February 27, 2010

வெளிநாட்டிற்கான PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி

முன்குறிப்பு: PCC ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுவது.

குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது.

புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவையில்லை.
---------------------------

முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.

இருமுறை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு PCC விஷயமாக சென்றதில் நான் அறிந்தவற்றை இணையத்தில் பகிர்ந்து கொண்டால் பலருக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் தான் இந்த பதிவு.

Police Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.  http://passport.gov.in/cpv/miscell.pdf  

3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த படிவத்துடன் அசல் பாஸ்போர்ட்டும் அதன் நகலும், இருப்பிட சான்றும்,(உதாரணத்திற்கு Ration Card நகல்),  சமர்ப்பிக்க வேண்டும்.

காவல் நிலையங்களிலிருந்து எந்த விதமான சான்றிதழ்களும் வாங்கத் தேவையில்லை(உங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லையென்றால் மட்டும்)

விண்ணப்பிக்கும் நபர் கடந்த ஒரு வருடமாக தற்போது இருக்கும் முகவரியில் இல்லையெனில் அதற்கு என்று தனியாக படிவம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் https://passport.gov.in/pms/PPForm.pdf

காலை 9.30 முதல் 12 மணி வரை மட்டுமே  விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். காலை 8.45 க்கு எல்லாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்குமாறு சென்றால் எளிமையாக இருக்கும்.

கட்டணமாக 300 ரூபாய் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டினால் போதும். கட்டண விவரம் கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது.


காலையில் விண்ணப்பித்தால் மாலை 5 மணிக்கு எல்லாம் PCC கிடைத்து விடும்.

PCC குறித்த முழு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ளது https://passport.gov.in/pms/Police%20Clearance%20Certificate.htm

விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் தான் நேரில் செல்ல வேண்டுமென்பதுமில்லை,விண்ணப்பிப்பவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வர இயலாத காரணத்தை குறிப்பிட்டு அவர் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதத்தை யாரேனும் கொண்டுசென்றாலும் போதுமானது.

மதுரை பாஸ்போர்ட் அலுவலக முகவரி.

Passport Office, Bharathi Ula Veethi, Race Course Road, Madurai-625 002.
website: http://passport.gov.in/madurai.html

மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க முடியும்.

திருச்சி பாஸ்போர்ட் அலுவலக முகவரி

Passport Office, Water Tank Building, W.B. Road , Tiruchirappalli. Pin Code 620 008, Fax: 0431-2707515 E-mail: rpo.trichy@mea.gov.in

திருச்சி, கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலக முகவரி

Passport Office, First Floor, Corporation Commercial Complex, Opp. Thandumariamman Koil, Avinashi Road, Coimbatore - 641018

Phone: 0422-2304888,2309009, Fax: 0422-2306660, E-mail: rpo.cbe@mea.gov.in, Tele-enquiry: 0422-2309009, 2304888, Web-site: http://passport.gov.in/coimbatore.html

கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை பாஸ்போர்ட் அலுவலக முகவரி

Regional Passport Office,IInd Floor, Shastri Bhavan, 26, Haddows Road, Chennai - 600 006
Phones : 91-44-28203591, 28203593, 28203594, 28240696
Fax : 91-44-28252767

சென்னை, கடலூர், தர்மபுரி,  காஞ்சிபுரம், காரைக்கால், கிருஷ்ணகிரி, பாண்டிச்சேரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலுர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

February 24, 2010

சச்சின் எனும் பெருமைமிகு இந்தியன்

அண்மை காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் பெயரை உயரச் செய்தவர்களில் நான் அதிகம் வியந்தது ஏ.ஆர்.ரஹ்மான், சச்சின் மற்றும் லியாண்டரைத் தான்.

இவர்கள் மூவருமே  ஏறக்குறைய ஒரே மாதிரியான உடலமைப்பும், ஒரே மாதிரியான நடவடிக்கைகளும் உடையவர்கள்.ஆர்ப்பாட்டாமோ, அகங்காரமோ இல்லாத அமைதியானவர்கள்.

இந்தியன் என சொல்வதில் மூவருமே அதிகம் மகிழ்ச்சி காண்கிறவர்கள்.

இவர்களில் சச்சின் செய்திருக்கும் சாதனைகளை எளிதில் எண்ணி விட முடியாது. இதோ இன்று பிப்ரவரி 24, 2010 ல் மீண்டும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியிருக்கிறார். இவரது அனைத்து சாதனைகளையும் தனி ஒரு நபராக எவரேனும் முறியடிக்கவியலுமா என கூட தெரியவில்லை.

ஒருதின போட்டிகளில் இரட்டை சதமடிப்பது அத்தனை எளிதான விஷயமல்லவே. அதுவும் ஒருதின கிரிக்கெட் சரித்திரத்திலேயே முதன்முறையாக இரட்டை சதத்தை அடித்திருப்பது ஒரு இந்தியன் என்பதில் இந்தியருக்கு பெருமை தான்.

இரட்டை சதமடித்த பின் சச்சின் வானை நோக்கி நன்றி கூறியது மறைந்த அவரது தந்தைக்கா இல்லை இறைவனுக்கா என்பது அவருக்கே வெளிச்சம்.

எனினும் ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் அவர் உரைத்த கருத்துக்கள் இந்தியர் அனைவரையும் மீண்டும் பெருமைப்பட செய்த ஒரு விஷயம்.

இரட்டை சதத்தை குறித்து கூற முற்படுகையில், சச்சின் சில வினாடிகள் தாமதித்த போது அவரது தந்தைக்கு சமர்ப்பிப்பார் என நான் கருதினேன் . மாறாக இந்தியர் அனைவருக்கும் சமர்ப்பிப்பதாக கூறியதில் இருந்து அவரது நன்மனதை இந்தியர் புரிந்திருக்கக் கூடும்.

இருபத்தொரு ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு இத்தனை ஆட்டங்கள் ஆடியதே மிகப்பெரும் சாதனை தான் இந்த சாதனை மன்னன் சச்சினுக்கு.

மன்னர்களுக்கு தான் கவிபாட வேண்டுமா! இதோ கிரிக்கெட் மன்னருக்கு நான் பாடும் சில வார்த்தைகள்!

