December 31, 2010

2010 ல் எதிர்பார்த்ததும் நிகழ்ந்ததும்

2010 ல் எதிர்பார்க்கும் பத்து விடயங்கள் என்ற தலையங்கத்தில் ஜனவரி ஆறாம் தியதி பதிவிட்டிருந்தேன்.அதனை திரும்பிப் பார்க்கும் ஒரு பதிவு இது, அனைவருக்கும் என் கனிவான ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்.

1. ரஹ்மான் - கிராமி விருது

2009 ற்கான கிராமி விருதிற்காக ரஹ்மான் இரு பிரிவுகளில் ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்திற்கான இசைக்காகவும், ஜெய்கோ பாடலுக்ககவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். இரு பிரிவுகளிலும் அவருக்கு விருது கிடைத்தது. இவை போதாதென்று 2010 ல் நோபல் பரிசளிப்பு விழாவில் ரஹ்மானின் இசைநிகழ்ச்சி அரங்கேறியது, மீண்டும் 2010 ற்கான கோல்டன் க்ளோப் விருதிற்காக (டேனி போயலின் 127 Hours திரைப்படத்திற்காக) பரிந்துரை செய்யப்பட்டும் இருக்கிறார்.

 

2. உலகக்கோப்பை ஹாக்கி

டெல்லியில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி போட்டிகளில் வழக்கம் போலவே இந்திய அணியினர் சொதப்பினர். ஆடிய ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றனர், ஆஸ்திரேலிய அணி பட்டத்தை வென்றது.

3. உலகக்கோப்பை கால்பந்து

 
முதன் முறையாக ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் Vuvuzela ன் இரைச்சல் சத்தத்தின் இடையிலும் சிறப்பாகவே நடந்து முடிந்தன. 2008 முதல் தோல்வியையே சந்திக்காத நெதர்லாந்தும், ஆடிய முதல் ஆட்டத்திலேயே தோல்வியடைந்த ஸ்பெயின் அணியும் இறுதிப் போட்டியில் ஆடியது எவரும் எதிர்பார்க்காதது. ஆக்டோபஸ் 'பால்' கணித்தபடியே ஸ்பெயின் வெற்றி பெற்றது. (மரித்தும் போனது ஆக்டோபஸ்)

 

4. இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடந்து முடிந்த இலங்கை தேர்தல் மாற்றம் எதையும் தரவில்லை. முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவின் சிறைபிடிப்பைத் தவிர.

5. எந்திரன்

ரோபோட் - எந்திரன் எதிர்பார்த்ததற்கும் அதிகமான வசூலைக் கொட்டி இருந்தது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. 20 ரூபாய் டிக்கெட்டுகள் இருநூறு ரூபாய்க்கு விலை போனதென்றால் வசூலாகாமல் இருக்குமா என்ன?! இத்தனை வயதில் சூப்பர் ஸ்டாருக்கு உலக அழகியுடன் நடனம் தேவையா என்பது கேள்வி எழுப்பப்பட வேண்டிய ஒன்று.

இரண்டாவது பாதி காட்சிகள் சில கார்ட்டூனை நினைவுபடுத்தியது மறுக்கமுடியாத ஒன்று. உலகம் முழுவதையும் ஷங்கர் திரும்பிப் பார்க்க வைத்தார் என்பதற்காக பாராட்டப்பட வேண்டிய சினிமா. மறைந்த "சுஜாதா" அவர்களின் பங்களிப்பையும் மறந்து விடமுடியாது.


6. வேட்டைக்காரன் - விஜய்

மீண்டும் ஒரு மசாலா படத்தை அளித்த திருப்தி ‘சுறா’வினால் இளையதளபதிக்கு உண்டாயிருக்கக்கூடும். ஆனால் பணத்தை போட்ட தயாரிப்பாளர்களுக்கு நிச்சயம் இல்லை. ஆனால் இளையதளபதி ஒன்றோடு நிறுத்திக்கொண்டது ஏனோ?

7. இந்தியா - உலக அரங்கில்

 

உலக அரங்கில் இந்தியாவின் ஊழல் கொடிகட்டி பறந்ததைத்தவிர வேறு ஒன்றும் விஷேசமாக இந்தியா செய்ததாகத் தெரியவில்லை. ஐ.பி.எல், காமன்வெல்த் விளையாட்டுக்கள், ஸ்பெக்ட்ரம் என தொடரும் ஊழல்கள் இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய செய்தன. G-20 மாநாடு உள்ளிட்ட பன்னாட்டு மாநாடுகளில் இந்தியாவின் பங்கு குறைவு தான்.

8. டைகர் உட்ஸ்

 

இருபது வார இடைவெளிக்கு பின்னர் ஏப்ரல் 2010 ல் மீண்டும் களத்தில் இறங்கிய கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் குறிப்பிடும்படியான வெற்றிகளை இதுவரை பெறவில்லை. உலகத்தில் மிக அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரராக ஜூலையில் அறிவிக்கப்பட்டாலும் கோல்பில் தனது முதலிடத்தை அக்டோபரில் இங்கிலாந்தின் Lee Westwood இடம் பறிகொடுத்தார்.

 

9. ஃபெடரர் Vs நடால்

 

ஃபெடரருக்கும் நடாலுக்கும் இடையே இதுவரை மொத்தமாக நடைபெற்றுள்ள 22 ஆட்டங்களில் நடால் 14-8 என முன்னிலை பெறுகிறார். காயங்கள் காரணமாக 2009 ன் இறுதி கட்டத்தில் தரவரிசையில் தனது முதலிடத்தை ஃபெடரரிடம் இழந்த நடால், ஜூன் 2010 ல் பெற்ற பிரெஞ்ச் ஓபன் வெற்றியுடன் மீண்டும் முதலிடம் பெற்றார். நடாலின் ஒன்பது வருட காத்திருப்பு இந்த வருடம் யு.எஸ் ஓபனில் நனவானது. முதன்முறையாக நடால் யு.எஸ்.ஓபன் சாம்பியன் ஆனார். முதன்முறையாக நடால் மூன்று கிராண்ட்ஸ்லாம்களை வென்றதும் இந்த வருடம் தான்.


10. இந்தியா - பிரிவினை

முந்தைய ஆண்டுகளை விட இந்த வருடம் குண்டு வெடிப்புகளும், மதக்கலவரங்களும் குறைந்திருந்தது கொஞ்சம் ஆறுதலான விஷயம். ஆனாலும் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காண இன்னும் பல வருடங்கள் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அனைவருக்கும் புதிய ஆங்கில வருடம் பொன்னானதாக அமைய வாழ்த்துக்கள்.

December 30, 2010

2010 ன் சிறந்த கிரிக்கெட் நிகழ்வுகள்

2010 ன் கிரிக்கெட் ஆட்டங்களை சற்று திரும்பிப் பார்த்ததில் பிடிபட்ட சில நிகழ்வுகள் புகைப்படங்களும் நக்கலுமாய் இங்கே. 

இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்ததும், தொடர்ந்து அதனை தக்க வைத்துக் கொண்டிருப்பதும் இந்திய கிரிக்கெட்டிற்கு புகழ் சேர்த்தது எனலாம்.

ஸ்திரேலிய அணியின் பின்னடைவு, ரிக்கி பான்டிங்கின் சரிவு, பாகிஸ்தானின் ஊழல் மற்றும் Spot Fixing, இங்கிலாந்தின் T20 மற்றும் ஆஷஸ் வெற்றி. பங்களாதேஷின் Asian Games தங்கப்பதக்கம்; நியூசிலாந்தை 4-0 என தோற்கடித்தது, ஐ.பி.எல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் என 'சென்னை சூப்பர் கிங்க்ஸ்' அணி பெற்ற இரட்டை வெற்றி, இலங்கை ஆஸ்திரேலியாவில் பெற்ற வெற்றி;

