August 29, 2010

தலைமுறைகள் - அன்றும்! இன்றும்!!

எல்லாமே இயந்திரமாகிப் போன இன்றைய காலகட்டத்தில் நாம் இயங்குவது வெகு அபூர்வமாகிப் போய்விட்டது.அலுவலகப் பணியாகட்டும் இல்லை அடுக்களை பணியாகட்டும் இல்லை நம் அன்றாட பணியாகட்டும் எதற்கும் தயாராக இருக்கிறது இயந்திரங்கள்.

கடிகாரம் அல்லது மொபைலில் அலாறம் என்ற பெயரில் அலறுதலில் காலையிலேயே தொடங்குகிற இயந்திரத்தின் பயன்பாடு ட்ரெட்மில், வாக்கும் க்ளீனர், வாஷிங் மெஷின், குக்கர், மிக்சி, கார், பைக், கம்ப்யூட்டர் என தொடர்கிறது.  

அதிகாலையில்  ஆசுவாசமாக இயற்கையின் அழகை ரசித்தபடி வெளியே ஓடுவதையோ நடப்பதையோ இன்று பலர் விரும்புவதில்லை. ட்ரெட்மில் இருக்கிறப்போ வெளியே ஏன் போறோம்; குக்கரும், மிக்சியும் சமையலை எளிதாக்குகையில் மண் சட்டியும், அம்மியும் என்னத்திற்கு. காரும், பைக்கும் இருக்கையில் நடப்பதும் ஓடுவதும் எதற்கு என்ற ரீதியில் தான் இன்றைய நிலைமை இருக்கிறது.  

இப்படி படிப்படியாக உடலுக்கு அதிகம் உளைச்சல் தராத பலப்பல இயந்திரங்களை நம்பியே வாழ்ந்து விட்டோம் தொடர்ந்து வாழ்ந்தும் வருகிறோம். 

ஒருபுறம் இயந்திரங்கள் பெருகப் பெருக நம் உடலான இயந்திரம் நம்மை அறியாமலே சிறுமை அடைவது தான் நம்மில் பலரும் அறியாத உண்மை. அத்தனை எளிதில் தொற்றாத வியாதிகளும், புதுப் புது வியாதிகளும் நம் முன் வியாபித்திருப்பதை சகஜமாக காண முடிகிறது. நாற்பது வருடங்கள் முன்னர் இந்த நிலைமை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

ஒருவரின் சராசரி வாழ்நாள் 65 வருடங்கள் என்றிருந்த காலம் மாறி இன்று 45 ஆகி நிற்பதற்கு இந்த இயந்திரங்களும் இயந்திரம் போன்ற வாழ்க்கையும் தான் காரணம் என்றாலும் மிகையல்ல. 

27 கிலோமீட்டர் தொலைவு சர்வ சாதாரணமாக மிதிவிண்டி மிதித்து ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஒருவரால் வர முடியுமா என்ற ஆச்சரியத்துடன் இருபது வருடங்கள் பின்னிட்டு பார்க்கிறேன். அதே போன்று திரும்பிச் செல்ல 27 கி.மீ மிதிவிண்டி செலுத்தியாக வேண்டும். 

எனது தாத்தாவான ஐயப்பன் @ அருளப்பன் தான் நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் வரை 27 கி.மீ வரை மிதிவண்டி செலுத்திய அந்த நபர். அதுவும் அவரது அறுபதாவது வயதில் என்கின்ற போது தான் மேலும் ஆச்சர்யம்.

அன்று வியர்வை சிந்த உழைத்தார்கள்; நன்றாய் உணவருந்தினார்கள். உற்சாகமாய் நோய் நொடியின்றி வாழ்ந்தார்கள். இயந்திரமயமாகிப் போன இன்றைய உலகில் உடல் உழைப்பு என்பது குறுகிப் போனது ஆனால் சாப்பாட்டில் மட்டும் எவரும் எந்த குறையும் வைப்பதில்லை. அருந்திய உணவிற்கு ஏற்ப உடல் உழைப்பு இல்லாததால் கேள்விப்படாத வியாதிகளும் எளிதில் ஒட்டிக்கொண்டு விடுகின்றன.

உடல் உழைப்பை விட மன உழைப்பு அதிகமாகிப் போனது இன்று. எப்போதும் பணம், பங்கு என்ற சிந்தனைகளால் மனதை சிதைத்துக் கொண்டிருப்பதும் ஒருவகையில் உடல் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

பணம் மற்றும் பங்கிற்கு அப்பால் பந்தங்களும் உண்டு என்பதை நினைவுகூர்ந்து இயந்திரங்களை மட்டுமே நம்பாமல் உடல் உழைப்பையும் ஊக்குவித்தால் உடலும், உள்ளமும் நலம்பெறும் என்பது திண்ணமே. 

இந்த புகைப்படம் போன்றே அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்குமான வித்தியாசம் என்ற சிந்தனையில் பெயர் தெரியாத ஒருவரால் உருவாக்கப்பட்ட நகைச்சுவைச் சித்திரம் ஒன்று உண்டு.

அந்த சித்திரத்தை கூகுளில் பலமுறை தேடியும் கிடைக்காமையால் நானே சில புகைப்படங்களை உட்புகுத்தி இங்கு பதிவேற்றியிருக்கிறேன். ஏதும் புரிகிறதா?!

August 28, 2010

விசித்திரமான மனித மனங்கள்

இந்த வாரம் கேள்விப்பட்ட இரு விடயங்கள் மனதை வெகுவாக கனக்கச் செய்தன. இரண்டு விடயங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்றாலும் எதிரானவை. அவற்றை வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளலாம் என்று தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

முதல் விடயம் சந்தேகத்தினால் சொந்த மகளின் உயிரை எடுத்த தந்தையின் கோரம் என்றால் இரண்டாவது விடயம் நேசத்தால் சொந்த சகோதரனுக்காக தனது உயிரை விட்ட சகோதரனின் மெய்சிலிர்க்க வைக்கும் பாசம்.

இரு தினங்கள் முன்பு, மதுரையில் இளம்பெண் ஒருவர் தனது தந்தையால் (மூன்று வாலிபர்கள் துணையுடன்) கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்த பெண்ணின் காதில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றியிருக்கின்றனர். அதன் முன்னர் ஆண் செவிலியன் (Male NURSE) ஒருவனால்  ஊசி வழியாக மயக்க மருந்தும் கொடுக்கப்பட்டிருக்கிறார் அந்த இளம்பெண். கேட்கவே கொடூரமாக இருக்கிறது, அந்த பெண் எப்படி சகித்திருப்பாள் என்பதை நினைத்தால் மனம் மேலும் கனக்கிறது.

இத்தனைக்கும் அவளுக்கு உறவினர் ஒருவருடன் சில தினங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட அவளது தந்தை கூறுகையில் 'அவளது வருங்கால கணவனுக்கு உண்மையாக இருக்க மாட்டாளோ என சந்தேகம் எழுந்ததால் தான அவளை கொலை செய்ததாக கூறியிருக்கிறார்'. இதற்கு முன்னர் பல ஆண்களுடன் அவளது பெண் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதனால் சந்தேகம் மேலும் வலுத்ததாகவும் கூறியிருக்கிறார்.  

தனது பெண்ணின் நடத்தை சரியில்லை என்றால் அவளுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்தியிருக்கலாம். இல்லையென்றால் திருமணத்திற்கு பின்னர் திருந்தும் வாய்ப்பு இருக்கிறதா என நிதானமாக கவனித்திருக்கலாம். இப்போது தனது பெண்ணின் வாழ்க்கையையும், அவரது வாழ்க்கையையும், குடும்பத்தினரின் வாழ்க்கையையும் ஒரு சேர தொலைத்து விட்டு நிற்கிறார் ஒரு தகப்பன்.

உயிரை எடுத்த ஒருவரின் கொடிய மனம் இப்படியென்றால் கனிவான மனம் கொண்டு சொந்த சகோதரனுக்காக தனது உயிரை விட்ட ஒருவரின் நெஞ்சம் நெகிழச் செய்த நிகழ்வும் அமெரிக்காவில் இந்த மாதம் நடந்திருக்கிறது. Ryan Arnold, Chad Arnold ஆகிய இருவரும் சகோதரர்கள், இவர்களில் Chad ற்கு (PSC) Primary Sclerosing Cholangitis எனும் நோயினால் கல்லீரல் முற்றிலுமாக செயலிழந்து விட்டது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் அவர் சில மாதங்களில் மரணமடையக்கூடும் என மருத்துவர்கள் காலக்கெடு குறித்து விட்டார்கள்.

