November 30, 2009

மன அழுத்தம் தரும் நாகரீக வாழ்க்கை'கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன், அன்று தூக்கம் வந்ததே அது அந்த காலமே' 'மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கமில்லையே அது இந்த காலமே' என்ற கவிஞ்ர் வைரமுத்துவின் இந்த பாடல் வரிகள் இன்று எத்தனை பேரின் வாழ்க்கையில் நிஜமாயிருக்கிறது என கேட்டால் பலர் ஆம் எனவே சொல்வார்கள்.

மனித வாழ்க்கை இன்று எத்தனை மன அழுத்தம் நிறைந்ததாகவும், மன நிறைவற்றவதாகவும் இருக்கிறது என்பதற்கு பெருகிவரும் தற்கொலைகளும், விவாகரத்துகளும், வெறுப்பும், பொறாமைகளுமே சாட்சி.

இரு வாரங்களுக்கு முன்னர் வேலை நிரந்தரமாகாத காரணத்தால் விமானி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிக்கை ஒன்றில் படிக்க நேரிட்டது.

இரு தினங்கள் முன்பு கூட திருமணமான அன்று இரவே முதலிரவு சரியாக அமையாத காரணத்தால் மாப்பிள்ளை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்தியை காண நேரிட்டது.

சிறிய விஷயங்களில் கூட மன நிறைவு அடையவில்லை என்றாலோ, தோல்வியடைந்து விட்டாலோ மீண்டும் அதனை அடையும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் தற்கொலை, பழிவாங்குதல் என திசைமாறுவது சமூகத்தில் இன்று பெருகி வருவதும் நல்லதல்லவே.

பணம் பெருக பெருக இன்று பலருக்கு குணம் சிறுத்துப் போவது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

பணம் பெருக தனி மனித தேவைகளும், குடும்பத் தேவைகளும் இன்றைய இயந்திர உலகத்தில் பெருகவே செய்கின்றன.

ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ஒரு சராசரி மனிதனுக்குத் தான் இன்று எத்தனை commitments,எத்தனை deadlines.

நகரத்தில் பணி செய்பவர்களுக்கு ... சரியான சமயத்தில் பேருந்தையோ, மெட்ரோ ரயிலையோ பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்,போக்குவரத்து நெரிசல் என இன்னும் மேலதிக நெருக்கடிகள்.

சம்பள நாளிலும் அதற்கு அடுத்த சில நாட்களிலும் மட்டுமே நண்பர்களானாலும் உறவினர்களானாலும் சிரித்துப் பேசுவார்கள் என எத்தனை பேர் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருக்கார்கள் என்பதும் உண்மையே.

அயல் நாட்டில் இருப்பவர்களை கேட்டால்... மாதத்தின் முதல் வாரம் மட்டும் (பணம் கேட்டு)வரும் தொலைபேசி அழைப்புகள் எண்ணற்றவையாக இருக்கும் என சொல்வார்கள்

இன்று மனிதம் என்னும் புனிதம் மறைந்து பணம் பெரிதாகிப் போனது மனிதத்தை எங்கே கொண்டு சேர்க்கும் என தெரியவில்லை.

உண்மையில் நாம் நாகரீகமடைந்து விட்டோமா? சந்தேகமாயிருக்கிறது! என இயக்குனர் மிஷ்கின் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார், அவரின் வரிகளில் தான் எத்தனை உண்மை !

November 29, 2009

தங்லீஷ் பாடல்களும்-பிறைசூடன்,எஸ்.பி.பி யின் கருத்துக்களும்

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "வானம் பாடி" என்னும் நிகழ்ச்சியில் இந்த வாரம் கந்தசாமி திரைப்படத்திலிருந்து அலேக்ரா என்ற பாடலை ஒரு பெண் போட்டியாளர் பாடியிருந்தார்.

பாடலை அறிவிக்கையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடல்: அலேக்ரா, படம்:கந்தசாமி, எழுதியவர்:கவிஞ்ர்.விவேகா என அருமையாகத் தான் ஆரம்பித்தார்; ஆனால் பாடல் பாடப்படுகையில் பாடலின் மீது அத்தனை ஈடுபாடு காண்பிக்கவில்லை.

அது, பாடல் சுருதியில்லாமல் பாடப்பட்டதாலா இல்லை பாடல் வரிகள் பாடும் நிலா பாலுவிற்கு பிடிக்காததாலா என தெரியவில்லை.

எனினும் போட்டியாளர் பாடிய விதத்தை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவே பாடலைக்குறித்தும் சில வரிகள் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பாலுவிற்கு.... என்னவெல்லாமோ பாடல் எழுதுகிறார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை என நிறுத்திக் கொண்டார்.

கவிஞர். பிறைசூடன் விமர்சிக்கையில் இந்திய பொண்ணுக்கு இத்தாலிய கண் ஒத்து வருமா என்றார். இணையத்தில் இருந்து என்னவெல்லாமோ வார்த்தைகளைக் கோர்த்து தங்கிலீஸ் பாடல்களை எழுதுகிறார்கள். வெகு நாட்கள் இவை நிலைக்காது என்றார்.

இது மாதிரியான தமிழையே வருங்கால சந்ததிக்கு நாம் விட்டுப் போனால் அது தவறு என்றார். மேலும், இறைவனுக்கும், நான் நேசிக்கும் தமிழுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இவற்றைச் சொல்கிறேனேயன்றி பாடல் எழுதிய கவிஞரைக் குறை கூறுவதற்காக அல்ல எனவும் கூறினார்.

முன்னொரு வார வானம் பாடி நிகழ்ச்சியில் வில்லு திரைப்படத்தின் பாடல் குறித்து... 'டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை' என்றெல்லாம் பாடல் எழுதிகிறார்கள் இவற்றையும் இன்றைய சின்னஞ்சிறுசுகள் (புரியாமலேயே) முணங்கிக் கொண்டிருக்கின்றன, இவை எங்கே போய் முடியுமோ என அங்கலாய்த்தார்.

இவை... நிச்சயமாகவே வருங்கால சந்ததிக்கு நாம் விட்டுப் போகிற நல்ல சங்கதிகள் இல்லை தான்.


வானம்பாடி நிகழ்ச்சியின் காணொளி கீழே... சுட்டியை அளித்த பதிவர் சாஷீக்கு நன்றி


@ Yahoo! Video

November 28, 2009

மழை-கிறுக்கல்கள்கார் முகிலால்

நீல வான் மறைகையில்

எழும் கவலையினால்

விழும் வானின்

கண்ணீர் திவலையா-நீஅடை மழை

மெதுவாய் துவங்கும்

உன் விசும்பல்களை

பீரிட செய்தவர்-யாரோ

வான்வெளியிலும் பாகுபாடோ
வெண் முகிலாய் இருக்கையில்

கவலை கொள்ளா வானம்-நீ

கரிய நிறம் கொள்கையில்

வெறுத்து கீழே தள்ளுதல்

வர்ண பேதமோ


எவருமில்லா தனிமையில்

என்னுடன் ஆடும்

என்னுயிர் தோழியா நீ

தோழி என்றதால்-நின்

அடை மழையால்

அடம் பிடித்து-என்

அலுவல்களை பாதிக்கிறாயோ
சங்கீதச் சாரலில்

சங்கேதங்களால்-தன்

அகம் மகிழும்

சிறு குழந்தையை

சினம் கொண்டு அழைக்கும்

அன்னைக்கு தெரியுமா

சாரலின் சங்கேதங்கள்
கருப்புக் குடை

காண்பித்தால்-நீ

மீண்டும் வரமாட்டாய்

என்பதாலா-இவள்

வர்ணக் குடை

விரிக்கிறாள்

-------

நவம்பர் மழையில்
குவைத் நகரத்தில்
முடங்கிய போது
கிறுக்கியவை

November 25, 2009

2012 ம் 200 ஆவது பதிவும்!

200 ஆவது பதிவு பேரழிவைக்குறித்து இருக்கும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.... இருக்கட்டும் இருக்கட்டும்.

மாயன் நாட்காட்டி, 2012 ல் உலகம் அழிவு, நாசா விஞ்ஞானிகளின் மறுப்பு என பல வருடங்களாகவே புகைந்து வரும் உலகம் அழிவதைக் குறித்த குறிப்புகள் கொண்ட மாயன் கலாச்சாரத்தின் மையக்கருத்தை கொண்டு Independence Day(1996), The Day After Tomorrow(2004) போன்ற அழிவைக் குறித்த திரைப்படங்களால் மிரட்டிய இயக்குனர் ரோலண்ட் எம்மெரிக் 2012 என்ற திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.


Y2k விவாதங்கள் உட்பட இதற்கு முன்னரும் பலராலும் பலமுறை இன்ன நாளில் உலகம் அழியப்போகிறது என முன்குறிக்கப்பட்டாலும் எந்த கருத்துக்களும் மெய்யாகவில்லை.


2012 திரைப்படத்தில் சினிமாத்தனங்கள் இருந்தாலும்,தொழில்நுட்பத்தின் உதவியுடன் (Graphics) 2012 வருடத்தின் போது தொடர்ச்சியாக உலகம் முழுவதும் ஏற்பட போவதாக எடுக்கப்பட்டிருக்கும் ஆழிப்பேரலை(சுனாமி), நிலநடுக்கங்கள், நோவாவின் பேழை போன்ற மிகப்பெரிய கப்பல்கள், எரிமலை சீற்றங்கள் என பிரம்மாண்டங்கள் வியக்கவைக்கின்றன.


திரைப்படத்தில் உலகின் ஒவ்வொரு பகுதிகளும் ஒன்று மாறி ஒன்று நிலைகுலையும் போது நமது ஈரக்குலையும் நடுங்கத்தான் செய்கிறது.


இத்தனை பிரம்மாண்டங்களைக் கொண்டுள்ள இத்திரைப்படத்திற்கான செலவு 1400 கோடியாம்!!!


இந்த பேரழிவிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சிலரை மட்டும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்படும் மிகப்பெரிய கப்பல்கள் வடிவமைக்கப்படுவதற்கு இந்தியர் ஒருவர் காரணமாவதாகவும், சீனாவில் அவை வைக்கப்பட்டிருப்பதாகவும் கதை அமைக்கப்பட்டிருப்பது வருங்காலத்தில்(இப்போ மட்டும் என்னவாம்!) மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை ஆசிய நாடுகள் தகர்க்கும் என்பதற்காக அமைக்கப்பட்டதா என தெரியவில்லை.


எதுவாக இருந்தாலும் இந்த திரைப்படம் அதன் பிரம்மாண்டத்திற்காக ஒருமுறையேனும் பார்க்கப்பட வேண்டிய திரைப்படமே.


தற்போது '2012' திரைப்படத்தைக்குறித்து இணையத்தில் விவாதிக்கப்படாத நிமிடங்கள் இல்லை எனலாம்.


மாயன் நாட்காட்டியைக்குறித்தும் 2012 திரைப்படத்தைக் குறித்தும் விக்னேஷ்வரன் என்பவரால் இணையத்தில் எழுதப்பட்டிருக்கும் இடுகைகளை கீழே உள்ள சுட்டி யை சுட்டினால் படிக்கலாம்.


http://vaazkaipayanam.blogspot.com/2009/11/2012.htmlNovember 24, 2009

மாலை நேரம் - பாடல் வரிகளுடன் காணொளியாய்

'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "மாலை நேரம்" பாடல் குறித்து இப்போது சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.இதமான காதல் பாடல்களை ரசிக்கும் அனைத்து தமிழ் ரசிகர்களையும்; இசைப்பிரியர்களையும் சில மாதங்களாகவே கட்டிப்போட்டிருக்கிறது என்பதற்கு அந்த பாடலைக்குறித்து இதுவரை எழுதப்பட்டிருக்கும் எண்ணற்ற வலைப்பதிவுகளே சாட்சி.

இந்த பாடல் குறித்து பதிவர் கார்க்கியின் பதிவு இங்கே

பாடல் வரிகளை புகழ்வதா இல்லை மெட்டைப் புகழ்வதா இல்லை பாடகியை புகழ்வதா என தெரியவில்லை.

அற்புதமாக கோர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அதே போன்று ஆன்ட்ரியாவின் குரலை எத்தனை பாராட்டினாலும் தகும். பாடல் வரிகளைக் குறித்து சொல்லவே தேவையில்லை. பாடலாசிரியர் செல்வராகவன் பாடல் வரிகளுக்கு காதல் வர்ணம் தீட்டியிருக்கிறார் என்று கூட சொல்லலாம்.

பாடகி ஆன்ட்ரியா (ல,ள) (ன,ண) உச்சரிப்புகளில் கவனம் செலுத்தியிருந்தால் பாடல் இன்னும் சிறப்பைப் பெற்றிருக்கும்.

மாலை நேரம் பாடலை பாடல் வரிகளுடன் கீழே காணொளியாக கோர்த்திருக்கிறேன்...
Search and Download More Music Free

November 20, 2009

பிரிவினைகளுக்கு எதிராக குரல் கொடுத்த சச்சினும் ராகுலும்

இந்திய தேசத்தில் சாதியினாலும், மதத்தின் பெயராலும், மொழியினாலும், எல்லைகளினாலும் தொடர்ந்து இருந்து வரும் பிரிவினைகளுக்கும் அதனை ஊக்குவித்து வரும் பிரிவினை சக்திகளுக்கும் எப்போதுமே குறைவில்லை.


எனினும் முன்னிருந்ததை விட தற்போதைய கணினி யுகத்தில் பிரிவினைகள் குறைந்திருக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இதில் இளைஞர்களின் பங்கு நிச்சயம் உண்டு என்பதில் சந்தேகமில்லை.


இது ஒருபுறமிருந்தாலும் சட்டக்கல்லூரி சம்பவம் போன்ற காட்டுமிராண்டித்தனத்தையும் மறந்து விட முடியாது.


தாங்கள் எந்த சாதி, மதத்தையும் சாராதவர்கள் எனவும் தங்கள் பிள்ளைகளின் சான்றிதழ்களில் சாதி,மதமற்றவர்கள் என்பதைக் குறிப்பிடவும் போராடி வருபவர்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.


இவற்றிற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருந்த சச்சின் மற்றும் ராகுல் காந்தியின் அறிக்கைகள் மேலும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.


நான் மகாராஷ்டிரத்தைச் சார்ந்தவன் என்பதில் எனக்கு பெருமையென்றாலும் முதலில் நான் ஒரு இந்தியன் என சச்சின் கடந்த வார பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.


அதே போன்று கடந்த மாதம் கேரளாவில் பேட்டி ஒன்றின் போது ராகுல் காந்தி... நான் ஒரு மனிதனின் வீட்டிற்கு தானே போகிறேனே அல்லாமல் ஒரு தலித்தின் வீட்டிற்கு அல்ல; பத்திரிக்கைகள் தான் இத்தகைய பாகுபாட்டைக் குறிப்பிட்டு எழுதி வருகின்றன என பத்திரிக்கைகளை சாடியிருந்தார்.

இவை சாதி, மத, இன பேதமற்ற இந்தியாவை காண ஆவலாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் மேலும் ஊக்கமளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

November 11, 2009

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் 'SALVATION ARMY'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்பது அறிஞர் அண்ணாவின் வாக்கு .அதைப் போன்று SALVATION ARMY எனப்படும் அமைப்பு இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏழைகளுக்கும், தேவையிலிருப்பவர்களுக்கும் உதவி செய்து வருகிறது.

ஏழைகளுக்கு உதவி செய்யும் நல்லெண்ணத்தில் 1865 ல் இங்கிலாந்தின் கிழக்கு லண்டன் பகுதியில் வில்லியம்பூத் மற்றும் கேதரின் பூத் என்னும் தம்பதிகளால் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவ நிறுவனம் தான் இரட்சணிய சேனை என்றழைக்கப்படும் SALVATION ARMY.

இன்று 118 நாடுகளில் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது Salvation Army. குறிப்பாக இயற்கை பேரழிவுகளிலும், பெரும் விபத்துகளிலும் தங்களது உதவிக்கரங்களை நீட்ட SA எப்போதுமே தவறியதில்லை.

2001 ல் அமெரிக்காவில், உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போதும் Red Cross க்கு இணையாக நின்று நிவாரணப்பணிகளை மேற்கொண்டதும் Salvation Army தான்.

2004 ல் இந்தியா உட்பட்ட தெற்காசிய நாடுகள் ஆழிப்பேரலையின் (சுனாமி) தாக்குதலுக்கு உள்ளான போதும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டிருக்கிறது.குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகளை ஏற்படுத்தியதோடு சாலையையும் சீரமைத்துக் கொடுத்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டது. அந்த சாலைக்கு அரசாங்க அனுமதியுடன் வில்லியம் பூத் சாலை எனவும் பெயரிடப்பட்டது.

தமிழகத்திலும் கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூகப்பணி என பல பணிகளை மேற்கொண்டுவருகிறது. மருத்துவப்பணியில் சொல்லும்படியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரத்தில் காதரீன் பூத் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

காலங்காலமாக சிறந்து விளங்கிவரும் உலகின் பத்து பிரபல அமைப்புகளை 2004 ல் Booz Allen Hamilton என்ற நிறுவனம் பட்டியலிட்டது. அதில் ஆக்ஸ்ஃபோர்டு,ஒலிம்பிக் விளையாட்டுகள், சோனி நிறுவனம்,ரோலிங் ஸ்டோன்ஸ் இவைகளின் வரிசையில் Salvation Army ம் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்கள் அறிய
http://en.wikipedia.org/wiki/Salvation_army
http://www.salvationarmy.org/ihq/www_sa.nsf
http://www1.salvationarmy.org/ind

http://en.wikipedia.org/wiki/Catherine_Booth_Hospital

நன்றி
SA,
Gee Jo Sam,

CBH - Gershom


November 08, 2009

பிரிவினைகளைத் தூண்டும் கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவம் என்பது இன்றைய காலகட்டத்தில் அன்பை பறைசாற்றுகிறதோ இல்லையோ, வெறுப்பையும், பிரிவினைகளையும், விரோதங்களையும் வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

கிறிஸ்தவத்தை வியாபாரமாக்கியது தான் இந்த நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் செய்த அரும்பெரும் சாதனைகளில் முதலிடம் பிடிப்பது. பணக்கார பேய்களுக்கு ராஜபோக மரியாதை அளிக்கும் கிறிஸ்தவ சபைகள் ஏழை மக்களை ஏளனமாக பார்ப்பதும் உண்மையாகி வருகிறது.

இவைகள் போதாதென்று கல்வி நிறுவனங்களை நிறுவி காசு கறக்கும் மகான்களும் உண்டு; மட்டுமல்லாமல் அவர்களின் நிறுவனங்களில் பிற கிறிஸ்தவ பிரிவினரைச் சேர்த்துக் கொள்ளாமல் பாகுபாடு பார்ப்பதும் சகஜமாகி விட்டது.

இவை அனைத்திற்கும் அச்சாரமாகவும், அடித்தளமாகவும் இருப்பது கிறிஸ்தவத்திற்குள்ளேயே காணப்படும் எண்ணிக்கையற்ற பிரிவுகள் தான் என்பது கிறிஸ்தவர்கள் வெட்கப்படவும், வருத்தப்படவும் வேண்டிய விஷயம். சாதிப் பாகுபாடு, இன வெறியைப் போன்றே இதுவும் மகா கேவலமான செயலாகும்.

தற்செயலாக கிறிஸ்தவன் என சொல்லித் திரிகிற எவருடனாவது பேச்சு கொடுத்தால் நீங்கள் என்ன கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற கேள்வியோடு தான் ஆரம்பிப்பார்கள் ஆரம்ப அறிமுகத்திலேயே!

கிறிஸ்தவம், ஒரு கருத்தைத் தான் போதிக்கிறது என்றால் ஏன் இத்தனை பிரிவுகள், வகுப்புகள், பிரிவினைகள், பாகுபாடுகள் என்ற உண்மை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

ஒரு பிரிவைச் சார்ந்த ஆலயத்திற்கு போய்விட்டு வந்தால் மற்ற பிரிவை சார்ந்தவர்கள் முறைப்பதும் இவர்கள் ஆலயத்திற்கு போனால் அவர்கள் முறைப்பதும் இன்னும் நகைச்சுவையான செயல்.

கிறிஸ்தவத்திற்கு உள்ளேயே இத்தனை பிரிவினைகள் இருக்க இவர்கள் மற்றவர்களுக்கு நற்செய்தி சொல்வதனால் என்ன பயன்?

மனிதனை மனிதனாக பார்க்கும் மனிதாபிமானம் இல்லாதவரை, இது போன்ற பிரிவினைகள் இருக்கும் வரை மண்ணில் மனிதனுக்கும், மனித உணர்வுகளுக்கும் மரியாதை இல்லை.

November 04, 2009

நோயாளியின் மேலோகப் பயணத்தில் முடிந்த மன்மோகனின் பயணம்


நேற்று 03.11.2009 அன்று சண்டிகரில் உள்ள PGMIER (Postgraduate Institute of Medical Education & Research) மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் சிங் சென்றிருக்கிறார்.

அவரின் வருகையால் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு உயிரைப் பாதுகாக்க முடியாமல் செய்திருக்கிறது. கடுமையான பாதுகாப்பு காரணத்தால் சுமித் வர்மா என்ற சிறுநீரக நோயாளி தக்க நேரத்தில் சிகிச்சை பெறவியலாமல் காலமாகியிருக்கிறார். பாதுகாவலர்கள் அவரை இரண்டு மணி நேரம் மருத்துவமனைக்குள் நுழையவிடாமல் செய்திருக்கின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காலமான நோயாளியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இன்று பிரதமர் அறிக்கையும்; நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யவும் உத்தரவிட்டிருக்கிறாராம்.

வழக்கமாக அமைச்சர் பெரு(சிறு)மக்களோ! சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்களோ வருகிறார்கள் என்றாலே போக்குவரத்தில் பல மாற்றங்களைச் செய்தும், சி(ப)ல சாலைகளை தற்காலிகமாக அடைத்தும் விடுவர். இவர்களுக்கே இத்தகைய ஏற்பாடென்றால் பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பைக் குறித்து சொல்ல வேண்டியதில்லை.

நேற்று சண்டிகரில் நடந்த சம்பவம் எந்த அளவிற்கு உண்மை என்பது ஒருபுறமிருந்தாலும். உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்புகளும், பாதுகாப்பு வளையங்களும்; அவர்கள் பயணம் செய்யும் சாலைகளில் பொதுமக்கள் பயணம் செய்ய மறுக்கப்படுவதும் வாடிக்கையாகி போய்விட்டதாகவே படுகிறது. அவை மீண்டும் பல கேள்விகளுக்கும் உள்ளாகியிருக்கின்றன.

இத்தனை கெடுபிடியான பாதுகாப்புகள் என்னத்திற்கு என்பது எவர்க்கும் இன்னும் புலப்பட்டதாகத் தெரியவில்லை. யாருக்கு பயப்படுகிறார்கள்? ஓட்டளித்த பொதுமக்களுக்கா? இல்லை எதிர்க்கட்சிகளின் சதிகளுக்கா? இல்லை தீவிரவாத தாக்குதலுக்கா?

அப்படியே தீவிரவாத தாக்குதலுக்கு பயந்து தான் இத்தகைய பாதுகாப்பு முறைகள் என்றால், தங்களது சொந்த உயிருக்கே உத்தரவாதம் அளிக்கவியலாத ஒரு தலைவர் எப்படி சாதாரண குடிமகனின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கவியலும். இத்தகைய நிலைமைக்கு காரணமென்ன?

பயம் இல்லையென்றால் அதிகாரத்தை தவறான வழியில் உபயோகிக்கிறார்களா? பல நூறு வாகனங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தால் தான் அவர்களுக்கு பெருமையா? பல நூறு காவலர்கள் இருந்தால் தான் அவர்களால் பாதுகாப்பாக இருக்கவியலுமா?

செய்வதையெல்லாம் செய்துவிட்டு பின்னர் வருத்தம் தெரிவிப்பதனால் போன உயிர் வந்துவிடுமா என்ன!

November 01, 2009

இந்தியாவிற்கு புகழ் சேர்த்த ஐஸ்வர்யா ராய்


1994 ல் வசீகர கண்களைக் கொண்ட ஐஸ் @ ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பர்ஸ்களிலும், சட்டைப்பைகளிலும் நண்பர்கள் பலர் வைத்துக் கொண்டு திரிந்ததைப் பார்த்திருக்கிறேன். ஐஸ்வர்யா உலக அழகியாக முடிசூட்டப்பட்டதன் பிரதிபலிப்பு அது. தனது உலக அழகி பட்டத்தால் 1994 ல் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஐஸ்வர்யா ராய்.

