May 29, 2010

தமிழ்ப் படம்-ஆங்கிலப் பாடல்

அண்மையில் வந்த 'தமிழ்ப் படம்' என்ற தமிழ்ப்படம் செய்த அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமல்ல.தமிழ் திரைப்படங்களையும் வழக்கமாக தமிழ் படங்களில் அமைக்கப்படும் காட்சிகளையும் செய்த கிண்டலும் கேலியும் இப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவைக்கிறது.

அதில் குறிப்பாக நான் அதிகம் ரசித்தது... குடும்பத்தினரைத் தேடி கிராமப்புறங்களில் அலையும் கதாநாயகனிடம் குடும்பப் பாடல் என மடிக்கணினியில் கேட்க வைக்கும் அந்த ஆங்கிலப் பாடலைத் தான்.
என்னமா யோசிச்சிருக்காரய்யா இயக்குனர். ஆங்கிலப்பாடலை அதுவும் அந்த சூழ்நிலைக்கேற்றதான பொருள் கொண்ட பாடலை தேடிக்கண்டுபிடித்திருப்பதற்கு ஒரு சபாஷ்.ஆங்கிலப்பாடல் தான் வரப்போகிறது என சற்றும் எதிர்பார்க்கவில்லை நான். கேட்டவுடன் சிரிப்பு தாங்க முடியவில்லை.

...Someday someway
together we will be baby... என்கிறது பாடலின் பல்லவி.

அந்த பாடலின் ஆரம்ப இசை தான் எனது கைபேசியை அலற வைக்கும் ரிங் டோனாக நான் அதிகம் வைத்திருப்பது.(ரிங் டோனுக்கு என்னாங்க டமிலு?)


சரி இனி பாடலுக்கு வருவோம். Someday பாடல் MLTR என அறியப்படும் Michael Learns To Rock என்ற இசைக்குழுவினரின் Played On Pepper என்ற ஆங்கில இசைத்தொகுப்பிலுள்ள பாடல்.

டென்மார்க்கைச் சேர்ந்த இந்த பாப் இசைக்குழுவின் பாடல்களைத் தான் கடந்த பத்து ஆண்டுகளாக நான் அதிகம் கேட்டு வந்திருக்கிறேன். http://www.mltr.dk/ இது அவர்களது இணையதளம். அவர்களின் காதல் பாடல்கள் தான் மிக அதிக அளவில் பிரபலமானவை. குறிப்பாக பிரிவை உணர்த்தும் 'Thats Why You Go Away' பாடல் வரிகள் அதற்கு ஒரு உதாரணம். பாடலை இங்கே இணைத்திருக்கிறேன்.

Michael Learns To Rock - That's Why .mp3
Found at bee mp3 search engine
அதோடு 25 minutes, Paint My love, Complicated Heart போன்றவற்றை இரவு கண்கள் மூடிய நிலையில் கேட்டால் அதன் சுகமே தனி தான்.வைரமுத்து, ஹரிஹரன், உத்பால் பிஸ்வாஸின் காதல் வேதம் பாடல்கள் கேட்டது போன்றதொரு அனுபவம். காதல்வேதம் பாடல் குறித்து கேள்விப்படாதோர் இங்கே சொடுக்கினால் தெரிந்துகொள்ளலாம்.

2004 ல் மும்பையிலும், பெங்களூரிலும் இசைநிகழ்ச்சி நடத்தினார்கள். அப்போது நான் பெங்களூரிலிருந்தும் போக முடியாமல் ஆகிப் போனது.

இது Someday பாடலின் காணொளி.

May 26, 2010

சட்டில இருந்தா தான அசலான சுறா வரும்!!

நடிகர்! விஜய் அவர்களின் சுறா திரைப்படம் வரும் முன்னரே விமர்சனம் குவிந்தது என்றால்(இது யாருக்கும் உள்குத்து இல்லீங்கோ) திரைப்படம் வெளிவந்த பின்னர் திரைப்படத்தையும், விஜயையும், இயக்குனரையும் வாங்காதவர்களே இல்லை.விஜயின் அடுத்த படமான காவல்காரன் வரை விமர்சனம் வந்திருச்சாம்ல, மெய்யாலுமா!!!

'சுறா'வ தாக்கினதுல இயக்குனர் ஊரயே காலி பண்ணி போய்ட்டதா வேற புரளிய கிளப்புறாங்க. விஜய் ரசிகர்கள் அவர் மேல ரொம்பவே பாசமா இருக்காய்ங்க போல. இல்லன்னா இயக்குனர இப்பிடி குறி வைப்பாகளா என்ன!!

கதய கேட்டுப்புட்டு தான நடிகரும் ஒத்துக்கிட்டு இருப்பாரு. இயக்குனர் என்ன செய்வாரு. நடிகரையும் குறை சொல்றதுக்கில்ல அவருக்கு இஷ்டப்பட்டு தான் ஒத்துக்கிட்டு இருப்பாரு படத்துக்கு.

கேவலமாக விமர்சிக்கப்பட்ட சுறா உள்ளிட்ட அவரது அனைத்து திரைப்படங்களிலும் அவரால முடிஞ்சத அவர் விருப்பப்பட்டு செஞ்சிருக்காரு. ஆனா நம்ம ஒண்ண மனசில நெனச்சிக்கிட்டு அது அவர் படங்கள்ல இல்லன்னா என்ன பண்றது! நம்ம நெனக்கிறது இல்லன்னு கோபப்பட்டா எப்பிடி... சட்டில என்ன இருக்கோ அது தான அகப்பைல வரும். பாவம் அவர விட்டுருங்க.

அரசியலுக்கு வரணும் நெனச்சாச்சு, இனி எப்பிடி படம் எடுத்தா என்னன்னு அவர் அண்ணன் விஜயகாந்த் மாதிரி கூட விஜய் நெனச்சிருக்கக்க்கூடும்! ஆனா பாவம் இரண்டு பேருக்கும் அரசியல், சினிமா இரண்டிலும் நேரம் சரியில்ல போல இருக்கு... ம்ம்ம்
---------
அசல் படத்தின் சில காட்சியமைப்புகளும், கதைச் சாயலும் 2004 ல் வெளிவந்த இந்தி திரைப்படமான முசாஃபிர்(Musafir) ல் அமைக்கப்பட்டது போன்று இருக்கிறது என சில நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டேன். நேற்றைக்குத் தான் Musafir பார்க்க முடிந்தது. கதை அப்படியே அசல் போல் இல்லையென்றாலும், காட்சியமைப்புகள் அசலோடு ஒன்றிப்போவதை மறுப்பதிற்கில்லை

பிரான்ஸின் போலீஸாக வரும் மொட்டை சுரேஷ், அஜீத்தின் சுருட்டு, கடத்தல் கும்பல், சமீரா ரெட்டி என பலதும் அசல் போலவே Musafir லும் உண்டு. Musafir ல் அனில்கபூர், சஞ்சய்தத், சமீரா ரெட்டி நடித்திருக்கிறார்கள்.

அஜீத்-சரண்-யூகி சேது கூட்டணியின் கதைக்கும் Musafirன் கதைக்கும் எதாவது சம்பந்தமா! இல்லை... தற்செயலாக அமைந்ததா? தெரியவில்லை!!Musafir கூட Sean Penn, Jennifer Lopez நடித்த ஹாலிவுட் திரைப்படமான U Turn என்பதன் remake என்பது மற்றொரு சுவாரஸ்யம்.

மொத்தத்தில தமிழ் சினிமா உலகில் சிலரோட சட்டில எதுவுமே இல்ல போல இருக்கு!!!

Musafir ன் Climax


May 24, 2010

இந்திய கிரிக்கெட் அணி பயோ(ய)டேட்டா

பெயர்: இந்திய 'கிலி'க்கெட் அணி

வயது: இளம் வயது தான். (உபயம்:ஸ்ரீகாந்த்)

நிரந்தர தொழில்: கிரிக்கெட் ஆடுவது

சமீபத்திய தொழில்: குடித்து விட்டு ஆடுவது

கடந்த கால சாதனை: 1983 ல் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது

சமீபத்திய சாதனை: மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஐ.பி.எல் கோப்பையைக் கைப்பற்றியது (அட! எந்த கோப்பையா இருந்தா என்ன? எல்லாம் கோப்பை தான!! உலகத்தில வேற யாரும் வாங்காத கோப்பை இல்ல இது!!!)

கடந்த கால சோதனை: இறுதிப் போட்டிகள்

சமீபத்திய சோதனை: பவுன்சர்களும், பொண்ணுங்களும்

பிடித்தது: பார்ட்டி கொடுக்கும் எந்த போட்டியும், கிங் ஃபிஷர் ஓனர் விஜய் மல்லையாவும்

பிடிக்காதது: பார்ட்டி இல்லாத எந்த போட்டியும்

நிரந்தர எதிரி: பாகிஸ்தான்

சமீபத்திய எதிரி: ஆஸ்திரேலியா

வருங்கால ஆசை: அரசியல் கட்சி தொடங்க. (உபயம்: சித்து, அசார்)

விரும்புவது: 2011 உலகக்கோப்பை வெற்றி

விரும்பாதது: பங்களாதேஷ் போன்ற அணிகளிடம் தோல்வி

நிரந்தர தொல்லை: கிரிக்கெட் ஆடுவது

சமீபத்திய தொல்லை: கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள்
-----

எதுவும் எழுத முடியலன்னா இப்பிடி எதாவது கிறுக்கிறதா அப்பிடின்னு நீங்க திட்டுறது கேக்காம இல்ல... எனக்கும் வேற வழியில்ல. அவ்வ்வ்வ்

May 22, 2010

வில்லங்கமாகும் விமானப் பயணங்கள்


இன்று காலையில் எழுந்ததுமே மங்களூரில் விமான விபத்து என்ற துயர செய்தியைக் கேட்டதும் மிகுந்த வருத்தம் ஆகிப் போனது. மரணம் எவர்க்கும் எதிர்பாராமல் தான் நிகழ்கிறது. எனினும் இது போன்ற துயர சம்பவங்களில் மரணம் நேரும் போது நம்மையும் அது அதிரச் செய்கிறது.

அதோடு வாழ்க்கையின் மேல் ஒரு வித நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தி விட்டு செல்வது தான் கொடுமை. குறிப்பாக குழந்தைகளும், சிறுவர்களும் மரணமடைந்ததைக் கேட்டு 'என்னடா வாழ்க்கை'!! என புலம்ப வைத்துவிட்டது இன்று.

இந்த வருடத்தில் இன்றோடு ஏறக்குறைய 20 விமான விபத்துக்கள் ஆகி இருப்பதாக இந்த இணையதளம் தெரிவிக்கிறது. சமீபத்திய விமான விபத்துக்கள் அனைத்தையும் இங்கு தொகுத்து வைத்திருக்கிறார்கள். http://www.planecrashinfo.com/

கடந்த வருடம் விமான விபத்துக்கள் சகஜமாகி விடுமா என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன். அதனையும் இந்த பதிவில் இணைத்துள்ளேன்.

இவ்வுலக வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என மீண்டும் உணர்த்தியிருக்கிறது இன்றைய சம்பவம். என்னமோ போங்க :(
-----------

பிப்ரவரி 25, 2009

கடந்த இரண்டு மாதங்களினுள் இன்றோடு மூன்றாவது முறையாக விமான விபத்தை செய்திகளின் வழியே கேட்க நேரிடுகிறது.விமானப் பயணம் என்றாலே பலருக்கு கிலியை ஏற்படுத்தும். (குறிப்பாக முதல் பயணம்) இன்றைய விபத்துச் செய்தி இந்த பயத்தை மேலும் அதிகரிக்கும் என்றே கருதுகிறேன்.

ஜனவரி 15 அன்று அமெரிக்க விமானம் US Airways Airbus A320 விண்ணேறிய சில நிமிடங்களில் பறவைகள் மோதியதால் எஞ்சின் பழுதடைந்து தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.விமானியின் சாதுர்யத்தால் ஹட்சன் ஆற்றில் இறக்கப்பட்டு பயணம் செய்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


பிப்ரவரி 12,2009 ல் அமெரிக்க விமானம் Continetnal Express-3407 ஒன்று தரையிறங்க சில நிமிடங்களுக்கு முன்னர் நியூயார்க்,பஃபல்லோ என்ற நகரின் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது.அதில் விமானி உட்பட பயணம் செய்த 48பேரும் பரிதாபமாக மரணமடைந்தனர்.

விமானத்தின் பைலட் விமானத்தை குறிப்பிட்ட வரையறைக்கும் தாழ்வாக விமானத்தை இறக்கியதால் தான் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.பனிமூட்டம் காரணமாக அது ஏற்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும் முன்னர் Good night என்பது வரை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கேட்ட விமானி, விமானம் விபத்துக்குள்ளாகும் என கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டார்(விமானியின் இறுதி உரையாடல் இங்கே)

இன்று Turkish விமானம் Flight TK 1951 நெதர்லாந்,ஆம்ஸ்டர்டமில் தரையிறங்க சில வினாடிகளுக்கு முன்னர் மூன்றாக உடைந்து நொறுங்கியது.இந்த விபத்தில் 9பேர் மரணமடைந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


இப்படியாக விபத்துகள் தொடர்ந்து நிகழுமேயானால்,பேருந்து விபத்துகளை போன்று விமான விபத்துகளும் சர்வ சாதாரணமாகி விடும் என்றே தெரிகிறது.
ஹட்சன் விபத்தை பார்த்ததுமே எனக்கு விமானத்தில் பயணம் செய்ய கிலி ஏற்பட்டது.அதன் பின்னரும் இருமுறை பிரயாணம் செய்தாகிவிட்டது உயிரை கையில் பிடித்துக் கொண்டு.

என்ன செய்வது எதிர்பாராததை எதிர்பார்த்து தானே ஆக வேண்டும்!

புகைப்படங்கள் நன்றி: bbc

May 16, 2010

கோடை என்னும் கொடை

கோடைக் காலமென்றாலே பலருக்கும் பல விஷயங்கள், நினைவிற்கு வருவது இயல்பு தான். கோடை விடுமுறை, நண்பர்களின் சந்திப்பு, மதில் மேல் அமர்ந்து அடிக்கும் அரட்டைகள், ஊர் விட்டு ஊர் சென்று ஆடும் விளையாட்டுப் போட்டிகள் (குறிப்பாக கிரிக்கெட்), உறவினர்களின் வருகை, உறவினர்களின் ஊர்களுக்கு செல்லுதல், குழந்தைகளின் குதூகலம், சிறுவர்களின் ஆரவாரம் என பலதும் சொல்லிப்போகலாம்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்பாலானவர்களுக்கு கோடை விடுமுறை இப்படித்தான் இருந்தது என்றே கருதுகிறேன். ஆனால் இன்றைய தலைமுறைக்கு கோடைக்காலம் அந்த விதமான ஒரு அனுபவத்தை அளிக்கிறதா என்பது கேள்விக்குறி தான்.

ஆண்டு முழுவதும் காலையில் பள்ளிக்கூடமும், பாடபுத்தகமும் என்றால் மாலையில் சிறப்பு வகுப்புகள், Tution வகுப்புகள் என பரபரப்பாக இருக்கிறார்கள் இன்றைய இளம் சமுதாயத்தினர். இது போதாதென்று வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளிலும் கூட Extra வகுப்புகள் என்ற பெயரில் பாடங்கள் அவர்களுக்குள் திணிக்கப்படுகின்றன.

பள்ளிப் பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்ற நிலைமை தான் இன்று தொடர்கிறது. வாழ்க்கைக்கு உகந்த பாடங்கள் பயிற்றுவிக்கப்படுவதோ அல்லது மாணவர்கள் விரும்பும் பாடங்களில்  கவனம் செலுத்தவோ கிடைக்கும் வாய்ப்புகள் வெகு குறைவே. கோடை விடுமுறைகளிலேயே பெரும்பாலான பெற்றோர்களால் பிள்ளைகள் அடுத்த கல்வி ஆண்டிற்கான பாடங்களில் கவனம் செலுத்த கட்டாயப்படுத்துகிறார்கள்.

ஏட்டுச் சுரைக்காய் வாழ்க்கைக்கு உதவும் தான் ஆனால் அது மட்டுமே வாழ்க்கைக்கு உதவாது என்பதையும் பெற்றோர்கள் உணர வேண்டும்.

கட்டாயப்படுத்துதலும், மாணவர்கள் மேல் சுமத்தப்படும் அதிக சுமையும், விடுமுறைகளைக் கூட விடுமுறைகளாக செலவழிக்க அனுமதி மறுக்கப்படுதலும் இன்றைய இளம் சமுதாயத்தினரின் மனநிலையை வெகுவாக பாதிக்கிறது என சொல்லலாம்.

இது ஒருபுறமென்றால் இளைய சமுதாயமே அவர்கள் நன்மைக்கு தடையாக இருப்பதும் இருக்கத்தான் செய்கிறது. தங்கள் மூதாதையர் ஊர்களுக்கு செல்வதென்றால் அறவே பிடிப்பதில்லை பலருக்கு. 'அது வில்லேஜ் மம்மி' 'அங்க எல்லாம் எப்பிடி இருக்கிறது' என ஆரம்பித்து விடுவார்கள். இதனால் கிராமங்களில் இருந்தும், அங்குள்ள உறவுகளிடமிருந்தும் கற்று கொள்ளும் வரங்களும் இவர்களுக்கு கிடைப்பதில்லை.

மறுபுறம் பிறருடன், உறவினர்களுடன், நண்பர்களுடன், குடும்பத்தினருடன் ஏன் பெற்றோர்களுடன் கூட சரிவர பேசுவதற்கும் தங்கள் விருப்பு வெறுப்பை பகிர்ந்து கொள்வதற்கும் வாய்ப்புகள் அமையாதது இன்றைய மாணவ சமுதாயத்திற்கு நிச்சயம் ஆரோக்கியமானது அல்ல. பள்ளிக்கூடம், பாடம், வெற்றி இவை மட்டுமே அவர்கள் முன்னிறுத்தப்படுகிறது.

இவைகள் தொடர்வதால் தான் பிரச்சினைகள் தோல்விகள் என வரும் பொழுது அதனை எதிர்கொள்ளும் மனதைரியம் இன்றைய தலைமுறைக்கு வராமல் போய் விடுகிறது. சிறிய தோல்வி ஏற்பட்டால் கூட அதனை எதிர்கொள்ள தைரியமில்லாமல் தற்கொலை வரை செல்ல அவர்களது மனம் தள்ளப்படுகிறது.  மற்றவர்களின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் எத்தனையோ இருக்கையில் காகிதங்கள் மட்டும் அவர்கள் காதலாகிப் போனது கவலைக்குரிய ஒன்று; அதனை காலத்தின் கட்டாயம் என சிலர் கூவுவதும் காதில் விழாமலில்லை.

இன்றைய கோடை விடுமுறைகளில் குழந்தைகளுடன் அமர்ந்து அவர்கள் விருப்பு வெறுப்புகளை கேட்டறியவும், அவர்கள் பகிர்வதை செவிமடுத்து கேட்கவும் தயாராக இருப்பவர்கள் எத்தனை பெற்றோர்கள் என்பது தெரியவில்லை.

குழந்தைகளை கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு அனுப்பலாமா? சங்கீதம் படிக்க அனுப்பலாமா? அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகளுக்கு அனுப்பலாமா என ஆலோசனை செய்யும் பெற்றோர்கள் தான் இன்று அதிகம். என்னங்க... பக்கத்து வீட்டுப் பொண்ணு என்னமா ஆடுறா தெரியுமா! அந்த வீட்டுப் பொண்ணு என்னமா பாடுறா தெரியுமா! நம்ம வீட்டுக் கழுதையும் இருக்குதே அப்படியென்று ஒப்பிட்டு பேசுவதையும் சரளமாக கேட்க முடிகிறது.

முதலில் பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவதை பெற்றோர்கள் நிறுத்தி விட்டு, தங்கள் குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை ஊக்குவிக்கப் பழகினாலே பிற்காலத்தில் குழந்தைகளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய அது அடித்தளமாக இருக்கும். மட்டுமல்லாமல் கோடை விடுமுறைகளில் குழந்தைகளுடன் அமர்ந்து மனம் விட்டு பேசினாலே சுடும் கோடை குழந்தைகளுக்கும், வீட்டிற்கும், வருங்காலத்திற்கும் ஒரு கொடையாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இல்லையென்றால் கொடை போன்ற இந்த கோடைக்கால தருணத்தை பாடையேற்றிய குற்றம் பெற்றோர்களையேச் சாரும்.

May 15, 2010

நான் வியந்த ஷங்கர் மஹாதேவன்

சங்கமம் திரைப்படத்தில் இடம்பெற்ற "வராக நதிக்கர ஓரம் ஒரே ஒரு பார்வ பாத்தேன்" பாடலை ஆரம்பத்தில் கேட்ட போது என்னடா தமிழ் திரையுலகில இப்படி ஒரு குரலா என வியந்ததுண்டு. அதே பாடலின் முதல் சரணத்தில் 'காவேரிக் கரையில் மரமாய் இருந்தால் வேருக்கு யோகமடி' என உச்ச ஸ்தாயியில் அவர் பாடியதை இப்போது கேட்டாலும் வியக்கிறேன். அந்த பாடலை கீழே இணைத்துள்ளேன்

அண்மைக் காலத்தில் ரஹ்மானிற்கு அடுத்தபடியாக உச்ச ஸ்தாயியில் பாடுபவர்களில் நான் அதிகம் ரசித்தது ஷங்கர் மஹாதேவனைத் தான். ரஹ்மானே பலமுறை அவரைப் பாராட்டியிருக்கிறார்.
TamilBeat.Com - Varaaga Nadhi .mp3
Found at bee mp3 search engine

சில தினங்கள் முன்னர் அந்த பாடலை மீண்டும் கேட்கும்படியான ஒரு வாய்ப்பு கிடைக்கவே ஷங்கர் மஹாதேவனை குறித்து எழுதலாமே என்ற எண்ணம் தோன்றியது.

இந்த பாடலில் ஷங்கருக்கு சொல்லுபடியான புகழ் கிடைத்தாலும் அதற்கு முன்னரே ஒரே மூச்சில் தான் பாடிய Breathless என்ற POP பாடலின் மூலம் பாலிவுட்டில் பிரபலமாகியிருந்தார் அவர். தமிழ் திரையுலகிலும், பாலிவுட்டிலும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.
Shankar Mahadevan - Breathless
Found at bee mp3 search engine
1999 ல் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படத்தின் 'என்ன சொல்ல போகிறாய்' பாடலுக்காகவும் அதன் பின்னர் மூன்று இந்தித் திரைப்பட பாடல்களுக்காகவும் தேசிய விருதைப் பெற்றிருக்கிறார்.

என்னடா இந்திக்காரர் ஒருத்தர் சரியான தமிழ் உச்சரிப்போட மிகத்தெளிவா பாடுறாரேன்னு ரொம்ப காலமா எனக்கு சந்தேகம் இருந்தது. பக்கா ஐயர் குடும்ப சூழ்நிலையில வளர்ந்தவர் அப்படின்ற விஷயம் அப்புறம் தான் தெரிய வந்தது. பாலக்காட்டில் பிறந்தாலும் மும்பையிலேயே வளர்ந்ததால் இந்தியின் பக்கம் அவரது பார்வை அதிகம் இருப்பதில் ஆச்சரியமில்லை.

எஹ்சான் மற்றும் லாய் என்ற இருவருடன் இணைந்து இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ஷங்கர் மஹாதேவன். அவர்கள் இசையமைத்த திரைப்படங்களில் ஆளவந்தான், kal ho na ho, kabhi alvida naa kehna, Dil chahta hai, Mission Kashmir, Rock On, Taare Zameen Par குறிப்பிடும்படியானவை.

ஷங்கர்-எஹ்சான்-லாய் ஜூலை 16, 2010 முதல் உலக அளவில் இசைப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்களாம் . மேலும் தகவல்களுக்கு அவர்களது இணையதளமான http://www.shankarehsaanloy.com/ பாருங்கள்.

May 10, 2010

பவுன்ஸரா அவ்வ்வ்இது வேற யாருமில்ல; தோனியும் யூசுப் பத்தானும் தான்... . யாரும் இத சீரியஸா எல்லாம் எடுக்கப்பிடாது.

இந்தியால கிரிக்கெட் டீம் இருக்குதா!!!

பவுன்சருக்கு எகிறும் கவுதம் கம்பீர்

முரளி விஜய் என்னமா ஆடுறான்யா ; தோனி அடிக்கிறான் பார்ரா சிக்சர்; ஆஹா செமையா இருக்கில்ல ஆட்டம் ... கிங்கில்ல... சென்னை சூப்பர் கிங்கில்ல என ஆர்ப்பாட்டம் செய்து இரு வாரங்கள் நிறைவடையவில்லை அதற்குள்ளாக சொந்த செலவில் சூனியம் வைத்திருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் அணியினர்.

ஐ.பி.எல் குறித்து ஆஹா! ஓஹோ! என வாயைப் பிளந்து கொண்டு இருந்தது தான் மிச்சம். இப்போ உலக அரங்கில இந்திய அணியோட முதுகை பிளந்துட்டாங்கல்ல... இதுக்கு என்ன சொல்லப் போற அப்பிடின்னு நண்பர்கள் ஏளனமாய் பார்க்க தொடங்கி விட்டார்கள்.

T20 உலகக்கோப்பை போட்டியில் பிற அணிகளின் அருமையான ஆட்டங்களுக்கும், வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான மேற்கு இந்தியத்தீவு மைதானங்களின் ஆடுகளங்களுக்கும் ஈடுகொடுக்கமுடியாமல் ஆட்டம் கண்டு இருக்கிறது இந்திய அணி.

பணம் கொழித்த ஐ.பி.எல் ல் திறம்பட ஆடிய பலர் சர்வதேச போட்டிகளில் சொதப்பியது நிச்சயம் நன்மைக்கே என்று கூட சொல்லலாம். ஐ.பி.எல் மூலம் (இந்திய) ஆட்டக்காரர்கள் அடைந்தது பணம் மட்டுமே தானே ஒழிய ஆட்டத்திறன்களை அல்ல என்ற உண்மையாவது வெளிவர காரணமாகியிருக்கிறது இந்த தோல்விகள்

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் தோனி அளித்த பேட்டியிலிருந்தே அவரும் அணியினரும் என்ன விதமான மனநிலையில் இருக்கிறார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. தோல்விக்கு என்ன காரணம் சொல்லலாம் என தோனி தடுமாறியது வெகு நாட்களுக்கு பின்னர் தற்போது தான்.

எனினும் இந்தியாவில் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்காததும் ஒரு காரணம் என கூறி தப்பிக்க பார்ப்பது சற்றும் நியாயமல்லவே. ஒரு அணித்தலைவராக இருப்பவர், தென்னாப்பிரிக்காவில் முதல் T20 உலகக்கோப்பையை பெற்றுத்தந்தவர், அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவில் ஐ.பி.எல்-2 ன் போட்டிகளிலும் ஆடியவருக்கு இந்தியாவில் என்ன விதமான ஆடுகளங்களை அமைக்க வேண்டுமென்று தெரியாதா? இல்லையென்றால் மறைமுகமாக இந்திய கிரிக்கெட் ஆணையத்தை சாடுகிறாரா?

இது போதாதென்று சிம்பாப்வே, இலங்கை அணிகளுடனான முத்தரப்பு தொடருக்கு மூத்த ஆட்டக்காரர்கள் பலரும் விலக்கி வைக்கப்பட்டிருப்பது என்னத்திற்கு என்பதும் புரியவில்லை. இப்பவே இந்த ஆட்டம் ஆடுறவங்க இனி என்ன அழுகுணி ஆட்டம் ஆடுவாங்களோ தெரியல.அந்த அணியிலும் ராபின் உத்தப்பா சேர்க்கப்படாதது ஆச்சரியமே.

தேர்வுக்குழு வச்சிருக்காங்களா இல்ல சோர்வா இருக்கிறவங்கள கண்டுபிடிக்கிறதற்காக சோர்வுக்குழு ஏதும் ஸ்ரீகாந்த் தலைமையில வச்சிருக்காங்களான்னு தெரியல.

'இந்தியால கிரிக்கெட் டீம் இருக்குதாடா' அப்பிடின்னு கேக்குற ஒரு காலம் வந்தா இன்னும் நல்லா இருக்கும்னு நண்பன் சொல்றான். அதுக்கு அவன் சொல்லும் காரணம்... கிரிக்கெட்டில் அரசியல்வாதிகளின் குறுக்கீடு, வீரர்கள் தேர்வில் நடக்கும் அரசியல், சூதாட்டம், பணக்கொழுப்பு, அகங்காரம் மற்றும் கிரிக்கெட் அல்லாத விளையாட்டுகளுக்கு இந்தியாவில் கொடுக்கப்படும் மரியாதை. அவன் சொல்றதும் நியாயமாத் தான் இருக்குது... ம்ம்ம் பாக்கலாம்.

இப்பிடி குனிய வைச்சிட்டானுகளே

May 04, 2010

தலித்-அமைச்சர் ராசா-கலைஞர்

மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசாவும் அவரது அமைச்சரவையும், அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டும் தான் தமிழகத்தின் எதிர்கட்சிகளுக்கு தற்போது கிடைத்திருக்கும் விவாதப்பொருள் .

அது ஒருபுறமிருக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முக்கிய அங்கம் வகிப்பவரும், தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் மந்திரி ஆ.ராசா ஒரு தலித் என்பதால் தான் அவரது பதவிக்கு குறிவைக்கப்படுகிறது என்ற ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இன்னும் எத்தனை காலம் தான் இது போன்ற ஜாதி ரீதியான கருத்து அரசியல் செய்வார்களோ தெரியவில்லை. அவர் ஊழல் செய்தாரா இல்லையா என்பதை அறிய முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பதை அறிவதை விட்டுவிட்டு இது போன்ற கருத்து அரசியல் தேவை தானா என கருதத் தோன்றுகிறது. 

அவர் தலித் என்பது ஒருபுறமிருந்தாலும் அவர் மூலம் கட்சிக்கும், கழகத்திற்கும் கிடைக்கும் லாபம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற ஐயம் தானோ என்னமோ இவர்களை இப்படியெல்லாம் பேசச் செய்கின்றது!!

இதனைக் குறித்து சிந்திக்கையில் 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது

'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே"
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்

சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி

"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே"
நம் நாட்டிலே

May 02, 2010

தமிழன் எனும் அந்நியன்

தமிழன் என்றாலே பலருக்கும் இன்று இளக்காரமாகிப் போய் விட்டது. இன்றைய சூழ்நிலையில் தமிழனை மதிக்கிற பிற மாநிலத்தவர்கள் வெகு குறைவு;மாறாக மிதிக்கிறவர்களே அதிகம்.கேரளத்துக்காரன் பாண்டிங்கிறதும், முல்லைப்பெரியாத்துல பிரச்சின பணறதும், கர்நாடகத்தில இருக்கிறவன் தண்ணி தர மறுக்கிறதும்,மத்தவங்க மதராஸின்னு கேவலமா பாக்கிறதும் இன்னும் தொடரத்தான் செய்யுது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் ல் கூட சென்னை அணியை மும்பை ஊடகங்களும், வடமாநில ஊடகங்களும் சரிவர கண்டு கொள்ளவில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. இறுதிப்போட்டியில் சென்னை வென்ற பின்னர் கூட அதனை அத்தனை பெரிதாக அங்குள்ள ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சிகள் கண்டுகொள்ளவில்லை என்பதும் உண்மையே.

