June 21, 2010

கால்பந்து - CALL BANDH- ஒரு பார்வை

உலகக்கோப்பைக் கால்பந்து ஆட்டங்கள் தொடங்கியதும் தொடங்கின; பலரின் பணிகளோடு எனது பணிகளும் (பந்த்) முடங்கிப் போயிருப்பது தான் உண்மை. பதிவுலகின் பக்கம் வந்தே ஒரு வாரமாகி விட்டது. (பந்த் என்ற இந்தி வாக்கியத்திற்கு பணி முடக்கம் என்பது தானே அர்த்தம்!)

ஆட்டங்கள் நடக்கும் நேரங்களில் அரபு நாடுகளின் சாலைகள் பல வெறிச்சோடிக் கிடப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என வளைகுடா வாழ் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

சில நாட்களாக எதுவும் கிறுக்கவுமில்லை. இந்திய-பாக் கிரிக்கெட் ஆட்டம் குறித்தும் பகிர்ந்து கொள்ளவியலவில்லை. எனவே தொலைக்காட்சிக்கு பந்த் சொல்லிவிட்டு கால்பந்தைக் குறித்தே கிறுக்கலாமென்று தான் இந்த பதிவு.

FIFA வின் தரவரிசைப் பட்டியலில் முதல் இருபது இடங்களை வகிக்கும் பல அணிகள் ஆட்டம் கண்டிருப்பது தான் கடந்த போட்டிகள் மூலம் அனைவரும் கண்டது.

எளிதாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என பலராலும் கணிக்கப்பட்ட ஸ்பெயின் அணி தனது முதல் ஆட்டத்திலேயே சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக ஒரு கோல் வாங்கித் தோற்றுப் போனது. இன்று நடக்கும் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும். முன்கள வீரர் டோரஸ் ஆரம்பம் முதலே ஆடினால் வெற்றி வாய்ப்பு இன்னும் அதிகரிக்கும்.

அல்ஜீரியாவிற்கு எதிராக ஆடிய இங்கிலாந்து அணியின் முதல் 30 நிமிடங்களின் ஆட்டத்தைப் போல் மகா மோசமான ஆட்டத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. நான் அதிகம் எதிர்பார்த்த இங்கிலாந்து அணி இதுவரை ஆடிய இரு ஆட்டங்களிலும் ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்து அதிர்ச்சியாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் இதுவரை தோல்வியடையவில்லை என்பது தான்.

எனினும் கோல் வித்தியாச அடிப்படையில் அவர்களது பிரிவான 'சி' ல் மூன்றாவதாகவே உள்ளது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் கடைசி போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இங்கிலாந்திற்கு.

செல்ஸீ club ற்காக ஆடும் 'ஜோ' கோலிற்கு(cole) இரண்டு ஆட்டங்களிலும் வாய்ப்பு அளிக்கப்படாதது கேள்விக்குரிய விஷயம். முன்னாள் தலைவரும் தடுப்பு ஆட்டக்காரருமான ஜான் டெர்ரியும் இதைத் தான் கூறியிருக்கிறார்.

பிரான்ஸ் அணி அநேகமாக இந்த உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டது என கூறலாம். தங்களது இறுதி ஆட்டத்தில் குறைந்தது 4 கோல் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வெல்ல வேண்டும்.அதே பட்சம் உருகுவே-மெக்சிகோ அணிகள் ஆட்டம் சமநிலையில் முடியாமலும் இருக்க வேண்டும்.

அதிக அனுபவமுள்ளவரும், பிரான்சின் சிறந்த முன்கள வீரருமான தியரி ஹென்றிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பிரான்சின் நிக்கோலஸ் அனெல்கா அணி மேலாளரை தரக்குறைவாக பேசினார் என்பதற்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் அணியினர் பயிற்சியில் இரு நாட்களாக ஈடுபடவில்லை. கால்பந்திற்கு பந்த் அழைப்பு விடுத்து விட்டார்கள் போலும் இது தான் தற்போதைய பரபரப்பு.

தற்போதைய சாம்பியன் இத்தாலி அணியும் இதுவரை ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. அவர்களும் தங்களது இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 கோல் அடித்த அதி வேக ஜெர்மனி அணிக்கு செர்பிய அணி தங்களது அபாரமான தடுப்பு ஆட்டத்தால் அதிர்ச்சி அளித்தனர். ஜெர்மனியும் தங்களது இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும்; குறைந்த பட்சம் தோல்வி அடையாமலாவது இருக்க வேண்டும்.

இது வரை ஆடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கும் அர்ஜென்டினா, நெதர்லாந்து, பிரேசில் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டார்கள் என கூறலாம்.

பிரேசிலின் முன்கள வீரர் 'kaka' வின் முன்கோபத்திற்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டது பிரேசிலுக்கு பின்னடைவு தரும். எனினும் அவர் கடந்த 12 ஆட்டங்களில் பிரேசிலுக்காக ஒரு கோல் கூட அடிக்கவில்லையாம்.

நைஜீரியாவின் வீரர் ஒருவர் தேவையில்லாமல் கிரீஸ் வீரர் ஒருவரை உதைத்தார் என்பதற்காக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவருக்கு தற்போது நூற்றுக்கணக்கான கொலை மிரட்டல்கள் மின்னஞ்சல்கள் வழியாக வருகின்றனவாம். விளையாட்டு வினையாகாமல் இருந்தால் சரி தான்.இன்றைய போட்டியில் கொரியாவிற்கு எதிரான போட்டியில் போர்ச்சுக்கல், மழையினிடையில் கோல் மழை பொழிந்திருக்கிறது.(7-0) போர்ச்சுக்கல்லுக்கு அடுத்த ஆட்டம் பிரேசிலுக்கு எதிரானது என்பதால் 25/06/2010 அன்று அந்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: fifa, getty images, wiki

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails