July 31, 2010

செல்ஸீ கிளின்டனுக்கு கல்யாணமாம்

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளின்டனின் ஒரே மகளான செல்ஸீக்கு இன்று (ஜீலை 31) கல்யாணமாம். இந்த நூற்றாண்டின் விமரிசையான திருமணமாக இருக்கும் என பரவலாக அமெரிக்காவில் பேசிக் கொள்கிறார்களாம்.

முன்னாள் அதிபரின் மகளும் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளரின் மகளுமாயிருப்பதால் செல்ஸீயின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெறும் என தெரிகிறது.

திருமண ஏற்பாடுகள் அனைத்தும் பயங்கர கெடுபிடிகளுக்கிடையில் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றனவாம்.திருமண ஏற்பாடுகளை படம்பிடிக்க பத்திரிக்கையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றனர்.

இதனிடையில் திருமணத்திற்கு ஒபாமாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என வேறு கூறுகிறார்கள் அதில் எந்த அளவு உண்மை என தெரியவில்லை.

செல்ஸீயும் அவரது வருங்கால கணவருமான மார்க்கும் நவம்பர் அல்லது டிசம்பரில் தென்னிந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்களாம்.

2000 த்தில் கிளின்டன் அமெரிக்க அதிபராக இருந்த போது அவர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போதே இந்தியாவின் மீது கிளின்டன் குடும்பத்தினர் அதீத ஈடுபாடு காட்டியிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக 2004ல் ஏற்பட்ட ஆழி பேரலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வண்ணம் பில் கிளின்டன் தமிழகத்திற்கு வந்திருந்ததையும் மறக்கவியலாது.

நன்றி: விக்கி & டைம்ஸ்

July 27, 2010

ஆர்குட் Face Book இல்லாமல் ஒரு வாழ்க்கையா! ம்...ஹூம்!!


பத்து வருடங்கள் முன்னர் இணையம் என்பது நம்மில் பலருக்கும் நம்மைச் சார்ந்த பலருக்கும் அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. ஆனால் இன்று நீரின்றி அமைந்தாலும் இணையமின்றி உலகம் அமையாது போன்ற நிலைமை/பிரமை தான் உள்ளது.

அங்கிள்! நீங்க ஏன் 'ஆர்குட்'ல இல்ல அப்படின்னு ஆறு வயது சிறுவன் ஒருவன் நம்மைப் பார்த்து கேட்கிற அளவிற்கு இணைய உபயோகம் அதிகரித்திக்கிறது அல்லது பலரை முடக்கிப் போட்டிருக்கிறது எனலாம்.

1999 ல் ஒருமுறை உறவினர் வீட்டில் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கையில் எனது மைத்துனர் அவரது சகோதரரிடம் "ஏய் என்னோட இ-மெயில் ஓப்பன் பண்ணியா இல்லையா"? என கேட்டதும், நான் எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

இ-மெயில்னா... இன்லண்ட் லெட்டர் மாதிரி இருக்குமோ; இல்ல கொரியர் மாதிரி எதும் பார்சலா இருக்குமோ? என மனதில் சிந்தனைகள் ஓடத் துவங்கின அன்று.

இன்று இ-மெயில் மின்னஞ்சலாகி நிற்கிறது. மின்னஞ்சலும் குறுகி ஆர்குட் Scrap லும், twitter ட்வீட்ஸ் களிலும், face book லுமாக தகவல் பரிமாற்றம் டிஜிட்டல் ரூபமெடுத்து உலகை InterNET எனும் வலைக்குள் பின்னிப் போட்டிருக்கிறது.

ஆனால் இந்த தளங்களை மொக்கையாக உபயோக்கிப்பவர்களே அதிகம் என நான் பார்த்தவரை புரிந்து கொள்ள முடிகிறது.

இன்று ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் உறுப்பினராக இல்லாத ஒருவரை ஏளனமாக பார்க்கின்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆர்குட் தளத்தை பார்க்கவில்லை என்றால் பலருக்கு தூக்கம் வரவும் மறுக்கிறதாம்!

ஆர்குட்டில் ஹாய் என்று Scrap அனுப்பினாலோ அல்லது பிறந்த நாளுக்கு வாழ்த்து அட்டை(ஆர்குட்டில்) அனுப்பினாலோ தான் பலர் சமாதானம் அடையவும் செய்கிறார்கள்.

