June 27, 2010

ஓர் புது உறவு


உன் வரவால் - இன்று

உள்ளம் வர்ணங்களால் நிறைந்திருக்கிறது

உறவாய் வந்த நீ - எம்

உள்ளம் மகிழச் செய்தாய்


உடலால் விலகியிருந்தாலும்

உள்ளத்தால் உன்னருகிலிருக்கிறேன்

உன் வரவால் உவகை கொள்கிறேன்.


வேற்றுமை நிறைந்த உலகில்

வெறுப்பை விதைக்கும் உலகில்

வேஷமாகிப் போன பாசங்களினிடையில் - நல்மனிதனாய்

வெற்றி சிறக்க என் பிரார்த்தனைகள்

-------

அப்பா அப்படின்ற பதவி உயர்வு அளித்த என் மகனுக்காக...

June 25, 2010

மைக்கேல் ஜாக்சனின் மறுபக்கம்

இன்றோடு (25.06.2009) பாப் இசை உலகின் மன்னன் என வர்ணிக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் இறந்து ஒரு வருடம் ஆகிறது.

அவர் காலஞ்சென்று ஒரு வருடமாகிய பின்னும் அவரது மரணத்திற்கான காரணம் சரிவர தெளிவாகவில்லை.பிரபலமானவர்களின் மரணம் பெரும்பாலும் விசித்திரமாகவே இருக்கிறது.

அவர் உயிரோடு இருக்கையில் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்; சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்; என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது வீசப்பட்டன.

அவரது குழந்தையை உயரத்திலிருந்து கீழே போடுகின்ற விதம் பயமுறுத்திய நிகழ்வு ஒன்று அவரது மனநிலையைக் குறித்த பல கேள்விகளை எழுப்பியது.

இவைகள் இப்படியிருந்தாலும் MJ வின் நற்பணிகளையும் மறக்க முடியாது. 1991 ல் வறுமையில் வாடும் சிறார்களை மனதில் கொண்டு "Heal The World" என்ற பாடலை அவரே எழுதியிருந்தார். அந்த பாடலைத் தான் அவர் பாடிய பாடல்களிலே சிறந்த பாடலாகக் கருதுவதாக பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

I think about the generations and they say we want to make it a better place for our children and our children's children so that they know it's a better world for them and I think they can make it a better place.இப்படித் தான் பாடலுக்கு முன்னர் மைக்கேல் கூறிப்போகிறார்.

Michael Jackson - Heal The World .mp3
Found at bee mp3 search engine

அதன் தொடர்ச்சியாக 1992 ல் "Heal The World Foundation" என்ற அமைப்பை ஏழ்மை மற்றும் வறுமையினால் வாடும் சிறுவர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யும் வகையிலும்; மனோ ரீதியாக, உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக குழந்தைகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கும் நல்லெண்ணத்திலும் ஏற்படுத்தினார்.

பல மில்லியன் டாலர்களையும் இதற்கென்றே செலவிட்டிருக்கிறார் மைக்கேல் ஜாக்சன்.

1984 ல் Pepsi Cola வின் விளம்பரம் ஒன்றில் நடிக்கையில் ஏற்பட்ட தீக்காயத்திற்காக அவருக்கு பெப்ஸிகோலா நிறுவனம் நஷ்ட ஈடாக வழங்கிய 1.5 மில்லியன் டாலர்கள் முழுவதையும் "Michael Jackson Burn Center" தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறார்.

இதற்காக அமெரிக்க அதிபர் ரீகனிடமிருந்து விருதும் பெற்றிருக்கிறார்.

"Can You Feel It", "We Are the World" மற்றும் "Man in the Mirror" ஆகியவை உலக அமைதிக்காகவும், பிரிவினைகளுக்கு எதிராகவும் MJ ஆல் பாடப்பட்ட பிற பாடல்கள். இவற்றில் "We Are the World" பாடல் 1985 ல் ஆப்பிரிக்காவில் வறுமையால் வாடுபவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக 39 இசைக்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று.  அந்த பாடலை Lionel Richie என்ற மற்றொரு பாப் பாடகருடன் சேர்ந்து MJ எழுதினார். இப்படி MJ செய்த நற்பணிகள் பலப்பல.

ஆனா இன்னைக்கு நம்மூரிலயே பல பேர் கொஞ்சம் காச பாத்திட்டாங்கன்னா கண்ணு மண்ணு தெரியாம ஆடுவாங்க. உதவின்னு வந்தா ஓடி ஒளிவாங்க. எல்லாத்துக்கும் மனசு தான் காரணம். "மனம் இருந்தா மார்க்கம் உண்டு".

Lionel Richie Stevie Wonder Micheal Jackson - We Are The World.mp3
Found at bee mp3 search engine

அவர் உயிரோடு இருக்கையில் அவர் சம்பாதித்ததை விட அவர் இறந்த பின்னர் இதுவரை அவரது இசை சம்பாதித்தது தான் அதிகமாம்.ஒரு பில்லியன் டாலர்களாம்!!

நன்றி: dailymail & wiki  
Heal The World

June 23, 2010

தமிழ்ச் செம்மொழி மாநாடு அவசியம் தான்


உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நிச்சயம் அவசியம் தான் தமிழகத்துக்கு.

வறுமைக் கோட்டிற்கு கீழ்(அது என்ன கோடுன்னு எல்லாம் கேக்கப்பிடாது; ஒருநாளைக்கு ஐம்பது ரூபாய்க்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் என்கிறது விக்கி) இன்னும் தமிழக மக்கள் இருக்கின்ற நிலையில் இந்த மாநாடு நிச்சயம் தேவை தான்.

ஒரு வேளை சோற்றுக்கு சிரமப்படும் தமிழன் இன்னும் தமிழகத்தில் இருக்கையில் 350-380 கோடிக்கு ஒரு மாநாடு மிக அவசியமான ஒன்றே.

அரசு தமிழ் பள்ளிகள் பலவற்றில் நூறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கின்ற நிலை இன்னும் தொடர்கையில் தமிழ் மாநாடு கண்டிப்பாக தேவை தான்.

ஒருபுறம் இலவசங்களை வாரியிறைத்து உழைப்பவர்களையும் சோம்பேறி ஆக்கியதை மறைக்க "உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம்" என பாடல் எழுதி ஊரை ஏமாற்ற நிச்சயம் மாநாடு தேவை தான்.

ஈழத்தில் இனப்படுகொலையின் போது 39+1 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா நாடகம் நடத்தியதற்கு மாற்றாக இனியவை 40 என நாடகம் ஆட அவசியம் இந்த மாநா(டு)டகம் தேவை தான்.

கிராமங்கள் பலவற்றில் அரசுப் பள்ளிகள் இல்லாத நிலையில், அப்படியே இருந்தாலும் சரியான வசதிகள் இல்லாத நிலையில் இத்தனை கோடிக்கு தமிழ் மாநாடு தேவை தான்.

மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும், சூரியன் பண்பலையும் சொல்லாத தமிழின் சிறப்பை இந்த மாநாடு சொல்லும் என்பதால் கூட இந்த மாநாடு நிச்சயம் தேவையான ஒன்று தான்.

பள்ளிக்கு சென்று களைப்பாக இருக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க காரணம் வேண்டுமென்பதால் நிச்சயம் மாநாடு தேவை தான்.

மாநாட்டு சுவாரஸ்யங்கள் சில

மாநாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் பேசிக் கொண்டிருந்தவர் ஒருவர், ஹலோ மைக் டெஸ்ட் ஒன்,டூ, த்ரீ டெஸ்ட் என்றார். இதில் எங்காவது தமிழ் இருக்கிறதா!! முதல்ல மைக்குக்கு என்ன தமிழ்னு சொல்லுங்க.

மாநாட்டின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தினை இருட்டடிப்பு செய்து தேசிய கீதத்தை பாடவிட்டு இந்திய இறையாண்மையையும் காட்டிவிட்டார்கள் இந்திய தமிழ் விசுவாசிகள். பிரதீபா பாட்டில் அம்மா கோவிச்சிக்கும்னு தமிழ்த்தாய் வாழ்த்தை பாட விடலயோ என்னமோ!! அடச்சீ...

மாநாடு அவசியம் தான். நான் கேட்பதெல்லாம் அதற்கு எதற்கு பள்ளிகளுக்கு விடுமுறை? ஏன் இத்தனை கோடி பண விரயம்?

இன்னொரு டவுட்டு... திரைப்படங்களுக்கும், கடைகளுக்கும் தமிழ்ப் பெயரைத் தான் வைக்க வேண்டும் என்பவர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின் என்பது தமிழ் பெயரா?!!

June 22, 2010

You Tube ல அடிச்சிட்டோம்ல செஞ்சுரி



காணொளிகளை அதாவது வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் தளமான http://www.youtube.com/ ல் ஒரு நாளில் மட்டும் கோடி கணக்கான வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இணையம் குறித்து அறிந்திருப்பவர்களில் இன்று Youtube தளத்தை அறியாதவர்கள் வெகு சிலரே இருப்பார்கள் என சொல்லலாம். 2005 ஆம் வருடம் முதல் இந்த தளம் இயங்கி வருகிறது. யூடியுப் வீடியோக்களை அதன் embed code ஆல் எளிதாக பிற தளங்களிலும் இணைக்கவியலுவதும் அதன் தனித்தன்மை.

குறிப்பாக இந்தியர்கள் அதிகம் உலவும் ஆர்குட்டில் குறிப்பிட்ட youtube காணொளியின் சுட்டியை(URL link) அளித்தாலே வீடியோவை சுலபமாக இணைக்க முடிவதால் மேலும் பிரபலமாகியிருக்கிறது யூடியூப்.

அப்படிப்பட்ட youtube தளத்தில் விளையாட்டாக 2008 முதல் வீடியோக்களை இணைக்கத் துவங்கினேன். இந்த தளத்தை அறிமுகப்படுத்தியதில் பெரும்பங்கு அன்பரும், புதிய பதிவருமான கெர்ஷோம் @ கிறிச்சானுக்கு உண்டு. http://www.youtube.com/arnoldedwinp இது தான் எனது பக்கம்.

ஆரம்பத்தில் யூடியூப் தளத்தில் இடம்பெறாத பாடல்களை இணைக்கலாம் என்ற ஆர்வம் தான் உத்பால் பிஸ்வாஸ், வைரமுத்து, ஹரிஹரன் கூட்டணியில் உருவான காதல் வேதம் தமிழ் பாப் பாடல்களை இணைக்க தூண்டியது.(copy right யாரும் கேக்காம இருக்கிற வரைக்கும் சந்தோஷம்) அதன் பின்னர் சில கிறிஸ்தவ பாடல்களையும், திரைப்பட பாடல்களையும் இணைத்தேன்.

தியாகராஜ பாகவதரின் பூமியில் மானிடன் பாடலையும் புகைப்படங்களைக் கொண்டு காணொளியாக மாற்ற வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு. அதற்கு காரணமான அண்ணன் அன்பு அவர்களுக்கும், கிறிச்சானுக்கும் நன்றி. அந்த காணொளி, தியாகராஜ பாகவதரின் விசிறிகள் பலரது கவனம் ஈர்த்திருப்பதும் சந்தோஷம் தான். (பலருக்கு பிடிக்காமல் போனது வேறு விஷயம்)

உலகின் பல முனைகளிலிருந்து முன் பின் தெரியாதவர்கள் எல்லாம் காணொளிகளுக்கு கருத்துரைக்கும் போது நிச்சயமாகவே இணையத்தைக் குறித்தும். யூடியூபைக் குறித்தும் ஆச்சரியமும் பெருமிதமும் தோன்றும்.

இன்றுவரை 104 அன்பர்கள் யூடியூப் தளத்தில் என்னை பின் தொடருகிறார்கள் என்பது கொசுறு தகவல். இங்கயும் அடிச்சிட்டோம்ல செஞ்சுரி.

நான் அதிகம் ரசித்த "நீ என்பதில் நானும் அடங்கும்" பாடல், காதல் வேதம் ஆல்பத்திலிருந்து இங்கே.

நன்றி: youtube &  விக்கி

June 21, 2010

கால்பந்து - CALL BANDH- ஒரு பார்வை

உலகக்கோப்பைக் கால்பந்து ஆட்டங்கள் தொடங்கியதும் தொடங்கின; பலரின் பணிகளோடு எனது பணிகளும் (பந்த்) முடங்கிப் போயிருப்பது தான் உண்மை. பதிவுலகின் பக்கம் வந்தே ஒரு வாரமாகி விட்டது. (பந்த் என்ற இந்தி வாக்கியத்திற்கு பணி முடக்கம் என்பது தானே அர்த்தம்!)

ஆட்டங்கள் நடக்கும் நேரங்களில் அரபு நாடுகளின் சாலைகள் பல வெறிச்சோடிக் கிடப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என வளைகுடா வாழ் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

சில நாட்களாக எதுவும் கிறுக்கவுமில்லை. இந்திய-பாக் கிரிக்கெட் ஆட்டம் குறித்தும் பகிர்ந்து கொள்ளவியலவில்லை. எனவே தொலைக்காட்சிக்கு பந்த் சொல்லிவிட்டு கால்பந்தைக் குறித்தே கிறுக்கலாமென்று தான் இந்த பதிவு.

FIFA வின் தரவரிசைப் பட்டியலில் முதல் இருபது இடங்களை வகிக்கும் பல அணிகள் ஆட்டம் கண்டிருப்பது தான் கடந்த போட்டிகள் மூலம் அனைவரும் கண்டது.

எளிதாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என பலராலும் கணிக்கப்பட்ட ஸ்பெயின் அணி தனது முதல் ஆட்டத்திலேயே சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக ஒரு கோல் வாங்கித் தோற்றுப் போனது. இன்று நடக்கும் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும். முன்கள வீரர் டோரஸ் ஆரம்பம் முதலே ஆடினால் வெற்றி வாய்ப்பு இன்னும் அதிகரிக்கும்.

அல்ஜீரியாவிற்கு எதிராக ஆடிய இங்கிலாந்து அணியின் முதல் 30 நிமிடங்களின் ஆட்டத்தைப் போல் மகா மோசமான ஆட்டத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. நான் அதிகம் எதிர்பார்த்த இங்கிலாந்து அணி இதுவரை ஆடிய இரு ஆட்டங்களிலும் ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்து அதிர்ச்சியாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் இதுவரை தோல்வியடையவில்லை என்பது தான்.

எனினும் கோல் வித்தியாச அடிப்படையில் அவர்களது பிரிவான 'சி' ல் மூன்றாவதாகவே உள்ளது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் கடைசி போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இங்கிலாந்திற்கு.

செல்ஸீ club ற்காக ஆடும் 'ஜோ' கோலிற்கு(cole) இரண்டு ஆட்டங்களிலும் வாய்ப்பு அளிக்கப்படாதது கேள்விக்குரிய விஷயம். முன்னாள் தலைவரும் தடுப்பு ஆட்டக்காரருமான ஜான் டெர்ரியும் இதைத் தான் கூறியிருக்கிறார்.

பிரான்ஸ் அணி அநேகமாக இந்த உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டது என கூறலாம். தங்களது இறுதி ஆட்டத்தில் குறைந்தது 4 கோல் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வெல்ல வேண்டும்.அதே பட்சம் உருகுவே-மெக்சிகோ அணிகள் ஆட்டம் சமநிலையில் முடியாமலும் இருக்க வேண்டும்.

அதிக அனுபவமுள்ளவரும், பிரான்சின் சிறந்த முன்கள வீரருமான தியரி ஹென்றிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பிரான்சின் நிக்கோலஸ் அனெல்கா அணி மேலாளரை தரக்குறைவாக பேசினார் என்பதற்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் அணியினர் பயிற்சியில் இரு நாட்களாக ஈடுபடவில்லை. கால்பந்திற்கு பந்த் அழைப்பு விடுத்து விட்டார்கள் போலும் இது தான் தற்போதைய பரபரப்பு.

தற்போதைய சாம்பியன் இத்தாலி அணியும் இதுவரை ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. அவர்களும் தங்களது இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 கோல் அடித்த அதி வேக ஜெர்மனி அணிக்கு செர்பிய அணி தங்களது அபாரமான தடுப்பு ஆட்டத்தால் அதிர்ச்சி அளித்தனர். ஜெர்மனியும் தங்களது இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும்; குறைந்த பட்சம் தோல்வி அடையாமலாவது இருக்க வேண்டும்.

இது வரை ஆடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கும் அர்ஜென்டினா, நெதர்லாந்து, பிரேசில் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டார்கள் என கூறலாம்.

பிரேசிலின் முன்கள வீரர் 'kaka' வின் முன்கோபத்திற்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டது பிரேசிலுக்கு பின்னடைவு தரும். எனினும் அவர் கடந்த 12 ஆட்டங்களில் பிரேசிலுக்காக ஒரு கோல் கூட அடிக்கவில்லையாம்.

நைஜீரியாவின் வீரர் ஒருவர் தேவையில்லாமல் கிரீஸ் வீரர் ஒருவரை உதைத்தார் என்பதற்காக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவருக்கு தற்போது நூற்றுக்கணக்கான கொலை மிரட்டல்கள் மின்னஞ்சல்கள் வழியாக வருகின்றனவாம். விளையாட்டு வினையாகாமல் இருந்தால் சரி தான்.



