January 31, 2010

லியாண்டரும் ஆஸ்திரேலிய ஓபனும்

1996-அட்லாண்டா ஒலிம்பிக்

ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளில் இந்தியாவிற்காக பதக்கம் பெற்றுத் தந்தவர் லியாண்டர் பயஸ் மட்டுமே.1996-அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் பெற்று 44 வருடங்களுக்கு பின்னர் இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் தனி மனித விளையாட்டு ஒன்றில் பதக்கம் பெற்றுத் தந்தார்.

விம்பிள்டனிலும், அமெரிக்க ஓபனிலும் பயஸ் பெற்ற ஜூனியர் பட்டங்கள் 1991 ல் ஜூனியர் தரவரிசையில் அவர் முதலிடத்தைப் பெற வழிவகை செய்தன.

கிரிக்கெட் மேனியா இந்தியாவில் லியாண்டர் பயஸைப் போன்ற திறமை மிக்கவர்களை அரசு இன்னமும் கண்டும் காணாமல் இருப்பது தான் கவலைக்குரிய விஷயம்.

  2010 - Cara Black(Zibabwe) உடன் பயஸ்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் என அழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஓபன்,பிரெஞ்சு ஓபன்,விம்பிள்டன்,அமெரிக்க ஓபன் ஆகிய அனைத்திலும் சாம்பியன் (இரட்டையர் ஆட்டங்களில் மட்டுமே) ஆகியிருக்கிறார் லியாண்டர்.

1994 முதல் ஆஸ்திரேலிய ஓபனில் ஆடி வரும் அவர் இன்று பெற்றது இரண்டாவது ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டமும் 11ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமுமாகும் (இரட்டையர், கலப்பு இரட்டையர் உட்பட).இந்தியாவின் மற்றுமொரு ஆட்டக்காரரும், பயஸின் பழைய ஜோடியுமான மகேஷ் பூபதியும் இது வரை 11கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார்.
இத மறக்க முடியுமா!!

1991 முதல் டென்னிஸ் ஆடிவரும் பயஸ் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தால் இந்தியர் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பெருமைப்பட வைத்திருக்கிறார்.

செரீனா வில்லியம்ஸ் ஆஸி ஓபனை வெல்வது இது ஐந்தாவது முறை.அதோடு சகோதரி வீனஸுடன் சேர்ந்து இரட்டையர் பட்டத்தையும் வென்று இரட்டை மகிழ்ச்சி கண்டிருக்கிறார்.

இரண்டு வருடங்களுக்கு பின்னர் தனது முதல் கிராண்ட்ஸ்லாமில் ஆடிய பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் இறுதிப்போட்டி வரை எட்டியது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

74 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டனுக்காக கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்டி முர்ரே ஆண்கள் இறுதிப்போட்டியில் உலகின் முதல் தர ஆட்டக்காரர் ரோஜர் ஃபெடரரிடம் தோற்றுப் போனார்.

எனினும் தரவரிசையில் ஐந்தாம் இடம் வகிக்கும் ஆன்டி முர்ரே இந்த வருடம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.(ஃபெடரரும் கணித்திருக்கிறார்... பார்க்கலாம்)

சென்ற வருடம் ஸ்பெயினின் ரஃபேல் நடாலிடம் பட்டத்தை பறிகொடுத்து விட்டு துக்கம் தாளாமல் அழவும் செய்த ஃபெடரர் இந்த முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார். இது அவருக்கு 16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம். வேறு எவரும் செய்யாத சாதனை இது.

ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் எடுக்கப்பட்ட சில அருமையான புகைப்படங்கள் கீழே.

Courtesy: Getty images


Photo: Lucas Dawson
Photo: Quinn Rooney


Photo: Clive Brunskill

Bryan Brothers won the Doubles Title

Photo: Clive Brunskill
Photo: Clive Brunskill

Photo: William West

January 28, 2010

எங்கே செல்லும் இந்த பாதை!!!

முன்னெப்போதுமில்லாத அளவிற்கு இந்த வருடம் பருவநிலையில் மாற்றம் நிகழ்ந்து வருவதை உணர முடிகிறது.

வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடங்கி விடுகின்ற பனிப்பொழிவும், குளிரும் இந்த வருடமும் அப்படியே தொடங்கியது என்றாலும் நவம்பரும் டிசம்பரும் போன பின்னர் இப்போது தான் அதன் தீவிரத்தைக் காண்பிக்க தொடங்கியுள்ளது.

பல மத்திய ஐரோப்பா நாடுகளில் வெப்பநிலை -10 டிகிரிக்கும் கீழே தான் உள்ளது.

குளிரால் பாதிப்பு ஒருபுறமென்றால் மறுபுறம் இயற்கை தனது கோபத்தை வெளிப்படுத்தி !? உயிர் மற்றும் பொருள் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

ஹெய்ட்டியில் நில அதிர்வு என்றால் பிரேசிலிலும், பெருவிலும் மழை தனது கோரதாண்டவத்தைக் காண்பித்து வருகிறது.


மரங்களை வெட்டி காகிதங்களையும் உருவாக்கி அதே காகிதத்தில் மரங்களை பாதுகாப்போம் என எழுதும் ஒரே ஜென்மம் மனித ஜென்மமாக மட்டுமே இருக்க முடியும் என்ற குறுந்தகவல் ஒன்று வெகுவாக யோசிக்க வைத்தது.இது போன்ற இன்னும் எத்தனை எத்தனை இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளில் நாம் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம் என தெரியவில்லை.

பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள், வானங்களில் இருந்து வெளியேறும் புகை, குளிர்சாதனப் பெட்டியின் CFC என பட்டியல் நீளத்தான் செய்கிறது.

நீங்களும் நானும் உபயோகிக்கும் கணினி இயற்கைக்கு என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்துமென தெரியவில்லை...!!

இவையெல்லாம் நம்மை எங்கே கொண்டு சேர்க்கும் என்ற கேள்விக்கு விடை தெரிந்தவர் யாரோ?

எங்கே செல்லும் இந்த பாதை!

யாரோ யாரோ அறிவாரோ!!!

---------

குறுந்தகவலை பகிர்ந்து கொண்ட மெரினுக்கு நன்றி

January 27, 2010

சொல்லாததும் உண்மை-பிரகாஷ் ராஜ்


கலைஞன், நடிகன், தயாரிப்பாளர், இலக்கிய ஆர்வலர் என பன்முகம் கொண்ட பன்மொழிக் கலைஞன் பிரகாஷ் ராஜ் அவர்களது அனுபவங்களை "சொல்லாததும் உண்மை" புத்தகம் வாயிலாக வாசிக்கும் வாய்ப்பு இந்த வருடம் தான் வாய்த்தது.

ஏற்கெனவே ஆனந்த விகடனில் தொடராக வெளியான அவரது அனுபவங்களின் சில பகுதிகளை மட்டுமே அப்போது வாசிக்க முடிந்தது.

வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடிகளையும் அர்த்தமுள்ளவையாக மாற்ற அவர் மேற்கொண்டிருக்கும் அவரது அனுபவங்கள் என்னை வெகுவாக பாதித்தது.

இத்தனை பெயரும், புகழும் அடைந்த பின்னரு கூட மனிதர் இன்னமும் மனிதனாக மிக எளிமையாக இருப்பது ஆச்சரியப்படுத்துகிறது.

அவரது வாழ்வின் பல உண்மைகளை பகிர்ந்து கொள்ள நிச்சயம் தைரியம், அவரது பாணியிலேயே சொல்ல வேண்டுமென்றால் "திமிர்" வேண்டும் எனலாம்.

எல்லாரும் உண்மை தன் பக்கம் இருக்கணும்னு விரும்புவாங்க. நான் உண்மையின் பக்கம் இருக்கணும்னு யோசிச்சதால் நிறைய இழப்புகள்; ஆனா பெற்ற அனுபவங்கள் அதிகம் என்று இந்த புத்தகத்தின் இறுதியில் சொல்கிறார்.

அவரது புத்தகத்திலிருந்து சில மேற்கோள்கள்

சொல்லாததும் உண்மை தொடரில் சுதந்திரமான மனநிலையில் நிர்வாணமான நிறைய உண்மைகளைப் பேசியிருக்கேன். உடைகளைக் களைவதற்கு காமம் மட்டுமே காரணமா இருக்கணும்னு அவசியம் இல்லை

ஒரு குழந்தை நிர்வாணமானா அது அழகான அறியாமை. ஒரு பெண் காசுக்கு நிர்வாணமான அது விபசாரம். காதலுக்கான நிர்வாணம், அன்பு. இது எதுவுமே வேண்டாம்னு யோசிக்கிற அம்மணம் ஞானமாகிடுது.

பிறப்பால் கன்னடனாக இருந்தாலும் தெலுங்கில் அதிக சினிமா நடித்திருந்தாலும் அவரை வாழ வைத்த தமிழ் திரையுலகைக் குறித்து பேசுகையில் மனிதர் மிகவும் பெருமைப் படுகிறார். தமிழ் திரையுலகை விட்டுக் கொடுக்காமல் பேசினாலும் மசாலாப் படங்களையும், குத்துப் பாட்டுகளையும் விமர்சனம் செய்யாமலில்லை.

கேன்ஸ் திரைப்பட விழாக்களில் இந்திய சினிமா என்றாலே பாலிவுட் அல்லது இந்தி சினிமாவைத் தான் அறிந்திருக்கிறார்கள். இந்தி சினிமான்னு சொல்லி அடையாளப்படுத்திக்க ஒரு மேடை இருக்கு ஆனா தமிழ் சினிமா கலைஞர்களுக்கு ஒரு மேடை இல்லைன்னாலும் பரவாயில்லை; அட்லீஸ்ட்... ஒரு குடையாவது வேணுமா இல்லையா? ன்னு வேற ஆதங்கப்படுறார் மனுஷன்.

வாழ்க்கையை பற்றி சொல்லும் போது நாம நாளைக்கு வரலாறாகிறோமோ இல்லையோ, இன்னிக்கு வாழ்ந்திடலாமேங்கிறது என் பாலிஸி; யாராக இருந்தாலும் வாழ்க்கையைக் காதலிக்கணும். அப்போ தான் துன்பம் ஓடி ஒளியிற விஷயமா இல்லாம, கடந்து வர வேண்டிய அனுபவமா இருக்கும் என்கிறார்.

வறுமையையும் வறுமையிலும் ஏய்த்துப் பிழைக்கும் அரசியலையும் அரசியல்வாதிகளையும் குறித்து பேசும் போது ஏசுநாதர் 2 மீன்கள் 5 அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் நபர்களுக்கு உணவு படைத்தார்னு பைபிள் சொல்லுது; இன்னிக்கு 5 லட்சம் மக்களோட பங்கா இருக்கவேண்டிய அப்பங்களையும் மீன்களையும் இரண்டே அரசியல்வாதிகள் பகிர்ந்துக்கிறாங்க என கவலைப்படுகிறார்.

அரசியலுக்காய் தற்கொலை செய்பவர்களையும், கட்-அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்பவர்களையும் அறியாமையால் செய்கிறார்கள் என்பவர்களிடம் அது அறியாமை அல்ல அது முட்டாள்த்தனம் என வாதிடுகிறார்.

கல்விமுறையையும் அதனால் மாணவர்களிடம் பெருகி வரும் மன அழுத்தத்தையும், ஜெயிப்பதற்கு என்ன செய்யலாம் என புத்தகம் வெளியிடுகிறவர்களையும் வெளுத்து கட்டுகிறார் பிரகாஷ்.

இப்பிடியே போனா 'ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட்'க்கு ஒரு எம்.பி.ஏ டிகிரி வந்தாலும் வரும். அதுல முதல் மார்க் வாங்கி ஜெயிக்கணும்னு ரொம்ப மன அழுத்தத்தோடு படிக்க வேண்டிய நிலைமை வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என நக்கலாகவும் பேசியிருக்கிறார்.

அவரது அம்மா கிறிஸ்தவத்தை பின்பற்றுகிறார், அவரது மனைவி இந்துத்துவத்தை பின்பற்றுகிறார். எனினும் எந்த குழப்பமுமில்லாமல் பிரகாஷ் மனிதனாக இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பது தான் அவரை இன்னும் அழகாக வைத்திருக்கிறது; அவருக்கு அது தான் அழகும் கூட.

கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் இவருடன் கல்லூரியில் ஒன்றாக பயின்றவர் என்பது கூடுதல் தகவல்.

மொழி மாதிரியான மேலும் பல திரைப்படங்களை உருவாக்க வாழ்த்துக்கள் பன்மொழிக்கலைஞனே!

'சொல்லாததும் உண்மை' இது பிரகாஷ் ராஜ் சொன்னது 'சொல்லுவதெல்லாம் உண்மையாய் இருக்க வேண்டுமென்பதுமில்லை பிறரை பாதிக்காத வரை' என்பது என் சிந்தனை!!

------------

புத்தகம் எழுத்தாக்கம்: த.செ.ஞானவேல்
விகடன் பிரசுரம்
விலை: ரூ. 100

January 25, 2010

ஆர்குட் ஆறாவது ஆண்டில்

ஜனவரி 22ஆம் தேதியுடன் ஆர்குட் தனது ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது.

நீரின்றி அமையாது உலகம் என்ற வாக்கினைப்போல் ஆர்குட் இன்றி இன்றைய இளைஞர்களின் உலகம் அமையாது என்று கூட கூறலாம்.

அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசில் நாட்டினர் தான் ஆர்குட்டை அதிகம் பயன்படுத்துவதாக விக்கி தெரிவிக்கிறது.

தற்செயலாக இன்று ஆர்குட்டை திறக்கையில் வண்ணமயமான பலூன்களுடன் ஆறு என்ற எண் மின்னியது. இந்தியாவின் குடியரசு தினத்திற்கான இருபத்தாறில் ஆறு மட்டுமாக இருக்குமோ என எண்ணினேன் ஆரம்பத்தில்.

அதன் பிறகு தலையின் மேல் பல்ப் எறியவே விக்கிபீடியாவில் ஆர்குட்டை சொடுக்கினேன். பின்னர் தான் ஆர்குட்டின் சரித்திரம் தெரியவந்தது.

ஆர்குட் பழைய பள்ளி நண்பர்களையும், (ஏன் எதிரிகளையும் கூட) பல புதிய நண்பர்களையும் கண்டறிய வகை செய்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

பெரும்பாலான இந்திய இளைஞர்கள் ஆர்க்குட்டிற்கு அடிமைப் பட்டு கிடக்கிறார்கள் என கூட கூறலாம். அதனைக் குறித்து சென்ற வருடம் எழுதிய கட்டுரை ஒன்றை இங்கே படிக்கலாம்.

ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ஆர்குட்டிற்கு வாழ்த்துக்கள்.

ஆர்குட் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்

1. கூகுளில் பணிபுரியும் 'ஆர்குட்' என்பவர் ஆர்குட்டை உருவாக்கியதால்(2004ல்) அவரின் பெயரே இந்த தளத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

2. ஆர்குட் இதுவரை 100 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஆனால் மற்றொரு சமூக தளமான ஃபேஸ்புக்கோ 350 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

3. மிக அதிக உறுப்பினர்களை பிரேசில் கொண்டுள்ளது அதற்கு அடுத்த படியாக இந்தியா உள்ளது

4. ஆர்குட்டை ஆரம்பித்தவர் துருக்கியைச் சார்ந்தவர்.

5. ஆர்குட் ஆரம்பிக்கப்பட்டது அமெரிக்காவில் என்றாலும் அமெரிக்காவில் ஆர்குட்டை பயன்படுத்துபவர்கள் வெகு குறைவே

ஆர்குட்டிற்கு பூங்கொத்தும் நன்றியும்.

January 24, 2010

திருட்டு வி.சி.டியும் செந்திலும் கவண்டரும்


செந்தில்: அண்ணே... அண்ணே என்ன ரொம்ப நாளா உங்கள ஊர் பக்கமே பாக்க முடியல


கவுண்டமணி: அடே கம்மனாட்டி தலையா என்ன அண்ணே நொண்ணேன்னுகிட்டு

இருக்கிறப்ப அண்ணேங்கிறது, தூரமா போய் நாயே பேயேங்கிறது, உன்னையெல்லாம் உதச்சா மட்டும் போதாது.

செந்தில்: அது இல்லண்ணே புது சினிமா ஒண்ணு வந்திருக்கில்ல வி.சி.டி ல அது என்ன சினிமாண்னே

கவுண்டர்: அதான் வாரத்துக்கு பத்து பன்னெண்டு வருதே, உனக்கு ஏன் நாயே இப்போ அந்த கத எல்லாம்.

செந்தில்: அத விடுங்கண்ணே, ரிலீஸ் ஆகாமலே வி.சி.டி ல யும் கம்ப்யூட்டர் பெட்டிலயும் வந்திட்டதா ஊர்ல பேசிக்கிறாங்களே அது என்ன சினிமாண்ணே.

கவுண்டர்: அடேய் பனங்காத் தலையா! ஊரு ஒலகத்தில சொல்றத கேட்டுபுட்டு இப்போ என் உயிர வாங்க வந்திருக்கியா? ஓடிப்போயிரு ஆமா

செந்தில்: அட சொல்லுங்கண்ணே!!

கவுண்டர்: அது என்னமோ டக்குபாய்னு சினிமாவாம்.

செந்தில்: கம்ப்யூட்டர் பொட்டில படமெல்லாம் வருமாண்ணே, காட்டுங்கண்ணே

கவுண்டர்: நீ நம்மூரு கொட்டாய்ல வந்தா பாத்துக்க போ! கரிக்கட்ட தலைக்கு கம்ப்யூட்டர் கேக்குதா

செந்தில்: சரிண்ணே, ஆனா எப்பிடிண்ணே சினிமா ரிலீஸ் ஆகுறதுக்குள்ள வி.சி.டி ல வந்திச்சு

கவுண்டர்: ஏன் நாயே நீயெல்லாம் ரிலீஸ் ஆக்குறதுக்கு முன்னாடியே ஜெயில்ல இருந்து குதிச்சு வெளிய வரல... அப்பிடித் தான்னு வச்சிக்கோ

செந்தில்: அது என் திறமண்ணே... உங்களுக்கு பொறாமண்ணே. ஆனா எப்பிடிண்ணே கவர்னுமெண்ட் திருட்டு வி.சி.டி வரத பாத்திட்டு சும்மா இருக்கு

கவுண்டர்: ஏண்டா நீ வெளிய வந்த பொறவு கூட தான் சும்மா இருந்தாங்க. அப்போ எல்லாம் இந்த கேள்வி கேக்காம இப்போ மட்டும் என்ன நாயே

செந்தில்: இல்லண்ணே சினிமாவ நம்பி பொழக்கிறவங்க பாவமில்ல

கவுண்டர்: பாவமோ புண்ணியமோ ஆனா இதெல்லாம் அரசாங்கத்த தான் சொல்லணும். ஒண்ண மாதிரி ஜெயில்ல இருந்து தப்பிக்கிற கம்னாட்டிங்களயும், திருட்டு வி.சி.டி எடுக்கிறவனயும் பாத்துப்புட்டு சும்மா இருக்காங்கள்ல.

செந்தில்: திருட்டு வி.சி.டி எடுக்கிறவங்கள புடிக்கவே முடியாதோண்ணே!

கவுண்டர்: ஏண்டா ஒரு 'கீ'ரப்பனையோ தீவிரவாதியையோ... ஏன் உன்ன கூட உசிரோட புடிக்க முடியல, இவுங்க திருட்டு வி.சி.டி எடுக்கிறவன புடிக்கப் போறாங்களா! போடா போ உன் வேலய பாரு

செந்தில்: அண்ணே ஒரு... ஒரு ரூபா இருந்தா குடுங்கண்ணே

கவுண்டர்: எதுக்கு நாயே இப்போ ஒரு ரூபா

செந்தில்: இல்லண்ணே உங்க கிட்ட பேசி டயர்ட் ஆகிப்ப்போச்சு... பழம் வாங்கத்தான்!