தங்கள் ஆர்குட்டின் நண்பர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக முகமேயறியாத நண்பரின் நண்பருக்கும் பல நேரங்களில் நண்பரின் நண்பிக்கும் அழைப்பு விடுகின்ற வெட்டியர்களும் இருக்கிறார்கள்.

வேறு சிலர் அவர்கள் கண்களில் காண்கின்ற யூடியூப் காணொளிகளை எல்லாம் கோர்த்து விடுகிறார்கள். அதிகமாக காணொளிகள் இணைத்திருந்தால் பிறர் அவர்களையே கவனிப்பார்கள் என்ற ASB-Attention Seeking Behaviour ஐ கொண்டு நடக்கிறார்கள். இவுக பண்ற அலும்புக்கு ஒரு அளவே இல்ல.

இத்தனையும் செய்யும் இவர்கள் ஆரோக்கியமான ஒரு விவாதம் என்றால் எட்டடி பாய்வது தான் இன்னும் விசித்திரம். ஆர்குட்டில் கவர்ச்சியை நாடுபவர்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது வெகு குறைவே.

இந்த தொல்லைகளினாலும்; ஆர்குட் இல்லாமலும் நட்பு பாராட்ட முடியும் என்பதற்காகவும் ஆர்குட்டிலிருந்து ஜகா வாங்க வேண்டியதாகிப் போனது.

நண்பர்களுடன் முன்னைப் போலவே தொடர்ந்து உரையாடுகிறேன்; இன்னும் உரையாடுவேன்.

ஆர்குட்டும்,முகநூலும் மட்டுமே வாழ்க்கை என கதியாக கிடக்கின்றவர்களைப் பார்த்தால் "அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு"  என சொல்வதைத் தவிர வேறென்ன சொல்ல.

July 24, 2010

தமிழ் ராப்,பாப் பாடல்கள்-கவிதை குண்டர்

தமிழ் பாடல்களில் திரைப்பட பாடல்களுக்கு தான் அதிக மவுசு என்றால் அது மிகையல்ல. பாப் பாடல்களுக்கு அதிகம் பெயர் கிடைப்பதில்லை. பாப் பாடல்களுக்கே அந்த நிலைமை என்றால் ராப் பாடல்களைக் குறித்து சொல்லவே வேண்டாம்.

காதலன், குளிர் 100', பொல்லாதவன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ராப் வகை பாடல்கள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காதலன் திரைப்படத்தில் இடம் பெற்ற "பேட்டை ராப்" பாடல் அதிகம் பிரபலமான ஒன்று.

ராப் பாடகர்கள்/இசைக்குழுக்கள் யோகி.பி, நட்சத்ரா, ப்ளாசே, கவிதை குண்டர் என பலரும் தமிழ் ராப் இசை உலகை அதிர வைக்கிறார்கள். அவர்களோடு யுவன் ஷங்கர் ராஜாவும், ஸ்ருதி ஹாசனும் கூட ராப் பாட ஆரம்பித்தி விட்டார்கள். பாடுகையில் அவர்கள் வார்த்தைகளை புரிந்து கொள்வது தான் கொஞ்சம் கடினம்.

யோகி.பி "பொல்லாதவன்" திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் " எங்கேயும் எப்போதும்" என்ற பாடலில் பாடும் நிலா பாலு மற்றும் சுனிதா சாரதியுடன் இணைந்து தனது ராப் வரிசையை காண்பித்திருந்தார்.

'நிழல்கள்' திரைப்ப்டத்தில் இடம்பெற்ற இசைஞானியின் "மடை திறந்து தாவும் நதி" என்ற பாடலை யோகி.பி மற்றும் நட்சத்திரா, வல்லவன் என்ற ராப் ஆல்பத்தில் அவர்களது ராப் மற்றும் ஹிப்-ஹாப் (Hip-Hop)பாணியில் பின்னியிருப்பார்கள். அதன் காணொளி கீழே.


ராப் பாடல்களின் வரிகளை புரிந்து கொள்ள சற்று சிரமம் என்றாலும் அவர்கள் பாடல்களில் ஒரு நோக்கம் நிச்சயம் இருக்கும். வல்லவன் இசைத்தொகுப்பில் நட்சத்ரா "இசைக்கு எல்லை ஏதுமில்லை" என்றனர். கவிதை குண்டர் ஆல்பத்தில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்காகவும் பாடலை எழுதியிருக்கிறார்கள்.

எனினும் பெரும்பாலான ராப் பாடல்கள் அடல்ட்ஸ் ஒன்லி வார்த்தைகளைக் கொண்டிருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.

கவிதை குண்டர் ஆல்பத்தில்  நேஹா பஸின் பாடிய "தனியே" பாடல் தான் பலரையும் கவர்ந்திருந்தது. அது ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தமிழ் கலவையோடு பாடப்பட்டிருந்தது. அந்த பாடல் இங்கே.

Get this widget |Track details |eSnips Social DNA

நேஹா பஸின் மும்பையைச் சார்ந்தவர்; சானல் 'வி ' உருவாக்கிய "Viva"  என்ற இந்திய பாப் இசைக்குழுவைச் சார்ந்தவர்.

கவிதை குண்டர் ஆல்பத்தின் மற்ற பாடல்களை எனது பாப் பாடல்களுக்கான வலைப்பூவான http://thamizhpopsongs.blogspot.com/ என்ற வலைப்பூவில் தொகுத்திருக்கிறேன்.

ராப் இசைப்பிரியர்கள் கேட்டு மகிழுங்கள் / காதை கிழித்துக் கொள்ளுங்கள்.

July 23, 2010

உலகம்-வாழ்க்கை-விவிலியம் எதுவுமே புரியல போங்க

இதுவரைக்கும் ஒண்ணுமே புரியல உலகத்தில;இப்பவும் ஒண்ணும் புரியல; இனிமேலும் எதுவும் புரிய வாய்ப்பிருக்கான்னும் தெரியல.

உலகம் உண்டாகியது என்பவர்கள் ஒருபுறம்;இறைவனால் உண்டாக்கப்பட்டது என்பவர்கள் மறுபுறம்.அதே போன்று இறைவன் மனிதனை தோற்றுவித்தான் என்பவர்கள் இருக்கையில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் இப்படி!

இறைவன் படைத்தாலும் இன்றைக்கு இத்தனை மனித இனங்கள், மனித மொழிகள், மனித நிறங்கள், பாகுபாடுகள், வேற்றுமைகள் எப்படி உருவாகின என்பதும் புரியவில்லை!

வானம், பூமி உள்ளிட்ட உலகின் அனைத்தையும் இறைவன் படைத்தார் என்று விவிலியத்தில் படித்திருக்கிறேன். ஆனால் ஒரே நேரத்தில் உலகின் ஒரு பகுதியில் இரவும் மற்றொரு பகுதியில் பகலும் ஏன் நிலவுகிறது என இன்று வரை புரியவில்லை.அதற்கு ஆதாரமான குறிப்பு ஏதும் விவிலியத்தில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை!

எப்படியோ உலகத்தில் வந்தோம் எப்படியோ போகிறோம். இதனிடையில் குழந்தைப்பருவம்,வாலிபம்,முதுமை என பல பருவங்களை கடந்து வர வேண்டியிருக்கிறது.

அவற்றோடு வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம், ஏமாற்றம், இழப்பு, ஏற்பு, நன்மை, தீமை என பல அனுபவங்களையும் காண வேண்டியுள்ளது.

இதுல பரலோகம் போகணும்னா கிறிஸ்தவத்தில திருமுழுக்கு @ ஞானஸ்நானம் எடுக்கணுமாமே! இல்லன்னா போக முடியாதாம். ஆனா சிலபேர் பரலோகத்துக்கு திருமுழுக்கு எடுத்திட்டு இந்த பூலோகத்தில பண்ற அசிங்கமும் அநியாயமுமிருக்குதே அது கொஞ்சநஞ்சமா!அப்போ இறந்தே பிறக்கின்ற குழந்தைகள் பரலோக வாய்ப்பை இழக்கின்றதா! இது குறித்த தெளிவான விளக்கங்கள் ஏன் இல்லை!

சாமியார்கள் சொல்றத கேட்டா நல்லது நடக்கும்,மேலோகத்திற்கு போகலாமுன்னு வேற கொஞ்சம் பேர் நம்புறாங்க.ஆனா நம்புற எல்லாருக்கும் நல்லது நடக்கிறது இல்லையே ஏன்!

கேளுங்கள் தரப்படும்ணு விவிலியத்தில சொல்லிருக்கு அதோட... நீ கேக்கிறதுக்கு முன்னமே உனக்கு என்ன தேவை என்ன என்பதை அறிவேன் அப்படின்னும் சொல்லியிருக்கு. கேக்கிறதா வேண்டாமா!

ஒவ்வொருவரின் செயல்களும், உலக நிகழ்வுகளும் இறைவனின் சித்தப்படி அதாவது இறைவன் எது நடக்க வேண்டும் என்று கருதுகிறாரோ அப்படித்தான் நடக்கும் என்கிறது விவிலியம். அப்படியென்றால் ஒருவர் நன்மை செய்ய நினைப்பதும் இன்னொருவர் தீமை செய்ய நினைப்பதும் எல்லாம் இறைவன் செயல் தானா? அப்போ தப்பு செய்றவங்க மேல தப்பில்லையா! (இப்போ நீங்க தலய பிச்சிக்கிறீங்களா? இருங்க இருங்க, கடைசி வர படிச்சிட்டு பிச்சுக்குங்க)

ஒருவரின் (ஆதாமின்) பாவத்தினால் மனித குலமே வெறுக்கப்பட வேண்டுமா? ஆதாமின் பாவமும் இறைவன் அறியாமல் நடந்திருக்காது அல்லவா! இன்று சிசுக்கொலை துவங்கி இனப்படுகொலை வரை, வறுமை துவங்கி பட்டினி வரை மனித குலம் படும் அல்லல்களை காணத்தான் ஆதாமை பாவம் செய்ய அனுமதித்தாரா!

இந்த கேள்விகள் ஒருபுறமிருந்தாலும் தவறாமல் காலையில் உதயமாகும் சூரியனும், இரவு பகல் மாறுதலும், மழையும், இயற்கையும் ஏதோ ஒன்றின் அல்லது எவரோ ஒருவரின் (இறைவன்)கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதாகத் தான் மனதிற்கு படுகிறது.

இந்த கேள்விகளும், அனுபவமும் அடுத்த நிமிடம் நன்மையோ தீமையோ என்ன நடந்தாலும் அதனை ஏற்றுக் கொள்கின்ற பக்குவத்தை எனக்கு தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

நாளை என்ன நடக்கும் என்பதைக் குறித்து கவலைப்படாமல் "கடவுளை நம்பு கடமையை செய்" என்ற மார்த்தாண்டம் எல்.எம்.எஸ் பள்ளியின் கருப்பொருளின் படி தான் இன்றும் ஓட்டிக்கொண்டிருக்கிறேன் வாழ்க்கையை... எதுவும் புரியாமல்.

July 21, 2010

ரமீஸ் ராஜா தொல்ல தாங்க முடியலயே

கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உள்ளது. ஆங்கிலத்தை தங்கள் முதல் மொழியாகக் கொண்டவர்களின் ஆங்கில வர்ணனையில் அதிகம் தவறுகள் நேர்வது இல்லை.

பல நேரங்களில் அவர்கள் கூட உளறுவதை கேட்க நேரிடும். இதனிடையில் ஆங்கிலத்தை தங்கள் முதல் மொழியாக கொள்ளாத இந்தியா, இலங்கை, பாகிஸ்தானைச் சார்ந்த சில வர்ணனையாளர்களின் கிரிக்கெட் வர்ணனையை கேட்கவே அபத்தமாக இருக்கும்.

அந்த வகையில் பாகிஸ்தானின் ரமீஸ் ராஜாவும் இந்தியாவின் அருண் லாலும் வர்ணனை என்ற பெயரில் கொடுக்கும் தொல்லை கொஞ்ச நஞ்சமல்ல.

ஐ.பி.எல் ல் விளையாடுபவர்கள் மட்டுமல்லாது வர்ணனையாளர்களும் குடித்து விட்டு உளறினார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டும்.

http://www.cricinfo.com/iplpage2/content/site/iplpage2/hearhear.html இந்த சுட்டியில் ஐ.பி.எல் போட்டிகளினிடையில் வர்ணனையாளர்கள் உளறிய சிலவற்றை தொகுத்திருக்கிறார்கள். படித்து ரசியுங்கள் !!

சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா-பாக் முதல் டெஸ்ட் ஆட்டத்தினிடையில் ரமீஸ் உளறிக்கொட்டினார் என்றால் மிகையல்ல. Partnership என்பதற்கு Relationship என்றது தான் அபத்தத்தின் உச்சம்.

இது மட்டுமல்லாமல் தேவையின்றி அவர்கள் நாட்டு அணியினரை அதிகம் புகழ்வதும் இந்த வர்ணனையாளர்களுக்கு அழகல்ல.

