள் மூலம் வெற்றி பெற அல்லது தோல்வியிலிருந்து தப்பிக்க விளையாடுபவர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியில் முடிந்தாலும் அது முறையான வெற்றியாகாது.அது ஒரு பண்பான அணிக்கோ, ஆட்டக்காரனுக்கோ அழகுமல்ல.

July 07, 2009

வலைப்பூவை முடமாக்கிய நெல்லைதமிழ்.காம்

கடந்த வாரத்தில் எனது வலைப்பூவை திறக்க முயற்சிக்கையில் ஒருமுறை nellaitamil என்ற வேறொரு வலைப்பக்கத்திற்கு அதுவாகவே இட்டுச் சென்றது.அதன் பின்னர் அவ்விதம் ஏதும் நிகழவில்லை. tamilish.com வலைப்பூ திரட்டியில் எனது பதிவிற்கான சுட்டியை சொடுக்கையிலும் எனக்கு நிகழ்ந்த வண்ணமே நிகழ்ந்ததாக பதிவர் தமிழ்நெஞ்சம் சொல்லித் தான் தெரிய வந்தது.

அதன் பின்னர் வேறு சில நண்பர்களிடம் எனது வலைப்பூவை பார்க்கச் சொன்ன போதும் அது தானாகவே nellaitamil வலைப்பக்கத்திற்கே இட்டுச் சென்றதை கேள்விப்பட்டு குழம்பிப் போனேன். அந்த வலைப்பக்கத்தில், உங்கள் domain காலாவதி ஆகி விட்டது, புதுப்பிக்கவும் என்று எழுதியிருந்த வார்த்தைகள் என்னை மேலும் குழப்பத்திற்குள்ளாக்கியது.

என்ன இழவுடா இது, ப்ளாக்கருக்கு தான் பணம் ஏதும் கட்ட வேண்டாமே. அப்புறம் இது என்ன காலாவதி, புதுப்பியுங்கள் அது இது என்கிறார்கள் என நினைத்தேன்.வழக்கமாக வலைமேய்வதற்காக நான் செல்லும் கடையின்(நெல்லைஆன்லைன்) பெயரிலும் nellai இருப்பதால் ஒரு வேளை அவர்களின் கணினியில் தான் எதும் பிரச்சினை என்று வேறொரு கணினியில் அமர்ந்தால் அங்கும் அதே பிரச்சினை.

சரி போகட்டும் நாளை பார்க்கலாம் என அடுத்த நாள் பார்த்தால் அப்போதும் சரி ஆகவில்லை. சற்றே யோசித்த வேளையில் nellaitamil.com என்ற திரட்டி ஞாபகம் வந்தது. nellaitamil திரட்டியின் ஓட்டளிப்பு பட்டையை மற்ற திரட்டிகளைப் போலவே வலைப்பூவில் இணைத்திருந்தேன்.அதுதான் பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் எனக் கருதி அதற்கான html code ஐ வலைப்பூவில் இருந்து நீக்கினேன்.

அதன் பின்னர் தான் எனது வலைப்பூவை படிக்க முடிந்தது.

இது போல மற்ற பதிவர்கள் யாருக்கேனும் அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் முன்னெச்செரிக்கையாயிருங்கள் பதிவர்களே.

July 05, 2009

ஞாபகங்கள்-விமர்சனம்


'உங்கள் திரையரங்குகளை தாஜ்மஹால் ஆக்க வருகிறது' என்ற விளம்பரத்தை கவனித்து நல்ல திரைக்கதையோடு கூடிய சினிமா பார்க்கலாம் என அதிகம் எதிர்பார்த்து போனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கவிஞர்.பா.விஜயின் நண்பருடைய உண்மையான காதல் கதையைக் கொண்டு தீட்டப்பட்டது தான் திரைப்படம் என ஆரம்பித்திலேயே சொல்லி விடுகிறார்கள்.

லைலா-மஜ்னு,அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட் என இவர்கள் காதலை மட்டும் தான் திரைப்படமாக எடுக்க முடியுமா? நமக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள் போன்றோர் நடுவில் இருக்கும் காதலையும் திரைப்படமாக ஏன் எடுக்கக்கூடாது என கேள்வியையும் எழுப்புக்கிறார் கவிஞர்.

