October 30, 2009

கிறுக்கல்கள் சில

தீவிர'வாத' அரசு

சிறைச்சாலைகளுக்குள்
செல்ஃபோன்கள்
சிரமமில்லாமல்
சிறகடிக்கையில்

தீவிரவாதிகளின் கையில்
தோட்டாக்கள் இருப்பதில்
ஆச்சரியம் ஒன்றுமில்லை

இரண்டிற்கும் காரணம்
இரண்டு...
அரசும் அரசியல்வாதியும்.

வரதட்சணை

இலவசம்
இலவச இணைப்பு
என எதிலும்
இலவசம் எதிர்பார்ப்பவர்கள்
திருமணத்திலுமா
இலவசத்தை எதிர்பார்ப்பர்?

வருங்காலத்தமிழ்!

மகளுக்கு தமிழரசி
என்று பாசத்துடன்
பெயர் வைத்தான் நண்பன்
அவளும் அவனை பாசமாகத்தான்
அழைக்கிறாள் டாடீ (Daddy) என்று

டேவிட் ஷெப்பர்டுக்கு அஞ்சலிகள்


முன்னாள் கிரிக்கெட் நடுவரும், கிரிக்கெட்டில் 'நெல்சன்' என்று அழைக்கப்படும் '111' ஓட்டத்தின் போது தனது ஒரு காலினால் சைகை செய்து புகழ்பெற்றவருமான டேவிட் ஷெப்பர்ட் அவர்கள் புற்றுநோயினால் இந்த மாதம் 27 ஆம் தேதி காலமானார்.

கிரிக்கெட்டின் அனைத்து தரப்பினரிடமும் தனக்கென்று ஒரு நற்பெயரை கொண்டிருப்பவர். பாரபட்சம் பார்க்காமல் நேர்மையான முடிவுகளை அளித்து வந்தவர். எப்போதும் புன்சிரிப்புடனே இருந்தவர்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

அவரைக்குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

October 26, 2009

தினம் ஒரு தீபாவளி - இந்த நாள் இனிய நாள்

படித்ததில் பிடித்த இந்த கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்றும் கூட... மின்னஞ்சல் செய்த மைத்துனர் பிரேம்@பாபு அவர்களுக்கு நன்றி. தினமலரின் தீபாவளி மலரில் வெளியான சுகி சிவம் அவர்களின் கட்டுரை என்பதாக இணையத்தில் உலவிய போது கண்டறிந்தேன்.

----------------

தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று நாட்காட்டி யில் கை வைத்து எண்ணி, எண்ணி (தப்புத்தப்பாக) மகிழ்ச்சியடைந்த காலம் ஒன்று உண்டு. அப்பா தரப்போகும் பட்டாசுக்காசு, அம்மா செய்யப் போகும் பலகாரம், அப்பா ஆசியின் (வசவு) பேரில் அம்மா எடுத்துத் தரப்போகும் டிராயர் சட்டை இவையெல்லாம் கலர்க்கலர் கனவுகளாய் தூக்கத்தைக் கெடுக்க, மனசெல்லாம் மத்தாப்பாய் மகிழ்ந்த காலம் ஒன்று உண்டு.

சின்னச் சின்ன சந்தோஷங்களாய் சிறகடித்த அந்த மகிழ்ச்சி மலர்கள் இப்போது என்ன ஆயின? எங்கே போயின?

இப்போது டப்பா, டப்பாவாகப் பலகாரங் களும் பை, பையாகப் புதுத்துணிகளும் பீரோ, பீரோ வாக நிரம்பி வழிந்தாலும் மனசு மட்டும் நிறைய வில்லையே... ஏன்? வளர்ந்து விட்டோமா?

எதையோ இழந்து விட்டோமா? இது மாறுதலா? தேய்மானமா அல்லது ஞானோதயமா? கடவுளுக்குத் தான் வெளிச்சம்.   எதை அடைய வேண்டும் என்று ஏங்கினோமோ, எது எட்டவில்லை என்று வருந்தினோமோ... அது எட்டும் போது சந்தோஷம் மட்டும் கிட்டுவ தில்லையே... ஏன்?
ஒரே காரணம்... மனசு... மனசு... மனசுதான்... அப்போ திருந்த மனோநிலை அப்படி! இப் போதிருக்கும் மனோநிலை இப்படி!

கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன்...சட்டென்று விளங்கும்படி ஒரு கதை சொல்கிறேன்.அரண்மனையில் பணிபுரியும் சாதாரண சேவகர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்; கலகல என்று சிரித்தபடி கவலைகள் இல்லாதவ ராகக் காரியங்கள் செய்வார். அவரைப் பார்த்த அரசருக்கு ஒரே ஆச்சர்யம்.

எப்படி இந்த ஏழை இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறான்? இவனுக்கு வருமானமோ குறைவு. வசதிகளும் இல்லை. மிகச்சிறிய வீட்டில் அதிக நபர்களுடன் வாழும் அவலம்... அப்படி இருந்தும் இவன் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று சிந்தித்தார் அரசர்.

"பிரமாண்டமான அரண்மனை, ஏகப்பட்ட எடுபிடிகள். மிக அதிக வருமானம் இத்தனையும் இருந்தும் நமக்கில்லாத நிம்மதி... மகிழ்ச்சி... இந்தப் பயலுக்கு எப்படி இருக்க முடியும்?' என்ற எண்ணம் அவரைக் குடைந்தது.

ஒருநாள் அவனை அருகில் அழைத்து, "உனக்கு வருத்தமே கிடையாதா? ஏன் இவ் வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்?' என்று கேட்டார் அரசர்.

"மேன்மை தங்கிய மன்னரே... நான் ஓர் ஏழைக் காவலன். எங்கள் குடும்பத்தின் தேவைகள் மிக மிகக் குறைவு. மழையையும், வெயிலையும் மறைக்க ஒரு கூரை... வயிறு நிரம்ப ஏதோ ஓர் உணவு... மானம் காக்க ஒரு துணி... இதற்கு என் வருமானம் போது மானது. வேறு எந்த ஆசைகளையும் நான் வளர்த்து கொள்வதே இல்லை... அதனால், நிம்மதியாக இருக்கிறேன்..' என்று பணிவுடன் கூறினான் சேவகன்; விரக்தியாகச் சிரித்துக் கொண்டார் மன்னர்.

இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியைத் தம் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்ட மன்னர், "இவ்வளவு வருமானம் உள்ள நாம் எப்போதும் கவலையில் இருக்கிறோம். நம்மை விடக் குறைந்த வருமானம் உள்ள அவன் கவலையில்லாமல் இருக்கிறானே! எப்படி இது சாத்தியம்?' என்று பெருமூச்சு விட்டார்.

"வேண்டு மானால் அவனையும் நமது கவலைப் படுவோர் சங்கத்தில் உறுப்பினராக்கி விடலாம். ரொம்பவும் சுலபம்...' என்று பணிவுடன் சிரித்தார் அமைச்சர்.

"அதென்ன கவலைப்படுவோர் சங்கம்?' என்று வியப்புடன் கேட்டார் மன்னர். "அரசே... ஒரு பையை எடுக்க வேண்டும். அதில் 99 தங்கக் காசு களைப் போட்டுக் கட்ட வேண்டும். அந்த ஏழையின் வீட்டு வாசற்படியில் வைத்துவிட வேண்டும். பிறகு பாருங்கள் அவனது நடவடிக்கைகளை..' என்று சிரித்தார் அமைச்சர். "அப்படியே செய்யுங்கள்...' என்று உத்தரவிட்டார் அரசர்.

தன் வீட்டு வாசலில் கிடைத்த 99 பொற்காசுகளை ஒரு தடவைக்குப் பல தடவை எண்ணி, எண்ணி மாய்ந்தான் சேவகன். "ஒன்று குறைகிறதே... ஒன்று குறைகிறதே..' என்று புலம்பினான். எங்கே போயி ருக்கும் என்று அங்கும் இங்கும் தேடினான். அமைதி போய் விட்டது.

தன் வீட்டில் பொற்காசு இருக்கும் விவரம் யாருக்கும் தெரிந்து விடுமோ என்று தடுமாறி னான்.எப்பாடு பட்டாவது பணம் சேர்த்து, அதை ஒரு தங்கக் காசாக மாற்றி நூறு பொற் காசுகள் என்று முழுமைப் படுத்த வேண்டும் என்கிற வெறி அவனுக்குள் ஏற் பட்டு விட்டது. அவனது கலகலப்பு, நிம்மதி, சந்தோஷம் எல்லாமே அந்த ஒரு தங்கக் காசு பற்றிய கவலைக்குள் கரைந்து போய்விட்டது.

