April 29, 2010

ஐ.பி.எல்-என்ன கொடும இதெல்லாம்

ஐ.பி.எல் 20-20 கிரிக்கெட்டில் கிரிக்கெட் நடந்ததோ இல்லையோ ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும், 'ஆ' பாசமும் ரொம்ம்ம்ப கரிக்டா நடந்திருக்கு.

அந்த நேரங்களில் க்ளிக்கப்பட்ட சில கொடுமைகளும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஆட்டங்களை பார்வையிட வந்திருந்த சில நம்மூர் வி.ஐ.பி களும், சில அருமையான தருணங்களும் இங்கே புகைப்படங்களாய் (நன்றி ndtv)

ஐ.பி.எல்ல நானும் விடுறதா இல்ல, அதுவும் என்ன விடுறதா இல்ல... ம்ம்ம்ம்

ஹர்பஜனுடன் நீதா அம்பானி
ஷில்பா ஷெட்டி-ராஜ்
ஷில்பா ஷெட்டி-விஜய் மல்யா-ராஜ்






சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள்?!!

சச்சின், அர்ஜூன், சாரா

ஷாருக், ஆர்யன், சுகானா



April 27, 2010

ஐ.பி.எல்-3 ஒரு பார்வை

மூன்றாவது ஐ.பி.எல் சாம்பியன் நம்ம சென்னை சூப்பர் கிங்சுக்கு முதலில் வாழ்த்துக்கள். அதனை சிறப்பாக வழிநடத்திய மிஸ்டர் கூல் தோனிக்கும் பாராட்டுக்கள்.

இந்த சீசனில் சென்னை சிங்கங்களுக்கு பல சிறப்புகள் உண்டென்றால் அது மிகையல்ல.

1. மூன்று சீசனிலும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஒரே அணி

2. இறுதிப் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி

3. மூன்று சீசனிலும் 400 ற்கும் அதிகம் ஓட்டங்கள் குவித்த ரெய்னாவை சொந்தமாகக் கொண்ட அணி

4. நீல நிற உடையணிந்த அணியே வெற்றி பெறும் என்ற குருட்டு நம்பிக்கையை உடைத்த அணி.

5. மூன்று சீசனிற்கும் ஒரே அணித்தலைவரை உடைய அணி.

இப்படி பலப்பல

பிற அணிகள் குறித்து சொல்ல வேண்டுமானால் பஞ்சாப், ராஜஸ்தான் தவிர மற்ற அனைத்து அணிகளும் சிறப்பாக ஆடின என்றே கூறலாம். நான் அதிகம் எதிர்பார்த்தது டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளிடமிருந்து தான்.

டெல்லியின் தலைமை மாறியதாலோ என்னமோ!! சேவாக் முக்கியமான ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை. யுவராஜின் சொதப்பலான ஆட்டத்திற்கும் இதே காரணம் கூட ஒத்துப் போகக்கூடும். சங்கக்காராவிற்கும் எனக்கும் எந்த கருத்து மோதலும் இல்லை என யுவராஜ் கூறியிருந்தாலும் அது எந்த அளவிற்கு உண்மை என அவருக்கே வெளிச்சம். சென்னைக்கு எதிராக மட்டும் அதிரடி ஆடி சூப்பர் ஓவரில் வெற்றி ஈட்டினார்.  

டெல்லியின் டேவிட் வார்னரின் கேட்சுகள் அனைத்தும் அற்புதம், அவரது சதமும் மறக்கவியலாது. அது போன்று ராஜஸ்தானின் யூசுப் பத்தானின் அதிரடி சதமும், முரளி விஜயின் சதமும், ஜெயவர்தனேவின் சதமும் சிறப்பானவையே. இந்த நான்கு சதங்களில் யூசுப்பின் சதம் மட்டுமே அணியின் தோல்வியில் முடிந்தது.


கொல்கத்தா தல தாதா கங்குலி ஆரம்பத்தில் சரியாக ஆடாவிட்டாலும் பின்னர் அசத்தி விட்டார். அவர் எடுத்த சில கேட்சுகள் மிக அற்புதம். அதிக ஓட்டங்கள் குவித்தவர்களில் தாதாவிற்கு நான்காவது இடம். எனினும் கொல்கத்தா ஒரு அணியாக சிறப்பாக ஆடவில்லை.


ராஜஸ்தானின் தல வார்னுக்கு சரியாக அணி அமைந்தும் அதிக வெற்றிகளை பெறமுடியவில்லை. அவர்களின் பலமற்ற பந்துவீச்சு மற்ற அணிகளுக்கு சாதகமாகிப் போனது.

டெக்கான் தல கில்லி சரியாக ஆடாதது அவர்களுக்கு ஏமாற்றமாகிப் போனது. கிப்ஸும் சரிவர ஆடவில்லை. சுமன் மற்றும் சைமண்ட்ஸ் அதிரடியால் அரையிறுதி வரை நுழைந்தனர். ரோஹித் ஷர்மா ஆரம்பத்தில் சரியாக ஆடாவிட்டாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டார். பந்துவீச்சில் வாஸ் அசத்தினார்.