நீ
உலக அரங்கில்
இந்தியாவின் புகழ்
உயரச் செய்தாய்

இனி
இந்தியா
உன் புகழை
உரக்கச் சொல்லும்
உரிமை கொள்ளும்

கிரிக்கெட் உலகை
உதற சொன்னவர்கள்
உன் கிரிக்கெட் மட்டையின்
பதிலால் - இன்று
பதிலற்று நிற்கிறார்கள்

இந்தியன் என்பதில்
இனிமை காணும் நீ
இன்று போல் என்றும்
(இந்தியனாய்) வாழ்க

"It's the passion of representing INDIA in International Cricket keeps me motivating all the time". இது சச்சின் ஒரு பேட்டியில் சொன்னது.

February 22, 2010

யார்க்கரை யாரேனும் நினைவூட்டுங்கள்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக எப்படியோ தட்டுத்தடுமாறி இந்தியா டெஸ்ட் தொடரை சமன் செய்து தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தற்போது ஒருதின போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்தைப் பிடிக்கும் முயற்சியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இறங்கியுள்ளன.

இந்திய அணியின் மட்டைவீச்சை பத்தில் எட்டு ஆட்டங்களில் நம்பலாம். ஆனால் பந்துவீச்சு என்று வரும் போது பத்தில் ஐந்து ஆட்டங்களில் கூட நம்புவது கடினம் தான்.

மிக எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய பல போட்டிகளை மிகக் கடினமான போட்டிகளாக மாற்றுவதில் இந்திய அணியினருக்கு நிகர் வேறு எந்த அணியினரும் இல்லை என கூறலாம்.

இதற்கு உதாரணமாக கடந்த இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தையும், முதல் ஒருதின போட்டியையும் குறிப்பிடலாம்.

கிரிக்கெட்டில் tail enders என்பதாக குறிப்பிடப்படும் இறுதியில் மட்டை வீச வருகின்றவர்களின் விக்கெட்டை எடுப்பதற்கு இந்தியர்கள் காட்டும் வேகம் இன்னமும் போதாது.

பலரையும் தோனி மாற்றி மாற்றி பந்து வீசச் செய்தாலும் கடந்த இரு போட்டிகளிலும் இறுதி வரை எந்த பலனும் இல்லை.

எவரும் yorker என்ற பந்துவீச்சு முறையை உபயோகித்ததாக எனக்கு நினைவில்லை. டெஸ்ட் ஆட்டத்தில் இஷாந்த் ஷர்மாவும், ஒருதின போட்டியில் நெஹ்ராவும் சிலமுறை முயற்சி செய்திருக்கக்கூடும் அவ்வளவே. மறந்து விட்டார்களோ என்னமோ!

Tail enders ன் விக்கெட்டை எடுக்க yorker ஐ விட சிறந்த பந்துவீச்சு முறை வேறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

மற்ற அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் yorkers பல நேரம் வியக்க வைக்கும். குறிப்பாக பிரெட் லீ, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷேன் பாண்ட், வால்ஷ் போன்றோர் இதில் கைதேர்ந்தவர்கள்.

இனிமேல், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பள்ளியில் படிப்பிப்பது போன்று யார்க்கர்-சிறுகுறிப்பு வரைக அல்லது யார்க்கர் விரிவான விளக்கமளிக்க என்பது போன்ற தேர்வுகள் அடிக்கடி வைக்க வேண்டியது தான் .

சிறந்த yorker பந்துவீச்சுகளின் காணொளி தொகுப்பு


yorker எவ்விதம் வீச வேண்டும் என்பது குறித்த காணொளி


February 17, 2010

சச்சினின் 47 டெஸ்ட் சதங்கள்-ஒரு பார்வை

2010 ல் இதுவரை சச்சின் ஆடிய நான்கு டெஸ்ட் ஆட்டங்களிலும் சதமடித்திருக்கிறார்.

லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் எடுத்த சதத்துடன் இதுவரை 47 சதங்கள் கண்டிருக்கிறார்.

சச்சின் எடுத்துள்ள 47 சதங்களில் 10 முறை மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. 18 முறை சமநிலையும் 19 முறை வெற்றியும் அடைந்துள்ளது.

ஒருதின கிரிக்கெட் ஆட்டங்களிலும், டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களிலும் இதுவரை அதிக சதங்கள் எடுத்தவர் சச்சினே.

அவர் இதுவரை டெஸ்ட் ஆட்டங்களில் எடுத்த சதங்களின் பட்டியலை இணையத்தில் உலவிய போது காண நேர்ந்தது அவற்றை இங்கே தொகுத்துள்ளேன்.


1. இங்கிலாத்திற்கு எதிராக ஓல்ட் டிரஃபோர்டில், ஆகஸ்ட் 14, 1990, 119* ஓட்டங்கள்(சமநிலை)

1992

2. முதல் சதமெடுத்து ஏறக்குறைய இரு வருடங்கள் பின்னரே ஜனவரி 6, 1992 சிட்னி, ஆஸ்திரேலியாவில் இரண்டாவது சதத்தை (148* ஓட்டங்கள்)நிறைவு செய்தார்.(சமநிலை)

3. பிப்ரவரி 3, 1992, அதே ஆஸ்திரேலிய தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் 114 ஓட்டங்கள் எடுத்தார்.(தோல்வி)

4. நவம்பர் 28, 1992-தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஜோகனஸ்பெர்க்கின், வாண்டரர்ஸ் மைதானத்தில் 111 ஓட்டங்கள்(சமநிலை)

இதுவரை எடுத்த நான்கு சதங்களுமே இந்தியாவிற்கு வெளியே ஆடுகையில் எடுத்தவை தான்.

1993

5. பிப்ரவரி12, 1993-சென்னை, எம்.ஏ.சி மைதானம், இங்கிலாந்திற்கு எதிராக 165 ஓட்டங்கள்(வெற்றி)

6. ஜூலை 31,1993-எஸ்.எஸ்.சி மைதானம், கொழும்பு, இலங்கைக்கு எதிராக 104* ஓட்டங்கள்.(வெற்றி)

1994

7. ஜனவரி 19, 1994, லக்னோ, இலங்கைக்கு எதிராக, 142 ஓட்டங்கள்(வெற்றி)

8. டிசம்பர் 2, 1994-நாக்பூர், மே.இ தீவின் அதிவேக பந்துவீச்சிற்கு எதிராக 179 ஓட்டங்கள்(சமநிலை)

1996

9. ஜூன் 8,1996-(swing)வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான எட்ஜ்பாஸ்டான் மைதானம்,பிர்மிங்காமில், இங்கிலாந்திற்கு எதிராக 122 ஓட்டங்கள்(தோல்வி)

10. ஜூலை 5, 1996-ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானம், நாட்டிங்காம், இங்கிலாந்திற்கு எதிராக 177 ஓட்டங்கள்.(சமநிலை)

1997

11. ஜனவரி 4, 1997, நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப்டவுன், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 169 ஓட்டங்கள்(தோல்வி)

12. ஆகஸ்ட் 3, 1997, பிரேமதாசா மைதானம், கொழும்பு,இலங்கைக்கு எதிராக 143 ஓட்டங்கள்(சமநிலை)

13ஆகஸ்ட் 11, 1997, 12 ஆவது சதம் எடுத்த ஒரு வாரத்திற்குள் SSC மைதானம், கொழும்பில் இலங்கைக்கு எதிராக 13 ஆவது சதமெடுத்தார் (139 ஓட்டங்கள்). முதன் முறையாக இரு ஆட்டங்களில் தொடர்ச்சியாக சச்சின் எடுத்த சதங்கள் இந்த இரண்டும்.(சமநிலை)

14. டிசம்பர் 4, 1997, வான்கடே மைதானம், மும்பை, இலங்கைக்கு எதிராக 148 ஓட்டங்கள்(சமநிலை)

1998

15. மார்ச் 9, 1998, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 155* ஓட்டங்கள்(வெற்றி)

16. மார்ச் 26, 1998, எம்.சின்னசாமி மைதானம், பெங்களூர், ஆஸிக்கு எதிராக 177 ஓட்டங்கள்(தோல்வி)

17. டிசம்பர் 29, 1998, வெலிங்டன், நியூசிலாந்திற்கு எதிராக 113 ஓட்டங்கள்(தோல்வி)

1999

18. ஜனவரி 31, 1999, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, பாகிஸ்தானிற்கு எதிரான முதல் சதம்,136 ஓட்டங்கள்(தோல்வி)

முதுகுவலியுடன் சச்சின் எடுத்த இந்த சதம் பலருக்கு மறக்கவியலாதது. சென்னை ரசிகர்கள் இந்தியாவின் தோல்விக்குப் பின்னரும் பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது இது தானோ!

19. பிப்ரவரி 28, 1999, SSC மைதானம், கொழும்பு, இலங்கைக்கு எதிராக 124* ஓட்டங்கள். (சமநிலை)

20. அக்டோபர் 30, 1999, PCA மைதானம், மொகாலி, நியூசிலாந்திற்கு எதிராக 126* ஓட்டங்கள்(சமநிலை)

21. அக்டோபர் 30, 1999, சர்தார் பட்டேல் மைதானம், அஹ்மதாபாத், நியூசிலாந்திற்கு எதிராக 217 ஓட்டங்கள்(முதல் இரட்டை சதம், சமநிலை)

22. டிசம்பர் 28, 1999. MCG, மெல்போர்ன், ஆஸிக்கு எதிராக 116 ஓட்டங்கள்(தோல்வி)

2000

23. நவம்பர் 21, 2000, ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம், டில்லி, சிம்பாப்வேக்கு எதிராக 122 ஓட்டங்கள் (வெற்றி)

24. நவம்பர் 26, 2000VCA மைதானம், நாக்பூர், சிம்பாப்வேக்கு எதிராக 201* ஓட்டங்கள்(சமநிலை)

2001

25. மார்ச் 20, 2001, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, ஆஸிக்கு எதிராக 126 ஓட்டங்கள்(வெற்றி)

26. நவம்பர் 3, 2001, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 155 ஓட்டங்கள்(தோல்வி)

27. டிசம்பர் 13, 2001, சர்தார் பட்டேல் மைதானம், அஹ்மதாபாத், இங்கிலாந்திற்கு எதிராக 103 ஓட்டங்கள்(சமநிலை)

2002

28. பிப்ரவரி 24, 2002, VCA மைதானம், நாக்பூர், சிம்பாப்வேக்கு எதிராக 176 ஓட்டங்கள்(வெற்றி)

29. ஏப்ரல் 20, 2002, குயின்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஆஃப் ஸ்பெயின், மே.இ தீவிற்கு எதிராக 117 ஓட்டங்கள் . (வெற்றி) டான் பிராட்மேனின் 29 சதங்களை சமன் செய்த சதம் இது.

30. ஆகஸ்ட் 23, 2002 லீட்ஸ், இங்கிலாந்திற்கு எதிராக 193 ஓட்டங்கள்(வெற்றி)

31. நவம்பர் 3, 2002, ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா, மே.இ.தீவிற்கு எதிராக 176 ஓட்டங்கள். (சமநிலை)

2003 ல் காயம் காரணமாக அதிக ஆட்டங்கள் ஆடவில்லை

2004

32. ஜனவரி 4, 2004, SCG மைதானம், சிட்னி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 241* (சமநிலை)

33. மார்ச் 29, 2004, முல்தான், பாகிஸ்தானிற்கு எதிராக 194* ஓட்டங்கள் அப்போதைய அணித்தலைவர் ராகுல் டிராவிட் எடுத்த முடிவு சச்சினை இரட்டை சதம் எடுக்காமல் செய்தது. (வெற்றி)

34. டிசம்பர் 12, 2004, டாக்கா, பங்களாதேஷிற்கு எதிராக 248* ஓட்டங்கள். இதோடு சுனில் கவாஸ்கரின் உலக சாதனையான 34 சதங்களை சமன் செய்தார். (வெற்றி)

2005

35. டிசம்பர் 22, 2005, டெல்லி, இலங்கைக்கு எதிராக 109 ஓட்டங்கள்(வெற்றி) 34 ஆவது சதத்திற்கு பிறகு அடுத்த சதத்தை எடுத்து கவாஸ்கரின் சாதனையை முறியடிப்பதற்கு ஒரு வருடம் ஆகியது சச்சினுக்கு.

இடையில் பலமுறை தொண்ணூறுகளில் ஆட்டமிழந்தார்

2006

2006 ல் ஆடிய ஐந்து டெஸ்ட் ஆட்டத்திலும் சதமேதும் எடுக்கவில்லை. சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்ற சலசலப்பு ஏற்பட்டது இந்த வருடத்தில் தான்.

2007

36. மே 19, 2007, சிட்டகாங்கில் பங்களாதேஷிற்கு எதிராக 101 ஓட்டங்கள். (சமநிலை)

37. மே 26, 2007, டாக்காவில், பங்களாதேஷிற்கு எதிராக 122* (வெற்றி)

2008

38. ஜனவரி 4, 2008, SCG மைதானம் சிட்னியில் 154* ஓட்டங்கள்(தோல்வி) நடுவர்களின் பல தீர்ப்புகள் சர்ச்சைக்கு உள்ளான ஆட்டம்

39. ஜனவரி 25, 2008, அடிலைடு ஓவலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 153 ஓட்டங்கள். சர்வதேச அளவில் இது அவருக்கு 80 ஆவது சதம்(ஒருநாள் ஆட்டங்களின் சதங்களும் சேர்த்து) (சமநிலை)

40. நவம்பர் 6, 2008, நாக்பூரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 109 ஓட்டங்கள். லாராவின் உலக சாதனையான 11,000 ஓட்டங்களை சச்சின் கடந்த ஆட்டம் இது(வெற்றி)

41. டிசம்பர் 15, 2008, சென்னையில் இங்கிலாந்திற்கு எதிராக 103* ஓட்டங்கள்(வெற்றி). மும்பை தாக்குதலுக்கு பின்னர் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் நாடு திரும்பவா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு பின்னர் ஆடிய ஆட்டம் இது.

இந்தியர்கள் அனைவருக்கும் இந்த சதத்தை சமர்ப்பிப்பதாக சச்சின் தெரிவித்தார்
.
2009

42.  மார்ச் 20, 2009, ஹாமில்டனில் நியூசிலாந்திற்கு எதிரான சச்சினின் 160 ஓட்டங்கள்(வெற்றி) 33 வருடங்களுக்கு பிறகு நியூசிலாந்தில் இந்தியா வெற்றி பெற வழி வகுத்தது

43. 20 நவம்பர் 2009, அஹ்மதாபாத், இலங்கைக்கு எதிராக 100* ஓட்டங்கள் (சமநிலை)

2010

44. ஜனவரி 18, 2010, சிட்டங்காங்கில், பங்களாதேஷிற்கு எதிராக 105* ஓட்டங்கள்(வெற்றி)

45. ஜனவரி 25, 2010, டாக்காவில், பங்களாதேஷிற்கு எதிராக 143 ஓட்டங்கள்(வெற்றி)

46. பிப்ரவரி 9, 2010, நாக்பூரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 100 ஓட்டங்கள் (தோல்வி)

47. பிப்ரவரி 15, 2010 ஈடன் காடர்ன் மைதானம்,கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 106 ஓட்டங்கள். இந்த வருடத்தில் ஆடிய நான்கு டெஸ்ட் ஆட்டங்களிலும் சதமடித்திருக்கிறார் சச்சின்.

நன்றி ndtv & wiki

February 14, 2010

தொடர் பதிவு - கிரிக்கெட்டில் பிடித்ததும் பிடிக்காததும்

தொடர் பதிவிடும்படி அழைத்த இலங்கை அன்பர் லோஷன் அவர்களுக்கு முதலில் நன்றி.

சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் என்றால் கொள்ளைப் பிரியம். MRF Academy ல் சேர்வதற்கும் ஆர்வமாக இருந்தவனை குடும்பத் தேவைகள் தடம் புரட்டிப் போட்டன.

பல விஷயங்களை கிறுக்கி வந்தாலும், இதுவரை நான் எழுதியுள்ள கிரிக்கெட் தொடர்பான பதிவுகள் தான் என்னை பதிவர் லோஷன் உள்ளிட்ட பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.சரி தொடர் பதிவிற்கு வருவோம். 

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும் !

2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

1. பிடித்த கிரிக்கெட் வீரர்?

ராகுல் டிராவிட் - டெஸ்ட், ஒருதின ஆட்டங்கள் இரண்டிலும் 10,000 ற்கும் மேல் ஓட்டங்கள் குவித்த சத்தமே இல்லாத சாந்தமானவர். இந்திய அணிக்கு கிடைத்த வரப்பிரசாதம்

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்?

பாகிஸ்தானின் சலீம் மாலிக் - என்னமோ அவர் சொல்வது தான் உண்மை என்ற விதத்தில் பேசுவதும், ஆடுகளத்தில் நடந்து கொள்ளும் விதமும் ஏனோ பிடிக்கவில்லை.

3. பிடித்த வேகப்பந்து வீச்சாளர்?

வாசிம் அக்ரம் -  பந்து வீசும் அவரது பாணியே தனி தான். மிதமாக ஓடி வந்து மிக வேகமாக பந்து வீசுவதில் கெட்டிக்காரர். Reverse Swing, Yorker மன்னர். ஒரு ஓவரின் ஆறு பந்து வீச்சுகளையும் ஆறு விதமாக வீசும் திறமை கொண்டவர். பாகிஸ்தான் வீரர்களுக்காக வக்காலத்து வாங்காதாவர். டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகள் இரண்டிலும் 400 விக்கெட்டுகளைக் கடந்த முதல் வீரர்.

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்?

இந்தியாவின் ஸ்ரீசாந்த் - விஷயமே இல்லாமல் வெட்டி பந்தா காட்டுவதால்

5. பிடித்த சுழல் பந்துவீச்சாளர்?

சந்தேகமே இன்றி Leg Spinல் ஷேன் வார்ன், Off Spin ல் முத்தையா முரளிதரன். China Man ல் பந்து வீசும் விதத்திற்காக தென்னாப்பிரிக்காவின் பால் ஆடம்ஸ்.

6. பிடிக்காத சுழல் பந்துவீச்சாளர் ?

தென்னாப்பிரிக்காவின் நிக்கி போயே (Nicky Boje)

7. பிடித்த வலக்கை துடுப்பாட்டக்காரர்?

எப்போதும் சாதனைகளுக்கு சொந்தக்காரர் லிட்டில் மாஸ்டர் சச்சின் தான். மார்க் வாவின் துடுப்பாட்ட பாணியையும் அதிகம் ரசித்ததுண்டு.

8. பிடிக்காத வலக்கை துடுப்பாட்டக்காரர்?

இலங்கையின் ரொமேஷ் கலுவிதரனா,தேவையின்றி அடித்து ஆடும் அவரது பாணி ஏனோ பிடிக்கவில்லை.

9. பிடித்த இடக்கை துடுப்பாட்டக்காரர்?

பாகிஸ்தானின் சயீத் அன்வர், தென்னாப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன். இரண்டாமவர் எடுத்த 188 ம் முதலாமவர் எடுத்த 194 ம் மறந்து விட முடியுமா என்ன

10. பிடிக்காத இடக்கை துடுப்பாட்டக்காரர்?

பாகிஸ்தானின் அமீர் சொகைல்

11. பிடித்த களத்தடுப்பாளர்?

இந்தியாவின் அசாருதீன்-மனுஷன் என்னமா விக்கெட்டை குறிபார்த்து அடிப்பார். திரும்பி நின்றவாரே பந்தை லாவகமாக wicket keepper க்கு அனுப்பும் அவரது பாணியே தனி.

இந்தியாவின் ஜடேஜா; தெ.ஆ வின் ஜான்டி ரோட்ஸ், கிப்ஸ், டி'வில்லியர்ஸ்; இங்கிலாந்தின் இயன் பெல்; மே.இ. தீவின் ஆர்தர்டன் .  

12. பிடிக்காத களத்தடுப்பாளர்? 

சவுரவ் கங்குலி, ஆசிஷ் நெஹ்ரா, இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் ரணதுங்கா

13. பிடித்த ஆல்ரவுண்டர்?

இந்தியாவின் கபில் தேவ், தெ.ஆ வின் காலிஸ், நியூசிலாந்தின் க்ரிஸ் ஹாரிஸ் 

14. பிடித்த நடுவர்?

தொடர்ந்து நான்கு முறை சிறந்த நடுவர் விருது வாங்கிய சைமன் டஃபில். பழையவர்களில் சந்தேகமேயில்லாமல் நெல்சன் (111)புகழ் ஷெப்பர்ட், டிக்கி பேர்ட்

15. பிடிக்காத நடுவர்?

அசோகா டீ சில்வா

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர்?

டோனி கிரெய்க், ஹார்ஷா போக்ளே

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்?

ஜெஃப்ரி பாய்காட்-அதிக தெனாவட்டுடன் பேசுவதால்

18. பிடித்த அணி ?

நியூசிலாந்து-எல்லாருமே பக்கா Gentleman ஆக இருப்பதால், ஆட்டத்தில் ஆஸ்திரேலியா.

19. பிடிக்காத அணி ?

பாகிஸ்தான் - கிரிக்கெட்டின் விதிகளை மதிக்காததாலும், அலட்டுவதாலும்

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி?

தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா; நியூசிலாந்து-ஆஸ்திரேலியா

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி?

அப்படி ஏதுமில்லை, ஆனால் ஏனோ தானோ என விளையாடும் எந்த அணியும், இரண்டாம் தர ஆட்டக்காரர்களை வைத்து ஆடும் அணிகளையும் பிடிப்பதில்லை

22. பிடித்த அணி தலைவர்?

இந்தியாவின் அசாருதீன், ஆஸ்திரேலியாவின்-ஸ்டீவ் வாவ், ஆலன் பார்டர்

23. பிடிக்காத அணித்தலைவர்?

சச்சின் டெண்டுல்கர்-தன்னம்பிக்கையுடன் அணியை நடத்திச் செல்லாமையால். (பதவியே வேண்டாமென்று மறுத்திருக்க வேண்டும் அவர்)

24. பிடித்த போட்டி வகை?

டெஸ்ட், ஒருநாள், T20 என அனைத்து ஆட்டங்களும் பிடிக்கும். ஆனால் சமீபகாலமாக பணமும், கவர்ச்சியும் அதிகம் ஆடும் T20 போட்டிகளைப் பிடிக்கவில்லை.(ஆடைகுறைப்பு செய்பவர்களுக்கு ஆடுகளத்தில் என்ன வேலை?!)

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி?

மே.இ.தீவின் டெஸ்மாண்ட் ஹெயின்ஸ்-கோர்டன் கிரீனிட்ஜ் சிறு வயதில் இவர்களைத் தான் அதிகம் ரசித்திருக்கிறேன். முதல் விக்கெட்டிற்கு மிக அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் என்ற பெருமையை அதிக வருடம் தக்க வைத்திருந்தவர்கள்

பின்னர் தென்னாப்பிரிக்காவின் ஹட்சன்-கிர்ஸ்டன் ;சச்சின்-சவுரவ், கில்கிரிஸ்ட்-ஹெய்டன்

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி?

சேவாக்-டிராவிட் 

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர்?

முதலிடம் 400 ஓட்டங்கள் எடுத்த சாதனை மன்னன் லாராவுக்கு தான், பின்னர் சச்சின், டிராவிட், ஸ்டீவ் வாவ், கபில், கும்ப்ளே

28. உங்கள் பார்வையில் சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்?

மீண்டும் லாரா தான். இந்தியா சார்பில் தனி ஆளாக உலகக் கோப்பை வென்று தந்த கபில் தேவ்

29. சிறந்த கனவான் வீரர்?

சச்சின், கும்ப்ளே, வால்ஷ்(லோஷன் அவர்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்)

30. நான் பார்த்து வியந்த வீரர்கள்?

லாரா, சச்சின், ஸ்டீவ் வாவ், டிராவிட், ஹெய்டன், கில்கிறிஸ்ட், பான்டிங், வாசிம் அக்ரம், வேகப் பந்துவீச்சு இணை வால்ஷ்-அம்ப்ரோஸ், ஜான்டி ரோட்ஸ்

இந்த தொடர் பதிவிற்கு நான் அழைக்க விரும்புவது

ஜீவதர்ஷன் http://www.eppoodi.blogspot.com/
மருத்துவர் SUREஷ் http://kanavukale.blogspot.com/

February 13, 2010

காதலி(னா)ல் வீழ்ந்தேன்











நம் காதல்

வளர்பிறை போல்

வளரும் என்றாய்

நானும் நம்பினேன்...!


உன் காதல் வளர்பிறை ஆகி
நான் தேய்பிறை ஆகும் வரை.


உன் காதல் வளர்பிறை தான்

நான் தேய்பிறை ஆகியதால்

****

காதல்

நீடூழி வாழும் என்றாய்

நனவென்று மகிழ்ந்தேன்

நான் வீழ்ந்து

நின் காதல் வாழும் வரை

****

காதல் கண்ணாமூச்சி ஆட்டம் என

காதில் நீ கிசு கிசுத்தது

என் கண்களை கட்டி விட்டு
என்னை ஏமாற்றத் தானோ!

***

ஆம்...

காதலில் வீழ்ந்தேன்

காதலி(னா)ல் வீழ்ந்தேன்

[ஆனாலும் காதல் வாழ்ந்தது
அவளிடம் நான் வீழ்ந்ததால் !!! ]

February 12, 2010

வேலன்டைன் தின வரலாறு

து ரு மீள் திவு...

இன்று அநேகமாக அனைத்து நாடுகளிலும் பிப்ரவரி 14அன்று வேலன்டைன் தினம் கொண்டாடுவது வழக்கமாகி வருகின்றது. மேற்கே பல நாடுகளில் அன்று விடுமுறையும் அளிக்கப்படுகிறது. வேலன்டைன் தினம் உருவாகியது குறித்து சமூகத்தில் பல கருத்துக்கள் நிலவி வருகின்றன. அந்த கால கட்டத்தில் காதலர்களே பெருமளவில் இந்த நாளை கொண்டாடியதால் காதலர் தினம் எனவும் அறியப்படுகிறது.

கிறிஸ்தவ மற்றும் ரோமப் பாரம்பரியங்களை வரலாறாக கொண்டது வேலன்டைன் தினம்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ரோமாவில் மாமன்னன் இரண்டாம் கிளாடியஸ் திருமணமானவர்களைக் காட்டிலும் திருமணமாகாத வீரர்களே சிறந்த வீரர்களாக திகழ்வதாகக் கூறி திருமணங்களுக்குத் தடை விதித்திருக்கிறார், இதற்கு செவிமடுக்காத வேலன்டைன் எனப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் எப்போதும் போலவே காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்; ஆனால் இம்முறை மன்னன் அறியாமல் மறைமுகமாக. இதனை அறிந்து கொண்ட இரண்டாம் கிளாடியஸ் அப்போதகரை கொன்று விட்டான் என ஒரு வரலாறு கூறுகிறது.

மற்றொரு வரலாறோ, ரோமச் சிறைச்சாலைகளில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கிறிஸ்தவர்களை விடுவிக்க முயன்ற வேலன்டைனை மன்னன் கொன்றதாக கூறுகிறது.

வேறொன்றோ சிறையிலிருந்த வேலன்டைனுக்கும் சிறை அதிகாரியின் மகளுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இதை அறிந்து கொண்ட மன்னன் வேலன்டைனைக் கொன்றதாகவும் கூறுகிறது.

மரணமடைந்த வேலன்டைன் நினைவாக வேலன்டைன் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தன் காதலிக்கு எழுதிய கடிதத்தின் இறுதியில் உன்னுடைய வேலன்டைனிடமிருந்து (From your valentine) என முடித்திருக்கிறார் வேலன்டைன். அந்த வாக்கே இன்றும் வாழ்த்து அட்டைகளிலும், கடிதங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இருக்கிறது வரலாறு .

இப்படியாக வேலன்டைன் தின வரலாறு இன்று வரை சரிவர அறியப்படாமலே இருக்கிறது.வேலன்டைன் தினத்திற்கு இன்னும் பல கதைகள் சொல்லப்படுகின்றன.

மேற்கில் ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் தான் பிப்ரவரி மாதத்தின் மத்திய தினமான 14 ஐ வேலன்டைன் தினமாகக் கொண்டாடத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது; அதற்கும் ஒரு பின்னணியிருக்கிறது. பிப்ரவரி 14 அல்லது அதன் பிறகோ தான் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டின் பறவைகள் தங்கள் இணையோடு சேரும் பருவம் தொடங்கி வந்துள்ளது. எனவே அந்த மாதத்தின் மத்திய தினமான 14 ஐ தெரிந்தெடுத்ததாக கூறுகிறது ஒரு வரலாறு.வேறு பல வரலாறுகளும் உள்ளன.

18 நூற்றாண்டிற்கு பின்னர் தான் அனைத்து தரப்பினராலும் பரவலாக வேலன்டைன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு அக்காலக்கட்டத்தில் அனைத்து தரப்பினரும் அன்பைப் பரி மாறிக்கொண்டதால் அன்பர்கள் தினம் எனவும் அழைக்கப்பட்டுவருகிறது.

வாழ்த்து அட்டைகளும், ரோஜாப்பூ பரிமாற்றங்களும் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வர்த்தக ரீதியாக, வண்ண வண்ண ரிப்பன்கள் மற்றும் scrap என அழைக்கப்படும் படங்களாலான முதலாவது வாழ்த்து அட்டை 1840 ல் Esther A. Howland, என்ற பெண்மணியால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அவர் Mother of valentine என்று அறியப்பட்டு வருகிறார்.

கிறிஸ்துமஸிற்கு அடுத்தபடியாக வேலன்டைன் தினத்தன்று தான் உலகிலேயே வருடத்திற்கு அதிக அளவு வாழ்த்து அட்டைகள் (சுமார் ஒரு பில்லியன்) அனுப்பப்படுகின்றன. கிறிஸ்துமஸின் போது சுமார் 2.6 பில்லியன் வாழ்த்து அட்டைகள் உலகம் முழுவதும் பரிமாறப்படுகின்றன.

வாழ்த்து அட்டைகளில் உபயோகிக்கப்படும் cupid என்றழைக்கப்படும் இறக்கையுடைய குழந்தை போன்ற சின்னம் ரோம காமக் கடவுள் ஆகும்; ரோமப்புராண கதைகளின் படி அன்பிற்கு உருவகமான பெண் கடவுள் வீனஸின் மகனாகும். இன்று அம்புகளுடனான cupid தான் பிரபலம்.
வரலாறு எதுவாயினும் வேலன்டைன் தினத்தன்று இன்றைய இளைஞர்கள் ஒரு வரம்போடு இருப்பார்களேயானால் அவர்களுக்கும் சமூகத்திற்கும், அது ஆனந்தமே. மட்டுமல்லாமல் அனைத்து தினங்களிலும் நம்மை சார்ந்து இருப்பவர்களிடமும், சக மனிதர்களிடமும் அன்போடு இருப்போமானால் வாழ்வு மகிழ்ச்சியால் நிறைவது நிச்சயம்.

நன்றி: history & wiki

February 11, 2010

'அ' 'ஆ' அசல், ஆ-ஒருவன்

ஆளாளுக்கு அசலையும் ஆயிரத்தில் ஒருவனையும் அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சி மேய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க. இதனிடையில் சினிமா விமர்சனம் செய்யும் அளவிற்கு இன்னமும் அனுபவம் போதாது என்றாலும் என் மனதில் பட்டதை பகிர்ந்து கொள்ளலாம் என்று தான் இந்த அ... ஆ.

.ஒருவன் போன்ற திரைப்படம் தமிழ்த்திரையுலகில் உருவாக செய்த முயற்சிக்கே சம்பந்தப்பட்டவர்களைப் பாராட்டலாம்.

சோழர் காலத்து பேச்சு வழக்கிற்கும், அதற்கு இணையான கலை மற்றும் காட்சியமைப்புகளுக்கும் நிச்சயம் அதிகம் சிரமப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இயக்குனருக்கும், கலை இயக்குனருக்கும் பாராட்டுக்கள்.

Gladiator உள்ளிட்ட சில ஆங்கில திரைப்படங்களைப் பின்பற்றி காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கருத்துக்கள் ஒருபுறமிருந்தாலும்; அது போன்ற காட்சியமைப்புகள் தமிழ் சினிமாவை புதிய கோணத்தில் இட்டுச்செல்ல காரணமானால் மகிழ்ச்சியே.

ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை சற்றே சொதப்பினாலும் பாடல்கள் ரசிக்கும் ரகம். நான் அதிகம் எதிர்பார்த்த மாலை நேரம் பாடல் திரைப்படத்திலேயே இடம்பெறவில்லையா இல்லை வெட்டி விட்டார்களா என தெரியவில்லை!!

சற்றே அதிகமான (குறிப்பாக ரீமாசென்) கிளாமரைக் குறைத்திருக்கலாம்!

ஆயிரத்தில் ஒருவனின் ஆரம்பத்தில் சோழர் கால வரலாறிற்கும் திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என வேறு போட்டிருக்கிறார்கள். அதோடு ஈழத்தமிழர் நிலைக்கும், திரைப்படத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை எனவும் போட்டிருக்கலாமோ என்னவோ!!

இறுதி கட்ட காட்சிகள் ஈழத்தமிழரை நினைவுபடுத்துவதை தவிர்க்கமுடியவில்லை.

.சல்

அஜீத்திற்கும், அஜீத் ரசிகர்களுக்கும் ஏகனின் தோல்விக்குப் பிறகு அசல், மனநிறைவைத் தந்திருக்கலாம். எனினும் புதிய மொந்தையில் பழைய கள் என்பதாகவே படுகிறது.

மறுபடியும் ஒரு மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்டை சரண் கையில் எடுத்திருக்கிறார்.

திரைப்படத்தில் பிரான்ஸும், மும்பையும் கதைக்களமாக இருந்தாலும் அமைக்கப்பட்ட காட்சிகள் பெரும்பாலானவை இரு நகரங்களின் அழகையும் காட்ட தவறி விட்டன.

பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் ரீமிக்சை தவிர மற்றவை அவ்வளவாக ஈர்க்கவில்லை. யூகி சேதுவும், பிரபுவும் எதற்கோ வந்துவிட்டு போகிறார்கள்.

சமீராவையும், பாவனாவையும் துரத்தும் வில்லன் கோஷ்டிகள் சட்டென நிற்பதும், பின்னணியில் ('புகை வரும் முன்னே அஜீத் வருவார் பின்னே' என்ற தோரணையுடன்) புகையுடன் அஜீத் வெளிப்படுவதும்;

உச்சகட்டத்தில் அதாங்க கிளைமேக்ஸில், ஹீரோ சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கடத்தி வைத்திருப்பதையும்(எத்தன படத்தில பாத்திருப்போம் சரண் சார்!!) பார்த்துவிட்டு அசல் வித்தியாசமான சினிமாவாகத் தெரியவில்லை.

ஒரே ஆறுதல் பஞ்ச் டயலாக்குகள் இல்லாதது தான்.

February 07, 2010

விரோதங்களை விரட்டும் இந்திய-பாக் இணை

பாகிஸ்தான் சென்று ஆட இந்தியருக்கும்,இந்தியா வந்து ஆட பாகிஸ்தானியருக்கும் விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் ஒருபுறம்.ஐ.பி.எல் ல் பாகிஸ்தானியரை ஏற்க மறுக்கும் அணிகளின் பெரும்தலைகள் மறுபுறம்.

இவை போதாதென்று பாக் மற்றும் ஆஸி கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு மும்பை சேனாவினரின் பயமுறுத்தல் என விளையாட்டிற்கு வினைகள் பலபுறமிருந்து சீறிப்பாய்கின்றன.

இவற்றிற்கு மத்தியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணாவும் பாகிஸ்தானின் குரேஷியிம் இன்று தென்னாப்பிரிக்காவில் சர்வதேச ஏ.டி.பி டென்னிஸ் இரட்டையர் பட்டத்தை வென்றிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் 2007முதல் இணைந்து ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னர் இரு முறை சர்வதேச இறுதிப்போட்டிகளில் ஆடியிருந்தாலும் இதுதான் இவர்களுக்கு முதல் வெற்றி.