இன்றைய போட்டியில் கொரியாவிற்கு எதிரான போட்டியில் போர்ச்சுக்கல், மழையினிடையில் கோல் மழை பொழிந்திருக்கிறது.(7-0) போர்ச்சுக்கல்லுக்கு அடுத்த ஆட்டம் பிரேசிலுக்கு எதிரானது என்பதால் 25/06/2010 அன்று அந்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: fifa, getty images, wiki

June 14, 2010

Waka வக்கா Vs செம்மொழிப்பாடல்

Waka வக்கா அப்படின்னா எதும் கெட்ட வார்த்தை இல்லீங்க... உ.கோ.கால்பந்திற்கான தீம் சாங்காம்

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வந்ததும் வந்தது. ஆட்டம் பாட்டம், கொண்டாட்டத்திற்கு குறைவேயில்லை. போட்டிகள் ஆரம்பிக்கும் பல மாதங்கள் முன்னமே அதற்கான ஆர்ப்பாட்டங்கள் துவங்கியிருந்தன.

அதற்கென்றே பிரத்தியேகமாக இசையமைக்கப்பட்ட பாடல்களும் உண்டும். குறிப்பாக கொலம்பியப் பாடகி ஷகிராவின் Waka Waka பாடலும் கெனான் k'naan @ Keinan Abdi Warsame என்ற சோமாலிய-கனடா பாடகரின் Wave your Flag என்ற பாடலும் தான் பிரபலம்.


இதிலும் நம்மூரைப் போன்று அரசியல் செய்கிறார்கள் ஆப்பிரிக்கர்கள். ஆப்பிரிக்காவில் நடக்கும் ஒரு போட்டிக்கு ஏன் கொலம்பியாவைச் சார்ந்த ஒருவர் பாடல் பாட வேண்டும் என பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.

உலகம் முழுவதும் இருந்து சிறந்த 32 அணிகள் பங்கு கொள்ளும் ஒரு கூடுகைக்கு கொலம்பியர் பாடினால் என்ன அரபிக்காரர் பாடினால் என்ன? எல்லா இடத்திலயும் அரசியல் ஒண்ணு தான் போலிருக்கு :(
ரஹ்மான் இசையமைத்து, கௌதம் இயக்கிய செம்மொழி மாநாட்டு மையக்கருத்துப் பாடலுக்கும்(தீம் சாங் அப்படின்றதுக்கு இது தானங்க சரியான தமிழ்!!) இதே போன்று பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.

ஏன் மலையாளி ஒருவர் இயக்க வேண்டும்,பிற மாநிலத்தவர் ஏன் பாட வேண்டும். அப்படியே எவரும் பாடலாமெனில் ஏன் பாடும் நிலா பாலு பாடவில்லை, மெட்டு சரியில்லை, பழைய மெட்டு என பலருக்கு பல வித கேள்விகள் கருத்துக்கள்.

அமெரிக்க ராப் பாடகர் ப்ளாசே ஏன் பாடுகிறார் என வேறு சந்தேகம் பலருக்கு. ப்ளாசே என்பது அவரது தற்போதைய பெயர் தான். "லக்ஷ்மி நரசிம்ம விஜய ராஜகோபால சேஷாத்ரி ஷர்மா ராஜேஷ் ராமன்" என்பது தான் அவரது ஆரம்பப்பெயர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ராப் பாணியில் ரஹ்மான் இசையமைத்து ப்ளாசே பாடியிருந்தாலும் அதனை எழுதியதும் அனுமதித்ததும் முத்தமிழ் அறிஞர் என புகழப்படுபவர் தானே.

அதனால் எல்லாப் புகழும், இகழ்ச்சியும் கூட அவருக்கே. அவருக்கு மட்டுமே.

ஆனால் மாநாட்டிற்கு எதற்கு தீம் சாங் என்பது தான் எனக்கு புரியவில்லை.

நன்றி: விக்கி

June 11, 2010

வெள்ளுடையில் சில கருப்பு ஆடுகள்

கிறிஸ்தவம் என்ற போர்வைக்குள்ளேயே இன்று பலர் குளிர்காய்ந்து வருவது ஒருபுறமிருந்தாலும். வெள்ளுடை அணிந்த அதன் தலைவர்கள் பலர் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களால் மன்னிக்க முடியாத(ஒருவேளை தெய்வம் மன்னிக்கக்கூடும்!!!) செயல்களைச் செய்வது இன்று பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

குறிப்பாக கத்தோலிக்கர்கள் என்றும், கிறிஸ்தவத்தின் தலைமையே நாங்கள் தான் என்று மார்தட்டிக் கொள்ளும் ரோமிலும், கனடா மற்றும் அயர்லாந்திலும் கத்தோலிக்க பாதிரியார்கள் நசித்த சிறுவர், சிறுமியரின் வாழ்க்கைகள் ஏராளம். Paedophilia என ஆங்கிலத்தில் அறியப்படும் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துதலை சில வருடங்களாகவே எவரும் அறியமாட்டார்கள் என்ற தெனாவட்டில் செய்திருக்கிறார்கள் இந்த காமுகன்கள்.

மேற்கே மட்டுமல்லாமல் நம்மூர்களிலும் கூட இவர்களின் பாலியல் வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன. குறிப்பாக கேரளத்தில் பாதிரியார் ஒருவரால் மானபங்கப்படுத்தப்பட்ட கன்னியாஸ்திரீ ஜெஸ்மி என்பவர் ஆமென் என்ற புத்தகத்தில் பாதிரியார்களையும் அவர்களின் அட்டூழியங்களையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

அவர் தனது புத்தகத்தில் பாதிரியார்களும், கன்னியாஸ்திரீகளும் உறவு வைத்திருந்தார்கள் எனவும், கன்னியாஸ்திரீகள் அவர்களுக்குள்ளாகவே ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தார்கள் எனவும் எழுதிப்போகிறார்.

பொதுவாக கத்தோலிக்க பாதிரியராக ஆக விரும்பும் ஒருவர் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற வரைமுறை வைத்திருக்கிறார்கள். தமக்கென்று எவரும் இருக்கக்கூடாது எனவும் அப்படி இருந்தால் அது திருச்சபைக்கும் அவர்கள் செய்யும் ஊழியப்பணிகளுக்கும் தடையாக இருக்குமென்பதால் இத்தகைய கொள்கையைக் கொண்டுள்ளது கத்தோலிக்க திருச்?சபை

இயற்கையாகவே பாலியல் ரீதியான மாற்றங்களுக்குள்ளாகும் இருபாலரின் உடலை என்ன தான் கட்டுப்படுத்தினாலும் பலநேரங்களில் பாலியல் இச்சை என்பது தவிர்க்கவியலாதது. அது இயற்கையானதும் கூட. அதற்காகவே திருமணம் என்ற எழுதப்படாத சட்டம் உள்ளது.

இயற்கையை எதிர்த்து இவர்களாகவே ஒரு சட்டம் இயற்றிக்கொண்டால் அது எத்தனை காலத்திற்கு தான் நிலைக்கும். திருமணமே கூடாது என கிறிஸ்தவர்கள் பின்பற்றும் விவிலியமும் சொல்லுவதில்லையே. பின்னே எதற்கு இந்த தடைகள்; அதன் பின்னர் ஏன் தடைகளைத் தாண்டுகிறார்கள்!!

இவர்கள் செய்தவை அனைத்திற்கும் சேர்த்து இன்று கத்தோலிக்க சபைகளின் தலைவர் போப் பெனடிக்ட் கடவுளிடமும், மக்களிடமும் மன்னிப்பு கேட்டிருக்கிறாராம். இனிமேல் குழந்தைகளுக்கு எதிரான இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் உறுதியளித்திருக்கிறாராம். என்னமோ போங்க :(

சாதாரண மனிதர்களைக் கூட நம்பி விடலாம் இந்த சாமியார்களை நம்ப முடியாது போலும்.

June 08, 2010

மதுக்கோப்பை Vs உலகக்கோப்பை

கவியரசு கண்ணதாசன் அவர்கள் "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு" என பாடல் எழுதிவிட்டு போனார்.இன்றும் கோப்பையில் குடியிருக்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கோப்பையினால் வென்றவர்களும் உண்டு, வீழ்ந்தவர்களும் உண்டு. எந்த பழக்கமாக இருந்தாலும் அதற்கென்று ஒரு வரம்பு இருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகத் தான் அமையும்.

கடந்த மாதம் மங்களூரில் நிகழ்ந்த விமான விபத்து கூட விமானி குடிபோதையில் இருந்ததால் ஏற்பட்ட அலட்சியத்தால் நிகழ்ந்திருக்குமோ என கூட சந்தேகக்கிறார்கள். அதற்கு காரணமில்லாமல் இல்லை. 2009 ஆம் ஆண்டில் மட்டும் 39 விமானிகள் குடித்து விட்டு விமானம் ஓட்டியதாக கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய விமானத்துறை அமைச்சர் ப்ரஃபுல் பட்டேல் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் கோப்பைக்கு அதிகம் பெயர்போனவர்கள் நமது பக்கத்து மாநிலத்தவர்களான கேரளத்தினரும், கர்நாடகத்தினருமே. அதுவும் குறிப்பாக மல்லுகள் அருகில் எவரும் நெருங்கி விட முடியாது.


குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட பல அரபு நாடுகளில் இன்றளவும் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டாலும்  சட்டத்திற்கு புறம்பாக மது தயாரிப்பதும், விற்கப்படுவதும் தொடரத்தான் செய்கிறது. வளைகுடா நாடுகளில் இருக்கும் நம்மவர்களைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்.

நேற்றைக்கு கூட குவைத்தில் குடித்து விட்டு கார் ஓட்டிய பெண்மணி விபத்துக்குள்ளாகி மரணமடைந்திருக்கிறார். குவைத் பத்திரிக்கைகளைத் திருப்பினால் கள்ளச்சாராயம் தயாரித்தவர் கைது, கடத்தல், பதுக்கல் செய்தவர் கைது என்று தான் வாசிக்க நேரிடுகிறது.

உலககோப்பை கால்பந்து இன்னும் இரு தினங்களில் துவங்கவிருப்பதால் கோப்பைக்கும் உலகக்கோப்பைக்கும் உள்ள தொடர்பையும் குறிப்பிட்டாக வேண்டும் இங்கு. 1994 ல் உலகக்கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியில் இருந்த பிரான்கோ என்பவர் "நாங்கள் மது அருந்தியது எங்கள் உடல்திறனை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவியது என்றும் அதனால் நன்றாக விளையாட இயன்றது" என்றும் கூறுகிறார். அவரது மனைவியுடனான தாம்பத்ய உறவும் அவரை மேலும் சிறப்பாக ஆட உதவி செய்தது என்கிறார்.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் மீது சமீபத்தில் வைக்கப்பட்ட இதே குற்றச்சாட்டு அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை... வித்தியாசம் ஒன்று மட்டும் தான்... இந்தியா தோல்வியடைந்தது; பிரேசில் வெற்றி பெற்றது. ஒருவேளை இந்திய அணி உலகக்கோப்பையை வென்றிருந்தால் அவர்கள் கோப்பையுடன் ஆடியதை நாம் மறந்திருக்கக்கூடும்.

மேற்கத்திய நாடுகளில் மதுப்பழக்கம் வழக்கமாகிப் போன ஒரு விஷயம், ஆனால் நம்மூரில் அப்படி பார்க்கப்படுவதில்லையே!

எதுவாயினும் அளவோடு இருந்தால் அழகு தான். இல்லையென்றால் கோப்பையை வைத்துக்கொண்டு ஆடுபவர்களுக்கு நாம் ஆட வேண்டியிருக்கும்.

கார்ட்டூன் நன்றி: http://www.caricatures-ireland.com/

நடால்,ஷகிரா,ஸ்பெயின்,கால்பந்து

இளம் டென்னிஸ் நட்சத்திரம், உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் நடாலின் காட்டில் இப்போது மழை தான்.ஒருபுறம் டென்னிஸ் ஆட மறுபுறம் வீடியோக்களிலும் ஆடத் தொடங்கி விட்டார் போலும்.

கொலம்பியா பாப் பாடகியும் நடிகையுமான ஷகிராவுடன் (பிப்ரவரி 2010) GYPSY என்ற ஆங்கில பாப் பாடல் ஒன்றில் ராஃபா  நடித்திருக்கிறார். 33 ம் 23 ம் சில இடங்களில் மிக நெருக்கமாக நடித்திருக்கிறார்கள்!! Gypsy என்றால் பிழைப்பிற்காக ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு (நடால் மாதிரி, நம்மள மாதிரி கூட) அடிக்கடி இடம்பெயர்பவர் எனலாம்.


அதனாலேயே இந்த இசைத் தொகுப்பிற்கு நடாலை தெரிவு செய்ததாக ஷகிரா தெரிவித்திருக்கிறார். பல விஷயங்களில் ஷகிராவின் வாழ்க்கையைப் போன்றே நடாலின் வாழ்க்கையும் அமைந்திருப்பதாகவும் சொல்லிப் போகிறார்.

பாடல் இங்கே
shakira - gypsy (live).mp3
Found at bee mp3 search engine

வாழ்க்கையை அது போகின்ற வழியிலேயே எடுத்துக்கொள்வேன். இடையில் நீ பிரிந்தாலும் அதனால் வேதனைப்படாமல் வாழ்க்கை போகிற பாதையில் செல்வேன் ஏனென்றால் நான் பயணிக்கிறவள் என சொல்லிப்போகிறார் ஷகிரா. ஆனா இது எதுவும் பாடல் பார்க்கும் போது புரியாது... (ஏனென்று முன்னாடியே சொல்லிவிட்டேன்) பாடல் வரிகளை தேடிப்பிடித்த பின் புரிந்தவை இவை

ஷகிராவின் Laundry Service (2001)ஆல்பத்தின் Whenever, Wherever பாடல் தான் என்னை ஆரம்பத்தில் அவரது பாடல்களை கேட்கத்தூண்டியது. அதன் பின்னர் Hips don't Lie (2006) மிகப்பெரிய ஹிட். மொழி புரியவில்லையென்றாலும் அவரது Latin POP, Salsa, பாடல்களின் இசைக்கு ரசிகனாகிப்போனேன்.

இந்த Gypsy பாடலில் கூட Mouth Organ இசைக்கருவி அருமையாக இசைக்கப்பட்டிருக்கும். ஷகிராவுக்கு பாடகி, நடிகை, நடனக்கலைஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஐ.நாவின் நல்லெண்ண தூதுவர், எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் உண்டு.

GYPSY காணொளி

நடால் ஸ்பெயினைச் சார்ந்தவர்.கால்பந்திலும் ஸ்பெயினைச் சார்ந்த ரியல் மேட்ரிட், பார்சிலோனா club அணிகள் அருமையாக ஆடக்கூடியவை.

2008 ன் ஐரோப்பிய(யூரோ) கால்பந்து சாம்பியன் பட்டத்தையும் ஸ்பெயின் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் துவங்கவிருக்கும் நிலையில் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை ஸ்பெயின் அல்லது அர்ஜென்டினா அணிகள் தான் பட்டம் வெல்லும் என தெரிவிக்கின்றன.

இனியெஸ்டா, பிக்கே, புயோல், ரேமோஸ் என தடுப்பாட்ட வீரர்களும், டோரஸ், பெட்ரோ, வில்லா என முன்கள வீரர்களும் தொடர்ந்து அருமையாக ஆடி வருவது அவர்களுக்கு சாதகம் தான். பந்து காப்பாளர்களான ரெய்னா, கேசியாஸ், வால்டெஸும் ஸ்பெயினுக்கு மேலும் வலு சேர்ப்பார்கள்.


ஸ்பெயின் கடைசி பிரிவான 'H' ல் சுவிட்சர்லாந்து,ஹோன்டுராஸ், சிலி ஆகிய அணிகளுடன் உள்ளது. இதை விட எளிதான பிரிவு வேறு எதுவும் இல்லை என்கிறார்கள்.

2007 முதல் 2009 வரை ஸ்பெயின் ஆடிய 35 ஆட்டங்களிலும் தோல்வியே அடையாமல் இருந்தது இன்றும் உலக சாதனையாகக் கருதப்படுகிறது. ஸ்பெயினின் வெற்றி வாய்ப்பு எப்படி அமைகிறது என பார்க்கலாம்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் அட்டவணையை இந்த சுட்டியில் இருந்து (Excel வடிவம்) தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆட்டம் முடிவில் கோல்களின் எண்ணிக்கையையும் இதில் குறிப்பிட முடியும். Pdf வடிவில் தரவிறக்கம் செய்ய இந்த சுட்டிக்கு செல்லுங்கள்.

June 07, 2010

ஆசிய விளையாட்டில் இந்திய கிரிக்கெட் அணி ஏன் இல்லை


நவம்பர் மாதம் சீனாவில் நடைபெறவிருக்கும் ஆசியப் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப மாட்டோம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறாதாம்.  இதனைக் கண்டித்து கிரிக்கெட் அன்பர்கள் பதிவிடவில்லை என பதிவர் தருமி ஆதங்கப்பட்டிருக்கிறார். நியாயம் தான்

இந்த செய்தியைக் குறித்து நான் அறிந்திருக்கவில்லை; இல்லையென்றால் நிச்சயம் பதிவிட்டிருப்பேன். IPL அட்டகாசங்களினாலும் T20 ஆட்டங்கள் மேல் பிடிப்பு இல்லாமையினாலும் இந்திய கிரிக்கெட்டின் நிகழ்வுகளை சரிவர கவனிப்பதில்லை.

கிரிக்கெட் மட்டுமல்லாது பிற விளையாட்டுகளையும் ரசிப்பவன் நான். நேற்று கூட ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் குறித்து பதிவிட்டிருந்தேன்.

அதை விடுங்கள்... விஷயத்திற்கு வருவோம். ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய அணியை அனுப்ப மாட்டோம் என சொல்லியிருப்பது ஒரு பார்வையில் சரியென பட்டாலும் மற்றொரு பார்வையில் அப்படி படவில்லை.

காரணங்களை சொல்லி விடுகிறேன். ஆசியப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது இது தான் முதல் முறை அதுவும் 20-20 போட்டிகள் தான். இதற்கு முன்னதாக சர்வதேச அரங்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது 1998 காமென் வெல்த் போட்டிகளில் தான். இவற்றிற்கெல்லாம் தலையாயதான ஒலிம்பிக்கில் இன்று வரை கிரிக்கெட் இடம் பெறவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

தடகள வீரர்களுக்கு அவர்களது உயரிய ஆசை அல்லது கனவு (Pinnacle என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்) ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்பதாகத் தானிருக்கும்.

அதே போன்றே கிரிக்கெட் ஆடும் அனைத்து வீரர்களுக்கும் உள்ள கனவு உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்பதே.அதனை விட பெரிய சந்தோஷம் இருந்து விட முடியாது.

இங்கிலாந்திலோ, ஸ்பெயினிலோ, இத்தாலியிலோ Liverpool, Barcelona, AC Milan CLUB களுக்காக கால்பந்து  ஆடும் ஒருவரின் உயரிய கனவு அவரது நாட்டிற்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமென்பதாகத் தானிருக்குமே ஒழிய ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டுமென்பதாக இருக்காது. அப்படித் தான் இன்று வரை இருந்து வந்திருக்கிறது.

கிரிக்கெட்டிற்கு மகுடம் உலகக்கோப்பை அல்லது டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அணி என்ற பெயரை அடைவது தானேயல்லாமல் ஆசியப் போட்டிகளில் ஓமன், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுடன் மோதி பதக்கம் பெறுவதாக இருக்காது.

எந்த போட்டியானாலும் வெற்றி என்பது பெருமை தான் அதில் சந்தேகமில்லை ஆனால் உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு இரு மாதங்கள் இருக்கின்ற நிலையில் இது தேவையா என்பது தான் கேள்வி. ஏற்கெனவே ஐ.பி.எல் ல் ஆடி T-20 உலகக்கோப்பையை கோட்டை விட்டதைத் தான் உலகறியுமே!

நவம்பர் மாதம் துவங்கவிருக்கும் ஆசியப்போட்டிகளின் போது இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஆடவிருக்கிறது.

இரு மாதங்கள் கழித்து 2011 பிப்ரவரியில் துவங்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு, ஆப்கானிஸ்தான், ஓமன் போன்ற அணிகளிடம் ஆடுவதை விட நியூசிலாந்துடன் ஆடுவது சிறந்த பயனளிக்க வாய்ப்புள்ளது. (2007 ல் பங்களாதேசிடம் தோற்றதைத் தான் நாங்கள் அறிவோமே என்கிறீர்களா!!!)

மற்றொரு விதமாக பார்த்தால் பி.சி.சி.ஐ செய்தது தவறு என சொல்லலாம். 2007 ஆம் வருடத்திலேயே ஆசிய விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் இடம்பெறும் என ஆசிய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்திருக்கிறது. அப்போதே மறுத்திருக்கலாம். ஆனால் போட்டிகள் துவங்க சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் இப்போது மறுத்திருப்பது அழகல்லவே.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அதற்கு ஆதரவு வேறு தெரிவிப்பது தான் மேலும் காமெடியான விஷயம். வீரர்கள் அதிக போட்டிகளில் ஆடுகிறார்கள்; அவர்கள் என்ன செய்வார்கள் என ஜால்ரா அடித்திருக்கிறார்.

அரசாங்கமும் கேள்வி ஏதும் கேட்கின்ற மாதிரி தெரியவில்லை. பத்திரிக்கையாளர்களிடம் மட்டும், நாங்கள் பி.சி.சி.ஐ யை வன்மையாகக் கண்டிக்கிறோம் என சொல்லிவிட்டு வேடிக்கை பார்க்கிறது அரசாங்கம். அரசு தலையிடவும் முடியாது. ஏனென்றால் பி.சி.சி.ஐ அரசு நிறுவனம் இல்லையே! கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டுகளில் பங்கு பெற வேண்டும் என கூறும் நமது அரசு தடகள போட்டிகள் உள்ளிட்ட பிற விளையாட்டுகளுக்கு செய்து வரும் உதவிகள் நாடே அறிந்தது தானே.

அரசியல்வாதிகளுக்கு தேவையெல்லாம் ஐ.பி.எல் ம் அதில் புழங்கும் பணமுமேயன்றி வேறு ஏதுமில்லை. அவர்களின் அரசியலுக்கு இன்று விளையாட்டுக்கள் தான் பலிகடா ஆக்கப்படுகின்றன.அது கிரிக்கெட்டானாலும் சரி, பிற விளையாட்டுக்களானாலும் சரி.

June 06, 2010

ஃப்ரெஞ்ச் ஓபன் 2010 ஒரு பார்வை


டென்னிஸ் உலகில் ரஃபா, களிமண் தரை மைதானங்களின் மன்னன் (king of clay court) என செல்லமாக அழைக்கப்படும் ரஃபேல் நடால் ஐந்தாவது முறையாக களிமண் தரையில் ப்ரெஞ் ஓபன் பட்டத்தை வென்றிருக்கிறார்.இந்த வெற்றியோடு ஃபெடரரை பின்னுக்குத் தள்ளி ஏ.டி.பி தரவரிசையில் முதலிடத்தையும் பெற்று விட்டார்.

இந்த முறை முன்னணி வீரர்களான ஃபெடரர், ஜோக்கோவிச், ஆன்டி முர்ரே ஆகியோர் அரையிறுதிக்கு முன்னரே வெளியேறியது நடாலுக்கு மேலும் வாய்ப்பாகிப் போனது.

நடால் ஃப்ரெஞ்ச் ஓபனின் தனது அறிமுக சீசனாகிய 2005 முதல் 2008 வரை தொடர்ச்சியாக நான்கு முறை பட்டத்தை வென்றவர்.

சென்ற வருடம் (2009) ஃபெடரரிடம் முதல் முறையாக ப்ரெஞ்ச் ஓபன் பட்டத்தை நடால் பறிகொடுத்ததை பலரும் மறந்திருக்க முடியாது. 2009 ல் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்வீடனின் ராபின் சோடர்லிங்கிடம் தோற்றுப்போனார்.

இந்த வருடத்தைப் போன்று கடந்த வருடமும் இறுதிப்போட்டி வரை ராபின் முன்னேறினார். இந்த வருடமும் இறுதிப்போட்டியில் ராபின் தோற்றுப்போனது நிச்சயம் அவரை ஏமாற்றமடையச் செய்திருக்கும்.

நடால் ஜூன் 3ஆம் தியதி பிறந்தவர் என்பது கூடுதல் தகவல். மஞ்சத்துண்டுக்காரர் பிறந்தநாளும் அன்று தான் என்று நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன!!

பெண்கள் ஆட்டத்தை பொறுத்தவரையில் ஹெனின்,ஷரப்போவா,வில்லியம்ஸ் சகோதரிகள் ஆரம்பத்திலேயே வெளியேறியது Francesca Schiavone க்கு வசதியாகிப்போனது. இத்தாலியர் ஒருவர் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லுவதும் இது தான் முதன்முறையாம்.


சானியா மிர்சா கல்யாணம் பண்ணிகிட்டதோடு ஆள காணோம். அம்மணி பாகிஸ்தானுக்காக பெண்கள் கிரிக்கெட் எதும் ஆட பயிற்சி எடுக்கிறாகளோ என்னமோ!!

2009 ல் பட்டம் வென்ற இந்தியாவின் லியாண்டர் பயஸ் - லூக்கஸ்(செக் குடியரசு) இணை இந்த வருடம் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தோடு சமாதானப்பட்டுக் கொண்டது.

இதுவரை ரஃபேல் நடால் ஃப்ரெஞ்ச் ஓபன் போட்டிகளில் 38-1 என்ற கணக்கில் வெற்றி ஈட்டியிருக்கிறார். ஒரே ஒரு போட்டி மட்டுமே தோற்றிருக்கிறார்.

புகைப்படங்கள் நன்றி: rolland garros; விக்கி

June 05, 2010

சிசுக்கொலை-மனித இனத்தின் கோர முகம்



















சிசுக்கொலை

மானிட ஜென்மத்தின்

மானங்கெட்ட செயல்


சிசுவை

சிதைக்கும்

சீர்கெட்ட

சிந்தை-குழந்தை

நிந்தை என்பதாலா

அகந்தையாலா-இல்லை

தந்தை எவரென்ற

சந்தேகத்தினாலா!


கருவறை முதல்

கல்லறை வரை

சில்லறை ஆக்கிய

சில சில்லறைகளின்

சில்லறைத் தனம்

சிசுக் கொலை வரை தொடர்வது தான் வேதனை.

இது போன்ற ஈனச்செயல்களைச் செய்பவர்களை "உயிருள்ள சடலங்கள்" என சொன்னாலும் தகும்.

இந்தியா போன்ற நாடுகளில் வறுமையினாலும், ஆண் குழந்தை தான் வேண்டுமென்ற பிடிவாதமும்,நெறிமாறிய தொடர்புகளும், கருக்கலைப்புக்கும், சிசுக்கொலைகளுக்கும் காரணமென்றால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கருக்கலைப்பு (Abortion) இன்று சர்வசாதாரணமாகி வருகின்றது.

இன்று ஒருபுறம் குழந்தைளுக்காக ஏங்குபவர்கள் பலர் இருக்கையில் குழந்தைகளுக்கு வழியமைந்த பின்னரும் கருக்கலைப்பு, சிசுக்கொலை போன்ற மறுபுறங்களும் தொடர்வது வேதனையளிக்கிறது.

அமெரிக்காவில் ஒவ்வொரு 24 நொடிகளுக்கு ஒரு கருக்கலைப்பு செய்யப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதாவது அமெரிக்காவில் மட்டும் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 3,600 கருக்கலைப்புகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் 39% மரணங்கள் கருக்கலைப்புகளாலேயே ஏற்படுகிறது எனவும் உ.சு.நிறுவனம் தெரிவிக்கிறது. இருதய நோயும்(21%), புற்றுநோயும்(18%) கூட இந்த அளவு மரணங்களை ஏற்படுத்தவில்லையாம். இது குறித்த காணொளியை கீழே இணைத்துள்ளேன்.


அமெரிக்காவில் கருக்கலைப்பை தடுக்கும் முயற்சியாக ABORTION BLACKOUT (End Abortion by 2020) என்ற பெயரில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. http://www.abortionblackout.com/ என்ற இணையதளத்தில் மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

------------
குண்டுகளைக் கூட - அணு

குண்டுகளைக் கூட அனுமதிக்கும் உலகம்

குழந்தைகளை மிதிப்பது ஏனோ!!

---------
புகைப்படம் நன்றி:  காயத்ரி சக்ரவர்த்தி & canon

June 01, 2010

யாரோ அவள்

அன்றும் அவள் வந்து போனாள்

அடர்ந்த விருட்சங்கள் நடுவே

அகலாத வெண் பனிமேகத்தினிடையே

அகன்ற விழிகள் மொழி பேச

அமைதியான அதிகாலையை

அலங்கரித்தாள்


கயல்விழியால்

கவிதை மழை பொழிந்தாள்;

நாணத்தால்

நாணலையும் நாணச் செய்தாள்;

புன்னகையால்

என்னகம் நிறைத்தாள்


கலையும் வெண்மேகத்தினிடையே

கலைத்துச் சென்றாள் என் மனதினையும்;

கண்ணசைத்து

கனவினூடே கரைந்தாள்

மனதினை கறைபடியச் செய்து விட்டு.

மனதினை களவாடியும் சென்ற(அ)வள் யாரோ!!!

யாரோ அவள்?

(தூக்கத்தில வந்த கனவுங்க இது... வேற ஒண்ணுமில்ல. :) ஹி ஹி ஹி )
Related Posts with Thumbnails