March 04, 2010

என்று தணியும் இந்த இலவச மோகம்

தேர்தல் வந்திட்டா போதும் உடனே இந்தியா ஒளிர்கிறது, India Shines, இந்தியாவ ஒளிர வைப்போம் அப்பிடி இப்பிடின்னு இந்த அரசியல்வா(வி)யாதிகள் சொல்ல ஆரம்பிச்சிருவானுக.

மத்த நேரங்கள்ல எப்பிடி எங்க இருந்து எத கறக்கலாம் இல்ல யார எப்போ கவுக்கலாமுன்னு யோசிக்கிறது மட்டும் தான் பொழப்பா இருக்குது இன்றைய பெரும்பாலான அ.வியாதிகளுக்கு.

ஆமாய்யா ஆமா இந்தியா நல்லாவே ஒளிருது, இனியும் ஒளிரத்தான் போகுது இன்னைக்கு உத்திரபிரதேசத்தில நடந்தத பாத்தா.

வறுமையால் இந்தியா ஒளிர்வதும், இலவசங்களுக்காக மக்கள் மடியும் அவலமும் வாடிக்கையாகி போய் விட்டது இந்தியாவில்.

இன்று உத்திரப்பிரதேச ஆஸ்ரமம் ஒன்றில் நடைபெற்ற சமய விழாவில் இலவச துணிமணிகளையும், பாத்திரங்களையும் பெறச்சென்றவர்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 26 குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 70 பேர் மடிந்திருக்கிறார்கள்.

இலவசமாக இது தான் மிஞ்சியிருக்கிறது இறுதியில்

ஒவ்வொரு வருடமும் இந்த இலவச விநியோகம் அந்த ஆஸ்ரமத்தில் நடைபெற்று வருவதாகவும் ஆனால் இந்த ஆண்டைப் போல் ஜனக்கூட்டத்தை எந்த வருடமும் பார்த்ததில்லை என விழா ஒருங்கிணைப்பாளர் கூறியிருக்கிறார்.

அப்படியென்றால் ஒவ்வொரு வருடமும் இந்தியா எந்த அளவிற்கு ஒளிர்கிறது, வறுமையை ஒழிக்கிறது என்பது நன்கு புரியும்.

இலவசங்களை நம்பியே எத்தனை காலம் இந்தியர்கள் காலங்களை ஓட்டுவார்கள் என்பது தான் இன்னும் புரியவில்லை.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால் இலவசத்திலும் காசு பார்க்கும் கயவர்கள் தான் அதிகம்.

இலவசமாக வண்ணத் தொலைக்காட்சியை அளித்து விட்டு கேபிள் இணைப்பை மட்டும் காசு கொடுத்து வாங்க வைக்கும் வியாபார யுக்தி திராவிட முதியவர் ழகத்தை நடத்துபவருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

இலவசங்களைக் குறித்து பெயர் தெரியாத ஒருவர் கவிதை வடிவில் இன்றைய தமிழகம் என்ற தலைப்பில் எழுதியிருந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

இதனை எழுதியவர் எவர் என்று எவரேனும் கூறினால் பெரும் உதவியாக இருக்கும்.

----

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்

ஒருவர் கேட்டார் - எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?

நான் கேட்டேன் கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?

அவர் சிரித்தபடி சொன்னார் - என்னைப் பார்

1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு உறங்கிடுவேன்,
போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்,
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,

உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!

உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?

முதலாமவர் சிரித்தபடி கேட்டார் - நான் யார் தெரியுமா?

தமிழ் நாட்டுக் குடிமகன்

நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்,
சமைப்பதற்கு கேஸும் அடுப்பும் இலவசம்,
பொழுது போக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம்,
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்,

எதற்காக உழைக்க வேண்டும்?

நான் கேட்டேன் - உன் எதிர் கால சந்ததியின் நிலை என்ன?

பலமாக சிரித்தபடி உரைத்தார்,

மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 சிகிச்சையுடன் இலவசம்,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன், மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம்,
பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்,
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்,

பெண் பருவமடைந்தால் திருமண
உதவித்தொகை ரூபாய் 25000 இலவசம்,

1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,
மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,

நான் எதற்கு உழைக்க வேண்டும்!!

வியந்து போனேன் நான்,

என் உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு,
ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை!!
இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?

உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய்
இலவசம் நின்று போனால் உன் நிலை!!

உழைப்பவர் சேமிப்பைக் களவாட தலைப்படுவாய்!!!
இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்

அமைதிப்பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை

தமிழா விழித்திடு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!

நாளைய தமிழகம் நம் கையில்,
உடன்பிறப்பே சிந்திப்பாயா??
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!!

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails