September 27, 2009

மட்டைவீச்சில் சொதப்பும் இந்திய பந்துவீச்சாளர்கள்

நேற்று நடந்து முடிந்த இந்தியா-பாக் கிரிக்கெட் ஆட்டம் காலங்காலமாக இந்திய அணியின் மட்டைவீச்சில் இருந்து வரும் பலவீனத்தை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

வழக்கமாக இந்திய அணித்தலைவர் அவரது சார்பில் பந்துவீச்சைக் குறை கூறியிருக்கிறார். என்றாலும் 303 என்ற இலக்கு, உலகிலேயே மட்டை வீச்சில் சிறந்து விளங்கும் இந்தியாவிற்கு !! அத்தனை கடினம் அல்லவே.ஷேவாக்கும், யுவ்ராஜும் இல்லாதது பின்னடைவு என்றாலும் காம்பீர், டிராவிட், ரைனா மூவரும் ரன் விகிதம் 6 க்கு குறையாமல் பார்த்துக் கொண்டது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

இம்மூன்று மட்டை வீச்சாளர்களை பாராட்டுதல் ஒருபுறமிருந்தாலும் இவர்களுக்கு பின் வந்த மட்டை வீச்சாளர்களை குறை சொல்லாமலும் இருக்க முடியாது. இறுதி 4 ஆட்டக்காரர்கள் இணைந்து 50 ஓட்டங்கள் எடுக்கவியலாதவர்களை தேர்வு செய்ததற்காக தேர்வுக்குழுவை குறை கூறினாலும் தகும்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பந்து வீச்சாளர்களின் மட்டை வீச்சு எப்படியிருந்ததோ இன்றளவும் அது அப்படியே தொடர்கிறது. இன்று பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் வெங்கடேஷ் பிரசாத் காலம் முதல் இன்றைய இஷாந்த் ஷர்மா வரை இந்திய அணியில் இதுவரை இடம் பிடித்த பந்து வீச்சாளர்கள் எவரும் சொல்லும்படியான மட்டை வீச்சை வெளிப்படுத்தாதது எவர் குற்றமோ!

ஆறு விக்கெட்டுகள் சரிந்து விட்டது என்றால் போதும்; அதன் பின்னர் வரும் இந்திய மட்டை வீச்சாளர்களிடம் பெரிதாக எதுவும் எதிர்பார்க்க வேண்டாம் என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்வார்கள்; இன்று வரை அதனை மெய்ப்பிக்கும் வரையில் அவர்கள் (பந்து வீச்சாளர்கள்) ஆடி வருவதே அதற்கு காரணம்

பிற அணிகள், குறிப்பாக தர வரிசையில் முதல் இரண்டு இடங்களில் இது வரை இருந்து வரும் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள் மட்டை வீச்சிலும் சிறந்து விளங்கியது தான் அவர்கள் தொடர்ந்து இத்தனை காலமாக முதல் இரண்டு இடங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான காரணங்களில் ஒன்று.

இந்திய அணி சிறந்த அணியாக உருவாக வேண்டுமென்றால் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் மட்டுமல்லாது மட்டைவீச்சிலும் கவனம் செலுத்துதல் அவசியம். அது முடியாத பட்சத்தில் பந்துவீச்சு, மட்டைவீச்சு என இரண்டு பிரிவுகளிலும் திறமை காட்டுபவர்களை தேர்வுக்குழுவினர் கண்டெத்த வேண்டும்.

நேற்றைய தோல்விக்கு காம்பீர் மற்றும் டிராவிட்டின் தேவையற்ற ரன் அவுட்களும்; பொறுப்பற்ற முறையில் ஆடிய அணித்தலைவர் தோனியும் ஒரு விதத்தில் காரணங்களே.

(டிராவிட் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் அன்றும் இன்றும் அப்படியே தான் இருக்கிறார். பாவம் நேற்று அவரை காம்பீர் ஓட விட்டு பின்னி பெடலெடுத்து விட்டார்)

September 22, 2009

தீவிரவாதம் பேசும் 'உன்னைப்போல் ஒருவன்'


'A' Wednesday என்ற பெயரில் இந்தியில் வெளியான திரைப்படத்தின் கதையானாலும், திரைக்கதையில் இந்தித் திரைப்படத்தின் சாயல் சற்றும் இல்லாமல் உன்னைப்போல் ஒருவனை படமாக்கியிருப்பது அருமை. குறிப்பாக 'A' Wednesday 26/11 மும்பை தாக்குதலுக்கு முன்னர் படமாக்கப்பட்டிருந்தது.

'தீவிரவாதத்தை எதிர்க்க தீவிரவாதம் தான் தீர்வாகும்' என்ற திரைப்படத்தின் மையக்கருத்து நடைமுறைக்கு எந்த அளவில் சாத்தியமென்ற விவாதம் ஒருபுறமிருந்தாலும் அது நிச்சயம் யோசிக்கப்பட வேண்டிய விஷயம் தான்.

சிறைகளில் தீவிரவாதிகளே இல்லையென்றால் அல்லது பிடிபட்ட தீவிரவாதிகளை பிடிபட்ட மாத்திரத்திலேயே கொன்றுவிட்டால் விமான கடத்தல்களுக்கும் அதனைத் தொடர்ந்த பேச்சுவார்த்தைகளுக்கும் இடமே இல்லாமல் போயிருக்கும் என்பது உண்மையே. அதனால் 26/11-மும்பை தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்பதும் சரியே

(எனினும் நியூயார்க்-9/11 லண்டன்-7/7 விதமான தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபட தான் செய்வார்கள் என்ற உண்மையையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். )

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களை மட்டுமே தீவிரவாதிகள் என்ற முத்திரைக் குத்தாமல் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் எந்த சமூகத்தை சார்ந்தவரும் தீவிரவாதியே என சொல்லியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

கந்தஹார் சம்பவத்திற்காக முன்னாள் அரசை மறைமுகமாக சாடியிருப்பதும்; மும்பை 26/11 தாக்குதலின் போது தீவிரவாதிகளின் ஊடுவருவலுக்கு காரணம் யாரென உளவுத்துறையும் அரசும் Blame Game ஆடியதை குத்தியிருப்பதும்; Enough is Enough, 26/11 War என்ற தலைப்புகளில் குடைச்சல் கொடுத்த தொ(ல்)லைக் காட்சிகளுக்கும் குறிப்பாக தொலைக்காட்சி நிருபர்களுக்கு சவுக்கடி கொடுத்திருப்பதும் இயக்குனருக்கு சலாம் போட வைக்கிறது.

அதே போன்று 26/11 தாக்குதலுக்கு பின்னர் பொறுப்பற்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக மும்பை நகரமே ஒன்று கூடியது போன்ற நிலையை பேரணிகள், ஊர்வலங்கள் மூலம் ஏற்படுத்திய மும்பை நகர மக்கள் பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் எங்கு சென்றார்கள் என்ற கேள்வியை எழுப்பியிருப்பது சபாஷ் போட வைக்கின்றன.(நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மும்பையில் 45% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது)


கமல்ஹாசன் அவர்களின் பெயர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் போனதை திரையில் கமல் அவர்களே சொல்கையில் ரசிகர்களின் கூச்சல் காதைக் கிழிக்கிறது. வசன கர்த்தா இரா.முருகன் அவர்களுக்கும் , திரைக்கதையில் அசத்தியிருக்கும் கமல் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

மோகன்லாலின் நடிப்பு காவல்துறை ஆணையாளர் வேடத்திற்கு கனக்கச்சிதம், அவரது மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பு அந்த வேடத்திற்கு நன்றாகவே பொருந்துகிறது. லட்சுமி, சந்தானபாரதி இருவருக்கும் அதிக காட்சிகள் இல்லையென்றாலும் திறம்பட செய்திருக்கிறார்கள்.

வசனங்களில் அடிக்கடி வீசும் ஆங்கில வாடையை சற்றே குறைத்திருக்கலாம். ஸ்ருதிஹாசன் தனது அறிமுக இசையிலேயே அசத்தியிருப்பது திரைப்படத்திற்கு மேலும் பலம். திரைப்படத்தில் பாடல் காட்சிகள் இல்லையென்றாலும் கமல்ஹாசன் அவர்களே எழுதியிருக்கும் "நின்றே கொல்லும் தெய்வங்களும்; இன்றே கொல்லும் மதபூசல்களும்" போன்ற பாடல் வரிகள் நம்மை சிந்திக்கச் செய்பவை.

'உன்னைப்போல் ஒருவன்' சாமானியன் ஒருவனின் உள்ளக்குமுறல்.

September 16, 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு அஞ்சலிகள்


தொண்ணூறுகளில் வானொலியில் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் "இன்று ஒரு தகவல்" நிகழ்ச்சியை கேட்காமல் இருந்தால் அன்றைய தினம் முழுவதும் எதையோ இழந்த ஒரு உணர்வு தோன்றும்.

தனது குட்டி கதைகள் மூலம் நல்லெண்ண கருத்துகளை பரப்பியதோடு, சிந்தனைகளையும் தூண்டியவர் அவர்.

"இன்று ஒரு தகவல்" நிகழ்ச்சியை நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்னார் இன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார்.

அன்னாருக்கு அஞ்சலிகள்.

கிரிக்கெட்வாதிகள் ஆகும் அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்களோ இல்லையோ ஆனால் அரசியல் அல்லாத பணிகளில் சற்று அதிகமாகவே ஈடுபாடு காண்பிக்கின்றனர். அதற்கு கிரிக்கெட்டும் விதிவிலக்கல்ல. இன்று மற்றுமொரு அரசியல்வாதி, கிரிக்கெட் சங்கத் தலைவராகியிருக்கிறார்.

குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அம்மாநில முதல்வரும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான நரேந்திர மோடி இன்று தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு முன்னர், டெல்லி மாநில கிரிக்கெட் சங்க தலைவராக பாரதீய ஜனதாவின் மற்றுமொரு மூத்த தலைவர் அருண் ஜெட்லி அவர்களும், மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவராக தேசியவாத காங்கிரஸின் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார் அவர்களும் இருந்து வருகிறார்கள்.

ஏற்கெனவே பல உயர் பதவிகளில் இருக்கும் இவர்கள் போன்ற அரசியல்வாதிகள், அரசியலுக்கு சற்றும் சம்மந்தமே இல்லாத!? கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் எத்தகைய ஈடுபாட்டுடன் தங்கள் பங்களிப்பை அளிக்கக் கூடும் என்பது புரியவில்லை.

கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக் குழுவிற்கு இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளின் மூலம் எந்த இடையூறும் இல்லை என்றும் குறிப்பிட்ட வீரரைத் தான் சேர்க்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துவதில்லை என்றும் கூறப்பட்டாலும், வீரர்கள் தேர்வில் மறைமுகமாக அவர்கள் பங்கு கடந்த காலங்களில் இருந்ததாகவே படுகிறது.

ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படாதவரை இவர்கள் போன்ற அரசியல்வாதிகள், கிரிக்கெட்டில் மட்டுமல்லாது வேறு துறைகளிலும் பல பதவிகளைப் பெறுவது தவிர்க்க முடியாததே.

அரசியல்வாதிகளால் கிரிக்கெட்டிற்கு லாபமோ இல்லையோ கிரிக்கெட்டினால் அரசியல்வாதிகள் லாபமே.

September 14, 2009

ராகுல்,ரஜினி,செரீனா,சச்சின்

ராகுல் முதல் ரஜினி வரை செரீனா முதல் சச்சின் வரை கடந்த வார நிகழ்வுகள் பெரும்பாலானவை அதிரடியாகத்தான் இருந்ததாக கருதுகிறேன்.

ராகுல்

ராகுல் காந்தி அவர்களின் தமிழக சுற்றுப்பயணம் காங்கிரஸில் பரபரப்பையோ மாற்றத்தையோ ஏற்படுத்தியதோ இல்லையோ ஆனால் ஊடகங்களிலும் "அரசியல்-சினிமா" வட்டாரத்திலும் பரபரப்பிற்கு குறைவொன்றுமில்லை.
ராகுலின் அரசியல் பிரவேச அழைப்பிற்கு... 'இப்போதைக்கு அரசியலில் குதிக்கும் எண்ணம் இல்லை' என இரு மூன்றெழுத்து நடிகர்களும் பேட்டி அளிக்க வேண்டிய நிலைமையையும் ஏற்படுத்தி விட்டன ஊடகங்கள்.பெரிய கட்-அவுட்களோ அளவுக்கு மிஞ்சிய விளம்பரங்களோ இல்லாமலிருந்தது சற்றே ஆறுதலான விஷயம்.