பெங்களூர் மிக உறுதியான அணியாக இருந்தும் அரையிறுதியில் கோட்டை விட்டு விட்டார்கள். உத்தப்பாவின் அதிரடியும், திராவிட், காலிஸின் கனக்கச்சிதமான ஆட்டமும், கும்ப்ளே, ஸ்டெயினின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது.

மும்பை இந்த சீசன் முழுவதும் அருமையாக ஆடினாலும் கேட்சை தவற விட்டது, நாயரின் தேவையற்ற ரன் அவுட், ஹர்பஜன் நான்காவதும் பொல்லார்ட் ஏழாவதுமாக ஆடவந்தது என இறுதிப் போட்டியில் அவர்களே அவர்களுக்கு சங்கு ஊதிக்கொண்டார்கள். எனினும் தொடரில் சச்சின் 618 ஓட்டங்கள் குவித்தது அடுத்த வருடம் உலகக் கோப்பையை எதிர்நோக்கியிருக்கும் இந்திய அணிக்கு நிச்சயம் நல்லதே.


இந்திய இளம் வீரர்களில் எஸ்.எஸ்.திவாரி, சுமன், ஜுஞ்சுன்வாலா, அஷ்வின், ரெய்னா, உத்தப்பா, ராயுடு, முரளி விஜய், ஜெகதி, பிரக்யான் ஓஜா, வினய்குமார், அசத்தினார்கள்.

எனினும் அனைத்து அணிகளிலும் மூத்த வீரர்களின் பங்களிப்பையும் மறுப்பதற்கில்லை. சச்சின், சவுரவ், திராவிட், கும்ப்ளே ஆகிய இந்தியரும், காலிஸ், ஸ்டெயின், பொலிஞ்சர், ஜெயவர்தனே, சைமண்ட்ஸ், வாஸ், மலிங்கா என இந்தியரல்லாதவர்களும் சிறப்பாகவே ஆடினார்கள்.

புதிய இளம் வீரர்களுக்கு ஐ.பி.எல் நல்ல அடித்தளம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எனினும் அரசியலும், ஆபாசமும் இல்லயென்றால் ஐ.பி.எல் இன்னும் சிறப்பாக இருக்குமென்பது என் கருத்து.

April 26, 2010

சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றியின் மர்மம்

டிஸ்கி: ரொம்ம்ம்ம்ப சீரியஸா இந்த பதிவ பார்க்க வந்து ஏமாற்றமும் அடைந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

பதிவர் சரவணகுமரன் அவர்களின் பதிவைப் பார்த்த பின்னர் தான் இப்படி ஒரு பதிவு போடலாமென்ற எண்ணமே வந்தது. அவரது பதிவை இந்த சுட்டியில் பார்க்கலாம்.

 
எம்.ஏ.சி மைதானம் வர போன என் மஞ்சத்துண்டுக்கும் இந்த வெற்றில பங்குண்டு என்பதை என் உடன்பிறப்புகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்... தமிழகத் தலைவர் அப்படியும் சொல்லுவாரோ!!! 


மும்பைக்கு அவுகளே சங்கும் ஊதிக்கிட்டதா பேச்சு. இறுதிப் போட்டியில் சச்சின் ஆடாமலே இருந்திருக்கலாம். சச்சின் ஆடாமல் இருந்திருந்தால் கூட ஜெயித்திருக்கக் கூடும்.

ஹர்பஜன் ஆட வந்த இடத்தில் பொல்லார்ட் ஆட வந்திருக்க வேண்டும். அவர் ஏழாவது வந்ததும் மும்பைக்கு அவர்களே சங்கு ஊதிக்கிட்டது போன்றது தான்.

நீல நிறமணிந்த அணியே வெற்றி பெறும் என்றவர்களின் பேச்சை தகர்த்த சென்னைக்கு வாழ்த்துக்கள். சென்னைக்கு விசில் போட்டுட்டோமில்ல.

April 20, 2010

கானாடுகாத்தான் முதல் கெய்ரோ வரை

நேத்து கே டிவி யில் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" படம் பார்த்திட்டு இருந்தேன். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிகம் படமாக்கப்பட்டிருந்ததால் சரி நம்ம தென்தமிழகத்தோட அழக பாத்து ரொம்ப நாளாச்சே என பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

க.கொ.க.கொ 2000த்தில் வெளிவந்த போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரமது. கண்டுகொண்டேன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதே திரைப்படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்ட வந்தது. காரணம் ராஜீவ் மேனன், ஏ.ஆர். ரஹ்மான், மம்முட்டி, ஐஸ்(வர்யா ராய்), தபு, ஷாமிலி என்ற நட்சத்திர பட்டாளத்தினால் தான். 

அப்போது எனது மைத்துனர் காரைக்குடியில் படித்துக் கொண்டிருந்தார். அவர் தான் அடிக்கடி டேய் ஐஸ பாத்தேன், ஷாமிலிய பாத்தேன் அப்படி எடுக்கிறாங்க இப்படி எடுக்கிறாங்கன்னு கடிதம் எழுதிக் கொண்டிருப்பார். தான் தேசிய விருது பெற்ற அஞ்சலி திரைப்படத்திற்கு பிறகு ஷாமிலி நடித்த முதல் படமும் இது தான் என்பதும் இதில் முக்கியமான விஷயம்.

பாரதியார் பாடலான "சுட்டும் விழிச்சுடர்" ரஹ்மானின் இசையில் ஹரிஹரனின் குரலில் அருமையாய் ஒலித்த திரைப்படம் என்பதினாலும் இது முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெற்றியடைந்த அளவிற்கு திரைப்படம் வெற்றியடையவில்லை. "எங்கே எனது கவிதை" என்ற பாடல் வைரமுத்து அவர்களின் வரியில் , சித்ரா, ஸ்ரீநிவாசின் குரலில் இன்றும் நான் அதிகம் கேட்கும் பாடல்களில் ஒன்று.

சரி விஷயத்திற்கு வருவோம்... கானாடுகாத்தான் முதல் கெய்ரோ வரைன்னு தலைப்ப வச்சிட்டு விஷயத்த சொல்லலன்னா எப்பிடி. படத்தில் ரயில்வே கேட்டை கடப்பதற்காக நிற்கும் தபுவிடம், அஜீத் காதலை சொல்லிவிட்டு அவரின் பதிலை எதிர்பார்ப்பதாக கதை செல்லும் போது "இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்" அப்படின்னு ஒரு பாட்டு வருதுங்க.அந்த பாட்ட அருமையா காரைக்குடியிலயே படமாக்கியிருக்கலாம் இயக்குனர் ராஜீவ்மேனன்.

அதுவரை காரைக்குடியை அருமையாக படமாக்கிய ரவி.கே.சந்திரன் அவர்களின் கேமரா அடுத்த சில நொடிகளில் கெய்ரோவின் பிரமிடுகளின் முன்னர் வைக்கப்படுகிறது. காரைக்குடி, கானாடுகாத்தானிலிருக்கும் ஒருவர் கெய்ரோ வரை கனவு காண்கிறார். இப்படித்தான் இன்று தமிழ் திரைப்படப் பாடல்கள் பலவும் படமாக்கப்படுகின்றன.

கதைக்கும் பாடலுக்கும் துளியும் சம்பந்தம் இல்லாமலோ அல்லது பாடலுக்கும் லொக்கேஷனுக்கும் சம்மந்தம் இல்லாமலோ தான் பாடல்கள் படமாக்கப்படுகின்றன. "சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா" என எகிப்தின், கெய்ரோவில் பாடினால் சந்தன தென்றல் வராது மண்ணெனும் சூறாவளி தான் வரும்.

இந்த பாடல் ஷங்கர் மஹாதேவனுக்கு தேசியவிருது வாங்கித்தந்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த சுஜாதா ரங்கராஜன் அவர்கள் தான் வசனகர்த்தா என்பதும் இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம்.

எது எப்படியோ இவை போன்ற பாடல்களினால் தமிழர்கள் உலகைக் காண ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்பது மறுக்கமுடியாத ஒன்று.

நல்லா எடுக்கிறாய்ங்கய்யா பாட்ட.

April 19, 2010

சென்னையின் சூப்பர் கிங் தோனி

ஒரு வழியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அரையிறுதிக்கு ஏறக்குறைய தகுதி பெற்றுவிட்டது.கடந்த இரு சீசனிலும் சற்று எளிதாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற சென்னை இந்த வருடம் அரையிறுதிக்கு தகுதி பெற ரொம்பவே சிரமப்பட வேண்டியதாகிப் போனது.

ஹெய்டன், தோனி, பத்ரிநாத், ஹஸி என மட்டைவீச்சாளர்கள் பலரும் சரியாக ஆடாததே இதற்கு காரணம்.

சில ஆட்டங்களில் மட்டைவீச்சாளர்களின் சொதப்பலினால் தோல்வியடைந்த சென்னை மற்ற சில ஆட்டங்களில் பந்துவீச்சாளர்களால் தோல்வியடைந்தது.

கடைசி ஆட்டத்தில் சென்னை, பஞ்சாப்பிற்கு எதிராக போராடி வெற்றி பெற்றிருந்தாலும் இதற்கு முன்னர் அவர்களுடனான போட்டியொன்றில் அடைந்த தோல்வியை தவிர்த்திருந்தால் இத்தனை போராட வேண்டி வந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் பஞ்சாப்பிடம் முன்னர் அடைந்த தோல்விக்கும் பதிலடி கொடுத்ததாகி விட்டது. தமிழக அணித்தலைவர் பத்ரிநாத்தும், இந்திய அணித்தலைவர் தோனியும் ஐ.பி.எல் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் குவித்த ரெய்னாவின் அதிரடியுடன் சிறப்பான வெற்றியை சென்னைக்கு அளித்திருக்கிறார்கள்.

இதுவரை சென்னை ஆடிய 14 ஆட்டங்களில் காயம் காரணமாக தோனி மூன்று ஆட்டங்களில் ஆடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஆடாமல் இருந்த மூன்று ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே சென்னை வென்றிருந்தது. மற்ற 11 ஆட்டங்களில் அவர் எடுத்த மொத்த ஓட்டங்கள் 235 மட்டுமே.

இதனையும், துவக்க ஆட்டக்காரராக ஹெய்டன் சரியாக ஆடாமல் இருந்ததையும் ஆட்டம் துவங்கும் முன் தெரிவித்து வருத்தப்பட்டவர் இறுதி ஓவரில் இரு சிக்சர்கள், ஒரு பவுண்டரி உட்பட 18 ஓட்டங்கள் எடுத்து வெற்றியடைந்த பின்னர் தனக்குள்ளேயே பேசிக்கொண்டதும், ஒரு குத்துச்சண்டை வீரரைப்போன்று விறைப்பாக நடந்து வந்ததும், அவரது தாடையில் அவராகவே ஓங்கி குத்தியதையும் என்னவென்று சொல்வதோ!!

அந்த தோனியை பாக்கணும்னா youtube ன் இந்த சுட்டிக்கு போங்க. ipl ன் காப்புரிமையால் காணொளியை இங்கு இணைக்கவியலவில்லை.

தோனி,சென்னை அணியின் மேல் அத்தனை காதல் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.(வாங்குகிற பணத்திற்கு நாங்கள் அரையிறுதிக்குக் கூட தகுதி பெறவில்லையென்றால் அது சரியல்ல என தோனியே ஆட்டமுடிவில் சொல்லிருந்தாலும்)

மூன்று ஐ.பி.எல் சீசன்களிலுமாக மொத்தம் 1316 ஓட்டங்கள் குவித்து அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற புகழுக்கு சொந்தக்காரரான ரெய்னாவின் பங்களிப்பும், சென்னைக்கு சொந்தக்காரர் முரளி விஜயின் அதிரடி சதமும், அஷ்வின் மற்றும் பொலிஞ்சரின் பந்துவீச்சும் சென்னை அரையிறுதிக்கு தகுதி பெற மற்ற சில காரணங்கள் என்பதையும் மறுக்கவியலாது.

சென்னைக்கு விசில் போடு...தோனி பாணியில் இப்படித்தான் சொல்லத்தோன்றியது தோனியின் இறுதி சிக்சரைப் பார்த்த பின்.

நன்றி: cricinfo, ndtv

April 18, 2010

மானங்கெட்ட தமிழகத் தலைமை

சென்னை விமான நிலையத்தில் வயது முதிர்ந்த அம்மையார் பார்வதி அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தமிழனத்தலைவர் என பெருமைப்பட்டுக் கொள்ளும் திராவிட முதியவர் ழகத் தலைவர் என்ன பதிலளித்தாலும் அது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்காது.

இவரையெல்லாம் பதவியில் வைத்த தமிழக மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழன் என்று சொல்வதற்கு நானும் இன்று வெட்கப்படுகிறேன்.

இனிமேல் தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்பதை "தமிழனென்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா" எனவும் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பதை "வந்தாரை வீழவைக்கும் தமிழகம்" எனவும் கூறினாலும் தகும்.

மனசாட்சி இல்லாத, இத்தாலி அம்மணிக்கு செவிமடுக்கும் தமிழகத்தலைமை இத்தகைய கடின மனமுடையது தான் என்பது முன்னரே தெரிந்திருந்தாலும் இத்தனை கேவலமாக இருக்கும் என்பது எதிர்பாராதது.

மருத்துவ சிகிச்சைக்காக வந்தவரைக் கூடவா மனசாட்சி இல்லாமல் திருப்பி அனுப்புவார்கள். அதோடு விமானநிலையத்தில் வை.கோ விடமும், பழ.நெடுமாறனிடமும் காவல்துறை நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது.


என்ன கொடும இதெல்லாம்.

இப்படியும் சில மனிதர்கள்

காலங்கள் கடந்தாலும், காட்சிகள் மாறினாலும், கணினி மயமானாலும் மனிதர்கள் நாங்கள் இன்னமும் காட்டானாகவே இருப்போம் என வரிந்துக் கட்டிக்கொண்டு இருப்பவர்களை என்னன்னு சொல்றது.

மனுஷன் கணினி உலகத்திற்கு மாறிய பின்னரும்,கணினிய வைக்கிறதுக்குக் கூட வாஸ்து பாத்து தான் வைக்கிறான் இன்னைக்கு.

இப்படித்தான் கடந்த வருடம் நண்பர் ஒருவர் அவரது கடையிலிருக்கும் கணினியை வாஸ்துப்படி வேறு இடத்தில் வைத்தார். அதன் பின்னர் இரண்டே மாதங்களில் கடையை மூடுமளவிற்கு வந்ததில் இருந்து வாஸ்து என்றால் இப்போதெல்லாம் வாயே பேசாமல் இருக்கிறார்.

பூனை குறுக்கே வந்தால் நல்ல சகுனமில்லை; பதிமூன்றாம் தேதியோ சனிக்கிழமைகளிலோ விழா ஏதும் எடுத்தால் நல்லதில்லை; நல்ல விஷயத்திற்கு கிளம்பும் முன்னர் விதவைப்பெண் வந்தால் ராசியில்லை; இப்படி எத்தனை இல்லை இல்லைகள் தான் நம்மவர்கள் கண்டறிந்து வைத்திருக்கிறார்கள்.

முந்தைய தலைமுறை தான் குருட்டு நம்பிக்கைகளுக்கும், மூட பழக்கவழக்கங்களுக்கும் அடிமைப்பட்டு கிடந்தார்கள் என்றால் இன்றைய தலைமுறை நவீன யுக்திகளின் மூலம் அதே குருட்டு நம்பிக்கைகளில் தான் மீண்டும் சிக்கிக் கிடக்கிறார்கள்.

ஒரு மின்னஞ்சலையோ அல்லது குறுந்தகவலையோ அனுப்பிவிட்டு இதனைக் குறைந்தது பத்து பேருக்காவது அனுப்பினால் நல்லது அல்லது கேட்டது நிகழும் எனவும் அப்படி அனுப்பவில்லையென்றால்   கெட்டது நிகழும் எனவும் வரும் தொல்லைகள் தினம் தினம் பெருகி வருகின்றன.

அப்படியென்றால் அனைவரும் மின்னஞ்சலையோ அல்லது குறுந்தகவலையோ மட்டும் பிறருக்கு (forward) அனுப்பிவிட்டு சும்மா இருந்தால் செலவச்சீமான்கள் ஆகிவிடலாம் போல. ஒவ்வொரு கிராமத்திலும் கணினி வசதியும் இணைய வசதியும் செய்து கொடுத்தால் போதுமானது; வறுமை ஒழிப்பு திட்டமெல்லாம் தேவையே இல்லை. இத யாரும் செய்யமாட்டேன்றாங்கப்பா.

இப்படியும் சில மனிதர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில என்பதை விட பல என்று கூட கூறலாம். தினம் தினம் மின்னஞ்சலும் குறுந்தகவலும் செய்யும் நம் சக ஜீவிகளே இதற்கு உதாரணம்.

April 13, 2010

என்னைக்கு தான் தமிழ் புத்தாண்டு?


ஏப்ரல் 14 @ சித்திரை ஒன்றில் தமிழ் புத்தாண்டு அப்படின்னு தான் சொல்லிட்டு இருந்தாங்க; ஆனா இப்போ இரண்டு வருஷமா அரசு உத்தரவால் தை ஒன்றிற்கு புத்தாண்டு மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த கத இன்னைக்கும் பல பேருக்கு தெரியாம இருக்கிறது இன்னமும் சுவாரஸ்யமான விஷயம்.

ஏற்கெனவே ஆங்கிலத்தில சோலார் காலண்டர் அப்படின்றாங்க, லூனாருன்றாங்க, கிரிகோரியன்றாங்க, மாயன் காலண்டரைக் காட்டி 2012 ல உலகம் அழியும்னு சினிமா வேற எடுத்து பீதிய கிளப்புறாய்ங்க.

பத்து மாசத்தோட ஜீலியஸ் சீசருக்கும், அகஸ்டஸ் சீசருக்கும் சேத்து 12 மாசமாக்கினதாகவும் வரலாறு சொல்லுது அப்படின்றாங்க.

ஆங்கிலத்தில் அப்படின்னா தமிழில் திருவள்ளுவர் ஆண்டு என்று வேறு குறிப்பிட்டு 31 ஆண்டுகளைக் கூட்டிச் சொல்கிறார்கள்.

நாட்காட்டி என்பது பலரது விருப்பு வெறுப்புக்கேற்ப மாற்றப்பட்டு வந்ததாகவே தெரிகிறது. நாட்காட்டிகளை மாற்றியதோடு தற்போது கொண்டாட்டங்களையும் மாற்றி வருகிறார்கள்.

எத்தனை நாட்கள் மாற்றப்பட்டாலும், எத்தனை ஆண்டுகள் மாறினாலும், மனிதன் மனிதத்திலிருந்து மாறாமலிருந்தால் எல்லா நாளும் இனிய நாளாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மலரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

புகைப்படம் நன்றி விக்கி

April 08, 2010

250 பதிவுகளும் ஏமாற்றமும்

Animated Rain And Lightning Pictures, Images and Photos

எனதருமை வலையுலக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவோடு 251 பதிவுகளைக் கிறுக்கியிறேன் (251 + 2 மீள்பதிவுகள்) என்ற சந்தோஷம் ஒருபுறமிருந்தாலும் இன்னமும் மனநிறைவு அடையவில்லை என தான் என்னால் சொல்ல முடியும்.

பெரிய அளவில் எதுவும் சாதித்துவிடவில்லை என்றாலும்; பெரிய எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளும்படி நான் இல்லை என்றாலும்; பதிவுலகமும், வலையுலகமும் முகமறியாத பல நண்பர்களையும், நாடு கடந்த நட்புகளையும் தந்திருக்கிறது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

எனினும் நான் வளர்ந்த சூழ்நிலையில் இருந்து வந்தவர்களும்; எனது வட்டாரத்தைச் சார்ந்த சில அன்பர்களும் ஆரோக்கியமான ஒரு விவாதம் என்று வரும் போது விலகிச் செல்வது, மனதை ஏதோ செய்வதை மறுக்க முடியாது.

ஆர்குட்டிலும், முகப்புத்தகத்திலும்(facebook) அரைகுறை ஆடையணிந்த அம்மணிகளின் புகைப்படங்களுக்கு ஓடோடிச் சென்று கருத்துரைக்கிற என் சமூகத்தைச் சார்ந்த பலர் கிறிஸ்தவர்களைக் குறித்த எனது சமீபத்திய பதிவிற்கு கருத்துரைக்க இன்னமும் யோசித்துக் கொண்டிருப்பது நிச்சயம் மனவருத்தம் தான்.

அதிலும் கடமைக்கென்று தான் எனது பதிவுகளில் கருத்துரைப்பதாக ஒரு அன்பர் கூறியிருந்ததும்; பின்னர் விவாதத்தில் இருந்து ஒளிந்து மாறியதும் வியப்பிற்குரியது.

எனது எழுத்துக்களை வாசிக்கிறவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்... என்னை நான் எப்போதும் நல்லவன் என்று முன்னிறுத்தியதில்லை. தவறு செய்யாத மனிதர்கள் என்று எவருமில்லை. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.

நான் சந்திக்கும் நபர்களைக் குறித்தும், கடந்துவரும் அனுபவங்களைக் குறித்தும் வலையுலகில் பகிர்ந்து கொள்வதற்குத் தான் இந்த வலைப்பூவேயன்றி விரோதங்களை விதைப்பதற்கு அல்ல.

அனைத்து அன்பர்களுக்கும் எனது பணிவான நன்றிகள். இந்த நேரத்தில் என்னை பதிவுலகில் தமிழில் எழுதும்படி ஊக்குவித்த அண்ணன் அன்பு ஜெயின் அவர்களுக்கு சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

April 07, 2010

ஜெயவர்தனே எனும் Class act


Form is temporary but the Class is permanent அப்படின்னு ஒரு வாக்கு சொல்வாங்க கிரிக்கெட்ல, அது தான் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ஜெயவர்தனே சதமெடுத்த போது நினைவிற்கு வந்தது.

என்னைக் கேட்டால் ஐ.பி.எல் 3 ல் இதற்கு முன்னர் முன்னர் எடுக்கப்பட்ட மூன்று சதங்களை விட ஜெயவர்தனேவின் சதம் தான் சிறந்தது என்பேன்.

மும்பைக்கு எதிராக யூசுப் பத்தான் அதிரடியாக எடுத்த 100 ம் (8 சிக்ஸர்கள்), ராஜஸ்தானிற்கு எதிராக முரளி விஜய் குவித்த 127 ம் (11 சிக்ஸர்கள்) blast என்றால் ஜெயவர்தனே எடுத்த சதம் class எனலாம். வார்னர் கொல்கத்தாவிற்கு எதிராக எடுத்த சதமும் சிறந்தது என்றாலும் ஜெயவர்தனேவின் சதம் அதிலும் சிறந்ததே.

ஜெயவர்தனே கொல்கத்தாவிற்கு எதிராக சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார்.  அதன் பின்னர் அவர் அடித்த 13 பவுண்டரிகளும் மிக நேர்த்தியாக, அருமையாக, கணித்து ஆடப்பட்ட shot கள். மொத்தம் 14 பவுண்டரிகளை அடித்த அவர் மூன்றே சிக்ஸர்களைத் தான் அடித்திருந்தார்.

ஐ.பி.எல் போட்டிகளில் சதமெடுத்தவர்களில் குறைவான சிக்ஸர்கள்(3) அடித்தவர் ஜெயவர்தனே தான். அதே நேரம் அதிக பவுண்டரிகளை(14) எடுத்தவரும் ஜெயவர்தனே தான். இதிலிருந்தே ஜெயா ஒரு class stroke player என்பது புரியும்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் 8000 ற்கும் மேல் ஓட்டங்கள் குவித்திருக்கும் ஜெயவர்தனே டெஸ்ட் போட்டிகளில் தான் அதிக சராசரி வைத்திருக்கிறார். 

2006 ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டெஸ்ட் ஆட்டம் ஒன்றில் அவர் குவித்த 374 ஓட்டங்கள் ஜெயசூர்யாவின் சாதனையான 340 ஓட்டங்களை முறியடித்தது இன்னமும் இலங்கைக்கான சாதனையாக தொடர்கிறது.

வாழ்த்துக்கள் ஜெயவர்தனேவிற்கு.