கவுண்டர்: அடேய் எந்திச்சு வந்தேன் கொன்னேப்புடுவேன் மவனே! இந்த ஒரு ரூபா கேள்விக்கு நானே இன்னும் பதில் தெரியாம முழிச்சிட்டு இருக்கேன் இதுல வி.சி.டி யாம். கம்ப்யூட்டர் பெட்டியாம். ஓடிப்போயிரு ஆமா

January 22, 2010

கிரிக்கெட்-மீண்டும் ஒரு இந்தியா-பாக் மோதல்

ஒருபுறம் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய அரசாங்கம் தடை விதித்திருக்கிறது. பாகிஸ்தான் அணி இந்தியாவிற்குள் நுழைய அனுமதியும் மறுக்கிறது.

மறுபுறம் பாகிஸ்தான் ஆட்டக்காரர்களை ஐ.பி.எல் அணிகள் எதுவும் வாங்க மறுக்கின்றன. பத்திரிக்கையாளர்கள் காரணம் கேட்டால் ஏற்றுக் கொள்ளும்படியான பதிலை அளிக்காமல் நழுவுகிறார்கள்.

இவை அனைத்திற்கும் அரசியல் ஒன்றே காரணம் என அனைவருக்கும் தெளிவாக தெரியும். இவர்கள் பாக் செல்ல மறுத்தாலும், அரசாங்கம் ஆட அனுமதி மறுத்தாலும் காலத்தின் கட்டாயத்தினால் இந்தியா-பாக் கிரிக்கெட் அணிகளிடையே ஆட்டங்கள் நடந்தே ஆக வேண்டுமென்றால் யார் என்ன செய்ய முடியும்!!

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன.இதில் இந்தியாவும்-பாகிஸ்தானும் காலிறுதிப் போட்டி ஒன்றில் 23.01.10அன்று(இன்னும் சற்று நேரத்தில்) மோதவிருக்கின்றன.


இந்த போட்டி 23 ஆம் தேதி நியூசிலாந்து நேரப்படி காலை 10:30 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 3 மணிக்கு) தொடங்கவிருக்கிறது. ஆனால் அதையும் மழை பாதிக்கும் நிலையே உள்ளது

போட்டி நடைபெறவிருக்கும் Newzealand, Lincoln மைதானத்தில் நேற்றும், இன்றும் பெய்து கொண்டிருக்கும் மழை ஒருவேளை ஆட்டத்தைப் பாதிக்கக்கூடும். ஆட்டம் மழையால் பாதிக்கப்படுமானால் அதிக ஓட்ட விகிதத்தின் படி பாகிஸ்தான் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

2007-2008 உலகக்கோப்பையை விராட் கோலி தலைமையில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

நன்றி: cricinfo

IPL= I(ncome)PL - பணம் பதினொன்னும் செய்யும்


இரண்டாவது ஐ.பி.எல் போட்டிகளை சொந்த நாட்டில் நடத்தவியாலாமல் வேறொரு நாட்டில் நடத்தியதற்காக இண்டியன் பிரிமீயர் லீக்கை இன்டர்நேஷனல் பிரிமீயர் லீக் என சாடியிருந்தேன் சென்ற வருடம்.

சென்ற ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் துவங்குவதற்கு முன்னரே சலசலப்பு ஏற்பட்டது போன்று இந்த வருடமும் சலசலப்பிற்கு குறைவில்லை.

மூன்றாவது ஐ.பி.எல் 20-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆட்டக்காரர்களை தெரிந்தெடுக்க இரு தினங்கள் முன்னர் நடந்த ஏலத்தில் ஒரு பாகிஸ்தான் ஆட்டக்காரர் கூட எந்த அணியினாலும் வாங்கப்படவில்லை என்பது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ரொம்ம்ம்ப நல்லா இருக்குங்க

நானும் ஆச்சரியப்பட்டு தான் போனேன்.நட்பிற்கு வழிகோலும் விளையாட்டுக்கள் இன்று அரசியல் சாயமேற்றப்பட்டு பணத்தை மட்டுமே மையமாக வைத்து ஆடப்பட்டு வருவது கேலிக்குரியதும்,கவலைக்குரியதுமான விஷயம்.

பல கட்டங்களாக நடத்தப்பட்ட ஏலத்தில் பாகிஸ்தான் ஆட்டக்காரர்களின் பெயர் அடங்கிய அட்டைகள் காண்பிக்கப்பட்ட போதெல்லாம் பணம் கொழுத்த அனைத்து அணிகளின் புரோ(அர)க்கர்கள் எல்லாம் மௌனம் மட்டுமே சாதித்தது நிச்சயமாக நாகரீகமான செயல் இல்லை.

பாக் ஆட்டக்காரர்களை இதை விட அதிகம் யாரும் கேவலப்படுத்தி விட முடியாது. இப்படி ஒரு நிலை ஏற்கெனவே அனைத்து அணிகளின் மனதில் இருந்திருக்குமானல் ஏ(ஓ)லமிடும் பி.சி.சி.ஐ இடம் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்திருக்கலாம்.பாக் வீரர்கள் கொச்சைப்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள்.

இந்த நிகழ்விற்கு பாக் அணித்தலைவர் அஃப்ரிடியும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த மானங்கெட்ட பொழப்புக்கு 'இன்டியன் பிரிமீயர் லீக்'குன்னு பேர் வச்சதுக்கு பதில் 'இன்கம் பிரிமீயர் லீக்'குன்னோ இல்ல 'இன்சல்ட் பிரிமீயர் லீக்'குன்னோ வச்சிருக்கலாம்.

பாகிஸ்தானியரை எடுத்தா ஒருவேளை அவங்க விசா விஷயத்தில ஏதும் பிரச்சினை ஆகி இந்தியாவுக்கு வர முடியாம ஆயிருமாமாம் அதனால அந்த டீம் வச்சிருக்கவங்களுக்கு நஷ்டம் வந்திருமாம். இது நால தான் 'பாக்' காரங்கள எடுக்கலன்னு பேசிக்கிறாங்க

பணம் பத்து மட்டும் இல்ல பதினொன்னும் செய்யும் அப்படின்றது சரிதானே அப்போ.

January 21, 2010

நிரந்தரம் என்று எதுவுமில்லை

எதை நீ கொண்டுவந்தாய்? அதை நீ இழப்பதற்கு என்கிறது கீதை; மாயை எல்லாம் மாயையாய் இருக்கிறது... நிர்வாணமாய் வந்தேன் நிர்வாணமாய் போவேன் என்கிறது விவிலியம்.

என்னத்திற்கு இந்த வாழ்க்கை! என்னத்திற்கு இந்த ஜீவன்! என்ற உண்மை இன்னமும் புரிந்தபாடில்லை.

வாழ்க்கையை இது போன்ற குழப்பங்களுக்குள்ளேயே இன்னமும் தேடிக்கொண்டிருக்க ஹெய்ட்டி என்ற மிக மிக ஏழ்மையான நாடு ஒன்றில் நிகழ்ந்த நில அதிர்வும் அதனால் ஏற்பட்ட இழப்புகளும் மேலும் குழப்பங்களையும், பல கேள்விகளையும் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறது.

ஹெய்ட்டியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை தொலைக்காட்சியில் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் குவியலாய் புதைக்கப்படுகையில் கண்ணீர் மல்குகிறது. வீட்டை, குடும்பத்தை இழந்தவர்களும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரும் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்பதை நினைத்தால் கவலை தான் மிஞ்சுகிறது.

ஹெய்ட்டியின் போர்ட்-அ-பிரான்ஸ் பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியை ஒருவர் 'இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் அவர் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்' என வகுப்பறையின் கரும்பலகையில் எழுதி சில மணித்துளிகள் ஆவதற்குள் பள்ளிக்கூடத்தின் வகுப்பறைகள் ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து விழுந்திருக்கின்றன. குழந்தைகளும் ஆசிரியையுமாக உயிரைக் காப்பாற்ற ஓடுயிருக்கிறார்கள். அவர்களில் சிலரைத் தவிர பெரும்பாலானோர் இன்று இல்லை

அந்த ஆசிரியை கரும்பலகையில் எழுதியிருந்த வார்த்தைக்கும் அந்த நிகழ்விற்கும் எத்தனை முரண்பாடு!!! அந்த கரும்பலகை இருக்கின்ற வகுப்பறையை தொலைக்காட்சியில் காண்கையில் இன்னும் பல கேள்விகள் என்னுள்.

மனிதன் ஒருபுறம் மனிதனையும் இயற்கையையும் அழித்துக்கொண்டிருக்க மறுபுறம் இயற்கையே இயற்கையையும், மனிதனையும் பேரழிவுகளால் தொடர்ந்து அழித்துக் கொண்டு வருவது ஏனோ?

உங்களால் சகித்துக் கொள்ளக்கூடியதான வேதனைகளும், சோதனைகளுமே உங்களுக்கு நேரிடும் என்கிறது விவிலியம். பச்சிளம் குழந்தைகள் கரங்களை இழந்து, கால்களை இழந்து உணவுக்கே வழியில்லாமல் இருக்கும் நிலையை அவர்களால் சகித்துக் கொள்ள முடியுமா என தெரியவில்லை.


இறைவன், இயற்கை இரண்டும் இன்னமும் எனக்கு புரிந்த பாடில்லை. என்னமோ போங்க :( ஆனா உறவுகளானாலும், உறைவிடமானாலும் நிரந்தரமில்லையென்பது மட்டும் நல்லா புரியுது.

January 20, 2010

ஆஸ்கர் நாயகன் ரஹ்மான் மீண்டும் ஆஸ்கரில்


இசைப்புயல் ரஹ்மான் அவர்களுக்கு 2009ல் 'ஸ்லம்டாக் மில்லினியர்' திரைப்படத்தின் இசைக்காகவும் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஜெய்ஹோ' பாடலுக்காகவும் இரண்டு ஆஸ்கர் கிடைத்தது உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்ததே.

அதன் பின்னர் ரஹ்மானிற்கு நேரடியாக வாய்ப்பு கிடைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம் Couples Retreat என்ற குடும்ப நகைச்சுவைத் திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள Na...Na என்ற பாடல் இந்த வருட 82ஆவது ஆஸ்கருக்காக சிறந்த பாடலுக்கான பிரிவில் பரிந்துரைக்காக போட்டியிடுகிறது. (பரிந்துரைக்காக மட்டுமே போட்டியிடுகிறது; இன்னமும் பரிந்துரைக்கப்படவில்லை)

பரிந்துரைகள் பிப்ரவரி 2 ஆம் தேதி முடிவு செய்யப்பட உள்ளன. அதற்காக 63 பாடல்கள் போட்டியிடுகின்றன.

இந்த பாடலை (Blaaze மற்றும் Vivian Chaix உடன் இணைந்து) இசைப்புயலே எழுதியிருப்பதும் ரஹ்மானின் ஆறு வயது மகன் 'ஏ.ஆர்.அமீன்'(பல தளங்களில் அலீம் என குறிப்பிட்டு குழப்புகிறார்கள்;அலீம் அல்ல அமீன் என தான் கருதுகிறேன்)பாடியிருப்பதும் மேலும் சிறப்பு. இதே திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'குறு குறு கண்களிலே' என்ற தமிழ் பாடலையும் ரஹ்மானே எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Na...Na பாடலை Blaaze, Vivian Chaix, A. R. Ameen, Clinton Cerejo & Dominic Cerejo ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

82 ஆவது ஆஸ்கருக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்படும் (பிப்ரவரி 2)முன்னரே கிராமி விருதுகள்  (ஜனவரி 31) அறிவிக்கப்பட்டு விடும். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லினியருக்காக இரண்டு பிரிவுகளில் கிராமி விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார்.

ரஹ்மான் காட்டில மழை தான் போங்க.

Na Na


குறு குறு கண்களிலே
எனை அவள் வென்றாளே

இதோ இதோ
அவள் எனை பதம் பார்க்கிறாள்

சிறு சிறு வெண்ணிலவே
என் துணை ஆவாளோ

சிறு சிறு வெண்ணிலவே
என் பசி தீர்ப்பாளோ

இதோ இதோ
அவள் எனை பதம் பார்க்கிறாள்

குறு குறு கண்களிலே
 
நன்றி: விக்கி ஆஸ்கர்ஸ் கலாட்டா

January 18, 2010

சேவாக் ஆல்(ள்) அவுட் சச்சின் நாட் அவுட்

ரொம்ம்ம்ம்ப நாளைக்கு அப்புறம் சச்சின் நிலைத்து நின்று ஆடுவதும் மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழப்பதும் நிகழ்ந்திருக்கிறது.

இந்திய அணி சமீப காலங்களில் அனைத்து வீரர்களின் பங்களிப்பினால் தான் பெரும்பான்மையான ஆட்டங்களில் வெற்றிகளை ஈட்டி தர வரிசையில் கூட முதலிடத்தைப் பெற்றிருந்தது.

பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் சதமடித்திருப்பதன் மூலம் சச்சின் தனது டெஸ்ட் சதங்களில் 44 ஆவதை நிறைவு செய்திருக்கிறார்.

அவரது சதமும் அணித்தலைவர் சேவாக்கின் அரை சதமும் இந்தியாவின் முதல் இன்னிங்க்ஸ் எண்ணிக்கையை இருநூறை கடக்கச் செய்திருக்கிறது.


இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் பங்களாதேஷ் 184 ஓட்டங்கள் பின் தங்கி இருக்கிறது.மூன்றாவது நாள் ஆட்டத்தில் பங்களாதேஷ் இந்திய அணியின் ஓட்டங்களை விட 100 ஓட்டங்கள் அதிகம் குவித்தால் கூட ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்க வாய்ப்புள்ளது.

பங்களாதேஷ் அணி பலவீனமான பந்துவீச்சாளர்களைக் கொண்டிருக்கிறது என்ற சேவாக்கின் தேவையற்ற பேச்சுக்கு அவர்கள் தங்கள் பந்துவீச்சு மூலம் பதிலடி கொடுத்து விட்டதாகவே கருதுகிறேன்.

சச்சினிடம் அதையே பத்திரிக்கையாளர்கள் மீண்டும் கேட்ட போது அதை சேவாக்கிடமே கேளுங்கள், கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்; ஆட்டம் முடியும் வரை எந்த அணி வெற்றி பெறும் என்பதை எவராலும் கணிக்கவியலாது என வெகு கண்ணியமாக பதிலளித்திருக்கிறார் நம்ம கிரேட் சச்சின்.

(தமிழன்னு சொல்லிட்டு தலையங்கமே ஆங்கிலத்தில் இருப்பது அநியாயமா தெரியலயான்னு நீங்க கேக்கிறது காதில விழாம இல்ல... மன்னிச்சிருங்க)

தமிழ் பாப் பாடல்கள் Vs சினிமா பாடல்கள்

தமிழ் பாப் பாடல்கள் தமிழர்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டதாக இல்லை என்று தான் என்னைக்கேட்டால் சொல்வேன்.

ஆனால் ALISHA வின் MADE IN INDIA, Michael Jackson ன் Dangerous, Shakira வின் Hips Don't Lie போன்ற வேற்று மொழி பாப் பாடல்கள் தமிழர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டும் அறியப்பட்டும் வந்திருக்கிறது என்பேன்.

இவற்றிற்கு காரணம் தமிழ் சினிமாப் பாடல்களின் மீதுள்ள ரசிகர்களின் அதீத கவர்ச்சியும் தமிழ் பாப் இசை தொகுப்புகள்(albums) சரியாக விளம்பரப்படுத்தப்படாமையுமே காரணமாக இருக்கக்கூடும்.

தமிழில் விதிவிலக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் பெரிய அளவில் இன்றும் பேசப்பட்டும், ரசிக்கப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

அதற்கு காரணம் அதனை தயாரித்த பரத்பாலா மற்றும் கனிகா செய்த விளம்பரங்களே என்பது மறுக்கமுடியாத உண்மை. அதோடு தேசம் சம்பத்தப்பட்ட விஷயம் என்பதாலும் ஐம்பதாவது சுதந்திர தின விழாக்காலத்தை ஒட்டி அதன் வெளியீடு இருந்ததாலும் மட்டுமே இத்தனை புகழ் பெற்றது.

வந்தே மாதரம் இசைத் தொகுப்பின் வெற்றிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரும் அவர்களின் இசையும் பெரும் காரணம் என்றாலும் அதற்கு பின்னர் அவர் வெளியிட்ட பாம்பே ட்ரீம்ஸ், வந்தே மாதரம் அளவிற்கு புகழ் பெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

இணையத்தில் தமிழ் பாப் பாடல்களை பகிர்ந்து கொண்டால் தமிழர்கள் பலர் அறியக்கூடும் என்பதால் தமிழ் பாப் பாடல்களை தொகுக்க என்னாலான சிறு முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறேன்.

http://thamizhpopsongs.blogspot.com/ என்ற வலைப்பூவில் சில தமிழ் பாப் பாடல்களை  கேட்கலாம். உங்கள் மேலான ஆதரவிற்கு நன்றி.

January 14, 2010

ஹெய்ட்டி-எதிர்பாராதது எந்த நேரமும் நிகழலாம்


கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டி (HAITI) தீவில் இரு தினங்கள் முன்னர் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவான பூகம்பம் இதுவரை பல்லாயிரக்கணக்கோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிற்க காரணமாகியிருக்கிறது.

பல அறிவியல் முன்னேற்றங்களைக் கண்டிருக்கும் விஞஞானத்தால் கூட பெரும்பாலான நேரங்களில் அடுத்த வினாடி என்ன நிகழும் என்பதை ஊகிக்கவியலாத நிலை தான் இன்று உள்ளது.

இயற்கையை எவராலும் கட்டுப்படுத்திவிட முடியாது என்பதும். மனித சக்திகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும், விஞ்ஞானத்திற்கும் மேல் நான் இருக்கிறேன் என இயற்கை சொல்லாமல் சொல்வதையும் பூமியதிர்ச்சியின் உணர்வால் மீண்டும் உணரமுடிந்திருக்கிறது.

உலகம் இவ்வாறிருக்க... மக்களோ இது எனது அது உனது என்கிற வீராப்புகளும்; அது உன் எல்லை இது என் எல்லை என்கிற பிரிவினைகளும்; மொழி, மத, இன வேறுபாடுகளும் இன்னமும் கொண்டிருப்பது வருத்தம் தான் தருகிறது.

எனினும் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹெய்ட்டி தீவிற்கு வந்து குவியும் நிவாரண உதவிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கும் நல்லெண்ண பணிகளும்... மனிதம் இன்னமும் உயிரோடு தான் இருக்கிறது என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

ஹெய்ட்டி தீவில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் தொண்டு நிறுவனங்களின் பட்டியலை இந்த (http://www.cnn.com/SPECIALS/2007/impact/) சுட்டியில் தெரிந்து கொள்ளலாம்.

இன்னமும் சிறு சிறு அதிர்வுகள்(aftermath) ஹெய்ட்டியில் இருந்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விண்ணைத் தாண்டி வருவாயா-ஓசன்னா/ஹோசன்னா

விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்பட பாடல்கள் இசைப்புயல் ரஹ்மானின் பாதையில் மற்றுமொரு மைல்கல் எனலாம்.

கவிஞர் தாமரையின் வரிகள் ஒவ்வொன்றும் அப்படியே கட்டிப்போடுகின்றன. குறிப்பாக ஹோசன்னா பாடலின் ஆரம்ப வரிகளான ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே! என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே என்ற வரி என்னை வெகுவாகவே கவர்ந்தது.

(ஈழத்திற்காக கவிஞர் தாமரை பேசிய பேச்சைக் கேட்டு மிரண்டு போயிருந்தேன். அந்த புயலிடமிருந்து மீண்டும் இப்படி ஒரு தென்றல் போன்ற வரிகளா என்பது ஆச்சரியப்பட வைக்கிறது)

ஹோசன்னா பாடலை பாடியிருக்கும் விஜய் பிரகாஷ் என்பவரின் குரலை இதற்கு முன்னர் இசைப்புயலின் yuvraaj (2008) என்ற இந்தித் திரைப்படத்தின் Manmohini Morey பாடல் மூலம் கேட்டிருக்கிறேன்.

அந்த பாடலும் ஏறக்குறைய இதே சுருதியில் அமைக்கப்பட்ட பாடல் தான். அந்த பாடலில் கர்நாடக சங்கீத ஆலாப்களால் மனதை ரீங்காரமிடுவார் விஜய் பிரகாஷ். அதே போன்று ஹோசன்னாவிலும் கலக்கியிருக்கிறார்.

Manmohini Morey


உடன் பாடியிருக்கும் Suzanne வையும், Blaaze வையும் குறித்து சொல்லவே தேவையில்லை. Blaaze வை குறித்து தனி பதிவே போடலாம்.

yuvraaj திரைப்படத்தின் பாடல்கள் அத்தனையும் அத்தனை அருமையாக இருக்கும். அதில் பீத்தோவனின் இசையையும் சேர்த்திருப்பார் நம் ஆஸ்கர் நாயகன். கேட்காதவர்கள் நிச்சயம் கேளுங்கள்

'ஓமனப் பெண்ணே' பாடலில் பென்னி தயாளும், கல்யாணி மேனனும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். மலையாள வாசம் ரொம்பவே வீசுகிறது. நாதஸ்வரத்தின் சேர்க்கை 'ஓமனப் பெண்ணே' வில் வித்தியாசமாக இருக்கிறது.

'மன்னிப்பாயா' பாடலில் ஷ்ரேயா கோஷலும், ரஹ்மானும் வாழ்ந்திருக்கிறார்கள். "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" அன்பிலார் எல்லாம் தமக்குரியர்" என திருக்குறள்களையும் கவிஞர் தாமரை சேர்த்து விட்டிருப்பது சற்றும் எதிர்பாராதது, பாராட்டுக்குரியது.

'ஆரோமலே' பாடலின் ஆரம்பத்தில் Guitar ன் ஆக்கிரமிப்பு நம்மை ஆக்கிரமிக்கிறது. பாடலின் பிற்பகுதியில் வரும் சுலோகங்கள் சரிவர பிடிபடவில்லையென்றாலும் வித்தியாசமாகவே இருக்கிறது.

'அன்பில் அவன்' துள்ளலிசை பாடல் வகை. ரஹ்மானின் ஆஸ்தான பாடகி சின்மயி தேவனுடன் இணைந்து பாடியிருக்கிறார். எப்போதும் போல் சின்மயியின் குரல் சில்லென ஒலிக்கிறது. இடையிடையே வரும் மிருதங்கம், organ மற்றும் பிற இசைக்கருவிகளின் சங்கமம்(fusion) வியக்கவைக்கிறது.

கண்ணுக்குள் கண்ணை பாடலில் அ... ஆ வின் மரங்கொத்தியே சாயலும் ரங் தே பசந்தியின் சாயலும் சற்றே தெரிகிறது.

Title Song விண்ணைத் தாண்டி வருவாயா கார்த்திக்கின் மெல்லிய குரலில் வசீகரிக்கிறது.

ஹோசன்னா பாடலில் கவிஞர் தாமரை சொல்ல வந்தது விவிலியத்தில் கூறப்படும் ஓசன்னாவா இல்லை வேறு ஹோசன்னாவா இல்லை ஓ... சனா வா என்பது தான் நான் இப்போது எனக்குள்ளேயே கேட்டுக்கொள்ளும் கேள்வி.

January 13, 2010

இறுதிப் போட்டிகளில் ஏமா(ற்)றும் இந்தியா

இறுதிப் போட்டிகள் என்றாலே இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு இதய வலி வந்து விடுமோ என்னமோ தெரியவில்லை

அதுவும் குறிப்பாக முத்தரப்பு ஒருநாள் போட்டிகள் என்றால் சொல்லவே வேண்டாம். 1998 முதல் 2009 வரை 18 முத்தரப்பு இறுதிப் போட்டிகளை இழந்திருப்பதாக புள்ளிவிவரம் ஒன்றில் படித்த ஞாபகம்

இந்தியா சொதப்பும் என்று இன்றைய ஐடியா கோப்பை இறுதிப் போட்டி துவங்குவதற்கு முன்னரே தெரிந்த விஷயம் தான்.

என்ன தான் அனுபவம் இருந்தாலும் பல ஆயிரம் ஓட்டங்களை எடுத்திருந்தாலும் இறுதிப் போட்டி என்று வரும் போது இந்தியர்கள் சொதப்புவது அதீத நம்பிக்கையா இல்லை எதிர் அணியைக் குறித்த அலட்சியமா இல்லை மெத்தனமா என்பது தெரியவில்லை.

இன்றைய ஆட்டத்தை எடுத்துக் கொண்டால் தேவையின்றி ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை அடித்து ஆட முற்பட்டதே சேவாக், கோலி, யுவ்ராஜ், தோனி என அனைவரும் ஆட்டமிழக்கக் காரணம்; மெத்தனம் என்று கூட கொள்ளலாம்.

சுரேஷ் ரைனா பந்துகளை சரியாக கணித்து ஆடியது அவருக்கு சதத்தைப் பெற்றுத் தந்தது. இந்திய அணி குறைந்தது 35 முதல் 40 ஓட்டங்கள் வரை குறைவாக எடுத்ததாகவே சொல்வேன். 280 ஓட்டங்கள் பெற்றிருக்க வேண்டிய மைதானம் அது.

எப்படியும் இனி இந்தியாவிற்கு வெற்றிவாய்ப்பு பந்துவீச்சாளர்களின் கையில் தான் இருக்கிறது. கடந்த ஆட்டங்களை கணக்கில் கொண்டால் இலங்கை அணி சற்றே நம்பிக்கை இழந்ததாகவே இருக்கிறது. எனினும் கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம்.

January 12, 2010

ரீவைண்டு=கொசுவத்தி

பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் முன்பு பள்ளி மாணவர்களாக இருந்தவர்களை இந்த புகைப்படங்கள் நிச்சயம் கொசுவத்தி சுத்தச் செய்யும்.

சில தினங்கள் முன்பு மின்னஞ்சலில் இந்த புகைப்படங்களைக் கிடைக்கப்பெற்றேன். படங்களைப் பார்த்ததும் பள்ளிப்பருவ நினைவுகளில் மூழ்கிப் போனேன்.

ர்ர்ர்ர்ர்...


HERO PEN
January 07, 2010

ஆஸ்கர் நாயகனிடம் இத்தனை எளிமையா!

ஜனவரி 6 ஆம் தியதி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பிறந்த நாள் ஆதலால் அவரது பேட்டியை CNN ஆங்கில தொலைக்காட்சி talk asia என்ற நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பிக் கொண்டிருந்ததை தற்செயலாக காண நேரிட்டது.

மனிதர் மிக எளிமையாக பேசிவிட்டு போனார், சென்னையிலிருக்கும் இசைப்பள்ளியைக் குறித்தும், அவர் பாடல்களுக்கு எவ்விதம் மெட்டமைக்கிறார் போன்ற விடயங்களையும், ஹாலிவுட் வாய்ப்புகளையும் குறித்து விவரித்தார்.


ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்திற்காக கிடைத்த இரு ஆஸ்கர்களுக்கு பின்னர் மேற்கத்திய உலகில் பரவலாக பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறார் நம் இசைப்புயல்.

ஆஸ்கருக்குப் பின்னர் அமெரிக்காவின் பிரபல ஓப்ரா மற்றும் ஜே லெனோ நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்; ஆங்கில பாப் இசைக்குழுவான Pussy Cat Dolls உடன் பணியாற்றியிருக்கிறார்; என சொல்லிக்கொண்டே போகலாம்.


(அண்மை காலத்து பேட்டி என்று தான் ஆரம்பத்தில் கருதினேன். ஆனால் அது மே மாதம் 2009 ல் அவர் அளித்த பேட்டி என்று பின்னர் தான் தெரியவந்தது)

எதுவாயினும் ஆங்கில தொலைக்காட்சிகளில் பேட்டியளிப்பதே பெரிய விஷயம் அதுவும் மேற்கத்திய நாடுகள் நம்மவர் ஒருவரை திரும்பிப் பார்க்கிறது என்றால் நமக்கெல்லாம் அது பெருமையே

January 06, 2010

2010 ல் எதிர்பார்க்கும் 10 விடயங்கள்

1. ரஹ்மான்-கிராமி விருது
இன்று (06.01.2010) பிறந்த நாள் காணும் ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் ரஹ்மான் இரண்டு கிராமி விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். இந்த மாதம் 31 ஆம் தியதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் விழாவில் முடிவு தெரிந்து விடும்.

2. உலககோப்பை-ஹாக்கி

கிரிக்கெட்டில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய இளைஞர்கள் பலருக்கு இந்தியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்டா ஹாக்கியா என சந்தேகம் வலுப்பதில் ஆச்சரியமில்லை.
பிப்ரவரி 28 முதல் ஆரம்பிக்கும் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டிகளை இந்த முறை இந்தியாவே நடத்துகிறது. நவம்பர் 2008 மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவில் போட்டிகளை நடத்த வேண்டாம் என சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

3. உலகக்கோப்பை-கால்பந்து
நான்கு வருடமாக எதிர்பார்த்திருந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் ஜூன் 11 ல் ஆரம்பிக்கின்றன. கிரிக்கெட் மேனியா இந்தியாவில் கால்பந்திற்கு என்ன மாதிரியான வரவேற்பு இருக்கும் என பார்ப்போம்.

4. இலங்கை-ஜனாதிபதி தேர்தல்

எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது ஜனவரி 26 ஆம் தியதி நடைபெறவிருக்கும் இலங்கை ஜனாதிபதி தேர்தல்.
முன்னாள் ராணுவ தளபதி சரத்தின் திடீர் ராஜினாமாவும், அரசியல் பிரவேசமும், தற்போதைய ஜனாதிபதி மீதான அவரின் குற்றச்சாட்டுகளும் மேலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. தினம் மடிந்து வரும் இலங்கைத் தமிழர் நலனுக்கு என்ன செய்யப்போகிறார்க்ள என பார்ப்போம்

5. ஷங்கர்,ரஜினி,ஐஸ்,ரஹ்மான்-எந்திரன்

இந்த வருடம் பலராலும் ஆவலாய் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று எந்திரன். எந்திரனின் எதிர்பார்ப்பை கூட்டியிருப்பது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமல்ல... இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட காட்சியமைப்பு, ஆஸ்கர் நாயகன் ரஹ்மானின் இசை, உலக நாயகி ஐஸ்வர்யா, என பலவற்றைப் பட்டியலிடலாம்

எந்திரன் ஏப்ரல் 14 அன்று வெளிவருமா என்பது ஏப்ரல் 14 அன்று தான் தெரியும் :)

6. வேட்டைக்காரன்-கோட்டைக்காரன்!!!

குருவி, வில்லு, வேட்டைக்காரன் என தொடர்ந்து தோல்வியடைந்திருக்கும் நடிகர்!!? விஜய் கோட்டைக்காரனாக கோட்டையில் அமர்வாரா இல்லை பலரைக் காப்பி(copy)யடித்து வேட்டைக்காரன் மாதிரியான நகல் படங்களில் நடிப்பாரா!!! என பார்ப்போம்

7. இந்தியா-உலக அரங்கில்

2009 ன் ஆரம்பத்தில் பொருளாதார நெருக்கடிகளால் உலகம் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கையில் ஆசிய நாடுகளான இந்தியாவும், சீனாவும் ஓரளவு தாக்குப்பிடித்து நின்றன.

2009 ன் இறுதியில் வளைகுடா நாடுகளும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படவே பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை.

2010 ல் இந்தியாவின் பங்கு உலக அரங்கில் என்னவாக இருக்கும் குறிப்பாக கோப்பன்ஹேகனைத் தொடர்ந்து நவம்பர் 29 ல் மெக்சிகோ நகரில் நடைபெறவிருக்கும் ஐ.நா வின் பருவநிலை மாநாட்டில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என பார்ப்போம்.

8. டைகர் உட்ஸ்-கோல்ப்

2009 ன் இறுதியில் பல சிக்கல்களில் மாட்டித் தவித்த உலகின் முன்னணி கோல்ஃப் ஆட்டக்காரர் டைகர் உட்ஸ் தனது விளம்பரதாரர்களை ஒன்றன் பின் ஒன்றாக இழந்தார்.

அதில் குறிப்பிடும் படியானது திராவிட்டை கழட்டி விட்ட அதே GILLETE நிறுவனத்தினர்.

2010 ல் மீண்டும் முதலிடத்தைப் பிடிப்பாரா என கோல்ஃப் உலகம் சர்ச்சை செய்து கொண்டிருக்கிறது.

9. ஃபெடரர் Vs நடால்

2009 ல் ஆண்கள் டென்னிஸ் உலகின் தர வரிசையில் முதல் இரு இடங்களை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவியது சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மற்றும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் இடையே தான்.

எனினும் 2009 ன் இறுதியில் காயங்கள் காரணமாக தர வரிசையில் நடால் சற்றே சறுக்கியது முதலிடத்தை மீண்டும் பிடிப்பதற்கு ஃபெடரருக்கு வாய்ப்பாகிப் போனது. இந்த வருடம் எவ்வாறு அமையும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

10. இந்தியா-பிரிவினைகள்

2009 ல் ஆந்திராவிலும், உத்திரப்பிரதேசத்திலும் தனி மாநிலம் கோரியவர்கள், மகாராஷ்டிராவில் மராத்தி மட்டுமே பேச்சுமொழியாக இருக்க வேண்டும் என நிர்ப்பந்தித்த சிவசேனாவினர் என பிரிவினைகளுக்கு விதையிட்டவர்கள் என்ன செய்வார்கள் எனவும் அவர்களை மத்திய அரசு எவ்விதம் கையாளும் என்பதும் போகப்போகத் தான் தெரியும்.

இவை ஏற்கெனவே எல்லைகளினாலும், மொழிகளினாலும் பிரிந்து கிடக்கும் இந்திய மாநிலங்களையும், மக்களையும் எவ்விதம் பாதிக்குமோ தெரியவில்லை.
Related Posts with Thumbnails