தேசிய நதிகளை இணைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என அதிரடியாக ஒரு குண்டை தூக்கிப் போட்டு விட்டு சென்று விட்டார் ராகுல். அதற்கு பதிலளித்த காங்கிரஸ் தரப்போ 'அது அவரது சொந்த கருத்து' என சப்பை கட்டு கட்டுகிறது. காங்கிரஸ் அரசு என்ன செய்யும் என பார்க்கலாம்.

தேசிய நதிகள் இணைப்பு திட்டம் குறித்து வல்லுனர்களுடன் நன்கு ஆலோசித்து அதற்கு ஒரு தீர்வு காண்பதே சரியாக இருக்கும் என தெரிகிறது.

ஏற்கெனவே தமிழகம் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்கிறது. மறுபக்கம் வயல்வெளிகள் (Bye-Pass Road) புற-வழிச் சாலைகளாகவும், வீட்டு நிலங்களாகவும் (Plot) மாற்றப்பட்டு வருகின்றன; வீட்டிற்கு மூன்று நான்கு என இரு சக்கர, நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் பெருகி வருகின்றன... இவை மறைமுகமாக குறைவான மழை பொழிவிற்கு காரணமாகின்றன.

இவற்றால் வரண்டு வரும் தமிழகம் வருங்காலங்களில் என்ன பாடு பட போகிறதோ தெரியவில்லை.

---------------


கிரிக்கெட்-சச்சின்

50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை 25 ஓவர்கள் கொண்ட இரு இன்னிங்ஸ்களாக பிரித்து ஆடலாம் என்ற சச்சினின் கருத்து சற்றே வில்லங்கமாக தெரிகிறது. அதற்கு பதில் ஒரு நாள் போட்டிகளை ஒரு அணிக்கு 25 ஓவர்கள் மட்டுமே கொண்ட அரை நாள் போட்டிகளாக மாற்றி விடலாமோ என்னமோ :(

சச்சினின் கிரிக்கெட் மட்டையில் MRF விளம்பரம் Adidas ஆக மாறியிருப்பது அவரை இப்படி மாற்றி யோசிக்க செய்திருக்குமோ!!

நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியுடன் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசைப் பட்டியலில் பிடித்த முதல் இடம் ஒரு நாள் கூட தங்காமல் போனது ஏமாற்றமே. இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஆட்டமே தொடருமானால் வெகு விரைவிலேயே ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

செரீனா-கிம் கிளைஸ்டர்ஸ்

இரு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் டென்னிஸ் களம் இறங்கிய பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ், அமெரிக்க ஓபனில் வில்லியம்ஸ் சகோதரிகளான வீனஸ்-செரீனா இருவரையும் தோற்கடித்து அதிரடியாக ஆடி வருவது அருமை.

தானே அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி கொண்ட செரீனா அமெரிக்க ஓபன் அரை இறுதிப் போட்டியில் கிம் கிளைஸ்டர்சை எதிர்த்து ஆடினார்.
ஆரம்பத்திலேயே நினைத்தேன் இன்று எப்படியும் கிம் தான் வெற்றி பெறப் போகிறார் அதற்கு செரீனாவின் பதில் என்னவாக இருக்கும் என... அதனை மெய்ப்பிக்கும் வகையில் முதல் செட்டை இழந்த செரீனா விரக்தியில் அவரது டென்னிஸ் மட்டையை மைதானத்தில் ஓங்கி அடித்தார்; முதல் முறை மட்டைக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படாமலிருக்கவே மீண்டும் அடித்து மட்டையை நொறுக்கினார்.(ஒரு பெண்ணுக்கு இத்தனை கோபம் கூடாது தான்)

இது தான் இப்படியென்றால் இரண்டாவது செட்டில் மேலும் விரக்தியடைந்தார் ... இரண்டாவது செட்டின் இறுதி நிலையில் கிம் வெற்றி பெறும் தருவாயிலிருக்கையில் எல்லைக் கோட்டு நடுவர் செரீனாவின் சர்வீசை foul என்ற முறையில் நிராகரித்தார். இதனால் ஏற்கெனவே கடுப்பாகிப் போயிருந்த செரீனா மேலும் கோபத்துடன் நடுவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார், அவரை கொலை செய்து விடுவேன் என அச்சுறுத்தியதாகவும் நடுவர் புகார் கூறவே செரீனா மேலும் தொடர்ந்து ஆட அனுமதி மறுக்கப்பட்டார்.