ஒருநாள் போட்டிகளில் சச்சின் பெற்ற சாதனை ஓட்டங்களான 200. டெஸ்ட் சாதனையான ஐம்பதாவது சதம். டெஸ்டில் 200 கேட்ச்கள் எடுத்த ராகுல் டிராவிட்டின் சாதனை,   மோடி மற்றும் அமைச்சர் சசி தரூரின் ஐ.பி.எல் ஊழல் என பல நிகழ்வுகளை சொல்லிப் போகலாம்.
  ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சி   
 'சென்னை சூப்பர் கிங்க்ஸ்' Champions League T20 Champions 

  ஆஸ்திரேலியாவை சாய்த்த இங்கிலாந்து 
 INDIA Number ONE TEST TEAM
 சகீர் கான், லக்ஸ்மன் கலக்கிய டர்பன் வெற்றி 
 'சென்னை சூப்பர் கிங்க்ஸ்
  பாகிஸ்தான் Spot Fixing
  ரிக்கி பான்டிங்கின் சரிவு

ரிக்கி பான்டிங் தனது மகள் 'எம்மி'யுடன் 

 சச்சின் - 200
 சச்சின் - 50 சதங்கள் 
 ஊழலில் சிக்கிய மோடியும் சசி தரூரும்
 ர்பனில் ஸ்ரீசாந்தை ஸ்மித் உசுப்பி விட்டதால் வீசப்பட்ட ஆக்ரோஷமான Bouncer
T20 WORLD CHAMPIONS
ASIAN GAMES GOLD MEDALLISTS

புகைப்படங்கள் நன்றி: cricinfo

December 27, 2010

மாற்றம் 'ஏ 'மாற்றம்.


ஏன் இவைகள்?
என்னையும் அறியாமல்
என் நினைவையும் அறியாமல்
என் முடிவுகள் சரிதானா!!

என் வார்த்தைகள் சரிதானா!
என்னை நானே புரிந்து கொள்ள இயலவில்லை.

காயப்படுகிறேனா - இல்லை
காயப்படுத்துகிறேனா - தெரியவில்லை
காரணங்கள் புரியவில்லை

ஏன் இந்த மாற்றம் - சரிதானா

உள்ளதை நான் சொல்கிறேனென்றால்
உலகம் இல்லாததைச் சொல்கிறதா? 

என்னை உலகம் சீரழிக்கிறதா - இல்லை
என்னை நானே சீரழிக்கிறேனா

அழிகிறேனா - இல்லை
அழிக்கப்படுகிறேனா

ஏமாற்றங்கள்... 
மாற்றத்தான் செய்கின்றன
மனித வாழ்க்கையின் போக்கினை

எதிர்பார்ப்புகள் இருக்கும் வரை
ஏமாற்றங்களுக்கு குறைவில்லை

ஏதாயினும், 
இருக்கின்றதை வைத்து நிறைவடைவதே
எனக்கும் எவர்க்கும் அழகு! 

December 19, 2010

வானவில் இல்லா வானம்


   வானூர்தி பயணம்;
   வாயைப் பிளக்க வைக்கும்
   வானுயர்ந்த கோபுரத்தில் வாசம்;
   வா... என்றழைத்தால்
   வாசல் தேடி வரும் சேவைகள்;
   வாராவாரம் ஆரவாரம் - இருந்தும்
   வாடுகையில் - மனம் - வாடுகையில்
   வாழ்க்கையை வர்ணமாக்கும்
   வாசமிகு பந்தங்கள் - எனும்
   வானவில் இன்றி தொடர்கிறது - என்
   வானம் எனும் வாழ்க்கை

December 15, 2010

ஆப்பிரிக்காவில் சாதிக்குமா இந்திய கிரிக்கெட் அணி

தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவதே இந்தியாவின் உச்சக்கட்ட பரீட்சையாக இருக்கும் என உலகம் முழுவதும் கிரிக்கெட் ஊடகங்களும், விமர்சகர்களும் கிரிக்கெட் என்னும் பலூனை ஊதி பெரிதாக்கி விட்டிருக்கிறார்கள்.

கூட 'டென் கிரிக்கெட்' சானல் தெ.ஆ வீரர்களைக் கொண்டு தென்னாப்பிரிக்கா காத்திருக்கிறது என விளம்பரப் படத்தையும் எடுத்து ஒரு மாதத்திற்கு முன்னரே தயாராக இருக்கிறார்கள்.

இவற்றிற்கு எல்லாம் காரணம் இதுவரை இந்தியா தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றிகள் ஏதும் பெறாதது தான். கடைசியாக 2006-07 ல் சுற்றுப்பயணம் செய்திருந்த போது 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கோட்டை விட்டிருந்தது. 

அந்த தொடரில் ஜோகனஸ்பெர்க்கில் பெற்ற வெற்றி மட்டுமே இந்தியா இதுவரை ஆடியுள்ள 12 ஆட்டங்களில் பெற்றுள்ள ஒரே ஒரு வெற்றி.உலகின் முதல் தர அணியாக இருக்கும் இந்திய அணிக்கு நடைபெறவிருக்கும் மூன்று டெஸ்ட் ஆட்டங்களுமே சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பசும்புல் நிறைந்த தென்னாப்பிரிக்கா மைதானங்கள் பவுன்சர்களுக்கு சாதகமாக இருக்கும். பவுன்சர்கள் என்றாலே பதுங்கும் இந்தியர்களுக்கு குறிப்பாக டெல்லி துவக்க ஆட்டக்காரர்களான சேவாக்கிற்கும், காம்பீருக்கும் ஆரம்ப சில ஓவர்கள் கடினமாகத் தானிருக்கும். ஆரம்ப இணை முதல் பத்து ஓவர்களைத் தாக்குப் பிடித்து நின்று விட்டால் பின்னர் வருகின்றவர்களுக்கு ஓரளவு சாதகமாகி விடும்.

டெஸ்ட் ஆட்டங்களில் 50 ற்கும் மேல் சராசரி வைத்திருக்கும் சச்சின்,திராவிட்,சேவாக்கின் சராசரி (தென்னாப்பிரிக்காவில்) முறையே 40, 34, 26 மட்டும் தான் என்கிறது cricinfo. லக்ஸ்மன் இதுவரை தென்னாப்பிரிக்காவில் சதம் அடித்ததில்லை

ரைனாவிற்கும், காம்பீருக்கும் தென்னாப்பிரிக்காவில் இது தான் முதல் வாய்ப்பு. தோனி இது போன்ற மைதானங்களில் எந்த அளவிற்கு பிரகாசிப்பார் என சொல்ல முடியாது. அவரது cross bat shots அவருக்கு நிச்சயம் துணையளிக்காது.

பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் சகீர் கான், இஷாந்த் ஷர்மா, ஸ்ரீசாந்த் இவர்களில் எவரேனும் ஆரம்பத்தில் விக்கெட் எடுக்க தவறும் பட்சத்தில் அது இந்தியாவிற்கு பின்னடைவு தான். இல்லையென்றால் சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன், ஓஜா இருவரையும் நம்ப வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே சகீர் காயமடைந்திருப்பதும் இந்தியாவிற்கு பின்னடைவே. மட்டை வீச்சில் வலுவாக இருக்கும் இந்தியா நிச்சயம் 7 மட்டைவீச்சாளர்களைக் கொண்டு களம் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அந்த பட்சத்தில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கு இடம் மறுக்கப்படும்.

தென்னாப்பிரிக்கா அவர்கள் மண்ணில் இறுதியாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிராக ஆடிய இரண்டு தொடர்களிலும் வெற்றி பெறாதது அவர்களுக்கு பின்னடைவு தான். எனினும் சொந்த மண்ணில் ஆடுவது அவர்களுக்கு கை கொடுக்கக் கூடும். அணித்தலைவர் ஸ்மித், ஆல்ரவுண்டர் காலிஸ், திராவிட்டைப் போன்றே மூன்றாவது களமிறங்கும் ஆம்லா, பவுச்சர் என தென்னாப்பிரிக்காவும் மட்டைவீச்சில் வலுவாக இருக்கிறது.

