January 28, 2011

Life in a Day நேரலையாக Youtube ல்



சாத்தியமற்றவை என பல ஆண்டு காலமாக பறைசாற்றப்பட்டு வந்த பல விஷயங்கள், உலகம் கணினி மயமும் டிஜிட்டல் மயமும்  ஆனதில் இருந்து சாத்தியப்பட்டு விட்டது என சொல்லலாம்.

இணையம் நிச்சயமாகவே உலகில் பல இடைவெளிகளை இணைக்கும் பாலமாகவே மாறிவிட்டது. நொடிப்பொழுதில் உலகின் வெவ்வேறு மூலைகளில் இருக்கும் பலருடன் இன்று மிக எளிதாக தொடர்பு கொள்ளமுடிகிறது என்றால் அதற்கு இணையம் மிக முக்கிய காரணம்.

இணையம் இல்லாமல் இன்று வாழ்க்கை இல்லை என்ற நிலைமை ஆகி விட்டது. தகவல் பரிமாற்றம் மட்டுமல்லாமல். இசை, காணொளி, புகைப்படங்கள், கோப்புகள் என பலவற்றை பரிமாற்றம் செய்யும் தளமாக இன்று இணையம் மாறியிருக்கிறது.

உலகின் பல்வேறு மூலைகளில் ஒரே நாளில் என்னென்ன நடைபெறும் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் பலருக்கும் இருந்திருக்கும் வாய்ப்புள்ளது; பலர் எப்போதாவது அதனைக் குறித்து சிந்தித்திருக்கவும் கூடும்.

காணொளிகளைப் பகிர்ந்து கொள்ளும் தளமான http://www.youtube.com/ அதற்கு வழிவகை செய்துள்ளது. ஒரு நாளில் அதாவது 2010 ஜூலை 24 ல் மட்டும் உங்களையும் என்னையும் போன்ற சாதாரணவர்களால் உலகின் வெவ்வேறு பாகங்களில் இருந்து எடுக்கப்பட்ட அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் அடங்கிய காணொளிகளை இணைத்து திரைப்படமாக்கும் முயற்சியில் யூடியூப் தளம் இறங்கியிருந்தது.

அந்த வகையில் ஜூலை 24, 2010 ல் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட காணொளிகளை யூடியூப் தளம் பலரிடம் இருந்து பெற்றிருந்தது. அவைகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட காணொளிகளைக் கொண்டு 90 நிமிடங்கள் ஓடும் "LIFE IN A DAY" என்ற திரைப்படமாக ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் கெவின்  இயக்கியிருக்கிறார். 

இன்னும் ஒன்றரை மணி நேரத்திற்குள்ளாக (27.01.2011 )அமெரிக்க நேரப்படி இரவு 8 மணிக்கு Sundance திரைப்பட விழாவில் வெளியிட இருக்கிறார்கள். யூடியூப் தளம் அதனை நேரடியாக அவர்களது தளத்தில் ஒளிபரப்பு செய்யவிருக்கிறார்கள். மேலும் தகவல்கள் http://www.youtube.com/lifeinaday தளத்தில்

ஏற்கெனவே இணையம் நம்மை ஆச்சரியப்படுத்துகையில் youtube போன்ற தளங்கள் நம்மை மேலும், மேலும் ஆச்சரியப்படுத்தத்தான் செய்கின்றன.  

January 15, 2011

டிஜிட்டல் க(கா)லிகாலம்

ஹாய் என்பதில் துவங்கி பாயில்(Bye) முடியும்
ஹார்ட்வேர் காலம்;
ஹாப்பி நியூ இயர்,
ஹாப்பி போங்கள்(பொங்கல்) என
ஹாஸ்யமாய் மேலும் தொடர்கிறது  

ட்டிலில் கிடந்தவாறே - சோம்பலாய்
நெட்டில் துவங்குகிற தினத்திற்கு

ஆர்க்குட்டின் ஆர்ப்பாட்டமும் - ஐஃபோன்
கேட்ஜட்டின் அதிரடியும் - மொபைல் ஃபோன்

விட்ஜெட்டின் அமர்க்களமும்
வேகம் சேர்க்கின்றன - இவை

ஒருவரின் பட்ஜெட்டை
பதம் பார்க்கும் விஷயங்கள் என்பது
பாதி தூரம் பயணித்த பின்னரே
பலருக்கும் புரிகிறது

இவை போதாதென்று
இன்றைய இளைய தலைமுறையால் ஏற்றப்படும்
குறுந்தகவல்களுக்கும் - குழப்படிகளுக்கும்

மச்சான்களை மட்டையாக்கும்
மல்டி மீடியா மெசேஜ்களுக்கும்

பல்லை விளக்க மறந்தாலும்
நீலப்பல் என்ற ப்ளூடூத்தை மறக்காத
"நீல வானம் நீயும் நானும்" என
நிலவு பாடல் பாடும்
நிலவுப் பிரியர்களுக்கும் குறைவில்லை.