அதிகம் உழைத்தான்; பட்டினி கிடந்தான். தன் குடும்பத்தவரை "பொறுப்பற்றவர்கள்... ஊதாரிகள்' என்று சப்தம் போட்டான். பரபரப்பும், படபடப்பும் அவனது ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும் குடியேறி விட்டது!

அது அரசருக்குத் தெரிந்தது. அமைச்சர் சொன்னார்... "அரசே... அவன் நமது 99 சங்க உறுப்பினர் ஆகி விட்டான்..' என்று.அதாவது, அனுபவிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும், கிடைக்கத் தவறிய ஒன்றிற்காகவே ஏங்கும் முட்டாள்களின் உலகம் இது.

இந்த மனோநிலை தான் நமது துயரங்களுக்கான முக்கிய காரணம். சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் கூட சந்தோஷப்பட முடியாதபடி இந்த மனோபாவம் நம்மைக் கெடுத்து விடுகிறது.

சில கிராமங்களின் வழியாகக் காரில் போகும் போது அங்குள்ள நாய்கள் பாய்ந்து, பாய்ந்து நமது கார்களைத் துரத்தும். இந்தப் பாய்ச்சலால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை; நாய்தான் களைப்படைந்து எச்சில் வழிய நாக்கைத் தொங்கப் போட்டபடி பெருமூச்சு விடப் போகிறது.இதே போலத்தான் வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒன்றை நாமும் துரத்திக் கொண்டே இருக்கிறோம்.

வேக, வேகமாகத் துரத்துகிறோம். பிறகு வருத்தப்பட்டு அமர்ந்து விடுகிறோம். இந்த மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வேண்டாமோ?நாற்பது வயது வரை பணம், பணம் என்று உடல் நலத்தை மறந்து உடல் நலத்தை இழந்து துரத்துகிறோம்.

நாற்பதாகும் போது துரத்திச் சேர்த்த பணத்தை மருத்துவமனைகளில் கொட்டி ஆஹா உடல் நலம், உடல் நலம் என்று துரத்துகிறோம். அதனால் தான் ஒரு காலத்தில் இனித்த வாழ்க்கை மறுகாலத்தில் கசக்கிறது.

சின்ன வயதில் எது கிடைத்தாலும் பெரிய விஷயமாகத் தெரிந்தது. ஒரு கோலிக் குண்டு கூட உலக உருண்டைபோல நமக்குப் பெரிய விஷயமாக இருந்தது.

இப்போதோ உலக உருண்டையே கொடுத் தாலும், நமது பேராசைக்கு முன் அது வெறும் லாலிபாப் போல சிறுத்து விடுகிறது. மாற வேண்டிய மனோபாவம் இது.
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், மறுபடியும் ஒரு குழந்தையைப் போன்ற மனம் நமக்கு வேண்டும். அப்போது தான் அன்றைக்குத் தீபாவளி தித்தித்த மாதிரி இன்றைக்கும் தித்திக்கும்.

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. நரிக்கு ஏக குஷி...

"நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப்படியாகும்!' என்று ஊளையிட்டது.

கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப்படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது; பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை.

மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது."ஆஹா... பசியால் நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்...' சிறுத்து விட்டோம் என்று வருந்தியது நரி.

இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ம்ஹூம், பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது... அதனால், நரிக்குத் தன் நிழலே தெரிய வில்லை..."ஆஹா.. நாம் வெகுவாக இளைத்து விட்டோம். நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது... ஒரு வேளை இறந்து போய் விட்டோமோ?' என்று பயந்தது.

பிறகு, "சீச்சி... நாம் உயிரோடு தான் இருக்கிறோம். இந்தப் பசிக்கு ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும்.."' என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது.

இந்த நரியின் கற்பனை மாதிரி தான்... சிலர் தங்களை வெகு பிரமாதமாக எண்ணிக் கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி வாடுகின்றனர்.