அருண்லாலும் ரமீசும் செய்கின்ற அட்டூழியத்தைப் பாருங்கள் இந்த காணொளியில்

July 14, 2010

அட எல்லாமே நடிப்பு தான் போங்க

"I would rather be HATED for who I am than LOVED for who I am not"

"நான் நானாக இல்லாததால் நேசிக்கப்படுவதை விட நான் நானாக இருப்பதால் வெறுக்கப்படுவதை விரும்புவேன்"

நண்பர் ஒருவரின் முகநூலின் (Facebook) பக்கத்தில் தற்செயலாக வாசிக்க நேரிட்ட ஆங்கில வாசகத்தின் (என்னாலான) தமிழாக்கம் இது.

இந்த வாசகமும் வில்லியம் ஷேக்ஸ்பியரின் "உலகம் ஒரு நாடக மேடை" என்ற வாசகமும் ஏறக்குறைய ஒன்றி போகக்கூடியவை .

இன்றைக்கு அநேகமாக அனைவரும் ஏதோ ஒரு முகக்கவசத்தை அணிந்தவர்களாகவே சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். சமூகத்தின் ஒவ்வொரு பிரஜையிடம் ஒவ்வொரு விதமாக பேசிப் பழக வேண்டிய கட்டாயத்தில் பலர்.

ஒருவரிடம் பரிமாறும் கருத்துக்களை அதே செறிவுடன் அதே உள்ளடக்கத்துடன் மற்றவருடன் பகிர்ந்து கொண்டால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பலருக்கும் இல்லை என்பதே உண்மை.

இன்னும் சிலர் உண்மையைச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; மாறாக அதே விஷயத்தைத் திரித்து சற்றே பொய்யாகக் கூறும் பட்சத்தில் ஏற்றுக்கொள்கின்ற வாடிக்கையும் உண்டு.

வழக்கமாக நட்பு பாராட்டும் பலரிடம் (ஏன் குடும்பத்தினருடன் கூட) சற்றே அவர்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்தோ அல்லது எதிராகவோ பேசினால் கூட கோபித்துக் கொள்ளுதலும் இன்று சகஜமே.

அவர்கள் என்ன சொன்னாலும் ஆமாம் ஆமாம் என நாம் ஜால்ரா அடித்தால் பிரியப்படுவார்கள்.இல்லையென்றால் முகத்தை திருப்பிக்கொண்டு போவதும் தொடரத்தான் செய்கிறது.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஒருவரின் நன்மைக்கென்று அவரது கருத்திலிருந்து நாம் மாறுபட்டாலும் அது நிமித்தம் நம் மீது கோபம் கொள்கின்ற ஜென்மங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எவர் எப்படி இருந்தாலும் எது எப்படி ஆனாலும்... உண்மையாகவும், நியாயத்தின் பக்கமும் இருப்பதே எப்போதும் அழகு. இருக்கும் விதமாகவே இருப்போம்; மற்றவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக நடிக்க தேவையில்லை. அதைத் தான் இந்த ஆங்கில வாக்கியம் அருமையாக சொல்கிறது. "I would rather be HATED for who I am than LOVED for who I am not"

July 12, 2010

FIFA 2010 சில நினைவுகள்


 


July 11, 2010

தோனி,மதராசப்பட்டினம்,கால்பந்து இறுதிப்போட்டி இன்ன பிற

தோனி

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் தோனிக்கு கல்யாணம் ஆயிடிச்சா? என்னது காந்திய சுட்டுட்டாங்களா அப்பிடின்னு காமெடி பண்ற மாதிரி தான் இன்னைக்கு பலரும் கேள்வி கேக்கிறாங்க. அந்த அளவுக்கு 'தல'(அஜீத் ரசிகர்கள் மன்னிக்க... இவரு கிரிக்கெட்டுக்கு தல :)) சத்தமே இல்லாம கல்யாணத்த முடிச்சிருக்காரு. வாழ்த்துக்கள் மிஸ்டர் கூல் தோனி.

மதராசப்பட்டினம்

வெகு நாட்களுக்கு பின்னர் தமிழில் ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்த்த நிறைவு திரையரங்கை விட்டு வெளியே வரும் போது இருந்ததை கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.இந்த மாதிரியான ஒரு திரைப்படத்தை எடுக்க முனைந்ததற்கே திரைப்படக் குழுவினரைப் பாராட்டலாம்.திரையரங்கின் வெளியே இதே விஷயத்தைக் குறிப்பிட்டு பாராட்டிய குடும்பங்களை காணமுடிந்தது(குவைத்தில்). என்றாலும் ராவணனுக்கு வந்த கூட்டம் இங்கு மிஸ்ஸிங்.

அந்த காலத்து மதராஸை அருமையாக காட்டியிருக்கிறார்கள். கலையும் ஒளிப்பதிவும் வெகுவாக பாராட்டப்பட வேண்டியவை. பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் அசத்தியிருக்கிறார். என்றாலும் "வாம்மா துரையம்மா" என்ற பாடலுக்கு உதித் நாராயணனை பாட அழைத்து அந்த பாடல் வரிகளை ஏன் அசிங்கப்படுத்தினார்கள் என்பது தான் புரியவில்லை.

"ஆருயிரே" பாடலை படமாக்கிய இடமும், விதமும் வெகு அருமை. 'Amy Jackson' ன் மிக நேர்த்தியான நடிப்பு படத்திற்கு மேலும் சிறப்பு. அவரை இயக்குனர் பயன்படுத்தியிருக்கும் விதம் பாராட்டப்பட வேண்டியது. ராவணனில் அரைகுறை ஆடையுடன் ஐஸின் அங்கங்களை காண்பித்து முகம் சுளிக்க வைத்த ஆபாசம் துளியும் இங்கு இல்லை என்பது ஒரு பெரிய சமாதானம். ஏமி பல இடங்களில் நடிகை நிஷா அமோகாவை நினைவுபடுத்துகிறார்.


ஏமியின் இணையதளமான இந்த http://www.amylouisejackson.com/ தளத்தில் இருக்கும் புகைப்படங்களுக்கும் இந்த திரைப்படத்தில் அவர் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்திற்கும் இருக்கும் வித்தியாசமே இயக்குனரின் வெற்றி.

மறைந்த ஹனிஃபாவும் பிற துணை நடிகர்களும் சிரிக்க வைத்து வயிற்றை பின்னி எடுக்கிறார்கள். குறிப்பாக ஆங்கிலம் கற்கையில் தமிழில் 'அ' விற்கு அடுத்து 'ஆ' என்றால் ஆங்கில 'A' விற்கு பின்னர் 'ஏ' வும் 'B' விற்கு பின்னர் 'பீ' யும் அல்லவா வரவேண்டும் என்கின்ற போது திரையரங்கே சிரிப்பலையில் மிதக்கிறது. மதராசப்பட்டின திரைப்பட குழுவிற்கு வாழ்த்துக்கள்.

கால்பந்து-FIFA 2010 FINALS

ஜூன் 11 அன்று துவங்கிய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று ஜூலை 11 அன்று முடிவுறப்போகின்றன. இதுவரை உலகக்கோப்பையே வெல்லாத நெதர்லாந்து @ ஹாலந்தும் ஸ்பெயினும் இறுதிப்போட்டியில் ஆடவிருக்கின்றன. நெதர்லாந்து ஏற்கெனவே 1974 மற்றும் 1978 ல் இறுதிப்போட்டியில் ஆடியிருக்கிறது. ஸ்பெயினுக்கு இதுதான் முதல் இறுதிப்போட்டி.

ஜெர்மனியைச் சார்ந்த ஆக்டோபஸ் ஒன்று ஸ்பெயினுக்கு தான் வெற்றி என்று கணித்திருப்பதாக சொல்லுகிறார்கள். (இதுல கூடவா மூடநம்பிக்கை) இதற்கு வலுசேர்ப்பார் போல் இதுவரை (நேற்றைய ஜெர்மனி-உருகுவே ஆட்டம் உட்பட) ஆக்டோபஸ் கணித்தவை எல்லாம் பலித்திருக்கிறது.

ஸ்பெயினுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமிருப்பதாக உலகக்கோப்பை போட்டிகள் துவங்கும் முன்னரே எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.எனது கணிப்பும்,ஆக்டோபஸின் கணிப்பும் நிஜமாகுமா என்பது இன்று இரவு தெரிந்து விடும்.

Google-Doodle I Love Soccer

இன்று Google @ கூகுள் இணையதளத்தின் முகப்பில் கால்பந்தினை குறிப்பிடும் விதம் சின்னம்(Logo) ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இன்று முழுவதும் அந்த சின்னம் இடம் பெறும் என கூகுள் அறிவித்திருக்கிறது.

கால்பந்தை கருவாக வைத்து கூகுளின் சின்னத்தை வரையும் 17 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில் தெரிந்தெடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. அதனை வரைந்தவர் பதினான்கே வயதான பிரான்சை சார்ந்த Barbara Szpirglas. இவர் சர்வதேச அளவில் வெற்றி பெற்றவர்.

மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க பகுதிகளுக்கான வெற்றியாளர் துபாயில் வசிக்கும் பதினேழு வயதான அனிருத் S மேனன் என்பவர். அவர் ஒரு இந்தியர் என்பதில் நமக்கும் பெருமை தான். அவர் வரைந்த கூகுள் சின்னம் கீழே.

பங்களாதேஷ் முதன்முறையா இங்கிலாந்தை ஒருநாள் கிரிகெட்டில் தோற்கடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

July 03, 2010

FIFA - ஆனைக்கும் அடி சறுக்கும்

என்ன தான் பெரிய இணைய தளமானாலும் சிறு சிறு தவறுகள் நேர்வது இயல்பு தான்.

உலகம் முழுதும் கடந்த நான்கு வாரங்களாக உற்று நோக்கிவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நிகழ்வுகளை சர்வதேச கால்பந்து பேரவை http://www.fifa.com/ என்ற தளத்தில் நொடிக்கு நொடி தரவேற்றி வருகிறது.

அந்த தளத்தில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் அணிகளுக்கு எதிரான போட்டியின் முடிவில் ஆரம்பத்தில் 'ஸ்பெயின்' காலிறுதி போட்டியில் "ஜப்பானை" சந்திக்கும் என்று (தவறுதலாக) குறிப்பிட்டிருந்தார்கள்.


சில நிமிடங்களுக்குள்ளாக பராகுவே என்று சரி செய்தும் விட்டார்கள்.

இது தான் ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதோ!! இந்த பழமொழிக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு இன்றும் நேற்றும் நடந்து முடிந்த காலிறுதிப் போட்டிகள்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தென் அமெரிக்க நாடுகள் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா இரண்டும் காலிறுதியிலேயே வெளியேறி விட்டன. தென் அமெரிக்காவில் இருந்து எஞ்சியிருப்பது உருகுவே மற்றும் பராகுவே மட்டுமே. பராகுவே நிலைக்குமா விடைபெறுமா என்பது இன்று தெரிந்து விடும்.

July 01, 2010

சமய @ மத குறியீடுகளும் பள்ளிக்கூடங்களும்

இத்தாலிய பள்ளிக்கூடங்களில் சமய குறியீடுகள் வைப்பதற்கு குறிப்பாக சிலுவையை வைப்பதற்கு தடை விதித்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஒன்று 2009ல் அளித்த தீர்ப்பு பலவிதமான வாதங்களை எழுப்பியிருக்கிறது.

அதனை எதிர்த்து இத்தாலி அரசு தற்போது வழக்கு தொடர்ந்திருக்கிறது. பல ஐரோப்பிய நாடுகளும் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கின்றன.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த தடை உத்தரவு வர காரணமாக இருந்தது கத்தோலிக்க பெண்மணி ஒருவர் என்பது தான்.

நீதிமன்ற தீர்ப்பு நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய விஷயம். சிறார்களிடம் எந்த விதமான கருத்துக்களையும், எண்ணங்களையும் வலுக்கட்டாயமாக ஏற்படுத்துதல் தவறான அணுகுமுறையே.

அவர்கள் வளரும் குடும்ப சூழ்நிலையில் எந்தவிதமான இறைநம்பிக்கையை கொண்டிருந்தாலும், எந்த விதமான குறியீடுகளை பின்பற்றினாலும் பள்ளிக்கூடம் போன்ற பொது இடங்களில் குறிப்பாக பலவிதமான இறை நம்பிக்கையுடைவர்கள் மத்தியில் சக மனிதனாக மனிதம் பாராட்டுதல் தான் அழகேயல்லாமல் சமயங்களை காரணம் காட்டி பிரித்தல் அழகாயிராது.

மனிதம் போற்றும் எண்ணம் தோன்றுவதற்கு இது போன்ற சமய, மத, இறை நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட பள்ளிக்கூட முறைகள் நிச்சயமாகவே வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மதங்கள் வாழ்ந்தது போதும் மனிதம் வாழட்டும்.
Related Posts with Thumbnails