November 26, 2010

ஆசிய-அரசியல் விளையாட்டுகளும் விடை தெரியாத சில கேள்விகளும்

Asian Games அப்படின்னுட்டு கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து என Sports எல்லாம் வைக்கலாமா? இல்லைன்னனா Asian Games and Sports அப்படின்னு வைச்சிருக்கலாமோ? "All sports are Games but not all Games are sports" அப்படின்னு யாஹூல பதில் சொல்றாங்க. அதனால தான் கேம்ஸ்ன்னு வச்சிட்டாங்களோ!?

நியூசிலாந்து கூட விளையாடுறதால Asian Games க்கு கிரிக்கெட் அணியை அனுப்ப மாட்டோம்னு சொல்லிட்டு இந்தியா கம்முன்னு இருந்திட்டாங்க. ஆனா பாகிஸ்தான் அணி துபாய்ல தென்னாப்பிரிக்கா கூடவும், இலங்கை அணி இலங்கையில மேற்கு இந்தியத் தீவு அணி கூடவும் டெஸ்ட் ஆட்டம் ஆடிக்கிட்டு Asian Games க்கும் (இரண்டாம் தர) அணியை அனுப்பியிருக்காங்க. இதெல்லாம் என்ன கொடுமங்க. 

அரசியல்ல இதெல்லாம் சஜமப்பா என்பது மாதிரி இதையெல்லாம் அனுமதிக்கலாமா இல்ல அனுமதிக்கக்கூடாதா!!


பங்களாதேஷ் ஆசிய கிரிக்கெட் சாம்பியனாம்ல

ஒவ்வொரு தடவையும் யாராவது ஊழல் செய்யும் போது வாங்குற சம்பளத்தயும் வாங்கிப்புட்டு பாராளுமன்றத்தில சும்மா கூப்பாடு போட்டுட்டு வராங்க இந்த அரசியல்வியாதிகளான M.P(ee)க்கள். மக்கள் பிரச்சினைய சரியான ரீதியில் பேசவோ, வாக்குவாதம் செய்யவோ இங்க யாருக்கும் நேரமில்ல போல இருக்கு.  இப்போ ராசாவ குத்தம் சொல்றவங்க எல்லாம் ரொம்ப யோக்கியமான்னு கேக்க தோணுது.

இன்னைக்கு வரைக்கும் ஊழல் செஞ்ச எந்த அரசியல்வியாதியாவது முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை அனுபவிச்சிருக்காங்களா! ராசாவா இருந்தாலும் அது ராணியா இருந்தாலும் முறையா விசாரிச்சு தண்டனை குடுக்கிறதுக்கு இன்னும் ஐம்பது வருசமானாலும் ஆகும் போல. 
5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற African - Bahraini "Mimi Belete Gebregeiorges" உடன் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் ப்ரீஜா மற்றும் வெண்கலம் வென்ற கவிதா

Asian Games ல இன்னொரு வில்லங்கம் என்னன்னா சில நாடுகள்ல இருந்து (குறிப்பாக அரபு தேசங்களில் இருந்து) கலந்து கொண்டவர்கள பாத்தா ஆப்பிரிக்க தேசங்களான கென்யா, எத்தியோப்பியா மற்றும் நைஜீரியாவைச் சார்ந்தவர்கள் மாதிரி தெரியுது. பொழக்க வந்தவங்களுக்கு குடியுரிமையைக் கொடுத்து நல்லா லவுட்டுறாங்க மெடலுகள. நல்லா இருக்குதடா உங்க பொழப்பு.  People Daily என்ற இந்த இணையதளத்தில் இன்னும் விவரமாக இத பத்தி படிக்கலாம்.

லவுட்ட பாக்கிறான் என்பது Loot என்ற ஆங்கில வாக்கியத்தின் வழி வந்த ஆங்கிலத் தமிழா? இல்ல அதுவே தமிழ் தானா!

November 24, 2010

ஆசிய விளையாட்டும் இந்திய கிரிக்கெட்டும்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே இந்தியர்கள் பிரகாசிக்கிறார்கள். குறிப்பாக டென்னிஸ் ஆட்டங்களைப் பார்க்கையில் இந்தியாவின் வருங்கால டென்னிஸ், திறமையும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களிடம் இருப்பதை காணமுடிகிறது.

25 வயதே ஆன சோம்தேவ் தேவ வர்மனும், 22 வயதே ஆன சனம் சிங்கும் இரட்டையர் இறுதிப்போட்டியில் ஆடிய ஆட்டம் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி இணையின் ஆட்டத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல. விர்ஜினியா பல்கலைக்கழகத்திற்காக இருவரும் இணைந்து ஆடியதும் அவர்களுக்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆகிப் போனது.

