November 12, 2010

கமல்ஹாசன் - Four Friends மலையாள திரைப்படம் ஒரு பார்வை

தமிழ் திரையுலகைப் போலல்லாது இந்தியிலும், மலையாளத்திலும் பல பிறமொழிப்படங்கள் மீண்டும் எடுக்கப்படுகின்றன அல்லது காப்பியடிக்கப்படுகின்றன. அந்த வகையில் Four Friends, 'The Bucket List' (2007) என்ற ஆங்கிலப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது தான்.  


ஏற்கெனவே உண்மைத்தமிழன் அவர்கள் இந்த திரைப்படத்தைக் குறித்து விமர்சனம் செய்து விட்டார். அந்த பதிவ இந்த சுட்டில பாருங்க. அவர் எழுதியிருக்கிறபடி தமிழில் இந்த மாதிரியான திரைப்படங்கள் எடுக்க நிச்சயமாக நினைத்துக்கூட பார்க்க முடியாது தான்.

வெவ்வேறு வகை புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் தனக்கென்று யாருமில்லாத தொழிலதிபரான ஜெயராம், சித்தியின் கொடுமையால் அவதியுறும் மருத்துவ கல்லூரி மாணவியான மீரா ஜாஸ்மின், கமலின் தீவிர ரசிகரான ஜெய்சூர்யா, பணக்கார வீட்டுப் பிள்ளையும் கல்லூரி மாணவருமான குஞ்சாக்கோ போபன் ஆகிய நால்வரும் சிகிச்சை அளிக்கப்படும் மையத்தில் ஏற்படும் பழக்கத்தினால் நண்பர்களாகி விடுகின்றனர்.

இணைந்த நண்பர்கள் நால்வரும் தங்களது இறுதி நாட்களை மகிழ்ச்சியாக செலவழிக்க முடிவு செய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் விருப்பங்களை நிறைவு செய்வதாக ஜெயராம் வாக்கு கொடுக்கிறார்.

அதன்படி குஞ்சாக்கோ போபனின் காதலியை சந்திக்க மலேசியா சென்று விட்டு, கமலின் தீவிர ரசிகரான ஜெய்சூர்யாவிற்காக கமல்ஹாசனையும் சந்திக்கும் முயற்சியில் கிளம்புகிறார்கள். அதற்கு தொழிலதிபராக இருக்கும் ஜெய்ராமின் வசதி ப்ளஸ் ஆகி விடுகிறது.

விமானநிலையத்தில் தற்செயலாக கமல்ஹாசனை சந்திக்கிறார்கள், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பலரைக் குறிப்பிட்டு எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல எப்படி வாழ்ந்தோம் என்பது தான் முக்கியம் என அறிவுரையும், நம்பிக்கையும் அளிக்கிறார். இடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கவுதமியையும் குறிப்பிடுகிறார். கமல், நடிகர் கமலாகவே திரைப்படத்தில் வந்து போகிறார்.  

போபன் மலேசியாவில் உடல்நிலை மோசமடைந்து மரணமும் அடைந்து விடுகிறார். போபனின் தந்தை லால், போபனின் இறுதி நாட்களில் அவர்களுடன் இருக்கவிடாமல் செய்து விட்டதாக எண்ணி, குடும்பம் இருந்தால் தானே குடும்பத்தின் அருமை தெரியும் என ஜெயராமை ஆத்திரப்படவே ஜெய்சூர்யாவையும், மீராவையும் தன்னை விட்டு போய் விடும் படி கூறுகிறார் ஜெயராம். இறுதியில் மூவருக்கும் என்னவாயிற்று என்பது தான் முடிவு. 

2008 ல் வெளிவந்த இந்தி திரைப்படமான 'தஸ்விதனியா'விலும் ஏறக்குறைய இதே போன்றதொரு கதைக்களம் அமைத்திருந்ததாக ஞாபகம்.

தேவையில்லாமல் சண்டைக்காட்சியைப் புகுத்தியிருப்பதும், கதாபாத்திரங்கள் பலவற்றை அழுகாச்சியாக காண்பித்திருப்பதும் தவிர படம் பாராட்டப்பட வேண்டியது தான். இசையும் (ஜெயச்சந்திரன்) ஒளிப்பதிவும் (அனில் நாயர்) குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவை. ஆலப்புழையின் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த சிகிச்சை மையம் காண்பதற்கு கொள்ளை அழகு, மஞ்சள் வெயில் சாயும் வேளையில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் இன்னும் அழகாக இருக்கிறது ஆலப்புழை. மலேசியாவும் அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது.       

உண்மைத்தமிழன் அவர்களின் கருத்துப்படி திரைப்படத்தில் சீரியல் வாசம் வீசுவதும் சும்மா அல்ல, மலையாளத்தில் கூறுவதானால் (வெறுதே அல்லா). இயக்குனர் 'சஜி சுரேந்திரன்' பல சீரியல்களை இயக்கியவர் என்பதால் தானாக இருக்கும். என்றாலும் இவர் இதன் முன்னர் இயக்கிய 'இவர் விவாஹிதராயால்' மற்றும் 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' ஆகிய இரு திரைப்படங்களுமே நன்கு ஓடியவை தான். 

இருபத்தியொரு வருடங்களுக்குப் பின்னர் மலையாள திரையுலகில் பத்மஸ்ரீ. கமல்ஹாசன் நடித்திருப்பதாகக் குறிப்பிட்டு இந்த திரைப்படத்தை வெளியிட்டிருந்தாலும் கமல்ஹாசன் பத்து நிமிடங்களே வந்து போகிறார்.

திரைப்படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு விஷயம் 1975 ல் வந்த 'ஷோலே' திரைப்படத்தில் இடம்பெற்ற 'Yeh Dosti' என்ற பாடல். பாடலை மீண்டும் இந்தியிலேயே ரீ-மிக்ஸியிருக்கிறார்கள்.  

மொத்தத்தில் "Four Friends - A bad copy of a good film" என்கிறார்கள் சிலர். அது ஓரளவு உண்மையும் கூட. 

4 comments:

Unknown said...

yetho parava ille ....

Unknown said...

எதாவது நல்ல விஷேயமா எழுதலாமே ....
எதுக்காக படங்களை பத்தின விமர்சனம்
ஏதோ மனதில் பட்டதை சொன்னேன் ,,,

எட்வின் said...

@ dheena

நன்றி.

கமல்ஹாசன் மலையாளத்தில் இப்படி ஒரு திரைப்படம் பண்ணியிருக்கிறார் என்று நான் அறிந்ததை இன்னும் சிலர் அறிந்து கொள்ளட்டுமே என்றதால் தான் இந்த பதிவு.

கிறிச்சான் said...

சரிங்க தல ..படம் பாத்துடுறேன்!

Post a Comment

Related Posts with Thumbnails