முன்பொரு முறை செரீனா, இந்தியா வந்திருந்த போது ஆங்கில ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையில்... எனது சகோதரி வீனஸ் உடன் ஆடுகையில் அவர் வெற்றி பெற்று விட்டால் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது;அவருடன் சில நாட்கள் சரியாக பேச கூட மாட்டேன் என கூறினார். இதிலிருந்தே அவரின் டென்னிஸ் மீதான வெறியை (மடத்தனத்தை) புரிந்து கொள்ளலாம்.

நடுவருடனான செரீனாவின் வாக்குவாதம் கீழை காணொளியாய்

September 05, 2009

'அன்னை தெரசா' - சில நினைவுகள்

அல்பேனிய நாட்டு குடிமகளாக பிறந்து இந்திய குடிமகளாக இறந்த ஒரே பெண்மணி அநேகமாக Agnes Gonxha Bojaxhiu என்ற தெரசாவாக மட்டும் தான் இருக்க முடியும்.

அந்நிய நாட்டில் பிறந்தவராயிருந்தாலும் இந்திய நாட்டில் ஆதரவற்றோருக்காய் அவர் செய்த அரும்பணிகளை நாம் அந்நிய படுத்தி விட முடியாது.

இன்னல்கள் பலவற்றின் இடையிலும் அனாதைகளுக்காக அயராது உழைத்த ஆக்னஸ் @ தெரசாவின் கனவு சாதி, சமய, இன பாகுபாடின்றி அன்பையும் அரவணைப்பையும் அளிப்பது மட்டுமாகவே இருந்தது.

ஒருமுறை நன்கொடை வசூலித்து கொண்டிருந்த அன்னை தெரசாவின் கரங்களில் ஒருவர் துப்பியிருக்கிறார். தெரசாவோ அதனை துடைத்து விட்டு "இதனை நான் வைத்துக் கொள்கிறேன்... பசியிலிருக்கும் அனாதைகளுக்காக உதவி ஏதும் செய்யங்கள் என மீண்டும் கை நீட்டியிருக்கிறார்.

அத்தனை அரும்பணிகளை ஆற்றிய பின்னர் கூட.... தன்னைக் குறித்து கூறும் போது "அன்பின் கடிதத்தை இவ்வுலகத்திற்கு எழுதுகின்ற இறைவனின் கரங்களில் இருக்கும் சிறிய பென்சில் மட்டுமே நான் என்கிறார்"

தெரசா அவர்களின் அறப்பணி இந்தியர்களை சோம்பேறி ஆக்குகிறீர்கள்; மீண்டும் பிச்சை எடுக்க தூண்டுகிறீர்கள்; போன்ற பல கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை...

பசியிலிருப்பவனுக்கு மீனை கொடுக்காமல் மீனை பிடிப்பது எப்படி என சொல்லி கொடுக்கலாமே என்ற கேள்வி ஒன்றிற்கு "அவர்கள் மீன் பிடிப்பதற்கு ஏற்ற மனநிலையை நான் உருவாக்குகிறேன்" ; உயர்நிலைகளில் இருக்கிற நீங்கள் மீன்பிடிக்க (வேலைவாய்ப்பினை) ஏற்படுத்தி கொடுங்கள் என கூறியிருக்கிறார்.

தான் செய்த பணிகளில் தெளிவாக இருந்த தெரசாவே தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இறைவன் (அவரில்) இருப்பதை குறித்த பல குழப்பங்களுக்கும் ஆளாகி இருக்கிறார் என்பது மறுக்கமுடியாத ஒன்று .

அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள் இங்கே புகைப்படங்களாய்.

Agnes Gonxha Bojaxhiu @ தெரசா ஆகஸ்ட் 26, 1910 Macedonia ல் (முந்தைய யூகொஸ்லேவியா) அல்பேனிய தகப்பனாருக்கு பிறந்தார்


தெரசா அவர்கள் பிறந்த இடம்.

