January 26, 2009

இனிய 60 ஆவது குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசுதினத்தன்று இந்திய மண்ணிலிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவின் பெருமைகளை ராஜ்பத்தில் காண்கையில் பெருமை அடைகிறேன்.

January 15, 2009

மோடியை பிரதமராக்குங்கள்!

நேற்று 14.01.2009 அன்று குஜராத்தில் நடைபெற்ற தொழிலதிபர்கள் கருத்தரங்கத்தில் சுவாரஸ்யமான, ஆனால் மிக முக்கியத்துவம் வாய்ந்த கருத்து ஒன்று பெரும்பாலான தொழிலதிபர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது. "நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக்கப்பட வேண்டுமென்பது" தான் அது.

மோடிக்கு சாதகம்
குஜராத், ஜனவரி 2001 ன் நிலநடுக்கத்தினாலும் உள் மாநில பிரச்சினைகளினாலும் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்குள்ளான நிலையில் அக்டோபர் 2001 ல் பொறுப்பேற்ற இவரது ஆட்சியில் தான் குஜராத் மாநிலம் இந்தியாவிலேயே அதிக தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவெடுத்தது; அதாவது மோடி பொறுப்பேற்ற முதல் ஆண்டு குஜராத் 10% வளர்ச்சி வீதம் கண்டது. கடந்த ஆண்டில் அது மேலும் உயர்ந்து 11.5% ஆகியுள்ளதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.

மேற்கு வங்காளம் துரத்தியடித்த டாடாவின் நானோ கார் தொழிற்சாலையையும் இருகரம் கூப்பி வரவேற்ற பெருமையும் மோடிக்கு உண்டு.

பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வருமெனில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் பாராளுமன்ற தாக்குதலில் பிடிபட்டு திஹார் சிறைச்சாலையிலிருக்கும் அஃப்ஸல் குருவை 2004 ன்உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தூக்கிலடவும் தயங்கமாட்டோம் எனவும் சில ஆண்டுகளாகவே பிரச்சாரித்தும் வருகிறார்.

மோடிக்கு பாதகமானவை
பிப்ரவரி 2002 ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற கலவரங்களை தடுக்கத் தவறியதில் தேசிய அளவில் பெரும்பாலான கட்சிகளும், மக்களும் இன்றளவும் மோடி மீது தவறான எண்ணம் கொண்டிருப்பினும்; நானாவதி விசாரணை கமிஷனோ, குஜராத் மாநில மக்களோ அவர் குற்றவாளி என தீர்த்துவிடவில்லை. அதனால் தான் 2007 ல் மோடியை மீண்டும் குஜராத் மக்கள் அமோகமாக வாக்களித்து முதல்வராக தெரிந்தெடுத்தனர்.எனினும் தேசிய அளவில் ஆதரவு கேள்விக்குறியே.

கோத்ரா சம்பவத்தால் உலக அளவில் குறிப்பாக அமெரிக்காவில் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. அமெரிக்கா செல்வதற்கு 2003ல் ஒருமுறையும் ஆகஸ்ட் 2008ல் மறுமுறையுமாக இருமுறை விசா மறுக்கப்பட்டுள்ளார். இச்செயலுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கே அமெரிக்க அரசு இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறது என கண்டனம் தெரிவித்திருந்தார்.

நவம்பர் 2008 மும்பை தாக்குதலின் போது; கமாண்டோ படைகள் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அழையா விருந்தாளியாக சம்பவ இடத்திற்கு சென்று பரபரப்பையும்; பொதுமக்களிடையே கெட்ட பெயரையும் சம்பாதித்துக் கொண்டார் (வேற்று மாநில முதல்வர், பிற மாநிலத்திற்கு செல்ல என்ன அவசியமோ? அதுவும் இக்கட்டான சூழ்நிலையில்)

அத்வானி Vs மோடி
பிரதமர் பதவிக்கு கட்சியினாலும் மூத்த தலைவர்களினாலும் அத்வானி முன்னிறுத்தப்பட்டிருக்கையில், மோடியை முன்னிறுத்த வேண்டுமென்று சில அத்வானி அதிருப்தியாளர்களும் (ஜின்னா கருத்திற்கு எதிர்ப்பாளர்களோ என்னமோ?) அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களும் கூறி வருவது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் என்று தான் பரபரப்பு இல்லை என்கிறீர்களோ! (As a famous quote says there is never a dull day in Indian politics)

அரசியல் காய்கள் எவ்விதம் நகர்த்தப்படுமென்று பொருத்திருந்து பார்ப்போம். ஒருவேளை பிரதமராகியாலும் இருமுறை விசா மறுக்கப்பட்ட அமெரிக்க அரசுடன் இவரது உறவு எப்படியிருக்கும் என்பதும் கேள்விக்குறியே. நீங்கள் மோடிக்கு ஆதரவா? இல்லை எதிர்ப்பா?
நன்றி NDTV மற்றும் wikipedia

January 12, 2009

வாழ்த்துக்கள் ரஹ்மான் அவர்களே

வாழ்த்துக்கள் ரஹ்மான் அவர்களே; தங்களின் கோல்டன் குளோப் விருதிற்கு. நீங்கள் இந்தியர் அனைவரையும் குறிப்பாக தமிழர்கள் எங்களை பெருமைப்பட வைத்துள்ளீர்கள். இறைவன் ஆசீர்வதிக்கட்டும் மேன்மேலும் புகழ் சேர்க்க.

January 09, 2009

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

விடுமுறையில் நான் சுட்ட சில வான்வெளிகள்

புதிய வருடத்தில்
நம் வாழ்வு
காலைக் கதிரவனின்
புதிய ஒளி போன்ற
பொலிவு பெற...
பொங்கல் திருநாளில்
உள்ளம் எல்லாம்
உற்சாகப் பொங்கல் பிறக்க
உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.
கதிரவனைக் காணவில்லையே. காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பில் சொல்லிவிடலாமா!
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன!
கதிரவனுக்கு என்ன நாணமோ தெரியவில்லை!!!

அத்தன சீக்கிரத்தில உன்ன விட்டுருவோமா என்ன? க்ளிக்கிட்டோம் இல்ல
இதுவும் கதிரவனின் கண்ணாச்சிமூச்சி விளையாட்டோ


பி.கு: படங்கள் அனைத்தும் நெல்லையிலும், நாஞ்சிலிலும் சுடப்பட்டவை

January 06, 2009

வீழ்ச்சியிலும் வீரம்

ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த அணியாக தொடர்ந்து தன்னைத் தக்க வைத்துக்கொண்டுள்ளதன் பின்னணி அவர்களின் தன்னம்பிக்கையும், வெற்றிபெற வேண்டுமென்ற தீராத மோகமும், வீழ்ச்சியிலும் அவர்கள் காட்டும் வீரமும், போராட்ட குணமுமே.

மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவு பெற்ற போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளை அதோடு இந்த தொடரையும் பரிதாபமாக இழந்த நிலையில்; மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் ஆட்டத்தையும் இழந்தால். டெஸ்ட் உலக தர வரிசையின் முதலிடத்தை தென்னாப்பிரிக்காவிடம் இழக்க நேரிடும் என்ற உறுத்தலோ, அச்சமோ ஆஸ்திரேலிய அணிக்கோ அணித்தலைவரான ரிக்கி பான்டிங்கிற்கோ இருந்ததாகத் தெரியவில்லை.

ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்களே எடுத்திருந்த நிலையில் (375 ஓட்டங்கள் முன்னிலை) அணித்தலைவர் பான்டிங்க் இன்னிங்க்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது. தோல்வியுற்றால் முதலிடத்தை இழப்போமென்ற கலக்கமே இல்லாமல் ஆஸ்திரேலிய அணி செயல்பட்டிருப்பது தான் டெஸ்ட் கிரிக்கெட் உலகில் அவர்களின் ஆதிக்கத்திற்கு காரணம். (பிற அணிகளென்றால் கைவசம் 6 விக்கெட்டுகளும் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தை சமன் செய்யும் விதம் தொடர்ந்து மட்டை வீச்சை தொடர்ந்திருக்கும்)

2008-09 , நாக்பூரில் இந்திய அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் அதற்கு முந்தைய ஆட்டங்களின் வீழ்ச்சியினால் கவலை கொள்ளாமல் இறுதி இன்னிங்க்சில் 4.15 ரன் விகிதத்தில் (அந்த டெஸ்ட் ஆட்டத்தின் அதிக ரன் விகிதம் அது தான்) வெற்றிக்கு போராடி அதனால் தோல்வியும் அடைந்தது பலருக்கு நினைவிருக்கலாம்

தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற ஒன்பது விக்கெட்டுகளுடன் இன்னும் 314 ஓட்டங்கள் வேண்டிய நிலையில் இறுதி நாள் ஆட்டம் சுவாரஸ்யமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
Related Posts with Thumbnails