July 22, 2009

நீ உன்னை அறிந்தால்


பக்கத்து வீடு ஒன்றின் மின்விசிறியை சரிசெய்வதில் மும்முரமாயிருந்தான் ரவி, மேல் மாடியிலிருந்து வழக்கம் போலவே அவனது அம்மாவின் குரல்... ஏண்டா ரவி, தெனம் காலங்காத்தால உனக்கு இதே வேலயா போச்சு... எதாவது ஒரு வீட்டில ரிப்பேர் பாத்திட்டு நிக்க வேண்டியது; அப்புறம் ஸ்கூலுக்கு லேட்டாயிடுச்சுன்னு அறக்க பறக்க ஓட வேண்டியது... ஸ்கூல்ல வாத்தியார் கிட்ட திட்டும் வாங்க வேண்டியது. உனக்கு என்னைக்கு தான் நல்ல புத்தி வரப்போவுதோ தெரியல.

உன்னச் சொல்லி என்ன குறை? ஒரே பையன் ஒரே பையன்னு உனக்கு இத்தன செல்லம் குடுத்து வளத்து வச்சிருக்காரு பாரு உங்க அப்பா... அவர சொல்லணும். எல்லாம் என் தலை எழுத்து; நீ இந்த மாசமாவது நல்ல மார்க் வாங்குறியா இல்லயான்னு பாக்கத்தான போறேன். இந்த வருஷம் பெரிய பரீட்சை வேற வருது. நல்ல காலேஜ்ல சீட் கிடைக்கணும்னா நல்ல மார்க் இருந்தா தாண்டா முடியும்; யார் கிட்டயும் கை ஏந்த வச்சிராத ராசா... என பெருமூச்சு விட்டுக்கொண்டே சமையலறைக்குள் புகுந்தாள் ரவியின் அம்மா.

கையில் தட்டுடன் சமையலறையில் இருந்து வெளியே வந்தவள்... ஏண்டா உனக்கு இந்த ரிப்பேர் பாக்கிற வேல? மோட்டார் ரிப்பேர், கிரைண்டர் ரிப்பேர்ன்னு எல்லாத்துக்கும் காலனில வேற ஆளே இல்லன்னா உன்ன தேடி வராங்க எல்லாரும்? நீ காசு வாங்காம செய்றதாலயோ என்னமோ என்றாள். அவன் செய்றதில அவன் சந்தோஷப்படுறான்... அவன அப்படியே விட்டிரேன் என்றார் தினசரியை புரட்டிக்கொண்டிருந்த ரவியின் அப்பா. சரி சரி நான் ஸ்கூலுக்கு கிளம்புறேன் என்ற ரவி சைக்கிள் சாவியை எடுத்துக்கொண்டான்.

பிறிதொரு நாள்... என்னங்க இன்னைக்கு தான பிளஸ் 'டூ' ரிசல்ட் வருது; போய் பேப்பர் வாங்கிட்டு வராமா ஏன் சும்மா மூஞ்ச தொங்கப் போட்டுட்டு உக்காந்து இருக்கீங்க! ரிசல்ட் தான...பாத்தாச்சுடி என்றார். என்னாச்சுங்க என் புள்ள பாஸ் தான என ஆவலாய் வினவியவளுக்கு... இல்லை என தலையை அசைத்தார் ரவியின் அப்பா. எனக்கு தெரியும்....அப்பவே தெரியும், எதுவும் படிக்காம ஓடி ஓடி ரிப்பேர் பாக்கும் போதே தெரியும் இவன் தேற மாட்டான்னு. இவனுக்கு நல்ல புத்தி எப்போ தான் வரப்போவுதோ ஆண்டவனே என கண் கலங்கினாள் ரவியின் அம்மா.

தோல்வியடைந்த பாடங்களை இரு முறை மீண்டும் எழுதிய பின்னரும் ரவி தேறவில்லை... பிளஸ் 'டூ' தேறவில்லையே என்ற அவமானம் ரவியையும், மகனின் வாழ்க்கையைக் குறித்த கவலை அவனது பெற்றோரையும் சூழ்ந்திருந்தது.

மற்றொரு நாள் அண்டை வீட்டு நண்பர் ஒருவர் வீட்டிற்கு வரவே அவரை வரவேற்று பேசிக்கொண்டிருந்தார் ரவியின் அப்பா. ரவி பாஸ் ஆகாதத பெரிய விஷயமா எடுத்துக்காதீங்க... கையில வெண்ணை இருக்கும் போது எதுக்கு நெய்க்கு அலையுறீங்க என்றவரை புரியாமல் பார்த்தார் ரவியின் அப்பா. ரவியோட கைவசம் தொழில் இருக்கும் போது எதுக்கு கவலப்படுறீங்க; சின்னதா ரிப்பேர் பாக்கிற கடை வச்சு குடுங்க, காலனில இருக்கிற நாங்களும் எங்களால முடிஞ்ச உதவி செய்றோம் என்பதை கேட்ட ரவியின் பெற்றோர் மனதில் சந்தோஷம் பெருக்கெடுத்தது.

தனது திறமையை அப்போது தான் முழுமையாக உணர்ந்தான் ரவி.
------------------
யூத் புல் விகடனில் படிக்க இங்கே சொடுக்கவும்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails