September 28, 2010

We Are Family - திரைப்படம் ஒரு பார்வை

தமிழில் இது போன்ற திரைப்படங்கள் வருவது மிகக்குறைவே. அப்படியே வந்தாலும் வசூலில் பெரிய சாதனை ஏதும் செய்யப் போவதில்லை என்பது வேறு விஷயம். பணம் இருந்தால் தான் பந்தங்கள் கூட பக்கத்தில் என்றாகி விட்ட இந்த காலத்தில் திரைப்பட உலகை அதிகம் குறை கூறுவதில் நியாயமில்லை தான்.

நகைச்சுவை, அடிதடி, குத்தாட்டம், பஞ்ச் வசனங்கள் ஏதும் இன்றி எடுக்கப்பட்டதற்காகவே இந்த திரைப்படத்தைப் பாராட்டலாம்.

கணவன், மனைவி மூன்று குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் மனைவியின் Perfectionism என்ற குணாதிசயத்தால் விவாகரத்து பெற்று தனியே போய் விடுகிறார் கணவன்/ திரைப்படத்தின் கதாநாயகன் அர்ஜூன் ராம்பால்.

Perfectionism என்பதற்கு ... அனைத்து விஷயங்களிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் அல்லது இந்த மாதிரி தான் செய்ய வேண்டும் என்ற வரைமுறையோடு இருத்தல் என பொருள் கொள்ளலாம். குழந்தைகளோ, கணவரோ அதற்கு எதிர்மாறாக செய்தால் கதாநாயகியான கஜோல் கோபித்துக் கொள்கிறார். அது திருமண விவாகரத்தில் போய் சேர்க்கிறது.

கதநாயகன் அர்ஜூன் தனியாக இருந்தாலும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதில் அதிகம் அக்கறை காட்டுகிறார். இந்த குடும்பத்திற்குள் 'கரீனா கபூர்' கதாநாயகனின் நண்பி வடிவத்தில் நுழைகிறார். அவரை அர்ஜூன் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க முயற்சிக்கிறார்.

குழந்தைகள் - கரீனா முதல் சந்திப்பு சுமூகமாக அமையாமல் போய்விடுகிறது. மூன்றாவது குழந்தை அஞ்சலியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கதாநாயகனின் நண்பி/கரீனா பிறந்த நாள் கேக்கை கையிலிருந்து தவற விடுவதால் வெறுப்பையும் சூனியக்காரி (Witch) என்ற பெயரையும் சம்பாதிக்கிறார் கரீனா.

கரீனாவால் தான், அம்மாவைப் பிரிந்து அப்பா இருப்பதாக மூத்த மகள் 'ஆல்யா' தவறாக நினைத்துக் கொண்டு மற்ற இரு குழந்தைகளிடமும் இதையே சொல்லி வைக்கிறார்.

பின்னர் ஒருவழியாக குழந்தைகளிடம் நெருங்கி விடுகிறார் கரீனா. இதனிடையில் கஜோலுக்கு (Cervical Cancer) புற்றுநோய் இறுதி நிலையில் இருப்பதாகவும் அதிக நாட்கள் உயிரோடு இருக்க முடியாது என்பதும் தெரியவருகிறது. இதனை அறிந்த அர்ஜூன் மீண்டும் கஜோலுடன் இணைந்து வாழ முடிவு செய்கிறார்.

தனது கணவனையும், குழந்தைகளையும் நேசிக்கும் கரீனாவை அது வரை எதிர்த்து வந்த கஜோல், தனது குடும்பத்திற்குள் ஒருவராக ஏற்றுக்கொள்ள பார்க்கிறார். வீட்டிற்குள்ளும் அழைத்து வந்துவிடுகிறார். அதன் பின்னர் குடும்பத்திற்குள் என்ன நிகழ்ந்தது என்பது தான் படத்தின் முடிவு.

தான் இருக்கும் போதே தனது கணவனை இன்னொருத்தியுடன் வைத்துப் பார்ப்பது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது எனவும்; இந்த மாதிரியான திரைப்படங்கள் தேவையற்றவை எனவும் எதிர்கருத்துக்கள் எழாமலும் இல்லை.