இரட்டையர் போட்டியில் சனம் சிங்குடன் இணைந்து தங்கப்பதக்கம் வென்ற சோம்தேவ் ஒற்றையர் ஆட்டத்திலும் தங்கம் வென்றிருக்கிறார். கடந்த மாதம் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அஸ்ஸாமில் பிறந்து சென்னையிலும் அமெரிக்காவிலும் வளர்ந்தவர் சோம்தேவ்.


இது வரை மொத்தம் 39 பதக்கங்களுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. பில்லியர்ட்ஸில் தங்கம் வென்ற பங்கஜ் அத்வானி, 10,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற கேரளத்தைச் சார்ந்த ப்ரீஜா, துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற சோதி ரஞ்சன், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் டென்னிஸில் வெள்ளியும் வெண்கலமும் வென்ற சானியா மிர்சா ஆகியோர் பதக்கம் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

கிரிக்கெட்

இறுதியாக நியூசிலாந்தை தோற்கடித்து தொடரை வென்றிருக்கிறது இந்தியா. தர வரிசையில் முதலாவது இருக்கும் இந்திய அணியின் பந்து வீச்சு இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் முதல் இரு டெஸ்ட் ஆட்டங்களையும் கூட வென்றிருக்கலாம்
அடுத்த சுற்றுப்பயணமாக டிசம்பரில் தென்னாபிரிக்கா செல்லவிருக்கும் இந்திய அணியின் மூத்த ஆட்டக்காரர்கள் பலருக்கு நியூசிலாந்திற்கு எதிரான ஒருதினப் போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு அத்தனை முக்கியத்துவம் இந்தியா தருகிறார்கள் என்றால் தென்னாப்பிரிக்கா "டென் கிரிக்கெட்" சானலுடன் இணைந்து We are waiting என்று பிரத்தியேகமாக குறும்படம் ஒன்றையும் படமாக்கியிருக்கிறார்கள். (யூடியூபின் காணொளியை  கீழே இணைத்துள்ளேன்)

கிரிக்கெட்டுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்ற அளவிற்கு இருக்கிறது இந்தியாவிற்கு எதிராக தென்னாப்பிரிக்கா அவர்களது சொந்த மண்ணில் விளையாடவிருக்கும் டெஸ்ட் ஆட்டங்களுக்கான முன்னோட்டம்.



நன்றி: விக்கி

November 15, 2010

அது ஒரு அழகிய பண்டிகைக் காலம்


"அன்னைக்கு துணிய வெட்டி சட்டையா தச்சிப் போட்டோம்" ஆனா இன்னைக்கு 'ரெடிமேட்' என்ற பெயரில் ஏற்கெனவே "தச்ச சட்டய வெட்டிப் போடுறோம்"

அந்த காலத்தில... டேய் டேய் நிறுத்துடா, எதாச்சும்னா உடனே நாங்கல்லாம் அந்த காலத்திலன்னு ஆரம்பிச்சிருவீங்களேன்னு சொல்றீங்களா! 

என்ன இருந்தாலும் அந்த அழகிய காலங்கள் மாதிரி வருமா. அதுவும் திருவிழா, பண்டிகைக் காலங்கள்னா சொல்லவே வேண்டாம். எப்போடா பள்ளிக்கூடத்துக்கு லீவு கிடைக்கும்னு எதிர்பாத்திட்டு இருக்கிறது. அதிலயும் நம்ம நண்பர்கள் சில பேர் வழக்கமான விடுமுறைக்கு ரெண்டு மூணு நாள் முன்னாடியே ஸ்கூலுக்கு கல்தா குடுத்துருவானுக. 

ஓட்டம், சாட்டம், கிரிக்கெட், வாலிபால் போட்டிகள் நடத்திறோம்னு 'களவணி' படத்தில வர அதே பாணில வசூல் பண்றது. அப்புறம் என்ன... கிரவுண்ட சுத்தி கொடி, கம்பம் கட்டுறதுக்கு ஒரு குரூப், தீபாவளியை முன்னிட்டு, பொங்கலை முன்னிட்டு இளைஞர்கள் நடத்தும் விளையாட்டு போட்டிகள்னு கலர் கலரா போஸ்டர் ஒட்டுற வேலய பாக்கிறதுக்கு ஒரு குரூப்னு விடிய விடிய ஊர சுத்திட்டு அடாவடி பண்ணிக்கிட்டு இருப்பானுக. 

நம்ம பசங்க தான் ராப்பாடிகள் ஆச்சே, ராத்திரி பத்து மணிக்கு மேல தான் வேலயே ஆரம்பிக்கிறது. அப்ப தான சுதந்திரமா இளநியயோ இல்ல மாங்காவையோ 'லவுட்ட' முடியும். 