இதையறிந்த Ryan Arnold, தானாகவே தனது கல்லீரலின் ஒரு பகுதியை தனது சகோதரனுக்கு அளிக்க முன்வந்திருக்கிறார். Chad எனது சகோதரன், அவனை நான் அதிகம் நேசிக்கிறேன், இன்னும் பல வருடங்கள் அவன் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை பதிவு செய்ய வந்திருந்த FOX தொலைக்காட்சி நிருபர்களிடம்  Ryan தெரிவித்திருக்கிறார்.

ஆபத்தான அறுவை சிகிச்சை என்றாலும் ஒரு சதவீதம் மட்டுமே கல்லீரலை கொடுப்பவர்   மரணமடைய வாய்ப்புள்ள அறுவை சிகிச்சை இது என கடந்த கால அறுவை சிகிச்சைகள் மூலம் தெரியவந்திருக்கின்றன. அதோடு கல்லீரலைக் கொடுப்பவருக்கே அதிக பின்விளைவுகள் ஏற்படும் என்பதையும் கொலரோடா பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர்கள் Ryan உடன் தெரிவித்திருக்கின்றனர். இருந்தும் அவர் இதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

ஜூலை 29 அன்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு Ryan ன் 60 % கல்லீரல் Chad ற்கு பொருத்தப்பட்டிருக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து இருவரும் ஜூலை 30அன்று பொதுவான சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். எதிர்பாராத விதமாக ஜூலை 31 அன்று Ryan ன் உடல்நிலை மோசமாகியிருக்கிறது, அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசமளிக்கும் எந்திரத்தில் (Ventilator) பொருத்தப்பட்டிருக்கிறார்.

நடுவிலிருப்பவர் மரித்துப் போன Ryan Arnold
இரு தினங்களுக்கு பின் ஆகஸ்ட் 2 அன்று சிகிச்சை பலனளிக்காமல் Ryan Arnold மரித்துப் போனார். எவ்வித நோய் நொடியும் இன்றி மனைவி மற்றும் 1,4 மற்றும் ஆறே வயதான மூன்று மகன்களுடன் வாழ்ந்து வந்த Ryan Arnold இன்று இந்த உலகில் இல்லை. சகோதரனுக்காக தனது உயிரை தியாகம் செய்திருக்கிறார்.

அவரது கல்லீரலால் இன்று உயிருடன் இருக்கும் Chad Arnold அவரது மரணம் குறித்து கூறுகையில், வெளியே அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட தழும்புடனும், உள்ளே எனது சகோதரன் மரணத்தால் ஏற்பட்ட பெரிய தழும்புடனும்   வாழ்ந்து வருகிறேன் என்றிருக்கிறார். மற்றவர்களுடன் எவ்விதம் கனிவாக இருக்க வேண்டும் என காண்பித்து சென்றிருப்பதாகவும் மரித்த தனது சகோதரனைக் குறித்துக் கூறுகிறார்.

மனதை கனக்கச் செய்து, கண்களில் கண்ணீரையும் வரவழைத்தது கனிவான இருதயம் கொண்ட Ryan Arnold ன் உயிர் தியாகம்.

CARING and SHARING are the things that are Still keeping this Cruel world a HAPPIEST and MOST BEAUTIFUL Place என எங்கேயோ படித்தது இப்போது நினைவிற்கு வருகிறது. அந்த வாக்கியத்தில் தான் எத்தனை உண்மை.
நன்றி: FOX & NDTV

August 27, 2010

அன்னைத் தெரசா ஒரு மீள் பார்வை


இது நான் சென்ற வருடம் எழுதிய இடுகையின் மீள் பதிப்பு. இதோடு 300 முறை வலைப்பதிவு எழுத வேண்டும் என்று உந்தப்பட்டிருக்கிறேன். அதாவது இது எனது 300 ஆவது பதிவு(மூன்று மீள் பதிவுகளோடு)

என்னை நேசிக்கும், வெறுக்கும், ஆதரவளிக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துதலையும் தெரிவிக்கிறேன்.

----

அல்பேனிய நாட்டு குடிமகளாக பிறந்து இந்திய குடிமகளாக இறந்த ஒரே பெண்மணி அநேகமாக Agnes Gonxha Bojaxhiu என்ற தெரசாவாக மட்டும் தான் இருக்க முடியும்.