இரண்டும் வேண்டாமே! கிடைத்த 99ஐ புறக்கணித்து விட்டு அதை நூறாக்கப் போராடும் இயல்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.அனுபவிக்க ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் இல்லாத ஒன்றிற்காக ஏங்குவதை விட்டு மாற வேண்டும்.

காலை நரிபோல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம்; மாலை நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம். இயல்பாக இருப்போம், ஒரு குழந்தையின் மனதுடன் வாழ்வோம், வாழ்வைக் கொண்டாடு வோம்.இந்தக் கருத்தை விளங்கிக் கொண்டால் இன்று மட்டுமல்ல, என்றுமே தீபாவளிதான். இதை உணர்ந்து விட்டால் இந்த நாள் ஓர் இனிய நாள்.

இந்த நிலை(மனநிலை ) எப்போது நமக்கு மாறுமோ அன்று முதல் எப்போதுமே நமக்கு மகிழ்ச்சி... சந்தோசம் ....நாமும் மாறுவோம் உலகை அனுபவிப்போம்

October 23, 2009

Boyzone-Gately, மைக்கேல் ஜாக்சன், கிறிஸ்தவம்-ஓரினத்திருமணம்


தொண்ணூறுகளில் ஆங்கில பாப் இசைப்பிரியர்களையும்,இளவட்டங்களையும் கவர்ந்த குழுக்களில் Back Street Boys, Westlife, Boyzone போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் Boyzone குழுவின் பாடல்களைத் தான் தொண்ணூறுகளில் நான் அதிகம் கேட்டு வந்திருந்தேன்.

அயர்லாந்தைச் சார்ந்த ஐந்து நண்பர்களால் உருவாக்கப்பட்டது Boyzone பாப் இசைக்குழு. கடந்த சில நாட்கள் முன்னர் இந்த இசைக்குழுவைச் சார்ந்த Stephen Gately என்பவர் ஸ்பெயினில் விடுமுறைக்காக சென்றிருக்கையில் தனது உறக்கத்திலேயே (தனது 33 ஆவது வயதில்) மரணமடைந்தது பாப் இசை உலகில் பெரிதாகப் பேசப்பட்டது.

அவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் அல்லது தற்கொலை செய்திருக்கலாம் என ஆரம்பத்தில் பேசப்பட்டாலும் இயற்கையான காரணங்களாலேயே அவர் மரணமடைந்ததாக பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது. இவர் ஒரு Gay என்பது குறிப்பிடத்தக்கது.

Boyzone பாடல் ஒன்று காணொளியாய்
----------

மைக்கேல் ஜாக்ஸன்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். அதனை MJ இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என சொன்னாலும் தகும் என்றே படுகிறது. சில தினங்கள் முன்னர் This Is It என்ற பெயரில் மைக்கேல் ஜாக்ஸன் லண்டனில் செய்யவிருந்த நிகழ்ச்சிக்காக செய்த முன்னேற்பாடுகளையும், அவர் மற்றும் அவரது குழுவினரின் பயிற்சிகளையும் தொகுத்து முன்னோட்டமாக ஜாக்ஸனின் நெருங்கிய நண்பரும், அவரது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், நடன இயக்குனருமான Kenny Ortega வெளியிட்டார்.


This Is It திரை அரங்குகளில் இந்த மாதம் 28 அன்று வெளிவர இருக்கிறது. அதன் இயக்குனரும் Kenny Ortega தான். இப்போதே முன்பதிவுகளும் துவங்கி விட்டன. ஜாக்ஸன் உயிரோடு இருக்கையில் அவரது குறிப்பிட்ட பாடல் தொகுப்பு ஒன்றிற்கு கிடைத்த விலையை விட அவர் மறைந்த பின்னர் வெளியாகவுள்ள இந்த தொகுப்பிற்கு அதிக விலை கிடைக்கும் எனத் தெரிகிறது.

------------
கிறிஸ்தவம்-ரினத் திருமணம்

ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த லுத்தரன் ஆலயம் ஒன்று ஓரினத் திருமணங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. ஓரினத் திருமணங்களுக்கு அனுமதி அளித்து கடந்த மே மாதம் ஸ்வீடன் நாடு சட்டம் இயற்றியிருந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐரோப்பாவில் நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், நார்வே நாடுகளுக்கு அடுத்தபடியாக ஓரினத் திருமணங்களை அனுமதிக்கும் ஐந்தாவது நாடாகிறது ஸ்வீடன்.

