January 27, 2010

சொல்லாததும் உண்மை-பிரகாஷ் ராஜ்


கலைஞன், நடிகன், தயாரிப்பாளர், இலக்கிய ஆர்வலர் என பன்முகம் கொண்ட பன்மொழிக் கலைஞன் பிரகாஷ் ராஜ் அவர்களது அனுபவங்களை "சொல்லாததும் உண்மை" புத்தகம் வாயிலாக வாசிக்கும் வாய்ப்பு இந்த வருடம் தான் வாய்த்தது.

ஏற்கெனவே ஆனந்த விகடனில் தொடராக வெளியான அவரது அனுபவங்களின் சில பகுதிகளை மட்டுமே அப்போது வாசிக்க முடிந்தது.

வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடிகளையும் அர்த்தமுள்ளவையாக மாற்ற அவர் மேற்கொண்டிருக்கும் அவரது அனுபவங்கள் என்னை வெகுவாக பாதித்தது.

இத்தனை பெயரும், புகழும் அடைந்த பின்னரு கூட மனிதர் இன்னமும் மனிதனாக மிக எளிமையாக இருப்பது ஆச்சரியப்படுத்துகிறது.

அவரது வாழ்வின் பல உண்மைகளை பகிர்ந்து கொள்ள நிச்சயம் தைரியம், அவரது பாணியிலேயே சொல்ல வேண்டுமென்றால் "திமிர்" வேண்டும் எனலாம்.

எல்லாரும் உண்மை தன் பக்கம் இருக்கணும்னு விரும்புவாங்க. நான் உண்மையின் பக்கம் இருக்கணும்னு யோசிச்சதால் நிறைய இழப்புகள்; ஆனா பெற்ற அனுபவங்கள் அதிகம் என்று இந்த புத்தகத்தின் இறுதியில் சொல்கிறார்.

அவரது புத்தகத்திலிருந்து சில மேற்கோள்கள்

சொல்லாததும் உண்மை தொடரில் சுதந்திரமான மனநிலையில் நிர்வாணமான நிறைய உண்மைகளைப் பேசியிருக்கேன். உடைகளைக் களைவதற்கு காமம் மட்டுமே காரணமா இருக்கணும்னு அவசியம் இல்லை

ஒரு குழந்தை நிர்வாணமானா அது அழகான அறியாமை. ஒரு பெண் காசுக்கு நிர்வாணமான அது விபசாரம். காதலுக்கான நிர்வாணம், அன்பு. இது எதுவுமே வேண்டாம்னு யோசிக்கிற அம்மணம் ஞானமாகிடுது.

பிறப்பால் கன்னடனாக இருந்தாலும் தெலுங்கில் அதிக சினிமா நடித்திருந்தாலும் அவரை வாழ வைத்த தமிழ் திரையுலகைக் குறித்து பேசுகையில் மனிதர் மிகவும் பெருமைப் படுகிறார். தமிழ் திரையுலகை விட்டுக் கொடுக்காமல் பேசினாலும் மசாலாப் படங்களையும், குத்துப் பாட்டுகளையும் விமர்சனம் செய்யாமலில்லை.

கேன்ஸ் திரைப்பட விழாக்களில் இந்திய சினிமா என்றாலே பாலிவுட் அல்லது இந்தி சினிமாவைத் தான் அறிந்திருக்கிறார்கள். இந்தி சினிமான்னு சொல்லி அடையாளப்படுத்திக்க ஒரு மேடை இருக்கு ஆனா தமிழ் சினிமா கலைஞர்களுக்கு ஒரு மேடை இல்லைன்னாலும் பரவாயில்லை; அட்லீஸ்ட்... ஒரு குடையாவது வேணுமா இல்லையா? ன்னு வேற ஆதங்கப்படுறார் மனுஷன்.

வாழ்க்கையை பற்றி சொல்லும் போது நாம நாளைக்கு வரலாறாகிறோமோ இல்லையோ, இன்னிக்கு வாழ்ந்திடலாமேங்கிறது என் பாலிஸி; யாராக இருந்தாலும் வாழ்க்கையைக் காதலிக்கணும். அப்போ தான் துன்பம் ஓடி ஒளியிற விஷயமா இல்லாம, கடந்து வர வேண்டிய அனுபவமா இருக்கும் என்கிறார்.