கவிஞருக்கு "ஒவ்வொரு பூக்களுமே" பாடலுக்காக தேசிய விருது கிடைத்ததை பலர் மறந்து இருக்கக் கூடும் என நினைத்து விருது பெறும் நிகழ்வையே ஆரம்ப காட்சியாக வைத்திருக்கிறார்கள். ஆரம்பம் தான் தொய்வாக இருக்கிறது என்றால் அடுத்த இருபது நிமிடங்களுக்குள்ளாக இரு பாடல்களை ஓடவிட்டு நம்மை தியேட்டரை விட்டே ஓட வைக்கிறார்கள். திரும்பிச் சென்று விடலாமா என கூட யோசித்தேன்.749 இருக்கைகள் கொண்ட அந்த திரையரங்கில் இருந்தவர்கள் 18 பேர் மட்டுமே.

கதிரவன் என்ற இளம் கவிஞருக்கு வட இந்திய பெண் ஒருவருடன் ஏற்படும் காதலை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். குடும்பப் பிரச்சினை காரணமாக கதாநாயகி வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நீ பெரிய கவிஞனாக வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்து விட்டு காதலிடமிருந்தும், காதலனிடமிருந்தும் விடைபெறுகிறார் கதாநாயகி.அதன் பின்னர் கதாநாயகன் என்ன செய்கிறார் என்பது தான் கதை.

திருமணத்திற்கு முந்தைய இரவு கதாநாயகனின் வீட்டு முன் வந்து நின்று கொண்டு உனக்கு தருவதற்கு ஒன்றுமில்லை... 'என்னையே எடுத்துக்கோ' என கதாநாயகி வசனம் பேசுவது சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக தெரிகிறது.

திருமணத்திற்கு பின்னர் வட இந்தியாவில் கதாநாயகியின் வீட்டில் அமைக்கப்படும் காட்சிகள் அனைத்தும் அப்படியே RainCoat என்ற ஹிந்தித் திரைப்படத்தை ஞாபகப்படுத்துகிறது. RainCoat ல் ஐஸ்வர்யா ராயும், அஜய் தேவ்கனும் அற்புதமாக நடித்திருப்பார்கள். (DVD கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்) 90 நிமிடத்திற்கும் மேலாக RainCoat திரைப்படத்தின் பாதிப்பு தெரிகிறது. இயக்குனர் ஜீவன் Raincoat திரைப்படத்தின் பாதிப்பினால் காட்சிகளை அமைத்தாரா அல்லது இயல்பாகவே காட்சிகள் அப்படி அமைந்து விட்டதா என தெரியவில்லை.

இடைவேளைக்கு சற்று முன்னர் காதலியின் கணவர் உயிருடன் இல்லை என்பதை அவரது புகைப்படத்தின் மேல் போடப்பட்டிருக்கும் மாலையின் மூலம் கண்டு அதிர்ச்சியடைய வேண்டிய கவிஞரின் முகத்தில் அதிர்ச்சிக்குள்ளான முகபாவங்களே இல்லை.காதை கிழிக்கும் இசை மட்டுமே கவிஞர் அதிர்ச்சியிலிருப்பதாக நமக்கு உணர்த்துகிறது. பெரும்பாலான இடங்களில் கவிஞருக்கு நடிப்பே வரவில்லை. ஏதோ வசனம் பேச வேண்டுமே என்ற கடமைக்காக பேசியதாகவே தெரிகிறது.

கதாநாயகியின் நடிப்பு சில இடங்களில் குறிப்பாக வட இந்தியாவில் வைத்து எடுக்கப்பட்ட காட்சிகளில் சொல்லும்படியாக உள்ளது.

ஆரம்ப காட்சிகளிலும், கதாநாயகியை காட்டும் காட்சிகளிலும் கவிஞர் வசனம் பேசாமலேயே அவரது மனது கவிதை பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் படு போர். 'ஞாபகங்கள்' என்பதற்கு பதிலாக கவிதைகள் என்று பெயர் வைத்திருக்கலாமோ?

காதலியின் வீட்டில் கவிஞரும், காதலியும் இருட்டில் இருப்பதாகத் தான் பேசிக் கொள்கிறார்கள்... ஆனால் ஒளிப்பதிவில் வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை; வெட்ட வெளிச்சத்தில் இருந்து உரையாடுவதாகவே படுகிறது. அதனிடையில் இருட்டாக இருக்கிறது என்று மெழுகுவர்த்தியையும் பற்ற வைக்கிறார்கள்... படத்தொகுப்பின் போதுமா கவனிக்கவில்லை!