(வேற்று நாட்டில் பிறந்து இந்திய குடியுரிமை பெற்ற தெரசாவின் நூற்றாண்டை கொண்டாடும் இந்த வேளையில் தமிழர் (விஸ்வநாதன் ஆனந்த்) ஒருவரின் இந்திய குடியுரிமையைக் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டிருப்பது தான் வருத்தமளிக்கும் விஷயம்.)

அந்நிய நாட்டில் பிறந்தவராயிருந்தாலும் இந்திய நாட்டில் ஆதரவற்றோருக்காய் அவர் செய்த அரும்பணிகளை நாம் அந்நிய படுத்தி விட முடியாது.

இன்னல்கள் பலவற்றின் இடையிலும் அனாதைகளுக்காக அயராது உழைத்த ஆக்னஸ் @ தெரசாவின் கனவு சாதி, சமய, இன பாகுபாடின்றி அன்பையும் அரவணைப்பையும் அளிப்பது மட்டுமாகவே இருந்தது.

ஒருமுறை நன்கொடை வசூலித்து கொண்டிருந்த அன்னை தெரசாவின் கரங்களில் ஒருவர் துப்பியிருக்கிறார். தெரசாவோ அதனை துடைத்து விட்டு "இதனை நான் வைத்துக் கொள்கிறேன்... பசியிலிருக்கும் அனாதைகளுக்காக உதவி ஏதும் செய்யங்கள் என மீண்டும் கை நீட்டியிருக்கிறார்.

அத்தனை அரும்பணிகளை ஆற்றிய பின்னர் கூட.... தன்னைக் குறித்து கூறும் போது "அன்பின் கடிதத்தை இவ்வுலகத்திற்கு எழுதுகின்ற இறைவனின் கரங்களில் இருக்கும் சிறிய பென்சில் மட்டுமே நான் என்கிறார்"

தெரசா அவர்களின் அறப்பணி இந்தியர்களை சோம்பேறி ஆக்குகிறீர்கள்; மீண்டும் பிச்சை எடுக்க தூண்டுகிறீர்கள்; போன்ற பல கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை...

பசியிலிருப்பவனுக்கு மீனை கொடுக்காமல் மீனை பிடிப்பது எப்படி என சொல்லி கொடுக்கலாமே என்ற கேள்வி ஒன்றிற்கு "அவர்கள் மீன் பிடிப்பதற்கு ஏற்ற மனநிலையை நான் உருவாக்குகிறேன்" ; உயர்நிலைகளில் இருக்கிற நீங்கள் மீன்பிடிக்க (வேலைவாய்ப்பினை) ஏற்படுத்தி கொடுங்கள் என கூறியிருக்கிறார்.

தான் செய்த பணிகளில் தெளிவாக இருந்த தெரசாவே தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இறைவன் (அவரில்) இருப்பதை குறித்த பல குழப்பங்களுக்கும் ஆளாகி இருக்கிறார் என்பது மறுக்கமுடியாத ஒன்று .

அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள் இங்கே புகைப்படங்களாய்.

Agnes Gonxha Bojaxhiu @ தெரசா ஆகஸ்ட் 26, 1910 Macedonia ல் (முந்தைய யூகொஸ்லேவியா) அல்பேனிய தகப்பனாருக்கு பிறந்தார்


தெரசா அவர்கள் பிறந்த இடம்.

ஆகஸ்ட் 26 ல் பிறந்தாலும் தான், திருமுழுக்கு எனப்படும் Baptism எடுத்த தினமான ஆகஸ்ட் 27 ஐ தான் பிறந்த நாளாக கருதினார்.

1928 ல் அயர்லாந்தில்... Sisters of Loretto எனப்படும்(இந்தியாவில் பணி செய்ய பயிற்றுவிக்கப்படும் இடம்) குழுவில் சேர்ந்தார்.


1929 ல் இந்தியாவில் பணி செய்ய ஆரம்பித்தார்.

1931 ல் தனது பெயரை தெரசா என மாற்றி கொண்டார்.

1931-1946 வரை கல்கத்தாவில்(St.Mary's High School) ஆசிரியையாக பணியாற்றினார்.

1944 ல் Principal ஆக பதவி உயர்வு பெற்றார். அதே வருடம் காசநோயால் (TB) பாதிக்கப்பட்டார்.


1946 ல் டார்ஜிலிங் பகுதிக்கு ஓய்விற்காக செல்கையில் ஏழைகளுக்காக பணி செய்ய வேண்டுமென இறைவனால் அழைக்கப்பட்டதாக உணர்ந்தார்.


1948 ல் இந்திய குடியுரிமை பெற்றார்.
1950 ல் ஏழைகளுக்கு உதவும் வகையில் Missionaries Of Charity என்ற அமைப்பை உருவாக்கினார்

1952 ல் Nirmal Hrudai என்ற முதியவர்களுக்கான பாதுகாப்பு அமைப்பை அமைத்தார்.

1979 ல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்
பத்மஸ்ரீ, பாரத ரத்னா, புருசெல்ஸ் கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம், அமைதிக்கான நேரு பரிசு என பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.


1985 ல் அமெரிக்க அதிபர், ரொனால்ட் ரீகனிடமிருந்து Presidential Award Of Freedom என்ற விருதை பெறுகிறார்.
1991 ல், The Salvation Army என்ற தொண்டு நிறுவனம் மற்றும் கிறிஸ்தவ அமைப்பின் உலக தலைவர் ஈவா பரோஸ் அம்மையாரை சந்திக்கிறார்.
1996 ல் அமெரிக்காவின் கவுரவ குடியுரிமையை பெறுகிறார்.மகாத்மா காந்தியடிகளின் சமாதியில்


June 18, 1997- வேல்ஸ் இளவரசி டயானா உடன்

இரு மாதங்களுக்கு பின்னர் அதே வருடம் இருவரும் மரணத்தில் இணைந்தார்கள் (ஆகஸ்ட் 31 ல் டயானாவும் செப்டம்பர் 5 ல் தெரசாவும் காலமானார்கள்)


டயானா குறித்து தெரசா


முழு (இந்திய) ராணுவ மரியாதை உடன் தெரசாவின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.2003 ல் வாடிகனால் கவுரவிக்கப்பட்டார். அதனை கன்னியாஸ்த்ரீ ஒருவர் ஏற்று கொள்கிறார்.
செப்டம்பர் 5, 1997 ல் மாரடைப்பால் காலமான அன்னை தெரசா இன்றும் பலரது மனதில் வாழ்கிறார்.

August 26, 2010

விஷி ஆனந்த் விஷயத்தில் நாடகமாடும் இந்திய அரசு


மயிலாடுதுறையில் பிறந்த இந்தியத் தமிழரான விஸ்வநாதன் ஆனந்த், இந்தியர் தானா என்ற சந்தேகம் இந்திய அரசுக்கு வந்திருக்கிறதாம். இந்த கொடுமய எங்க போய் சொல்றதுக்கு.

அதற்கு காரணம்,விஷி சில காலம் ஸ்பெயினில் குடும்பமாக தங்கி இருந்தது என்கிறார்களாம் இந்திய வெளியுறவுத் துறையும்,மனித வள மேம்பாட்டு அமைச்சகமும்.

சதுரங்கத்தில் இந்தியாவிற்காக பல விருதுகளையும்,பெருமைகளையும் பெற்றுத்தந்த இந்தியர் ஒருவருக்கு இந்திய அரசாங்கம் காட்டுகிற மரியாதை இது தான் போலும்.

தமிழனை இதை விட எவரும் அவமதித்து விட முடியாது. இந்த சர்ச்சை வரக் காரணம் விஷிக்கு வழங்கப்படுவதாக இருந்த கவுரவ டாக்டர் பட்டம் தான்.தான் அவமதிக்கப்பட்டிருப்பதால் விஷி அதனை மறுத்தது சரியெனவே படுகிறது.

எவருக்கெல்லாமோ கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கையில் எல்லாம் எழாத சர்ச்சை விஸ்வநாதன் ஆனந்திற்கு வழங்கப்படுகையில் எழுந்திருப்பது தான் இன்னும் ஆச்சர்யம்.

இத்தனையும் செய்து விட்டு இப்போது விஷியிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்டிருக்கிறதாம்.மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான "கபில் சிபல்"இந்திய அரசு சார்பில் மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதைத் தான் "பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுறது" என்பதோ!

ஒருவேளை விஸ்வநாதன் ஆனந்த் "இத்தாலி"யிலோ அல்லது வட இந்திய மாநிலம் ஒன்றிலோ பிறந்திருந்தால் இந்த கேள்வியை இந்திய அரசாங்கம் கேட்டிருக்காதோ என்னமோ!?