கர்த்தரை மறந்து
கர்சரையும்

கடவுளை மறந்து
கடவுச் சொல்லையும்

ரிசனையை மறந்து
ணினியையும்

நம்பும் காலமிது

இவற்றிற்கு பின்னணியாக
இருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம்
இருக்கும் வரை
இவர்களின் இம்சையும்
இருக்கத்தான் செய்யும் போல

January 07, 2011

எழுதுகிறேன் ஏனோ எழுதுகிறேன்


எழுதுகிறேன்
ஏனோ எழுதுகிறேன்
எவர்க்கோ எழுதுகிறேன்

எல்லைகள் கடந்து
எவர் கண்ணிலேனும் படும்
என்ற கனவில்
எழுதுகிறேன்

எதேச்சையாக
எவர் பார்த்தாலும் - கருத்து
எதுவும் உரைக்காமல்
எகிறிச் செல்கின்றனர்

எடுப்பான புகைப்படங்களுக்கும்
எவரோ எழுதியதை
எடுத்து வெட்டி ஒட்டுதலுக்கும் - முகநூலில்
எழுதப்படாத கருத்துக்கள் இல்லை

எதுவுமில்லா வேடிக்கைகளுக்கு - ஆர்குட்டில்
எழும் ஆரவாரங்களுக்கு குறைவில்லை

எதார்த்தத்திற்கு விலையில்லை - நல்
எண்ணங்களுக்கு மதிப்பில்லை

எனினும் எழுதுகிறேன்
ஏனோ எழுதுகிறேன்

எவர்க்கேனும் உதவியாய் இருக்கும்
என்ற நம்பிக்கையில் - நாளும்
எட்வின் எழுதுகிறேன்
ஏனோ எழுதுகிறேன். 

January 06, 2011

மறந்தாலும் மறுக்கப்பட முடியாத உதவிகள்

இன்றைய காலகட்டத்தில் பெற்றவர்களையும், உறவுகளையுமே நினைவில் வைக்க பெரும்பாலானவர்களுக்கு சிரமமாக இருக்கையில் நலம் விரும்பிகளையும், நன்மை செய்தவர்களையும் நினைவு கூறுவது பலருக்கு வேடிக்கையானது சிலருக்கு வீணானது.

ஏறுகிற வரைக்கும் தேவைப்படுகிற ஏணி ஏறிய பின் தேவையற்றதாக கருதப்படுவதைப் போன்றே உதவிகளைப் பெற்று முன்னேறிய பலர் இன்று அவர்களை ஏற்றி விட்டவர்களை மறந்து விடுவது சகஜமாகி வருகிறது. நன்றி மறவாமல் இருப்பவர்கள் வெகு சிலரே.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் எவரேனும் உதவி செய்திருப்பர். பண வடிவிலோ, பொருள் வடிவிலோ, அறிவுரை வடிவிலோ, பகிர்ந்து கொள்ளுதல் மூலமாகவோ உதவிகளைப் பெற்றிருப்பர். உதவிகள் பெறாதவர்கள் உலகில் எவரேனும் இருக்கின்றனரா என ஒரு கேள்வி எழும் பட்சத்தில், அதற்கு இல்லை என்பது தான் பதிலாக வந்து சேரும்.

சிறுவயதில் பெற்றவர்கள் மூலமாக பெறும் உதவிகள் பிற்காலத்தில் உறவுகள் மூலமாகவும் சமூகத்தில் உள்ள மற்றவர்கள் மூலமாகவும் நாம் கிடைக்கப் பெறுகிறோம்.  இப்படியாக வாழ்வின் பல நிலைகளில் நாம் அடைந்த உதவிகளை எத்தகைய சூழ்நிலையிலும் நாம் மறவாதிருப்பதே மனிதத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய சேவை.

உதவிகள் செய்தவர்களுக்கு கைமாறாக உதவிகள் செய்ய இயலவில்லை என்றாலும் கூட அவர்கள் செய்த உதவியை மறந்து போகாமல் குறைந்தபட்சம் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தால் அதுவே பெரிய விஷயம் தான். (உயிருக்கு உயிராக பழகிய ஒருவரிடம் அப்படி ஒருமுறை உதவி கேட்கப்போய் அசிங்கப்பட்டும் இருக்கிறேன்.  உதவி கேட்ட போது செய்கிறேன் என வாக்களித்தவர்கள் மீண்டும் தொலைபேசியில் அழைக்கையில் தொலபேசியை எடுக்கவில்லை. மிகவும் நொந்து போனேன். முடியாது என ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தால் இந்த வேதனை இருந்திருக்க வாய்ப்பில்லை)

உதவிகள் செய்தவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு, நன்றி தெரிவிப்பதோடு அந்த உதவியை மறக்காமலிருப்பதும் தான். அடைந்த உதவியை மறந்துவிடுதல் போன்ற நன்றி கெட்டச் செயல் வேறு எதும் இருக்க முடியாது. அதனை வள்ளுவன் "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என வெகு அருமையாக இரண்டே வரிகளில்  அழுத்தமாகச் சொல்லிச் சென்று விட்டார்.

நாம் உதவி செய்த ஒருவர் நம்மை நேரிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கையில் எழுகின்ற உவகைக்கு அளவே இல்லை. அத்தகைய நன்றியை இந்த வருடம் நீங்கள் உதவி பெற்ற எவருடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள்; அவர்கள் உள்ளத்தை மகிழ்வித்த நல்ல எண்ணத்துடன் இந்த வருடத்தை தொடர்ந்து தொடருங்கள்.

January 03, 2011

2011 - மிக மோசமானது இன்னும் வரவில்லை!

எங்கோ என்றோ படித்த ஒரு ஆங்கில வாசகம் தான் புத்தாண்டு பிறந்த இரு தினங்களாக மீண்டும் மீண்டும் எனது எண்ணங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. "The WORST is yet to come" என்பது தான் அந்த வாசகம். 

புதிய வருடமானால் மட்டும் மனதின் ஆதங்கங்களும், மனிதனின் தேவைகளும், வித்தியாசப்பட்டு விடுமா என்ன? புது வருட கொண்டாட்டங்களில் பங்கு பெற்று விட்டால் அந்த வருடம் முழுவதும் சிறப்பாக இருக்குமென்பதோ இல்லை நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு பிரார்த்தனை செய்தால் வருங்காலம் பிரச்சினை இல்லாமல் இருக்கும் என்பது அர்த்தமாகி விடாது.

இரவு பகல் என்பது போன்றே இன்பம் துன்பம் என்பதும் மனித வாழ்க்கையின் இரு பக்கங்களாகவே கொள்ளலாம்.வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்கும் ஒவ்வொரு நொடியும் ஏதாவது ஒரு விதத்தில் ஆபத்து காத்திருக்கத் தான் செய்கிறது. அது எந்த அளவிற்கு தீவிரமானது என்பதும் எவரும் அறியாதது. 

நாளை என்ன நடக்கும் என எவராலும் முன்குறிக்க முடியாமல் இருக்கையில் கவலைப்படுவதால் எந்தவித நன்மையும் எவர்க்கும் ஏற்படப்போவதில்லை. அதையே தான் விவிலியமும் "கவலைப்படுவதினால் தனது சரீரத்தில் ஒரு முழத்தை யார் கூட்டுவான்" என்கிறது. 

முடிந்த வரையில் உலகில் இருக்கின்ற காலம் மட்டும் சுற்றி இருப்பவர்களையும், நண்பர்களையும், குடும்பத்தினரையும் சந்தோஷமாக வைத்திருப்பதால் கிடைக்கின்ற நற்பெயர் மட்டுமே மனிதத்தை இன்னும் நாம் வாழ வைக்கும் மிகச்சிறந்த வழியாக இருக்கும். 

பிரச்சினை என்று வரும் போது என்ன பிரச்சினை என கவலை கொள்ளாமல் பிரச்சினைகளில் இருந்து வெளிவருகிற வழிமுறைகளை நோக்குவதோடு The Worst is yet to come என்ற மனப்பான்மையும் கொண்டிருப்போமானால் இந்த வருடம் மட்டுமல்ல எந்த வருடமும் சிறந்த வருடம் தான். 

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களும், பூங்கொத்தும், பிரார்த்தனைகளும்.

Photo Courtesy: http://vi.sualize.us/

Related Posts with Thumbnails