நட்பினை முன்னிறுத்தி விளையாட்டுகள் நடந்த காலங்கள் மாறி இன்று நட்பினை பின்னுக்குத் தள்ளி வெற்றியை மட்டுமே வெறியாகக் கொண்டு விளையாட்டுகளை அணுகுகிறார்கள் விளையாடுபவர்கள்.

நட்பிற்கு இலக்கணமான ஒலிம்பிக் போட்டிகளில் கூட வெற்றியடைய தங்கள் வீரத்தைக் காட்டாமல் வெறி பிடித்தவர்களாய் போதை மருந்துகள் உபயோகிப்பது சகஜமாகியிருக்கிறது இன்று.

சமீபத்தில் வெற்றி கொள்ள வேண்டும் என்ற வெறியில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டக்காரர் அஃப்ரிடி அவசியமின்றி பந்தைக் கடித்து அவமானத்தைத் தேடிக் கொண்டார்.

விளையாட்டிற்கு வேட்டு வைக்கும் விரோதங்கள் இன்று பெருகி வருவதும் விளையாட்டினை விளையாட்டாக எடுக்காமல் வினையாக பாவிப்பதும் நிச்சயமாக ஆரோக்கியமானதல்ல.

இந்தியன்-பாகிஸ்தானியன் என்ற வேறுபாடோ,பாகுபாடோ நோக்காமல் தொடர்ந்து இணைந்து ஆடி வரும் போபண்ணாவிற்கும் குரேஷிக்கும் பாராட்டுக்கள்.

சேனாவினரிடமிருந்து இன்னமும் இதற்கு பதில் ஒன்றுமில்லை !!!

February 02, 2010

2.2.2000 தர்மபுரி கருப்பு தினம்

தர்மபுரி கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த நேரமது.அன்று நடந்த அந்த துயர சம்பவத்தை இன்றளவும் மறக்க இயலவில்லை.அரசியல்வாதிகளின் சீர்கெட்ட அரசியலுக்கும்,அம்மா விசுவாசிகளின் முட்டாள்தனத்திற்கும் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மூன்று இளம் கல்லூரி மாணவிகள் மடிந்ததை என்னவென்று சொல்வது.

தமிழகம் பழிவாங்கல் அரசியலுக்கு பெயர் போனது என்றால் அது மிகையல்ல. ஒருவர் ஆட்சியில் இருந்தால் அதற்கு முன் ஆட்சியில் இருந்தவரை பழிவாங்குவதும் மீண்டும் இவர்கள் வந்தால் மற்றவரை பழிவாங்குவதும் வாடிக்கையாகி போன விஷயமே.

எனினும் இத்தகைய அரசியல் காழ்ப்புணர்ச்சியை அப்பாவி பொது மக்கள் மீது காண்பித்தல் சற்றும் சரி அல்லவே.

கோவை வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி கல்விச் சுற்றுலா வந்துவிட்டு கோவை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த நேரமது. அன்று வழக்கு ஒன்றில் அம்மாவிற்கு எதிராக தீர்ப்பு எழுதப்படவே, தமிழகம் முழுவதும் பரபரப்பாகிக் கொண்டிருந்தது அப்போது.

விஷமிகள் சிலரின் சில்லறைத் தனமான புத்தியும் அம்மாவின் மீதான தீராத பற்றும்?!? வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் சென்று கொண்டிருந்த பேருந்திற்கு அன்று தீ வைக்க தூண்டியது.

அச்சம்பவத்தில் மூன்று மாணவிகள் மடிந்தனர். அவர்களை அம்மாவின் பெயரினால் பலியிட்டவர்களுக்கு 2008 வரை தண்டனை கிடைக்கவில்லை.

பேருந்து எரிப்பினால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உடன் (செவிலியர் கல்லூரி) நண்பர்கள் அரசு மருத்துவமனைக்கு விரைந்ததும், மற்ற மாணவர்களுக்கு இரவு நாங்கள் உண்ணும் உணவகத்திலிருந்து உணவு தயார் செய்து அளித்ததும், அதன் பிறகு அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நீதி கேட்டு முறையிட்டதும் இன்னமும் என் கண் முன்னில் நிற்கிறது.

அதே கறை படிந்த அரசியல்வாதிகள், அதே அரசியல் வெறி பிடித்த தொண்டர்கள் என பத்து வருடத்திற்கு பின்னரும் தமிழகம் அப்படியே தான் உள்ளது.

பன்மொழி கலைஞன் பிரகாஷ் ராஜ் அவரது சொல்லாததும் உண்மை புத்தகத்தில் கூறியது போல... அரசியல்வாதிகளுக்காக தீக்குளிப்பதும்,கூக்குரலிடுவதும்;தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை செய்வதும்...அறியாமை அல்ல முட்டாள்த்தனம் என்பது நூறு சதவீதம் உண்மையே.

என்று மனிதனாய் வாழப்போகிறோம் என்பது தான் தற்போதைய கேள்வி.

February 01, 2010

இசைப்புயல் ரஹ்மானிற்கு கிராமி விருதுகள்




 
ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்தின் இசைக்காகவும் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஜெய்ஹோ பாடலுக்காகவும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு கிராமி விருதுகளை பெற்றிருக்கிறார்.

விவரங்கள் Grammyன் இந்த தளத்தில் http://www.grammy.com/nominees?category=167  

ஆஸ்கருக்காக பரிந்துரை செய்யப்பட்ட போதும் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு பிரிவிகளிலும் ஆஸ்கர் வென்ற ஆஸ்கர் நாயகன் தற்பொழுதும் இரண்டு பிரிவுகளிலும் இசையுலகின் ஆஸ்கர் என அழைக்கப்படும் கிராமி விருதை வென்று இந்தியர்களையும், தமிழர்களையும் பெருமைப்பட வைத்துள்ளார்.

இரண்டு கிராமி விருதுகளை வென்றுள்ள இசைப்புயலுக்கு வாழ்த்துக்கள்
Related Posts with Thumbnails