ஆனால் கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியமோ ஓரினத் திருமணத்திற்கு எதிரான கருத்தையே கொண்டுள்ளது என்பது சுவாரஸ்யமானது.

இது சரியா தவறா என்னவென்பது இன்னும் எனக்கு புரிந்தபாடில்லை. மேலே குறிப்பிட்ட Boyzone ன் Stephen Gately ம் ஓரினச் சேர்க்கையாளர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

October 19, 2009

தமிழன்-மலையாளி; தொடரும் பிரிவினைகள்

இலங்கை விவகாரம், திரைப்பட தேர்வுக்குழுவில் பாகுபாடு, முல்லைப்பெரியார் அணைப் பிரச்சினை என பல விஷயங்களில் தமிழனின் தார்மீக உரிமைகளில் கை வைக்கும் கேரளத்தவர் பெரும்பாலோனோர் தமிழனை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை போலும்.(அப்படி இல்லை என்று தான் நானும் நினைத்திருந்தேன்)

பதிவர் அப்துல்லா தனது முந்தைய பதிவு ஒன்றில் இலங்கை விவகாரத்தில் தமிழனின் கூக்குரலை மௌனமாக்கிய இந்திய அரசைச் சார்ந்த மலையாளிகளை தமிழர்கள் கழுத்தை அறுத்த மலையாளிகள் கூட்டணி! என்ற பதிவில் பட்டியலிட்டிருந்தார்.

அதே போன்று இரு மாதங்களுக்கு முன்னர் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள் தேசிய விருது தேர்வுக்குழுவில் மலையாளிகளின் ஆதிக்கத்தையும் அதனால் தமிழ் திரைப்படங்கள் அதிகம் கவனிக்கப்படாமல் போவதையும் சாடியிருந்தார்.

பல ஆண்டுகளாக முல்லைப்பெரியாறு அணை குறித்த சலசலப்புக்கு குறைவேயில்லை.

பொதுவாக எவராயிருந்தாலும் அவரை இன்ன இன்ன இடத்தைச் சார்ந்தவர் என பிரித்துப்பார்க்கும் பழக்கம் எனக்கு இருந்ததில்லை என்றாலும் கடந்த வாரம் குவைத்திற்கு பயணம் செய்யும் முன் கொச்சின் விமானதளத்தில் Emmigration அலுவலர் ஒருவர் கேட்ட கேள்விகள் சற்றே சினம் கொள்ளச் செய்தது.

தமிழ்நாட்டு வழியாக செல்ல வேண்டியது தானே, சென்னையில் விமான தளம் இருக்கும் போது ஏன் கேரளா வழி பயணம் செய்கிறீர்கள் என கேள்வி மேல் கேள்வி எழுப்பினார். (கொச்சின் வழியாகத் தான் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு) அதோடு நில்லாமல் எனது பணியைக் குறித்து மேலும் பல கேள்விகள் கேட்கத் தொடங்கி விட்டார்.

கடவுச்சீட்டு தமிழனக்குத் தனி, மலையாளிக்கு தனி என்று இந்திய அரசு தருவதில்லை; இந்தியன் என்ற முறையில் தான் தருகிறார்கள் என கேட்டு விடலாமா என்று கூட தோன்றியது. அடக்கி வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் கேட்கத் துணியவில்லை.

எல்லைகளையும், மொழிகளையும் மனதில் வைத்து பின்னப்படும் பிரிவினை சக்திகள் இருக்கும் வரை மனித ஜென்மம் மனிதனை மனிதனாக பார்க்காது என்றே அப்போது தோன்றியது.

October 04, 2009

கிரிக்கெட் - புகைப்பட நையாண்டிகள்

"If I had to last 20 years, I would probably be batting in a wheelchair"

இது இருபது ஆண்டு காலமாக நல்ல உடல் திறனோடு கிரிக்கெட் ஆடி வரும் சச்சினைக் குறித்து அண்மையில் ஒருநாள் போட்டிகளில் 12,000 ஓட்டங்கள் குவித்த ஆஸ்திரேலியர் ரிக்கி பாண்டிங் சொன்னது.
Related Posts with Thumbnails