வறுமையையும் வறுமையிலும் ஏய்த்துப் பிழைக்கும் அரசியலையும் அரசியல்வாதிகளையும் குறித்து பேசும் போது ஏசுநாதர் 2 மீன்கள் 5 அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் நபர்களுக்கு உணவு படைத்தார்னு பைபிள் சொல்லுது; இன்னிக்கு 5 லட்சம் மக்களோட பங்கா இருக்கவேண்டிய அப்பங்களையும் மீன்களையும் இரண்டே அரசியல்வாதிகள் பகிர்ந்துக்கிறாங்க என கவலைப்படுகிறார்.

அரசியலுக்காய் தற்கொலை செய்பவர்களையும், கட்-அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்பவர்களையும் அறியாமையால் செய்கிறார்கள் என்பவர்களிடம் அது அறியாமை அல்ல அது முட்டாள்த்தனம் என வாதிடுகிறார்.

கல்விமுறையையும் அதனால் மாணவர்களிடம் பெருகி வரும் மன அழுத்தத்தையும், ஜெயிப்பதற்கு என்ன செய்யலாம் என புத்தகம் வெளியிடுகிறவர்களையும் வெளுத்து கட்டுகிறார் பிரகாஷ்.

இப்பிடியே போனா 'ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட்'க்கு ஒரு எம்.பி.ஏ டிகிரி வந்தாலும் வரும். அதுல முதல் மார்க் வாங்கி ஜெயிக்கணும்னு ரொம்ப மன அழுத்தத்தோடு படிக்க வேண்டிய நிலைமை வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என நக்கலாகவும் பேசியிருக்கிறார்.

அவரது அம்மா கிறிஸ்தவத்தை பின்பற்றுகிறார், அவரது மனைவி இந்துத்துவத்தை பின்பற்றுகிறார். எனினும் எந்த குழப்பமுமில்லாமல் பிரகாஷ் மனிதனாக இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பது தான் அவரை இன்னும் அழகாக வைத்திருக்கிறது; அவருக்கு அது தான் அழகும் கூட.

கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் இவருடன் கல்லூரியில் ஒன்றாக பயின்றவர் என்பது கூடுதல் தகவல்.

மொழி மாதிரியான மேலும் பல திரைப்படங்களை உருவாக்க வாழ்த்துக்கள் பன்மொழிக்கலைஞனே!

'சொல்லாததும் உண்மை' இது பிரகாஷ் ராஜ் சொன்னது 'சொல்லுவதெல்லாம் உண்மையாய் இருக்க வேண்டுமென்பதுமில்லை பிறரை பாதிக்காத வரை' என்பது என் சிந்தனை!!

------------

புத்தகம் எழுத்தாக்கம்: த.செ.ஞானவேல்
விகடன் பிரசுரம்
விலை: ரூ. 100

4 comments:

pudugaithendral said...

nalla pagirvu

kailash,hyderabad said...

நல்ல பதிவு.ஆ.வி.யில் தொடராக வந்தபோது இடையிடையே படித்தது. முழுபுத்தகமாக வந்து விட்டதா?படித்து விடுவோம்.

எட்வின் said...

நன்றி புதுகைத் தென்றல் மற்றும் kailash

தனது காதலிகள், காமம், குடும்ப ரகசியங்கள் என பிரகாஷ் ராஜ் அவர்கள் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே இல்லை.

எனினும் அவர் கடந்து வந்த பாதைகள் அத்தனை எளிதானவும் அல்ல. பலருக்கு வாய்த்தது போன்றதொரு கனிவான, அன்பான தகப்பனும் அவருக்கு கிடைக்கவில்லை என்பதும் சொல்லாததும் உண்மையில் அடங்கும்.

எட்வின் said...

காமத்தைக் குறித்து சொல்லுகையில்...காமத்தை ருசிக்கணும்னு நினைக்கிறவன் காமுகன் ஆகிடறான். காமத்தை கடந்து போகிறவன் கடவுளாகிடறான். காமத்தை அனுபவமாப் பார்க்கிறவன் மனுஷனாகிறான் என்கிறார்.

மேலும் ஒருபடி போய்... நான் காமத்தைப் பார்த்து ஒளியறதும் இல்லை. அதை ஒளிச்சுவெக்கிறதும் இல்லை.

ஏன்னா,"காமுகனா இருக்கிறது தப்பு, கடவுளாக விருப்பம் இல்லை. மனுஷனா இருக்கிறது சந்தோஷமா இருக்கு" எனக்கு அப்படின்றார்

Post a Comment

Related Posts with Thumbnails