April 04, 2010

“கிறிஸ்தவர்கள்” நாங்கதான் ரைட் மத்தவங்க ராங்

கிறிஸ்தவர்கள் என ஒரு அடையாளத்தை தங்களுக்கென்று கொண்டு நடப்பவர்கள் செயல்படும் விதமும், அவர்கள் வாழ்க்கை முறையும் இன்று பெரும்பாலும் சுயநலம் நிறைந்ததாகவும், பொதுநலமற்றதாகவும், சிந்தனை அற்றவதாகவும் இருப்பதாகவே உணர்கிறேன்.

நாங்கள் கிறிஸ்தவர்கள்; நாங்கள் தான் உத்தமர்கள்; நாங்கள் மட்டுமே மேலோகிற்கு செல்லும் பாக்கியம் பெற்றவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பாக்கியமற்றவர்கள் என்ற நினைப்பும் ஏளனமும் இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற பலரிடமும் அதிகமாகவே நிலவி வருகிறது.

இவர்களின் இத்தகைய எண்ணத்திற்கு அவர்கள் மட்டுமே காரணமும் அல்லர். அவர்களுக்கு போதிக்கப்படுகின்ற கிறிஸ்தவ கோட்பாடுகளும், போதிக்கின்றவர்களும், அவர்கள் வாழும் சூழ்நிலையும் கூட காரணம் என சொல்லலாம்.

பிறருக்கு உதவி என்று வருகின்ற போது இன்று பல கிறிஸ்தவர்கள் பின்வாங்கிப் போவதும்; ஆலயங்களுக்கு லட்சங்களாய் காணிக்கை அளிக்கும் பலர் பிறருக்கு உதவி என வரும் போது இல்லையென கைவிரிப்பதும் சகஜமாகி வருகிறது.

முன்னொரு பதிவில் "பணம் பெருகப் பெருக பலருக்கு குணம் சிறுத்துப் போவது ஏனோ" என எழுதியிருந்தேன்; அதுவும் இவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து கண்கூடாக நான் கண்டவையே.

விவிலியத்தில் மத்தேயு 25:40 ல் கூறியிருக்கிறபடி என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்பதையும் அதே மத்தேயு 25:46 ல் கூறியிருக்கிறபடி இப்படி செய்யாதவர்கள் நித்திய ஆக்கினை அடைவார்கள் என்பதையும் இந்த கிறிஸ்தவர்கள் அறியாதவர்களா என்ன?

இன்னும் சிலர் தங்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றிக் கொண்டாலும் அவர்களின் சான்றிதழ்களில் முன்னர் பின்பற்றி வந்த அதே பழைய சமயத்தை வைத்திருப்பதன் மர்மம்... கிறிஸ்தவர்கள் (BC) என சான்றிதழில் இருந்தால் தங்களின் பணிக்கும், பணி நிமித்தம் கிடைக்கும் வசதிகளுக்கும் பங்கம் வந்து விடும் என்பது தான் அது. ஏனென்றால் அது SC இது BC. இவர்களை பெயர் கிறிஸ்தவர்கள் என கூட கூறலாம்.

வேறு சிலர் இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வண்ணம் 40 நாள் அசைவம் சாப்பிட மாட்டார்களாம்; அது என்னத்திற்கு என்று தான் புரியவில்லை. 40 நாளும் சாப்பிடாமல் இருப்பதை ஏன் கடைபிடிக்கவில்லையோ தெரியவில்லை!

அதை மற்றவர்களிடமும் சொல்லிப் பெருமைப்பட்டு கொள்கிறார்கள். விவிலியத்தில் மத்தேயு 6:17ல் "நீயோ உபவாசிக்கும் போது, மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக..."என எழுதியிருப்பதற்கு என்ன சொல்வார்களோ?

கிறிஸ்தவன் பெரியவன்; கிறிஸ்தவம் பெரியது; மற்றவர்கள் எல்லாம் யாரோ! என்ற மனப்பாங்கு உடையவர்கள் அனைவரையும் குறித்து பரிதாபப்படுகிறேன். கிறிஸ்தவம் என்பது குறித்து இயேசு பிரசிங்கித்ததாக விவிலியத்தில் காணப்படவில்லை. அவர் நீதி நியாயத்திற்காக போராடினாரேயன்றி ஒரு சமயத்தையோ, மதத்தையோ உருவாக்க வரவில்லை.

இயேசுவின் மரணத்திற்கு பின்னர் அவரது சீஷர்களுக்கு தான் முதலாவது கிறிஸ்தவர்கள் (அப்போஸ்தலர் 11:26) என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே கிறிஸ்தவர்கள் என்ற பெயர் உடையவர்கள் தான் மேலோகிற்கு செல்வார்கள் என்பதை மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகத் தான் பார்க்கிறேன்.

கிறிஸ்தவன் என்ற பெயர் உடையவனோ இல்லையோ உண்மையாயிருக்கிற எவரும், உத்தமமான வாழ்க்கை நடத்தும் எவரும் இறைவனடி சேர்வர் என்ற கோட்பாட்டையே விவிலியம் உரைக்கிறதேயன்றி சக மனிதனிடம் பகைமை பாராட்டவோ, எந்த சமயத்தாரையும் வெறுக்கவோ விவிலியம் வியாக்கியானம் செய்யவில்லை.

