November 04, 2009

நோயாளியின் மேலோகப் பயணத்தில் முடிந்த மன்மோகனின் பயணம்


நேற்று 03.11.2009 அன்று சண்டிகரில் உள்ள PGMIER (Postgraduate Institute of Medical Education & Research) மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் சிங் சென்றிருக்கிறார்.

அவரின் வருகையால் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு உயிரைப் பாதுகாக்க முடியாமல் செய்திருக்கிறது. கடுமையான பாதுகாப்பு காரணத்தால் சுமித் வர்மா என்ற சிறுநீரக நோயாளி தக்க நேரத்தில் சிகிச்சை பெறவியலாமல் காலமாகியிருக்கிறார். பாதுகாவலர்கள் அவரை இரண்டு மணி நேரம் மருத்துவமனைக்குள் நுழையவிடாமல் செய்திருக்கின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காலமான நோயாளியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இன்று பிரதமர் அறிக்கையும்; நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யவும் உத்தரவிட்டிருக்கிறாராம்.

வழக்கமாக அமைச்சர் பெரு(சிறு)மக்களோ! சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்களோ வருகிறார்கள் என்றாலே போக்குவரத்தில் பல மாற்றங்களைச் செய்தும், சி(ப)ல சாலைகளை தற்காலிகமாக அடைத்தும் விடுவர். இவர்களுக்கே இத்தகைய ஏற்பாடென்றால் பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பைக் குறித்து சொல்ல வேண்டியதில்லை.

நேற்று சண்டிகரில் நடந்த சம்பவம் எந்த அளவிற்கு உண்மை என்பது ஒருபுறமிருந்தாலும். உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்புகளும், பாதுகாப்பு வளையங்களும்; அவர்கள் பயணம் செய்யும் சாலைகளில் பொதுமக்கள் பயணம் செய்ய மறுக்கப்படுவதும் வாடிக்கையாகி போய்விட்டதாகவே படுகிறது. அவை மீண்டும் பல கேள்விகளுக்கும் உள்ளாகியிருக்கின்றன.

இத்தனை கெடுபிடியான பாதுகாப்புகள் என்னத்திற்கு என்பது எவர்க்கும் இன்னும் புலப்பட்டதாகத் தெரியவில்லை. யாருக்கு பயப்படுகிறார்கள்? ஓட்டளித்த பொதுமக்களுக்கா? இல்லை எதிர்க்கட்சிகளின் சதிகளுக்கா? இல்லை தீவிரவாத தாக்குதலுக்கா?

அப்படியே தீவிரவாத தாக்குதலுக்கு பயந்து தான் இத்தகைய பாதுகாப்பு முறைகள் என்றால், தங்களது சொந்த உயிருக்கே உத்தரவாதம் அளிக்கவியலாத ஒரு தலைவர் எப்படி சாதாரண குடிமகனின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கவியலும். இத்தகைய நிலைமைக்கு காரணமென்ன?

பயம் இல்லையென்றால் அதிகாரத்தை தவறான வழியில் உபயோகிக்கிறார்களா? பல நூறு வாகனங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தால் தான் அவர்களுக்கு பெருமையா? பல நூறு காவலர்கள் இருந்தால் தான் அவர்களால் பாதுகாப்பாக இருக்கவியலுமா?

செய்வதையெல்லாம் செய்துவிட்டு பின்னர் வருத்தம் தெரிவிப்பதனால் போன உயிர் வந்துவிடுமா என்ன!

3 comments:

கிறிச்சான் said...

இது மாதிரி தினம் எத்தன உயிர் போகுதோ??? இந்த அரசியல் வாதிங்க அள்ளு தாங்கலப்பா...

Anonymous said...

இதை கொலை வழக்காக மாற்றி , சம்பந்த்தப்பட்ட அதிகாரிகளின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெறும் ஆறுதல் கடிதம் , எதற்கும் புண்ணியமில்லை ...

ahaanandham said...

வருந்தத்தக்கது,,எல்லாம் ஒரு பில்டப் தான் ,///////////////,/அப்படியே தீவிரவாத தாக்குதலுக்கு பயந்து தான் இத்தகைய பாதுகாப்பு முறைகள் என்றால், தங்களது சொந்த உயிருக்கே உத்தரவாதம் அளிக்கவியலாத ஒரு தலைவர் எப்படி சாதாரண குடிமகனின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கவியலும்,,////////////// ரொம்ப நாள் எனக்கு உள்ள சந்தேகமும் இதான் ,,மக்களுக்க உயிரெல்லாம் ..று மாதிரி அத ஒரு பொருட்டா நினச்சா நம்ம இனம் இவ்ளோ அழிஞ்சிருக்காது ,,

Post a Comment

Related Posts with Thumbnails