September 14, 2010

யு.எஸ் ஓபனும் நடாலும்

ஞாயிற்றுக்கிழமையே முடிந்திருக்க வேண்டிய யு.எஸ்.ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் மழையின் காரணமாக திங்களன்று முடிவுக்கு வரவிருக்கின்றன.

ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஒற்றையருக்கான போட்டிகளில் இறுதிப்போட்டி வரை எந்த ஒரு செட்டையும் இழக்காமல் நேர் செட்களில் வெற்றி பெற்று டென்னிஸ் தரவரிசையில் தான் முதலிடத்தில் இருப்பதற்கான நியாயம் கற்பித்து விட்டார். 

மறுபுறம் இரண்டாம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிக் 2004-2008 வரை ஐந்து முறை தொடர்ந்து யு.எஸ் ஓபன் பட்டம் வென்றவரான உலகின் முன்னாள் முதல் நிலை வீரர் ரோஜர் ஃபெடரரை அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு புதிய உத்வேகத்துடன் வந்திருக்கிறார். 

இவர்கள் இருவருமே யு.எஸ் ஓபன் பட்டத்தை இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடால் மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம்களில் இதுவரை 8 பட்டங்களைப் பெற்றிருந்தாலும் யு.எஸ் ஓபன் பட்டம் மற்றும் அவர் கரங்களுக்கு இன்னும் எட்டவில்லை.  

இதனை எழுதிக்கொண்டிருக்கையில் நடால் முதல் செட்டில் வெற்றி பெற்று தொடர்ந்து ஆடி வருகிறார். தனது முதல் யு.எஸ் ஓபன் பட்டத்தைப் பெறுவார் என்று நம்பலாம். 

மகளிர் ஆட்டங்களைப் பொறுத்த வரை அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகளில் முதல் நிலை வீராங்கனை செரீனா இந்த முறை களமிறங்கவில்லை. வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதி வரை தாக்குப்பிடித்தார். அரையிறுதியில் பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸிடம் தோற்றுப் போனார்.கிம் இறுதிப் போட்டியில் எளிதாக வெற்றியும் பெற்று விட்டார். 

கிம் கிளைஸ்டர் பெறும் மூன்றாவது யு.எஸ் ஓபன் பட்டம் இது. கடந்த வருடத்திலும் கிம் தான் சாம்பியன். 2007 ல் டென்னிசிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவர் அந்த இரண்டு வருட இடைவெளியில் ஒரு குழந்தையையும் பெற்று விட்டு மீண்டும் 2009 ல் களமிறங்கினார் அந்த வருடமே யு.எஸ் ஓபனில் வெற்றியும் பெற்ற பெருமைக்குரியவர். 

இந்திய வீரர்களைப் பொறுத்த வரையில், மகளிர் ஒற்றையர் போட்டிகளில் இரண்டாம் சுற்றோடு சானியா மிர்சா வெளியேறினார். ரோஹன் போபன்னா பாகிஸ்தான் வீரர் குரேஷியுடன் இணை சேர்ந்து இரட்டையர் இறுதிப் போட்டி வரை தகுதி பெற்று உலகின் முதல் நிலை இணையான பிரையன் சகோதரர்களிடம் தோற்றுப் போயினர். அதுவே மிகப்பெரிய சாதனை தான். 

எனினும் இந்தியா-பாகிஸ்தான் சமாதானத்திற்கு இவர்கள் இணைந்து குரல் கொடுத்திருப்பது பாராட்டவும் வரவேற்கவும் பட வேண்டிய விஷயம்.   

லியாண்டர் இரட்டையர் ஆட்டத்தில் முதல் சுற்றிலும், கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் காலிறுதியிலும் தோற்றுப் போனார். மகேஷ் பூபதி இரட்டையர் ஆட்டத்தில் இரண்டாவது சுற்றிலும் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் முதல் சுற்றிலும் தோல்வியடைந்து வெளியேறினார். 

கோப்பையைப் போன்று காட்சியளிக்கும் யு.எஸ் ஓபன் இறுதிப் போட்டிகள் நடக்கும் ஆர்தர் ஆஷ் மைதானம் தான் உலகிலேயே மிகப்பெரிய டென்னிஸ் மைதானம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

(மழையினால் ஆட்டம் இன்றும் தடைபடுமா என்பது தெரியவில்லை. இயற்கையை எவர் தான் கட்டுப்படுத்த முடியும்)

நன்றி: விக்கி & யு.எஸ் ஓபன் 

1 comment:

எட்வின் said...

Yep...Nadal Did it Atlast @ the Arthur Ashe Stadium after 8 Long years.

Post a Comment

Related Posts with Thumbnails