இந்திய அணித்தலைவர் தோனியை அணித்தலைவராக பெற்ற பின்னரும் சென்னை அணிக்கு இந்த நிலைமை என்றால் தமிழகத்தை சார்ந்தவர் எவரேனும் அணித்தலைவராக இருந்திருந்தால் எப்படியோ தெரியவில்லை.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற வாக்கிற்கேற்ப தமிழனின் இந்நிலைமைக்கு பெரும்பாலும் தமிழனே காரணமோ என்று கூட கருதத் தோன்றுகிறது.

பிரச்சினை என்று வரும் பொழுது, கர்நாடக வாழ் தமிழர்கள் பலர் தாங்கள் பேசும் சரளமான கன்னடத்தினால் கன்னடர்களாக மாறுவதுமுண்டு. நாம் அவர்களிடம் தமிழில் பேசினால் கூட அவர்கள் தமிழ் தெரியாதது போன்று தான் காட்டுவார்கள்.

மும்பையில் தமிழனுக்கு மதராஸி என்று தான் பெயர். மதராஸி என்றாலே கேவலமாகத்தான் பார்க்கிறார்கள் அங்கு. அதற்கு நம்மவர்கள் நடந்து கொண்ட நடந்து கொ(ல்லு)ள்ளும் விதமும் கூட காரணம்.

மும்பையைக் குறித்து அறிந்திருப்பவர்கள் தாராவியைக் குறித்து அறியாமலிருக்க முடியாது. அங்கு குடியிருப்பவர்களில் குஜராத் மற்றும் உ.பி மாநிலத்தவர்கள் உண்டெனினும் தமிழர்கள் சற்று அதிகமே. தமிழரின் புகழுக்கு தமிழர்கள் அங்கு வாழும் வாழ்க்கை முறையும் அவர்களது சுற்றுப்புறமுமே சாட்சி. இதன் காரணம் கூட மதராஸி என்றாலே வெறுத்துப் பார்க்கும் நிலைமை உருவாகியிருக்கக் கூடும்.

மற்றொரு காரணம் இந்தி மொழி. பிற மாநிலங்கள் பெரும்பாலானவற்றில் இந்தி மொழி கற்பித்துக் கொடுக்கப்படும் போது தமிழ்நாட்டிலேயோ நிலைமை தலைகீழ். இங்கு இந்தி திணிப்பிற்கு எதிராக ரயில் மறிப்பும் போராட்டங்களும் நடத்திய தமிழ் மகான்கள் அல்லவா நம் திராவிடர்கள்.

இந்தியாவின் பிற பகுதிகள், மும்பை, வட மாநிலங்கள் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு பிழைப்பிற்காகச் செல்லும் தமிழர்கள் இந்தி தெரியாமல் படும் பாடு சொல்லி மாளாது. இந்தியர்களுக்கு இந்தி தெரியவில்லையா என வளைகுடா நாடுகளில் கேவலமாக பார்ப்பர். இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்களை குறிப்பாக கழகத் தலைகளை வெளியூர் அல்லது வெளிநாடு போய் வேலை பார்க்கச் சொல்ல வேண்டும். அப்ப தெரியும் இந்தியின் பயன்பாடு.
இந்திராகாந்தி, காமராஜரை அரசியல் மற்றும் ஆட்சியமைப்பு காரணங்களுக்காக டெல்லிக்கு அழைத்தார் என்றால் இன்று (ஷோ)சோனி(நீ)யாகாந்தி அழைக்காமலே பதவிக்காக டெல்லியில் தவம் கிடக்கும் கருணாநிதி போன்றவர்களின் பதவி வெறியும் தமிழனை தலைகுனிய வைக்கிறது.

இவைகள் போதாதென்று இலங்கைத் தமிழர் விஷயத்தில் தமிழகத்திற்குள்ளேயே ஒருமித்த கருத்து இல்லாத நிலை தான் இன்றும் நிலவுகிறது. நமக்குள்ளேயே ஒற்றுமையில்லாத நிலையில் மற்றவர்கள் எப்படி நம்மை ஏற்றுக்கொள்வார்கள்.

இப்படியாக தமிழன் இன்னமும் அந்நியனாகவே பார்க்கப்படுவதற்கு நம்மவர்களும் பலவிதத்தில் காரணம் என்பது மிக மிக வருத்தப்படக்கூடிய விஷயம்.
Related Posts with Thumbnails