July 13, 2009

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பண்பற்றச் செயல்

ஆசஸ்(Ashes) என அழைக்கப்படும் சரித்திரப்புகழ் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. ['இந்த கதையெல்லாம் வாணாம் நீ சொல்ல வர பண்பற்ற செயல் இன்னாதான்னு' கேட்பவர்கள் நேரடியாக கடைசி இரு பத்திகளைப் பார்க்கவும் :) ]

அந்த வரிசையில் இந்த ஆண்டு ஆசஸ் தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டம் வேல்ஸ் தலைநகர் கார்டிஃபில் கடந்த புதன் கிழமை 8 ஆம் தேதி தொடங்கி நேற்று 12 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நூறாவதாக அறிமுகப்படுத்தப்படும் மைதானம் என்ற புகழை கார்டிஃப் மைதானம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வேல்ஸில் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் நடப்பதும் இதுவே முதன்முறையாக இருக்கும் என கருதுகிறேன்.

முதல் இன்னிங்சில் மிக மோசமான தொடக்கத்தை அளித்த இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் இரண்டாவது இன்னிங்சிலும் மோசமாகவே ஆடினர். மாறாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 674 ஓட்டங்கள் குவித்து முதல் இன்னிங்சில் 239 ஓட்டங்கள் முன்னணியும் பெற்று இருந்தது.

இறுதி நாளில் இரண்டாவது இன்னிங்சில் 127 ஓட்டங்களுக்குள்ளாக 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடையும் நிலையில் இருந்த இங்கிலாந்தை 'காலிங்க்வுட்' தனது தனித்திறமையால் 245 பந்து வீச்சுகளை (40 ஓவர்கள்)சமாளித்து தோல்வியை தவிர்க்க முயற்சித்தார். 11 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் ஒன்பதாவதாக அவரது விக்கெட்டும் வீழவே ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்தது.எனினும் இறுதி விக்கெட் இணையான ஆண்டர்சனும், பேனசரும் கடைசி 11 ஓவர்களையும் சமாளித்து இங்கிலாந்தை தோல்வியிலிருந்து மீட்டனர்.

ஆட்டம் முடிய இறுதி 20 நிமிடங்களும் 5 ஓவர்களும் வீசப்பட வேண்டிய நிலை இருக்கின்ற போது இங்கிலாந்து அணியினர் நேரத்தை கடத்துவதெற்கென்றே கை உறைகளை (Gloves) மாற்றும் முயற்சியாக பெவிலியனிலிருந்து பன்னிரெண்டாவது ஆட்டக்காரரை கை உறையுடன் உள்ளே அனுப்பினர்.ஒரு முறை தானே என்று பார்த்தால் அந்த ஓவர் முடிவடைந்த பின்னர் மறுபடியும் அவர் கை உறைகளுடன் உள்ளே நுழைகிறார். இந்த முறை அவர் பின்னால் இங்கிலாந்து அணியின் physio வும் தனது பையுடன் நுழைகிறார்; இத்தனைக்கும் மைதானத்தில் இருந்த மட்டை வீச்சாளர்கள் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

அப்போது ஆஸ்திரேலிய அணியின் தலைவர் பாண்டிங்கின் முகத்தில் அத்தனை கோபம், அத்தனை எரிச்சல்; இங்கிலாந்தைச் சேர்ந்த வர்ணனையாளர்களும் இச்செயலை ஏற்றுக்கொள்ளவில்லை. எப்படியாவது நேரத்தைக் கடத்தினால் தோல்வியிலிருந்து தப்பித்து விடலாம் என்ற கிரிக்கெட் பண்பற்ற, கேவலமான செயலாகவே இது படுகிறது. இத்தகைய பண்பற்ற செயல்கள் மூலம் வெற்றி பெற அல்லது தோல்வியிலிருந்து தப்பிக்க விளையாடுபவர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியில் முடிந்தாலும் அது முறையான வெற்றியாகாது.அது ஒரு பண்பான அணிக்கோ, ஆட்டக்காரனுக்கோ அழகுமல்ல.

6 comments:

ARV Loshan said...

சரியா சொன்னீங்க..

இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களின் குறிப்பாக tail endersஇன் அர்ப்பணிப்பான போராட்டத்தை இங்கிலாந்தின் இந்தக் கீழ்த்தரமான செயல்கள் தரம் குறைத்து விட்டன..

டெஸ்டின் அருமை நேற்று புரிந்திருக்கும்..

Collingwood, Panesar, Swann, Andersonக்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஆஸ்திரேலியா எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் முடியாமல் போனது.. ஆனால் பதிலடி வரும்.

எட்வின் said...

நன்றிங்க லோஷன். ஆஸ்திரேலியா நிச்சயம் அதிரடியாக திரும்பி வரும் என எதிர்பார்க்கலாம். நிச்சயமாக tail-enders அருமையான, அர்ப்பணிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என கூறலாம்.

உங்கள் தொடர் பதிவையும் படித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.

வான்முகிலன் said...

நீங்கள் சொல்வது போல் அவர்கள் நேரத்தைக் கடத்தினார்கள் என்றால் அங்கிருந்த நடுவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ஏன் ஆஸ்திரேலிய அணியில் இருந்த பந்து வீச்சாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? ஆஸ்திரேலிய அணி அதன் தனித்தன்மையை என்றோ இழந்துவிட்டது என்பதற்கு ஆண்டர்சனைக் கூட அவர்களால் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை என்பதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

வந்தியத்தேவன் said...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ஆஸிக்காரர்கள் முன்னர் செய்யாத கூத்துக்களாக் இப்போ அனுபவிக்கிறார்கள். அன்டர்சனையும் பனேசரையும் அவுட்டாக்க முடியாமல் திண்டாடினார்கள். மேலதிகமாக 20 நிமிடங்கள் இருந்தும் பொண்டிங் தன்னால் முடியாது என மேட்சை நிறுத்திவிட்டார். ஆஸிக்காரனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

எட்வின் said...

சரிங்க வான்முகிலன். ஆஸியினர் தங்கள் தனித்தன்மையை இழந்து விட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். நான் சொல்ல வந்தது இங்கிலாந்தைக் குறித்து தான். ஆஸியினரை குறித்தல்ல. பார்க்கலாம் இனி வரும் ஆட்டங்களில் ஆஸியினரின் திறமையை.

எட்வின் said...

வந்தியத்தேவன் said...

//ஆஸிக்காரனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.//


வந்தியதேவன் சார்... ஆஸியினர் மேல ரொம்ப கடுப்பா இருக்கீங்க போல இருக்கே :)

Post a Comment

Related Posts with Thumbnails