இதற்கு மாறாக பிற சமயத்தினரை எதிரியாக பார்ப்பதும், தாங்கள் தான் பரிசுத்தர்கள், மேலோகிற்கு போகும் பாக்கியம் பெற்றவர்கள் என சில பெயர் கிறிஸ்தவர்கள் சொல்லித் திரிவது அவர்களுக்கும், அவர்கள் வாழும் வாழ்க்கை முறைக்கும் அழகல்ல.

அப்படிப்பார்த்தால் இன்று கிறிஸ்தவர்கள் பாடவும், கேட்கவும் செய்கின்ற பல பாடல்கள் பிற சமய நம்பிக்கையுடைய பாடகர்கள் பாடினவை தான். இதற்கு என்ன சொல்லுவார்களோ!!

மதங்கள் வாழ்ந்தது போதும்; மனிதர்களை வாழ விடுங்கள்; மனிதம் வாழட்டும்.

சிலுவையில் இயேசு மொழிந்ததாக 7 வசனங்களை நினைவு கூறுபவர்கள் மலைப்பிரசங்கத்தின் போது அவர் மொழிந்த எட்டாவது வசனத்தை மறந்து போவது ஏனோ!  நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. (மத்தேயு 5:11)

April 02, 2010

ஏப்ரல் முட்டாளாக்கும் நாமே தான் முட்டாள்கள்

இன்றைய காலகட்டத்தில்  மார்ச் 31 இரவே சில அறிவாளிப் பெருமக்கள் மறுநாள் யாரை முட்டாளாக்கலாமென்று யோசித்துக் கொண்டிருப்பதும்; அதற்கான புதிய வழி முறைகளை ஆலோசனை செய்வதுமாக இருப்பதில்  ஆச்சரியமில்லை.

மற்றவரை முட்டாளாக்கிப் பார்ப்பதில் சில அறிவாளிப் இவர்களுக்கு  அத்தனை மகிழ்ச்சி. இதற்காக பந்தயம் கட்டவும் தயாராக இருக்கின்றனர். [ஓசியில் வயிற்றை நிரப்பலாமென்ற நினைப்பிலிருக்குமோ ;) ]

அனைவரையும் குறை சொல்வதற்குமில்லை. நட்பு வட்டாரத்தில் சகஜமாக மற்றவரை கேலி செய்வதும், கிண்டல் செய்வதுமாக இருக்கத்தான் செய்கின்றனர். அதனை சக நண்பர்கள் சகித்துக் கொள்ளவும் செய்கின்றனர்(வேறு வழி இல்லாமலோ என்னமோ !! )

ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை எவரும் மறுக்கவியலாது. வரம்பு மீறி ஏப்ரல் ஒன்றாம் தியதி வரிந்து கட்டிக்கொண்டு தொலைபேசியிலும், குறுந்தகவல்களிலும், மின்னஞ்சல்களிலும் பிறரை முட்டாளாக்குபவர்களை முற்போக்கு சிந்தனையில்லாத கோழைகள் என்பதாகவே கூறுவேன்.

நண்பர் விபத்திற்குள்ளாகி விட்டார் என பொய் உரைத்ததையும், நண்பர் இன்ன நேரத்திற்கு வர சொன்னார் என கூறி விட்டு காத்திருக்கச் செய்ததையும் வரம்பு மீறிய செயலன்றி வேறு என்னவென்று பொருள் கொள்வது!!

இவை போன்ற செயல்கள் சாதாரண கிண்டலுக்கு செய்யப்படினும் அவை ஏற்படுத்தும் பாதிப்பு அசாதாரணமானது என்பதும், ரணம் ஏற்படுத்துவது என்பதும் வேதனைக்குரிய விஷயம். அதிர்ச்சியை அனைவரும் சுலபமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஏப்ரல் ஒன்றாம் தியதி மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் சகஜமாக செய்யப்படும் இது போன்ற கேலி கிண்டல்கள் ஏற்படுத்தும் மன உளைச்சலும் மன வருத்தமும் பல நேரம் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

இத்தகைய மொள்ளமாரித்தனம் தொலைக்காட்சியையும் விட்டுவைக்கவில்லை. பிறரை முட்டாள்களாக்கி (அவர்களது பார்வையில்) Just For Laughs Gags என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளில் ஒளிபரப்பாகி வந்தவை இன்று இந்தியாவிலும் MTV ன் Bakra உள்ளிட்ட பல பெயர்களில் ஊரை ஏமாற்றி வருகின்றன.

மற்றவரை மனநிறைவடையச் செய்து காணும் மகிழ்ச்சியை விட்டு மற்றவரை முட்டாள்களாக்கி முகம் மலரும் இவர்கள் தான் முட்டாள்கள் என கருதப்படுவரேயன்றி இவர்கள் முட்டாள்களாக்கப்பார்க்கும் மற்றவர்கள் அல்ல.
Related Posts with Thumbnails