எனினும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. வாழ்க்கையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என (என்னைப்போன்று) Perfectionism கொண்டிருக்காமல் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என சொல்லியிருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதோடு Cervical Cancer - கருப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஷில்பா ஷெட்டியை கேவலமாக திட்டிய இங்கிலாந்தைச் சார்ந்த Jade Goody யும் தனது 27 ஆவது வயதிலேயே இந்த புற்றுநோயால் தான் இறந்து போனார் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

இந்த திரைப்படத்திற்கு மறறொரு ப்ளஸ் இசை. பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்கள் ஷங்கர்-எஸான்-லாய். பாடல்களும் அருமையாக இருக்கின்றன. அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக கஜோலின் நடிப்பு மிகச்சிறப்பு

Hamesha-Forever-எப்பொழுதும் உறவுகள் தேவை என்பதையும், உறவுகளின் மேன்மையையும் உணர்த்தியிருக்கும் திரைப்படம் We Are Family.

திரைப்படம் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் திரைப்படமாக்கப்பட்டிருப்பதும்; இது தான் இயக்குனருக்கு முதல் திரைப்படம் என்பதும்; ஜூலியா ராபர்ட்ஸ் நடித்து 1998 ல் வெளியான Stepmom என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் தழுவல் என்பதும்; இயக்குனர் கரன் ஜோகரின் தயாரிப்பு என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.September 15, 2010

இது தான் NDTV ன் நடுநிலை

தொடர்ந்து பாரபட்சமாக தான் செயல்படுவோம் என மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் என்.டி.டி.வி செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தினர். இலங்கைத்தமிழர் விஷயத்திலும் சரி, தமிழகத்தைக் குறித்த எந்த விஷயமானாலும் சரி இருட்டடிப்பு செய்வதே வடக்கில் இருக்கும் ஊடகங்களுக்கு வழக்கமாகிப் போய் விட்டது.

அதே நேரத்தில் அரசியல் தலைவர்களின் நிகழ்வுகளாகட்டும்; பெரிய இடங்களின் திருமணமாகட்டும்; அதில் அவர்கள் காட்டும் அக்கறை இருக்கிறதே அப்பப்பா. சில வாரங்கள் முன்னர் நடந்து முடிந்த சூப்பர் ஸ்டாரின் மகள் திருமணத்தைக் கூட ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருந்தார்கள். (அவர் மராத்திய இரத்தமாக இருப்பதாலோ என்னமோ?!!)

வழக்கமாக ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு எல்லாம் தேவையின்றி பிரேக்கிங் நியூஸ் என்று போடுபவர்கள் ஐ.பி.எல்-3 இறுதிப் போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தோற்கடித்த போது அதனைச் செய்யவில்லை. பிற்பாடு ஆற அமர சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி பெற்றது என்று சொன்னார்களே தவிர மும்பை தோல்வியடைந்தது என்று செய்தியளிக்க முடியவில்லை அவர்களால்.

சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடக்கும் தற்சமயமும் இதே நிலை தான். நேற்று தெற்கு ஆஸ்திரேலியா அணியிடம் மும்பை இன்டியன்ஸ் அணி தோல்வியடைந்து சாம்பியன்ஸ் லீக்கில் இருந்து வெளியேறிய பின்னரும் மும்பையை வெட்கமின்றி மெச்சியிருக்கிறார்கள். BATTLING REDBACKS STUN MIGHTY MUMBAI INDIANS என்று பீத்தியிருக்கிறார்கள்.

இன்னும் எத்தனை காலம் தான் இப்படி ஏமாற்றுவார்களோ? என்.டி.டி.வி யின் அந்த செய்தியை இங்கே படிக்கலாம்.

September 14, 2010

யு.எஸ் ஓபனும் நடாலும்

ஞாயிற்றுக்கிழமையே முடிந்திருக்க வேண்டிய யு.எஸ்.ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் மழையின் காரணமாக திங்களன்று முடிவுக்கு வரவிருக்கின்றன.

ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஒற்றையருக்கான போட்டிகளில் இறுதிப்போட்டி வரை எந்த ஒரு செட்டையும் இழக்காமல் நேர் செட்களில் வெற்றி பெற்று டென்னிஸ் தரவரிசையில் தான் முதலிடத்தில் இருப்பதற்கான நியாயம் கற்பித்து விட்டார். 

மறுபுறம் இரண்டாம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிக் 2004-2008 வரை ஐந்து முறை தொடர்ந்து யு.எஸ் ஓபன் பட்டம் வென்றவரான உலகின் முன்னாள் முதல் நிலை வீரர் ரோஜர் ஃபெடரரை அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு புதிய உத்வேகத்துடன் வந்திருக்கிறார். 

இவர்கள் இருவருமே யு.எஸ் ஓபன் பட்டத்தை இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடால் மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம்களில் இதுவரை 8 பட்டங்களைப் பெற்றிருந்தாலும் யு.எஸ் ஓபன் பட்டம் மற்றும் அவர் கரங்களுக்கு இன்னும் எட்டவில்லை.  

இதனை எழுதிக்கொண்டிருக்கையில் நடால் முதல் செட்டில் வெற்றி பெற்று தொடர்ந்து ஆடி வருகிறார். தனது முதல் யு.எஸ் ஓபன் பட்டத்தைப் பெறுவார் என்று நம்பலாம். 

மகளிர் ஆட்டங்களைப் பொறுத்த வரை அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகளில் முதல் நிலை வீராங்கனை செரீனா இந்த முறை களமிறங்கவில்லை. வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதி வரை தாக்குப்பிடித்தார். அரையிறுதியில் பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸிடம் தோற்றுப் போனார்.கிம் இறுதிப் போட்டியில் எளிதாக வெற்றியும் பெற்று விட்டார். 

கிம் கிளைஸ்டர் பெறும் மூன்றாவது யு.எஸ் ஓபன் பட்டம் இது. கடந்த வருடத்திலும் கிம் தான் சாம்பியன். 2007 ல் டென்னிசிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவர் அந்த இரண்டு வருட இடைவெளியில் ஒரு குழந்தையையும் பெற்று விட்டு மீண்டும் 2009 ல் களமிறங்கினார் அந்த வருடமே யு.எஸ் ஓபனில் வெற்றியும் பெற்ற பெருமைக்குரியவர். 

இந்திய வீரர்களைப் பொறுத்த வரையில், மகளிர் ஒற்றையர் போட்டிகளில் இரண்டாம் சுற்றோடு சானியா மிர்சா வெளியேறினார். ரோஹன் போபன்னா பாகிஸ்தான் வீரர் குரேஷியுடன் இணை சேர்ந்து இரட்டையர் இறுதிப் போட்டி வரை தகுதி பெற்று உலகின் முதல் நிலை இணையான பிரையன் சகோதரர்களிடம் தோற்றுப் போயினர். அதுவே மிகப்பெரிய சாதனை தான். 

எனினும் இந்தியா-பாகிஸ்தான் சமாதானத்திற்கு இவர்கள் இணைந்து குரல் கொடுத்திருப்பது பாராட்டவும் வரவேற்கவும் பட வேண்டிய விஷயம்.   

லியாண்டர் இரட்டையர் ஆட்டத்தில் முதல் சுற்றிலும், கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் காலிறுதியிலும் தோற்றுப் போனார். மகேஷ் பூபதி இரட்டையர் ஆட்டத்தில் இரண்டாவது சுற்றிலும் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் முதல் சுற்றிலும் தோல்வியடைந்து வெளியேறினார். 

கோப்பையைப் போன்று காட்சியளிக்கும் யு.எஸ் ஓபன் இறுதிப் போட்டிகள் நடக்கும் ஆர்தர் ஆஷ் மைதானம் தான் உலகிலேயே மிகப்பெரிய டென்னிஸ் மைதானம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

(மழையினால் ஆட்டம் இன்றும் தடைபடுமா என்பது தெரியவில்லை. இயற்கையை எவர் தான் கட்டுப்படுத்த முடியும்)

நன்றி: விக்கி & யு.எஸ் ஓபன் 

September 13, 2010

'தீதும் நன்றும் பிறர் தர வாரா'

வீட்டிற்கு வீடு வாசல்படி என்பதன் படி இன்று பிரச்சினை என்பது அனைவருக்கும் பொதுவாகவே உள்ளது. பிரச்சினை இல்லாத மனிதர்களை பற்றி எவரும் கேள்விப்பட்டதாக இருக்கமுடியாது. எனினும் தனிமனிதர் ஒருவரின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணம் அவரே தான் என்பது மறுக்க முடியாத உண்மை.அதனால் அன்றே கணியன் பூங்குன்றனார் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'என்று கூறிச் சென்றிருக்கிறார்.

அப்படியென்றால் பிரச்சினைகள் அனைத்திற்கும் நாம் மட்டும் தான் காரணமா? பிறரால் நமக்கு பிரச்சினைகள் ஏற்படுவதில்லையா என கேள்விகளும் எழாமல் இல்லை?  ஒரு விஷயத்தை பிரச்சினையாக பார்க்கும் மனநிலையும் சகஜமாக பார்க்கும் மனநிலையும் அவரவரை சார்ந்தது என்ற உண்மையும் புலப்படுகிறது. இதனைப்பற்றி பதிவர் சேசுரா  அவரது பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பல பிரச்சினைகளுக்கு நமது நாவு காரணமாகி விடுகிறது என்பதையும் மறுக்க முடியாது. ஏதோ ஒரு சூழ்நிலையில் விளையாட்டாக (சில நேரங்களில் வேண்டுமென்றே) ஏதாவது எவரிடம் சொல்லி வைக்க; அது தேவையற்ற விவாதத்திற்கும் விதண்டாவாதத்திற்கும் வழிவகை செய்து விடுகிறது. மற்றவரது கோபத்திற்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டு விடுவது தான் இன்னும் வேடிக்கை.

வேடிக்கையாக சொன்ன விஷயத்தை மற்றவர் மறந்து மன்னித்து விட்டால் சொல் அம்பு எய்தவருக்கு மகிழ்ச்சி தான் என்றாலும்; வேறொரு சந்தர்ப்பத்தில் முன்னர் எய்த சொல் அம்பின் தழும்புகளால் அந்த நிகழ்வை மீண்டும் எடுத்துச்சொல்லும் நிலைமை வரும் பட்சத்தில் எய்தவருக்கு அதனை விட பெரிய வலி ஏதும் இருக்காது. வள்ளுவன், "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" என சொல்லிச் சென்றது இதனை மனதில் வைத்து தான் போலும்.

பிரச்சினைகளை ஒரு சுமையாக கருதாமல் மிக எளிதாக எதிர்கொண்டு சமாளித்து விடுகின்ற நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய மனநிலையைக் கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதும் சகஜமே. அதற்கு நேர் எதிராக ஒன்றுமில்லாத விஷயத்தையும் பிரச்சினையாக பார்க்கிற ஆசாமிகளும் இருக்கிறார்கள்.

எது எப்படியாயினும் எவர் எப்படியாயினும் நம்மைத் தொடரும் தீமைகளுக்கும் நன்மைகளுக்கும் நாம் உதிர்க்கும் வார்த்தைகளும்; விஷயங்களை நாம் அணுகும் முறைகளும் தானே காரணமேயல்லாமல் வேறொருவரும், வேறெதுவும் இல்லை.

September 11, 2010

சாம்பியன்ஸ் லீக் T-20 ம் சச்சினும்


ஐ.பி.எல்-3 ற்கு பிறகு சர்வதேச அளவில் நடைபெறும் முதல் கிரிக்கெட் போட்டி சாம்பியன்ஸ் லீக் T-20 என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. 

அதோடு ஐ.பி.எல் T-20 போட்டிகளின் ஆணி வேராக இருந்த லலித் மோடி ஊழல் குற்றச்சாட்டுகளால் புறந்தள்ளப்பட்ட பின்னர் (ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்களுடன் இணைந்து) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் முதல் போட்டி என்பதாலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் பாகிஸ்தான் வீரர்கள் பணம் பெற்றுக் கொண்டு ஆடினார்கள் என்ற சர்ச்சைக்கு இடையில் இந்த போட்டிகள் துவங்குவதால் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

ஐ.பி.எல் T-20 போட்டிகள் பலவற்றின் முடிவு முன்னமே தீர்மானிக்கப்பட்டன என்ற கருத்து ஒருபுறமும் பாகிஸ்தான் வீரர்கள் மீதான புகார் மற்றொருபுறமும் இருக்கையில் இந்த போட்டிகள் பிரச்சினை ஏதுமின்றி நடந்தேறினால் கிரிக்கெட் ஆர்வலர்கள் பலருக்கும் மகிழ்ச்சியே. 

அரசியலையும் ஊழலையும் பிரிக்க முடியாது என்பது போன்று கிரிக்கெட்டையும் ஊழலையும் பிரிக்க முடியாது என்ற நிலைமை வந்துவிடுமோ என்னமோ!

சச்சினைப் பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவிற்காக ஒருதின போட்டிகளில் இருந்து விலகியிருந்த அவர், மும்பை இன்டியன்ஸ் அணிக்கு தலைமை ஏற்று சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களில் களமிறங்கியிருப்பது சரியென படவில்லை.

மும்பை இன்டியன்ஸ் அணிக்கு அத்தனை முக்கியத்துவம் அளிக்கும் சச்சின் 2011 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு அவரை எந்தவிதம் தயார் செய்வார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

சச்சினின் இதே எண்ணம் தொடருமானால் சச்சினின் கரங்களில் உலகக்கோப்பை தவழ்வதை நாம் காண முடியாது என்பதாகவே எனக்கு படுகிறது.  இது வரை 1992 முதல் 2007 வரை ஐந்து முறை உலகக்கோப்பை போட்டிகளில் ஆடியுள்ள சச்சின் ஒரு முறை கூட உலகக்கோப்பையை வென்றதில்லை என்ற நிஜத்தை எவரும் மறந்து விட முடியாது. 

-----

சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின் துவக்க விழாவில் "மையக்கருத்து பாடலுடன்" (Theme Song அப்படிங்கிறதுக்கு இது தான் தமிழாம்ல) நான் அதிகம் ரசிக்கும் Enrique Iglesias பாடிய Be With You பாடலைக் கேட்டு மீண்டும் ஒருமுறை மலைத்துப் போனேன்.September 05, 2010

உன்னருகே நான்


உன்னருகே நான்
என்னை பார்த்தேனே-என்
உள்ளமெல்லாம் மகிழ்ந்தேனே
என்னை நான் மறந்தேனே
மறவாமலே உன்னை நினைத்தேனே

உன்னைத் தேடினேன்
உயிர் வாடினேன்
என்னை நீ பிரிந்ததேன்
என் உள்ளம் விட்டகன்றதேன்.

உயிரெல்லாம் நீ
உணர்வெல்லாம் நீ
உன்னிடமெனை தொலைத்தேனே
இனி என்னை எங்கே தேடுவேன்

.......

கனவில் வந்த யாரோ அவளுக்காக கிறுக்கியது.
....

என்னால் முடிந்த குரலில் Guitar பின்னணியில் பாடவும் செய்திருக்கிறேன் Guitar இசைத்ததும் எட்வினே. இந்த கொடுமைய எல்லாம் கேக்கணும் அப்படின்றது உங்க தலையெழுத்து. ம்ம்ம்

September 04, 2010

எல்லாம் மாயை...


Related Posts with Thumbnails