இந்தியாவிற்கு தென்னாப்பிரிக்காவின் கேரி கிறிஸ்டன் பயிற்சாளராக இருப்பது ஒரு வரப்பிரசாதம். தென்னாப்பிரிக்கா மைதானங்களைக் குறித்து நன்கு அவர் அறிந்திருக்கக்கூடும் என்பதும், தென்னாப்பிரிக்க ஆட்டக்காரர்களின் மனநிலையை அறிந்தவர் என்பதும் இந்தியாவிற்கு சாதகம்.

எப்படியானாலும் நாளை துவங்கவிருக்கும் இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடருக்கு இணையாக கவனிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.  

December 14, 2010

ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் கோல்டன் க்ளோபில்


ஸ்லம்டாக் மில்லினியருக்காக ஏற்கெனவே சென்ற வருடம் கோல்டன் க்ளோப் விருதை பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் 2010 வருடத்திற்கான கோல்டன் க்ளோப் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

ஸ்லம்டாக் மில்லினியரை இயக்கிய டேனி போயலுடன் இணைந்து பணியாற்றிய 127 Hours என்ற திரைப்படத்திற்காகத் தான் இந்த பரிந்துரை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விருதுகள் ஜனவரி 16 அன்று அறிவிக்கப்படவுள்ளன.


ஏற்கெனவே இந்த வருடம் நோபல் விருது வழங்கும் விழாவில் இசையமைத்து மேலும் புகழ் தேடிய ரஹ்மானின் புகழ் உலகின் எல்லா திசைகளிலும் இன்னும் எட்ட வாழ்த்துவோம்.

December 11, 2010

இசைக்கருவிகள் ஏதுமின்றி ஐ.ஃபோனிலும் ஐ. பேடிலும் இசை


உலகம், கம்ப்யூட்டர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புதுமை என்று கொண்டாடிய காலம் மாறி இன்று அந்த புதுமையிலும் புதுமை செய்திருக்கிறார்கள்.

இசைக்கருவிகள் ஏதுமின்றி விட்ஜெட்கள் எனப்படும் அமைப்புகளால் ஐ.ஃபோன் மற்றும் ஐ. பேட் களில் இசையை மீட்டி அதிசயக்க வைத்திருக்கிறார்கள் அமெரிக்காவின், ஜியார்ஜியாவை சார்ந்த North Point Community Church குழுவினர்.

இதற்கென்றே இவர்கள் i band என்ற இசைக்குழுவினையும் வைத்திருக்கிறார்கள். மொபைல் ஃபோன் கண்டுபிடித்ததையே எப்படி கண்டுபிடித்தார்கள் என நினைக்கையில் தலைசுற்றும் போது i phone, i pad களில் widget வைப்பதற்கு எப்படியெல்லாம் யோசித்திருப்பார்கள் என்பதை நினைத்தால் தலை மேலும் சுற்றுகிறது. அதிசயிக்க வைக்கிறார்கள்.

மூன்று கிறிஸ்துமஸ் பாடல்களை இசைக்கருவிகளே இல்லாமல் மீட்டி வாயை பிளக்க வைத்து விட்டார்கள். நீங்களும் பாத்து வியக்க வேண்டிய நேரமிது.


யூடியூபில் பார்க்க இந்த சுட்டியில் க்ளிக்குங்க. யூடியூபில் வெளியான மூன்றே தினங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான ஹிட்ஸ் இதற்கு.

இன்று மட்டும் சுமார் 25 முறை பார்த்திருப்பேன் இந்த இசை மீட்டலை. www.northpointmusic.org/christmas இது அவர்களது இணைய தளம்

இது GodTube ன் காணொளி
Related Posts with Thumbnails