October 22, 2010

உலகம் சிரிக்கும் இந்திய விளையாட்டு


அரசியலும் ஊழலும் பிரிக்கமுடியாது என்று சொல்வார்கள் இன்று விளையாட்டும் ஊழலும் பிரிக்கமுடியாது என்று சொன்னாலும் தகும். 2020 ல் இந்தியா பணக்கார/வல்லரசு நாடாகிறதோ இல்லையோ 20-20 கிரிக்கெட் போட்டியால் பலர் பல கோடியை ஏய்த்து பணக்காரர்கள் ஆகி விட்டார்கள்.

மற்ற விளையாட்டுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கிரிக்கெட்டில் தான் அதிக ஊழல் நடைபெறுவதாக தெரிகிறது. அதற்கு காரணம் கிரிக்கெட்டில் புழங்கும் அதிக பணமும், விளம்பர நிறுவனங்கள் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் தருவதும் தான் என படுகிறது. 

விளையாட்டில் மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் ஊழலின் கை ஓங்கி இருப்பதற்கு "பேராசை" என்ற பெரிய வில்லனும் ஒருவகையில் காரணமாவதையும் மறுக்க முடியாது. அசாரூதீன், ஜடேஜா, ஹான்ஸி குரோனியே என கிரிக்கெட்டில் முதிர்ந்த வீரர்கள் பணம் பெற்றுக்கொண்டு தோல்விக்கு காரணமானார்கள் என்றால் தற்போது பாகிஸ்தானில் இருந்து ஆசிப், அமீர், பட் இளம் வீரர்களும் துணிந்து விட்டார்கள்.

ஐ.பி.எல் போட்டிகளை ஒருங்கிணைத்ததில் லலித் மோடி ஊழல் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார் என்றால் அண்மையில் டெல்லியில் நடந்து முடிந்த காமென்வெல்த் போட்டிகளை ஏற்பாடு செய்ததில் 'சுரேஷ் கல்மாடி' ஊழல் செய்ததாக தெரிய வந்திருக்கிறது. இதன் முன்னர் தேசிய விளையாட்டான ஹாக்கியிலும் ஊழல் செய்ததாக கே.பி.எஸ் கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். 

இப்படியாக இன்று விளையாட்டும் பணமும் பிரிக்கமுடியாததாகி விட்டது. விளையாட்டு பிரபலங்கள் இத்தனை குற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் செய்த ஊழலுக்கு தக்கதான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டனவா என்ற கேள்விக்கு இல்லை என்பது தான் பதில். குறைந்த பட்சம், பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர் அவ்வளவு தான்.

"அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா" என்ற கவுண்டமணியின் நகைச்சுவை போல் விளையாட்டில இதெல்லாம் சகஜமப்பா என்ற நிலைமை வந்து விட்டது என்பதாகவே படுகிறது.

'SPOTS' இல்லாத "SPORTS" எங்க இருக்கு என பலரும் இப்போதே கேள்வியும் எழுப்பத்தொடங்கி விட்டார்கள் 

October 20, 2010

20.10.2010

Just for the record to REMEMBER today 20.10.2010. Bear with me for writing in English on my Tamil Blog. Love and Wishes from Chennai. (From my Mobile Browser)

October 19, 2010

கருப்பர்களை கேவலமாக பார்க்கும் சமூகம்

(விடுமுறையில் இருப்பதால் வலைப்பக்கம் வந்தே இரு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. முன்னர் எழுதி வைத்த இந்த பதிவை கூட இணைக்க சமயம் வாய்க்கவில்லை)
------

நீங்கள் எத்தனை சிறப்பு உடையவராயிருந்தாலும்; பல ஆயிரம் திறமைகள் உங்களுக்குள் ஒளிந்திருந்தாலும்;எத்தனை சாதனைகள் நிகழ்த்தியிருந்தாலும், உங்கள் தோலின் நிறம் கவர்ச்சியாக இல்லாமல் கருமையாக இருக்குமெனில் உங்களுக்கு அளிக்கப்படும் மதிப்பும் மரியாதையும் சிவப்போ வெள்ளையோ உடைய நிறத்தவருக்கு அளிக்கப்படும் மரியாதையில் பகுதி கூட அளிக்கப்படுமா என்பது சந்தேகம் தான்.

கோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் கருப்பு நிறம் உடையவர்கள் வெகு சிலரே. ஹாலிவுட்டில் கருப்பராக இருந்த மைக்கேல் ஜாக்சன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது தோலின் நிறத்தை மாற்றிக்கொண்டதும் உலகம் அறிந்ததே.

அமெரிக்காவிலும் தென்னாப்பிரிக்காவிலும் காலங்காலமாக நிலவி வந்த நிறவெறியையும் அதற்காக மார்ட்டின் லூதர் கிங்கும், நெல்சன் மண்டேலாவும் போராடியதும் மறக்கவியலுமா! அங்கு வெளிப்படையாக கருப்பர்கள் தாக்கப்படுதலும், ஒதுக்கப்படுதலும் நிலவியது என்றால் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் மறைமுகமாக கருப்பர்கள் இன்னமும் தரந்தாழ்ந்தே நடத்தப்படுகிறார்கள்.

அண்மையில் நண்பர் ஒருவர் கூட இதனைக்குறித்து வேதனைப்பட்டிருந்தார். அவரும் சற்று கருப்பு தான். பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தில் பணிபுரிகிறார் அவர். அவருக்கு அளிக்கப்படும் அனைத்து பணிகளையும் எவ்வித சிரமும் இல்லாமல் மிக நேர்த்தியாக செய்து முடிக்கிறவர் அவர். பத்து வருடங்களாக அதே பணியில் இருக்கின்றவருக்கு பணி உயர்வு இது வரை கிடைக்கவில்லை. அவருக்கு கீழே இருந்த வேற்று நாட்டை சேர்ந்த வெள்ளைத் தோலை உடைய பலரும் பணி உயர்வு பெற்று விட்டார்கள். அவரோ இன்னமும் காத்திருக்கிறார்.

இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் இவரிடம் இருந்து தொழிலை கற்றவர்கள் தான். பதவி உயர்வு அடைந்த பின்னர் நண்பரை கண்டு கொள்வதே இல்லை என்று கூட கூறி வேதனைப் பட்டார்.

பல இடங்களில் இந்த நிலைமை தான் இன்னும் தொடர்கிறது. எனினும் கருப்பர்கள் எந்த விதத்திலும் பிறர்க்கு குறைந்தவர்கள் அல்லர். அந்த விதத்தில் சாதனை படைத்த சிலரை கருப்புச் சாதனையாளர்கள் என்ற இந்த பதிவில் தொகுத்திருந்தேன்.
கருப்பர்களை கேவலமாக பார்ப்பது இன்னும் தொடரத்தான் செய்யும் போல.

Related Posts with Thumbnails