May 02, 2010

தமிழன் எனும் அந்நியன்

தமிழன் என்றாலே பலருக்கும் இன்று இளக்காரமாகிப் போய் விட்டது. இன்றைய சூழ்நிலையில் தமிழனை மதிக்கிற பிற மாநிலத்தவர்கள் வெகு குறைவு;மாறாக மிதிக்கிறவர்களே அதிகம்.கேரளத்துக்காரன் பாண்டிங்கிறதும், முல்லைப்பெரியாத்துல பிரச்சின பணறதும், கர்நாடகத்தில இருக்கிறவன் தண்ணி தர மறுக்கிறதும்,மத்தவங்க மதராஸின்னு கேவலமா பாக்கிறதும் இன்னும் தொடரத்தான் செய்யுது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் ல் கூட சென்னை அணியை மும்பை ஊடகங்களும், வடமாநில ஊடகங்களும் சரிவர கண்டு கொள்ளவில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. இறுதிப்போட்டியில் சென்னை வென்ற பின்னர் கூட அதனை அத்தனை பெரிதாக அங்குள்ள ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சிகள் கண்டுகொள்ளவில்லை என்பதும் உண்மையே.

இந்திய அணித்தலைவர் தோனியை அணித்தலைவராக பெற்ற பின்னரும் சென்னை அணிக்கு இந்த நிலைமை என்றால் தமிழகத்தை சார்ந்தவர் எவரேனும் அணித்தலைவராக இருந்திருந்தால் எப்படியோ தெரியவில்லை.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற வாக்கிற்கேற்ப தமிழனின் இந்நிலைமைக்கு பெரும்பாலும் தமிழனே காரணமோ என்று கூட கருதத் தோன்றுகிறது.

பிரச்சினை என்று வரும் பொழுது, கர்நாடக வாழ் தமிழர்கள் பலர் தாங்கள் பேசும் சரளமான கன்னடத்தினால் கன்னடர்களாக மாறுவதுமுண்டு. நாம் அவர்களிடம் தமிழில் பேசினால் கூட அவர்கள் தமிழ் தெரியாதது போன்று தான் காட்டுவார்கள்.

மும்பையில் தமிழனுக்கு மதராஸி என்று தான் பெயர். மதராஸி என்றாலே கேவலமாகத்தான் பார்க்கிறார்கள் அங்கு. அதற்கு நம்மவர்கள் நடந்து கொண்ட நடந்து கொ(ல்லு)ள்ளும் விதமும் கூட காரணம்.

மும்பையைக் குறித்து அறிந்திருப்பவர்கள் தாராவியைக் குறித்து அறியாமலிருக்க முடியாது. அங்கு குடியிருப்பவர்களில் குஜராத் மற்றும் உ.பி மாநிலத்தவர்கள் உண்டெனினும் தமிழர்கள் சற்று அதிகமே. தமிழரின் புகழுக்கு தமிழர்கள் அங்கு வாழும் வாழ்க்கை முறையும் அவர்களது சுற்றுப்புறமுமே சாட்சி. இதன் காரணம் கூட மதராஸி என்றாலே வெறுத்துப் பார்க்கும் நிலைமை உருவாகியிருக்கக் கூடும்.

மற்றொரு காரணம் இந்தி மொழி. பிற மாநிலங்கள் பெரும்பாலானவற்றில் இந்தி மொழி கற்பித்துக் கொடுக்கப்படும் போது தமிழ்நாட்டிலேயோ நிலைமை தலைகீழ். இங்கு இந்தி திணிப்பிற்கு எதிராக ரயில் மறிப்பும் போராட்டங்களும் நடத்திய தமிழ் மகான்கள் அல்லவா நம் திராவிடர்கள்.

இந்தியாவின் பிற பகுதிகள், மும்பை, வட மாநிலங்கள் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு பிழைப்பிற்காகச் செல்லும் தமிழர்கள் இந்தி தெரியாமல் படும் பாடு சொல்லி மாளாது. இந்தியர்களுக்கு இந்தி தெரியவில்லையா என வளைகுடா நாடுகளில் கேவலமாக பார்ப்பர். இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்களை குறிப்பாக கழகத் தலைகளை வெளியூர் அல்லது வெளிநாடு போய் வேலை பார்க்கச் சொல்ல வேண்டும். அப்ப தெரியும் இந்தியின் பயன்பாடு.
இந்திராகாந்தி, காமராஜரை அரசியல் மற்றும் ஆட்சியமைப்பு காரணங்களுக்காக டெல்லிக்கு அழைத்தார் என்றால் இன்று (ஷோ)சோனி(நீ)யாகாந்தி அழைக்காமலே பதவிக்காக டெல்லியில் தவம் கிடக்கும் கருணாநிதி போன்றவர்களின் பதவி வெறியும் தமிழனை தலைகுனிய வைக்கிறது.

இவைகள் போதாதென்று இலங்கைத் தமிழர் விஷயத்தில் தமிழகத்திற்குள்ளேயே ஒருமித்த கருத்து இல்லாத நிலை தான் இன்றும் நிலவுகிறது. நமக்குள்ளேயே ஒற்றுமையில்லாத நிலையில் மற்றவர்கள் எப்படி நம்மை ஏற்றுக்கொள்வார்கள்.

இப்படியாக தமிழன் இன்னமும் அந்நியனாகவே பார்க்கப்படுவதற்கு நம்மவர்களும் பலவிதத்தில் காரணம் என்பது மிக மிக வருத்தப்படக்கூடிய விஷயம்.

13 comments:

Chitra said...

தமிழன் என்று சொல்லடா..... தலை நிமிர்ந்து நில்லடா.... என்ற நிலை மீண்டும் விரைவில் வர வேண்டும்.

கிறிச்சான் said...

தமிழரின் புகழுக்கு தமிழர்கள் அங்கு வாழும் வாழ்க்கை முறையும் அவர்களது சுற்றுப்புறமுமே சாட்சி ////நம்மவர்களும் பலவிதத்தில் காரணம் என்பது மிக மிக வருத்தப்படக்கூடிய விஷயம்///


ஹிந்தி தெரியாம மும்பையிலும் டெல்லியிலும் நானும் நிறைய கஷ்ட்டப் பட்டிருக்கேன்...நம் தலைவர்கள் தான் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபக் கேடு!!!

haja sulthan said...

ஹிந்தி நமக்கு தேவைஇல்லை. நமது மொழிதன் நமக்கு முக்கியம். ஹிந்தி தெரியாது என்றால் ஆங்கிலத்தில் பேசுவது நல்லது.

பெருங்காயம் said...

நமக்குள் ஒறறுமையில்லை என்பது முற்றிலும் உண்மை. செக்கு மாடுகாளியிட்டோம். இந்தி மொழி கல்லாமையும் ஒரு காரணம் என்று சொல்வது என்னை பொருத்த வரை தவறே.
"இங்கு இந்தி திணிப்பிற்கு எதிராக ரயில் மறிப்பும் போராட்டங்களும் நடத்திய தமிழ் மகான்கள் அல்லவா நம் திராவிடர்கள்" இந்தி திணிப்பு என்று நீங்களே கூறிவிட்டீர்கள்.இங்கு இந்தி திணிப்பை சரி என்றhல், இலங்கையில் சிங்கள திணிப்பு சரியா? அவர் அவர் தமக்குத் தேவையான மொழியை கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் வடநாட்டில் வேலை செய்ய , உங்களுக்கு இந்தி தேவை என்பதற்காக நாங்களும் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டுமா? இது எனது கருத்தே.

எட்வின் said...

@ Chitra
கிறிச்சான்

நன்றி.
---------------------
கிறிச்சான் said...

//நம் தலைவர்கள் தான் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபக் கேடு!!!//


கண்டிப்பாக

எட்வின் said...

haja sulthan said...

//ஹிந்தி நமக்கு தேவைஇல்லை. நமது மொழிதன் நமக்கு முக்கியம். ஹிந்தி தெரியாது என்றால் ஆங்கிலத்தில் பேசுவது நல்லது//

தேவையில்லை தான். எனினும் பிற மொழியொன்றை அதுவும் "இந்தி" யாவில் பரவலாக பேசப்படும் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதில் தவறொன்றும் இல்லை தானே அன்பரே

எட்வின் said...

விஜய் said...

//நீங்கள் வடநாட்டில் வேலை செய்ய , உங்களுக்கு இந்தி தேவை என்பதற்காக நாங்களும் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டுமா?//

இந்தி கட்டாயப்பாடமாக்கப்பட வேண்டும் என நான் சொல்லவில்லை. இந்தி விருப்பப் பாடமாக இருக்கலாம் என்று தான் விரும்புகிறேன்.

கிறிச்சான் said...

ஆங்கிலம் படிப்பது உங்களுக்கெல்லாம் அவமானமாகப்படவில்லை???

நீங்கள் வட நாட்டில் படிப்பதற்காக நாங்கள் என் படிக்க வேண்டும் என்கிறீர்கள்?
குவைத் நாட்டை சேர்ந்தவன் ,கத்தார் நாட்டவனோடு அரபி மொழியில் பேசுகிறான்,
இந்திய நாட்டை சேர்ந்த இருவர்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டியக் கட்டாயம்.
வெவ்வேறு தீவுகளை சேர்ந்த பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் 'டேகாலு" என்ற போது மொழியில் பேசுகிறார்கள்.

நமக்கு தமிழன் என்ற உணர்வுடன், இந்தியர்கள் என்று உணர்வும் கலந்து இருப்பது நலம்.

தயாளன் said...

நம்மவர்களுக்கு தாய்மொழியின் அருமை தெரியாது. இப்போது ஆங்கிலத்தைத் துரத்திக்கொண்டிருப்பதுபோல் ஹிந்தி படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டால் அதைத் துரத்திக்கொண்டு போவார்கள். இப்போதும் விரும்பினால் ஹிந்தி படிக்க இங்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஹிந்தியை தமிழ்நாட்டில் நுழையவிட்டால் கண்டிப்பாக நம்மை அவர்கள் விழுங்கி விடுவார்கள்.

கிறிச்சான் said...

ஆனால் ஹிந்தியை தமிழ்நாட்டில் நுழையவிட்டால் கண்டிப்பாக நம்மை அவர்கள் விழுங்கி விடுவார்கள்./////


தமிழன் அவ்வளவு பலவீனமானவனா?

பாச மலர் / Paasa Malar said...

நேரம்...நம்ம நேரம்....நம்மில் பலராலே உருவான கோலம்....

எட்வின் said...

கிறிச்சான் said...

////ஆனால் ஹிந்தியை தமிழ்நாட்டில் நுழையவிட்டால் கண்டிப்பாக நம்மை அவர்கள் விழுங்கி விடுவார்கள்./////


//தமிழன் அவ்வளவு பலவீனமானவனா?//

இன்னைக்கு அப்பிடி நினைக்கிறதால தான இப்பிடி இருக்கிறான் தமிழன்.

எட்வின் said...

நன்றி சீனு, பாசமலர்

Post a Comment

Related Posts with Thumbnails