August 18, 2009

திராவிட்,பேட்மிண்டன்,சீன வீரர்கள்

இலங்கை முத்தரப்பு தொடர் மற்றும் தென்னாப்பிரிக்க சாம்பியன்ஸ் ட்ராஃபி ஆட்டங்களுக்கு ராகுல் திராவிட்டை தெரிந்தெடுத்திருப்பது என்ன காரணத்திற்கென புரியவில்லை. இரண்டு தொடர்களில் சரிவர ஆடாத காரணத்தால் நீக்கப்பட்ட ரோஹித் ஷர்மாவிற்கு மீண்டும் வாய்ப்பு அளித்திருக்கலாம்.

2011-உலகக் கோப்பை போட்டிகளுக்கென இளம் அணியை உருவாக்கப் போகிறோம் என்று காரணம் காட்டி 2007 ல் மூத்த வீரர்களை நீக்கியது என்னத்திற்கோ தெரியவில்லை. கேட்டால்... அது போன தேர்வுக்குழு என வடிவேல் பாணியில் ஏதும் காரணம் வைத்திருப்பார்களோ என்னமோ!

ஒருவேளை ஷேவாக் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்புவாரெனில் திராவிட்டிற்கு அணியில் பங்கு என்னவாக இருக்கும்?

ஐ.பி.எல் போட்டிகளில் அருமையாக பந்து வீசிய 'ஓஜா'வையும் அணியிலிருந்து நீக்கியதற்கு என்ன காரணமோ?

--------------------------------------------தடகள போட்டிகளானாலும்,பிற விளையாட்டுகளானாலும் சீன வீர வீராங்கனைகள் காட்டும் உற்சாகமும், அர்ப்பணிப்பும், விவேகமும், வேகமும் ஆச்சரியப்பட வைக்கின்றன. ஹைதராபாத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த சர்வதேச இறகுப்பந்து(பேட்மிண்டன்) போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் தங்கம் வென்றது சீன சிங்கங்களே.

2008 ஆம் ஆண்டு நடந்து முடிந்த பெய்ஜிங்க் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 100 பதக்கங்கள் குவித்து தங்க பதக்கம் பெற்ற முறையில் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்ததும் சீனா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெய்வால் காலிறுதி சுற்றிலேயே வெளியேறினாலும் சர்வதேச போட்டிகளில் காலிறுதி வரை முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெயர் கிடைத்தது.

ஏர்டெல் - நீங்க நல்லவரா கெட்டவரா

ஏர்டெல் கைபேசியில் GPRS மூலம் வலையில் உலவலாம் என நேற்று GPRS ஐ இயக்கிய போது... ஏதோ ஒரு விளம்பர சுட்டியில் தவறுதலாக சொடுக்கியிருக்கிறேன். அப்படி சொடுக்கிய சில வினாடிகளுக்குள்ளாக நீங்கள் தரவிறக்கம் செய்த java games களுக்காக (தரவிறக்கம் செய்யாமலே)99 ரூபாய் கட்டணமாக எடுக்கப்பட்டுள்ளது என ஏர்டெல்லில் இருந்து sms வந்ததும் அதிர்ந்து போனேன்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி அன்று தான் (இலவச sms வசதி இருந்தும்)முன்னறிவிப்பில்லாமல் sms களுக்கு 50 பைசா வசூலித்தார்கள், மீண்டும் என்ன இது கொடுமை என நினைத்துக் கொண்டு உடனடியாக கைபேசியிலிருந்தே வாடிக்கையாளர் சேவையில் (121) புகார் செய்தேன்; இரு நாட்களுக்குள் பதிலளிப்பதாக கூறினார்கள்.

இன்று மாலை வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து ஒரு பெண்மணியின் அழைப்பு வந்தது... 99 ரூபாய் பணம் மீண்டும் கிடைக்கப்பெறும் என நினைத்தால் நடந்தது வேறு. நீங்கள் தரவிறக்கம் செய்திருப்பதாகவே எங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதால் உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்காது என கூறிவிட்டு துண்டித்தார். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் என வேறு கூறி கடுப்படித்தார் அந்த பெண்மணி.

மீண்டும் அழைத்தேன் 121 ல்... என்னங்க இந்த மாதிரி ஒரு பெண்மணி கூறினார் என தெரிவித்து விட்டு சற்றே கோபமாக 'ஆகஸ்ட் 2 அன்று தான் குளறுபடி செய்தீர்கள் மீண்டும் என்ன சார் இது' என கூறினேன்.சில வினாடிகள் அமைதி காத்தவர் நாளை மதியத்திற்குள் அந்த தொகை திரும்பக் கிடைக்கப்பெறும் என தெரிவித்தார்.அப்போது தான் சற்று சமாதானமடைந்தேன்.

10 வினாடிகளுக்குள்ளாக இழந்த 99 ரூபாயும் கிடைக்கப்பெற்றேன். நமது பணத்தை நாம் பெறுவதற்கே இத்தனை தில்லு முல்லுகள்... என்னத்த சொல்ல.

இது இப்படியென்றால் ATM தரும் தொல்லை இதை விட பெரிது, கடந்த வாரம் நான் பணம் எடுக்க முயற்சிக்கையில் பணம் வராமலயே பணம் எடுத்திருப்பதாக ரசீது மட்டும் வந்தது. புகார் செய்து விட்டு காத்திருக்கிறேன் அந்த சில ஆயிரங்கள் கிடைக்கப்பெறுமென.

August 07, 2009

பன்றிக்காய்ச்சலுக்கு பன்றிகள் தான் காரணமா?

பன்றிக் காய்ச்சல் என்பது H1N1 காய்ச்சல் என மூன்று மாதங்களுக்கு முன்பே உலக சுகாதார நிறுவனத்தால் (WHO), மாற்றி அறிவிக்கப்பட்ட பின்னரும் பொது மக்களாலும், ஊடகங்களினாலும் பன்றி காய்ச்சல் என்றே இன்னமும் அறியப்பட்டு வருவதை மக்களின் அறியாமை என கொள்வதா? இல்லை ... சரியான தகவலை அறிய மறுக்கிறார்கள் என கொள்வதா?

இந்த மாதம் H1N1 காய்ச்சலுக்கு பலியான முதல் இந்திய உயிருக்குப்பின் தற்பொழுது இந்நோய் குறித்த பிரச்சாரம் இந்தியாவில் தீவிரமாகி வருகிறது. என்றாலும் பெரும்பாலோனாரால் இன்னமும் பன்றிக்காய்ச்சல் என்றே அறியப்படுவது வருந்தத்தக்கது.

மனிதரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட இந்த H1N1 வைரஸ்கள், நோயுற்ற பன்றிகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட வைரஸ்களுடன் ஒன்றிப்போகவில்லை என்கிறது உலக விலங்குகள் நல நிறுவனம். இதனாலும், காரணமே இன்றி பன்றிகள் கொல்லப்படுவதை தவிர்க்கும் வகையிலும் உலக சுகாதார நிறுவனம், Swine Flu (பன்றிக் காய்ச்சல்) என்ற பெயரை H1N1 Flu (H1N1 காய்ச்சல்) என மாற்றி அமைத்தது.

பன்றிக் காய்ச்சல் என ஆரம்பத்தில் அறியப்பட்டாலும் பன்றிகளிலிருந்து மனிதனுக்கு பரவியதாக இது வரை நிரூபிக்கப்படாததும் இந்த பெயர் மாற்றத்திற்கு காரணம்.

ஆனால் இன்னமும் நம்மூர்களில், பன்றி இறைச்சியை உண்பதால் பன்றிக் காய்ச்சல் பரவும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஊடகங்களும் பன்றிக் காய்ச்சல்...பன்றிக்காய்ச்சல் என்றே விளம்பரப்படுத்துவதன் மூலம் மக்களின் மனதிலும் 'பன்றி' என்பது மாற்ற முடியாத சொல்லாகி விட்டது.

பன்றிக்காய்ச்சலுக்கு H1N1 காய்ச்சல் என்ற பெயர் மாற்றத்தையும், பன்றி இறைச்சி உண்பதால் இந்நோய் பரவுவதில்லை என்பதையும் மக்களிடம் எடுத்துக் கூறினால் அதனை ஏற்றுக்கொள்ள சற்றே சிரமப்படுவார்கள் என்றாலும் அதனை செய்ய வேண்டியது மத்திய மாநில அரசுகள் மற்றும் ஊடகங்களின் கடமையாகும்.

H1N1 காய்ச்சல் குறித்த அனைத்து விவரங்களையும், இந்தியாவில் இந்நோயின் தீவிரம்,கட்டுப்பாட்டு முறைகள் போன்ற பல தகவல்களையும் http://www.swineflu-india.org/ என்ற இணையதளத்தின் மூலம் அறிய முடியும்; புதிதாக கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் இங்கு பதிவேவேற்றமும் செய்கிறார்கள்.
மேலதிக தகவல்களுக்கு http://www.cdc.gov/h1n1flu/qa.htm என்ற தளத்திலும் உலவலாம்.

August 04, 2009

சில புகைப்பட நையாண்டிகள்August 02, 2009

ஏர்டெல்லின் குளறுபடி

கைபேசியிலேயே முழித்து பின்னர் குட் மார்னிங்க் முதல் குட் நைட் வரை அடங்காமல் குறுந்தகவல் அனுப்புவது நான் உள்ளிட்ட இன்றைய தலைமுறையின் வழக்கமாகி விட்டது. இணையத்தை விட்டால் அடுத்தபடியாக கைபேசியில் sms எனப்படும் குறுந்தகவலில் தான் அரட்டை, மொக்கை எல்லாம்.

அதுவும் குறிப்பாக பண்டிகை, பிறந்தநாள் அல்லது ஏதும் விஷேச தினங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். காலையில் தொடங்கும் குறுந்தகவல் அனுப்புதல் இரவு ஓயும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். வழக்கம் போல இன்று காலை எழுந்ததும் கைபேசியில் நேரத்தைப் பார்த்து விட்டு நண்பர்கள் தினம் என்பதால் (அப்பிடின்னு சொல்லிக்கிட்டாங்க) நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப தொடங்கினேன்.

(எஸ்.எம்.எஸ் அனுப்பலன்னா அதுக்கு வேற ஏண்டா _ய _ய ன்னு எங்கள எல்லாம் மறந்தாச்சான்னு வேற பாசமா எஸ்.எம்.எஸ் வரும்... சரி ஏன் வம்புன்னு தான் இப்பிடியெல்லாம்)

வழக்கமாக ஒரு குறுந்தகவலுக்கு எடுக்கப்படும் கட்டணத்தை விட அதிக கட்டணம் எடுக்கப்பட்டிருந்ததை இரண்டு குறுந்தகவல் அனுப்பிய பின்னர் தான் புரிந்து கொண்டேன். நண்பர்களிடம் உடனே தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்களுக்கும் அப்படியே ஆனதாக தெரிவித்தார்கள்.

உடனே சுதாரித்துக் கொண்டு இரண்டு குறுந்தகவலோடு நிறுத்திக் கொண்டேன். பாவம் நண்பர் ஒருவர் விஷயம் தெரியாமல் இருபது நண்பர்களுக்கு ஒரேயடியாக (group sms) நண்பர்கள் தின வாழ்த்து அனுப்பியிருக்கிறார். நான் விசாரித்த ஏர்டெல் சந்தாதாரர்கள் அனைவருக்கும் இது நிகழ்ந்திருக்கிறது.

இத்தனைக்கும் ஏர்டெல்லின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து எந்தவித முன்னறிவிப்பும் குறுந்தகவலாக வரவில்லை. அதனை அவர்கள் செய்திருக்கலாம்.

சரி வாடிக்கையாளர் சேவையில் என்ன தான் காரணம் சொல்ல வருகிறார்கள் என்பதை அறிய அவர்களுக்கு அழைத்தால் ... இன்றைய தினம்(2.8.2009) அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தங்குதடையின்றி குறுந்தகவல் சென்று சேர வேண்டும் என்பது தான் காரணம் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள்.

இந்த கொடுமய எல்லாம் எங்கே போய் சொல்றதோ?
Related Posts with Thumbnails