இது இப்படின்னா, போட்டிகள் நடத்தும் போது எந்த ஊரு மொதல்ல ஆடணும் அப்படின்றதில இருந்து கிரிக்கெட் அம்பயரிங்கலயும் சரி, மற்ற போட்டிகளுக்கு தீர்ப்பு சொல்றதுல வரைக்கும் பிரச்சினைய கிளப்புறதுக்குன்னே வரிஞ்சி கட்டிட்டு நிக்கும் ஒரு கும்பல். அன்னைக்கு வருத்தமா இருந்த அதுல கூட சுவாரஸ்யம் இருந்ததா லேட்டா இன்னைக்கு புரியுது. 

இன்னும் சுவாரஸ்யம் நம்ம வீட்டிலயே பலகாரம் சுடுறது தான். பண்டிகை வர ஒரு வாரத்துக்கு முன்னாடியே அதற்கான ஏற்பாடுகள் மும்மூரமா போய்கிட்டு இருக்கும். அரிசிய ஊறவச்சி, உரல்ல நம்மளே இடிச்சி சுடுற பலகாரத்தில இருக்கு சுவையும் அந்த சுவாரஸ்யமும் (அது மிருதுவா இல்லன்னா கூட!! ) தனி தான். 

இது எல்லாத்துக்கும் மேல ஆனந்தம் புதுசா ட்ரஸ் போடுறது தான். "அன்னைக்கு துணிய எடுத்து வெட்டி சட்டையா தச்சிப் போட்டாங்க" ஆனா இன்னைக்கு 'ரெடிமேட்' என்ற பெயரில் ஏற்கெனவே "தச்ச சட்டய வெட்டிப் போடுறோம்". என்ன வேடிக்கை பாருங்க ! அப்போ, ஒரு மாசத்துக்கும் முன்னாலயே துணிய எடுத்து டெய்லர் கிட்ட ஃப்ளீட் வைங்க; புது ஸ்டைலா வைச்சி கரெக்டா தைங்கன்னு நம்ம சொன்னா சில பெருசுங்க சொல்றதோ 'அவன் வளர்ர பையன் சட்டைய கொஞ்சம் பெருசாவே தைங்க' அப்படின்னு.

சட்டை தச்சி வாங்கினா தான் தெரியும் அது தாத்தா சட்டை மாதிரி தொள தொளன்னு இருக்கிறது. அப்ப வருமே கோபம்... ஆனாலும், "புதுசு வருசத்துக்கு ஒரு தடவ தான வரும்"னு சமாதானம் சொல்லிக்கிட்டு போடுறத தவிர வேற என்ன பண்றது அப்போ.   

சொந்தகாரங்க வருகை,  நண்பர்களுடன் பட்டாசு வெடிக்கிறது, கும்பலா கச்சேரிக்கு போறது அப்படின்னு இன்னும் பல சொல்லிபோகலாம்.

பண்டிகைக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே களை கட்டின காலம் போயி, பண்டிகைக்கு முந்தின நாள் கூட அடுத்த நாள் பண்டிகைன்னு சரியா தெரியாம இருக்கிற காலத்தில தான் இப்ப இருக்கோம். பணம் சம்பாதிக்கிற அவசரத்தில சுவாரஸ்யங்களையும், கொண்டாட்டங்களையும் இழந்து நிற்கிறோம் இன்னைக்கு. மீண்டும் அந்த நாட்கள் எப்ப வருமோ?!

November 12, 2010

கமல்ஹாசன் - Four Friends மலையாள திரைப்படம் ஒரு பார்வை

தமிழ் திரையுலகைப் போலல்லாது இந்தியிலும், மலையாளத்திலும் பல பிறமொழிப்படங்கள் மீண்டும் எடுக்கப்படுகின்றன அல்லது காப்பியடிக்கப்படுகின்றன. அந்த வகையில் Four Friends, 'The Bucket List' (2007) என்ற ஆங்கிலப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது தான்.  


ஏற்கெனவே உண்மைத்தமிழன் அவர்கள் இந்த திரைப்படத்தைக் குறித்து விமர்சனம் செய்து விட்டார். அந்த பதிவ இந்த சுட்டில பாருங்க. அவர் எழுதியிருக்கிறபடி தமிழில் இந்த மாதிரியான திரைப்படங்கள் எடுக்க நிச்சயமாக நினைத்துக்கூட பார்க்க முடியாது தான்.

வெவ்வேறு வகை புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் தனக்கென்று யாருமில்லாத தொழிலதிபரான ஜெயராம், சித்தியின் கொடுமையால் அவதியுறும் மருத்துவ கல்லூரி மாணவியான மீரா ஜாஸ்மின், கமலின் தீவிர ரசிகரான ஜெய்சூர்யா, பணக்கார வீட்டுப் பிள்ளையும் கல்லூரி மாணவருமான குஞ்சாக்கோ போபன் ஆகிய நால்வரும் சிகிச்சை அளிக்கப்படும் மையத்தில் ஏற்படும் பழக்கத்தினால் நண்பர்களாகி விடுகின்றனர்.

இணைந்த நண்பர்கள் நால்வரும் தங்களது இறுதி நாட்களை மகிழ்ச்சியாக செலவழிக்க முடிவு செய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் விருப்பங்களை நிறைவு செய்வதாக ஜெயராம் வாக்கு கொடுக்கிறார்.

அதன்படி குஞ்சாக்கோ போபனின் காதலியை சந்திக்க மலேசியா சென்று விட்டு, கமலின் தீவிர ரசிகரான ஜெய்சூர்யாவிற்காக கமல்ஹாசனையும் சந்திக்கும் முயற்சியில் கிளம்புகிறார்கள். அதற்கு தொழிலதிபராக இருக்கும் ஜெய்ராமின் வசதி ப்ளஸ் ஆகி விடுகிறது.

விமானநிலையத்தில் தற்செயலாக கமல்ஹாசனை சந்திக்கிறார்கள், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பலரைக் குறிப்பிட்டு எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல எப்படி வாழ்ந்தோம் என்பது தான் முக்கியம் என அறிவுரையும், நம்பிக்கையும் அளிக்கிறார். இடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கவுதமியையும் குறிப்பிடுகிறார். கமல், நடிகர் கமலாகவே திரைப்படத்தில் வந்து போகிறார்.  

போபன் மலேசியாவில் உடல்நிலை மோசமடைந்து மரணமும் அடைந்து விடுகிறார். போபனின் தந்தை லால், போபனின் இறுதி நாட்களில் அவர்களுடன் இருக்கவிடாமல் செய்து விட்டதாக எண்ணி, குடும்பம் இருந்தால் தானே குடும்பத்தின் அருமை தெரியும் என ஜெயராமை ஆத்திரப்படவே ஜெய்சூர்யாவையும், மீராவையும் தன்னை விட்டு போய் விடும் படி கூறுகிறார் ஜெயராம். இறுதியில் மூவருக்கும் என்னவாயிற்று என்பது தான் முடிவு. 

2008 ல் வெளிவந்த இந்தி திரைப்படமான 'தஸ்விதனியா'விலும் ஏறக்குறைய இதே போன்றதொரு கதைக்களம் அமைத்திருந்ததாக ஞாபகம்.

தேவையில்லாமல் சண்டைக்காட்சியைப் புகுத்தியிருப்பதும், கதாபாத்திரங்கள் பலவற்றை அழுகாச்சியாக காண்பித்திருப்பதும் தவிர படம் பாராட்டப்பட வேண்டியது தான். இசையும் (ஜெயச்சந்திரன்) ஒளிப்பதிவும் (அனில் நாயர்) குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவை. ஆலப்புழையின் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த சிகிச்சை மையம் காண்பதற்கு கொள்ளை அழகு, மஞ்சள் வெயில் சாயும் வேளையில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் இன்னும் அழகாக இருக்கிறது ஆலப்புழை. மலேசியாவும் அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது.       

உண்மைத்தமிழன் அவர்களின் கருத்துப்படி திரைப்படத்தில் சீரியல் வாசம் வீசுவதும் சும்மா அல்ல, மலையாளத்தில் கூறுவதானால் (வெறுதே அல்லா). இயக்குனர் 'சஜி சுரேந்திரன்' பல சீரியல்களை இயக்கியவர் என்பதால் தானாக இருக்கும். என்றாலும் இவர் இதன் முன்னர் இயக்கிய 'இவர் விவாஹிதராயால்' மற்றும் 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' ஆகிய இரு திரைப்படங்களுமே நன்கு ஓடியவை தான். 

இருபத்தியொரு வருடங்களுக்குப் பின்னர் மலையாள திரையுலகில் பத்மஸ்ரீ. கமல்ஹாசன் நடித்திருப்பதாகக் குறிப்பிட்டு இந்த திரைப்படத்தை வெளியிட்டிருந்தாலும் கமல்ஹாசன் பத்து நிமிடங்களே வந்து போகிறார்.

திரைப்படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு விஷயம் 1975 ல் வந்த 'ஷோலே' திரைப்படத்தில் இடம்பெற்ற 'Yeh Dosti' என்ற பாடல். பாடலை மீண்டும் இந்தியிலேயே ரீ-மிக்ஸியிருக்கிறார்கள்.  

மொத்தத்தில் "Four Friends - A bad copy of a good film" என்கிறார்கள் சிலர். அது ஓரளவு உண்மையும் கூட. 
Related Posts with Thumbnails