August 25, 2010

எங்கே செல்லும் இந்த (கிரிக்கெட்) பாதை

ஆறு மாதத்திற்கும் குறைவான காலமே இருக்கிறது கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளுக்கு. 2007 ல் முதல் சுற்றில் பங்களாதேஷிடம் அடைந்த தோல்வியோடு வெளியேறிய இந்திய அணி 2011 உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு தன்னை இன்னமும் தயார் செய்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

கிரிக்கெட் ஆட்டத்திற்கு முன்னர் சூதாட்டமும் பணமும் பிரதானமாகி நிற்கிறது இன்று இந்திய கிரிக்கெட் உலகில்.

2007 ல் துவங்கப்பட்ட ஐ.சி.எல் அதற்கு போட்டியாக துவங்கப்பட்ட ஐ.பி.எல் இவை எதுவும் இந்திய கிரிக்கெட்டிற்கு நன்மையாக அமையவில்லை என்பது தான் வருத்தம் தரும் விஷயம்.

ஐ.பி.எல்லும் ஐ.சி.எல்லும் வீரர்களுக்கு பணம் அளித்த அளவிற்கு அவர்களுக்கு திறன் ஏதும் அளித்ததாகத் தெரியவில்லை.

சரியான வேகப்பந்து வீச்சாளர் எவரும் இன்னமும் அணியில் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு. இருக்கின்ற வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் சரியான உடல்திறனோடு இல்லாததும் குறையே.

ஷகீர் கான், பாலாஜி, ஆர்.பி.சிங், இர்ஃபான் பத்தான், இஷாந்த் ஷர்மா, பிரவீன் குமார் என பலர் இருந்தாலும் சீராக விக்கெட் எடுத்து Match Winners என சொல்லிக்கொள்ளும் படியாக எவரும் இல்லாதது ஏனோ!

ஆல் ரவுண்டர் என பார்த்தால் அதற்கும் சொல்லிக்கொள்ளும்படி எவருமில்லை. சேவாக், யுவ்ராஜ், ரைனா இவர்களைத் தவிர வேறு எவரையும் சரியாக இந்தியா இது வரை பயன்படுத்தியதில்லை. ரவீந்திர ஜடேஜாவிற்கு வாய்ப்புக்கள் கொடுத்தும் அவர் ஏதும் சாதித்ததாக தெரியவில்லை.

2007 உலகக்கோப்பைக்குப் பின்னர் பெரிதாக சாதித்தது என்றால் 2007 T-20 உலகக்கோப்பையை வென்றதும், 2008-ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு காமன்வெல்த் ஒருதின கோப்பையை வென்றதும், டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றதுமே.

மற்ற அணிகள் குறிப்பாக இந்திலாந்தும், இலங்கையும் வெகுவான முன்னேற்றங்களைக் கண்டுள்ளன. புதியதாக அணிக்குள் வருகின்றவர்களும் அவர்கள் பங்களிப்பை சிறப்பாக அளிப்பதும் இதற்கு ஒரு காரணம்.

பாகிஸ்தானில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறந்து விளங்கினாலும் அணியாக ஆடும் போது சொதப்புகிறார்கள். வீரர்கள் வருவதும் போவதுமாக இருப்பதும் அவர்களின் காமெடி கிரிக்கெட் வாரியமும் சரியானால் நல்லது நடக்கும். எனினும் இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிராக பெற்ற டெஸ்ட் வெற்றிகள் பாகிஸ்தானிற்கு உற்சாகம் அளிக்கக்கூடும்.

மற்ற அணிகள் பலவும் வலுவாக இருக்கையில் இந்தியா இன்னமும் பலவீனமாக இருப்பது அவர்களது உலகக்கோப்பைக் கனவை நனவாக்க முடியாமல் போனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

இந்தியா தனது முதல் ஆட்டத்தைத் தவிர மற்ற அனைத்து ஆட்டங்களையும் இந்தியாவிலேயே ஆடுகிறது.

பிப்ரவரி 19 அன்று பங்களாதேஷிற்கு எதிராக மிர்பூரில் தனது முதல் ஆட்டத்தை துவக்குகிறது. அது தான் உலகக்கோப்பை போட்டிகளின் ஆரம்ப ஆட்டமும் கூட.

இந்தியா மீண்டும் இந்த புகைப்படங்களில் இருக்கின்ற நிலைமைக்கு ஆகாமல் இருந்தால் சரிதான்.

August 15, 2010

சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?


இப்படியான விஷயங்களுக்கு எல்லாம் சுதந்திரத்தை காரணம் காட்டினால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை. இவை சிரிக்க மட்டுமே சிந்திக்க அல்ல :)

சுதந்திரமாக வீட்டில் எஸ்.எம்.எஸ்
செய்ய முடியவில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?

காதலித்த பெண்ணை
கல்யாணம் செய்ய முடியவில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?

சுதந்திரமாக சீரியலை-டி.வி
சீரியலை பார்த்து
அழ முடியவில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?

சுதந்திரமாக பேஸ்புக்கில் Farm Ville
விளையாட முடியவில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?

சுதந்திரமாக சுவர்களில்
பாட்டு பாட அனுமதியில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?
(பாட்டு பாடுவது என்னவென்று "வைகாசி பொறந்தாச்சு" திரைப்படம் பார்த்தவர்கள் புரிந்து கொள்ளக்கூடும்!!)

விளம்பரம் செய்யாதீர் என்றிருந்தும்
சுவரில் போஸ்டரை ஒட்டவில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?

நிறைவேற்றுகிறோமோ இல்லையோ
சுதந்திரமாக தேர்தல் வாக்குறுதிகளைக் கூட
முழ(ழு)ங்க முடியவில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?

செத்து மடியும் தமிழனுக்காக நாற்பது பேர்
பதவி விலகுவார்கள் என சொல்லி விட்டு
பதவி விலகாமல் இருப்பதற்கு கூட
சுதந்திரம் இல்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?

இப்படி... சுதந்திரமாக வலைப்பூவில்
மொக்கை கூட எழுத முடியவில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

August 07, 2010

பணமென்னும் பாதாளத்தில் தொலையும் பந்தங்கள்

 
பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும்,பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும் என பணத்தைக் குறித்து புழங்கிய பழமொழிகள் பல.

பணம் இருந்தால் பந்தம் பணம் இல்லையென்றால் பந்தம் 'அந்தம்' என்பதே இன்றைய நிலைமை. பணம் படுத்தும் பாடு இன்று கொஞ்ச நஞ்சமல்ல.

உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் ஒரு கொடிய மிருகமாக இன்று பணம் இருப்பதை மறுத்து விட முடியாது.

இன்று பணம் சம்பாதிக்க வளைகுடா நாடுகள், ஐரோப்பா என உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் தமிழர்கள் எண்ணிக்கை கணக்கிட முடியாதது. பணத்திற்காக ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற பாதுகாப்பற்ற, மனித உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளுக்கு செல்கின்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படி பணம் சம்பாதித்த பலர் இன்று உறவுகளைத் தொலைத்த கதைகள் ஏராளம். குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பலருக்கு பெரும்பாலான நேரங்களில் சொந்த பந்தங்களின் நல்லது கெட்டதுக்குக் கூட போகவியலாத நிலைமையை நினைத்தால் மனம் கனக்கிறது.

உறவுகளின் அழுகையையும், சிரிப்பையும் தொலைபேசியில் மட்டுமே கேட்டு நாட்களைக் கடத்துபவர்களின் மனநிலை எத்தனை கொடுமையானது என்பது அதனை அனுபவித்தால் மட்டுமே புரிகின்ற ஒன்று.

இப்படியாக (தூரத்து) உறவுகளை தொலைத்தவர்கள் ஒருபுறமென்றால்... அருகில் இருக்கும் உறவுகளையும் சகவாசிகளையும் தொலைத்த கதைகள் இன்னும் விசித்திரமானது.

ஓவர் டைம் என்ற பெயரில் ஒரே அறையில் உடன் தங்கியிருக்கும் சக தோழரைக் கூட சந்தித்து பேச வாய்ப்பில்லாத அளவிற்கு பணிபுரிகின்றவர்களும் இருக்கிறார்கள்.

அவர்களை எல்லாம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. பணம் மட்டுமே வாழ்க்கை என பலரும் நினைத்துக் கொண்டிருப்பது தான் கவலை தரும் விஷயம்.

இந்த காரணத்திற்கென்றே மேலதிக நேர (Over Time)பணிகளுக்கு இதுவரை சென்றதில்லை. உறவுகளிடம் உறவாடுவதை விட, சக ஜீவிகளிடம் நட்பு பாராட்டும் நேரத்தை விட மேலதிக நேர பணி தரும் பணம் எனக்கு அதிக சந்தோசத்தை தந்து விடும் என நான் கருதவில்லை.

----

கடந்த வாரம் குவைத்தில் நண்பர் ஒருவரை சந்திக்க நேரிட்டது. வழக்கத்திற்கு மாறாக மொட்டை அடித்திருந்தார். என்ன விஷயம் என கேட்டேன்... முடி கொட்டுவதால் தான் மொட்டை அடிக்க வேண்டியாகி விட்டது என்றார்.இந்த ஊர் தண்ணீர் சரியில்லாததால் முடி கொட்டுகிறது எனவும் தமிழகம் சென்றால் மீண்டும் முடி வளர்த்துக் கொள்ளலாம் எனவும் சொல்லிப் போனார். (வளைகுடாவில் இருப்பவர்கள் பலர் மொட்டையிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்)

அவரிடம்... நிச்சயமற்ற வருங்காலத்திற்காக நிகழ்காலத்தையும் உங்கள் உண்மையான தோற்றத்தையும் ஏன் இழக்கிறீர்கள்? அப்படி உங்கள் முடி கொட்டுவதை தடுக்க வேண்டுமென்றால் நீங்கள் தமிழகத்திலேயே இருந்து விடலாமே!! என கேட்டேன். அதற்கு அவரிடமிருந்து பதில் ஏதுமில்லை.

இப்படித் தான் இன்று பலர் பணம் சம்பாதிப்பதிலும் வருங்காலத்திற்காக நிகழ்காலத்தைத் தொலைத்து நிற்கிறார்கள்.

பணத்தினால் திருமணம் போன்ற பந்தங்களை வாங்கலாம் ஆனால் மனங்களை வாங்கி விட முடியாது என்பதே அப்பட்டமான உண்மை.

August 03, 2010

லேட்டஸ்ட் ஆத்திச்சூடி

ஔவையார்னா யாருன்னு கேக்கிற அளவிற்கு தான் இன்னைக்கு நிலைமை பரவலா இருக்குது.பள்ளிப்பருவத்தை திரும்பிப் பார்த்ததில் ஔவையார் மீண்டும் நினைவிற்கு வந்தார்.

இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில் ஔவையார் இருந்திருந்தால் இப்படியெல்லாம் யோசித்திருப்பாரோ என நான் யோசித்தது தான் இந்த லேட்டஸ்ட் ஆத்திச்சூடி.

கொஞ்சம் மொக்கை தான்... பொறுத்தருள்க. ஔவையாரின் ஒரிஜினல் ஆத்திச்சூடியையும் கீழே இணைத்திருக்கிறேன்.

ரட்டை செய விரும்பு

ர்குட் இல்லன்னா சினம்

யல்வது கற-இதத்தான நம்ம கறைவேட்டிகள் நேர்மை தவறாம பண்ணிக்கிட்டு இருக்காக

வது நமக்கேன்

ண்மை விளம்பேல்(உண்மையை சொல்லாதே)

ன் உறக்கம் கைவிடேல்

ன் எழுத்து இகழேல்(என் பதிவை மொக்கையா இருந்தா கூட படிக்காமல் இருக்காதே)

ற்பது... (கையூட்டு) ஏற்பது புகழ்ச்சி

யா வருமுன் உண்(அப்பா வந்தா அடி தான விழும்)

டன் பிறப்போடு ஒழுகு(ஐயா கட்சியும், அம்மா கட்சியும் இதத்தான பண்றாக)

டி ஒளியேல்(இப்ப உதவின்னு கேட்டா பல பேர் என்னமா ஓடுறாங்க)

வையார் பேசேல் (இன்னைக்கு ஔவையார்னா வட சுட்ட பாட்டியான்னு கேக்கிற அளவுக்கு இருக்குது!!)

அஃக்கப்போர் சுருக்கேல்

கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ :))

---

உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு

நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

2. ஆறுவது சினம்

கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல்

உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல்

ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே

5.உடையது விளம்பேல்

உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

6. ஊக்கமது கைவிடேல்

எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்

கணித, இலக்கண நூல்களைத் தவிற்காமல் நன்கு கற்க வேண்டும்.

8. ஏற்பது இகழ்ச்சி

இரந்து வாழ்வது இழிவானது.அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்

யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுக

உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடுபொருந்துமாறு நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல்

நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்

ருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13. அஃகஞ் சுருக்கேல்

அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.


நன்றி: தமிழ் விக்கி
Related Posts with Thumbnails