அடிக்கடி aquafina தண்ணீரை கவிஞர் அருந்துவது ஏனோ? சென்னையில் அமைக்கப்பட்ட காட்சிகளில் தான் அப்படி என்றால் வட இந்தியாவில் ஓட்டல் அறையிலும், கதாநாயகியின் வீட்டிலும் அதே aquafina தண்ணீரைத் தான் அருந்துகிறார் கவிஞர். விளம்பரம் செய்யவோ!

SP.B ன் குரலில் 'ஞாபகம் இல்லையோ' பாடல் மட்டுமே ரசிக்கும்படி உள்ளது. மொத்தத்தில் ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு தோன்றவில்லை.திரையரங்குகளை தாஜ்மஹால் ஆக்க முயற்சித்ததற்கு பதில் ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்ற தொலைக்காட்சி வழி ஒவ்வொரு வீட்டினையும் தாஜ்மஹால் ஆக்க கவிஞர் முயற்சித்திருக்கலாம். தொலைக்காட்சி தொடராக வெற்றியும் பெற்றிருக்கும்.

--------------------

youtube தளத்தில் தேடிய போது கிடைத்த Raincoat திரைப்படத்தின் ஒரு காட்சியை இங்கே இணைத்துள்ளேன். மேலும் சில காட்சிகள் youtube தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.



July 04, 2009

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு

பாண்டியில் கேள்விப்பட்ட உண்மை சம்பவத்தை மனதில் கொண்டு புனையப்பட்ட சிறுகதை.

-------------------------

எம்மா கலைவாணி... அந்த களவாணிப் பய மகேஷ், வெள்ள வேட்டியும் சட்டையும் இஸ்திரி போட்டு கொண்டாந்து குடுத்தானா இல்லையா? நானும் ரெண்டு நாளா தெருமுனைக்கு போகும் போதும் வரும் போதும் அவன் கிட்ட சொல்லிக்கிட்டுத் தான் இருக்கேன்.

ஏன் இப்பிடி அவசரப்படுறேள்? அவன் சொன்ன நேரத்துக்கு கொண்டு வந்து குடுத்துட்டுப் போறான். அதுக்கில்லடி, இன்னைக்கு இலக்கிய விழாவில எனக்கு பாராட்டு விழா வைக்கிறா இல்லையா அதுக்குத் தான் இந்த ஏற்பாடு எல்லாம்.

இதோ வந்திட்டானே மகேஷ்... இப்பிடிக் குடுப்பா என்று துவைத்துத் தேய்த்த துணிமணிகளை வாங்கிக் கொண்டார் தமிழ் புலமை பெற்று புகழும் ஈட்டிய அய்யா கதிரவனின் மனைவி கலைவாணி, என்னப்பா மொத்தம் எவ்வளவாச்சு? என்றார் கதிரவன். தனது கை இன்னும் கட்டியிருக்க வாய் கட்டினை மட்டும் அவிழ்த்து...பதினாறு ரூபாய்ங்க என்றான் மகேஷ்.

இந்தாப்பா என்று இருபது ரூபாய் தாளை நீட்டினார் கதிரவன்.சட்டைப் பையினுள் சில்லறைகளைத் துழாவிக் கொண்டிருந்த மகேஷிடம், வேண்டாமப்பா மீதி... நீயே வச்சுக்க என்றார்; இன்னைக்கு இவரோட தமிழ் புலமையைப் பாராட்டி விழா வைக்கிறாங்களாம் அதனால தான் இதெல்லாம் என்று சிரித்த கதிரவனின் மனைவி அலக்குவதற்காக மேலும் சில துணிமணிகளை மகேஷிடம் நீட்டினார்.

சட்டையை மாட்டிக் கொண்டே...பின்ன இல்லையாக்கும், தமிழுக்காக நான் என்ன என்ன செய்திருக்கேன் தெரியுமாடி உனக்கு, எத்தனை புத்தகம் எழுதியிருப்பேன் எத்தனை புத்தகங்கள மொழி பெயர்த்திருக்கேன். அதுக்குத் தான் இந்த பட்டம், பாராட்டு, புகழ் எல்லாம் என்ற கதிரவன்... என்னடி பக்கத்து வீட்டில அதிகாலைல இருந்தே என்னமோ சத்தம் வந்திட்டிருக்கே! நீ என்னன்னு போய் பாத்தியா? என கூறிக் கொண்டே பக்கத்து வீட்டை நெருங்கினார்.

பக்கத்து வீட்டுக்காரர், தான் கீழே வாடகைக்கு குடி அமர்த்திய குடும்பத்துடன் வீட்டை காலி பண்ணச் சொல்லி காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். என்னப்பா பிரச்சினை என்ற கதிரவனிடம்... அய்யா நீங்களே கேளுங்க இந்த கொடுமய. "தமிழ்" ஆளுங்க தான்னு நம்பி வீட்ட வாடகைக்கு விட்டேன். இப்ப தான் தெரியுது இவங்க 'சிலோன்' தமிழுன்னு. இவங்கள இங்க குடி வச்சா இன்னைக்கு இல்லன்னாலும் என்னைக்காவது ஆபத்து தான்யா எனக்கு என்றார் ஒரே மூச்சில்.

சற்றே யோசித்த கதிரவன்... ஆமா ஆமா... நீங்க சொல்றது தான் சரி, இலங்கைத் தமிழன்னாலே பிரச்சினை தான். தமிழ், தமிழன்னு பாத்தா நம்ம பொழப்பு என்னாகிறது எனக் கூறிவிட்டு தமிழ் அரங்கத்தை நோக்கிப் புறப்பட்டார் தமிழுக்கும், தமிழருக்கும் அவர் செய்த சாதனைக்கான விருதை வாங்குவதற்காக!

July 02, 2009

"வேல்ஸ் இளவரசி டயானா"சில நினைவுகள்

ஜூலை மாதம் முதல் தேதி டயானாவின் பிறந்த நாளாதலால் அவரை நினைவு கூறும் வகையில் அவரது வாழ்க்கையில் அரங்கேறிய சில முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்களை இங்கே தொகுத்துள்ளேன்.

டயானா 1.7.1961-31.8.1997

இளமையில்

Ballet என்று அழைக்கப்படும் நடன கலையில் ஆர்வம் மிகுந்தவராக இருந்திருக்கிறார்.

29.7.1981 அன்று திருமணத்தின் போது



செல்ல மகன்கள் 'வில்லியம்' மற்றும் 'ஹாரி' யுடன்



காதலித்து திருமணம் செய்திருந்தாலும் சார்லசுக்கும் டயனாவுக்குமிடையே பிரச்சினைகள் எழாமலில்லை. 28.8.1996 ல் விவாகரத்து பெற்றார்.

கண்ணிவெடிகளுக்கு எதிரான பிரச்சாரத்தின் போது

ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும், எய்ட்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் உதவிகள் செய்ததோடு, சமூகத்தில் குரலும் எழுப்பினார்.


அன்னை தெரசாவும், டயானாவும் மரிக்கும் சில மாதங்களுக்கு முன்னதாக 1997 ஆம் வருடம் ஜூன் மாதம் சந்தித்த போது. டயானா ஆகஸ்ட் 31 அன்றும். ஆறு நாட்கள் கழித்து செப்டம்பர் 5 அன்று அன்னையும் காலமாகி உலகையே அதிர்சிக்குள்ளாக்கினார்கள்.
டாயானவின் உடை அலங்காரத்தை உலகின் பல பாகங்களில் பின்பற்றினார்கள்

90 'களில் டயானா அட்டைப்படமில்லாத பத்திரிகைகள் வெகு சிலவே

திசை மாறிய பயணங்கள்



சாவின் கடைசி மணித்துளி வரை புகைப்படக்காரர்கள், பத்திரிக்கைகாரர்களால் பின்தொடரப்பட்டார்.

ஒரு கட்டத்தில் புகைப்படங்களுக்கு பயந்து, மறுக்கவும் செய்தார்.

துரதிருஷ்டவசமாக பாரீசின் இந்த பாலதினுள்ளில் வைத்து விபத்து ஒன்றில் உயிரைப்பறிகொடுத்தார்.

விவாகரத்து செய்த ஒரு வருடத்திற்குள்ளாக மரணமடைந்தது துரதிருஷ்டம் !

இறுதி ஊர்வலம்.

இறுதிச் சடங்கில் மகன்களும், முன்னாள் கணவர் சார்லஸும்

உலகின் பல பாகங்களிலிருந்து குவிந்த பூச்செண்டுகள். இந்தியாவிலிருந்து ஏன் தமிழகத்திலிருந்து கூட பூச்செண்டுகள் அனுப்பப்பட்டன. (நடிகை குஷ்"பூ" கூட அனுப்பியதாக ஒரு வார இதழில் படித்த ஞாபகம்)

இங்கிலாந்து, நார்த்தாம்டன்ஷையரில் இருக்கும் டயானாவின் சமாதி
Related Posts with Thumbnails