மாடலிங்கிற்கு வருவதற்கு முன் கட்டடக்கலையில் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். தனது ஒன்பதாவது வயதிலேயே Camelin நிறுவனத்தாரின் பென்சில் விளம்பரத்தில் நடித்திருக்கிறார். மாடலிங்கில் ஓரளவு பெயர் கிடைத்தாலும் 1994 ல் அவர் பெற்ற உலக அழகிப் பட்டம் தான் அவரை இன்னும் புகழ் பெறச் செய்தது.

மங்களூரில் பிறந்த ஐஸ்வர்யாவின் திரையுலக முதல் அறிமுகம் தமிழில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் 1997 ல் வெளியான இருவர் தான் அவரின் முதல் திரைப்பார்வை. அதன் பிறகு Aur Pyar Ho Gaya என்ற இந்திப் படத்தில் நடித்தாலும் தமிழே மீண்டும் அவருக்கு பெயரைப் பெற்றுத் தந்தது. 1998 ல் வெளியான இயக்குனர் ஷங்கரின் 'ஜீன்ஸ்' திரைப்படம் அவருக்கு மேலும் பெயர் ஈட்டித் தந்தது.

அவர் நடித்து வெளியான முதல் இரு தமிழ் திரைப்படங்களுக்கும் இசை மீட்டியவர் இசைப்புயல் ரஹ்மான் தான். அதிலும் ஜீன்ஸ் திரைப்படத்திற்காக வைரமுத்து அவர்கள் எழுதிய பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடலும், பாடல் படமாக்கப்பட்ட விதமும் வெகுவாகப் மக்களிடம் பேசப்பட்டது,
 
அதன் பிறகு இந்தி,ஆங்கிலம்,பெங்காலி,தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் அவருக்கு சிறப்பாக அமைந்த படங்கள் என்றால் 'Sarkar Raj', 'Jodhaa Akbar', 'Guru', 'Dhoom 2', 'Devdas', 'Mohabbatein', 'Hamara Dil Aapke Paas Hai', 'Josh', 'Taal', 'Hum Dil De Chuke Sanam' ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழில் ஜீன்ஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியாக 1999 ஆம் வருடம் ராஜீவ் மேனனின் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் அதன் பிறகு இப்போது தான் எந்திரன் மற்றும் ராவணாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


உலகப் புகழ் பெற்றிருக்கும் ஐஸ்வர்யா, பிரசித்தி பெற்ற டைம்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்ட உலகில் செல்வாக்கு உள்ள 100 நபர்களில் ஒருவராக சமீபத்தில் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் அமைந்துள்ள Madame Tussaud ன் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை அமைக்கப்பட்ட முதல் பாலிவுட் நடிகையும் ஐஸ் தான்.

2003 ஆம் வருடம் பிரான்சின் புகழ்பெற்ற Cannes Film Festival ல் இந்திய தரப்பில் இருந்து முதல்முறையாக நடுவராக ஏற்படுத்தப்பட்டவர் ஐஸ் என்பதும் அவருக்கு பெருமை தான்.


2005 ல் உலகில் அதிக நேயர்களைக் கொண்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான Oprah Winfrey Show விலும் கலந்து கொண்டிருக்கிறார்.

இத்தனை புகழையும், இந்தியாவிற்கு பெருமையும் சேர்த்த ஐஸ்வர்யாவிற்கு நவம்பர் 1அன்று பிறந்த நாள். பிறந்த நாள் வாழ்த்துக்களோடு அவரின் கலைப்பணியும், நல்லெண்ண பணிகளும் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள். மேலதிக தகவல்கள் இங்கே.

ஐஸ்வர்யா ராய் பச்சனின் நடிப்பில் நான் அதிகம் ரசித்தது தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்; ஆங்கிலத்தில் Mistress of Spices , இந்தியில் Raincoat, Dhoom2, Taal, Umrao Jaan, Josh.

Related Posts with Thumbnails