ஆகஸ்ட் 26 ல் பிறந்தாலும் தான், திருமுழுக்கு எனப்படும் Baptism எடுத்த தினமான ஆகஸ்ட் 27 ஐ தான் பிறந்த நாளாக கருதினார்.

1928 ல் அயர்லாந்தில்... Sisters of Loretto எனப்படும்(இந்தியாவில் பணி செய்ய பயிற்றுவிக்கப்படும் இடம்) குழுவில் சேர்ந்தார்.


1929 ல் இந்தியாவில் பணி செய்ய ஆரம்பித்தார்.

1931 ல் தனது பெயரை தெரசா என மாற்றி கொண்டார்.

1931-1946 வரை கல்கத்தாவில்(St.Mary's High School) ஆசிரியையாக பணியாற்றினார்.

1944 ல் Principal ஆக பதவி உயர்வு பெற்றார். அதே வருடம் காசநோயால் (TB) பாதிக்கப்பட்டார்.


1946 ல் டார்ஜிலிங் பகுதிக்கு ஓய்விற்காக செல்கையில் ஏழைகளுக்காக பணி செய்ய வேண்டுமென இறைவனால் அழைக்கப்பட்டதாக உணர்ந்தார்.


1948 ல் இந்திய குடியுரிமை பெற்றார்.
1950 ல் ஏழைகளுக்கு உதவும் வகையில் Missionaries Of Charity என்ற அமைப்பை உருவாக்கினார்

1952 ல் Nirmal Hrudai என்ற முதியவர்களுக்கான பாதுகாப்பு அமைப்பை அமைத்தார்.

1979 ல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்
பத்மஸ்ரீ, பாரத ரத்னா, புருசெல்ஸ் கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம், அமைதிக்கான நேரு பரிசு என பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.


1985 ல் அமெரிக்க அதிபர், ரொனால்ட் ரீகனிடமிருந்து Presidential Award Of Freedom என்ற விருதை பெறுகிறார்.
1991 ல், The Salvation Army என்ற தொண்டு நிறுவனம் மற்றும் கிறிஸ்தவ அமைப்பின் உலக தலைவர் ஈவா பரோஸ் அம்மையாரை சந்திக்கிறார்.
1996 ல் அமெரிக்காவின் கவுரவ குடியுரிமையை பெறுகிறார்.



மகாத்மா காந்தியடிகளின் சமாதியில்


June 18, 1997- வேல்ஸ் இளவரசி டயானா உடன்

இரு மாதங்களுக்கு பின்னர் அதே வருடம் இருவரும் மரணத்தில் இணைந்தார்கள் (ஆகஸ்ட் 31 ல் டயானாவும் செப்டம்பர் 5 ல் தெரசாவும் காலமானார்கள்)


டயானா குறித்து தெரசா


முழு (இந்திய) ராணுவ மரியாதை உடன் தெரசாவின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.



2003 ல் வாடிகனால் கவுரவிக்கப்பட்டார். அதனை கன்னியாஸ்த்ரீ ஒருவர் ஏற்று கொள்கிறார்.
செப்டம்பர் 5, 1997 ல் மாரடைப்பால் காலமான அன்னை தெரசா இன்றும் பலரது மனதில் வாழ்கிறார்.

September 01, 2009

'ஓண'ப்பண்டிகை வாழ்த்துக்கள்

மலையாள நண்பர்கள் ஆண்டு தோறும் உற்சாகத்துடன் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் என்பது பெரும்பாலோனோர் அறிந்ததே. ஓணம் என்றாலே மலர்களால் அமைக்கப்படும் 'அத்தப்பூ' கோலம் பிரபலமானது.

பொதுவாக இந்த வகை கோலத்தை பெண்கள் அமைப்பதை தான் பார்த்திருக்கிறேன். ஆனால் நேற்று பணி விஷயமாக கொச்சின் சென்றிருந்த போது ஆண்களும் உற்சாகமாக அத்தப்பூ கோலமிடுவதை பார்க்க நேரிட்டது. அப்போது க்ளிக்கிய சில புகைப்படங்கள் இங்கே. இதனை இட்டது பேருந்து ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓணம் கொண்டாடும் அனைத்து மலையாள நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.


Related Posts with Thumbnails