September 28, 2010

We Are Family - திரைப்படம் ஒரு பார்வை

தமிழில் இது போன்ற திரைப்படங்கள் வருவது மிகக்குறைவே. அப்படியே வந்தாலும் வசூலில் பெரிய சாதனை ஏதும் செய்யப் போவதில்லை என்பது வேறு விஷயம். பணம் இருந்தால் தான் பந்தங்கள் கூட பக்கத்தில் என்றாகி விட்ட இந்த காலத்தில் திரைப்பட உலகை அதிகம் குறை கூறுவதில் நியாயமில்லை தான்.

நகைச்சுவை, அடிதடி, குத்தாட்டம், பஞ்ச் வசனங்கள் ஏதும் இன்றி எடுக்கப்பட்டதற்காகவே இந்த திரைப்படத்தைப் பாராட்டலாம்.

கணவன், மனைவி மூன்று குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் மனைவியின் Perfectionism என்ற குணாதிசயத்தால் விவாகரத்து பெற்று தனியே போய் விடுகிறார் கணவன்/ திரைப்படத்தின் கதாநாயகன் அர்ஜூன் ராம்பால்.

Perfectionism என்பதற்கு ... அனைத்து விஷயங்களிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் அல்லது இந்த மாதிரி தான் செய்ய வேண்டும் என்ற வரைமுறையோடு இருத்தல் என பொருள் கொள்ளலாம். குழந்தைகளோ, கணவரோ அதற்கு எதிர்மாறாக செய்தால் கதாநாயகியான கஜோல் கோபித்துக் கொள்கிறார். அது திருமண விவாகரத்தில் போய் சேர்க்கிறது.

கதநாயகன் அர்ஜூன் தனியாக இருந்தாலும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதில் அதிகம் அக்கறை காட்டுகிறார். இந்த குடும்பத்திற்குள் 'கரீனா கபூர்' கதாநாயகனின் நண்பி வடிவத்தில் நுழைகிறார். அவரை அர்ஜூன் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க முயற்சிக்கிறார்.

குழந்தைகள் - கரீனா முதல் சந்திப்பு சுமூகமாக அமையாமல் போய்விடுகிறது. மூன்றாவது குழந்தை அஞ்சலியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கதாநாயகனின் நண்பி/கரீனா பிறந்த நாள் கேக்கை கையிலிருந்து தவற விடுவதால் வெறுப்பையும் சூனியக்காரி (Witch) என்ற பெயரையும் சம்பாதிக்கிறார் கரீனா.

கரீனாவால் தான், அம்மாவைப் பிரிந்து அப்பா இருப்பதாக மூத்த மகள் 'ஆல்யா' தவறாக நினைத்துக் கொண்டு மற்ற இரு குழந்தைகளிடமும் இதையே சொல்லி வைக்கிறார்.

பின்னர் ஒருவழியாக குழந்தைகளிடம் நெருங்கி விடுகிறார் கரீனா. இதனிடையில் கஜோலுக்கு (Cervical Cancer) புற்றுநோய் இறுதி நிலையில் இருப்பதாகவும் அதிக நாட்கள் உயிரோடு இருக்க முடியாது என்பதும் தெரியவருகிறது. இதனை அறிந்த அர்ஜூன் மீண்டும் கஜோலுடன் இணைந்து வாழ முடிவு செய்கிறார்.

தனது கணவனையும், குழந்தைகளையும் நேசிக்கும் கரீனாவை அது வரை எதிர்த்து வந்த கஜோல், தனது குடும்பத்திற்குள் ஒருவராக ஏற்றுக்கொள்ள பார்க்கிறார். வீட்டிற்குள்ளும் அழைத்து வந்துவிடுகிறார். அதன் பின்னர் குடும்பத்திற்குள் என்ன நிகழ்ந்தது என்பது தான் படத்தின் முடிவு.

தான் இருக்கும் போதே தனது கணவனை இன்னொருத்தியுடன் வைத்துப் பார்ப்பது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது எனவும்; இந்த மாதிரியான திரைப்படங்கள் தேவையற்றவை எனவும் எதிர்கருத்துக்கள் எழாமலும் இல்லை.

எனினும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. வாழ்க்கையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என (என்னைப்போன்று) Perfectionism கொண்டிருக்காமல் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என சொல்லியிருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதோடு Cervical Cancer - கருப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஷில்பா ஷெட்டியை கேவலமாக திட்டிய இங்கிலாந்தைச் சார்ந்த Jade Goody யும் தனது 27 ஆவது வயதிலேயே இந்த புற்றுநோயால் தான் இறந்து போனார் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

இந்த திரைப்படத்திற்கு மறறொரு ப்ளஸ் இசை. பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்கள் ஷங்கர்-எஸான்-லாய். பாடல்களும் அருமையாக இருக்கின்றன. அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக கஜோலின் நடிப்பு மிகச்சிறப்பு

Hamesha-Forever-எப்பொழுதும் உறவுகள் தேவை என்பதையும், உறவுகளின் மேன்மையையும் உணர்த்தியிருக்கும் திரைப்படம் We Are Family.

திரைப்படம் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் திரைப்படமாக்கப்பட்டிருப்பதும்; இது தான் இயக்குனருக்கு முதல் திரைப்படம் என்பதும்; ஜூலியா ராபர்ட்ஸ் நடித்து 1998 ல் வெளியான Stepmom என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் தழுவல் என்பதும்; இயக்குனர் கரன் ஜோகரின் தயாரிப்பு என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.



2 comments:

FRANKLYN said...

THIS FILM STORY LIKE "STEP MOM" FILM STORY BASE....AND WELL REVIEWS.

எட்வின் said...

ஆமாங்க ப்ராங்க்ளின் இந்த திரைப்படம் Stepmom ன் தழுவல் தான். கரன் ஜோகர் முறையாக அனுமதி பெற்று தான் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails